துணிக்கடைக்குச் சென்றால் நமக்கு பிடித்த நிறத்தில், டிசைனில் ஆடைகள் தேர்ந்தெடுப்பதே நம் வழக்கம். ஆனால் நாம் உடுத்தும் ஆடை கூட நம்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆடைகள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன…? என்ன வகை ஆடை, எப்போது அணிவது? இதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…. சத்குரு: யார் எந்த வகை ஆடை அணிவது? இயற்கை முறையில் விளைந்த பருத்தியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது பற்றி பலரும் இன்று பேசுகின்றனர். ஆனால், தொடக்கத்தில் மனிதர்கள் இத்தகைய ஆடைகளைத்தான் அணிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் தொன்மையான காலம் தொட்டே இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது. பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஒருவகையில் உங்கள் உடலின் தன்மைக்கு உறுதுணை செய்கின்றன. மிக சமீபத்தில் தான் சிலரின் வணிக நோக்கங்களுக்காக இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. யார் என்ன வகையான ஆடைகளை அணியவேண்டுமென்று நான் வகைப்படுத்த முயலவில்லை. ஆனால், வாழ்க்கையை ஒரு வகையான சுதந்திரத்துடன் நீங்கள் கண்ணுற்று எவ்வித நிர்பந்தமுமின்றி சில தீர்மானங்களை எடுக்கவேண்டும். உங்கள் உடல்நலம், மனநலம், நலவாழ்வு ஆகியவற்றின் மீது நீங்கள் அணியும் ஆடைகளுக்கென ஒரு தாக்கம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மனிதர்களுக்கு தங்கள் நலவாழ்வு மீது எவ்வித அக்கறையும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் கூட நாற்பது டிகிரி வெயிலில் கனமான கரியநிற ஜாக்கெட்களும், கழுத்துப் பட்டிகளும் அணிந்து நடமாடுவதைப் பார்க்கிறோம். தாங்கள் எதை, எப்போது அணியவேண்டும் என்கிற தெளிவில்லாமல் தங்கள் மேல் திணிக்கப்படுவதை எல்லாம் மனிதர்கள் அணிந்து கொள்வது மிகவும் துரதிருஷ்டமானது. ஆர்கானிக்கா? சிந்தடிக்கா? ஆர்கானிக் முறையில் உருவான துணிகளை அணிவதற்கும், சிந்தடிக் ஆடைகளை அணிவதற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உங்கள் உடலின் இயக்கத்திலேயே அவை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. மற்றவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டியதில்லை, உங்கள் அனுபவத்திலேயே இதை நீங்கள் உணரலாம். உள்ளாடை உட்பட அனைத்தையும் ஒரு வார காலம் பட்டிலும், பருத்தியிலும் உடுத்திப் பாருங்கள். உங்களுக்கு இந்த ஆடைகள் எத்தனை சௌகரியம் என்பதை உணர்வீர்கள். அதன்பின்னர், இறுக்கமான சிந்தடிக் ஆடைகளை அணிந்து பாருங்கள். அடிப்படை வசதியிலிருந்து உடல் செயல்படும் விதம் வரை மிகப் பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். ஏனென்றால், உங்கள் உடலை எது மூடியிருக்கிறதோ, அதற்கென்று சில தன்மைகள் உண்டு. நீங்கள் யார் என்கிற உங்களின் தேடலுக்குத் துணை செய்யவோ, தடை செய்யவோ சில பொருட்களால் முடியும். குறிப்பாக, பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஒருவகையில் உங்கள் உடலின் தன்மைக்கு உறுதுணை செய்கின்றன. அதற்காக, சிந்தடிக் ஆடைகளை அணிந்தால் செத்துவிடுவீர்கள் என்று பொருளல்ல. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிந்தடிக் ஆடைகளை அணிந்து நீங்கள் தியானம் செய்தாலும், அதேவிதமான மனிதராக நீங்கள் இருக்கமுடியும். ஆனால், கூடுதலாக நீங்கள் முயற்சி செய்யவும் போராடவும் வேண்டிவரும். ஆர்கானிக் பருத்தியில் தயாரான ஆடைகளின் நன்மைகளை உணர்ந்து அந்தவிதமான ஆடைகளுக்கு மாறிக்கொள்கிற வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை. ஏனென்றால், பத்து பிறவிகளுக்குத் தேவையான ஆடைகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால், எளிமையான சூழல் மற்றும் எட்டு ஜோடி ஆடைகள் போதும் என்று நீங்கள் நினைத்தால் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் தரத்தில் உங்களால் கவனம் செலுத்தமுடியும். எண்ணிக்கையா? தரமா? வாழ்வின் எல்லா நிலைகளிலும், எண்ணிக்கையின் அடிப்படையில் பாராமல், தரத்தின் அடிப்படையில் பார்க்க மனிதர்கள் பழகிவிட்டால், இந்த பூமியை நம்மால் காப்பாற்ற முடியும். இப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் சிந்திக்கிறார்கள். ஆனால், நம்மிடம் போதுமான எண்ணிக்கை இல்லை. ஆனால், வேண்டிய அளவு தரமானவை இருக்கின்றன. எண்ணிக்கையை மறந்து தரத்திற்கு நீங்கள் முதலிடம் தரத் தொடங்கிவிட்டால், வாழ்க்கை மேலும் மேலும் மேம்படுவதோடு எல்லோரின் தேவைகளும் நிறைவேறும்.
:
:
No comments:
Post a Comment