விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்திஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக அந்த நாளை விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் கணபதியை வணங்கி விட்டு தான் தொடங்குவார்கள்.
அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில் பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு, நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.
அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.
அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
*கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
*இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
*உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
*திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!
*பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.
காதலை நிறைவேற்றிய கணபதி: விநாயகர் தன் தம்பி முருகப்பெருமானின் காதலை நிறைவேற்றி திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமாலின் கண்மலரில் தோன்றிய சுந்தரவல்லி சரவணப் பொய்கையில் நீராடி முருகனையே தன் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்து வந்தாள். நீ வள்ளிமலையில் பிறந்து என்னை வந்து அடைவாய் என்று அருள்புரிந்தார் முருகன். வள்ளிமலையில் பிறந்து வளர்ந்த வள்ளி மீது முருகன் காதல் கொண்டு விளையாடல் புரிந்தார். வேடன், கிழவன் என பல வடிவத்தில் வந்து இறுதியில் தன் அண்ணன் விநாயகரை யானையாக வரும்படி அழைத்தார். விநாயகர் யானையாக வந்தார். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளிநாயகி முருகனைத் தஞ்சம் அடைந்தாள். முருகன் வள்ளியை மணந்து அருள்பாலித்தார். ""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' என்று இந்நிகழ்வினை திருப்புகழில் தெளிவுபடுத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்.
குழந்தைகளின் கல்வி வளர...: குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பு, விநாயகப்பெருமான் முன்னால் நின்று இந்த எளிய ஸ்லோகத்தை சொன்னால் விநாயகர் மிகச்சிறந்த கல்வி நலனைத் தருவார்.
""மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!!''
இதை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடலாம்.
பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.
அவ்வை பாடிய அகவல் : விநாயகருக்குரிய துதிப்பாடல்களில் விநாயகர் அகவல் மிகவும் பிரசித்தமானது. அவ்வையார் பாடிய இந்நூல் எழுந்த வரலாறு சுவையானது. அறிவின் வடிவாக விளங்கிய ஞான மூதாட்டி அவ்வையார். இவர் நாளும் விநாயகரை வழிபாடு செய்யும் இயல்புடையவர். ஒருநாள் சுந்தரர் யானை மீதும், சேரமான்பெருமாள் நாயனார் குதிரை மீது கயிலைக்குச் செல்வதை அறிந்தார். அவர்களுடன் தானும் கயிலை விரைவாகச் செல்ல எண்ணி வேகமாக விநாயகருக்கு பூஜை செய்தார். விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "அமைதியாகப் பூஜை செய்வாயாக; அவர்களுக்கு முன்பாக கயிலைப்பதியை அடையச் செய்கிறேன்' என்று அருள்புரிந்தார். விநாயகரின் அருள்மொழி கேட்ட அவ்வையார் அவர் மீது பாடிய பாடலே விநாயகர் அகவல் என்பதாகும். உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி பரவசத்துடன் நின்ற அவ்வையாரை ஒரு நொடிப் பொழுதினில் தன் துதிக்கையால் கொண்டு சேர்த்தார். நாமும் விநாயகர் அகவல் பாடி ஐங்கரனின் அருள் பெறலாம்.
விநாயகருக்கு படைக்க வேண்டியவை
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.
கரும்பு: இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
திருநீற்று தொட்டி விநாயகர் : மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வீற்றிருக்கும் விபூதி விநாயகரை, திருநீற்றுப்பிள்ளையார் என்று அழைப்பர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருநீற்றின் பெருமையைப் பாடுகிறார். இவ்விநாயகருக்கு என்று அர்ச்சகர்கள் கிடையாது. பொற்றாமரைக்குளத்தில் கை, கால் தூய்மை செய்து, நாமே இவருக்கு நம் கையாலேயே திருநீற்றினை அபிஷேகம் செய்யலாம். தொட்டியில் வீற்றிருக்கும் இவ்விநாயகரின் மீது திருநீற்றினை இட்டு, அவரது பாதம் பணிந்து பூஜிப்பவர்களின் வினைகளைப் போக்கி அருள்கிறார்.
எலியின் மீது யானை: யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய பிராணியின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும் பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிற்றைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்