Monday, July 30, 2012
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்
"ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"
-தொல்காப்பியர்-
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்.
ஓரறிவுயிர்:
புல்லும் மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர். ஓரறிவு உயிர்களைத் தொல்காப்பியர் இரண்டாகப் பகுத்துக் காண்கின்றார்.
”புறக்கா ழனவே புல்வென மொழிப”
வெளியே சதைப்பற்று உடையனவாய் உள்ளே சதைப்பற்று அற்றனவாய் உள்ளனவற்றைப் புல் என்பர் புல்லின் உறுப்புக்களாக,
தோடே மடலே யோலை யென்றா
ஏடே யிதழே பாளை யென்றா
ஈர்க்கே குலையடின நேர்ந்தன பிறவும்
புல்வொடு வருமெனச் சொல்லினர் புலவர்
என்கிறார்.
”அகக்காழனவே மரமென மொழிப”
உள்ளே சதைப்பற்று உடையனவாய் வெளியே அற்றனவய் உள்ளனவற்றை மரம் என்பர். மரத்தின் உறுப்புக்களாக,
இலையே தளிரே முறியே தோடே
சினையே இழையே பூவே யரும்பே
என்கிறார்.
ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்குப் பொதுவாக,
காயே பழமே தோலே சுவையும் செதிளே
வீழோ டென்றாங் சுவையும் அன்ன
என்கிறார்.
ஈரறிவுயிர்:
மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்கிறார். நந்தும் முரளும் ஈரறிவுடைய உயிர்களாகும். சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.
மூவறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்
சிதலு மெறும்பு மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும். இவற்றின் கிளைகளாவன ஈயன் மூதாய் போல்வன.
நான்கறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.
நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள. பிறவும் என்றதனால் ஞ’மிறும் சுரும்பும் எனக் கொள்க என்பார் இளம்பூரணர்.
ஐயறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.
மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர். கிளையென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன.
ஆறறிவுயிர்:
ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.
மக்கள் தாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்பதன் மூலம் ஆறறிவு படைத்த மாந்தருடன் பிற உயிரினங்களையும் இணைத்துக் கூறுவதன் மூலம் அறியலாம்.
தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம் தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.
தொடு உணர்வு கொண்ட உயிரே முதல் உயிர் என்றும் ஓரறிவு உயிர் என்றும் அவற்றிலிருந்தே ஈரறிவு உயிர், மூவறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர் முதலான அனைத்தும் உருவாயின என்பர். இதனைத் தொல்காப்பியர்,
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
என்கிறார்.
அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்கள் அனைத்தையும் முன்னோர் வழங்கிய மரபு பிறழாமல் கூறியுள்ளார். முன்னைய ஆசிரியர்களைத் தொல்காப்பியர், என்மனார் புலவர், என்ப என்ற தொடர்களால் குறிப்பிடுவதும்,
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப
என்றும்,
மரபுநிலை திரியற் பிறிது பிறிதாகும் போன்ற நூற்பாக்களை அமைத்திருத்தலை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம்.
உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய டார்வினின் கருத்துக்களும் தொல்காப்பியரின் கருத்துக்களும் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன. அறிவுரைகளைக் கொண்டு உயிர்களைப் பிரிக்கும் நிலைதான் தொலகாப்பியரின் முறை. தொல்காப்பியரின் எண்ணப்படி அறிவுரைகளின் வளர்ச்சிக்கு எல்லையேனும் குறிக்கப் பெறவில்லை.
டார்வினுடைய கொள்கைப்படி உயிர் பெருக்கத்திற்கு இன வேறுபாடு அவசியம். தசைக் குழம்பான நிலையிலேயே இன உறுப்புகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் உயிரினம் பெருகியது. நாளடைவில் பல்வேறு மாற்றங்களுடன் இன்று மனிதன் வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறான் என்பது டார்வினின் பரிணாமக் கொள்ளை உணர்த்துகின்ற உண்மை.
தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது. அவ்வாறு பார்க்கும் நிலையில் டார்வினின் விளக்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை ஆறு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.
Sunday, July 29, 2012
காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்ற வேண்டும்?
<உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நேரம் பொன்னானது என்பதை உணர வேண்டும். இதோ, காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு பேராசிரியர் காந்திஜியை சந்திக்க ஆஸ்ரமத்துக்கு வந்தார். அங்கே ஒரு முதியவர் பெருக்கிக் கொண்டிருந்தார்.
""நான் மகாத்மாஜியைப் பார்க்க வேண்டும். நான் வந்திருப்பதாகச் சொல்,'' என தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.
""ஐயா! காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் உங்களைச் சந்திப்பார்''.
பேராசிரியருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு வேலைக்காரன் இப்படி பேசுகிறானே! மேலும், பேராசிரியரான நானே காந்திஜியை "மகாத்மா' என்கிறேன். இவன் காந்தி என மரியாதைக் குறைவாக அவரைக் குறிப்பிடுகிறானே!
கோபத்துடன் அவர், ""ஏய்! நான் வந்திருப்பதை அவரிடம் சொல்லப்போகிறாயா இல்லையா? வீணாகக் காக்க வைக்காதே.''
அப்போதும், அந்த முதியவர் பெருக்கியபடியே, ""ஐயா! சற்று அமருங்கள். காந்தி நேரம் தவறாதவர். 11மணிக்கு நிச்சயம்
சந்திப்பார்,'' எனவும் பேராசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து கடிகாரம் 11 மணியைக் காட்டியது.
பெருக்கிக் கொண்டிருந்த முதியவர், அவரை நோக்கி வந்தார்.
""ஐயா! சொல்லுங்கள், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?''
""நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? காந்திஜியை சந்திக்க வேண்டும்,''.
""நான் தான் அந்த காந்தி. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்,'' என்றார்.
பேராசிரியர் அதிர்ந்து விட்டார். மகாத்மாவிடம் மன்னிப்பு கேட்டார். நேரம் தவறாமல் கடமையாற்றியவர் காந்திஜி. அதனால் தான் விலை ஒப்பிட முடியாத சுதந்திரக்கனியை நம்மிடம் பறித்துக் கொடுத்தார்.
இனியேனும் காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்றி வெற்றிக்கனிகளைப் பறிப்போமா!
கடவுளால் எல்லாம் முடியும்
<மகானிடம் சீடன் ஒருவன், ""சுவாமி! மனிதனுடைய விருப்பத்தை எல்லாம் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல் தெரிகிறதே'' என்றான்.
""ஏன் அப்படி சொல்கிறாய்''.
""காட்டில் மரம் வெட்டும் விறகுவெட்டி, எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறான்,'' என்றான் சீடன்.
""நியாயம் தானேப்பா! குளிரடித்தால் தானே வெட்டிய விறகெல்லாம் சீக்கிரம் விற்கும்,''.
""எப்படி நியாயமாகும் சுவாமி! பழ வியாபாரியோ எப்போதும் வெயில் கொளுத்த வேண்டும் என்றல்லவா நினைக்கிறான்'' என்றான்.
""அதுவும் நியாயமே! பழங்கள் கெடாமல் இருக்கவேண்டுமானால் வெயில் அடிக்கத் தானே வேண்டும்,'' என்றார்.
""சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள்.விவசாயியோ மழையை வேண்டுகிறான். செங்கல் சூளைக்காரனோ சாரல் கூட விழக்கூடாது. எப்போதும் வெயில் வேண்டும் என்று நினைக்கிறான். கடவுளே நினைத்தாலும் கூட எப்படி இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?,'' என்றான்.
மகான் அவனிடம்,""இப்போது வானிலை எப்படி இருக்கிறது?,'' என்று கேட்டார்.
""வெயில் காய்கிறது சுவாமி,''.
""போனவாரம் எப்படி இருந்தது?,''.
""சுவாமி! செவ்வாய், புதன் கிழமைகளில் மழை பெய்ததால் குளிராக இருந்தது,''.
""பார்த்தாயா கடவுளின் லீலையை! போன வாரத்தில் மழை,குளிர். இந்த வாரத்தில் வெயில். எல்லோரின் விருப்பத்தையும் அவர் நிறைவேற்றி வைத்ததை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய் அல்லவா,'' என்றார்.
ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம்
<மகாபாரதத்தை ஸ்லோக வடிவில், வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய காலத்தில் "ச' என்ற அக்ஷரத்தை (எழுத்து) அதிகமாக பயன்படுத்தியிருந்தார். ஒருமுறை, கவிப்பேரரசர் காளிதாசர் ஒரு காட்டுவழியே சென்றார். வழியில் வியாசர் சிலை இருந்தது. தன் ஆட்காட்டி விரலை சிலையின் தொப்புளுக்குள் விட்டு குடைந்தபடியே. ""நீர் பெரிய "ச'காரப் பிரியராச்சே! உம்மைப் போய் பெரிய கவிஞன் என்கிறார்களே! "ச' இல்லாமல் உம்மால் ஒரு ஸ்லோகம் எழுதி விட முடியுமா என்ன!'' என்று கேலியாகக் கேட்டார். அவ்வளவு தான்! தொப்புளுக்குள் சிக்கிய விரல் வெளியே வரவில்லை.
சிலை பேசியது. ஆம்...சிலைக்குள் இருந்து வியாசரே பேசினார்.
""அடேய் புத்திசாலி! "ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம் சொல்லு, அப்படியானால் தான் விரல் விடுபடும்,'' என்றார்.
""இதென்ன பிரமாதம்...சொல்கிறேன்,'' என ஆரம்பித்தவரை தடுத்த வியாசர், ""ஏற்கனவே நீ மனதில் தயாராய் வைத்துள்ளதை ஏற்கமாட்டேன். நான் சொல்லும் விஷயத்துக்கேற்ற ஸ்லோகம் சொல் பார்க்கலாம்,'' என்றவர், ""திரவுபதிக்கு பஞ்சபாண்டவர்கள் எவ்வெப்போது என்னென்ன முறை ஆக வேண்டும், சொல் பார்க்கலாம்,'' எனக் கேட்டார்.
காளிதாசர் படுவேகமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். விரல் விடுபட்டது. வியாசர் அவர் முன் தோன்றி, ""நான் பாரதத்துக்காக ஒரு லட்சம் ஸ்லோகம் எழுதினேன். எழுதியவர் மகாகணபதி. ஆனால், இப்போது நீ சொன்னது போல, பாரதத்தில் ஒரு ஸ்லோகம் கூட அழகாக வரவில்லை,'' என்று பாராட்டினார்.
வியாசரையும் விட சிறந்த கவிஞர் காளிதாசர் என்பது இதிலிருந்து தெரிகிற விஷயம்.
பரதன்
<
ஒரு பூனைக்குட்டியிடம் நம் குழந்தை விளையாடினால் கூட, ""டேய் பார்த்து...கையை கடிச்சுட போகுது,'' என்று எச்சரிக்கை செய்கிறோம். ஆனால், நம் பாரத தேசத்துக்கு அந்தப்பெயர் வரக்காரணமாக இருந்த அந்தச் சிறுவன் சிங்கக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு மகாராஜா...அங்கு வந்தார்.
அவரது பெயர் துஷ்யந்தன். துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி யாரென்று தெரியாமல் நினைவை இழந்தவர். கண்வமகரிஷியின் வளர்ப்பு பெண்ணான சகுந்தலையை மணம் செய்தவர். மாபெரும் வீரர். அசுரர்களுடன் போர் வரும் காலங்களில், அவரையும் உடனழைத்துச் செல்வான் தேவேந்திரன். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர் அன்று, காட்டுவழியே விமானம் ஒன்றில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் சிறுவனைக் கண்டார்.
""ஆகா! எனக்கு வீரன் என்ற பட்டம் இருப்பதே தவறு. நான் பகைவர்களைத் தோற்கடித்திருக்கிறேன். ஆனால், இந்தச் சிறுவனைப் போல சிங்கத்துடன் விளையாடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லையே! இவன் யார்! விசாரித்து செல்லலாமே!''
விமானம் தரை இறங்கியது.
""தம்பி! நீ யார்! சிங்கத்துடன் விளையாடுகிறாயே! பயமாக இல்லையா!
சிறுவன் கலகலவென சிரித்தான்.
""நாம் மனிதர்கள். சிங்கத்தை விட ஓரறிவு அதிகமுள்ளவர்கள். நாம் பயப்படலாமா?'' சிறுவனின் பதில் மகாராஜாவை சிந்திக்க வைத்தது.
""இவன் வீரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட...யார் பெற்ற பிள்ளையோ! அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது சலங்கை
சத்தம் பலமாகக் கேட்டது. சில பெண்கள் ஒரு சேர வந்தார்கள்.
""பரதா! கிளம்பு! முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,''.
ஆம்...அவனது பெயர் பரதன்.
""சற்று பொறுத்து வருகிறேன். ஆமாம்... அம்மா எங்கே?''
""அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் வந்து விடுவார்...'' என்றவர்கள் அவனது கையைக் கவனித்தனர்.
""பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே?''
சிறுவனும் அப்போது தான் கவனித்தான்.
""ஐயையோ! அதை எப்படியாவது தேடிப்பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,''.
சிறுவன் பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பணிப்பெண்களும் தேடினர். மன்னர் இதைக் கவனித்து, அவரும் தேடத் துவங்கினார். ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை எடுத்து பெண்களிடம் நீட்டி, ""இதுவா பாருங்கள்,'' என்றனர்.
அந்தப்பெண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
""ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா?''
இதற்குள் அவனது தாய் அங்கு வர, ராஜா அதிர்ச்சியுடன் பார்த்தார்.
""சகுந்தலா''...அவளும் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
""சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா?''
துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினார். அந்த ராஜா தான் துஷ்யந்தன்.
அவருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த வீரத்திருமகனான பரதனே நம் ஆண்டை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி.
அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு "பாரதம்' எனப்படுகிறது.
குளிர வேண்டிய சந்தனம் ஏன் உடலைச் சுட்டது.
<
ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதியுள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார்.
தலைமை வேதியர் அவரைப் பார்த்து முகம் சுழித்தார்.
""எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா!'' என்றார்.
வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை <முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார்.
தலைமை வேதியர் அவரைக் கவனித்தார்.
"இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணுக்கிறதே! என்னைத் திட்டிக் கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம்' என்று மனதிற்குள் கருவிக்கொண்டே யாகத்தை நடத்தினார்.
யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! "ஐயோ அம்மா!'' என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது.
""சந்தனம் ஏன் சுடுகிறது?''
""நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்!''
""ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே!'' தலைமை வேதியர் வருத்தப்பட்டார்.
சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது.
இவ்வளவு சக்தி வாய்ந்த அந்த அபூர்வ மகான் யார் தெரியுமா?
ஸ்ரீ ராகவேந்தர்.
அவரை "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வாழ்வர்.
நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை.
ஒரு ஊருக்கு வந்த துறவி, ""நல்லவர்களுடன் மட்டுமே சேருங்கள். ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகளுக்கு சென்று வாருங்கள். நலமாக இருப்பீர்கள். நான் சொல்லும் இந்த மந்திரவாக்கு உறுதியாகப் பலிக்கும்'' என்று அங்குள்ள மக்களுக்கு போதித்து வந்தார்.
ஒரு வாலிபன் அவரிடம்""ஐயா சாமி! சொல்வது அப்படியே பலிக்கும் என்கிறீர்களே! நீங்கள் என்ன மந்திரவாதியா?'' என்று கேலியான தொனியில் கேட்டான்.
""அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்,'' என்ற துறவியிடம், ""அப்படியானால், இந்தக் கல்லை தண்ணீரில் மிதக்கச் செய்ய முடியுமா?'' என்று ஒரு பொடிக்கல்லை எடுத்துக்கொடுத்தான் வாலிபன்.
துறவி அதை தண்ணீருக்குள் வீசினார். மூழ்கிவிட்டது. வாலிபன் சிரித்தான்.
""தம்பி! அவசரப்படாதே! இது சிறிய கல், பெரிய கல்லை நான் மிதக்க வைப்பேன். ஒரு மணிநேரம் கழித்து வா. கல் மிதக்கும்,'' என்றார் வாலிபன் போய்விட்டான்.
துறவி ஒரு மரப்பலகையை எடுத்தார். அதன்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்து தண்ணீரில் போட்டார். கட்டை மீதிருந்த கல் மிதந்தது.
வாலிபன் வந்தான். இந்தக்காட்சியைப் பார்த்து சிரித்தான்.
""கட்டை மீது கல்லை வைத்துக் கட்டினால் மிதக்கும் என்பது நான் அறியாததா?'' என்றான்
ஏளனமாக.
""தம்பி! இதில் கல்லை தீயது என்றும், கட்டையை நல்லது என்றும் வைத்துக்கொள். நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை. புரிகிறதா?'' என்றார்.
நல்லவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களும் நலம் பெறுவர்... புரிகிறதா!
எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி
தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது.
இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார்.
""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன்.
""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.
அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார்.
""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன்.
""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று எண்ணியவன் மாளிகைக் கட்டுமானப்பணியை நிறுத்தி விட்டான்.
கோவிந்தநாமத்தின் மகிமை
<திருப்பதிக்குள் நாம் எங்கு சென்றாலும், நம் காதில் ஒலிக்கும் நாமம் "கோவிந்தா... கோவிந்தா...' என்னும் திவ்யநாமம். இந்த நாமம் எவ்வளவு சக்தியுடையது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பல தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடினர். அவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
ஒருமுறை, ஏழுமலையான் மீது தீவிர பக்தியுடைய ஒரு தாழ்த்தப்பட்டவர் திருப்பதிக்குள் நுழைந்து விட்டார். அதிகாலையே நீராடி, நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து, "கோவிந்தா...கோவிந்தா...' என முழங்கியபடியே, கோயிலுக்குள் நுழைந்து, பெருமாளைக் கண்குளிர தரிசித்தும் விட்டார். அப்போது ஒரு அதிகாரி அந்த பக்தரை எப்படியோ பார்த்து விட்டார்.
""நீ தாழ்த்தப்பட்டவன் தானே! கோயிலுக்குள் நுழைய என்ன தைரியம்? உன்னால், கோயிலே தீட்டுப்பட்டு விட்டதே. வா... உன்னை போலீசில் ஒப்படைக்கிறேன்,'' என ஒப்படைத்து விட்டார். சித்தூர் கோர்ட்டில் ஆங்கில நீதிபதி ஒருவர் முன், தாழ்த்தப்பட்டவர் நிறுத்தப்பட்டார். அவருக்காக முனுசாமி என்ற வக்கீல் ஆஜரானார். வழக்கு நடந்து கொண்டிருந்தது.
இவ்விஷயத்தை ராஜாஜி கேள்விப்பட்டார். கோர்ட்டுக்குச் சென்று வழக்குகளில் ஆஜராவதில்லை என்று அவர் முடிவெடுத்திருந்த சமயம் அது. இருப்பினும், அந்த தாழ்த்தப்பட்டவருக்காக ஆஜராக சித்தூர் சென்றார். அங்கே, வேறு ஒரு வக்கீல் அவருக்காக வாதாடுவது கண்டு, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல் முனுசாமி, ""நீதிபதி அவர்களே! தாழ்த்தப்
பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர் ராஜாஜி. அவர் இங்கே வந்துள்ளார். அவரே இவ்வழக்கில் வாதாடட்டும்,'' என்றார்.
நீதிபதியும் சம்மதிக்கவே, தாழ்த்தப்பட்டவருக்காக வாதாடினார் ராஜாஜி.
""கோவிந்தா' என்ற நாமத்தை ஒரு தடவை சொன்னாலே ஒரு இடம் சுத்தமாகி விடும். இவரோ நீராடி, திருமண் தரித்து, கோவிந்தநாமத்தை பலமுறை சொல்லியபடி கோயிலுக்குள் சென்றுள்ளார். அப்படியிருக்க, கோயில் தீட்டுப்பட்டதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்? இவரை வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்,'' என்றார்.
வாதத்தை ஏற்ற நீதிபதி, அந்த நபரை விடுதலை செய்தார். கோவிந்தநாமத்தின் மகிமையைப் பார்த்தீர்களா! ஆனால், இப்போது "உன் பணம் கோவிந்தா தான்! உனக்கு வேலை கோவிந்தா தான்' என்று கேலிப்பொருள் கலந்து பேசுவதைக் கைவிடுங்கள். கோவிந்தநாமம் கோடி பலன் தரவல்லது.
சித்து வேலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தால்
<சித்துவேலை செய்பவர்கள், துறவி போல் வேஷமணிந்து அநியாயம் அட்டூழியம் செய்பவர்கள் ஆன்மிக உலகில் பெருகியிருக்கிறார்கள். யார் ஒருவர் மக்களுக்கு சேவை செய்கிறாரோ, அவர் தான் உண்மையான துறவி. ஏன்... இல்லறத்தில் இருப்பவர்கள் கூட இவ்வாறு சேவை செய்யலாம்.
ஒரு துறவி மக்களிடம், தன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள பல சித்து வேலைகளைச் செய்தார். ஒருநாள் கடவுள், ஒரு பக்தனைப் போல வேடமணிந்து அவரைக் காண வந்தார்.
""சாமி! நீங்கள் பல சித்து வேலைகள் செய்வீர்களாமே! அதோ! அங்கே நிற்கிறதே யானை.. அதை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார்.
""இதென்ன பிரமாதம்'' என்ற துறவி, கொஞ்சம் மணலை எடுத்து யானையை நோக்கி எறிந்தார். யானை சுருண்டு விழுந்து இறந்தது.
""ஆகா...அற்புதம், அந்த யானையை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?''
துறவி சிரித்தபடியே, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை யானை மீது தெளித்தார். யானை தூங்கி எழுந்தது போல் உயிர் பெற்று நின்றது.
இப்போது கடவுள், ""சரி துறவியே! யானையைக் கொன்றீர்கள். உயிர் பிழைக்க வைத்தீர்கள். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? இதே, சித்து வேலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமல்லவா?'' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். வந்தது கடவுள் என்பதை அறிந்த துறவி, மனம் திருந்தினார். சித்துவேலையை மக்களுக்கு வசதி செய்து கொடுக்கும் விதத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்.
கவனச்சிதறல் கூடவே கூடாது
அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது.
ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான்.
""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது.
வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை.
""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான்.
""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான்.
கேள்வி கேட்டவனுக்கோ கோபம்.
""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான்.
தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்த போது, மார்க்ரெட் நோபிள் என்ற கிறிஸ்தவப் பெண்மணி சுவாமியின் சிஷ்யை ஆக முடிவு செய்தார். அவருடன் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.
""அவசரம் வேண்டாம், உன் மனது பக்குவப்படட்டும்,'' என சுவாமி சொல்லிவிட்டார்.
பின்னாளில், சுவாமிஜி கோல்கட்டாவில் ஆஸ்ரமம் அமைத்திருப்பதை அறிந்த நோபிள், சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார். இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
நோபிளுக்கு சுவாமி எழுதிய பதில் கடிதத்தில், ""இங்குள்ள மக்கள் மூடநம்பிக்கை மிகுந்தவர்கள். பாதி நிர்வாணமாக இருக்கும் இவர்கள் மத்தியில் நீ வாழ வேண்டும். கடும் வெயில் அடிக்கும்,'' என்று எழுதியிருந்தார்.
ஆனாலும், நோபிள் இந்தியா வந்தார். அவரே சகோதரி நிவேதிதை என்ற பெயரில் சுவாமியின் சிஷ்யை ஆனார்.
ஒருநாள், நிவேதிதை ஆஸ்ரமத்துக்கு சில பணிகள் தொடர்பாக வந்தார். சுவாமிஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்தார். பணிமுடிந்து அவரிடம் விடை பெற வந்தார்.
""சாப்பிட்டாயா?'' எனக்கேட்டார் சுவாமிஜி.நிவேதிதை ""இல்லை'' என்றதும் சுவாமிஜி அவரை அமர வைத்து பரிமாறினார். நிவேதிதை எவ்வளவோ தடுத்தும் கைகழுவ தண்ணீர் ஊற்றினார். குடிக்க பால் கொடுத்தார்.
""ஜி! நானல்லவா உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும், நீங்கள் செய்கிறீர்களே,'' என கண்கலங்க கேட்டார் நிவேதிதை.
""இயேசுநாதர் தன் வாழ்நாளின் இறுதியில் சீடர்களின் பாதங்களை கழுவியதை நீ அறிந்திருப்பாய் அல்லவா?'' என்று சுவாமிஜி எதிர்க்கேள்வி கேட்டார்.
ஆனால், அது அவரது வாழ்வின் இறுதிக்காலமாக இருக்கும் என்று சகோதரி நிவேதிதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்.
அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன
துறவி ஒருவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து உலகையே மறந்த நிலையில் இருந்தார். அப்போது, ஒரு திருடன் வந்தான்.
""இந்த ஆசாமியும் நம்மைப் போல் திருடன் போல! இரவெல்லாம் விழித்து விட்டு இப்போது தூங்குகிறான்,'' என்று சொல்லியபடியே போய்விட்டான். அடுத்து ஒரு மொடாக்குடியன் வந்தான். போதையில்,"" இவன் நம்மை மாதிரி குடித்துவிட்டு கண்ணை விழிக்க முடியாமல் திணறிப் போய் உட்கார்ந்திருக்கிறான். நான் எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருக்கிறேன்,'' என்று தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டு போய்விட்டான்.
அடுத்து வந்த துறவிக்கு தான், அவர் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்தது புரிந்தது. அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன. தங்களைப் போலவே மற்றவர்களையும் உலகம் கருதுகிறது. பக்தியைக் கூட பாவத்தொழிலாகப் பார்க்கிறது. நமது உலக ஆசைகள் பக்தியையும், தூய்மையையும் நமக்குத் தெரியவிடாமல் மூடிவிடுகிறது.
நம்மை நாம் என்று ஒழுக்கசீலர்களாக மாற்றிக்கொள்கிறோமோ, அப்போது உலகத்தில் உள்ளவர்களின் ஒழுக்கம் நம் கண்ணில் படும்.
ஆசைக்கு எல்லை வேண்டும்."பெரியவர்கள் சொல் கேட்க வேண்டும்.
ஒரு ஆட்டுக்குட்டிக்கு கீரை என்றால் ரொம்ப உயிர். விதவிதமான கீரைகளை தோட்டங்களுக்குள் புகுந்து சாப்பிடும். அந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் தர்மவான்கள் என்பதால் "ஆடு தானே! தின்று விட்டுப் போகிறது' என்று விட்டு விடுவார்கள்.
ஒருநாள், அது மேயப்போன போது எல்லா தோட்டங்களிலும் இருந்த கீரையைப் பறித்து விட்டனர். அது தாய் ஆடுடன் அலைந்து திரிந்தது. ஒரே ஒரு தோட்டத்தில் உயர்ரக கீரை ஒன்றை பயிரிட்டு, வேலியிட்டு மறைத்திருந்தனர். அதன் உரிமையாளர் மகாகஞ்சப்பிரபு, கொடூரனும் கூட. ஆடுகள் தன் தோட்டத்துக்குள் புகுந்து விட்டால், அவற்றை கறியாக்கி சமைத்து விடுவான்.
குட்டி ஆடு அந்த தோட்டத்துக்குள் புக முயன்றது. தாய் ஆடு அதைத் தடுத்தது.
""மகளே! உள்ளே செல்ல முயற்சிக்காதே! இந்தத் தோட்டக்காரன் மற்றவர்களைப் போல் அல்ல! நம் மூத்தோர் பலர், இவனிடம் சிக்கி கறியாகி விட்டார்கள். நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லலாம். அவர்களுக்கும் அந்தப் பொருள் அவசியம் என்றாலும், இயற்கையாகவே ஊறும் இரக்க குணத்தின் காரணமாக நம்மை விட்டு விடுவார்கள். சிலர் குச்சியால் நம்மை இரண்டு தட்டு தட்டி விரட்டி விடுவார்கள். இவனோ, கொடூரன். கொன்று விடுவான்,'' என்றது. குட்டி ஆடு தாய் சொல் கேளாமல், வேலி தாண்டி உள்ளே புகுந்தது. ஆசை ஆசையாய் கீரையை உண்டது. தோட்டக்காரன் பார்த்து விட்டான். அரிவாளுடன் விரட்டினான். நான்கு பக்கமும் அவனது பணியாட்கள் சூழ்ந் தனர். தப்ப முடியாத ஆடு, அன்றிரவு அவர்களின் உணவானது.
ஆசைக்கு எல்லை வேண்டும். நல்லவர்கள் துணையை மட்டுமே நாட வேண்டும். "பெரியவர்கள் சொல் பெருமாள் சொல்' என்ற அனுபவ சுலவடையை இனியாவது ஏற்று நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்கும். புரிகிறதா!
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம்
<ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து,""கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். இறைவழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,'' என்று அறிவுரை சொன்னார்.
அவள் அதைக்கேட்டு நடுங்கினாள்.
""சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே! நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன்,'' என்றாள். பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள். ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள்.
ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை.
""உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா?'' என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள்.
வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள். இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள். அவளது மனமாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார். ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது.
ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, ""நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே!'' என்று கடிந்து கொண்டார். அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,""கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக்கொள்,''என்று கதறியழுது பிரார்த்தித்தாள்.
அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான். அன்றிரவே அவளது உயிர் போனது. சந்நியாசியும் அதே நாளில் இறந்தார். தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள். நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது. சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன. அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர். சந்நியாசி கதறினார். ""பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா?'' என்றார்.
""துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள். மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள். அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர். அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம்,'' என்றனர்.
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா!
நாகசதுர்த்தி விரதம்
<இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது.
விவசாயிகள், ஆடியில் தங்கள் பணிகளைத் தொடங்குவது வழக்கம். அவர்களுக்கு பாம்பு மற்றும் பூச்சிகளால் இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இறைவழிபாடு செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு கழுத்திலும், இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர். இன்னும் ஒரு படிமேலாக, பாம்புக்கே மூலஸ்தானம் அமைத்து, நாகராஜர் கோயில்களையும், புற்றுக்கோயில்களையும் உருவாக்கினர். பாம்புக்குரிய தினமாக நாகசதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பது குறித்து கதை ஒன்றும் உள்ளது.
அரசன் ஒருவனின் பிள்ளைகளான ஏழுபேர் ஒரே சமயத்தில் நாகம் தீண்டி இறந்தனர். அவர்களோடு பிறந்த தங்கை ஒருத்தி மட்டும் இருந்தாள். அவள் விரதமிருந்து. பாம்பிருந்த புற்று மண்ணை நீரில் கரைத்து, இறந்த சகோதரர்களின் உடலில் பூசினாள். அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அந்த நாளே நாகசதுர்த்தி என்பர்.
இந்த விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் கடைபிடிப்பது வழக்கம்.இந்த ஆடியில் வருகிறது. இந்நாளில், அரசமரத்தடியில் உள்ள ஒன்பது நாகர்களான அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரிஅப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் நாக விக்ரஹங்களுக்கு பால் அபிஷேகம் செய்வர். புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வர். இந்த விரதத்தால் நாகதோஷம், புத்திர தோஷம் நீங்கும். ராகுகேதுவால் உண்டாகும் திருமணத்தடை அகலும். நாகசதுர்த்தியன்று அரசமரத்தடியில் பாம்புக்கல்லை பிரதிஷ்டை செய்வது சிறப்பு.
கருடஜெயந்தி
<கருடஜெயந்தி
பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கருடபஞ்சமி விரதத்தை ஆவணி வளர்பிறை பஞ்சமியில் அனுஷ்டிப்பர்.
(இவ்வாண்டு பஞ்சாங்க மாற்றத்தால் ஆடியிலேயே வருகிறது) அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் இதனை மேற்கொள்வது நல்லது. கருடன் அவதரித்த நாளே கருட பஞ்சமி. சிலர் அவரது நட்சத்திரமான சுவாதியின் அடிப்படையில், ஆடி சுவாதியன்று கருட ஜெயந்தியைக் கொண்டாடுவர்.
வேதகால மகரிஷியான கஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் "வைநதேயன்' என இவர் அழைக்கப்பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்திக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் வைநதேயனாகிய கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன். அதில் கருடனின் பெயரால் "கருடாத்ரி' என்றொரு மலையும் உண்டு.
ராவணன் மகனான இந்திரஜித், லட்சுமணன் மீது தொடுத்த நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத்தீவில் இருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்ததும் கருடனே! இக்கட்டியே "சுவேதமிருத்திகை' என்னும் நாமக்கட்டியாக பயன்படுகிறது.
தட்சிணாயன ஆறுமாதமும் அம்மனுக்கு
ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை "தட்சிணாயன காலம்' என்பர். "தட்சிணம்' என்றால் "தெற்கு'. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்று சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக
இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தை முதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி, மார்கழி பாவைநோன்பு ஆகியவை நடக்கிறது.பாவை நோன்பு கார்த்தியாயினி தேவிக்குரிய விரதமாக அக்காலத்தில் இருந்தது. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்திற்குப்பின் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பாக மாறி விட்டது.
அவ்வையார் விரதம்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்துவேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இந்த வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச்செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி' என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம். ஆண்களுக்கு இந்த விரதத்தில் பங்கேற்க அனுமதியில்லை. கொழுக்கட்டை பிரசாதம் கூட தருவதில்லை.
ஆயிரம் கண் கொண்டவள்'
<தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் "சகஸ்ராக்ஷி' என்ற திருநாமம் உண்டு. இதற்கு "ஆயிரம் கண் கொண்டவள்' என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான்.
ஆடியில் அம்பாள் வழிபாடு ஏன்?
ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே "ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்
ஆடி என பெயர் வந்தது ஏன்?
பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது "பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் "உத்திராடம்' என்றும் சொல்லப்படுகிறது. உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் "ஆஷாடீ' எனப்பட்டது. அதுவே தமிழில் "ஆடி' என்று மருவி விட்டதாகச் சொல்வர்.
நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா?
நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா?
நாய் என்ன படாதபாடு படுவதைக் கண்டீர்கள்? அவை சொகுசாக இருப்பதற்காகப் பலர் படாதபாடு படுவதைத் தான் இன்று கண்டு கொண்டிருக்கிறோம். மூன்றாம் பிறை பார்த்தால் நீண்டஆயுள் கிடைக்கும் என்றார்கள். அப்ப நான்காம் பிறை பார்த்தால் என்று ஒருவர் கேட்கிறார். "நாய்படாத பாடுதான்' என்று கூறிவிட்டார்கள். மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. நான்காம்பிறையைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு நடந்து எங்காவது கீழே விழுந்து விடாமல் இருந்தால்
சரி தான்.
சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?
ஒன்றும் தவறில்லை. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கும். எனினும், வீட்டு வாசல், பூஜையறை, சமையற்கட்டு, கொல்லைப்புறம் முதலிய இடங்களில் அரிசிமாவில் கோலம் போட வேண்டும்.
* சூரிய நமஸ்காரத்தைப் பெண்களும் செய்யலாமா
சூரியனுக்கு யார்வேண்டுமானாலும் நமஸ்காரம் செய்யலாம். இதற்கு தடையேது! அதுசமயம் சொல்லவேண்டியஸ்லோகங்களை
யாரிடமாவது தெரிந்து கொண்டு சொல்லலாம். கோளறு பதிகமும் சொல்லலாம்.
* திருஷ்டி கழிக்க ஏற்ற நாள் செவ்வாயா, வெள்ளியா? ஏன்?
நீங்கள் கேட்ட இரண்டு நாட்களுமே ஏற்புடையது தான். திருஷ்டியின் பாதிப்புகளைப் போக்கும் தெய்வங்களாக முருகனும் துர்க்கையும் உள்ளனர். முருகனுக்கு செவ்வாயும், துர்க்கைக்கு வெள்ளியும் ஏற்ற நாட்கள்.
* விரதகாலத்தில் கறுப்புநிற உடை உடுத்துவது சரியா?
விரதமும் ஒரு சுபநிகழ்ச்சி தான். இதில் கறுப்பு நிற உடை உடுத்துவது கூடாது.
* சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும்போது, தென்னாடுடைய சிவனேபோற்றி என்று கூறுவது ஏன்?
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடினார்.
**
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குத் தினமும் லட்சக்கணக்கானவர்கள் செல்கிறார்கள். இவர்கள் எதையாவது விட்டு விட்டால் இந்தியாவின் பொருளாதாரம் சரியாகி விடுமா என்ன! இவ்வாறு விட்டு வருதல் என்பது கயா சென்று சிராத்தம்(திதி கொடுப்பது) செய்பவர்களுக்கு மட்டும் தான். கயாவில் செய்யும் பிதுர்காரியம் மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இதைச் செய்துவிட்டு வந்த பிறகு, மனதில் எழும் அல்ப ஆசைகளை விடுத்து, தர்மநெறியில் வாழ்ந்தால் அந்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது நமக்குப் பிடித்தமான ஒன்றுக்காக சில சமயம் நெறி தவற நேரிடுகிறது. எனவே, தான் ஏதாவது ஒன்றை என்றில்லாமல், நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விட வேண்டும்.
சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்?
சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்
** பெண் தெய்வப்படங்களை விரித்த கூந்தலுடன் சித்தரிப்பது ஏன்?
பெண் தெய்வங்களின் தலை அலங்காரத்தை மூன்று விதமாகச் செய்யலாம் என சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரீடம், கரண்டமகுடம், அளகபாரம் என்பவை. கிரீடம், கரண்ட மகுடம் போன்றவை சித்தரிக்கப்படும்போது விரித்த கூந்தலாகவே அமைய வேண்டும். அளகபாரம் என்ற வகையில் தான் ஜடை பின்னலிடுதல்(வேணி பந்தம்), ஜடை மகுடம்(உச்சிக் கொண்டை) போன்ற முறைகள் கூறப்பட்டுள்ளன. கோப வடிவான சில சக்திகளை மட்டும் தான் மகுடம், கிரீடம் போன்றவை இல்லாமல் விரித்த கூந்தலுடன் சித்தரிக்கப்படுவதுண்டு.
*வழிபாட்டில் காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறது. பரிகாரம் கூறுங்கள்.
காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
மனத்தூய்மை பெற எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்?
ஐந்துமுக ருத்ராட்சம் மிக உயர்ந்தது. கண்,காது,மூக்கு, வாய், மெய் என்னும்
ஐம்புலன்களே மனதில் எழும் எண்ணங்களுக்கு காரணமாகின்றன. ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து அதில் ஐம்புலன்களும் பொருந்திவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். புலன்கள் மனதைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது தடுக்கப்படும். தவறான எண்ணங்கள் ஏற்படாவிட்டால் மனம் தூய்மை பெற்றுவிடும்.
ஆண்டாள்
* ஆண்டாள் காட்டிய உயர்ந்தவழி சரணாகதி தத்துவம். இறைவனிடம் முழுமையாக சரணடைய வேண்டும். அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும், இந்த உலகை வெறுக்க இறைவனிடம் சரணடைவதைத் தவிர சிறந்த வழியில்லை.
* சுவாமிதேசிகன் ஆண்டாளைச் சிறப்பிக்கும் கோதாஸ்துதியில், ""விஷ்ணு சித்தரின் திருமகளான கோதை( ஆண்டாள்)
என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதுக்கு இனியவளான அவள் எப்போதும் இதயத்தில்
பிரகாசிக்கவேண்டும்,'' என்று பிரார்த்தனை செய்கிறார்.
* பூமாதேவியே ஆடிப்பூரத்தில் அவதரித்தாள். பெரியாழ்வார் அவளுக்கு "கோதை' என்று பெயரிட்டு வளர்த்தார். "கோதா' என்னும் சொல்லுக்கு "நல்ல வாக்கு தருபவள்' என்று பொருள். அவளைத் தியானம் செய்தால் நமக்கு நல்ல வாக்கைக் கொடுத்தருள்வாள்.
* மாயவனாகிய திருமாலைக் கட்டிப்போட ஆண்டாள் இருவித மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூமாலை. மற்றொன்று பாமாலை. பாமாலையைப் பாடிச் சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவனுக்கு உகந்து அளித்தாள். அதனால், "சூடிக்கொடுத்த
நாச்சியார்' என்னும் பெயர் பெற்றாள்.
* ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் கிருஷ்ணபக்தியில் திளைத்தவர். எப்போதும் அவளிடம் கிருஷ்ண சரிதத்தை எடுத்துச் சொல்லி வந்தார். இதனால் பிஞ்சுமனதில் கிருஷ்ணபக்தி ஆழமாக வேரூன்றியது. சின்னப் பெண்ணானாலும் திருமாலைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால், சிறுமியான அவள் இந்த விஷயத்தை பிறரிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்தாள். இதனால் தான், வரவரமுனிகள் ஆண்டாளை "பிஞ்சாய்ப் பழுத்தாளை' என்று குறிப்பிட்டுள்ளார்.
* ஆண்டாள் என்றால் "ஆள்பவள்' . அவள் அன்பினால் பூமாலை புனைந்து கண்ணனை ஆண்டாள். நம்மையும் இன்று ஆண்டு கொண்டிருக்கிறாள்.
* ஆண்டாள் பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் உள்ளன. அதில் முதல் பத்தில் திருமாலின் திருநாமத்தைச் சொல்லவும், அடுத்த பத்தில் திருவடியில் மலர்களை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டுமென்றும், மூன்றாம் பத்தில் நம்மையே இறைவனுக்கு ஆத்ம சமர்ப்பணமாக கொடுக்க வேண்டுமென்றும் சொல்கிறாள்.
* வேதம் படிப்பது கடினமானது. வேத மந்திர ஒலியை நாபி, கழுத்து, உதடு என்று உடம்பில் ஒவ்வொரு இடத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கும். அதற்குரிய ஸ்வரம் பிடிபடுவது அதை விட கஷ்டம். ஆனால், வேதத்தின் சாறைப் பிழிந்த ஆண்டாள் பாசுரமாக்கி திருப்பாவையாக நமக்கு வழங்கி இருக்கிறாள். அதைப் படிப்பது எளிது.
* யாகசாலையில் வேள்வி நடத்தும் அந்தணர்கள் திரவியங்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் சேர்ப்பார்கள். ஆண்டாளோ, தன்னுடைய உடல்,பொருள்,ஆவி என்னும் மூன்றையும் பக்தி என்னும் நெய்தடவி வடபத்ரசாயி பெருமாளிடம் சேர்த்து விட்டாள்.
* மனம் நினைப்பதையே சொல்ல வேண்டும். சொல்வதையே செயலாக்க வேண்டும். மனச்சுத்தத்தோடு ஆண்டாளின் பெயரை அடிக்கடி சொல்லுங்கள். பலனைப் பெறுங்கள்.
வரலட்சுமி விரதம்
பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது. ஆந்திராவில் இந்த விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நோன்பை மாமியார், மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு. புதிதாக திருமணமான பெண்கள், அந்த ஆண்டிலேயே விரதத்தை துவங்கி விடுவது சிறப்பு. ஒருவேளை, இவ்வளவு நாள் விட்டுப் போயிருந்தாலும் இப்போது துவங்கலாம். இதனை "தலைநோன்பு' என்பர். தலைநோன்பு துவங்குவோர் லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால் நைவேத்யம் செய்யலாம். இதுதவிர, வழக்கமான பாயாசம், வடை, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, இட்லி தயாரித்து ஏழைப்பெண்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். நல்ல உடையும் கொடுக்கலாம்.
தோரக்ரந்தி பூஜை!
வரலட்சுமி பூஜை செய்பவர்கள், முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இட்ட, மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்கவேண்டும். அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் கயிறை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் குடும்பத்தலைவியே கட்டி விட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு "தோரக்ரந்தி பூஜை' என்று பெயர்.
புனர்பூஜை செய்யுங்க!
வரலட்சுமி விரதத்தன்று மாலையில் வரலட்சுமிக்கு தூபதீபம், கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். பின் ஆரத்தி எடுக்கவேண்டும். வீட்டுக்கு அழைத்த சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு, தாம்பூலம்,உடை கொடுத்து வழியனுப்ப வேண்டும். நிவேதனம் செய்த பலகார வகைகளை இரவில் சாப்பிடவேண்டும். அடுத்த நாள் காலையில் மறுபூஜை செய்ய வேண்டும். இதற்கு புனர்பூஜை என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அரிசிப்பானையில் கலசம்!
வரலட்சுமி பூஜையில் கலசம் வைப்பதுண்டு. இதை அன்று இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்கவேண்டும். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். கலசத்தில் இருந்த தேங்காயை, மறுவெள்ளியன்று பால்பாயசம் செய்ய பயன்படுத்தலாம். விரதம் இருந்த அனைவரும் இந்த பாயசத்தைப் பருகுவது அவசியம்.
விரத பலன்கள்
சுமங்கலிப்பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். லட்சுமி அருளால் செல்வவளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.
வீட்டில் செல்வ வளத்தை பெருக்க ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் ஒரு பூஜை தான் வரலட்சுமி பூஜை. அந்த பூஜை செய்யும் நாளானது வருடத்திற்கு ஒரு முறை, அதிலும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் தான் வரும். அதுவும் அந்த பூஜையை செய்யும் போது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, ஒரு பெரிய விஷேசம் போல் பெண்கள் செய்வார்கள். அதிலும் இந்த பூஜையை விரதம் இருந்து, சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்றும், கன்னிப் பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் என்றும் நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும்?
வரலட்சுமி பூஜையின் முதல் நாள் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். மேலும் வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் மேற்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைக்க வேண்டும். மேலும் பழங்கள், இனிப்புகள் வாங்கி வைக்க வேண்டும்.
அம்மன் கலசம் செய்ய...
கலசம் செய்ய ஒரு சொம்பை எடுத்து, அதில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, தகரத்தால் வெள்ளி முலாம் பூசப்பட்ட அம்மன் முகத்தை, அந்த தேங்காயில் வைத்து பத்திரமாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறு சேலைத்துணியை அந்த கலசத்தில், சேலையை கட்டுவது போல் கட்டிவிட வேண்டும். பின் அம்மனுக்கு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்போது கலசமானது தயாராகிவிட்டது.
பூஜை அன்று...
பூஜை செய்யும் முன் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய பால் பாயாசம் செய்து வைக்கலாம். பூஜையில் ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு அந்த கயிற்றை வலது மணிக்கட்டில் கட்ட வேண்டும்.
அதிலும் விரதம் இருப்பவர்கள் அந்த தினத்தில் லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பின்பு சுமங்கலிப் பெண்களை அழைத்து, பூஜை முடிந்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற தட்சணைகளைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறெல்லாம் பூஜை செய்தால் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Friday, July 20, 2012
சைவ ஆகமங்கள்சிவனுடைய திருமேனியிலிருந்து தோன்றின
சைவ ஆகமங்கள் 28 ஆகும்.அவை சிவனுடைய திருமேனியிலிருந்து தோன்றின.
அவை முறையே,
காமிகம் - திருவடிகள்
யோகஜம் - கணைக்கால்கள்
சிந்தியம் - கால்விரல்கள்
காரணம் - கெண்டைக்கால்கள்
அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
தீப்தம் - தொடைகள்
சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
சுப்ரபேதம் - தொப்புள்
விஜயம் - வயிறு
நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
ரௌரவம் - செவிகள்
மகுடம் - திருமுடி
விமலம் - கைகள்
சந்திரஞானம் - மார்பு
பிம்பம் - முகம்
புரோத்கீதம் - நாக்கு
லளிதம் - கன்னங்கள்
சித்தம் - நெற்றி
சந்தானம் - குண்டலம்
சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
கிரணம் - இரத்தினா பரணம்
வாதுளம் - ஆடை
Wednesday, July 18, 2012
நவ நிதிகள்
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை?
1) பத்மம்
2) மஹாபத்மம்
3) மகரம்
4) கச்சபம்
5) குமுதம்
6) நந்தம்
7) சங்கம்
8) நீலம்
9) பத்மினி
குபேரன்
இவற்றுள் மிக முக்கியமான நிதிகள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி. அள்ள அள்ள வற்றாமல் கூடிக் கொண்டே இருக்கும் அபூர்வ ஆற்றல வாய்ந்த இந்த நிதிகளைப் பற்றி அப்பர் முதல் அருளாளர்கள் பலரும் தங்களது பாக்களில் பாடியுள்ளனர்.
குபேரன் சிவ பெருமானது உற்ற தோழன். அவனுக்கு 'சிவ சகா' என்ற பெயரே உண்டு. சிவ புராணத்தில் ருத்ர சம்ஹிதையின் பத்தொன்பதாவது அத்தியாயம் ஒரு அழகிய சம்பவத்தை வர்ணிக்கிறது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு சிவ-குபேரனின் நட்பு என்பதாகும்.
அளகாபுரியின் அதிபதியான குபேரன் கடுந்தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபிரான் உமையுடன் தோன்றினான். ஆயிரக்கணக்கான உதயசூரியன்களின் பிரகாசத்தைத்தோற்கடிக்கும் பேரொளியைக் கண்ட குபேரன் அந்த ஒளியால் கண்கள் கூசவே கண்களை மூடிக் கொண்டான்.
"உன் திருவடிகளைக் காணும் பார்வையைக் கொடு' என்று வேண்டினான். சிவபிரான் தன் உள்ளங்கையால் அவனைத் தொட குபேரன் பார்வை பெற்றான். முதலில் அவன் பார்வை உமையின் மேல் பட்டது.
சிவனின் பத்தினியான உமையின் ஒளியையும் அழகையும் கண்டு வியந்த குபேரன் "சிவனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? என்னை விட எப்படிப்பட்ட பெருந்தவத்தை (சிவனின் அருகில் இருக்கும்படி) மேற்கொண்டாள் இவள்? என்ன உருவம்! என்ன அன்பு! என்ன அதிர்ஷ்டம்! என்ன பெரும் புகழ்!' என்று திரும்பத் திரும்ப குபேரன் கூறினான்.
அவனின் பார்வை அம்பிகையை விட்டு அகலாதிருக்கவே தேவியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்துத் தெறித்தது.
"இவனது பார்வை என்ன பார்வை; பொறாமையுடன் கூடியதா" என்று தேவி சிவபெருமானை வினவ சிவபிரான் சிரித்தார்.
"இல்லை தேவி! இவன் உனது மகனே! உன் தவத்தின் ஒளியைக் கண்டு அவன் வியந்து என்ன அழகு! என்னஒளி! என்ன உருவம் என்று புகழ்கிறான்." என்று கூறிய சிவபிரான் குபேரனை நிதிகளுக்கு நாயகனாக்குகிறான்; அத்தோடு குஹ்யர்களுக்கும் அதிபதி ஆக்குகிறான்.
குஹ்யர்கள் என்றால் மறைந்திருப்பவர்கள் என்று பொருள். யட்சர்களைப் போல இவர்களும் குபேரனுக்கு சேவகம் செய்யலாயினர்.ஒரே கண்ணை உடையவனாதலால் "ஏக பிங்களன்" என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. வைஸ்ரவணன் என்பதும் குபேரனின் பெயரே.அஷ்டதிக் பாலர்களில் குபேரனும் ஒருவன். வடதிசைக்கு அதிபதி. தீபாவளியன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து பாரதம் முழுவதும், குறிப்பாக வட இந்தியாவில், வழிபடுகின்றனர்.
நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் சிலையை சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் காணலாம்.
பாரத ரிஸர்வ் வங்கியின் வாசலிலுல் குபேரனுக்கு ஒரு இடம் உண்டு. (இந்தக் கட்டுரையைப் பார்த்த "செகுலர் பர்ஸன்" யாரேனும் குபேரனுக்க ரிஸர்வ் வங்கி வாசலில் இடம் என்றால் தேசத்தின் செகுலரிஸம் என்னாவது என்று முழங்கி அதை அகற்ற வேண்டும் என்று கூறாமல் இருக்க வேண்டும். முஸ்லீம்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸ் பெயர் கருடா ஏர்வேஸ் என்று இருக்கலாம்; ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தால் நம் மதச்சார்பின்மை என்னாவது?!)
குபேரனுக்கு ஒரு கோலம் உண்டு.
எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும் இந்த மாயச்சதுரம் குபேரனுக்குரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வரப்படுகிறது.
குபேரனுடைய தியான ஸ்லோகம் பின் வருமாறு:-
மநுஷ்யவாஹ்ய விமாந வரஸ்திதம் கருடரத்ந நிபம் நிதி நாயகம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜே துந்திலம்
இதனுடைய பொருள் :- மனிதர்களால் தாங்கப்பெறும் உத்தமமான விமானத்தில் வீற்றிருப்பவரும், கருடரத்தினம் (மரகதம்) போன்று ஒளி வீசுபவரும், நவ நிதிகளின் தலைவரும், சிவ பெருமானின் தோழரும், சிறந்த கதை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரும் பொன் முடி முதலிய ஆபரணம் பூண்டவரும் தொந்தியோடு விளங்குபவரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானை வணங்குகிறேன்.
குபேர மந்திரம் பின் வருமாறு:-
ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய
தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா
வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இந்தக் குபேர சக்கரத்தை அல்லது யந்திரத்தை உரியவர்களைக் கொண்டுவீட்டில் பிரதிஷ்டை செய்வது மரபு.
அல்லது தாமிரத் தகட்டில் பொறித்து கடைகளில் விற்கப்படும் இந்த யந்திரத்தை வாங்கி வணிகக் கடைகளிலும், இல்லங்களிலும், பர்ஸிலும் குபேரனை நாடி வழிபடுவோர் வைத்திருப்பர்.
'சிவ சகா' என்பதால் சிவனை வழிபட்டாலும் குபேரனது பார்வை சிவபிரானின் பக்தர்கள் மீது திரும்பும்.
குபேரனது சக்கரத்தை வைத்து பக்தியுடனும் வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என்று அற நூல்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன
Friday, July 13, 2012
நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா
?
ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு? தினமும் கோயிலுக்குச் சென்று மனநிறைவோடு வலம் வாருங்கள். ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நடத்துங்கள்
உண்மை பேசினால் என்ன நன்மை?
உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம், என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள். ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி? என பட்டரிடம் கேட்டார். அவர் அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. பவுர்ணமி என்றார். இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான், என்று நினைத்த சரபோஜி, இதுதான் பவுர்ணமி வானமா? என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!
அசைவம் சாப்பிடுவது பாவமா?
அஹிம்சா பரமோ தர்ம என்கிறது சாஸ்திரம். பிற உயிர்களைத் துன்புறுத்தாமையே மேலான தர்மம். எந்த உயிரையும் கொல்லாமல் வாழ்வதைத் தம் வாழ்நாள் தவமாக ஞானிகள் ஏற்று வாழ்ந்தனர். இந்து தர்மத்தின் அடிப்படையான கொள்கையே அகிம்சை என்னும் தர்மம் தான். அசைவம் சாப்பிட்டால் அஞ்ஞானம் உண்டாகும். மருத்துவ உலகம் உடல்நலனுக்கு சைவ உண்வையே சிபாரிசு செய்கிறது. மாமிசம் உண்பதைப் பாவமா? என்று கேட்டிருக்கிறீர்கள். மகா மகா பாவம் என்ற உண்மையை உணருங்கள். மரக்கறி உணவே ஆன்மிக வாழ்விற்கு உகந்தது.
தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்
ஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும் என்று குறிப்பிடுவர். பிறந்த நட்சத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்ததை பஞ்சாங்கம் என்று குறிப்பிடுவர். தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு பிரம்ம லிபி என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று சொல்லுவர்.
இயந்திர உலகில் இறைவனை வழிபட எளிய வழி என்ன?
<இது இயந்திர உலகம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். இந்த உலகில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் மட்டும் வேண்டும் என்று கேட்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? உறங்குவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? குளிக்க நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? இதெற்கெல்லாம் நேரம் ஒதுக்கும் நாம் நம்முள் இருக்கும், நம்மை வழிநடத்தி செல்லும் இறைவனை வணங்குவதற்கு நேரம் இல்லை என்கிறோம். சரி. இறைவன் மாபெரும் சக்தி. அவரை நேரம் ஒதுக்கித்தான் வழிபட வேண்டும் என அவர் நினைப்பதில்லை. அவர் நம்முள் இருக்கிறார். அவர்தான் நம்மை வழிநடத்தி செல்கிறார் என்ற நினைவுடன் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும். அப்படி செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் நாம் தான் செய்கிறோம். எல்லாம் என்னால் தான் நடக்கிறது என்ற அகங்காரம் விலகி, இறைவனின் கருணை கிடைத்து விடும். ஒன்பது வகை இறைவனின் வழிபாட்டில் நினைப்பு (ஸமரணம்) சிறந்த வழிபாடாகும்.
வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?
அல்லல் பட்டு ஆற்றாது
அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை
என்கிறார் தெய்வப்புலவர்.
அதனால், சாபத்திற்கு வலிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. யாருடைய சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு கெடுதல் செய்ய மனதால் நினைப்பதும் தவறு தான்.
உலகம் எப்போது அழியும்: புராணங்கள் கூறுவது என்ன
இன்று விஞ்ஞானத்தில் ஒரு எர்த் வருடம் என்று சொல்வதை, அன்று புராணங்களில் தேவர்களின் ஒரு நாள் என்று சொன்னார்கள். தேவர்களின் 12 நாட்கள் - ஒரு கல்பம்; நான்கு கல்பங்கள் ஒரு யுகம்; நாலு யுகங்கள் - ஒரு சதுர் யுகம்; பல சதுர் யுகங்கள் - பிரம்மனின் ஒரு நாள் - பிரம்மனின் ஒரு பகலும் ஒரு இரவும் 34,560 மில்லியன் எர்த் வருடத்துக்கு சமானமாகக் கணக்கு வருகிறது. ஆக, இன்றைக்கு எர்த் வருடம் என்று மில்லியனில் போடும் வானசாஸ்திரக் கணக்குகள் நம் புராணங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 34,560 மில்லியன் எர்த் வருடங்களுக்கு ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு உலகமழிந்து மறுபடியும் உயிர்கள் தோன்றும் என்கின்றன புராணங்கள். அந்த ஒளியும் ஒலியும் தான் சிவன் என்று சொன்னார்கள். சிவனைச் சக்தியின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் காட்டியவர்கள், சிவனின் பிறையில் சந்திரனை வைத்தார்கள். சந்திரன் = அறிவு. சக்தியைக் சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த அறிவு அவசியம் என்பதின் அடையாளமே சந்திரன். சிவனின் கழுத்தைச் சுற்றி நிற்கும் பாம்பு, காலத்தைக் குறிப்பது. சக்தியை அறிவால் உணர்ந்துகொண்டு செயல்பட்டாலும், மானுட வாழ்க்கை காலத்துக்குக் கட்டுப்பட்டது என்பதைக் குறிக்க வே இந்த அடையாளம். சிவனின் இருப்பிடம் இமாலயம் என்று சொல்கிறோம். இமனின் ஆலயம் இமாலயம். இமன் = சிவன், தேவைப்படும்போது அழிக்கவல்லவன் என்று பொருள். இந்த இடத்தில் அழிவு என்பது, மாற்றத்தைக் குறிக்கிறது. எந்த விஷயத்திலும் மாற்றம் வர வேண்டுமானால், இப்போது இருப்பதை அழித்தால் அல்லது அது அழிந்தால் தான் மாறுதல் (புதியன உருவாதல்) ஏற்படும். எனவே, சிவனை அழிவுக்கான கடவுள் என்பதைவிட மாற்றத்துக்கான கடவுள் என்பதே பொருந்தும்
நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?
நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.
தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?
தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?
கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.
மகாலட்சுமி வழிபாடு- தமிழ்
குபேர வாசல் (மகாலட்சுமி பூஜை)
அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.
திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும்,
சந்தோஷம் நிலைக்கும்.
1.பொன்மகள் கடைக்கண் பார்வை
புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி
நயம்படக் கதவைத் தட்டும் !
மன்பதை போற்றும் செல்வம்
மழையெனப் பொழியும்; வாழ்த்தும்!
அன்னையே அலர்மேல் தேவி!
அடியேனைக் காண்பா ரம்மா!
2. தேவியே கமல வல்லி;
செந்திரு மாலின் கண்ணே!
நாவினால் நின்னை யன்றி
நயத்தகு நயத்தைக் காணேன்!
காவியம் காணாச் செய்யுள்
கற்பகத் திருவே! நின்றன்
ஓவியம் நெஞ்சில் வைத்தே
ஓதுவேன்; கடைக்கண் பாராய்!
3. நாரணன் தவத்தின் தேவி!
ஞாலத்துப் பெண்கள் போற்றும்
பூரணி! பூவில் வாழும்
புன்னகை அரசி! எல்லாக்
காரண காரி யங்கள்
கணக்கிடல் யாரே? இந்தத்
தாரணி தன்னில் வாழத்
தனயனைக் கடைக்கண் பாராய்!
4. தாமரை நினது பீடம்;
தரிசனம் திருமால் மார்பு;
ஏமமே இதழின் வாசம்
இளநகை புரிந்தால், அந்தச்
சேமமே எனக்குப் போதும்
தேவியே அருள்வா யம்மா!
சாமரம் வீசிப் போற்றிச்
சரிதத்தைப் பாடி வைப்பேன்
5. பூவினுள் சிறந்த பூவே
தாமரைப் புனிதப் பூவே!
காவினில் பூக்கும் பூக்கள்
கண்டிடில் நாணும் என்னே!
யாவினும் உயர்ந்த உன்னை
யாசிப்பேன் தூது செல்வாய்!
பாவினால் பாடும் என்னை
இலக்குமி பார்க்கச் சொல்வாய்!
6. மலர்களின் அரசி வண்ண
மாப்புகழ் கமலம்; அந்த
மலரினும் மென்மை கொண்ட
மங்கையர்க்கரசி ! நீயோ
மலர்புகழ் கமலம் மீது
மார்பினை நிமிர்த்தி நின்றாய்!
மலர்மணம் சற்றே வீசி
வருவயோ மனையைத் தேடி
7. சகலமும் உணர்ந்த நீயே
சஞ்சலம் போக்க வல்லாள்!
அகலமாய் விரிந்த பூமி
அளப்பவள் நீயே தாயே!
இகபரம் காணாத் தெய்வம்!
இமைத்திடில் செல்வத் தோட்டம்!
மகனைநீ கடைக்கண் பாராய்
மாதாவே அலர்மேல் போற்றி!
8. வண்ணமா மலரில் வீற்று
வையத்தை வாழ வைக்கும்
சொர்ணமாம் பொன்னின் தேவி,
சுகங்களின் மகிழ்ச்சி நீயே!
எண்ணமே நின்றன் தோற்றம்
ஏந்திநல் தவமே செய்தால்,
கண்ணினைத் திறப்பாய்; ஆங்கே
காட்சியோ குபேர வாசல்!
9. சீரடி பணிந்து கேட்பேன்;
தேவிநான் ஏழைப் பக்தன்;
ஓரடி எடுத்து வைத்தால்
ஈரடிச் சறுக்கல்; பூமி
நீரடிக் குறையின் வானம்
நிலைமையைச் சமனே செய்யும்!
யார் கொலோ என்னைக் காப்பார்?
அலர்மேலு மங்கைத் தாயே!
10. முகிலதன் நிறமே கொண்டு
மும்மூர்த்தி உருவாய்த் தோன்றி
அகிலமே தன்னுள் ளாக்கி
ஆண்டிடும் திருமால் தேவி!
மகிமைகள் அறிவேன்; நின்றன்
மாட்சிமை புரிவேன்; சற்றே
மகிழ்வுடன் என்னைப் பாராய்
மண்ணிலே செல்வன் ஆவேன்!
11. என்னதான் வழியோ சொல்வாய்
ஏழுமா மலையின் வல்லி !
முன்னம்நான் செய்த பாவம்
மூண்டதோ? அறிகி லேனே!
சின்னவன் குற்றம் ஏதும்
செய்திடில் பொறுப்பாய் தேவி!
அன்னையே அலர்மேல் தாயே
அடியேனை ஆசி செய்வாய்!
12. திருமலை கீழே நின்றன்
திருவாட்சி செல்வக் காவல்!
வருபவர் இனிய நெஞ்சம்
மாதாவே நின்றன் வாசம்!
அருமைகள் அறிந்தா ரைநீ
அணைத்திட மறந்ததில்லை!
மருவிலான் மலைவாழ் ஐயன்
மனைவியே ! அலர்மேல் தாயே!
13. கண்ணிலே நின்னை வைத்தேன்
கருத்திலே ஒளியைத் தந்தாய்!
பண்ணிலே நின்னைப் பாடப்
பாவினில் கவிதை செய்தேன்!
தண்ணிய நெஞ்ச மோடு
தாயேநீ தயவு செய்வாய் !
மண்ணிலே நீயே தெய்வம்
மறக்கிலேன் கடைக்கண் பாராய்!
14. வள்ளலாம் திருமால் நின்றன்
மாபெரும் அழகில் சொக்கிப்
பள்ளிவிட் டெழுந்து வந்து
பவித்திரம் கண்டான்; நின்னை
அள்ளியே அணைத்தான்; மார்பில்
ஆனந்தம் கொண்டான்; பின்னர்
தெள்ளிய மகிழ்வைக் காட்டத்
திருமலை சென்றான் என்னே!
15. சென்றவன் உச்சி ஏறிச்
செம்மைசேர் மலைகள் ஏழை
நின்றவன் சுற்றிப் பார்த்தான்;
நெஞ்சிலே அமைதி; அந்த
நன்றுரை ஏழு குன்றம்
ஞாலத்தில் யாங்கும் இல்லை !
நின்றவன் மேலும் நின்றான்
திருமலை நெடுமால் பீடம்!
16. பீடமோ அண்ணல் வாசம்!
பெருமைகள் குவிய வாழ்த்தி
ஆடகப் பொன்னே, தாயே!
அலர்மேலு அமர்ந்தாய் கீழே!
மாடமா ளிகைகள் எல்லாம்
மணாளனே சொந்தம் என்று
சாடையாய் மகிழ்ந்தாய்; இந்தச்
சகத்தினில் தலைவி நீயே!
17. நின்னிலும் கருணை மிக்கார்
நிலங்களில் யாரே உள்ளார்?
நன்னயத் தோடு வேண்டில்
நலம்பலத் தரவே செய்வாய்!
சென்னியைப் பாதம் வைத்துச்
செப்புவேன்; நானோர் ஏழை!
பொன்னையும் பொருளும் தந்து
பூரிக்கச் செய்வாய் தாயே!
18. ஐயனாம் வேங்கடத்தான்
அழகுறு பார்வை தன்னில்
மெய்தனை உருகச் செய்து
மேன்மையை மேலும் கொண்டாய்!
வையமே நீதான் என்று
வணங்கியே தவமாய் நின்றேன்;
உய்யவே வழியைக் காட்டி
ஓங்கிய செல்வம் தாராய்!
19. வண்டுகள் நாணும் கண்கள்!
வாயெல்லாம் பவளக் கூத்து!
பண்டுநின் அருமை கண்டு
தேவர்கள் பாதம் தொட்டார்!
எண்டிசை செலினும் மாதர்
ஏற்றியே போற்றி நிற்பார்!
கண்டுநான் கொண்டேன் தேவி
கவலைகள் இனிமேல் இல்லை!
20. கார்நிற வண்ண அண்ணல்
கருணையை முழுதாய்ப் பெற்ற
சீர்நிறை கமலச் செல்வி
சிறப்புடைக் கனக வல்லி!
ஏர்முனை முதலாய்க் கொண்ட
எல்லாமே நீதான்! இந்தப்
பார்தனில் நின்னை யன்றிப்
பார்த்திலேன் சரணம் தாயே!
21. கிளிகளோ வரிசை கட்டிக்
கீழ்வானத் தோரணம்போல்
வெளிகளில் பறந்து செல்லும்
வேடிக்கை என்ன சொல்வேன்!
ஒளிமய வேங்கடத்தின்
உன்னத அழகுக் கோலத்
தெளிவினைக் காட்டி நிற்கும்
தெய்வீகம் திருவின் சோதி !
22. தேவர்கள் நின்றன் பாதத்
திருமலர் தாங்கிப் பின்னர்
ஆவலாய்ப் பணிந்து காண்பர்;
அன்னையே மகியை என்னே!
நாவலர் பாடும் தாயே!
நாயகி திருமால் தேவி!
ஆவன செய்வாய்; இந்த
அடியேனின் துயரைத் தீர்ப்பாய்!
23. கருணைமா வள்ளல் அண்ணல்
காத்திடும் வேங்க டத்தில்
பெருமையாய் பக்தர் கூடிப்
பேரின்பம் அடைவார்! நீயோ
அருமையாய் பெருமாள் மார்பில்
ஆனந்தக் கோலம் பூண்டாய்!
மருவிலா அலர்மேல் மங்கை
மாதாவே கடைக்கண் பாராய் !
24. சுதர்சனன் தேவி நின்றன்
சுந்தரம் யாரே அறிவர்!
அதர்களாய் ஆடும் மக்கள்
அறியாமை என்ன சொல்வேன்!
புதர்தனில் புதையல் தேடிப்
புழங்குவோர் பல்லோர் உண்டு;
நிதர்சனம் நீயே என்று
நின்னைநான் சரணம் கண்டேன்!
25. மதுவெனும் அரக்கன் தன்னை
மாளவே செய்த மாலை
வதுவைநீ செய்து கொண்டாய்;
வையமே பெற்ற பேறாம்!
பதுமமேல் நின்றாய்; இந்தப்
பாரினைச் செழிக்கச் செய்தாய்!
இதுவரை ஏழை என்மேல்
ஏனம்மா இரக்கம் இல்லை?
26. கண்ணிலே நின்னை யன்றிக்
காண்பதோ ஏதும் இல்லை!
பண்ணிலே தோடி ராகம்
நீயன்றோ பக்தன் கண்டேன்;
எண்ணிலே அடங்காச் செல்வம்
எல்லாமே நினது வாசம்!
மண்ணிலே வாடும் என்னை
மாதாவே கடைக்கண் பாராய்!
27. அழகிய தோற்றம் முன்னே
அனைத்துமே சரணம் தாயே!
கிழமையில் வெள்ளி நின்றன்
கீர்த்தியைப்பேசும் நாளாம்!
பழமையும் புதுமை சேர்ந்து
பகுத்திடும் அறிவு யாவும்
சுழலுமிவ் வுலகை நோக்கிச்
சுந்தரக் கவிதை பாடும்!
28. அலைகடல் துயிலும் அண்ணல்!
ஆழ்மனத் தாம ரையில்
நிலையுடன் அமர்த்தி ருக்கும்
நிம்பையே! அலர்மேல் தாயே!
கலைபயில் கழகம் நீந்திக்
கவிதையைக் கற்றேன்; சொன்னேன்!
தலைமகள் நீயே என்று
தரிசித்தேன்; செல்வம் தாராய்!
29. பங்கயச் செல்வி பார்வை
பட்டிடில் நிறைகள் யாவும்!
அங்கயற் கண்ணி; மற்றும்
அருங்கலை வாணி அன்னாள்!
எங்குமே அவளின் ஆட்சி
இதனைநாம் அறிந்து கொண்டால்
தங்குமே செல்வம்; நன்மை
தரணியில் அடைவோம் காண்டி!
30. கார்முகில் வண்ணன் இல்லாள்
கமலத்தின் அரசி போற்றி!
சீர்மிகு ஈசன் தங்காய்
சிவந்தமா பாதம் போற்றி!
நீர்கடல் வாசம் தன்னில்
நிறைந்தநின் அமுதம் போற்றி!
பார்தனில் செல்வம் காக்கும்
பரந்தாமன் திருவே போற்றி!
31. திருமலை வேங்க டேசன்
திருவடி நெஞ்சில் கொண்ட
பெருமிகு அலர்மேல் தாயே,
பேரின்பம் பெற்று மார்பில்
உருவினைப் பதித்தாய்! உண்மை
உலகிற்கே எடுத்துச் சொன்னாய்!
திருமிகு செல்வச் சோதி!
திருவருள் கிடைக்கண் பாராய்!
32. விழிமலர் மலர்ந்து வாசம்
வீசிடப் பாராய் தாயே!
பழியிலாப் பக்தன்; நின்றேன்
பதமலர் பணிந்து நின்றேன்!
வழிகளை அறியா வண்ணம்
வாழ்கிறேன்; எளியேன்; நானோ
சுழிமுனை நின்னைக் கொண்டேன்;
சுகங்களைத் தருவாய் என்றும்!
33. அகிலமே நின்றன் பார்வை!
அனைத்துமே நின்றன் செல்வம்!
முகிலதன் வண்ண மாலன்
மூலமே நின்றன் கோலம்!
மகிழ்வுடன் அறிந்து மக்கள்
மகிமைகள் கண்டு கொண்டேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
34. வான்மலர் மீன்கள் எல்லாம்
வையத்துள் சொல்லும் செய்தி:
தேன்மலர் பூக்கள் கொண்டு
தினம்தினம் தியானம் செய்து
கோன்மலர்க் கமலத் தாயைக்
கோடித்தே இசைப்போ மானால்
ஊன்மலர் புனித மாகி
உலகத்துச் செல்வம் காண்போம்!
35. பிருகுவின் வமிசத் தேவி
பீடுடை அலர்மேல் தாயே!
குருமகன் சங்க ரர்தம்
குரலுக்குக் காட்சி தந்தோய்!
உருகிடும் கவிஞன் நானோ
நின்னையே உபாசிக் கின்றேன்!
திருமகள் நாமம் பெற்றோய்
திருவடி தொழுதேன் வாராய்!
36. அன்னையே திருச்சா னூரின்
அலங்காரத் திருவே போற்றி!
மன்னனாம் வேங்க டத்தான்
மனைவியே மார்பில் வீற்றோய்!
பொன்னையும் மணியும் கொண்டோய்!
பூலோகச் செல்வ மாரி!
என்னையும் சற்றே நோக்கி
எழிலார்ந்த பார்வை பாராய்!
37. தூய்மையின் துளசிப் பூவே!
தூதுநீ சென்று வாராய்!
ஆய்கையில் அருகில் வாழும்
அழகான தோழி நீயே!
வாய்மணம் கமழப் பாடும்
வார்த்தைகள் எடுத்துச் செல்வாய்!
தாய்மனம் கனியச் செய்வாய்!
தனயனைப் பார்க்கச் சொல்வாய்!
38. நீலமா விழிகள் என்றன்
நெஞ்சிலே பதிய வைத்தாய்!
கோலமா காட்சி என்னே!
குவலயம் வியக்கும் தோற்றம்!
காலமே நின்றன் ஆட்சி;
கனிந்தது புவனம்; ஏனை
சாலமா இயற்கை நீயே!
சரணமே அலர்மேல் தாயே!
39. திருமலை எம்பி ரானின்
திருத்தேவி பாதம் போற்றி!
அருமலை ஏழின் வண்ணம்
ஆராய்ந்தால் இவளே மூலம்!
பெருமலை இமயம் ஒத்த
பேரின்பம் இங்கே உண்டு!
தருமலை, செல்வம் வேண்டின்
தரிசித்தால் பெறுவோம் நாமே!
40. மண்டலம் பாடி வைத்தேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
குண்டலம் அணிந்த கோலம்
குவலயம் ஒளிரும் காட்சி!
எண்டிசை வணங்கும் மக்கள்
எல்லார்க்கும் நீயே செல்வம்!
தொண்டினைச் செய்து வாழ்வேன்;
தொடரட்டும் குபேர வாசல்!
41. வணங்குவோம் அலர்மேல் பாதம்!
வாழ்த்துவோம் நல்லோர் நெஞ்சை!
வணங்குவோம் கதிர்நி லாவை!
வாழ்த்துவோம் பஞ்ச பூதம்!
வணங்குவோம் ஒன்பான் கோளை!
வாழ்த்துவோம் எட்டுத் திக்கை!
வணங்குவோம் உலகை; மேலும்
வாழ்த்துவோம் திருவை யாவும் !
(மங்களம் நிறைக)
ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம்
கமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி
தாமரை திகழும் திருக்கரமும்
தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
÷க்ஷமம் அளிக்கும் நல்லருளும்
சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன்
முன்னே சங்க பதும நிதி
காவல் செய்ய, காட்சிதரும்
கமல மாதே! வணங்கு கிறேன்!
தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!
தாமரை மென்மை தளிர்க்கைகள்!
தூய மங்கல வெண்மை உடை!
துலங்கு சந்தனம்! மணிமாலை!
ஞானம், சத்தி, பலம் செல்வம்
நயத்தகு வீரம், பொலி வென்னும்
ஆறும் பெற்று மூவுலகும்
ஆட்சி புரிபவளே! அருள்க!
இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்!
எல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்!
அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்!
அரிய செல்வத் திருப்பிடமாய்
நினைத்த தளிக்கும் சுரபியென
நிலவும் மேலாம் வடிவம் நீ!
விளங்கும் தெய்வ இலக்குமியே!
விஷ்ணுவின் இதய இலச்சினையே!
செந்தாமரைதான் உன் வீடு!
திகழும் தூய்மை உன் ஏடு!
அமுதம் தோற்க இனிப்பவள் நீ!
அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!
அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ!
அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
எங்கும் எதிலும் எந்நாளும்
இலங்கிச் சிறப்பவளே சரணம்!
அரிய வடிவும் நற் குணமும்
அற்புதப் புகழும் பெற்றவளே!
அசுர மாதா துதியைத்தன்
அதிகா ரத்தில் கொண்டவளே!
அமுதப் பாற்கடல் ஈன்றவளே!
அறிவே உருவம் ஆனவள் நீ!
அருளைப் பொழியும் வானவள் நீ!
சிறிதும் குற்றம் அற்றவள் நீ!
ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ!
உலகின் துயர இருள் நீக்கும்
ஒளியே! பகவான் உட்கொள்ளும்
அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
அடியேன் இடுக்கண் போக்கிடுக!
தருமம் அனைத்தும் ஒன்றான
தாயே! உன்னைப் போற்றுகிறேன்!
இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!
இருப்பதும் கையில் கமலம்தான்!
இருவிழி அதுவும் தாமரைதான்!
இலங்கும் அழகும் அம்மலர்தான்!
கருணை வடிவே! காசினியைக்
காக்கும் தாயே! வணங்குகிறேன்!
மலரில் தோன்றிய மலர்முகமே!
மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்
அலைமகளே! இவ் வகிலத்தில்
ஆனந்தத்தின் அடிப்படை நீ!
பூவிற் சிறந்த கமலத்தில்
பொலியும் மாலை அணிந்தபடி
பூவையர் விரும்பக் காட்சிதரும்
தேவதையே! உனைத் துதிகின்றேன்!
வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
தருணம் பார்த்தே இருப்பவளே
சந்திர னோடு நீ பிறந்தாய்!
சந்திர வதனம் நீ பெற்றாய்!
செங்கதி ரோடு ஒளி போன்றே
திருமா லோடு திகழ்பவள் நீ!
புயங்கள் நான்கு கொண்டவளே!
புதிய நிலவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!
பக்தர்க் கருளைப் பொழிபவளே!
நயந்த அன்பர் வாழ்வினிலே!
நல் இன்பத்தைத் தருபவளே!
வியக்கும் மங்கள வடிவம் நீ!
வித்தகியே! உனைப் பணிகின்றேன்!
தூயவளே! நீ உலகன்னை!
துலங்க சக்தியின் முதற் பண்ணை!
மாயச் செய் என் வறுமையினை!
மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
அமைதி துலங்க விளங்குகிறாய்!
தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!
விளங்கும் வெளிச்ச உருவோடு
வில்வக் காட்டில் விளையாடி
இலங்கும் திருமால் மார்பினிலே
இடமும் பெற்ற இலக்குமியே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
கலங்கும் பாவ வினை போக்கி
கனக மழையைப் பெய்விப்பாய்!
அன்னை வடிவே! உன்னாலே
அரிய தனமும் தானியமும்
நன்மை பலவும் வருவனவே!
நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!
பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!
தன்னை பூஜை செய்வோர்க்கு
சகல வரம்தரும் சந்நிதி நீ!
திருப்பாற் கடலில் உதித்தவளே!
திருமால் மார்பிடை பதித்தவளே!
விருப்போ டணுகும் பக்தர்க்கே
வெற்றியை வாழ்வில் தருபவளே!
செறித்த கனகச் சூழலுடன்
சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்
பொருத்த முடனே பொலிகின்ற
பூவே! உன்னைப் போற்றுகிறேன்!
தேசம் போற்றும் உத்தமியே
ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
பூசை மலராய்ப் பொலிகண்கள்!
பொன்னைப் பொழியும் திருக்கைகள்!
மோசம் செய்யும் வறுமையினை
முற்றும் அழிக்கும் அருட்பார்வை!
ஆசை யாவும் நிறைவேற்றும்
அன்னை உன்னைப் புவிபோற்றும்!
நவ துர்க்கைக்கும் மலரென நீ
நாயகியே நீ விளங்குகிறாய்!
சிவன் அயன் திருமால் மூவருமே
சேர்ந்த சங்கம வடிவம் நீ!
அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
அன்னை நீயே முக்காலம்!
அவனி சுழன்றிடக் காரணமே!
அனைத்தும் நிறைந்த பூரணமே!
தேவ மாதர் பணி செய்ய
திகழும் தலைவி! வையத்தின்
மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!
மூவர் போற்றும் முதல்வி நீ!
ஆவ தனைத்தும் உன்னாலே!
ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
யணரின் நெஞ்சமெனும்
நற்றா மரப்பூ நடுவினிலே
சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!
திசைகள் எட்டும் உன் புகழே!
ஆரா திப்பர் இல்லத்தை
அரண்மனை ஆக்கும் பெற்றியளே!
பூரணக் கருணை பொழிந்திடுவாய்!
பொன்மகளே! உன் அடி சரணம்!
என்றும் இளமையாக வாழ எளிய வழி!
அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும். அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர். ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்.. நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது. ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன். இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன். படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன். இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.
ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும்
ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு
சிவனை பித்தா என்பது ஏன்?
சிவனை பித்தா என்பது ஏன்?
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். இறைவனை இவர் பித்தன் என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா?
சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்? என்று சுந்தரர் கடிந்து கொண்டார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். என்னை பித்தன் என்று திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு, என்றார்.சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்த புஷ்டியைப் புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் பித்தன் என்றார் சுந்தரர்
ருத்ராட்சம் பிறந்த கதை:திரும்பத் திரும்ப பயன்படுத்தும் இலை:
ருத்ராட்சம் பிறந்த கதை: சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அகோர அஸ்திரம் என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.
துளையுள்ள ஒரே விதை: ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இறைவன் இப்படி செய்திருக்கிறார். ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம்
வளர்கிறது. இது வியாதியை போக்கும் தன்மை கொண்டது. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.
திரும்பத் திரும்ப பயன்படுத்தும் இலை: வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை வில்வ தளம் என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது
சிவராத்திரி விரத மகிமை:
விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
சிவராத்திரி கொண்டாடுவது எப்படி?கொண்டாடுவது ஏன்?
சிவராத்திரி கொண்டாடுவது எப்படி?
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும். லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களாலும் மற்றும் பிற மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த ஒரு காலம் தவிர, வேறு தருணங்களில் தாழம்பூவை சிவபெருமானுக்கு அணிவிக்கலாகாது. நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள இருநிலனாய் தீயாகி எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
சிவராத்திரி விரதமுறை: சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
நான்கு கால பூஜைகள்: சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும். முதல் காலம்: அபிஷேகம் - பஞ்சகவ்யம். மேற்பூச்சு - சந்தனம். வஸ்திரம்-பட்டு. ஆடையின் வண்ணம் - சிவப்பு, நிவேதனம் - காய்கறிகள், அன்னம். வேதம் - ரிக். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - சிவபுராணம். தீபம் - விளக்கெண்ணெய். தத்வ தீபம் - ரதாரத்தி. அட்சதை - அரிசி. மலர் - தாமரை. பழம் - வில்வ பழம்.
இரண்டாம் காலம்: அபிஷேகம் - பஞ்சாமிர்தம். மேற்பூச்சு - பச்சைக்கற்பூரம். வஸ்திரம் - பருத்தி. ஆடையின் வண்ணம் - மஞ்சள், நிவேதனம் - பரமான்னம், லட்டு. வேதம் - யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - இருநிலனாய்... பதிகம். தீபம் - இலுப்பை எண்ணெய். தத்வ தீபம் - ஏக தீபம். அட்சதை - யவை. மலர்கள் - தாமரை, வில்வம். பழங்கள் - பலாப்பழம்.
மூன்றாம் காலம்: அபிஷேகம்- தேன். மேற்பூச்சு - அகில். வஸ்திரம் - கம்பளி. ஆடையின் வண்ணம் - வெள்ளை, நிவேதனம் - மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம் - சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - லிங்கபுராண குறுந்தொகை. தீபம் - நெய். தத்வ தீபம் - கும்ப தீபம். அட்சதை - கோதுமை. மலர்கள் - அறுகு, தாழம்பூ. பழங்கள் - மாதுளை.
நான்காம் காலம் : அபிஷேகம் - கருப்பஞ்சாறு. மேற்பூச்சு - கஸ்தூரி. வஸ்திரம் - மலர் ஆடை. ஆடையின் வண்ணம் - பச்சை. நிவேதனம் - கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம் - அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - போற்றித் திருத்தாண்டகம். தீபம் - நல்லெண்ணெய். தத்வ தீபம் - மகாமேரு தீபம். அட்சதை - உளுந்து, பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள் - எல்லா வகை மலர்களாலும். பழங்கள் - வாழை முதலிய அனைத்து வகைப்பழங்களும்.
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.
ஆலால கண்டா! அற்புத சுந்தரா!
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தில் இருந்த மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள், கருணைக்கடலான சிவனிடம் ஓடினார்கள். தங்கள் முயற்சியினால் உண்டான முதல்பயனான விஷத்தை இறைவனே ஏற்று அருளும்படி வேண்டினர். சிவன் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அவ்விஷத்தை நாவற்கனி போல உருட்டி வந்து கொடுத்தார். சிவன் அதை விழுங்கி விட்டார். இதனைக் கண்ட தேவர்கள் ஆலாலகண்டா அற்புத சுந்தரா என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.
நினைக்க முடியாத வாழ்நாள்: புராணங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாட்கள் பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அந்த அளவுக்கு வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனத்தை நேரில் பெற தன் ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும், சிவன் வராமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்ற போது, சிவன் காட்சி தந்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழும் வரத்தைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு லிங்கம் சமைத்து வழிபட்டான். இலங்கையில் இருந்த இந்த லிங்கங்கள் கடல் கோளினால் அழிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
இணைந்த இருவிஷங்கள்: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இருவித விஷங்களும் ஒன்று சேர்ந்தன. ஆலம் என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை ஆலாலம் என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சுவழக்கில் ஆலகாலம் என்று திரிந்துவிட்டது.
அரைக்கண்ணின் இடதுகை ரகசியம்: கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள இறைவன் காளத்திநாதர். இவரது கண்ணில் ரத்தம் வழிந்ததைக் கண்ட கண்ணப்பர், தன் வலக்கண்ணை அகழ்ந்து அப்பினார். பின் இடக்கண்ணிலும் ரத்தம் வழிந்தது. கண்ணப்பர், தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயற்சித்தார். ஆனால், சிவலிங்கத்தின் இடப்பாகத்தில் இருந்து ஒரு கை முளைத்து எழுந்தது. நில்லு கண்ணப்பா! என்று அசரீரி ஒலித்து அவரைத் தடுத்தது. இடக்கை அவரைத் தடுக்க காரணம் உண்டு. சிவனின் இடப்பாகம் அம்பிகைக்கு உரியது. தன் பிள்ளை போன்ற கண்ணப்பன் அவதிப்படுவதைக் காண தாயின் மனம் பொறுக்கவில்லை. அதனால், அவரைத் தடுத்து அருள்செய்தாள். முக்கண்ணர் என்று சிவபெருமானைக் குறிப்பிட்டாலும் காளஹஸ்தியில் சிவனுக்குரியது அரைக்கண் மட்டுமே. ஈசனின் உடலில் சரிபாதி தேவி என்பதால், ஒன்றரைக்கண் தேவிக்குரியது. காளத்திநாதரின் வலக்கண்ணோ கண்ணப்பரிடம் பெற்றது. அதனால், நெற்றிக்கண்ணின் வலப்பகுதி மட்டுமே இறைவனுக்குரியதாக இருக்கிறது.
ஐந்து கோலம் ஐந்து பலன்: சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகைநிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத்திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்புரிகிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் என்று குறிப்பிடுவர். இம்மூர்த்தங்களில் ஐந்துமூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை.
1.நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
2. வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
3.வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.
4.ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.
5.அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும்,
மனநிறைவும் ஏற்படும்.
லிங்கம் உருவான சிவராத்திரி: சிவன் அபிஷேகப் பிரியர். சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்துக்குத் (வடிவம்) தான் அடி முடியில்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. இது சரியான வட்டமாக இல்லாமல், நீள் வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத் தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் (பாதை) நீள் வட்டமாகத்தான் இருக்கிறது, என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும், ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. அன்போடு பக்தி செய்து உருகினால், சிவன் விரைவில் அகப்பட்டு விடுவார். அன்பினால் மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால், அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல் தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து (உள் வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.
-காஞ்சிப் பெரியவர் விளக்கம்
சிவராத்திரி பிரார்த்தனை
சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
சிவனுக்குரிய விரதங்கள்:
சிவனுக்குரிய விரதங்கள்:
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு அவையாவன:
சோமவார விரதம்: திங்கட்கிழமை
திருவாதிரை விதரம்: மார்கழி திருவாதிரை
மகா சிவராத்திரி: மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம்: கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம்: பங்குனி உத்திரம்
பாசுபத விரதம்: தைப்பூசம்
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம்- தீபாளி அமாவாசை
பாவங்களில் எவற்றிற்கு மன்னிப்பு கிடையாது
பாவங்களில் எவற்றிற்கு மன்னிப்பு கிடையாது
இவ்வுலகில் மனிதராக பிறந்தோரில் பாவம் செய்யாதோர் மிகவும் குறைவு. அறியாமல் செய்த சில பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே கிடையாது. அவற்றிற்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைத்தே தீரும். பெண்ணின் கருவில் உள்ள ஏதுமறியாத சிசுவை அழித்தல், பெற்றோர்களுக்கு தவறு இழைத்தல், செய்நன்றி மறந்து தீமை செய்தல், பசுவைக்கொல்லுதல், கள் (மது) குடித்தல் ஆகிய பஞ்சமகா பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே இல்லை என புராணங்கள் குறிப்பிடுகின்றன.
வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது?
வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது?
ஆமைகள் நாம் குடியிருக்கும் வீட்டிற்குள் வரக்கூடாது, அதேபோல், ஆமை நுழைந்த வீடு உருப்படாது என்றெல்லாம் சொல்வதுண்டு. இதில் ஆமை என்பது ஏதோ ஒரு உயிரினத்தைக் குறிப்பதல்ல. கல்லாமை, இல்லாமை, பொறாமை போன்ற ஆமைகள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதைத் தான் இப்படி குறிப்பிட்டனர். தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஆமையாக மாறும்படிநம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஒருமையுள் ஆமைபோல் என்னும் குறளில் ஆமைபோல ஐம்புலனையும் அடக்கி ஆளச் சொல்கிறார். ஒருபிறவியில் இதனைக் கற்றுக் கொண்டால் ஏழேழு பிறவிக்கும் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார். எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க, தலை, முன்னங்கால்கள், பின்னங்கால்கள் ஆகிய ஐந்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது ஆமை. அதுபோல, கண், காது, மூக்கு, வாய். உடல் என்னும் ஐந்தையும் அடக்கி வாழ்பவன் வாழ்வில் உயர்வது உறுதி. ஆமையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் திருமால் கூர்மாவதாரம் எடுத்து தேவர்களைக் காத்தருளினார். அவரை வழிபட்டவர்க்கு மன அடக்கம், புலனடக்கம் ஆகிய நற்பண்புகள் ஏற்படும்.
உண்ண கூடாத உணவுகள் எவை?
உண்ண கூடாத உணவுகள் எவை தெரியுமா?
சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அவை .. கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்த சோறு, வரகு முதலான தான்யங்களினால் அமைந்தது, வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது, வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது, கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு, தீய்ந்து போனது, துணி, தும்மல் ஆகியவை பட்டது, நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது, ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உண்டிகள் தள்ளப்பட வேண்டியவை. மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள், ரோகமுடையவர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, ஸந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை.
வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்சீரையுரை தும்மலிவை பட்டசோறும்நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறுநாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.
இடது கண் துடித்தால் பலன் என்ன?
இடது கண் துடித்தால் பலன் என்ன?
இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதை ராமாயணத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். சீதையை தேடிச்சென்ற போது சுக்ரீவனை சந்திக்கின்றான் ராமன். அப்போது ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். இந்த நட்புக்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, அக்னியை வலம் வந்தனர்.
அப்போது சுக்ரீவன், `ராமா, நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,' என்றான். ராமனும் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தார். அந்த சமயத்தில், வேறு வேறு இடத்தில் இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது.
ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது என்பதை இது உணர்த்தியது. அடுத்து, வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. இதனால் ஆண்களுக்கு கெடுபலன் ஏற்படும்.
இதன்படி அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே தொடங்கி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். இதையே ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது
அறுபதாம் கல்யாணம் ஏன்
அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்
தானங்களும் அதற்கான பலன்களும்!
ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.
தானங்களும் - அதன் பலன்களும்
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்2. பூமி தானம் - இகபரசுகங்கள்3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி14. பால் தானம் - சவுபாக்கியம்15. சந்தனக்கட்டை தானம் - புகழ்16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்
கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை
கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எவை தெரியுமா?
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது. இடது கையினால் தண்ணீர் அருந்தக்கூடாது.
நாமே நல்ல நாள் பார்க்கலாம் எப்படி?
உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.
ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.
வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதிதிங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதிசெவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதிவெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்பிறை தேய்பிறைபஞ்சமி பிரதமைசஷ்டி அஷ்டமிசப்தமி நவமிசதுர்த்தசி தசமிபவுர்ணமி .....
பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும். அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.
ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரைதிங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரைசெவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரைபுதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரைவெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரைசனி 9 மணி முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...
கிழமை பகல் நேரம் இரவு நேரம்
ஞாயிறு 12.00-1.30 6.00-7.30திங்கள் 10.30-12.00 3.00-4.30செவ்வாய் 9.00-10.30 1.30-3.00புதன் 7.30-9.00 12.00-1.30வியாழன் 6.00-7.30 10.30-12.00வெள்ளி 3.00-4.30 9.00-10.30சனி 1.30-3.00 7.30-9.00
குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.
கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாதம் தேதிகள்
சித்திரை 6, 15வைகாசி 7, 16, 17ஆனி 1, 6ஆடி 2, 10, 20ஆவணி 2, 9, 28புரட்டாசி 16, 29ஐப்பசி 6, 20கார்த்திகை 1, 10, 17மார்கழி 6, 9, 11தை 1, 2, 3, 11, 17மாசி 15, 16, 17பங்குனி 6, 5, 19
வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.
தின ஓரையில் பயன்கள்: ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.
(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.
கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.