Thursday, June 13, 2013

பசி வந்தால் பத்தும் பறக்கும்

கஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், கவுதமர் என்ற முனிவர்களும், வசிஷ்டரின் மனைவி அருந்ததியும், இவர்களின் வேலைக்காரனான பசுசகன், அவன் மனைவி கண்டையும் பிரம்மலோகத்தை அடைய விரும்பி யாகம் செய்ய முயன்றனர். அந்நேரத்தில் கடும் பஞ்சம் ஏற்படவே, சாப்பாட்டுக்கே பிரச்னையாயிற்று.
அப்போது புறாவுக்காக தன் சதையை அரிந்து கொடுத்த சிபி சக்கரவர்த்தியின் மகன் "விருஷா தர்ப்பி' ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவன், முனிவர்கள் கஷ்டப்படும் செய்தியறிந்து, அமைச்சர் மூலம் அத்திப்பழங்களைக் கொடுத்து அனுப்பினான். அதை கையில் எடுத்ததுமே அத்திரி, ""அமைச்சரே! பசிக்கிறதே என்பதற்காக பழம் வந்தது சரி. பழத்திற்குள் உன் அரசன் தங்கக்காசுகளை வைக்க வேண்டிய அவசியம் என்ன! எங்களை சோதிக்க நினைக்கிறானோ! இதை எடுத்துச் சென்று விடுங்கள்,'' என்றார்.
வசிஷ்டர், ""அளவுக்கு மீறி தானம் பெறுபவன் இழிந்த நிலையை அடைவான்,'' என்றார். எல்லாருமே, அதைப் பெற மறுக்க அமைச்சர் திரும்பி விட்டார். தனது சன்மானத்தை ஏற்க மறுத்த முனிவர்களைக் கொல்ல, மன்னன் "யாதுதானி' என்ற அரக்கியை ஏவினான். அவள் முனிவர்களைக் கொல்ல புறப்பட்டாள்.
இந்நேரத்தில், சுனங்சசன் என்ற முனிவரை, ஏழு ரிஷிகளும் சந்தித்தனர். அவர் பருமனாக இருந்தார். வேதம் ஓதுவது உள்ளிட்ட எந்த ஆன்மிகப் பணியும் செய்யாமல், சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் தான், பருமனாக இருக்கிறார்.
சரியான சாப்பாட்டு ராமன் என்ற முடிவுக்கு வந்தனர். அவரிடம் தங்களுக்கு <உணவு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டனர்.
சுனங்சசன் ஒரு குளக்கரைக்கு அழைத்துச்சென்றார். அங்கே, யாதுதானி குளப்பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தாள். அவளிடம் முனிவர்கள், ""எங்களுக்கு பசிக்கிறது. குளத்திலுள்ள தாமரைக் கிழங்குகளை எடுக்க அனுமதி கொடு,'' என்றனர்.
யாதுதானியும், ""முனிவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்குரிய விளக்கத்தைச் சொன்னால், குளத்துக்குள் இறங்க அனுமதிப்பேன்,'' என்றது.
முதலில் அத்திரி,""நான் தினமும் மூன்றுமுறை அத்தியயனம் (மந்திர பாராயணம் அல்லது பிரார்த்தனை) செய்பவன்.
இரவில் அத்தியயனம் செய்யாமல் தூங்கமாட்டேன். அதனால் என் பெயர் அத்திரியாயிற்று,'' என்றார். இவ்வாறு ஒவ்வொரு
வரும் தங்கள் பெயருக்கு விளக்கமளித்து குளத்தில் இறங்கினர். கடைசியாக சுனங்சசன் அரக்கியிடம் வந்தார். ""அரக்கியே! என் பெயர் சுனங்சசன்...பெயர் விளக்கம் தெரியாது..'' என்று ஆரம்பிக்கவும், யாதுதானி குறுக்கிட்டாள்.
""உங்கள் பெயர் வாயில் நுழையவே மறுக்கிறது. திரும்பச் சொல்லுங்கள்,'' என்றாள்.
உடனே கோபமடைந்த சுனங்சசன், ""என் பெயரை ஒரே தடவையில் நினைவில் வைக்காத நீ அழிந்து போ,'' என்று தன் திரி
தண்டத்தை நீட்டினார். யாதுதானி சாம்பலாகிவிட்டாள்.
இதற்குள் மற்ற முனிவர்கள் கிழங்குகளைப் பறித்து வந்து கரையில் கொட்டினர்.
மீண்டும் நீராட குளத்திற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்த்தபோது கிழங்குகளைக் காணவில்லை.
எல்லா முனிவர்களும் "கிழங்கை எடுத்தவருக்கு பாவம் பிடிக்கட்டும்' என்று சாபமிட்டனர். சுனங்சசன் மட்டும், ""கிழங்கை எடுத்தவருக்கு புண்ணியம் சேரட்டும்,'' என்றார். இதிலிருந்து கிழங்கைத் திருடிசாப்பிட்டது சுனங்சசன் தான் என்ற முடிவுக்கு வந்த முனிவர்கள், ""நீர் தானே திருடினீர்,'' என்றனர்.
""ஆம்..'' என்ற சுனங்சசன், தேவலோக தலைவனான இந்திரனாக மாறி அவர்கள் முன் நின்றார். பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பர். ஆனால், பசி நேரத்திலும் பொறுமை காத்த ரிஷிகளைப் பாராட்டி சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment