நாயாகப் பிறவி எடுப்பது ஏன் கேவலம்?
ராமச்சந்திரமூர்த்தி ஒரு முறை அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ஸ்ரீராமரிடம் வந்தான்.
''பிரபோ... காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன்!'' என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க, அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் கவலை அடைந்த ஸ்ரீராமர், லட்சுமணனிடம் "தம்பி... அந்த நாய் மூன்று நாட்களாகத் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து வா!" என்று அனுப்பினார். லட்சுமணன் வெளியே வந்து குரைக்கும் நாயைக் கண்டான். பின்பு அதை நெருங்கி, ''உன் துயரத்துக்குக் காரணம் என்ன... சொல்!'' என்றான்.
உடனே அந்த நாய், ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது: ''பிரபுவே! கோயில்கள், யாகம் செய்யும் இடம், பிருந்தாவனம், சபை, மடம் மற்றும் புண்ய தீர்த்தம், சமையல்கட்டு ஆகிய இடங்களுக்கு நாங்கள் போகக் கூடாது! அதன் அடிப்படையில் அரசவைக்குள் நான் வரக்கூடாது. எம்பெருமான் ஸ்ரீராமபிரானை வரச் சொல்லுங்கள்!'' என்றது.
இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன், நாய் சொன்னதை அப்படியே ஸ்ரீராமரிடம் கூறினான். உடனே ஸ்ரீராமர் வந்தார்.
''எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே, நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல்!'' என்றார்.
அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி, ''மிக்க நன்றி பிரபு! ஒரு குற்றமும் செய்யாத என்னை, சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் பிரபு!'' என்றது வேதனையுடன்.
உடனே ஸ்ரீராமர் கனிவான குரலில், ''வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன்!'' என்றார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வரவழைக்கப்பட்டார். ஸ்ரீராமர் அவரை நோக்கி, ''ஸ்வாமி... நீர் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்?'' என்று விசாரித்தார்.
அதற்கு சன்யாசி, ''பிரபு! நான் பிட்சை வாங்கி வரும்போது, இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட்டது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே, அதன் மீது கல் எறிந்தேன்!'' என்றார்.
ஸ்ரீராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி, ''ஸ்வாமி, இது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நாய், ஐந்தறிவு படைத்த பிராணி. இதை உணராமல், அதை அடித்த உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீர், அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!'' என்று கூறியவர் நாயின் பக்கம் திரும்பி, ''இந்த சன்யாசி உன் விஷயத்தில் குற்றவாளி என்பதால், இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும், அதை நிறைவேற்றச் சித்தமாக இருக்கிறேன்!'' என்றார்.
அப்போது அந்த நாய் ஸ்ரீராமரிடம், ''நன்றி பிரபு! இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை!'' என்றது. ஸ்ரீராமரும் அதற்குச் சம்மதித்தார்.
தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், ஸ்ரீராமரை வியப்புடன் நோக்கினர். ''பிரபுவே... அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி, தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். அது சரி... நாய் ஏன் இவ்வாறு கேட்டுக் கொண்டது?'' என்று ஏகோபித்த குரலில் கேட்டனர் அவர்கள்.
அதைச் செவிமடுத்த ஸ்ரீராமர், அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அந்த நாய், ''ஜனங்களே, சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. என்ன, புரியவில்லையா? இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்’’ என்று ஆரம்பித்துச் சொன்னது:
‘‘சிவாலயம், மடம், கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு, அந்தணர், அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் போஜனப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில், நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால், இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவேதான், சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன்! இந்த ஜென்மத்தில் என்னிடம் பாவம் கட்டிக் கொண்ட சன்யாசி, சிவாலயப் பணியில் இருந்தாலும், வினை காரணமாக மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார்!''
அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது. சிவாலயத்தில் பொறுப்பேற்ற சன்யாசி, தனது நேர்மையற்ற செயல்களால் மறுபிறவியில் நாயாகப் பிறந்தார். அவருக்கு தண்டனை அளித்த நாய், தனது பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்துவிட்டு அடுத்த பிறவியில் உயர் நிலையை அடைந்தது.
No comments:
Post a Comment