Saturday, December 2, 2017

வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்?

வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

 

 
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.
வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:
• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.
• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
தீபத்தின் வகைகள்:
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சித்ர தீபம்
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம்
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஆகாச தீபம்
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
ஜல தீபம்
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.
படகு தீபம்
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.
சர்வ தீபம்
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.
மோட்ச தீபம்
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
சர்வாலய தீபம்
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
அகண்ட தீபம்
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.
லட்ச தீபம்
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.
மாவிளக்கு தீபம்
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்