ஒருவர் ஒரு துணையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பமா? அல்லது ஒரே ஒரு துணையுடன் மட்டும் வாழ்வதுதான் சிறந்ததா? சத்குரு: கடவுள் இதற்கெல்லாம் விருப்பப்படுவார் என்று தோன்றவில்லை. உங்கள் கேள்வியை இப்படிச் சொல்லலாம்… “அர்த்தமுள்ள செயல் எது?” இதற்கு இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று சமூகம் சார்ந்தது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்றுதானே நம் சமூகத்தில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. சமூகத்தை கட்டுக்குள் வைப்பதற்காக சொல்லப்பட்ட செய்தி இது. “ஒருவனுக்கு பல பெண்கள்” என்று சொல்லப்பட்ட சமூகங்களில் எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஆளவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. இதைப் பற்றி நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இந்த விஷயத்திற்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது… இந்தப் படைப்பில் உள்ள அத்தனைப் பொருட்களுக்கும் ஞாபகம் இருக்கிறது. பல கோடி வருடங்களுக்கு முன் நடந்தவை யாவற்றையும் உங்கள் உடல் இன்றும் ஞாபகத்தில் வைத்துள்ளது. மரபணு, வம்சாவளி என்று நாம் சொல்வது யாவும் ஞாபகம்தான். இந்தியப் பாரம்பரியத்தில் இந்த உடல்சார்ந்த பந்தத்தை ருனானு பந்தம் என்கிறோம். உங்கள் ஞாபகங்களே உங்களைச் சுற்றியுள்ளவற்றுடன் உங்களைப் பிணைக்கிறது. இது இரத்த பந்தத்தையோ அல்லது நீங்கள் கொண்டுள்ள அன்பைப் பற்றியதோ அல்ல, உங்களுக்குள் உள்ள நினைவுகளே உறவாகவும் பந்தமாகவும் ஆகிறது. ஞாபகங்களை இழந்தால் எந்தவொரு மனிதரும் அன்னியராய் தோன்றுவார். யாரோ ஒருவரது கரங்களை அன்யோன்யமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பற்றினால் அந்த நினைவு மறக்கப்படாது. உங்கள் உடல் கொண்டுள்ள ஞாபகங்களுடன் ஒப்பிடுகையில் மனதின் ஞாபகங்கள் மிகச் சிறியதே. யாரோ ஒருவரை நீங்கள் ஒருமுறை தொட்டால் மனம் அதனை மறந்து போகலாம், ஆனால் உடலின் நினைவில் நிரந்தரமாய் அது பதிந்துவிடும். இருவர் உடலுறவு கொண்டால் மனம் அதனை மறந்துவிடலாம், உடல் அதனை மறக்காது. விவாகரத்தே பெற்றுவிட்டாலும், உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு வெறுத்தாலும் உடலளவில் உள்ள நினைவு நீங்காது. யாரோ ஒருவரது கரங்களை அன்யோன்யமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பற்றினால் அந்த நினைவு மறக்கப்படாது. ஏனெனில், உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் பெற்றுக் கொள்வதற்கு திறந்த நிலையில் இருக்கின்றன. நீங்கள் யாருடனாவது சிக்கிப் போகாமல் இருக்க விரும்பினால், அவர்களுடன் இருக்கையில் இரு கரங்களையும் இணைத்து “நமஸ்காரம்” செய்யுங்கள். இரண்டு கைகளையோ, இரண்டு கால் கட்டை விரல்களையோ சேர்த்து வைக்கையில், உடல் அதன் ஞாபகத்தில் ஊறிப் போவதை தடுக்கிறது. உடல் சார்ந்த ஞாபகங்களை குறைப்பதற்கான வழிமுறைகளாக இவற்றை நாம் பார்க்கிறோம். உடல் சார்ந்த ஞாபகங்கள் குறையாவிட்டால், ஆழமான அனுபவ நிலைகளுக்குள் உங்களை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும். அளவுக்கதிகமான சுகத்தில் ஈடுபடுபவர்களின் முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பை காண முடியும். அதில் அற்பமான ஒரு ஆளுமையும் இருக்கும், ஆனால் சந்தோஷம் இருக்காது. அதனை அவர்களிடமிருந்து அகற்ற ஏராளமான வேலை செய்ய வேண்டி வரும். உங்கள் மனம் கண்டுணர முடியாத வகைகளில் உங்கள் உடல் ஞாபகங்கள் உங்களை பின்னிப் பிணைத்து விடும். அதனால், உங்கள் உடலை எதுபோன்ற விஷயங்களுக்கு நீங்கள் உட்படுத்துகிறீர்கள் என்பதில் விழிப்பாய் இருப்பது அவசியம். கொடுக்க வேண்டிய விலை இன்று எங்கு பார்த்தாலும் மிதமிஞ்சிய அன்யோன்யமான உறவுமுறைகளை பார்க்க முடிகிறது. உங்கள் உடலிடமிருந்து ஒரு தொலைவு ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால், அதற்கு உண்டான விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். தன் உடலுடன் ஒரு தொலைவினை ஏற்படுத்திக் கொண்ட மனிதருக்கு அவர் என்ன செய்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. தன் உடலை அவர் ஒரு கருவியாகவே பயன்படுத்திக் கொள்கிறார். அப்படி அல்லாத பட்சத்தில், உடல் சார்ந்த சுகங்களை குறைப்பது நல்லது. அதனாலேயே, இந்தக் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த ஒருவர் இறந்தாலே ஒழிய மற்றொருவர் மறுதிருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லாது இருந்தது. ஆனால், இன்று 25 வயதிற்குள் 25 துணைகளுடன் இருந்து விடுகின்றனர். இதற்கு உண்டான விலையை மக்கள் ஏற்கனவே கொடுத்து வருகிறார்கள். அமெரிக்காவில், 10 சதவிகித மக்கள் மனஅழுத்தத்திற்கான மருந்துகளை உண்டு வருகின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று அவர்களுடைய உடல் குழம்பிப் போயிருப்பதுதான். அவர்கள் எதற்கு உரியவர்கள் என்று அவர்களுடைய உடல் குழப்பம் அடைகிறது. உடலுக்கு ஸ்திரமான ஞாபகம் இருக்க வேண்டும், இதனை மக்களும் உணர்கின்றனர். ஒருவருடைய துணை அழகான உடல்வளம் இல்லாதவராய் இருக்கலாம், புத்திசாலியாக இல்லாமல் இருக்கலாம், மேல்மட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம், இருந்தும் தன் துணைக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிச்சல் ஒருவருக்கு ஏற்படுகிறது. தனக்குள் எங்கோ ஒரு மூலையில் இப்படி வாழ்வதில் சுகமும் வளமும் இருக்கிறது என்று அவர்களுக்கு புரிகிறது. உடல் சார்ந்த ஞாபகம், மனம் சார்ந்த ஞாபகங்களை விட உங்களை அதிகமாக ஆட்சி செய்வதே இதற்கு காரணம். தற்சமயம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது உங்கள் உடல் கொண்டுள்ள நினைவுகளால் நிர்ணயிக்கப்படுகிறது, மனதின் நினைவுகளால் அல்ல. நாளை காலையே உங்கள் மன நினைவுகளை வீசியெறிய முடியும், உடல் சார்ந்த நினைவுகளை அப்படி எறிய முடியாது. அதற்கு உங்களுக்குள் முற்றிலும் வித்தியாசமான ஆன்மீக வளர்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும். உடல் ஞாபகங்களை குறைத்தல்… பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்கு மிக உறுதியான ஞாபகம் இருக்கிறது என்று நவீன அறிவியல் இன்று சொல்கிறது. யோகாவில், பன்னெடுங்காலமாக இதனை அறிந்து வைத்திருக்கிறோம். சக்தி நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களுக்கு நான் செல்கையில், அங்குள்ள மக்களிடம் அவ்விடத்தைப் பற்றி நான் கேட்பதில்லை, அங்குள்ள ஒரு பாறையின் மீது நான் கை வைப்பேன். அதனுடன் இருப்பதன் மூலம் அந்த இடத்தைப் பற்றிய முழு கதையையும் அறிந்து கொள்வேன். மரத்திலுள்ள வளையங்களை வைத்து அவ்விடத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றையே நாம் சொல்வதில்லையா அதைப்போல, பாறைகளுக்கு மரங்களை விட சிறப்பான ஞாபக சக்தி இருக்கிறது. ஒரு பொருள் எத்தனை தடிமனாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஞாபகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சக்தியும் அதற்கு கூடுதலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அசைவற்ற பொருட்களுக்கு அசையும் பொருட்களை காட்டிலும் ஞாபகம் அதிகம். இன்றைய தொழில்நுட்பம் இதனை நிரூபித்து வருகிறது. கம்ப்யூட்டருக்கு உங்களை காட்டிலும் நினைவாற்றல் அதிகமாக உள்ளது. மனித மனம் நினைவாற்றலுக்காக உருவாக்கப்பட்டதல்ல, கிரகித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஜடப் பொருட்களால் கிரகித்துக் கொள்ள முடியாது, அவற்றால் தன் நினைவில் மட்டுமே பதித்துக் கொள்ள முடியும். தெய்வச் சிலைகளும், பிற பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவங்களும் உருவாக்கப்படும் நோக்கமே அவை நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள சக்தி வாய்ந்த ரூபங்களாய் விளங்குவதாலேயே… ஒரு காலத்தில், இந்தியாவில், சிவன் கோவிலுக்குள் நிர்வாணமாக மட்டுமே நுழைய முடியும். ஆங்கிலேயர்கள் இந்த தேசத்திற்குள் நுழைந்த பின்னரே இதுபோன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாம் போலித்தனமாக வெட்கப்பட ஆரம்பித்தோம். கோவிலில் உள்ள ஞாபகத்தை நாம் முழுமையாய் கிரகித்துக் கொள்வதற்காகவே நிர்வாணமாய் கோவிலுக்குள் செல்லும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. தீர்த்தத்தில் ஒரு முழுக்குப் போட்டு, தரையில் வெறும் உடலுடன் படுக்கும்போது, தெய்வீகத்தின் ஞாபகங்களை உங்களுக்குள் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும். நடப்பதை வேடிக்கை பார்க்கும் குணம் மனதிற்கும், ஒரு இடத்தில் நிலவும் சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்த உடலிற்கும் உள்ளது. தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகத்தில் வணங்கிய நிலையிலுள்ள பக்தர்களின் சிற்பங்களை பார்க்க முடியும். மனதைவிட உடல், தெய்வீகத்தை சிறப்பாய் உள்வாங்கிக் கொள்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இது அமைந்துள்ளது. உடல் சார்ந்த ஞாபகங்களை அழிப்பது… ஆழமான பக்தியினால் உடல் சார்ந்த ஞாபகங்களை அழிக்கலாம் அல்லது வேறு சில ஆன்மீகப் பயிற்சிகளை செய்வதன் மூலமும் அதனை அழிக்க முடியும். அதிஅற்புதமான பக்தர்கள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு மனிதர் எனக்குள் ஆழமாய் சென்றார்… உங்கள் உடல் சார்ந்த ஞாபங்களை நீங்கள் அழித்தால், உங்களுக்கு எது முக்கியமோ அதைப் போலவே உங்கள் உடல் வடிவமெடுக்கும். இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு ஒரு பெண் வந்து சேர்ந்தார். அவர் எங்கிருந்து வந்தார் என்று நமக்கு தெரியாது, ஆனால் அவரது அங்க அவயங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் நேபாள தேசத்தவராய் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர் ஒரு வார்த்தைக்கூட உச்சரிக்காமல் வெறுமே நடந்து திரிந்தார். எப்பொழுதும் அவரை சில நாய்கள் பின் தொடர்ந்தன. நாய்களுக்கு உணவளிப்பதற்காக உணவை திருடவும் செய்வார் அவர். அதற்கு பலமுறை அடிவாங்கியும் இருக்கிறார். ஆனால், வேறு சில சமயங்களில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடல் அலைகளில் அவர் மிதப்பதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். கடலுக்குள் சென்று சம்மணமிட்டு தண்ணீரின் மேல் அமர்ந்து கொள்வார், மிதப்பார். அதன்பின், மக்கள் அவரை வழிபட துவங்கினர். அவர் கடைகளுக்கு வரும்போது, நாய்களுக்கு அவற்றை அவர் அளிக்காதவாறு உணவினை அவர்கள் பாதுகாத்துக் கொண்டனர். காலப்போக்கில், அவரை அடிக்க மக்களுக்கு துணிச்சலற்றுப் போனது. அவர் ஒரு சராசரி மனிதரைப் போல் அவர்களுக்கு தென்படவில்லை என்பதே காரணம். தன் முழு வாழ்க்கையையும் அவர் திறந்த வெளியிலேயே வாழ்ந்தார். தெருவோரத்திலும், கடலிலும் ஒரு சிறு கூரை கூட இல்லாமல் உறங்கினார். இதனால் அவரது முகம் இயற்கை மாற்றங்களால் பாதிப்புற்றிருந்தது. அவரது வாழ்வின் கடைசி நாட்களில், அவர் 70 வயதை கடந்த பின்பு, அவருடைய ஆத்மார்த்த சீடர் ஒருவர் அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பின், பிரபல இசையமைப்பாளர் ஒருவர், அங்கு அவருக்கென ஒரு சிறு வீட்டினை கட்டிக் கொடுத்தார். அவரைச் சுற்றி பக்தர்கள் கூடினர். 15, 16 வருடங்களுக்கு முன் சேலத்திற்கு அருகில் இருக்கும் மலைப் பிரதேசத்திற்கு நான் செல்லும்படி நேர்ந்தபோது இந்த பெண்மணியைப் பற்றி என்னிடம் சிலர் சொன்னார்கள். அவர் பெயர் மாயம்மா என்றும் சொன்னார்கள். நான் சென்றபோது அவர் மரணம் அடைந்திருந்தார். அன்று பௌர்ணமி தினம். மாயம்மா சமாதியில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது கலந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. என் மனைவி மகளுடன் அவ்விடத்திற்கு சென்றேன். மகளுக்கு 5, 6 வயதிருக்கும் என்று ஞாபகம். பார்ப்பதற்கு அத்தனை எழிலுடன் இல்லாத, ஒரு கான்கிரீட் சமாதி அது. நான் அங்கு நுழைந்தபோது, அங்கு நிலவிய சக்தி என் முகத்தில் அடித்தாற்போல் தீவிரமாய் இருந்தது. அத்தனை தீவிரம். நாங்கள் அங்கு அமர்ந்தோம், மணிக்கணக்கில் நேரம் சென்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. மாயம்மாவின் பக்தர் ஒருவர் அன்னத்தினை பரிமாறிக் கொண்டிருந்தார். அவரது முகத்தைப் பார்த்த என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் மாயம்மாவை வார்த்தெடுத்ததுப்போல் இருந்தார். இந்த மனிதரோ ஒரு தென்னிந்தியர், ஆனால் அவரது தோற்றம் ஒரு நேபாள முகத்தை ஒத்திருந்தது. அவரது ஆழ்ந்த பக்தியினால் மாயம்மாவின் முகம் போலவே அந்த பக்தரது முகம் மாறிப் போயிருந்தது. உங்கள் உடல் சார்ந்த ஞாபங்களை நீங்கள் அழித்தால், உங்களுக்கு எது முக்கியமோ அதைப் போலவே உங்கள் உடல் வடிவமெடுக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் மாறிப்போகும். மரபு சார்ந்த கட்டாயங்களிலிருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் சந்நியாசம் எடுக்கும்போது, தன் பெற்றோருக்கும், தன் மூதாதையர்களுக்கும் ஒரு சில சடங்குகளைச் செய்கிறார். இறந்தவர்களுக்குத்தான் இதுபோன்ற சடங்குகளை நாம் செய்து வருகிறோம். ஆனால், சந்நியாசிகளின் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே அது செய்யப்படுகிறது. பெற்றோர் இறந்துவிட வேண்டும் என்ற நோக்கில் அவை செய்யப்படுவதல்ல, மாறாக ஒருவரது உடல் சார்ந்த நினைவுகளை கழுவ வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கும்போது, முதல் படியாக உங்களது மரபு சார்ந்த ஞாபகங்களிலிருந்து தொலைவினை உருவாக்க வேண்டும். இதனைச் செய்யாமல் உங்கள் மூதாதையர் உருவாக்கிய கட்டாயங்களிலிருந்து நீங்கள் விடுபட முடியாது. அவர்கள் உங்கள் மூலம் வாழ்ந்து, உங்களை பல விதங்களிலும் ஆட்சி செய்வார்கள். உடல் சார்ந்த ஞாபகம் உங்களை இத்தனை தூரம் ஆட்டுவிக்கும்போது இந்தப் பிறப்பில் அதனை குறைத்துக் கொள்வது சிறந்தது. உங்கள் மூதாதையர்கள் விட்டுச்சென்ற கோடிக்கணக்கான வருட ஞாபகங்களை நீங்கள் விலக்க வேண்டும். ரெப்டீலியன் மூளை என்று அறிவியல் சொல்கிறதே, ஊரும் பாம்பு, பல்லி, தேள் இவையெல்லாம் இன்றும் உங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மூளை மனதில் இருக்கிறது என்று எண்ண வேண்டாம், உடலே மூளை. குறைந்தது இந்த ஜென்மத்திலாவது உங்கள் உடல் மேல் ஏற்படக்கூடிய பதிவுகளை நீங்கள் குறைக்கலாம். அது குழப்பமடைவதை தவிர்க்கலாம். இதனை அறிந்தவர்கள், உடல் ஏற்கும் தன்மையுடையதாய் இருக்கும் வகையிலான ஆன்மீக முறைகளை உருவாக்கினார்கள். யாரோ ஒருவர் ஆன்மீகத்தில் தீவிரமடையும்போது அவர் செய்யும் முதல் காரியம் தன் உறவுகளை விலக்கி வைப்பது என்பது உலகம் முழுமைக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஏனெனில், அவர் உடல் சார்ந்த உறவுகளை அமைத்துக் கொள்ள விழைந்தால், சில விஷயங்களில் சிரமம் ஏற்படும். அந்த மனிதர் ஆழமான கட்டாயத்தில் இருக்கிறார், அவரை தற்சமயம் அந்தக் கட்டாயத்திலிருந்து விடுவிப்பது மிகச் சிரமமான விஷயம் என்று தெரிந்தாலோ அல்லது அந்த மனிதர் தன் உடலின் மீது முற்றிலும் அடையாளமற்று இருக்கிறார் என்று தெரிந்தாலே ஒழிய அவருக்கு உடல் சார்ந்த உறவுகள் அமைத்துக் கொடுக்கப் பெறுவதில்லை. ஆனால், ஒருவருக்கு உடலளவில் தேவை இருக்கும் பட்சத்தில், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே சிறந்தது. அதிகமானோருடன் ஈடுபடுவது உடலுக்கு குழப்பத்தை விளைவிக்கும். அது தனிமனிதருக்கு நல்லதல்ல.
: ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தானா?
: ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தானா?
No comments:
Post a Comment