நம் மனதில் எழும் கேள்விகள் பலவற்றிற்கு விடை தேடி நாம் புத்தகங்களை படிப்பதுண்டு. அவற்றில் விடை கிடைக்கப்பெற்ற கேள்விகள் சில, விடை கிடைக்காத கேள்விகள் பல… இப்படி விடை அறிய கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சத்குருவின் பதில் இங்கே… கேள்வி செல்ஃப் ஹிப்னாசிஸ் (self-hypnosis) எனப்படும் மனவசிய நிலைக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? சத்குரு: இரண்டிற்கும் உள்ள வேறுபாடு உலகளவு. ஹிப்னாசிஸ் என்றால் மதிமயங்கிய நிலையில் இருப்பது. “நான் வெளியே உணவருந்தச் செல்கிறேன், நீயும் வா” என்று யாரோ சொல்ல அவர்களை பின்தொடர்ந்து சென்றால் அதுவும் ஹிப்னாடிஸம் தான். நீங்கள் விழிப்பாய் இல்லாமல் இருந்தால் அது ஹிப்னாடிஸம் தான் அல்லவா? இன்று மனிதர்களின் மனநிலை மோசமான நிலையில் இருப்பதால், ஹிப்னாடிஸம் போன்ற ஒரு கருவி தேவைப்படுகிறது. மனநிலை நன்றாக இருக்கும் சமூகத்திற்கு ஹிப்னாடிஸம் தேவையில்லை. அதில் அர்த்தமும் இருக்காது. தியானத்தில், மனதின் எந்தவொரு பரிமாணத்தையும் தொடுவதற்கு நாம் முயலுவதில்லை, அதில் நமக்கு ஆவலுமில்லை, நம் விருப்பமெல்லாம் மனதைக் கடந்து செல்வதிலேயே உள்ளது. மனதைத் தாண்டிய நிலையில் நீங்கள் செயல்படும் போது உங்களை வசியம் செய்ய இயலாது, இல்லையா? உங்கள் மனதை மட்டுமே வசியம் செய்ய முடியும். தியானம் என்பது மனதைத் தாண்டிய ஒரு நிலை. இங்கு வசியம் இல்லை, மனமும் இல்லை. கேள்வி பள்ளிக் குழந்தைகளுக்கு யோகா எந்த அளவு வேலை செய்யும்? சத்குரு: ஒரு பொருள் சரியாகத் தயாரிக்கப்படாவிட்டால், இவ்வளவு மோசமாகத் தயாரித்தவர் யார் என்றுதானே யோசிப்போம்? உங்கள் குழந்தை சரியாக இல்லாவிட்டால், இப்படி உருவாக்கியவர் யார் என்றுதானே மற்றவர்கள் யோசிப்பார்கள்? அதனால் இப்போது யாரை குறைசொல்வது?! உண்மையில் குழந்தைகளுக்கு யோகா தேவையில்லை, ஆன்மீகம் தேவையில்லை. அவர்கள் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் திறந்த மனத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்வதெல்லாம் உங்களைப் பார்த்துத்தான். ஆனால், பெரியவர்களின் செயல்களோ முட்டாள்தனமாகவே இருக்கிறது. அதனால், குழந்தைகளின் பாதையும் இயல்பாக உங்கள் பாதையை நோக்கியே திரும்புகிறது. அதனால்தான், அவர் சரியில்லை, இவர் சரியில்லை, அடுத்த தலைமுறை சரியில்லை என்று சொல்லும்முன், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள் என்று நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். உங்களை முதலில் சரிசெய்து கொள்ளுங்கள். அமைதியான, ஆனந்தமான, பிறர் விரும்பும்படியான நபராக மாறுங்கள். அப்புறம் சில வாரங்களிலேயே உங்கள் குழந்தையிடம் மாற்றத்தை பார்ப்பீர்கள்! அவர்களுக்கான சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கிக் கொடுத்திடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், ஈஷா நடத்தும் பள்ளிகளுக்கு வந்து பாருங்கள்! அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால், இப்படியும் இருக்கிறார்களா என்ற ஆச்சரியமே உங்களிடம் எஞ்சி நிற்கும். ஏனெனில், குழந்தைகளை சரி செய்யப்பட வேண்டியவர்கள் என்று நாங்கள் நம்பவில்லை, ஆசிரியர்களைச் சரி செய்வதில் தான் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். கேள்வி இப்போது ஈஷாவில் சூரியக்ரியா என்னும் பயிற்சி சொல்லி தரப்படுவதைப் பார்க்கிறேன், இதற்கும் சூரிய நமஸ்காரத்திற்கும் என்ன வித்தியாசம்? சத்குரு: இரண்டும் வெவ்வேறு. இரண்டுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கிறது. சூரியக்ரியா ஒரு படி மேலே என்று சொல்லலாம். சூரியக்ரியா மிகவும் நுட்பமானது. சூரிய நமஸ்காரம் போல உடனடிப் பலன்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் சரியானபடி செய்தால், சூரியக்ரியா உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தும். சூரிய நமஸ்காரம் உங்களுக்கு வலிமையைத் தருகிறது, சமநிலையைத் தருகிறது. ஆனால், சூரியக்ரியா ஆன்மீகத்திற்கான வாசலைத் திறக்கிறது. அது உங்களை சூரியனின் சுழற்சியோடு ஒருங்கிணைய வைக்கிறது. உங்கள் கிரகிப்புத்திறன் சூரிய மண்டலத்தையும் தாண்டி விரிவடைகிறது. எனவே, சூரியக்ரியா முற்றிலும் மற்றொரு பரிமாணம் கொண்டது.
Read more at :
Read more at :
No comments:
Post a Comment