Monday, March 26, 2012

எலுமிச்சம்பழ மாலை


எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.

பில்வாஷ்டகம் பொதுப் பொருள்:

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்
-பில்வாஷ்டகம்
பொதுப் பொருள்: வில்வ இலை மூன்று இதழ்களைக் கொண்டது. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிப்பவை. பரமசிவனின் மூன்று கண்களையும் இவை நினைவுபடுத்துகின்றன. பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன். காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன். மகாதேவனே, உமக்கு நமஸ்காரம்.

Wednesday, March 21, 2012

கோயிலுக்கு சென்று தேங்காய்உடைத்து வீட்டுக்கு எடுத்து வந்தால்


தேங்காயை கவிழ்த்து போடுங்க!
கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வீட்டுக்கு எடுத்து வந்தால் அதை கவிழ்த்து போட வேண்டும். நேராக வைப்பதை அமங்கலமாக முன்னோர் கருதினர். ஒருவர் இறந்து விட்டால் தேங்காய் உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி நிமிர்த்திய நிலையில் தீபமேற்றுவது வழக்கம். அதைப் போல பிரசாதக்காயை நிமிர்த்தி வைக்கக்கூடாது. இதில் ஒரு அறிவியல் தத்துவமும் உண்டு. உடைத்த தேங்காயை பூச்சிகள், பல்லிகள் முகர்ந்து பார்க்கும். இதனால் நோய்க்கிருமிகள் பரவும், நம் முன்னோர் உணவுப் பொருட்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கச் சொன்னதன் காரணம் நம்மை நோயில் இருந்து காத்துக் கொள்ளத்தான்.

Saturday, March 17, 2012

வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடி


பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,""டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,'' என்றார்.
"ஆஹா...இப்படி ஒரு வேலையா?' பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்... மகிழ்ந்தான்...
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

ஏழை மக்களை நேசிக்க வேண்டும்-காஞ்சிப்பெரியவர்

காஞ்சிப்பெரியவர், சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார். வேதவிற்பன்னர்கள், இசை வல்லுனர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். அனைவருக்கும் பரிமாறியது போக, மீதமுள்ள உணவு கடற்கரை குப்பத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டது.
பிறகு பெரியவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். வாசலில் இருந்த குப்பத்தைச் சேர்ந்த ஒருவர், பெரியவரிடம், ""சாமீ! நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா?'' என்று கேட்டார். பெரியவர் புன்முறுவல் மட்டும் செய்தார்.
மறுநாள் விடிந்த போது பெரியவரைக் காணவில்லை. சீடர்கள் எங்கு தேடியும் பயனில்லை. காலை 8 மணிக்கு அவராகவே வந்து விட்டார். எல்லாரும் ஆச்சர்யத்தில் மூழ்கி அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
""நேற்று குப்பத்து மக்கள் அழைத்ததன் பேரில் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன்,'' என்றார்.
""நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ இல்லையோ, அவர்கள் என் வருகையை மிகவும் விரும்பினர். எளிமையான அவர்களை நேசிக்க வேண்டும். நம் உடம்பில் ஓடுவது போல, அவர்கள் உடம்பிலும் ரத்தம் சிவப்பாகத் தான் ஓடுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேட்டி, புடவை, பழங்கள் வழங்கவேண்டும்,'' என்றார். அதன்படி ஏற்பாடும் நடந்தது.
ஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.

தெரியாமல் செய்த தவறுக்கு இறைவனின் சந்நிதானத்தில் மன்னிப்பு உண்டு


கவுதம முனிவரின் மனைவி அகலிகை. பேரழகியான இவள் மீது இந்திரன் ஆசைப்பட்டான். கவுதமர் அதிகாலையில் சேவல் கூவியதும், நீராட ஆற்றுக்குச் செல்வது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், சேவலாய் வடிவெடுத்து, ஒருநாள் நடுநிசியிலேயே கூவ, கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். இந்திரன், தன் வடிவை கவுதமர் போல மாற்றிக் கொண்டு, குடிலுக்குள் வந்து, ""இன்னும் விடியவில்லை, சேவல் தவறாகக் கூவியிருக்கும் போல' என்று சொல்லி, அகலிகையுடன் தனித்திருந்தான். அவள் கற்பிழந்தாள்.
திரும்பி வந்த கவுதமர் நடந்ததை அறிந்து, அவளைக் கடிந்து கொண்டார். கல்லாகப் போகும்படியும், ராமனின் கால்பட்டால் தான் விமோசனம் என்றும் சொல்லி விட்டார். ராமனும் வந்தார். கால் பட்டது. அகலிகை எழுந்தாள்.
கற்பிழந்த ஒருத்தியை ஏற்றுக்கொள்ள கவுதமருக்கு தயக்கம். ""உருவம் ஒன்றாக இருந்தாலும் கணவனுக்கும், இன்னொருவனுக்கும் ஸ்பரிச பேதம் தெரியாத இவளை நான் எப்படி ஏற்பது?'' என்றார்.
உடனே ராமன்,""கவுதமரே! முக்காலமும் உணர்ந்த ஞானியான நீரே, கூவியது உண்மைச் சேவலா, பொய்ச்சேவலா எனத்தெரியாமல் சந்தியாவந்தனத்துக்கு கிளம்பிச் சென்றீரே! அப்பாவியான, இவள் உமக்கும், அவனுக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி அறிவாள்?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
முனிவரால் பதில் சொல்ல முடியவில்லை. அகலிகையை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் செய்த தவறுக்கு இறைவனின் சந்நிதானத்தில் மன்னிப்பு உண்டு.

கடவுளின் கையில் தான் இருக்கிறது.


மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது நல்ல கடமையாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற முடிவு, கடவுளின் கையில் தான் இருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிலருடன் ஆன்மிகம் குறித்த விவாதம் ஏற்பட்டது. ""கடவுள் நினைப்பதே நடக்கும், நம்மால் எதுவும் செய்ய முடியாது,'' என்று வாதிட்டார் சுவாமிஜி. இதை இரண்டு பயணிகள் மறுத்தனர். சுவாமிஜி, தன் கருத்தில் உறுதியாக நிற்கவே, ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
""உம்மை தூக்கி கடலில் எறிகிறோம், உமது கருத்து சரியானால், கடவுள் உம்மைக் காப்பாற்றட்டும்,'' என்றபடியே, அவரருகே சென்று தூக்க முயன்றனர். ஆனால், மனபலம் மிக்க சுவாமிஜி, இருவரையும் சேர்த்துக் கட்டி தூக்கினார். கடலுக்குள் வீச முயற்சிக்கையில், ""மன்னியுங்கள்! மன்னியுங்கள்! நீர் சொன்னது சரி தான்! விட்டு விடுங்கள்!'' என்று கதறினர்.
அவர்களை சுவாமி விட்டு விட்டார்.
""இப்போது சொல்லுங்கள், என்னை கடலில் எறிய முயன்றது நீங்கள். ஆனால், உங்களை நோக்கியே அந்த அஸ்திரத்தைத் திருப்பினார் கடவுள். அது மட்டுமல்ல! உங்களை நான் கடலில் எறிய முயன்றேன். அதை உங்கள் கெஞ்சல் மூலம் தடுத்து நிறுத்தியதும் அவரது சித்தமே!'' என்றார்.
அவர்கள் வாய் திறக்காமல் சென்று விட்டனர்.

ஆமையாக மாறும்படி நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார்--திருவள்ளுவர்,

ஆமை நுழைந்த வீடு உருப்படாது' என்று சொல்வதுண்டு. கல்லாமை, இல்லாமை, பொறாமை போன்ற ஆமைகள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதைத் தான் இப்படி குறிப்பிட்டனர். தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஆமையாக மாறும்படி நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். "ஒருமையுள் ஆமைபோல்' என்னும் குறளில் ஆமைபோல ஐம்புலனையும் அடக்கி ஆளச் சொல்கிறார். ஒருபிறவியில் இதனைக் கற்றுக் கொண்டால் ஏழேழு பிறவிக்கும் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார். எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க, தலை, முன்னங்கால்கள், பின்னங்கால்கள் ஆகிய ஐந்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது ஆமை. அதுபோல, கண், காது, மூக்கு, வாய். உடல் என்னும் ஐந்தையும் அடக்கி வாழ்பவன் வாழ்வில் உயர்வது உறுதி. ஆமையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் திருமால் கூர்மாவதாரம் எடுத்து தேவர்களைக் காத்தருளினார். அவரை வழிபட்டவர்க்கு மன அடக்கம், புலனடக்கம் ஆகிய நற்பண்புகள் ஏற்படும். 

கந்த சஷ்டி கவச விளக்கம்


கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள் தன் உடல் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.
அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர், நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுத்தலும் அண்டாது வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீறழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிருக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்ப்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
அப்பப்பா எத்தனைவிதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும். பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப்பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரிவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டை ஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டிகவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள், சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள், வேலனைப் போற்றுங்கள்

பக்தி



ராமருக்கு சபரி கொடுத்த கனி, கிருஷ்ணருக்கு விதுரர் கொடுத்த கஞ்சி, குசேலர் கொடுத்த அவல் இவை எல்லாம் சாதாரண பொருட்கள் தான். ஆனால், அதை விருப்பத்தோடு ஏற்று இறைவன் உண்டு மகிழ்ந்தார். பலம் கொண்ட வானரப்படை சேதுக்கரையில் இலங்கைக்கு பாலம் கட்ட முயன்றபோது, அப்பணியில் சிறு அணிலும் சேர்ந்து கொண்டது. அன்பான அதன்
சிறுபணியையும் ராமன் ஏற்றார். இதையே கீதையில் கிருஷ்ணர், ""பக்தியோடு கொடுக்கும் சிறு இலை, பூ, கனி, நீர் எதுவானாலும் விருப்பத்தோடு ஏற்று மகிழ்கிறேன்,'' என்று குறிப்பிடுகிறார். நாம் கொள்ளும் பக்தி என்பது கைப்பிடி அளவு தான் என்றாலும், மலை போன்ற கடவுள் நம் வசப்படுவார். இதனை வள்ளலார் திருவருட்பாவில், "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்னம் போல வாழப் பழகினால் நல்லது


ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வீட்டில் ஏதாவது நன்மை நடந்தால், "பிள்ளை யோகாம்சத்தோடு பிறந்திருக்கு' என்று பெருமை பேசுவதுண்டு. இதுபோல ஆன்மிகத்திலும் ஒரு அம்சம் இருக்கிறது. அன்னப்பறவையைக் குறிக்கும் "ஹம்சம்' என்ற வடசொல்லே தமிழில் "அம்சம்' ஆனது. ஞானத்தை வழங்கும் கலைமகளின் வாகனம் அன்னம். அம்சவல்லி, அம்சவாகினி என்ற சிறப்புப் பெயர்களும் கலைமகளுக்கு உண்டு. பாலையும், நீரையும் கலந்து வைத்தாலும் அன்னம், பாலை மட்டும் உண்ணும் தனித்தன்மை கொண்டது . வாழ்வில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதே அன்ன வாகன தத்துவம். ஞானிகளை அன்னத்தோடு ஒப்பிடுவர். விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணரின் முழுப்பெயர் ராம கிருஷ்ண பரமஹம்சர். அன்னம் போல வாழப் பழகினால் நல்ல அம்சங்கள் வாழ்வில் தென்படத் தொடங்கும்.

** அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?


** அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா?

நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.

* சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?

கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!

ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி?

இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?

எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

Thursday, March 15, 2012

கர்மவினை


கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம்,திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை,ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவயோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!

சமாதி என்பது


பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகக் கூற்றுப்படி சமாதி என்பது ஆதிக்கு சமமாதல் என் று பொருள்படுகிறது.அதாவது பார்ப்பவன்,பார்க்கப்படும் பொருள்,பார்த்தல் என்ற   செயல் மூன்றும் ஒன்றாகிய நிலை சமாதி ஆகும்.

மேலும் சமாதி எனும் சொல் ஒரு யோகியினுடைய உணர்வுடன் கூடிய ஒடுக்க நிலையையும் குறிக்கிறது.இதன்படி சமாதிக்குச் செல்லும் யோகி தன்னுடைய ஒடுக்க நாளை முன்கூட்டியே தெரிவிக்கிறார்.அதாவது தன்னுடைய யோக பலத்தால் தன் சமாதி நாளைத் தானே அறிவித்து,தன்னை சமாதியில் இருத்திக்கொள்ளுதல் ஆகும்.


சாதாரண மரணத்தில் உடம்பில் இருந்து கழிவுகளாக மலம்,மூத்திரம்,விந்துநாதம் வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும்.ஆனால்,சமாதியடையும்போது இவ்வகைக் கழிவுகள் வெளிவராமல் உயிர்ச் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் ஒடுங்கிவிடும்.யோகியினுடைய உடல் இயக்கமும்,மன இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்.இந்த உடம்பு மற்ற உடம்பைப் போல மண்ணில் அழியாது;காலா காலத்திற்கும் காக்கப்படும்.

1.நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற மறுபிறப்பற்ற நிலை : உதாரணம்:போகர்

2.விகற்ப சமாதி:மனதில் இருமை நிலையோடு கூடிய சமாதி .மறுபிறப்புக்கு வழியுண்டு.

3.சஞ்சீவினி சமாதி:உடலுக்கு சஞ்சீவித் தன்மையை மண்ணிலும்,மனதின் சஞ்சீவித் தன்மையை விண்ணிலும் கொடுக்கும் நிலை.மறுபிறப்பில்லாத நிலை.உதாரணம்:சந்த ஞானேஷ்வர் சமாதி,ஆலந்தி,பூனா.


4.காய கல்ப சமாதி:சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் சமாதி நிலை.மறுபிறப்புக்கு வழியுண்டு.சமாதி அடைந்த யோகி நினைத்தால் மீண்டும் அவ்வுடலுக்கு வர முடியும்.உதாரணம்:சச்சிதானந்தர் சமாதி,சச்சிதானந்தர் ஆசிரமம்,கொடுவிலார்பட்டி,தேனி மாவட்டம்.
5.ஒளி சமாதி அல்லது ஒளி ஐக்கியம்: யோகியானவன் தொடர்ச்சியான யோகப்பயிற்சியின் மூலம் பருவுடலை ஒளி தேகமாக ஆக்கி,உடல் சூட்டினை அதிகரித்து இந்தப்பருவுடலை பூமிக்குக் கொடுக்காமல் ஒளியாக்கி மறைந்துவிடுதலே ஒளி சமாதி ஆகும்.


உதாரணம்:காக புஜண்டரின் ஒளி ஐக்கியம்.இந்த சித்தர் பருவுடல் தாங்கி பூமியில் இருப்பார்;பூமியில் நீர்,நெருப்பு,காற்று,நிலநடுக்கம் என்று பிரளயம் வந்தால் காக உருவம் தாங்கி மரங்களிலும் வாழ்வார்.நீர்ப்பற்றாக்குறை,கடும் வறட்சியால் மரங்களும் அழிய நேர்ந்தால் ஒளியாகி,அவிட்ட நட்சத்திரமாகி வாழ்வார் என சித்தர் பாடல்கள் 

பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள்


சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.
“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்) இச்சொல் உணர்த்துகிறது.
இதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.
பைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21

 சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம்.

1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.



2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.


3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.


4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.

6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.


8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.


9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.

10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.


11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.


12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)

E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)


13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.


14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.


15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே


16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.


17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.






1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.



2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.


3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.


4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.


5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)

6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி

B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை

செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி