Thursday, December 20, 2012

நவராத்திரியில் சிவதாண்டவம் நடப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

நவராத்திரியில் சிவதாண்டவம் நடப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?பரமேஸ்வரன் ஒன்பது வகையான தாண்டவங்களை ஆடுவதாகவும், அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப உடலை வளைத்தும், கால்களை மாற்றியும், கால் விரல்களால் கோலமிட்டும் ஆடுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.


நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையாக ஈசன் ஆடுகிறார். இவரது ஆட்டத்தின்போது வரையப்படும் கோலங்களில் இருந்து தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக அம்பிகை வெளிப்படுகிறாள் என்பது ஐதீகம். அதன் விவரம் வருமாறு:-


நவராத்திரியின் முதல் நாள்: ஆனந்த தாண்டவம், வலது காலை தரையில் ஊன்றி இடதுகாலை தூக்கி ஆடும் கோலம். இதில் வரையப்பட்ட கோலம் ரிஷி மண்டல கோலம் எனப்படுகிறது. இதிலிருந்துதான் எழுத்துக்கள் வெளிப்பட்டன. நவதுர்க்கைகளில் சைலபுத்ரி அல்லது சைலஜா என்ற தேவி முதல் நாளுக்குரிய தேவியாகிறாள்.


இரண்டாம் நாள்: சந்தியா தாண்டவம் பகலும் மாலையும் கூடும் வேளையில் இடதுகால் விரலால் பரமசிவன் இடும் கோலத்திலிருந்து வெளிப்பட்ட கூஷ்மாண்டதேவி இரண்டாம் நாள் வழிபாட்டுக்குரியவள்.


மூன்றாம் நாள்:
திரிபுரதாண்டவம். ஈசன் இன்று இடதுகால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவதக் கோலம். இந்த மூன்றாம் நாளுக்குரிய தேவி பிரம்மச்சாரிணி என்ற பெயருடன் விளங்குகிறாள்.


நான்காம் நாள்: ஊர்த்துவ தாண்டவம் ஈஸ்வரன் திருவாலங்காடு என்ற இடத்தில் தனக்கு நிகராக ஆடிய காளியை இந்த தாண்டவத்தின் மூலம்தான் தோற்கச் செய்தார். ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி ஆடும் நடனம். இது இந்த ஆட்டத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோத்தில் இருந்து தோன்றிய சந்த்ரகாந்தாதேவி நான்காம் நாளுக்குரிய தேவியாவாள்.


ஐந்தாம் நாள்: புஜங்க தாண்டவம் பாற்கடலை கடைந்து அமிர்தம் பெற தேவர்களும், அசுரர்களும் முயற்சித்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். இதிலிருந்து ஸ்கந்தமாதா என்ற பெயருள்ள தேவி ஐந்தாவது நாளுக்குரிய தேவியாக தோன்றினாள்.


ஆறாவது நாள்: முனி தாண்டவம் சிறந்த சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்தபோது அதற்கேற்ப சிவன் ஆடி முனிவரை மகிழ்வுறச் செய்தார். அதனால் இதற்கு முனிதாண்டவம் என்ற பெயர் ஏற்பட்டது. காத்யாயனி தேவி ஆறாவது நாளின் தேவியானாள்.


ஏழாவது நாள்: பூத தாண்டவம் பரமேஸ்வரன் யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பலவகை ஆயுதங்களை ஏந்தி பூத தாண்டவக் கோலம் வரைந்தபடி ஆடுகிறார். இந்த கோலத்தில் உருவான தேவி ஏழாவது நாளுக்குரிய காலராத்ரி எனப்படுகிறாள்.


எட்டாவது நாள்: சுத்த தாண்டவம். தண்ட காரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும். இந்த கோலத்திலிருந்து உருவான தேவி மகாகவுரி என்ற பெயர் கொண்டவள்.


ஒன்பதாம் நாள்: சிருங்காரத் தாண்டவம் நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்திய நவரசக் கோலத்தில் இருந்து சிவன் மகிழ சித்ததாத்திரி என்ற தேவி தோன்றினாள். இவளே ஒன்பதாம் நாள் வழிபாட்டுக்குரிய தேவியாவாள்.

No comments:

Post a Comment