Monday, May 19, 2014

மரணம் என்றால் என்ன?


மரணம் என்றால் என்ன?

மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை... அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.

மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில் சத்திரசிகிச்சை செய்யும் பொழுது இருதயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதயத்தை தங்கள் மனோசக்தியால் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் காட்டியிருக்கிறார்கள் யோகிகள். சுவாசம் நீண்ட நேரம் தடைப்பட்ட பின்னரும் உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது. காற்றுப்புக இயலாத பெட்டிக்குள் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டவர்கள் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிரோடு வெளிவந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.

இறப்பு போன்ற ஒரு நிலையை மனோசக்தியாலும் ஏற்படுத்தலாம். யோகநிலையில் இருந்து கொண்டு உடலில் எவ்வித உயிரோட்டமும் அற்ற நிலையை யோகிகள் செய்து காட்டுகிறார்கள். சில மிருகங்கள், பூச்சிகள், புழுக்கள் தமக்கு அபாயம் வருகிறது என்பதை உணர்ந்தவுடன் இறந்துவிட்டது போன்ற பாவனையை வெளிக்காட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் அவைகள் உயிரற்ற சடலங்கள் போலவே காணப்படுகின்றன. தமது மனோசக்தியினாலேயே அவைகள் அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.

உடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. அதுதான் பிராணன் இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் “பிராணன் போய் விட்டது” என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம். பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது. மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.

இக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஒன்று ஆகாசம் (ஈதர் – பஞ்சபூதங்களில் ஒன்று). இது இயலுலகு எங்கும் இடையறா நிரம்பி நிற்கும் ஊடுபொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர். ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை. அது ஸ்தூல வடிவமாகும்பொழுது அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.

இயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன் சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன. பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன். ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.

பிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements – பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.

மனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.

இறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்

No comments:

Post a Comment