கொடி மர தத்துவம்.!
கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.
அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.
கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.
ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?
அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
எப்படி தெரியுமா?
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.
அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment