Wednesday, April 16, 2014

கவிச்சக்கரவர்த்தி கம்பர்......

கவிச்சக்கரவர்த்தி கம்பர்......
கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன் .......
இராமன் முடி சூட வருகிறான். பட்டத்து இளவரசன். அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது. எவ்வளவு சந்தோஷமா இருக்கும். கைகேயியை பார்க்கிறான். அவள் அவனை கானகம் போகச் சொல்லுகிறாள். சொன்ன அந்த கணத்தில் இராமனுக்கு எப்படி இருந்திருக்கும் ?
...
ஒரு வினாடி திகைதிருப்பானா ? பின் சுதாரித்து இருப்பானோ ?
ஒரு துளியாவது வருத்தம் இருந்திருக்குமா ? நான் ஏன் காட்டுக்குப் போக வேண்டும் என்று கேட்டு இருப்பானா ?
ஒரு வினாடி இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கம்பனைத் தவிர யாராலும் அந்த இடத்தை இவ்வளவு அழகாக சொல்லி இருக்க முடியாது.
.
இராமனின் முகம் அவள் சொன்னதை கேட்பதற்கு முன்னும், கேட்ட பின்னும் தாமரை மலர் மாதிரி இருந்ததாம், கேட்ட அந்த ஒரு வினாடி தாமரை அந்த நொடியில் மலர்ந்த மாதிரி இருந்ததாம்.
"இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!"
இப் பொழுது = இப்போது, அது நடந்து முடிந்த எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், ஆற அமர யோசித்து இப்போது
எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? = எம் போன்ற கவின்ஞர்களுக்கு சொல்லுவது எளிதா ? இல்லவே இல்லை.
யாரும் செப்ப அருங் குணத்து இராமன் = யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த குணங்களை கொண்ட இராமனின்
திருமுகச் செவ்வி நோக்கின் = செம்மையான திரு முகத்தை நோக்கினால்
ஒப்பதே முன்பு பின்பு = அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னும் பின்னும் தாமரையை ஒத்து இருந்தது
அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது = ஆனால் அந்த வாசகத்தை கேட்ட அந்த ஒரு கணத்தில்
அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! = அப்போது தான் மலர்ந்த செந்தாமரையை மிஞ்சி நின்றது அவன் முகம்
அந்த வாசகத்தை கேட்ட உடனே, முகம் மலர்ந்ததாம். மலர்ந்த செந்தாமரையை விட இன்னும் சிறப்பாக இருந்ததாம்.

No comments:

Post a Comment