எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள்
உனக்காய் இங்கே தவம் கிடந்தேன்
என் எலும்பும் தோளும் உடலும் தேய
என் உயிரை மட்டும் வைத்திருந்தேன்
நீ வருகின்ற வழியை பார்த்து பார்த்து
என் நீள விழியும் பூத்ததய்யா
எங்கே ராமன்? என கேட்டு கேட்டு
என் இதயம் தினமும் துடித்ததய்யா
உணவும் மறந்தேன் நீரும் மறந்தேன்
பஞ்சனை தூக்கம் நான் துறந்தேன்
நீ வருவாய் என்ற ஆசையில் மட்டும்
இதுவரை நானும் பிழைத்திருந்தேன்
உனக்காய் நானும் கனிகள் சேர்க்க
வனத்துள் கொஞ்சம் திரிந்திடுவேன்
அந்த நேரத்தில் நீ வந்திருப்பாய் என
மீண்டும் இருப்பிடம் திரும்பிடுவேன்
தினமும் இப்படி ஏமாந்தும் கூட
உன் மேல் பாசம் மட்டும் வளர்ந்ததய்யா
என் வளர்பிறை பாசம் முழு மதியாகி
உன் முகத்தில் இன்று ஒளிருதய்யா
கண்டேன் கண்டேன் உன் திருமுகம் கண்டேன்
என் ஆயுளின் பயனை நான் அடைந்தேன்
ஆனந்தப் பெருநிலை திளைக்க திளைக்க
என் ஆன்மாவும் உச்சிக்கு ஏறுதய்யா
இனிக்கும் கனிகளை கொடுக்கும் எண்ணத்தில்
உன் விருந்தை எச்சில் செய்திட்டேன்
மறு வார்த்தையின்றி நீ உண்டு முடித்ததில்
இது வரை அது பற்றி மறந்திட்டேன்
இதுவரை காத்த ஆச்சாரம் அனைத்தும்
பாசமிகுதியால் அழித்திட்டேன்
விருந்து முடிந்த நிலையில் இப்போது
செய்வதறியாது விழித்திட்டேன்
என் தவிப்பை பார்த்து ராமா நீயும்
குழந்தை போல சிரிக்கின்றாய்
ஆச்சாரத்தில் நான் கொண்ட பிடிப்பை
அழகாய் நீயும் கரைக்கின்றாய்
அன்பே ராமா உனை கண்டது போதும்
என் உள்ளம் நிறைகுடம் ஆனதய்யா
மனித பிறவியின் உச்சத்தை தொட்டேன்
இனி மனித பிறவி போதுமய்யா
உன் பேரை நானும் ஜபித்துக் கொண்டே
அக்கினி ஜ்வாலையில் இறங்கிடுவேன்
ஆத்ம ஸ்வரூபனை கண்ட மகிழ்ச்சியில்
ஆத்ம ஸ்வரூபம் பெற்றிடுவேன்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
சபரிமூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...
ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?
ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.
சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.
மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில்’ வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்” என்று கூறினார்.
முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.
பம்பாநதி தீரத்தில் வாழ்ந்த சபரியைப் பற்றி பின்வரும் தகவலும் வழக்கிலுள்ளது. ஒருமுறை சில முனிவர்கள் சபரியை தம் காலால் உதைத்ததால் பம்பாநதி முழுவதும் பருக உதவாதவாறு கெட்டது. இராமபிரானை தரிசித்து அவர் பாதம் வணங்கி நின்ற சபரியை நோக்கி இராமபிரான் “அம்மா அடியேன் உனக்கு என்ன வரம் அளிக்க வேண்டும்? என்று கேட்க, அதற்கு சபரி, தேவரீர் பம்பாநதி முழுவதும் பருக உதவாது அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் என்றாள்”
இராமபிரான் தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் அது தூய்மையாகிவிட வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே நீராடி வரும்படி திருவாய்மலர்ந்தருளினார். கருணைக்கடல் இராமபிரானின் எண்ணப்படி சபரியும் நீராட பம்மைநதியும் சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. பம்பையில் நீராடி பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தருமசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். இதயத்தை பரம்பொருளில் ஏற்றி இராமபிரானை துதித்த வண்ணமே யோக சமாதியில் மூழ்கி சபரி வீடு பேறு பெற்றார்.