Monday, May 19, 2014

ஜராசந்தன்

ஜரா ஓர் அரக்கிதான். மனித மாமிசத்தைப் புசிப்பவள்தான். ஆனால் அவளுக்குள்ளும் கருணை இருந்தது. பூமியின் ஆழத்தில் பாறாங்கல்லின் இடையே கூட ஈரம் தென்படுவது மாதிரி. தன் மனத்தில் கருணையும் உண்டு என்பதை அவளே கூட அறிந்திருக்கவில்லை. அதை அவள் அறியும் ஒ...ரு சந்தர்ப்பம் வாய்த்தது. ஆகா! அந்த சந்தர்ப்பம்தான் அவளுக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்து விட்டது! மகத தேசத்தின் தலைநகரை அடுத்துள்ள கானகத்தில் அவள் வாழ்ந்துவந்தாள். இரவு நேரங்களில் தன்னை ஓர் அழகியாக உருமாற்றிக் கொள்வாள். கையில் ஒரு பெரிய பூக்கூடையோடு மெல்ல நடந்து நகர்ப் பகுதிகளுக்கு வருவாள். இரவில் மலரும் பூக்களைக் கொய்வதற்கு ஓர் அழகி புறப்பட்டுச் செல்வது மாதிரித்தான் இருக்கும், அவள் தோற்றமும் பாவனைகளும். யாருக்கும் ஒரு சிறு சந்தேகமும் வராது.

சாப்பிட ஏதேனும் மனித மாமிசம் கிட்டுமா என்ற எண்ணத்தில் அங்குமிங்கும் ரகசியமாக உலாவுவாள். உயிருள்ள மனிதனை அடித்துச் சாப்பிடுவதி ல்லை அவள். ஆனால் உயிரிழந்த நர மாமிசத்தைச் சுவைப்பதில் அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு. மாமிசம் கிட்டுமானால் யாருமறியாமல் ரகசியமாக அதைத் தன் கையில் உள்ள பெரிய கூடையில் தூக்கிப் போட்டுக் கொண்டு கானகம் வந்துவிடுவாள். இப்படியாக அவளது வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. அன்றும் அப்படித்தான் நகர்ப் பகுதிக்கு வந்தாள். அடர்ந்த இரவு ஒரு போர்வையாக நகரைப் போர்த்தியிருந்தது. ஆங்காங்கே தெருவோரங்களில் சில எண்ணெய் விளக்குகள் மட்டும், இருட்டை வெளியேற்றும் முயற்சியில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு மெலிதாக மினுங்கிக் கொண்டிருந்தன.

கண்களால் கூர்மையாகப் பாதையை ஆராய்ந்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தாள். அரண்மனை அருகே வெட்டவெளி போன்ற பகுதியில் நடந்த போது காலில் ஏதோ இடறியது. குனிந்து தரையை உற்றுப் பார்த்தாள். அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவளுக்கான விருந்துச் சாப்பாடே அல்லவா அங்கே காத்திருந்தது! தரையில் மனித மாமிசம் வா வா என அவளை வரவேற்றது. அப்போதுதான் பிறந்த பச்சிளம் குழந்தையின் இரு உடல் பகுதிகள் அவளை அழைத் தன. பார்க்கப் பார்க்க அவளுக்கு வியப்புத் தாளவில்லை. அவள் கொடூரமானவள்தான். ஆனால் இதென்ன கொடுமை! ஒரு குழந்தையை நெடுக்கு வாட்டில் இரு சம பாகமாக யார் இப்படி வெட்டிப் பிரித்தது? எந்தக் கத்தி இவ்வளவு சமச்சீரான இரு பகுதிகளை உருவாக்கியது? பிறந்த குழந்தையை இப்படிக் கொல்லவும் மனம் வருமோ?

அவள் தன் கையிலிருந்த கூடையைக் கீழே வைத்தாள். அந்தக் குழந்தையின் இரு பகுதிகளையும் வலக்கரத்தில் ஒன்றும் இடக்கரத்தில் ஒன்றுமாக எடுத்தாள். ‘இப்படிப் பிறந்தவுடன் இறந்தாயே என் தங்கமே!’ என்று அந்த அரக்கிக்குள் இருந்த தாய்மனம் விம்மியது. அவள் விழிகளிலிருந்து கண் ணீர் கசிந்தது.தன் கையிலிருந்த குழந்தையின் சம பங்கான இரு பகுதிகளையும் அருகருகாக அவள் கொண்டுவந்தாள். மறுகணம் அவள் முற்றிலும் எதிர்பாராத அந்த அதிசயம் திடீரென நிகழ்ந்தது. அந்த மாபெரும் அதிசயம் நடப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னால்...... மகத தேசத்தைப் பிருகத்ரதன் என்ற அரசன் ஆண்டுவந்தான். கர்ணனுக்கு இணையான வள்ளல் அவன். வாரி வாரி வழங்கிய தர்மப் பிரபு. நல்ல குணங்களால் மட்டுமே உருவான மன்னன் என்று அந்நாட்டு மக்கள் நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றி அவனைக் கொண்டாடினார்கள். எங்கும் பரவிய அவன் கீர்த்தி காசியிலும் பரவியது.

காசி மன்னனுக்கு இரட்டையரான இரு மகள்கள் இருந்தார்கள். ஒருத்தியின் பிரதிபிம்பம் போல் இன்னொருத்தி அச்சு அசல் அப்படியே இருந்தாள். அட, மூக்கும் முழியும்தான் ஒன்றுபோல் இருக்கும் என்றால் நடையும் பாவனைகளும் கூடவா அப்படியே இருக்கும்! ஒருத்தியை அழைத்தால் இன் னொருத்தி வந்து நிற்பாள். ஒருத்திக்கு உடல் நலமில்லை என்றால் இன்னொருத்திக்கு மருந்து கொடுத்தால் போதும் என்று தோன்றும். அப்படி அவர் கள் ஒரே மாதிரித் தோற்றமும் ஒரே மாதிரி மனப்போக்கும் கொண்டவர்களாக விளங்கினார்கள். இந்தப் பேரழகு இரட்டைச் சகோதரிகளை யாருக்கு மணம் செய்து கொடுப்பது? அவர்கள் இருவருக்கும் சேர்த்துச் சுயம்வரம் வைத்தான் காசி மன் னன். ‘‘நீங்கள் விரும்பும் மன்னரைத் தனித்தனியே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லி இருவர் கையிலும் மணமாலைகளைக் கொடுத்தான்.

மகத தேசத்து மன்னன் பிருகத்ரதன் உள்பட ஏராளமான மன்னர்கள் சுயம்வர மண்டபத்தில் குழுமியிருந்தார்கள். மலர்களை மொய்க்கும் வண்டுகள் போல், மன்னர்களின் விழிவண்டுகள் இரட்டைச் சகோதரிகளின் அழகையே மொய்த்துக் கொண்டிருந்தன. இரண்டு அன்னங்கள் நடந்து வருவது மாதிரி கையில் மணமாலையோடு இரு சகோதரிகளும் ஒயிலாக நடந்து வந்தார்கள். ஒவ்வொரு மன்னனின் சிறப்பையும் தோழிகள் விவரிக்க, அவற்றைக் கேட்டவாறே நடந்து வந்தவர்கள். மகத மன்னன் பிருகத்ரதன் முன் வந்ததும் ஏறிட்டுப் பார்த்துத் தலை குனிந்தார்கள். ஒருத்தி தான் விரும்பும் அழகன் இவன்தான் என்ற எண்ணத்தில் நாணத்தால் கன்னம் சிவந்தாள். இன்னொருத்தி அதையே தானும் எண்ணியவளாய் வெட்கம் தாங்காமல் கால் விரலால் நிலத்தில் கோலமிட்டாள். தோழி, ‘‘தொடர்ந்து நடக்கலாமே? அல்லது எண்ணிய எண்ணப்படி நடக்கலாமே?’’ என்றாள், சிரித்தவாறே.

இரட்டைச் சகோதரிகளில் ஒருத்தி பிருகத்ரதன் கழுத்தில் மணமாலை சூட்டினாள். அடுத்த கணம் இன்னொருத்தி தன் மணமாலையையும் அவன் க ழுத்திலேயே சூட்டினாள். முதலில் திகைத்த சபை, பின்னர் ஆரவாரித்தது. ‘‘ஒரு கொடியின் இரு மலர்கள் போல், ஒரு முகத்தின் இரு விழிகள் போல் நீங்கள் இணைந்து வாழ்வீர்களாக!’’ என்று ஆசி கூறி அவர்களை பிருகத் ரதனுடன் அனுப்பிவைத்தான் காசி மன்னன். நல்ல குணவானான மாப்பிள்ளை கிடைத்தது பற்றிக் காசி மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகத தேசம் சென்று இரட்டைச் சகோதரிகளுடனான மண வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தான் மன்னன் பிருகத்ரதன். தன் மனைவியர் இருவரும் ஒரே மனப்போக்கோடு ஒரே ரசனையோடு ஒரே வகையான தோற்றத்தோடு விளங்குவதைக் கண்டு அவன் மனம் நிறைவடைந்தது. அவர்கள் இருவரி டையே எந்தச் சண்டை சச்சரவும் வருவது கிடையாது.

ஆனால் என்ன துரதிர்ஷ்டம்! அவர்கள் இருவரிடமும் ஒரே வகையான குறையொன்றும் இருந்தது. அந்தக் குறைதான் மன்னன் பிருகத்ரதனை வாட்டி வதைத்தது. ஆம். இருவருக்குமே குழந்தை பிறக்கவில்லை. இரண்டு மனைவியர் இருந்தும் எதிர்கால ஆட்சிக்கு வாரிசு இல்லையே? நாற்பது வயதைக் கடந்தாயிற்று. இனியா வாரிசு தோன்றப் போகிறது? ஆட்சியை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டுக் கானகத்தில் சென்று தவம் இயற்றி முக்திக்கு வழிதேடுவோம். மந்திரி பொறுப்பில் உள்ள நாட்டைக் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும்... தன் முடிவை மனைவியரிடம் தெரிவித்தான் பிருகத்ரதன். மனைவியர் பெருமூச்சு விட்டார்கள். அவ்வித முடிவெடுத்தால் தாங்களும் அவனோடு கானகம் வருவதாகவும் தாங்களும் தவ வாழ்வில் ஈடுபடுவதாகவும் சொன்னார்கள்.

இவ்வித ஆலோசனைகள் நடக்கும் காலத்தில் ஒருநாள், கண்ட கௌசிகன் என்ற மாமுனிவர் மாமரம் ஒன்றின் அடியில் நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்தது. ஆன்மிக நாட்டமுள்ள பிருகத்ரதன் முனிவரைத் தேடிச்சென்று பணிந்தான். அவரது தவப்பொலிவால் கவரப்பட்ட அவன் துயரத்துடன் விம்மினான். ‘‘உனக்கு என்ன குறை குழந்தாய்?’’ பரிவோடு வினவினார் முனிவர். ‘‘தாங்கள் குழந்தாய் என்று பாசத்தோடு என்னை அழைத்தீர்களே சுவாமி! அப்படி நான் அழைக்க எனக்கென்று ஒரு குழந்தையில்லை. எதிர்கால அர சாட்சிக்கு ஒரு வாரிசில்லை. அதுதான் என் மாபெரும் மனக்குறை!’’ என உருகிக் கரைந்தான், மன்னன். மாமரத்தின் அடியில் அமர்ந்திருந்த முனிவர் சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்தார். பின் கண்மலர்ந்தார். தன் வலக்கரத்தை நீட்டினார்.

அடுத்த கணம் மாமரத்திலிருந்து ஒரு கனி தானே உதிர்ந்து அவரது வலது உள்ளங்கையில் வந்து விழுந்தது. மாங்கனியை மன்னனிடம் தந்தார் முனிவர். ‘‘இந்தக் கனியை உண்டவர் வயிற்றில் கரு தோன்றுவது உறுதி!’’ என ஆசீர்வதித்து அவ்விடம் விட்டு அகன்றார். கனி பெற்ற மன்னன் கண்மூடி முனிவர் சென்ற திசை நோக்கி வணங்கினான். அரண்மனைக்கு விரைந்தான். நடந்த சம்பவத்தைச் சொல்லித் தன் மனைவியரிடம் கனியை உண்ணுமாறு கூறினான். ஒரு மாங்கனி. இரு மனைவியர். முனிவரிடம் தனக்கு இரு மனைவியர் உண்டு என்ற விவரத்தைச் சொல்ல மறந்தோமே! மன்னன் மனத்தில் ஒரு சி ன்ன உறுத்தல் எழுந்தது. அதனால் என்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டவன், கனியை இரு கூறாக வெட்டி சம பங்காக்கி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதியை அளித்தான்.

என்ன ஆச்சரியம்! முனிவர் வாக்கு பலிக்கத்தான் பலித்தது. ஆனால் விந்தையாய்ப் பலித்தது. இருவரும் ஒன்றாய்க் கருவுற்று, பத்து மாதம் கடந்ததும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிரசவித்தார்கள். பிறந்த இரு குழந்தைகளையும் தாதிகள் துணியில் சுற்றி மன்னனிடம் கொண்டுவந்து கண்ணீர் ததும்பக் காட்டினார்கள். அவற்றைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான். அவன் பார்த்தது இரு குழந்தைகளை அல்ல. ஒரே குழந்தையின் இரு உடல் பகுதிகளை. ஒவ்வொரு மனைவியும் தனித்தனியே ஒரே குழந்தையின் இரு வெவ்வேறு பகுதிகளைப் பிரசவித்திருந்தார்கள். அந்த அரைப் பிண்டங்களைப் பார்த்த மன்னன் மனம், ‘‘இறைவா! இது என்ன சோதனை!’’ என அரற்றியது. முனிவர் அருளிய மாங்கனியை வெட்டியதன் விளைவு இது என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. ‘‘குழந்தைப் பேறு கிட்டியும் அது முழுக் குழந்தையாகக் கிட்டவில்லையே!

இந்தச் சதைப் பிண்டங்களை வெளியே எறிந்துவிடுங்கள்!’’ என்று கண்மூடிக் கதறினான் மன்னன். தாதிகள் மௌனமாய் வெளியே சென்று அரண்மனைக்கு அருகிலிருந்த பரந்த மைதானத்தில், ‘‘கடவுளே! நீ படைத்த இந்த அரைகுறைப் படைப்பை உன் பொறுப்பில் ஒப்படைக்கிறோம்!’’ என்றெண்ணிப் பிரார்த்தித்து, தரையில் வைத்துத் திரும்பினார்கள். இரவில் ஓர் அழகிய பெண்ணைப் போல் உருமாறி நகருக்குள் வந்த அரக்கி ஜரா, அந்த மாமிசத் துண்டங்களைத்தான் கண்டெடுத்தாள். ஒரே குழந் தையை இப்படி நெடுக்கு வாட்டில் இரண்டாய்ப் பிளந்தவர் யார் எனத் திகைத்தவாறே வலக் கரத்தில் ஒன்றும் இடக் கரத்தில் ஒன்றுமாகத் தான் எடு த்த பகுதிகளை அருகருகே கொண்டு வந்தாள். அப்போதுதான் அந்த மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது.

இரண்டு துண்டங்களும் சரேல் என ஒன்றையொன்று ஈர்த்து ஒட்டிக் கொண்டன. ஒரு கணத்தில் ஓர் அழகிய முழுக் குழந்தை வடிவம் பெற்றது. அது உயிர்பெற்று உரத்த குரலெடுத்து அழுதது. பெரும் திடகாத்திரத்துடன் தென்பட்ட அந்தக் குழந்தையின் அழுகைக் குரல் நகரெங்கும் எதிரொலித்தது. குழந்தையை வாரி எடுத்துத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு சமாதானப்படுத்தினாள் ஜரா. குழந்தையின் மாபெரும் அழுகை ஒலி கேட்டு மன்னனும், இரு ராணிகளும் தாதியரும் விரைந்து ஓடோடி வந்தார்கள். ஜராவின் தோளில் குழந்தை முழு வடிவுடன் அழுதபடி சாய்ந்திருப்பதைக் கண்டு வியந்தார்கள். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஜராவிடம் சொன்னார்கள்.

ஜரா மகிழ்ச்சியோடு குழந்தையை மன்னனிடம் ஒப்படைத்தாள். ‘‘மன்னா! நான் அரக்கிதான். ஆனால் என்னால் ஒரு மனிதக் குழந்தை முழு உருப் பெற்றது என்றறியும் போது என் மனம் பெருமிதம் கொள்கிறது. இந்தக் குழந்தையை நான் ஒருபோதும் மறவேன். இது பிறக்கும்போதே அசாத்திய மான பலத்தோடு பிறந்திருக்கிறது. இதை ஜாக்கிரதையாக வளர்த்து வாருங்கள். நான் சென்று வருகிறேன்!’’ என்று சொல்லி ஜரா விடைபெற்றாள். மன்னன் அவளைக் கும்பிட்டான். ‘‘பெண்ணே! நீ செய்த உதவி, பேருதவி. உன்னால் இது நடக்க வேண்டும் என்றிருக்கிறது. என் குல தெய்வம் போல் வந்து என் வாரிசைக் காத்தவள் நீ. இந்த நாளில் ஆண்டுதோறும் உனக்கு எங்கள் நாட்டில் விழா எடுத்துக் கொண்டாடுவோம்.

ஜரா என்ற உன்னால் இணைக்கப்பட்டு இந்தக் குழந்தை உருவானதால் அந்தப் பொருளைத் தரும் வகையில் இவனுக்கு ஜராசந்தன் என்றே பெயர் சூட்டி அழைப்போம்!’’ மன்னன் கண்ணீர் மல்க அவளுக்கு விடை கொடுத்தான். மறுநாள் பொழுது புலர்ந்ததும் அரண்மனை வாயிலில் அதே கண்ட கௌசிக முனிவர் மறுபடி வந்து நின்றார். மன்னன் குழந்தையை அவர் காலடி யில் கிடத்தி, நடந்தது அனைத்தையும் விவரித்தான். முனிவர் குழந்தையை ஆசீர்வதித்தார். ‘‘இவன் பெரும் மல்யுத்த வீரனாக உருவாவான். இவனால் உன் குலம் பெருமை பெறும். இவனை வளர்த்துப் பட்டம் கட்டிய பின்னர் உன் விருப்பம்போல் மனைவியருடன் தவ வாழ்வை மேற்கொள்வாய்!’’ என வாழ்த்தி விடைபெற்றார். முனிவர் சென்ற திசை நோக்கி மண்ணில் விழுந்து வணங்கினார்கள் மன்னனும் அவனது இரு மனைவியரும்.

(மகாபாரதம் சபாபர்வத்தில் ஜராசந்தன் பிறப்பு பற்றிய பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது, அரக்க மனத்திலும் கூடக் கருணை உண்டு என்பதை விளக் கும் இந்தக் கதை.)

No comments:

Post a Comment