மகாலட்சுமி கடாட்சம் வேண்டுமா?
செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி.
அவளது அருள்
இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம். அப்படிப்பட்ட மகாலட்சுமி வாசம்
செய்யும் இடங்களை பற்றி பார்ப்போம்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை,
மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை,
தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ
மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம்
செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.
மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். வில்வமரத்தை
வலம் செய்வது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம். வாமன புராணத்தில்
மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று
கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ மரத்தின் சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி
வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது
புராண தகவல்.
வில்வ மரம் போன்று நெல்லி மரமும் திருமாலின் பேரருளை பெற்றது. இதனால்
நெல்லி மரத்தை ஹரி பலம் என்றும் சொல்வார்கள். நெல்லிக்கனி இருக்கும்
இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். துளசி
செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும்
இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் நம் வீட்டில்
வளர்ப்பது சிறப்பு.
விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும்:-
அதிகாலை எழுந்து நீராடி சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு
சாணத்தால் மெழுகி, மா அரிசி கோலமிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க
வேண்டும். பின் லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால்,
நைவேத்தியம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, இட்லி வைத்து தீபம்
காட்டி ஏழை பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். புத்தாடையும்
கொடுக்கலாம்.
மாலை வேளையில் வரலட்சுமிக்கு தூப தீபம் கற்பூரம் காட்டி வணங்க வேண்டும்.
பின் ஆரத்தி எடுக்க வேண்டும். வீட்டுக்கு அழைத்த சுமங்கலிகளுக்கு வெற்றிலை
பாக்கு, தாம்பூலம், உடை, மஞ்சள் கயிறு கொடுத்து நிவேதனம் செய்த பலகாரங்களை
கொடுத்து வழியனுப்ப வேண்டும்.
சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை
மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
லட்சுமி அருளால் செல்வ வளம் பெருகும். திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு
விரைவில் மண வாழ்வு உண்டாகும். இவ்விரதம் மேற்கொண்டவர்களுக்கு சக
ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
No comments:
Post a Comment