… மாயர்களுக்கும் நமக்கும் உள்ள 100 தொடர்புகளை நண்பர் ஒருவர் ஒரு வலைத்தளத்தில் எழுதி இருந்தார் அவற்றை தொகுத்து உங்களுக்கு அளிக்கிறேன் .
கலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.மாயா மக்களும்
இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.
பல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.
நாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.
மயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்.
மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.
மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்!
மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.
நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர்.
பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.
நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.
சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.
மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).
இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.
. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.
கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.
. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.
. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.
. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!
பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.
தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.
நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.
பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.
அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா? என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.
மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.
நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும்.
மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.
மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.
மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக) என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.
மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.
மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நாமகரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.
இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.
. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.
மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.
வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.
இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.
டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.
மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.
. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.
.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர்? ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர்? இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர்? ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர்? உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர்? ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார்? எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன்? ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார்? ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர்? ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி? இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.
மாயாக்களுமிந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.
. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.
இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.
இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.
இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.
.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.
கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.
பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.
மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.
பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.
. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.
பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.
.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது
.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.
இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.
. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.
குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.
தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.
ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.
“சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.
தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.
திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.
மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்
மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.
போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.
இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.
. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் தடயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் !!
. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.