பல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் “சத்குரு ஏன் காசி யாத்திரை செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை? இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் – எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம். படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்” என்று சொல்லலாம். “காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் “காஸ்மாஸ்” என்றால் ‘ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டது’ என்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும். இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது. டெல்ஃபியில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த சாதனம் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரபஞ்சத்து உண்மையுடன் இணையவும், பிரபஞ்சத்துடன் ஒன்றாக இணைவதால் உண்டாகும் இன்பத்தையும், களிப்பையும், அழகையும் அறிவதற்கும் ஆன சாத்தியம், இந்த மனிதனுக்கு, இங்கே இருக்கிறது. வடிவியல்படி பார்த்தாலும், காசி, அந்த அண்டமும் இந்த பிண்டமும் சந்திப்பதற்கு சரியான அமைப்பில் உள்ளது. இந்த தேசத்தில், இது போன்றே பல சாதனங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு தியானலிங்கம் தியானலிங்கமும் அத்தகைய ஒரு அமைப்புதான். நமக்கு சில தடைகள் இருந்ததால், அண்டத்தின் சிறு பிரதிபலிப்பாக மட்டுமே தியானலிங்கத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. ஒருவர் விருப்பத்துடன் இருந்தால், தியானலிங்கம், எல்லையற்ற சாத்தியங்களை வழங்கத் தயாராய் இருக்கிறது. ஏனென்றால், உச்சபட்ச சாத்தியத்தை வழங்கக்கூடிய அற்புதமான சாதனமாக அது விளங்குகிறது. காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்? சிவன் காசியில் வாழ்ந்தார், என்ற நூறு சதவீத நம்பிக்கையின் அடிப்படையிலேயே, காசியின் புராணக் கதை விரிகிறது. காசி சிவனின் குளிர் வாசஸ்தலம். இமயத்தின் மேல் பகுதியில் அவர் கடுந்துறவியாக வாழ்ந்தார். ஆனால் அவர் ஒரு இளவரசியை மணமுடித்த பின்னர், சற்று சமரசம் செய்து கொள்ள வேண்டி இருந்தது. கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவரான சிவன் சமவெளிக்கு, காசிக்கு, குடிபெயர்வது என்று முடிவு செய்தார். அன்றைய காலகட்டத்தில் காசி பிரம்மிக்கதக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அற்புதமான கதையொன்று உள்ளது. சிவன் சில அரசியல் காரணங்களுக்காக காசியை விட்டு வெளியேறினார். காசி நகரம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றால் அதன் அதிர்வை இழந்துவிடும் என்று கடவுளர் அச்சப்பட்டதால் திவோதாசனை அரசனாக இருக்கும்படி பணித்தனர். ஆனால் திவோதாசனோ, “நான் அரசனாக இருக்க வேண்டுமென்றால், சிவன் காசியை விட்டு வெளியேற வேண்டும். அவர் இங்கு இருந்தால் நான் அரசனாக இருப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை, மக்கள் எந்நேரமும் அவரைச் சுற்றியே கூடிக் கொண்டிருப்பர்,” என்று ஒரு நிபந்தனை விதித்தார். இதனால் பார்வதியுடன் சிவன் மந்தார மலைக்கு சென்றார். ஆனால் அவருக்கு அங்கு தங்க விருப்பமில்லை. காசிக்கே திரும்பி வர விருப்பப்பட்டார். அதனால் முதலில் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் அங்கு சென்றனர், அந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அவர்கள் அவ்விடத்தை விட்டு திரும்பவில்லை. எனவே அவர்களைத் தொடர்ந்து 64 விண்ணுலக பெண்களை சிவன் அனுப்பி வைத்தார். அவர்களிடம், “எப்படியாவது அரசனைக் களங்கப்படுத்தி விடுங்கள். அவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு அவனை அங்கிருந்து வெளியேற்றி விடலாம்,” என்று சொல்லி அனுப்பினார். அவர்களும், அந்த நகரில் உள்ள சமூகத்தை களங்கப்படுத்தும் நோக்கத்துடன், உறுதியாக அங்கு காலூன்றினார்கள். ஆனால் அவ்விடம் அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே, தங்கள் நோக்கத்தை மறந்து அங்கேயே தங்கிவிட்டனர். அதன் பின் சூரிய தேவனை அனுப்பினார் சிவன். அவரும் அவ்விடத்தை மிகவும் விரும்பினார், அதனால் அங்கிருந்து திரும்பிச் செல்லவில்லை. இன்று நாம் காணும் அத்தனை சூரிய கடவுள் கோயில்களும் அவருக்காக உருவாக்கப்பட்டவைதான். சிவன் கட்டளையிட்ட பணியை நிறைவேற்ற முடியவிலலையே என்று சூரிய தேவன் பயந்து, வெட்கப்பட்டுப் போனார். ஆனால் தான் எடுத்துக் கொண்ட உறுதியைவிட அவருக்கு அந்த நகரம் மிகவும் பிடித்து போய்விடவே, தெற்கு நோக்கித் திரும்பி ஒரு பக்கமாக சாய்ந்தபடி, அங்கேயே தங்கிவிட்டார். சூரியனைத் தொடர்ந்து பிரம்மனை அனுப்பினார் சிவன். பிரம்மனுக்கும் அவ்விடம் பிடித்துப் போய்விட்டது, அவரும் திரும்பிச் செல்லவில்லை. இதனால், “நான் இவர்கள் யாரையும் நம்ப முடியாது,” என்று நினைத்த சிவன், தன் நம்பிக்கைக்குரிய இரண்டு கணங்களை அனுப்பி வைத்தார். இருவரும் வந்தனர், சிவனின் மக்களான இவர்களால் அவரை மறக்க இயலவில்லை. ஆனால் அவர்களுக்கும் அவ்விடம் மிகவும் பிடித்திருந்தது. “இதுதான் சிவன் வாழுவதற்கு உகந்த இடம், மந்தார மலை அல்ல,” என்று நினைத்த கணங்கள் அந்நகரத்திற்கு துவார பாலகர்களாயினர். இம்முறை சிவன் மேலும் இருவரை, கணேசருடன் இன்னொருவரை, அனுப்பினார். அவர்கள் இருவரும் அந்நகரத்தைக் கைக்கொண்டனர். சிவன் அங்கு வருவதற்காக அந்நகரத்தைத் தயார்படுத்தி, காவல் காத்த அவர்கள், எப்படியும் சிவன் இங்கு வந்துதான் ஆக வேண்டும், எனவே திரும்பச் செல்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்தனர். பின்னர், திவோதாசனும் முக்திக்காக ஆசையூட்டப்பட்டார். அவர் எந்தவிதமான களங்கத்திற்கும் ஆட்படவில்லை. ஆனால் முக்திக்கு ஆசைப்பட்டு முக்தியடைந்தார். பிறகு சிவனும் திரும்பி வந்தார். இக்கதைகள் எல்லாம் அவர்கள் இவ்விடத்தில் இருக்க எவ்வளவு ஏங்கினார்கள் என்பதனை குறிப்பதற்காக சொல்லப்பட்டவை. இங்குள்ள சுகங்களுக்காக அல்லாமல் இந்நகரம் வழங்கும் சாத்தியத்திற்காக அவர்கள் ஏக்கம் கொண்டனர். இந்நகரம் வெறுமனே வாழும் இடமாக இல்லாமல், ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து செல்ல வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. மிகச் சிறிய இந்த பிண்டம், பரந்த அந்த அண்டத்துடன் தொடர்பில் இருக்க வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. அன்பும் அருளும்,