Thursday, January 16, 2014

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் ?

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் ?
''தன்னை உணர்வதற்காக'' .
தன்னை உணர்வதற்காக படைத்தார் எனில், ஏன் தன்னிலிருந்து மாறுபட்டவனாகப் படைத்தார் ?
இது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கேள்வி. மனிதனின் குறுகிய அறிவுக்கு இத்தகைய பேருண்மைகளை அறியும் திறன் கிடையாது. நீங்கள் அறிவை விற்று விவேகத்தைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் ' உலகம் ஏன் படைக்கப் பட்டது ' என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். அதுவரை கிட்டாது. அதற்கு முன்னால் அதற்கான விளக்கத்தைக் கேட்பது, வண்டியை குதிரைக்கு முன் பூட்டுவதற்கு நிகர். எப்படியோ நீங்கள் படைக்கப் பட்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எப்பொழுதும் பூரண அமைதி, பூரண ஆனந்தம் மற்றும் அழியாத் தன்மையை நீங்கள் நாடிய வண்ணம் இருக்கின்றீர்கள். இவற்றை அழியும் இந்த உலகப் பொருள்களில் இருந்து பெற முடியாது என்பதும் உங்களுக்குத் தெரியும். அவற்றை பூரணப் பொருளான கடவுளிடம் மட்டுமே பெற முடியும். ஆனந்தத்திற்கான இந்த நாட்டமே, ஆன்மா பூரண அமைதி மற்றும் ஆனந்தசொரூபி என்பதைக் காட்டுகிறது. உள்ளே மென்மேலும் அறிந்து கொள்ள வேண்டும், சாஸ்வதமாக வாழவேண்டும், இடையறாத இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தொடர்ந்த நாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இதுவே கடவுள் நாட்டத்திற்கான,ஆன்ம நாட்டத்திற்கான நிரூபணம் என்பதை அறியாமையில் உழலும் மனிதன் அறிகின்றானில்லை.
இறைவனை உணர்வதே மனிதனின் தலையாய கடமை. படைப்பு ஏன் என்று மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அப்படி இறைவனை உணர்வதே சாதனை எனப்படும்.
ஆனால் மனிதன் சாதனை புரிய விரும்புவதில்லை. அநேகர் புலன் உலகப் பொருள்களிலேயே திருப்தி அடைந்துவிடுகின்றனர். பிறக்கின்றனர், பொருள் சேர்க்கின்றனர்,இன்புறுகின்றனர், துன்புறுகின்றனர், பிறகு மரணமடைகின்றனர்.இன்பத்தை தேடுகிறார்கள் என்பதை விட துன்பமின்றி வாழவே முயல்கின்றனர். எனவே இன்ப துன்பமென்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாக இருக்கிறது. ஆகையினால் இன்ப துன்பங்களைக் கடந்த நிலையை அடைய வேண்டும். அதுவே நித்தியம். அது பரநாட்டம் கொள்பவர்களுக்கேசாத்தியமாகிறது.விவேகி ஒருவனே பொருள்களைப் பற்றிய ஆராய்சியில் ஈடுபடுகின்றான்.மோட்ச நாட்டம் கொள்கின்றான். அந்தப் பரம் பொருளை உணர்கையில் இந்த உலகம் வெறும் விளையாட்டாகத் தெரிகிறது. எனவே இது பூரணத்தின் விளையாட்டு, லீலை என்கிறான். பிரம்ம சூத்திரங்களும் இதையே சொல்கின்றன. ஏனெனில் அது மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை சுட்டிக் காட்டவே. எனவே இறைவனை உணர வேண்டி ஏதாவது(சாதனை) செய்யுங்கள் செய்யுங்கள் செய்யுங்கள். இதயம் விரிவடைய வேண்டும், நம்பிக்கை வேரூன்ற வேண்டும், தியாக உணர்வு வலுக்க வேண்டும். இரக்கம், சுயநலமின்மை, அஹங்காரமின்மை போன்ற நற்குணங்கள் வளர்க்கப் படவேண்டும். அதன் பிறகே உள்ளுணர்வின் காரணமாக இத்தகைய கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.
ஒருவருடைய சொல்லை நாம் தவறாகப் பொருள் கொள்வேயானால், உடனே அவர் சொல்கிறார், என் பேச்சை நீங்கள் விகல்பமாகப் பொருள் கொண்டுவிட்டீர்கள் என்கிறார். அது என்ன விகல்பம் ? மேடுபள்ளமாக இருக்கும் ஒரு கண்ணாடியானது எதிரே உள்ள பொருள்களை திரிவுபடுத்திக்காட்டுகிறது. கண்ணாடியின் இக்குறைபாட்டையேவிகல்பம் என்பார்கள். அது போல நம் மனமானது கண்ணாடிக்கு ஒப்பானதாகும். கண்ணாடிக்கு ஒப்பான நம் மனமும் விகல்பமாக விளங்குவதால் புற உலகம் திரிவுபட்டதாக காட்சியளிக்கிறது. எத்தன் கோடி மக்கள் இருக்கிறார்களோ,அத்தனை கோடி மன விகல்பங்களும் இருக்கின்றன. அவரவர் மன விகல்பக்கங்களுக்கு ஏற்றவாறு விஷயங்களைப் பொருட்படுத்துவதும் மாறுபடுகிறது. ஏனவே விகற்பமற்ற மனதை உருவாக்குவதே சாதனம் எனப்படுகிறது. விகற்பமற்ற அந்த நிலையை நிருவிகற்பம் என்பார்கள். எங்கு விகற்பமில்லையோ அங்கு நிருவிகற்பம் வந்து விடுகிறது. அதாவது மெய்ப் பொருளின் உண்மை நிலை உணரப்படுகிறது. இதையே ஞானம் என்கிறோம். விகற்பமற்ற மனதில் எல்லாம் தெளிவாகப் புலப்படுவதால் அது எதையும் தேடி பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே முற்றிலும் உண்மையை உணர்ந்த நிலையில் அது தேங்கி செயலற்று அமைதியடைந்து நின்று விடுகிறது. இதையே மனோ நாசம் என்பார்கள். இந்நிலையே நிஷ்டைக்கு உகந்தது. இதில் நீடித்து நிலைத்தவர்கள் பரம்பொருளை அடைவது திண்ணம்.
மனம் பெற்றவனையே மனிதன் என்பார்கள். அந்த மனமே மனிதனது மேன்மைக்கும் கீழ்மைக்கும் காரணமாக இருக்கிறது. நல்ல மனம் படைத்தவன் நல்லவன், மேன்மையடையத் தகுதி பெற்றவன். தீய எண்ணங்களும், செயல்களும் பெற்றவன் அரக்கன். அவன் பிறவிப் பெருங்கடலை கடப்பது என்பது இயலாத காரியம். எனவே மனதை திருத்தி அமைக்க வேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு மனம் திருந்தி அமைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தெய்வீகம் வந்து மனதில் நிறைகிறது. அதுவே நிருவிகற்ப நிலை. முற்றிலும் தெய்வீகத்தால் நிரப்பட்ட மனம் அந்த தெய்வீகத்திலேயேகரைந்து போகிறது

No comments:

Post a Comment