Thursday, June 30, 2011

யோகாவும், பரதமும்.



பல விலங்குகளின், அங்க அசைவுகளை அடிப்படையாக வைத்து பல உடல் அசைவுகளை கண்டுபிடித்து, அவற்றுக்கு ஆசனங்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
இந்த அங்க அசைவுகளை மேற்கொள்வதன் மூலம்,உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களும், புத்துணர்வு அடைந்து, நோய் வருமுன் உடலைக் காப்பதோடு,நோய் வந்தால்,அதை குணப்படுத்தவும் செய்கின்றன.இந்த யோக சாதன முறைகளை அட்டாங்க யோகம் என்று வகைப்படுத்தி குறிப்பிடுவர்.அதாவது எட்டு வகையான யோக சாதன படித்தரங்கள் உள்ளன.
அதில் முக்கியமானவை யம, நியம, அனுஷ்டானம் என்பவை.யமம் என்றால் எவையெல்லாம் எமன் நம்மிடம் வரும் வழியோ அவைகளை செய்யாமல் இருப்பது.அதாவது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பது.இதையே திருப்பாவையில் ஆண்டாள் தன் பாசுரத்தில் ''செய்யாதன செய்யோம்''

என்கிறார். 
நியமம் என்பது எவைகளெல்லாம் செய்யக்கூடியவைகளோ அவைகளை அனுதினமும் செய்வது.அனுஷ்டானம் என்பது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடியவைகளைச் செய்வதுமான பழக்க,வழக்கங்களை பழக்கத்திற்கு கொண்டு வருவது.
இதன்மூலம் உடலை நோயை அணுகவிடாது காத்து வந்துள்ளனர்.உடலை சுத்தப்படுத்தும் முறைகளான பிரணாயாமம், பஸ்தி, குடல் சுத்தம், உடல் சுத்தம் (குளியல்) , விரதங்கள்(குடலுக்கு வாரத்தில் ஒரு நாளோ இரு நாட்களோ, உண்ணாமல் நோன்பிருப்பது),

இதையே வட மொழியில் ''லங்கணம் பரம ஔஷதம்'' என்பார்கள்,அதாவது பட்டினியே சிறந்த மருந்து என்பார்கள்.

 எனவேதான் தந்தை இறந்தபின், அவர் மக்கள் அமாவாசை விரதம் அனுஷ்டிக்கின்றனர்.அதாவது இன்று வரை உன்னைக் காக்க உன் தகப்பன் இருந்தார். இன்று முதல் உன்னை இந்த விரதம்தான் காக்கும் என்று பொருளாகும்.
சந்திரன் உடல் காரகன்,சந்திரனின் சக்தி பரிபூரணமாக இல்லாத அமாவாசை திதியில் உடலின் சீரண சக்தி குன்றும். அப்போது நீங்கள் உண்ணா நோன்பிருந்தால், உடல் தன் சோர்விலிருந்து விடுபடும். எனவே இந்த விரதத்தை தகப்பன் இல்லாதவர்கள் மட்டுமல்ல, பக்கத்தில் பெற்றோர் இல்லாத சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும், இந்த அமாவாசை விரதம் இருக்கலாம்.இது பெற்றோர் உடனிருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்குச் சமம்.
அட்டாங்க யோகத்தைப் போலவே பரதமும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.வலது பக்க செயல்பாடும் இடது பக்க செயல்பாடும் ஒன்றாக்கப்படுவதே இதன் சிறப்பு.
அதாவது வலது பாகம் சிவ பாகம், இடது  பக்கம் சக்தி பாகம்.இவை ஒன்றாக இரு பக்கமும் இயக்கப்படும் போது மூளையில் உள்ள வெள்ளை நிறப் பொருளும்சாம்பல் நிறப் பொருளும் நன்கு இயக்கம் பெறுகின்றன.இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீர்பெறுகிறது.அதாவதுசீராக்கப்படுகிறது.

தூக்கம்


 
ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.


திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.


தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்

உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே.
          -அகத்தியர்-

உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.



உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.



வள்ளலார் இதை

பசித்திரு!

தனித்திரு!

விழித்திரு!

பசி ஒரு திரு(திரு என்றால் செல்வம்),தனித்திரு (தனிமையாக இருப்பது ஒரு செல்வம்,இதையே அவ்வையார் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று தனிமையைப் போற்றுகிறார்),விழித்திரு(விழிப்போடு இருப்பது ஒரு செல்வம்).



பசியோடு இருந்தால் தூக்கம் வராது,விழிப்போடு இருப்பதான செல்வம் தானே வரும்.தனிமையான செல்வத்தை ஏற்படுத்திக் கொண்டு இறையை தியானம் செய்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.(இதையே அவ்வையார் அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் என்கிறார்)



எனவே தூக்கத்தை குறைக்கும் வழி அறிந்து குறைத்தால் மூச்சு விரயம் குறைந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

பீமபாகம்,நள பாகம்


உணவு சமைத்தலில் பீமபாகம்,நள பாகம் ,  என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
பீம பாகம் என்பது சூரிய வெப்பத்தினாலும் , பூமியின் உஷ்ணத்தினாலும்,இயற்கையான முறையில் உணவில் உள்ள சத்துக்கள் கெடாமலும் , சமைப்பதே ஆகும்.இயற்கை சித்த உணவில் இந்த சூரியவெப்பமும் , பூமியின் உஷ்ணமும் ஆக்கும் சக்தி என அழைப்பர்

நள பாகம் என்பது நெருப்பால் உணவை பக்குவம் செய்து சமைப்பது. இது உணவை மேலும் கேடடையச் செய்வதோடு சத்துக்களை வீணாக்கும் .உணவின் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் .இயற்கை சித்த உணவில் நெருப்பை அழிக்கும் சக்தி என அழைப்பர் . 

 இவை இரண்டும்தானே தாவரங்களையும் இந்த உலகத்தையும் இந்த இரண்டு வெப்பமும்தான் உருவாக்கி காத்து வருகிறது . இந்த முறையில் சமைக்கும்போது உணவு கருகுவதில்லை .

ஆன்மிக கதைகள் 115


ஆன்மிக கதைகள் 114காண்டீபம் கிடைத்தது எப்படி?

அர்ஜுனன் என்றதும் அவனது கையிலுள்ள வில் நினைவுக்கு வரும். வில்வித்தையில் மிகவும் உயர்ந்தவன் அர்ஜுனன். இந்த வில்லின் பெயர் "காண்டீபம்'. இதனால் அர்ஜுனனுக்கு "காண்டீபன்' என்ற பெயர் உண்டு. இதைக் கொண்டே அவன் குரு÷க்ஷத்ர யுத்தத்தில் கவுரவர்களை வென்றான். இந்த காண்டீபம்
அவனுக்கு கிடைத்தது எப்படி தெரியுமா? சுவேதன் என்ற மகாராஜா சில கோரிக்கைகளுக்காக நூறு ஆண்டுகள் ஒரு யாகம் செய்தான். யாகத்தீயில் நெய் விடப்பட்டது. தீக்கடவுளாகிய அக்னிதேவன் இதைக் குடித்து குடித்து மந்தகதியாகி விட்டான். மந்தநோய் தீர வேண்டு மானால், தனது ஆக்ரோஷத்தை (வெப்பத்தை) யார் மீதாவது காட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.
அவன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு, அர்ஜுனனிடம் வந்தான். ""அர்ஜுனா! எனக்கு பசிக்கிறது. உணவு தாயேன்,'' என்றான். அவன் நெருப்புக்கடவுள் என்பதை அறியாத அர்ஜுன னும் உணவளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டான். ""எனக்குரிய உணவு காண்டவவனத்தில் இருக்கிறது,'' என அந்தணர் கூறவே, அந்த வனத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அக்னிதேவன் தன்னிடமிருந்த பிரம்ம தனுசுவாகிய காண்டீபத்தையும் ( பிரம்மனால் வழங்கப்பட்ட வில்), வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழியாத தேர் ஒன்றையும் கொடுத்தான். கண்ணபிரான் தேர் செலுத்த, அர்ஜுனன் அதில் ஏறிச்சென்றான். இந்திரனுக்குச் சொந்தமானது அந்த வனம். அதைக் காக்க அர்ஜுனனுடன் இந்திரன் போராடினான். ஆனால், அவனை வென்ற அர்ஜுனன் அந்தக் காட்டில் இருந்த அரக்கர்களையும் கொன்றான். பின்னர், அந்தணர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காண்டவ வனத்திற்குள் நுழைந்தான். தீப்பற்றி எரிந்தது. அந்தக் காட்டை தனக்கு உணவாக்கிக் கொண்டான் அக்னி. இப்படியாக, அர்ஜுனனுக்கு பெயர் சொல்லும்படியான ஒரு ஆயுதம் கிடைத்தது.

ஆன்மிக கதைகள் 113சூர்ப்பனகை பிறந்த கதை

ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி அவனை உசுப்பேற்றியவள். முற்பிறப்பில் இவள் ஆனந்த குரு என்பவளுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்தகுருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி ஒருதலைப்பட்சமாகக் காதலித்தாள். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள்.
"""பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டான். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, ""தர்மம் அழிந்து விட்டதா?'' எனக் கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். ""சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்,'' என்றான். Œங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே சூர்ப்பனகை எனப் பெயர்பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து அவளது மூக்கை அறுத்தான். பாவம் செய்தவன் தண்டனை அனுபவித்தே தீருவான். புரிகிறதா!

ஆன்மிக கதைகள் 112கை கொடுத்த தெய்வம்

சோழநாட்டில் முருகபக்தி மிக்க வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு நீண்ட நாளாகக் குழந்தைப் பேறு இல்லை. மழலைச் செல்வம் வேண்டி, முருகனுக்குரிய சஷ்டிவிரதம் இருந்தார். விரதத்தின் பயனாக, வணிகரின் மனைவி கருவுற்றார். நல்லதொரு வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமி போல் பெண்குழந்தை பிறந்தது. வணிகரும், அவருடைய மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கந்தசஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தை என்பதால் முருகனின் பெயரால்"முருகம்மை' என்று பெயர் சூட்டினர். முருகம்மைக்கு பக்தியுணர்வு இயல்பாகவே அமைந்தது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை "முருகா' என்ற திருநாமம் அவள் நாவில் ஒலித்துக் கொண்டே இருந்தது. முருகபக்தி அவள் உணர்விலேயே கலந்து விட்டது. கன்னிப்பருவம் அடைந்த முருகம்மைக்கு மாப்பிள்ளை பேசிமுடிக்கலாம் என்று வணிகர் முயற்சித்தார். ஆனால், முருகம்மையை ஊரார், ""அவள் எந்நேரமும் முருகா சொல்லும் பைத்தியமாயிற்றே!'' என்று வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் எல்லாம் சொல்லி விட்டனர்.
ஆனால், பக்கத்து ஊரில் வாழ்ந்த தனஞ்செயன் என்னும் இளைஞன் முருகம்மையின் பக்தியைக் கண்டு வியந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். உறவினர்கள்
முருகம்மையை மணம் செய்ய வேண்டாம் என்று தடுத்தும் தனஞ்செயன் கேட்கவில்லை.
மகிழ்ச்சியுடன் வணிகன் முருகம்மைக்கு சீதனம் தந்து, தனஞ்செயனுக்கு மணம் செய்து வைத்தான். கணவனும் மனைவியும் அன்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், தனஞ்செயனின் தாயும், தங்கையும் முருகம்மை மீது வேண்டாத வெறுப்பையும், கோபத்தையும் காட்டிவந்தனர். இவ்விஷயத்தை தனஞ்செயன் அறியாமல் இருந்தான். இந்நிலையில், தனஞ்செயனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. "திரைகடலோயும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கேற்ப, வெளிநாடு சென்று சம்பாதிக்க அவன் முடிவெடுத்தான். ""முருகம்மா! கலங்காதே! செல்வம் தேடுவது தான் நம் குலதர்மம். விரைவில் பெரும்பொருள் தேடிக் கொண்டு நாட்டிற்கு வந்து விடுவேன். அதோடு கூட, நம் வீட்டுப்பணிகளைச் செய்ய முருகன் என்றொரு பணியாளை அமர்த்தியுள்ளேன். இனி முருகன் தக்க துணையாக இருந்து வீட்டைக் காவல் செய்வான்!'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினான். கணவனையே எப்போதும் மனதில் எண்ணிக் கொண்டு உண்ணாமலும், உறங்காமலும் முருகம்மை வாழ்ந்தாள். அவள் உதடுகள் "முருகா' என்ற
திருநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தது. வேலைக்காரன் முருகன், "முருகா' என்ற பெயரைக்
கேட்டதும், ""அம்மா கூப்பிட்டீர்களா?'' என்று ஓடோடி வருவான். ""அம்மா! கவலைப் படாதீர்கள்! பொருள்தேடிவிட்டு சீக்கிரம் உங்கள் கணவர் வந்துவிடுவார்'' என்று ஆறுதல் சொல்வான். பொறாமை கொண்ட நாத்தனாரும், மாமியாரும் வேலைக்காரன் முருகனுடன் முருகம்மை தகாத உறவு வைத்திருப்பதாக எண்ணிக் கொந்தளித்தனர். ஓராண்டு சென்று விட்டது. தனஞ்செயன் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்தான். தன் மனைவி முருகம்மையைக் கண்டு மகிழ்ந்தான். மழைமுகம் காணாத பயிர் மீது மழைத்துளி விழுந்தது போல முருகம்மை தன் கணவனை அணைத்துக் கொண்டாள்.
தனஞ்செயனின் தாயும் தங்கையும் அவனிடம், ""முருகம்மை, வேலைக்காரன் மீது கொண்ட மோகத்தால் தான் முருகா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்!'' என்று சொல்லி கோபத்தை மூட்டினார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல தனஞ்செயனும் மனம் மாறினான். தன் மனைவியிடம், ""முருகம்மா! இனி உன் உதடுகள் முருகா என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் வெட்டிக் கொன்று விடுவேன்!'' என்று ஆவேசமாகக் கத்தினான். முருகம்மைக்கு தனஞ்செயனின் பேச்சு பாம்பு தீண்டியது போல இருந்தது. பூஜையறைக்குச் சென்று முருகப்பெருமானிடம், ""கணவனின் சொல்லே எனக்கு மந்திரம் முருகா. இனி மறந்தும் முருகா என்று சொல்லமாட்டேன் முருகா! '' என்று சொல்லி அழுதாள். இதைத் தனஞ்செயன் கேட்டு விட்டான். நான் சொல்லியும் "முருகா' என்ற வார்த்தையை உ<ச்சரித்தாயா? என்றவன் கடும்கோபத்துடன், வாளெடுத்து முருகம்மையின் கைகளைத் துண்டித்தான். வலியால் துடித்த முருகம்மை, ""முருகா! முருகா! முருகா!'' என்று கூவி அழைத்தாள். மூன்றாம் முறை அழைத்த போது மயிலில் ஓடோடி வந்தான் முருகப்பெருமான். துண்டித்த கை வளர்ந்தது. முருகப்பெருமானின் அருளால் தனஞ்செயனின் அஞ்ஞானம் மறைந்தது. தெய்வீகத்தம்பதியராய் முருகம்மையாரும், தனஞ்செயனும் பக்தியோடு பலகாலம் வாழ்ந்து முருகன் திருவடிகளை அடைந்தனர்.

ஆன்மிக கதைகள் 111அருகில் வந்த ஐயப்பன்

மணிகண்டனுக்கு நீண்டநாட்களாக சபரிமலைக்குப் போக வேண்டுமென்று ஆசை. அவனுடைய அப்பா, அந்தக் காலத்தில் ஐம்பது தடவைக்கு மேல் மலைக்குப் போனவர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த அவர், ""மணிகண்டா! உன்னைப் போலவே எனக்கொரு தங்கமகன் பிறக்க வேண்டும்'' என்று வேண்டினார். கோயில் முகப்பில் மணிகளைக் கட்டி நேர்த்திக்கடனும் நிறைவேற்றி வந்தார். சில ஆண்டுகளிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. "மணிகண்டன்' என்ற பெயரையே சூட்டினார். மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது இறுதிக் காலத்திற்குப் பிறகு, மணிகண்டன் சபரி மலைக்குப் போக எவ்வளவோ முயற்சித்தான். அவன் ஒரு கடையில் தான் வேலை பார்த்தான். கிடைக்கிற வருமானம், குடும்பத்தை ஓட்ட தான் சரியாக இருந்தது. ஐயப்பன் கோயிலுக்குப் போய் வர வேண்டுமானால், ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அந்தளவுக்கு அவனுக்கு வசதியில்லை.
ஒருநாள், கடை முதலாளி அழைத்தார். ""டேய்! பத்தனம்திட்டையிலே நம்ம ஏஜன்ட் ஒருத்தர் இருக்காரு. நீ அங்கே போய், நான் கொடுக்கிற இந்த செக்கை கொடுத்துட்டு சரக்கை அனுப்பச்சொல்லிட்டு வந்துடு! நேரில் போனாத்தான் நன்றாக இருக்கும்,'' என்றார்.
பத்தனம்திட்டை வரை போகிற எனக்கு,
கொஞ்சம் தள்ளியிருக்கிற சபரிமலைக்குப் போய் வர நேரம் என்னாகி விடும். நான் விரதம் இருக்கலே! அதனால் என்ன! பதினெட்டாம் படியிலே ஏற முடியாட்டியும், இன்னொரு வாசல் வழியா உள்ளே போகலாமுனு சொல்றாங்களே! எப்படியோ! அந்த ஐயப்பனை ஒரு தடவை பார்த்துட்டா போதும்! ஐயப்பா! நீ தான் எனக்கு வழிகாட்டணும்!'' என்று வேண்டிக்கொண்டான்.
இரண்டு நாள் கழித்து அவன் பத்தனம்திட்டைக்குப் புறப்பட வேண்டும். மணிகண்டனின் மனைவி மஞ்சுளா, அவன் புறப்படுவதற்குரிய ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அத்துடன் கணவனின் நீண்டநாள் ஆசையான சபரிமலை பயணமும் நிறைவேறப் போகிறதே என்று அவளுக்கும் சந்தோஷம்!
மறுநாள் முதலாளி மணிகண்டனை அழைத்தார்.
இவன் பரபரப்புடன் ஓடினான்.
""டேய் மணிகண்டா! எனக்கு நீண்டநாளாக சபரிமலைக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆசை.
பத்தனம்திட்டைக்கு போக வேண்டியிருக்கு இல்லையா! நானே கிளம்பலாமுனு இருக்கேன்! என்னுடன் நீயும் வா! பத்தனம்திட்டையில் இருந்து கொஞ்சம் போனால் பம்பை வந்துடும். நம்ம காரிலேயே போயிடலாம். வரும் போது சரக்கை காரிலேயே ஏத்திட்டு வந்துடலாம். உதவிக்கு நீ வந்தா தான் சரியாயிருக்கும்,'' என்றார்.
மணிகண்டனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
""ஐயப்பா! பத்தனம்திட்டையில் இருந்து அரக்க பரக்க <உன்னைப் பார்க்க வரவேண்டுமென இருந்தேன். இப்போ, என்னைக் காரிலேயே வர வைத்து விட்டாய். அதிலும் முதலாளி கூட. பைசா செலவு ஆகாது. அவரே எல்லாம் பார்த்துக் கொள்வார். உன் கருணையே கருணை,"" என்று மகிழ்ந்தான்.
அவர்கள் கிளம்பினர். பத்தனம்திட்டையில் சரக்குகளை தயாராக வைத்திருக்குமாறு ஏஜன்டிடம்
சொல்லிவிட்டு சபரிமலைக்குச் சென்றார்கள். ஐயப்பனைப் பார்க்க கடும் கூட்டம் அலை மோதியது. எப்படி வரிசையில் செல்வது எனத்தெரியமால் திண்டாடிய வேளையில், ஒரு போலீஸ்காரர் வந்தார்.
""உங்ககிட்டே இரு முடி இல்லை அல்லவா!
தரிசனத்துக்காகத்தானே வந்தீர்கள்! முன்னாலே வாங்க!' என்று இழுத்துக் கொண்டு போனார். அவர் யாரென்றே தெரியவில்லை. கொஞ்சநேரத்தில் அவர் காணாமல் போய்விட்டார். இவர்கள் சன்னதி எல்கையை அடைந்து விட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கூட்டம் உந்தித்தள்ள இவர்கள் ஐயப்பன் சன்னதி முன் நின்றனர். போலீசார் உந்தித்தள்ளியவர்களை ஒதுங்கச் சொல்லி பந்தோபஸ்து செய்யவே, இவர்களுக்கு இரண்டு நிமிடம் ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
வாழ்க்கையில் பெற்ற பெரும்பேறாகக் கருய அவர்கள், முதலாளி, தொழிலாளி என்பதை மறந்து கோரசாக "சுவாமியே சரணம் ஐயப்பா' என முழங்கினர். ஐயப்பன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 110அம்மாவே தெய்வம் உலகிலே !

பெற்ற தாய்க்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்பதற்கு ஐயப்பனே உதாரணம். பந்தள மகாராஜா ராஜசேகரனின் பிள்ளையாக வளர வேண்டும் என்பதற்காக காட்டில் அவதரித்தார் தர்மசாஸ்தா. அவரை ராஜா கண்டெடுத்த போது, கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்ததால் "மணிகண்டன்' என்று பெயர் என்ற பெயர் பெற்றார். இதற்கு "மணி கட்டப்பட்ட கழுத்தை உடையவன்' எனப் பொருள். மணிகண்டனின் ஆற்றலைப் பொறுக்க முடியாத அமைச்சர்கள் சிலர் அவன் மேல் பொறாமை கொண்டனர். பிள்ளையில்லாத பந்தள ராஜாவுக்கு மணிகண்டன் வந்த பிறகு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே அரசாள வேண்டும், மணிகண்டனைக் கொன்று விட வேண்டுமென ராணியிடம் தூபம் போட்டனர் அந்த அமைச்சர்கள். ராணி முதலில் மறுத்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கு இணங்க மனம் மாறி விட்டாள். தனக்கு தலை வலி போல வடித்து, அரண்மனை வைத்தியரைக் கொண்டு புலிப்பால் கொடுத்தால்தான் குணமாகுமெனக் கூறி, அதைக் கொண்டு வர மணிகண்டனை அனுப்பினாள். பெற்றாலும், வளர்த்தாலும் அவள் தாயல்லவா! தாயின் குறைதீர்க்க மணிகண்டன் சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்று புலிகளுடன் வந்தார். பெற்றவள் நமக்காக செய்யும் தியாகத்தை விட,பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யும் தியாகமே உயர்ந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைத்தார்.

ஆன்மிக கதைகள் 109கண்ணன் என்னும் பிரம்மச்சாரி

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது,'' என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா!

ஆன்மிக கதைகள் 108சுமங்கலி பாக்கியம்

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.
அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.
மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.
என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.
""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் <உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல <உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு
நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த
தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.
திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்.

ஆன்மிக கதைகள் 107நதிகளை பாதுகாப்போம்.

கங்கைக்கரைக்கு வந்தார் ஒரு மகாமுனிவர். தவத்தால் மிகவும் சிறந்தவர். கர்வம் சிறிதும் இல்லாதவர், ஆனால், தன் பலத்தை தானே அறியாதவர். கங்கைக்கு வரும் சாதாரண மக்களெல்லாம், நதியில் மூழ்கி தங்கள் பாவத்தைக் கரைப்பவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், தவவலிமை மிக்க முனிவர் பெருமக்கள் அதில் நீராடினால் அவள் மகிழ்வாள். ஏனெனில், அவள் சுமக்கும் பாவங்கள் அனைத்தும் அந்த மகான்களின் தவவலிமையால் ஆவியாகி விடும். கங்கை பாரம் குறைந்து மகிழ்ச்சியுடன் செல்வாள். அதனால் தான் தீர்த்தங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மண மதத்தினர்
தங்கள் துறவிகளுக்கு "தீர்த்தங்கரர்' என்று பெயர் வைத்தனர். "நாரம்' என்றால் "தீர்த்தம்'. நாராயணன், நாரதர் போன்ற பெயர்களும் தீர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதே.
ஒரு சமயம் ஏராளமான பாவிகள் கங்கையில் வந்து நீராடினர். அவர்களில் கொலைக்குற்றம் செய்தவர்கள், மனைவியைக் கைவிட்டவர்கள், கன்னிப்பெண்களின் வாழ்வில் விளையாடி அவர்களை ஏமாற்றிய கொடும்பாவிகள் ஆகியோரெல்லாம் இருந்தனர். அவர்கள் கரைத்த பாவச்சுமையைத் தாங்கமுடியாமல் கங்கை கஷ்டப்பட்டாள். போதாக்குறைக்கு, பாழாய் போன மக்கள் சாக்கடையையும் கங்கையில் விழும்படி செய்தனர். இதனால் அவள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. இந்த நேரத்தில் தான் நாம் மேற்சொன்ன தவமுனிவர் வந்தார். கங்கையைப் பார்த்தார். சாக்கடை கலந்ததைப் பார்த்ததும் அவர் முகம் சுளித்தார். அப்படியே திரும்பி விட்டார். கங்கைக்கு மனது கனத்தது. ""ஐயோ! இப்படி நல்லவர்களெல்லாம் என்னைப் புறக்கணித்தால் நிலைமை என்னாவது? நான் பாவச்சுமை தாளாமல் மடிந்தும் வற்றியும் போவேனே!'' என நினைத்தவள், சாதாரணப் பெண் போல் மாறி, முனிவர் முன் சென்றாள்.
""மகானே! ! கங்கையில் தங்களைப் போன்றவர்களை நீராடாவிட்டால் அவள் எப்படி புனிதமாவாள்! இதில் கலக்கும் சாக்கடை மகான்களின் உடலுக்கு பாதகம் ஏதும் செய்யாதே! தயவுசெய்து தாங்கள் நீராடிச் செல்லுங்கள்,'' என்றாள்.
முனிவர் சம்மதிக்கவில்லை. எதும் பேசாமல் தன் வழியில் சென்றார். உடனே கங்கையே சுயரூபத்தில் காட்சி தந்தாள். முனிவர் அவளை வணங்கினார்.
""அன்னையே! உன்னில் கரையும் பாவங்கள் என்னவாகின்றன என்பதை எனக்கு
விளக்கியருளினால், நான் மகிழ்வுடன் உன்னில் நீராடிச்செல்வேன்,'' என்றார்.
""ஐயனே! பாவிகள் என்னுள் கரைக்கும் பாவங்களை நான் கடலரசனிடம் சேர்த்து விடுகிறேன். அது பாவக்கடல் என்று பெயர் பெறுகிறது. கடல்நீர் ஆவியாகி சூரியபகவானை அடைகிறது. சூரியபகவான் அதை மேகமண்டலத்திடம் ஒப்படைக்கிறான். அது மழையாய் கொட்டுகிறது. மீண்டும் அது பூமிமாதா மூலம் என்னையே வந்தடைகிறது. என்னிலுள்ளதை கரைக்கும் சக்தி உங்களைப் போன்ற மகான்களுக்கே உண்டு. அதனால் தான் கும்பமேளாவில் சாதுக்கள் நீராடுகின்றனர். அவர்களது சக்தியால் கரையும் பாவம், என் நாதனான சிவனின் நெற்றிக்கண் வெப்பத்தில் பஸ்பமாகி காணாமல் போய்விடுகிறது. எனவே தான் இங்கு வந்து குளிப்பதை உயர்ந்தது என்கிறார்கள்,'' என்றாள். மனத்தெளிவு பெற்ற முனிவர் கங்கையில் நீராடினார். கங்கையின் பாவம் கரைந்தது. பார்த்தீர்களா! ஆறுகளில் சாக்கடையைக் கலப்பதால், நதித்தாய்கள் வருந்துவதை! இனியேனும், நமது ஊர் நதிகளை பெற்ற தாயைப் போலவும், பிள்ளைகளைப் போலவும் பாதுகாப்போம்.

ஆன்மிக கதைகள் 106உழைப்பவரைத் தேடி வரும் உயர்வு

ஒரு வீட்டில் திருமணம் என்றால் பட்டுப்புடவை, நெய் பலகாரங்கள்...இன்னொரு வீட்டிலோ நூல் புடவைக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை......இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், முதலாமவர் கடும் உழைப்பாளியாய் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிராமத்தில் மழை பொய்த்து விட்டது. விவசாயிகள் பயிரே செய்யவில்லை. வயல்வெளியை விட்டு சற்று தள்ளியிருந்த குளத்தில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. இதை ஒரு விவசாயி போய் பார்த்தான். இருக்கிற இந்த குறைந்த நீரை நமது வயல் வரைக்கும் கொண்டு வந்து விட்டால் பயிர் விளைந்து விடும். அதற்கு தேவை சிறிய ஓடை. நாமே அந்த ஓடையை வெட்டிவிட்டால், இந்த தண்ணீரை வயல்வரை கொண்டு வந்து விடலாம். நமது பயிர் எப்படியாவது விளைந்து விடுமென நினைத்தான். முயற்சியைத் தொடங்கிவிட்டான். ஓடைப்பணி வேகமாக நடந்தது. இதே வேகத்தில் பணிநடந்தால் மாலைக்குள் முடிந்து விடுமென்ற நிலை. அவனது மனைவி சாப்பாட்டுடன் வயலுக்கு வந்தாள். ""என்னங்க! நீங்க வெட்டிவேலை செய்துகிட்டு இருக்கீங்க! குளத்துநீர் நம் வயலை எட்டாது. இப்பதான் பாதிதூரமே ஓடை வெட்டியிருக்கீங்க! முழுசா வெட்டினா கூட தண்ணீர் வயலை எட்டுமோ எட்டாதோ!'' என்று அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தும் வகையில் பேசினாள். அவனுக்கு கோபம் வந்து விட்டது. ""போடி போ! இந்தமுறை விளையாவிட்டால் நீயும், நம் குழந்தைகளும் பட்டினி கிடப்பீர்கள்! எப்படியும் இதை முடித்தே தீருவேன், அதுவரை சாப்பிடக்கூட மாட்டேன்,'' என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு பணியைத் தொடர்ந்தான். மாலையில் தண்ணீர் வயலுக்குள் பாய ஆரம்பித்து விட்டது. மற்றவர்கள் செய்யாததை அவன் செய்தான். அறுவடையாகி நெல் அவன் வீட்டுக்கு வந்தது. நல்ல வருமானமும் கூட. அந்த ஆண்டு அவன் மகள் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. உங்கள் இல்லத்திலும் வருமானம் பெருக, இனிமை திகழ கடுமையாக உழையுங்கள். சிக்கனமாக இருங்கள். நிறைய பணம் சேருங்கள். மற்றவர்களின் வருமானத்தைப் பார்த்து பொறாமைப்படாமல், அவர்களது பின்னணியில் உள்ள உழைப்பைப் பாருங்கள்! பிறகென்ன! நீங்களும் கார், பங்களாவுக்கு சொந்தக்காரர் ஆகலாம். சரிதானே!

ஆன்மிக கதைகள்105ஆசைக்கு வரைமுறை வேண்டும்

ஆசைக்கு வரைமுறை வேண்டும்

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் முன்பு ஒரு பூதம் வந்தது. ""உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,'' என்றது.அவன் ஓடினான், சொன்னது போலவே தங்கத்தைப் பார்த்தான். ஆறு கலயங்களில் முழுமையாகவும், ஒன்றில் மட்டும் பாதியும் இருந்தது. இந்தப் படுபாவி அதை எடுத்து செலவழிக்க வேண்டியது தானே! ஏழாவது கலயம் பாதியாக இருக்கிறதே! இதையும் நிரப்பியாக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மனைவி, பெண் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வாங்கி கலயத்தில் போட்டான். அது நிரம்பவில்லை. அப்படியே இருந்தது. குடும்பத்தை பட்டினி போட்டு, வாங்குகிற சம்பளத்திற்கெல்லாம் தங்கத்தை வாங்கி உள்ளே போட்டான். மாற்றமில்லை. கடைசியாக மனநிம்மதியை இழந்தான். அவனும், குடும்பத்தாரும் பட்டினி கிடந்ததில் நோய்வாய்ப்பட்டனர். பூதத்தை மனதில் நினைத்தான். அவன் முன் அது தோன்றியது. ""இப்படி ஆகி விட்டதே என் நிலை!'' என்றான். ""இளைஞனே! பேராசையில்லாதவர்களுக்கே இது பயன்படும். இதைக் கொண்டு நீயும் உன்னை வளப்படுத்தி, பிறருக்கும் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏழு கலயமும் பதினான்காக மாறியிருக்கும். நீயோ ஆசையில் இருப்பதையும் இழக்கப் போகிறாய். இதை எடுத்துப் போய், பேராசையற்ற இன்னொருவனிடம் கொடுக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மறைந்து விட்டது. கலயங்களும் மறைந்தன. அந்த இளைஞன் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தான். ஆசைக்கு வரைமுறை வேண்டும் என்பது புரிகிறதா!

ஆன்மிக கதைகள் 104கீதை தரும் பாதை

அர்ஜுனன் கிருஷ்ணனின் மைத்துனன். உறவினர்கள் மட்டுமல்ல! உயிர் நண்பர்களும் கூட. குரு÷க்ஷத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை! போர்க்களத்தில் கேள்வி கேட்பதற்கோ, விரிவான விளக்கம் அளிப்பதற்கோ நேரமே இல்லை என்ற நிலை! இருந்தாலும் மைத்துனனின் மனசஞ்சலத்தைப் போக்க பகவான் கிருஷ்ணர் கீதையைப் போதித்து வெற்றி தேடி தந்தார். தன்னுடைய தெய்வீக ஆற்றலைப் பயன்படுத்தியிருந்தால், கீதோபதேசம் இல்லாமலே அர்ஜுனனை மாற்றியிருக்கலாம். மாறாக, அவனது கவலையை மாற்றும் மருந்தை கீதை மூலமாகப் புகட்டினார். ""அர்ஜுனா! நீ என் மைத்துனன் உறவு மட்டுமல்ல! நல்ல நண்பனுமாக இருக்கிறாய்! நான் உனக்குத் தேரோட்டும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறேன். இருந்தாலும் உன்னிடம் இருக்கும் அஞ்ஞானத்தால், போர் புரியாமல் காண்டீபத்தை (வில்) கீழே போட்டுவிட்டு மனம் வருந்துகிறாய். அஞ்ஞானத்தை உன் முயற்சியாலே போக்கவேண்டும். அப்போது கிடைக்கும் சத்தியஞானம் தான் நிரந்தர பொக்கிஷம். இது கிடைத்தால் மனவலிமையும், உடல் சக்தியும் உண்டாகும். புரட்சிகரமான நல்ல மாறுதல் உண்டாகும்,'' என்றார். உடனே அர்ஜுனன் வில்லை எடுத்தான். எதிரிகளைச் சாய்த்தான். நீங்களும் மனசஞ்சலமான நேரத்தில் கீதையைப் படியுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்வீர்கள். தைரியம் தானாகவே வரும். செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.

ஆன்மிக கதைகள் 103மாறிவிடும் நெஞ்சம்

கொடைவள்ளல் கர்ணன் தன்னிடம் வந்து பொருள் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத கருணை நெஞ்சம் கொண்டவன். ஒருநாள் அவன், தங்கக்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். கர்ணன் மகிழ்வுடன் வரவேற்றான். கர்ணனின் கொடைத்திறத்தை சோதிக்க விரும்பிய கிருஷ்ணர், ""கர்ணா! நீ வைத்திருக்கும் தங்கக்கிண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்கு கொடேன்!'' என்று கேட்டார். ""கிருஷ்ணா! பிரபஞ்சத்தையே ஆளும் தலைவன் நீ! இந்த அற்பப்பொருளான தங்கக்கிண்ணத்தைக் கேட்கிறாயே! இருந்தாலும் உன்னைக் கேட்பதற்கு நான் யார்? இதோ தருகிறேன்,'' என்று கிண்ணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். கர்ணனின் செயலைக் கண்ட கிருஷ்ணர் ஒரு கணம் அதிர்ந்து விட்டார். காரணம் கர்ணன் இடதுகையால் அக்கிண்ணத்தை கிருஷ்ணருக்கு கொடுத்தது தான். ""இடதுகையால் தானம் கொடுக்கக்கூடாது என்பது கூட அறியாதவனா நீ? உன் செயல் கண்டிக்கத்தக்கது,'' என்று கிருஷ்ணர் கோபப்பட்டார். ""பிரபு! என்னை மன்னித்து விடுங்கள். வலதுகையில் எண்ணெய் எடுத்தேன். கையைச் சுத்தம் செய்து வருவதற்குள் மனம் சஞ்சலப்பட்டு விட்டால் "கொடுத்து மகிழ வேண்டும்' என்ற நல்ல எண்ணம் மாறிவிடலாம். மனம் நிலைதடுமாறக்கூடியது என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நினைத்ததை நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வேகமாக இடதுகையால் தங்களுக்கு கிண்ணத்தை அளித்தேன். என்னை மன்னியுங்கள்,'' என்றான். பார்த்தீர்களா! மனம் என்பது அடிக்கடி மாறக்கூடிய சாதனம். கொடைவள்ளல் கர்ணனுக்கே, தன் மனநிலை மாறிவிடுமோ என்ற சந்தேகம் இருந்ததென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்! செய்ய நினைத்த தர்மத்தை உடனே செய்யுங்கள். பலனை அடையுங்கள்

ஆன்மிக கதைகள் 102 சூரியபுத்திரன்

சூரசேனன் என்ற மன்னன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு பிருகை என்ற அழகான மகள் இருந்தாள். சூரசேனனின் அத்தை மகன் (மைத்துனன்) குந்திபோஜன். அவனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மிகச்சிறந்த சூரிய பக்தன். சூரியனை எண்ணி ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகப்பணிகளைக் கவனிக்க தனது மாமா உறவான குந்திபோஜன் வீட்டுக்கு பிருகை சென்றாள். அவளும் சூரியனின் மகாபக்தை. எனவே யாகப்பணிகளை பயபக்தியுடன் செய்தாள். அவளது பணிகளைக் கண்ட குந்திபோஜன் தன் மைத்துனன் சூரசேனனிடம், ""சூரசேனா! உன் மகள் என் உள்ளம் கவர்ந்து விட்டாள். அவளைப் போல அடக்கமான பெண்ணை, பொறுப்புள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. எனக்கோ குழந்தை இல்லை. நீ இந்தப் பெண்ணை எனக்கு தத்துக்கொடு. நீ அவளே என் மகள். அவளைக் கண்போல காப்பது என் கடமை,'' என்றான். சூரசேனனுக்கு மகளைப் பிரிய மனமில்லாவிட்டாலும், குழந்தையில்லாத குந்திபோஜனின் வேண்டுகோளையும் புறக்கணிக்க இயலவில்லை. தன் மகளை அவனுக்கே தத்து கொடுத்து விட்டான். குந்திபோஜனின் மகளான பிறகு, அவள் மக்களால் "குந்தி' என செல்லமாக அழைக்கப்பட்டாள். ஒரு முறை துர்வாச முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்தார்.தன் விரதம் பங்கமின்றி முடிய குந்திதேவியை அனுப்பும்படி கேட்டார்.குந்திபோஜன் மகிழ்ந்தான். ""தங்களைப் போன்ற மகான்களின் அருளாசி அவளுக்கு கிடைக்குமானால், என் மகள் உலகம் உள்ளவரை புகழ் உள்ள பெண்ணாக விளங்குவாள்,'' என்று கூறி, அவளை அனுப்பி வைத்தான். துர்வாசரின் ஆஸ்ரமத்தில் தங்கிய குந்தி, அவரை மிகுந்த பணிவுடன் உபசரித்தாள். துர்வாசர் ஒருநாள் கூட அவளிடம் கோபப்படவில்லை என்றால், அந்த பணிவிடையின் தரத்தை சொல்லவா வேண்டும்! அவர் அவளை வாழ்த்தினார். ஆனால், அவர் முகம் வாடியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அம்மா! குந்தி, இங்கேவா,' 'என அழைத்தார். குந்தியும் பணிவுடன் அவர் முன்னால் நின்றார். அவளது முகத்தையே உற்று நோக்கிய அவர், ""பாவம், இந்தப் பெண், இவளுக்கு சாபம் ஒன்றைப் பெற்ற கணவனே அமைவான் என்ற விதி இருக்கிறது. அந்த சாபத்தின் படி இவளுக்கு குழந்தை பிறக்காது. இவளோ ராஜகுமாரி. குழந்தைகள் இல்லாவிட்டால், இவள் வாழ்க்கைப்படும் கணவனின் நாட்டை ஆள்வது யார்? எனவே, இப்படி செய்யலாம்,'' என நினைத்து சில மந்திரங்களை அவளுக்கு கற்றுக் கொடுத்தார். ""மகளே! இந்த மந்திரங்களை உச்சரித்து நீ எந்த தேவனை அழைத்தாலும் அவன் உன் முன்னால் நிற்பான். அவனது அம்சமுள்ள புத்திரன் உனக்கு பிறப்பான்,'' என்றார். குந்தி அவரிடம் விடை பெற்று திரும்பினாள். தான் பெற்ற மந்திரத்தை விளையாட்டாக சோதிக்க விரும்பினாள். அவள் சூரியனின் பக்தை என்பதால், சூரியனை எண்ணி மந்திரம் சொன்னாள். கோடி பிரகாசத்துடன் சூரியபகவான் அவள் முன் வந்தார். அவரை வணங்கி, மந்திரத்தை சோதிக்கவே அவ்வாறு செய்ததாகச் சொன்னாள். சூரியன் அவளிடம்,""நீ உச்சரித்தது குழந்தைக்கான மந்திரம். எனவே, குழந்தையை அளிக்காமல் நான் எனது உலகத்துக்கு திரும்ப முடியாது. இருப்பினும், குழந்தை பெற்றதும் நீ கன்னியாக மாறிவிடுவாய்,'' என்று சொல்லி மறைந்தார். அவ்வாறு அவள் பெற்ற குழந்தையே கர்ணன். அவன் கவச குண்டலத்துடன் பிறந்தான். காதில் குண்டலம் இருந்ததால் "கர்ணன்' என்ற பெயர் அவனுக்கு வந்தது. ("கர்ணம்' என்றால் "காது') சூரியபுத்திரனாக கர்ணன் பிறந்ததால் தான், அவன் விஷ்ணுவின் தரிசனம் பெற்று வைகுண்டம் அடைந்தான். கொடை வள்ளலாகத் திகழ்ந்து, மக்கள் மனதில் இன்றும் நிற்கிறான்.

ஆன்மிக கதைகள் 101சூரியபகவான்

சூரசேனன் என்ற மன்னன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு பிருகை என்ற அழகான மகள் இருந்தாள். சூரசேனனின் அத்தை மகன் (மைத்துனன்) குந்திபோஜன். அவனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மிகச்சிறந்த சூரிய பக்தன். சூரியனை எண்ணி ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகப்பணிகளைக் கவனிக்க தனது மாமா உறவான குந்திபோஜன் வீட்டுக்கு பிருகை சென்றாள். அவளும் சூரியனின் மகாபக்தை. எனவே யாகப்பணிகளை பயபக்தியுடன் செய்தாள். அவளது பணிகளைக் கண்ட குந்திபோஜன் தன் மைத்துனன் சூரசேனனிடம், ""சூரசேனா! உன் மகள் என் உள்ளம் கவர்ந்து விட்டாள். அவளைப் போல அடக்கமான பெண்ணை, பொறுப்புள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. எனக்கோ குழந்தை இல்லை. நீ இந்தப் பெண்ணை எனக்கு தத்துக்கொடு. நீ அவளே என் மகள். அவளைக் கண்போல காப்பது என் கடமை,'' என்றான். சூரசேனனுக்கு மகளைப் பிரிய மனமில்லாவிட்டாலும், குழந்தையில்லாத குந்திபோஜனின் வேண்டுகோளையும் புறக்கணிக்க இயலவில்லை. தன் மகளை அவனுக்கே தத்து கொடுத்து விட்டான். குந்திபோஜனின் மகளான பிறகு, அவள் மக்களால் "குந்தி' என செல்லமாக அழைக்கப்பட்டாள். ஒரு முறை துர்வாச முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்தார்.தன் விரதம் பங்கமின்றி முடிய குந்திதேவியை அனுப்பும்படி கேட்டார்.குந்திபோஜன் மகிழ்ந்தான். ""தங்களைப் போன்ற மகான்களின் அருளாசி அவளுக்கு கிடைக்குமானால், என் மகள் உலகம் உள்ளவரை புகழ் உள்ள பெண்ணாக விளங்குவாள்,'' என்று கூறி, அவளை அனுப்பி வைத்தான். துர்வாசரின் ஆஸ்ரமத்தில் தங்கிய குந்தி, அவரை மிகுந்த பணிவுடன் உபசரித்தாள். துர்வாசர் ஒருநாள் கூட அவளிடம் கோபப்படவில்லை என்றால், அந்த பணிவிடையின் தரத்தை சொல்லவா வேண்டும்! அவர் அவளை வாழ்த்தினார். ஆனால், அவர் முகம் வாடியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அம்மா! குந்தி, இங்கேவா,' 'என அழைத்தார். குந்தியும் பணிவுடன் அவர் முன்னால் நின்றார். அவளது முகத்தையே உற்று நோக்கிய அவர், ""பாவம், இந்தப் பெண், இவளுக்கு சாபம் ஒன்றைப் பெற்ற கணவனே அமைவான் என்ற விதி இருக்கிறது. அந்த சாபத்தின் படி இவளுக்கு குழந்தை பிறக்காது. இவளோ ராஜகுமாரி. குழந்தைகள் இல்லாவிட்டால், இவள் வாழ்க்கைப்படும் கணவனின் நாட்டை ஆள்வது யார்? எனவே, இப்படி செய்யலாம்,'' என நினைத்து சில மந்திரங்களை அவளுக்கு கற்றுக் கொடுத்தார். ""மகளே! இந்த மந்திரங்களை உச்சரித்து நீ எந்த தேவனை அழைத்தாலும் அவன் உன் முன்னால் நிற்பான். அவனது அம்சமுள்ள புத்திரன் உனக்கு பிறப்பான்,'' என்றார். குந்தி அவரிடம் விடை பெற்று திரும்பினாள். தான் பெற்ற மந்திரத்தை விளையாட்டாக சோதிக்க விரும்பினாள். அவள் சூரியனின் பக்தை என்பதால், சூரியனை எண்ணி மந்திரம் சொன்னாள். கோடி பிரகாசத்துடன் சூரியபகவான் அவள் முன் வந்தார். அவரை வணங்கி, மந்திரத்தை சோதிக்கவே அவ்வாறு செய்ததாகச் சொன்னாள். சூரியன் அவளிடம்,""நீ உச்சரித்தது குழந்தைக்கான மந்திரம். எனவே, குழந்தையை அளிக்காமல் நான் எனது உலகத்துக்கு திரும்ப முடியாது. இருப்பினும், குழந்தை பெற்றதும் நீ கன்னியாக மாறிவிடுவாய்,'' என்று சொல்லி மறைந்தார். அவ்வாறு அவள் பெற்ற குழந்தையே கர்ணன். அவன் கவச குண்டலத்துடன் பிறந்தான். காதில் குண்டலம் இருந்ததால் "கர்ணன்' என்ற பெயர் அவனுக்கு வந்தது. ("கர்ணம்' என்றால் "காது') சூரியபுத்திரனாக கர்ணன் பிறந்ததால் தான், அவன் விஷ்ணுவின் தரிசனம் பெற்று வைகுண்டம் அடைந்தான். கொடை வள்ளலாகத் திகழ்ந்து, மக்கள் மனதில் இன்றும் நிற்கிறான்.

ஆன்மிக கதைகள்100 பொங்கல் சபதம் ஏற்போம்

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது. எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள். தர்மர் அவளிடம், ""தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,'' என ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, ""எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,'' என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன். அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, ""இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார். மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. ""கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,'' என்றார். தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா. தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும். உழைப்பு திருநாளாம் பொங்கல் திருநாளில், இலவசங்களை விலக்கி, உழைக்க உறுதியெடுப்போமா!

ஆன்மிக கதைகள் 99இரக்க மனம் வேண்டும்

சிவனால் சபிக்கப்பட்ட பார்வதிதேவி, மீண்டும் சிவனை அடைவதற்காக காட்டில் தவமிருந்தாள். ஒருநாள் அலறல் சத்தம் கேட்டது. சிறுவன் ஒருவன் முதலையின் வாயில் சிக்கி அலறினான். இதைக்கண்ட பார்வதி, சிறுவனை விடுவிக்கும் படி முதலையிடம் வேண்டினாள். ""இந்தச் சிறுவனை விட்டுவிட்டால் எனது உணவுக்கு எங்கே போவேன்''? என்றது முதலை. ""எனது தவப்பயன் முழுவதையும் உனக்கு தருகிறேன். நீ சிறுவனை விட்டுவிடு'' என பார்வதி நெகிழ்ச்சியுடன் சொன்னாள். ""தவப்பயனைக் கொடுத்துவிட்டால் உங்களால் சிவனை மீண்டும் அடைய முடியாதே. என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்றது முதலை. ""தவத்தை மீண்டும் ஒரு முறை செய்துகொள்ளலாம். ஆனால், சிறுவனின் உயிர்போனால் திரும்ப வருமா? இப்போது செய்த தவப்பயன் மட்டுமல்ல. ஏற்கனவே என்னிடம் உள்ள அனைத்து தவப்பலனையும் உனக்கு அளிக்கிறேன். குழந்தையை விட்டுவிடு,'' என்றாள் கருணையுள்ள லோகமாதா. முதலை சிறுவனை விட்டது. அத்துடன் சிவனாக உருவெடுத்தது. "முதலையாக வந்ததும் நானே. சிறுவனும் நானே. உனது அன்பின் ஆழத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு செய்தேன். தானம் தவம் ஆகியவற்றின் பலன் செய்பவருக்கு உரியதல்ல. பிறருக்கு அதை அர்ப்பணித்தால் அதுவே பல்கிப்பெருகும்,'' என்றார் சிவன். பிறருக்காக வாழ வேண்டும் என்ற உறுதியை நீங்களும் மேற்கொள்வீர்களா?

ஆன்மிக கதைகள் 98இரக்க மனம் வேண்டும்

சிவனால் சபிக்கப்பட்ட பார்வதிதேவி, மீண்டும் சிவனை அடைவதற்காக காட்டில் தவமிருந்தாள். ஒருநாள் அலறல் சத்தம் கேட்டது. சிறுவன் ஒருவன் முதலையின் வாயில் சிக்கி அலறினான். இதைக்கண்ட பார்வதி, சிறுவனை விடுவிக்கும் படி முதலையிடம் வேண்டினாள். ""இந்தச் சிறுவனை விட்டுவிட்டால் எனது உணவுக்கு எங்கே போவேன்''? என்றது முதலை. ""எனது தவப்பயன் முழுவதையும் உனக்கு தருகிறேன். நீ சிறுவனை விட்டுவிடு'' என பார்வதி நெகிழ்ச்சியுடன் சொன்னாள். ""தவப்பயனைக் கொடுத்துவிட்டால் உங்களால் சிவனை மீண்டும் அடைய முடியாதே. என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்றது முதலை. ""தவத்தை மீண்டும் ஒரு முறை செய்துகொள்ளலாம். ஆனால், சிறுவனின் உயிர்போனால் திரும்ப வருமா? இப்போது செய்த தவப்பயன் மட்டுமல்ல. ஏற்கனவே என்னிடம் உள்ள அனைத்து தவப்பலனையும் உனக்கு அளிக்கிறேன். குழந்தையை விட்டுவிடு,'' என்றாள் கருணையுள்ள லோகமாதா. முதலை சிறுவனை விட்டது. அத்துடன் சிவனாக உருவெடுத்தது. "முதலையாக வந்ததும் நானே. சிறுவனும் நானே. உனது அன்பின் ஆழத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு செய்தேன். தானம் தவம் ஆகியவற்றின் பலன் செய்பவருக்கு உரியதல்ல. பிறருக்கு அதை அர்ப்பணித்தால் அதுவே பல்கிப்பெருகும்,'' என்றார் சிவன். பிறருக்காக வாழ வேண்டும் என்ற உறுதியை நீங்களும் மேற்கொள்வீர்களா?

ஆன்மிக கதைகள் 97 கடல் தாண்ட வைத்த கரடி

பிரம்மா படைக்கும் தொழிலை வேகமாகச் செய்து கொண்டிருந்தார். ஓய்வு ஒழிச்சல் என்பதே இல்லை. இதனால், தன்னால் ஸ்ரீமன் நாராயணனை வணங்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. எனவே கரடி வடிவெடுத்து பூலோகம் வந்தார்.அப்போது நாராயணன், ராமபிரானாக பூமிக்கு வந்து சீதையைப் பிரிந்தார். அவளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மூளையாக செயல்பட்டார் ஜாம்பவான். சீதை இலங்கையில் இருந்தபோது, வானர வீரர்கள் அவளைத் தேடிப் புறப்பட்டனர். இடையே கடல் குறுக்கிட்டது. அப்போது, அனுமானுக்கு அவரது பறக்கும் சக்தியை எடுத்துச் சொன்னார். உடனே அனுமான் இலங்கைக்கு பறந்து சென்று சீதையின் இருப்பிடத்தை அறிந்து வந்தார்.இலங்கை சென்ற பிறகு ராவணனின் மகன் இந்திரஜித் அனைவரையும் அடித்து வீழ்த்தினான். அவனுக்கு பதிலடி கொடுத்தவர் ஜாம்பவான் மட்டுமே. ஒரு கட்டத்தில் ராவணனைக் கூட மயக்கம் வருமளவுக்கு அடித்து வீழ்த்தினார் ஜாம்பவான்.அயோத்தியில் ராமபட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் ஊர் திரும்பினர். ஜாம்பவானுக்கு அவரைப் பிரிய மனமில்லை. கண்ணீர் வழிந்தது. ராமன் அவரைத் தேற்றி, ""ஜாம்பவான், உங்கள் இதயத்தில் நான் நிரந்தரமாக இருப்பேன். கவலையின்றி செல்லுங்கள். அடுத்த யுகத்தில் நான் உங்களுக்கு ராம வடிவிலேயே காட்சி தருவேன்,'' என வாக்களித்தார்.
துவாபரயுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதரித்தார். யாதவர்களில் ஒருவரான சத்ராஜித் என்பவர் சூரிய பகவானை வழிபட்டு அவரிடமிருந்து "சியமந்தகம்' என்னும் மணியைப் பெற்றார். நல்ல குணமுள்ளவர்களுக்கு இஷ்டப்பட்டதை எல்லாம் தரும் மணியாக அது இருந்தது. இந்த மணி பற்றிய விபரம் கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் கம்சனைக் கொன்று விட்டு மதுராபுரிக்கு <உக்ரசேனனை மன்னனாக்கி இருந்தார். அவனது நாட்டு மக்களுக்கு இந்த மணியைக் கொண்டு நன்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், மணியை உக்ரசேனனிடம் ஒப்படைக்கச் சொன்னார். சத்ராஜித் மறுத்து விட்டார்.
ஒருமுறை சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன் அந்த மணியை அணிந்து öக்õண்டு வேட்டைக்குச் சென்றான். சென்ற இடத்தில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டு மணியை எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் புகுந்தது. அங்கு ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியுடன் தங்கியிருந்தார். சிங்கத்துடன் போராடிக் கொன்று சியமந்தகப் மணியைக் கைப்பற்றினார். அதை தன் மகளுக்கு அணிவித்தார்.
இதை தவறாகப் புரிந்து கொண்வ சத்ராஜித், கிருஷ்ணன் தான் பிரசேனனைக் கொன்று மணியைப் பிடுங்கிச் சென்று விட்டதாகக் கருதினான். அவர் தன் மணியைப் பறித்துக் கொண்டார் என்று தவறாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தான். கிருஷ்ணர் இதைக் கேள்விப்பட்டு, தன் மீதான களங்கத்தை துடைக்க விரும்பினார்.ஜாம்பவான் சிறந்த மல்யுத்த வீரர். அவரிடம் யார் மோதியும் ஜெயிக்க முடியாது. தனக்கு ஈடான சக்தியுள்ள ஒருவனுடன் போராட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இந்த சமயத்தில் கிருஷ்ணர் மணியைத் தேடி காட்டுக்கு வந்தார். ஜாம்பவதியின் கழுத்தில் கிடப்பதைப் பார்த்த அவர் அவளைப் பின் தொடர்ந்தார். அவள் பயந்து போய் அப்பாவிடம் சென்று அடைக்கலமாகி, யாரோ ஒரு இளைஞன் தன்னை விரட்டி வருவதாகச் சொன்னாள். ஜாம்பவான் கோபம் மேலிட அந்த இளைஞனுடன் மோதினார். அவர் நாராயணனின் அம்சம் என்பது அவருக்குத் தெரியாது. இருவருக்கும் கடும் மல்யுத்தம் நடந்தது. 27 நாட்கள் நீடித்தும் போட்டி முடிவுக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில், ஜாம்பவான் தளர்ந்து விட்டார். அந்த இளைஞனிடம், ""இவ்வளவு வலிமை மிக்க நீ யார்?'' எனக் கேட்ட போது ராமனாக காட்சி தந்தார் நாராயணன். அவருக்கு சியமந்தக மணியைத் தந்தது மட்டுமின்றி, தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்.
இவ்வாறாக ஜாம்பவான் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். கிராமங்களில் இவரை "கரடி மாடசுவாமி' என்ற பெயரில் காவல் தெய்வமாக மக்கள் வணங்குகின்றனர்.

ஆன்மிக கதைகள் 96 மனதை மாற்றிய சாம்பல்

மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்கு பிறர் பொருளைத் திருடி சாப்பிடுவதில் அலாதி இன்பம்.ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து மூடையாகக் கட்டி வெளியே கொண்டு சென்றான்.
ஒன்றிரண்டு பழங்களை ருசித்து விட்டு, மற்றதை நல்ல விலைக்கு விற்றான். தோட்டக்காரனுக்கு கடும் வருத்தம். கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த மாமரத்தின் பழங்களை யாரோ பறித்துச் சென்று விடுகிறார்களே என்று வாடினான்.
இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. சுதாரித்துக் கொண்ட தோட்டக்காரன் இரவு வேளையில் தோட்டத்தைச் சுற்றி சில காவலர்களை நிறுத்தினான். அவனும் ஒருபுறம் நின்று கொண்டான். இதையறியாத மாணிக்கம் தோட்டத்துக்குள் புகுந்து பழங்களை பறிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவன் நிற்குமிடம் நோக்கிச் சென்றனர். ஆனாலும், காய்ந்த இலைகளின் மேல், அவர்கள் நடந்து வந்த சப்தத்தைக் கேட்ட மாணிக்கம் <உஷாராகி விட்டான். மறைவாக நின்று, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் குழைத்துப் பூசிக்கொண்டு தவத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ ஒரு சாமியார் மட்டும் அங்கே இருப்பதைப் பார்த்து வணங்கினர். போலிச்சாமியாரோ நிஷ்டை கலையாதது போல் நடித்தார்.மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்கள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கைப் பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரைத் தரிசிக்க வந்தனர். மாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, தானாக கிடைத்த பணத்தை வாரிக்கொண்டான். ஆனால், அவன் மனம் மாறிவிட்டது. நாத்திகனாக இருந்த போது, திருட்டு புத்தி தான் இருந்தது. இப்போது, போலியாக சாம்பலைப் பூசியதற்கே மக்கள் இவ்வளவு மரியாதை தந்தனர். நிஜத்திலேயே சாமியாராகி விட்டால், தன் மதிப்பு இன்னும் அதிகரிக்குமே என எண்ணினான். நாத்திகத்தை கைவிட்டான். ஆத்திக நூல்களைப் படித்தான். நிஜமாகவே சாமியாராகி விட்டான். ஆத்மதிருப்தி கிடைத்தது. மக்களுக்கு நல்லதைச் செய்ய ஆரம்பித்தான்.

ஆன்மிக கதைகள் 95 ஏன் சிரித்தான் இறைவன்

கிருஷ்ணசந்திரன் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் தன்னிடமுள்ள 50 ஏக்கர் நிலத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்து எழுத பதிவாளர் அலுவலகம் சென்றார். செல்லும் வழியிலேயே திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்.
சில நாட்கள் கழித்து உடனே பிள்ளைகள் மோத ஆரம்பித்தனர். மூத்தவன் சுப்பையன் இளையவன் குமரனிடம்,
""டேய் குமரா! உன்னை அப்பா நன்றாகப் படிக்க வைத்தார். நீ அரசாங்கப் பணிக்கு போய் அதிலும் சம்பாதிக்கிறாய். என்னை அப்பா படிக்க வைக்கவில்லை. என் மனைவி, பிள்ளைகளுடன் சிரமப்படுகிறேன். நீ பத்து ஏக்கரை மட்டும் எடுத்துக் கொள். மீதியை எனக்கு கொடுத்து விடு,'' என்றான். குமரன் கத்தினான்.
""உன்னையும் தான் அப்பா படிக்க வைத்தார். நீ படிக்காமல் ஊர் சுற்றி தோல்வியடைந்தாய். அதனால், உனக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்காக, என் பங்கை நான் இழக்க முடியுமா? ஆளுக்கு பாதி தான் சரியான முடிவு,'' என்றான். இருவருக்கும் சண்டை வலுத்தது. அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. கடவுள் அசரீரியாகப் பேசினார்.
""பிள்ளைகளே! நீங்கள் எதற்காக அடித்துக் கொள்கிறீர்கள்! இந்த அண்டசராசரமும் எனக்குரியது. நீங்கள் அதில் வாடகைக்கு வாழ வந்துள்ளீர்கள். எனவே என்பூமி, உன் பூமி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது எனது பூமி,'' என்றார்.
பிள்ளைகள் உண்மையை உணர்ந்தார்கள். வம்பின்றி பூமியைப் பிரித்துக் கொண்டார்கள்

ஆன்மிக கதைகள் 94


வேலையில்லாத ஏழை இளைஞர்கள் சிலரிடம் இசையார்வம் இருந்தது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் ஏதாவது ஒரு பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். கையில் இருந்த பணத்தைப் போட்டு, சில இசைக்கருவிகளை வாங்கினர். கடுமையாகப் பயிற்சி செய்தனர். தெருக்களில் நின்று அவர்கள் பாடினர். அவர்களது பாடல்களில் ஈர்க்கப்பட்ட கூட்டத்தினர் தங்களால் ஆன பணத்தை அளித்தனர். எப்படியோ, ஜீவனம் கழிந்தது. ஒரே ஊரில் அவர்கள் பாடினால், எத்தனை நாள் தான் மக்கள் கேட்பார்கள். போதாக்குறைக்கு மழைக்காலமும் வந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததே குறைவு தான். வருமானம் குறைந்தது. ஒருநாள், கடுமையான மழை பெய்யவே, அவர்களில் சிலர் கச்சேரி வேண்டாம் என முடிவு செய்தனர். ஆனால், இசைக்குழுவின் தலைவர், ""நிகழ்ச்சியை நடத்தியே ஆக வேண்டும். கூட்டம் வருகிறதா என்பது பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால், இந்த இடத்தில் கச்சேரி நடக்கும் என்று நம்மை நம்பி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு சில ரசிகர்கள் வரக்கூடும். அவர்கள் ஏமாந்து போகக்கூடாது. எனவே உடனே புறப்படுங்கள்,'' என உத்தரவிட்டார். ஒரு ஷெட்டின் கீழ் அவர்களது நிகழ்ச்சி நடந்தது. ஒரு காசு கூட வசூலாகவில்லை. இசைக்குழுவினர் முகம் சுளித்தனர். அப்போது ஒருவர் வேகமாக வந்தார். குழுவின் தலைவரிடம் ஒரு பையை அளித்து விட்டு வேகமாகப் போய்விட்டார். அவர் அதைப் பிரித்துப் பார்த்தார்.
""உங்கள் இசையை ரசித்தேன். பிரமாதம்... உங்கள் ஊர் மேயர்'' என்று எழுதப்பட்ட காகிதத்துடன் இருபதாயிரம் ரூபாய் பணம் இருந்தது.பனிக்காலமோ, மழைக்காலமோ... காலச்சக்கரத்தில் சுழலும் நாட்களில் அவையும் அடக்கம். எந்தக்காலமும் நமக்கு நண்பன் தான். கடமையை தொடர்ந்து செய்வோம்! அதற்குரிய அங்கீகாரம் எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வாசல் கதவைத் தட்டும்.

ஆன்மிக கதைகள் 91 பாம்புக்கு கருணை உண்டு

பல்லவர்கள் காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த நேரம்..சென்னை அருகிலுள்ள திருநின்றவூரில் காளத்தி முதலியார் என்பவர் வசித்தார். அவர் பெரும் கொடை வள்ளல். இவரது புகழைக் கேள்விப்பட்ட பல்லவ மன்னன் ஒருவன், முதலியார் மீது பொறாமை கொண்டான். தன்னை விட உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து, தன் புகழைச் சரியச் செய்கிறாரே என்று கொதித்தான். அதிகாரிகளை அனுப்பி, முதலியார் வைத்திருந்த பொருட்களை பறித்து விட்டான்.
வேறு எங்காவது போய் வாழலாம் என அவர் தன் மனைவியுடன் புறப்பட்டார். நீண்ட தூரம் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினர். பசி வயிற்றைக் கிள்ளியது. உணவளிப்பவர் யாருமில்லை.
கிழிந்த ஆடையுடன் புலவர் ஒருவர் அங்கே அமர்ந்திருந்தார். பசிக்களைப்பு அவரையும் வாட்டியிருந்தது. இருப்பினும் வாய் சும்மா இல்லை. ""ஏ வறுமையே! இன்று நீ என்னை விரட்டுகிறாய். நாளை நான் உன்னை விரட்டுகிறேன் பார்! இன்று நீ என்ன ஆட்டம் வேண்டுமானாலும் போடு. நாளை திருநின்றவூர் காளத்தி முதலியாரிடம் பொருள் பெற்ற பின், உனக்கு என்னிடத்தில் வேலையின்றிப் போகும். ஒரேநாளில், நான் லட்சாதிபதியாகி விடுவேன்,'' என்ற பொருள்பட அவர் ஒரு பாட்டைப் பாடினார்.
முதலியாருக்கு திக்கென்றது. ""ஆஹா! யாரோ ஒரு புலவர், நான் இன்னும் பணக்காரனாகவே இருக்கிறேன் என எண்ணி, என்னை நம்பி ஊருக்குச் செல்கிறார். இவர் வரும் நேரத்தில், நான் அங்கு இல்லாமல் இருந்தால், பதில் சொல்லக்கூட நாதியிருக்காதே! என்ன கொடுமை! என்ன நடந்தாலும் சரி! இவர் அங்கு வந்து சேர்வதற்குள் நாம் முந்திப்போய் விட வேண்டும்,'' என்றெண்ணி, மனைவியுடன்
மீண்டும் ஊர் போய் சேர்ந்து வீட்டில் இருந்தார். எதிர்பார்த்ததைப் போல புலவர் வீட்டுக்கு வந்தார். முதலியார் அவரை வரவேற்றனர். தன் நிலையைச் சொல்லி பொருள் கேட்டார் புலவர். இது எதிர்பார்த்தது தானே! கேட்டதைக் கொடுக்காவிட்டால் மானம் போய் விடுமே! "மரணம் கொடுமையானது தான். ஆனால், ஒருவர் கேட்டு இல்லை எனச் சொல்வது அதை விடக் கொடுமையானது' என்ற கொள்கையுடையவர் முதலியார். எனவே, வேகமாக வீட்டின் பின்பக்கம் சென்றார். மானமிழந்து வாழ்வதை உயிர்விடுவதே மேல் என்ற கருத்தில், அங்கிருந்த பாம்புப் புற்றுக்குள் கையை விட்டார். அதில் இருந்த பாம்பு, கொடுத்துச் சிவந்த அந்தக்கரங்களை தீண்ட விரும்பவில்லை. ""எத்தனை பேருக்கு அள்ளிக் கொடுத்த கை,'' என்று நினைத்த பாம்பு, தன் வாயில் இருந்த ரத்தினத்தை அவர் கையில் போட்டது. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த முதலியார், பெரும் விலை மதிப்புள்ள அந்தக் கல்லுடன் வீட்டுக்குள் வந்தார். புலவரிடம் ஒப்படைத்தார்.
""பெரும் பொருளாய் இருந்தால் சுமந்து செல்ல கடினமாக இருக்குமென நினைத்து, இந்த
ரத்தினத்தை தந்தீர்களோ! இதன் விலை அளவற்றது. இதைக் கொண்டு நான் பிழைத்துக் கொள்வேன்,'' என வாழ்த்திவிட்டு புறப்பட்டார். அதை பிரபுக்களால் கூட விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், அரசனிடம் சென்றார். முதலியார் வீட்டில் தானமாக வாங்கி வந்ததாகவும், அதற்கு பொருள் தரும்படியும் கூறினார்.
அரசன் ஆவேசமானான். அதிகாரிகளைக் கடிந்து கொண்டான். ""நீங்கள் பறிமுதல் செய்யும்போது, இதுபோன்ற ரத்தினங்களை ஏன் விட்டு வைத்தீர்கள்! முதலியார் இன்னும் நிறைய வைத்திருப்பார். நானே நேரில் போகிறேன்,'' என கிளம்பினான். முதலியாரிடம் அவர் கைவசமுள்ள ரத்தினங் களைக் கேட்டான். முதலியார் நடந்த உண்மையை விளக்கினார். அதை நம்பாத மன்னன், ""அப்படியானால், மீண்டும் புற்றுக்குள் கை விடும். பாம்பு இப்போது தந்தது நாகரத்தினம். அதனிடம் ஜீவரத்தினமும் இருக்கும். அதைக் கேட்டுப் பெறும் பார்க்கலாம்,'' என்றான்.
நடப்பது நடக்கட்டுமென முதலியார் புற்றில் கையை விட்டார். பாம்பு ஜீவரத்தினத்தை அவர் கைகளில் உமிழ்ந்து விட்டு, புற்றை விட்டுவெளியே வந்து உயிர்விட்டது. முதலியாரின் பெருமையை எண்ணியும், கொடிய பாம்புக்கு இருந்த இரக்க சிந்தனை கூட தன்னிடம் இல்லாமல் போனதே என்பதை எண்ணியும் வெட்கப்பட்டான். முதலியாரிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும்பொருட்களை ஒப்படைத்தான்.

ஆன்மிக கதைகள் 90-இருப்பதிலேயே திருப்தி கொள்வோமா!

ஒருமுறை பார்வதிதேவி சிவனிடம்,""நாதா! என் சகோதரர் திருமாலும், அண்ணியார் லட்சுமியும் வசிக்கும் இல்லத்தைப் பார்த்தீர்களா! அரண்மனை போல வசதியாக இருக்கிறது. நாமோ, இந்த மரத்தடியில் வசிக்கிறோம். நமக்கும் அதே போல பெரிய இல்லமாக அமைக்கலாமே!'' என்றாள்.
சிவபெருமான் அவளிடம்,""அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அங்கே இருக்கிறார்கள். நமக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் இல்லை. அதனால், அப்படி ஒரு வீடு அமையவில்லை. என் தகுதிக்கு இந்த மரத்தடியே மிக அதிகம். இங்கும் குளிர்ச்சியாக நன்றாகத்தானே இருக்கிறது. இது போதும் நமக்கு,'' என்றார். பார்வதி விட்டபாடில்லை. ""அதெல்லாம் முடியாது! எனக்கும் பெரிய வீடு வேண்டும். அரண்மனை மாதிரி இருக்க வேண்டும்,'' என்றாள். சிவனும் சிரமப்பட்டு ஒரு அரண்மனையை உருவாக்கினார். அதற்கு கிரகப்பிரவேசம் நடத்த தகுதியான குருவை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபற்றி பார்வதி சிவனிடம் கேட்டாள். ""தேவி! என் பக்தரில் ஒருவர் இந்த கிரகப்பிரவேச சடங்கை நடத்தினால் சிறப்பாக இருக்கும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களில் உயர்ந்தவன் இலங்கை மன்னன் ராவணன். அவனை அழைப்போமே!'' என்றார். பார்வதியும் சம்மதித்தாள். சடங்குகள் யாவற்றையும் சிறப்பாகச் செய்தான் ராவணன். விழா முடிந்ததும், தட்சணை கொடுக்க வேண்டிய நேரம் வந்தது.
சிவன் அவனிடம், ""என்ன தட்சணை எதிர்பார்க்கிறாய் ராவணா?'' என்றார். அவன் அமைதியாக, ""இந்த அரண்மனை,' ' என்றான். சிவபெருமான் அமைதியாக,""இதோ, எடுத்துக்கொள்,'' என்றார். ராவணன் ஒரு அந்தணன். அந்தணர்கள் கேட்பதைக் கொடுப்பதே தர்மம். அதை சிவன் நிறைவேற்றி விட்டார். மறுபடியும் சிவபார்வதிக்கு கிடைத்தது மரத்தடி தான். இறைவனால், யாருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்! கடவுளுக்கே இவ்வளவு தான் கொடுப்பினை என்றால், மானிட ஜென்மங்களான நாம் எம்மாத்திரம்! இனியேனும், நம்மிடம் இருப்பதிலேயே திருப்தி கொள்வோமா!

ஆன்மிக கதைகள் 89 வாயுவுக்கு ஏன் அனுமான் பிறந்தார்?

உலகில் இருக்கிற ஒன்றை விட இல்லாத ஒன்றுக்கு தான் மதிப்பு. சூரியன் பகலில் இருக்கிறது. இரவில் மறைந்து இல்லாததாகி விடுகிறது. ஆக, இல்லாத ஒன்று காலையில் உதயமானதும் உயிர்கள் மகிழ்கின்றன. ஆனால், வாயுவான காற்று எப்போதும் இருக்கிறது. 24 மணி நேரமும் இருக்கிறது. சூரிய ஒளியைக்கூட பந்தல் போட்டு மறைத்து விடலாம். ஆனால், காற்று புகாத இடம் உலகில் உண்டா? ஒருவரை, இருட்டறையில் அடைத்துப் போட்டாலும் சுவாசத்துக்கு இடைஞ்சல் இருக்காது. இப்படி, காற்றாகிய வாயுபகவான் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்கள் சேவை செய்பவர். எனவே தான், அனுமானும் அவரைத் தனது தந்தையாகத் தேர்ந்தெடுத்து அவரது பிள்ளையானார். அவரது குணம் இயற்கையாகவே அமைந்தது. முன்பின் தெரியாத ராமனுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தார். காற்று புக முடியாத அளவு பாதுகாப்புமிக்க இலங்கைக்குள் அவர் புகுந்தார். அரக்கர்களை அழித்தார். இந்த சேவைக்காக அவர் ராமபிரானிடம் பாராட்டு பெற்ற போது, அவரது திருவடிகளில் விழுந்து, ""இந்த புகழெல்லாம் பகவானுக்கே உரியவை'' என்றார். தனது எஜமானனுக்கு மாறாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டிருந்த அனுமானின் இந்த அரிய பண்பை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

ஆன்மிக கதைகள் 88மரக்கன்று நடும் பணி


ஒரு நகரில் வசித்த கந்தசுவாமி என்பவர் வீடு கட்டி முடித்தார். சாதாரண வீடல்ல! பங்களா தோற்றத்தில் ஈரடுக்கு மாடி கட்டி மிகுந்த பொருட்செலவில் கிரகப்பிரவேசம் செய்தார். அந்த வீட்டுக்கு ஒரு துறவி வந்தார். அவரை அன்போடு வரவேற்றார் கந்தசுவாமி. ""எங்கள் இல்லத்தின் கிரகப்பிரவேச நாளில் தாங்கள் வந்தது எங்களுக்கெல்லாம் பெருமை. காலையில் வீட்டுக்குள் பசு நுழைந்து, கோமியம் பெய்த போது பட்ட மகிழ்ச்சியை விட இரு மடங்கு மகிழ்கிறோம்,'' என்று முகமன் கூறினார். துறவி சிரித்துக் கொண்டார். அவருக்கு பால், பழம் தரப்பட்டு உபசரிக்கப்பட்டது. சாப்பிட்ட துறவி கந்தசுவாமியை தனியே அழைத்து, ""இவ்வளவு பெரிய வீடு கட்டியிருக்கிறாயே! ஆனால், இங்கே இருப்பவர்களை அம்மை நோய் தாக்கும் போல் தாக்கும் போல் தெரிகிறதே!'' என்றதும், அதிர்ந்தார் அவர்.""சுவாமி! என்ன காரணம்! ஏதேனும் வாஸ்து தோஷம் தங்கள் பார்வைக்கு படுகிறதா?'' படபடத்தார் கந்தசுவாமி.""அதெல்லாம் இல்லை அப்பனே! இவ்வளவு பெரிய வீட்டில் எங்காவது ஒரு மரம் இருக்கிறதா! "இடம்பட வீடு எடேல்' என்று அவ்வைப் பாட்டி சொன்னது <உனக்குத் தெரியாதா? வீடு கட்டினால், சுற்றிலும் இடம் விட வேண்டும் என்பது இதன் பொருள். நீ நிறைய இடம் விட்டிருக்கிறாய். ஆனால், அதில் மரக்கன்றுகள் நடவில்லையே! இடம் விடுவதன் நோக்கமே அதுதான். மரங்கள் சூழ்ந்துள்ள வீடு குளிர்ச்சியாக இருக்கும். குளிர்ச்சியுள்ள வீட்டில் அம்மை தாக்குவதில்லை. நீ வேம்பு போன்ற மரக்கனறுகளை சுற்றிலும் நடு,'' என்றார். கந்தசுவாமி நிம்மதி பெருமூச்சு விட்டார்.அன்றே மரக்கன்று நடும் பணியைத் துவக்கி விட்டார்.

ஆன்மிக கதைகள் 87அம்மா என்றால் அன்பு : அப்பா என்றால் அறிவு

அம்மா என்றால் அன்பு : அப்பா என்றால் அறிவு

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த ராமன் என்ற சீடன் படிப்பை முடித்து கிராமத்துக்குப் புறப்பட்டான். கிராமத்திலேயே அவன் ஒருவன் தான் படித்தவன் என்பதால், அவ்வூர் மிராசுதார் அவனைப் பணிக்கு அமர்த்திக் கொண்டார். நல்ல சம்பளம், வீட்டுக்குத் தேவையான அளவு அரிசி, பருப்பு, காய்கறி என உணவு வகைகளையும் கொடுத்து விடுவார். ராமன் மிகவும் சிக்கனக்காரன். பெற்றோர் இவனையும் விட குறைத்துச் செலவழிப்பர். எனவே, வெகு சீக்கிரத்தில் தங்கள் ஓலைக்குடிசையை ஓட்டு வீடாக்கி விட்டனர். ராமனின் புத்திசாலித்தனமான செயல்களால், மிராசுதாருக்கும் லாபம் பெருகியது. அவருக்கு சீதா என்ற மகள் இருந்தாள்.
அவளை ஏன் ராமனுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. பெயர் பொருத்தமும் நன்றாக இருக்கிறதே! அவர், ராமனின் தந்தையை வரவழைத்தார். ""ஆஹா..இதை விட எங்கள் குடும்பத்துக்கென்ன பாக்கியம் வேண்டும். எங்கள் மகன் நல்வாழ்வு வாழ வேண்டும்,'' என்றார். ராமனை அழைத்தார்கள். விஷயத்தைச் சொல்லி சம்மதம் கேட்டார்கள். மகிழ்ச்சி தெரிவித்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது.பெண் வீட்டில் திருமணம் நடந்தாலும், அன்று மாலையே தன் வீட்டுக்கு மனைவியுடன் செல்ல விரும்பினான் ராமன். மிராசுதாருக்கு கோபம் வந்துவிட்டது. ""என்ன! என் மகள் உன் ஓட்டு குடிசைக்கு வருவதா! அவள் என் செல்லப்பெண். பஞ்சணையில் படுத்த அவள், அங்கு வந்து சாணத்தரையில் உருளுவாளா! முடியாது. நீ வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கே தான் இருக்க வேண்டும். வேண்டுமானால், உன் தாய் தந்தைக்கு இப்போது உனக்கு கொடுத்த சம்பளத்தை விட இருமடங்கு தருகிறேன்,'' என்றார் மிராசுதார். ராமன் மறுத்துவிட்டான்.
""ஐயா! பணத்துக்காக உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை. ஏழையோ, பணக்காரியோ... புகுந்த வீட்டில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்பவளே நல்ல மனைவி. அவள் அங்கு தான் தங்க வேண்டும்,'' என்றான். மிராசுதார் பிடிவாதமாக இருக்க, ""ஐயா! தங்கள் மகள் உங்களுக்கு உயர்வு போல, என் பெற்றோருக்கு நான் உயர்வு. என்னை அன்புடன் வளர்த்தவள் என் தாய். படாதபாடு பட்டு படிக்க வைத்தவர் தந்தை. அவர்களை மறந்தால் அன்பை மறந்து அறிவை இழந்தவனாவேன். வருகிறேன்,' 'என புறப்பட்டான். அவனது நியாயமான பேச்சைக் கேட்ட சீதாவும் கணவனுடன் கிளம்பிவிட்டாள்.

ஆன்மிக கதைகள் 86 கட்டைவிரல் இதயத்தில் கடவுள்

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான். பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், ""பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து,'' என்றார்.
பக்தன் அவரிடம், ""பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன்,'' என்றான்.
""அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, சொல்...சொல்..உடனே தீர்த்து விடுகிறேன்,'' என்றார்.
""ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் "நீ பெரியவனா? நான் பெரியவனா?' என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன். பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்?'' என்றான்.
பெருமாள் சிரித்தார். ""பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே!'' என்றார்.
""சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது. கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான். நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை. பகவனாகிய தாங்களே பெரியவர்,'' என்றான்.
""இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில்யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர்'' என்று பதிலளித்தார் பெருமாள்.
""எப்படி?'' என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், ""தாங்கள் சர்வ வியாபி. வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்?'' என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.
""பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார்,'' என்றார்.
பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.
""பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரலளவாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன்,'' என்றார்.
பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.

ஆன்மிக கதைகள் 85 விசாரிக்காமல் முடிவெடுக்காதே

திருடர்கள் சிலர் காட்டில் இருந்த பிள்ளையார் கோயிலில் கூடித் திட்டம் போட்டனர். அரண்மனையில் திருடினால் பெரும்பொருள் கிடைக்கும் என்பது அவர்களின் எண்ணமாகருந்தது. திட்டம் நிறைவேற்றினால், பிள்ளையாருக்கும் பங்கு கொடுப்பது என்று முடிவெடுத்தனர். அன்றிரவு திருடர்கள், மாகாளம் நாட்டை ஆண்ட மன்னன் பத்திரகிரியின் அரண்மனைக்குள் நுழைந்தனர். பொன்னும், பொருளையும் திருடிக்கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பினர். நள்ளிரவு நேரமாகிவிட்டது. இருந்தாலும், வேண்டிக்கொண்டபடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்றனர். இருட்டில் பிள்ளையார் சிலை இருக்குமிடம் தெரியவில்லை. இருந்தாலும் தட்டுத்தடுமாறி தடவிப்பிடித்து விலையுயர்ந்த மாணிக்க மாலையை அணிவித்தனர். ஆனால், உண்மையில், அங்கு தியானத்தில் இருந்த துறவியின் கழுத்தில் மாணிக்கமாலை விழுந்தது. துறவியின் தாடியைத் தடவிய ஒரு திருடன், அது பிள்ளையாரின் தும்பிக்கை என நினைத்து அவர் கழுத்தில் போட்டு விட்டான். மறுநாள் காவலர்கள் திருடர்களைத் தேடிப் புறப்பட்டனர். தியானத்தில் இருந்த துறவியைக் கண்டு, அரண்மனைக்கு இழுத்து வந்தனர். காரணம் அவர் கழுத்தில் கிடந்த மாணிக்க மாலை தான். துறவியோ கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மவுனம் சாதித்தார். திருடன் அவரே என்று முடிவுகட்டிய மன்னன், கழுமரத்தில் ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிட்டான். ""என் செயலால் ஆவதொன்றுமில்லை'' என்ற பாடலைப் பாடிக் கொண்டே துறவி புறப்பட்டார். தன்னைக் கொல்ல தயாராக இருந்த கழுமரத்தைப் பார்த்தார். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதிசயம் நிகழ்த்திய துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன் பத்திரகிரி. அவனுக்கு சிவதீட்சை வழங்கி தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார். அத்துறவியே திருவொற்றியூரில் முக்தி பெற்ற சிவனடியாரான பட்டினத்தார் ஆவார். சரியாக விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது, புரிகிறதா

ஆன்மிக கதைகள் 84 சிறந்த பக்தன்,'

நாரதர் தினமும் லட்சம் தடவையாவது "நாராயண' என்ற நாமத்தை ஜெபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்கு தன்னை விட பெரிய நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார். ""நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன். பதிலளிப்பீர்களா?'' என்றார். ""உம்...கேள், உலகத்திலுள்ள எல்லார் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையிலிருப்பவன் ஆயிற்றே, கேள்.. சொல்கிறேன்,'' என்றார். ""இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் என சொல்வீர்களா?''  ""உம்...ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்,'' என்றார் பகவான். நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஆகிவிட்டது.  அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு "ஹரி நாராயணா' என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான், அங்கே காத்திருந்தவர்களிடம், ""நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்துமேட்டுக்கு போ, நீ உரம் போடு,'' என்று வேலையைப் பிரித்துக் கொடுத்தான். அவனும் வேலையில் இறங்கிவிட்டான். மாலையில், வீட்டுக்கு கிளம்பினான். "ஹரி நாராயணா' என்றபடியே கலப்பையை தூக்கி தோளில் வைத்தான். இரவாகி விட்டது. அவன் மனைவி சோறு போட்டாள். சாப்பிட்டான், தூங்கிவிட்டான். உணர்ச்சிவசத்தின் உச்சிக்கே போய்விட்டார் நாரதர். "இவனைப் போய் சிறந்த பக்தர் என்றாரே பகவான், நியாயம் கேட்போம்,'' என்றவர் அடுத்த கணம் வைகுண்டத்தில் நின்றார். ""பகவானே! அந்த வெங்கடேசன் இரண்டு தடவை தான் உன் நாமம் சொன்னான். நான் லட்சம் தடவை சொல்கிறேன். அவனா உயர்ந்த பக்தன்!'' என்று வெறுப்புடன் கேட்டார். ""நாரதா! அவன் எத்தனை தடவை ஹரிநாமம் சொன்னான்?'' ""இரண்டு தடவை''. "" சரி! அவனுக்கு எத்தனை வேலைகள் இருந்தன?'' ""நிறைய வேலை பார்த்தான், ஏற்றம் இறைத்தான், நாற்று நட்டான், உழுதான், பணியாளர்களை மேற்பார்வை செய்தான், கஷ்டப்பட்டு உழைத்தான்''. ""பார்த்தாயா! பல வேலைகளுக்கு மத்தியில் அவன் இரண்டு தடவை என் நாமம் சொன்னான். அவனைக் கவனிக்கும் ஒரே வேலையைச் செய்த இன்று ஒரு தடவை கூட என் நாமத்தைச் சொல்ல மறந்து விட்டாயே!'' என்றார். அதன்பிறகு நாரதர் பகவானிடம் பேசவே இல்லை.

ஆன்மிக கதைகள் 83"சிவாயநம' என்போம்.

ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.