பாவிகளே! உங்கள் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்கிறான். இங்கே வாருங்கள்!” என்று கூவிக்கூவி அழைப்பவர்கள் இருக்கிறார்கள்! ஏதோ பாவம் என்ற பொருளை இறைவன் ‘ரீபர்ச்சேஸ்’ செய்து கொள்கிறார் என்பது போல் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கடைகளுக்குச் சென்று தங்கள் பாவங்களை குறைந்த விலைக்கு விற்றும் வருகிறார்கள். இறைவன் அதை வாங்கிக்கொள்கிறான் என்பது இந்த அப்பாவிகளின் நம்பிக்கை. பாவம்!
உண்மையில் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் பாவிகளா என்றால் இல்லை என்கிறது இந்து தர்மம். நாம் செய்யும் கர்மங்களின் வினைப்பயனாகவே பிறப்பும் இறப்பும் அமைந்து விடுகிறது என்கிறது இந்து மத உபதேசங்கள்.
சரி கர்மம் என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்கள் என்று பொருள். செயல்களில் பாபமும் அடக்கம், புண்ணியமும் அடக்கம். அதற்கான வினைப் பயன் நமது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைகிறது. நன்மை செய்பவனும், தீமை செய்பவனும் அதற்கேற்ற பிறவிகளை அடைகிறான் என்கிறது உபநிஷத்து.
“மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்” என்கிறார் உபநிஷத்தில் எமதர்மன்.
சரி இப்படி இருக்கும் போது பாபங்களை இறைவன் எடுத்துக் கொள்வான் என்று கூறப்படுவது சரியா? இறைவன் மனிதர்களின் பாபங்களை எடுத்துக் கொள்வாரா? ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றினால் இன்னொரு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகள் கொட்டப்பட்ட புதிய இடம் நாற்றமடிக்கும். அந்நாற்றத்தை அகற்ற வேண்டுமானால் அங்கே இருந்தும் அதே குப்பைகளை அகற்ற வேண்டும். பாபங்களும் அப்படித்தானே! மனிதர்களின் பாபங்களை இறைவனிடம் கொடுத்து விட்டால் இறைவன் பாவியாயிற்றே! அவன் தன் பாபத்தை கழிக்க அதை யாரிடம் கொடுப்பார்? சரி எல்லா பாபங்களையும் வாங்கி ஜீரணிக்கும் அளவு சக்தி படைத்தவன் இறைவன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி பாபம் செய்யும் மனிதர்களை அவன் படைப்பானேன் பின் அதனை தானே வாங்கிச் சுமப்பானேன்? பாபங்களே செய்யாத மனிதர்களை இறைவன் படைக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?
இங்கே தான் நாம் படைப்பின் ரகசியம் பற்றிய ஒரு தெளிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இறைவன் கோடான கோடி உயிரினத்தையும் , பல கோடி விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் மெனக்கெட்டு உட்கார்ந்து படைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். இவை யாவும் பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு சக்தியில் இருந்து உண்டானது. பரிணாமங்களும் அதன் வளர்ச்சியும் தானே நடக்கும் செயல்கள். அதாவது கர்மங்கள். அந்த கர்ம வினைகளின் பலனாகவே பாபமும் புண்ணியமும். இவை யாவும் தானாகவே நடந்தேருபவை. இவைகளை இறைவன் என்ற ஒரு உருவகம் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்து தர்மத்தின் பல்வேறு விளக்கங்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
தானாகவே உண்டான படைப்பின் ரகசியத்தை முண்டக உபநிஷத்து இவ்வாறு தெளிவாக்குகிறது.
தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:
ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்|
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸுதா:||
தஸ்மாத் – அவரிடமிருந்து; அக்னி – நெருப்பாலான க்ரகங்கள்
பஹ்வீ – பலவிதமான; ப்ரஜா: – உயிரினங்கள்; ஸம்ப்ரஸுதா:
- உண்டாகின்றன.
“அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.” – முண்டக உபநிஷத்து.
இங்கே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அளவிட
முடியாத சக்தி என்று கொள்வோம். அந்த அளவிட முடியாத சக்தியின் வாயிலாகவே எல்லாம் தோன்றியது என்று முண்டக உபநிஷதம் விளக்குகிறது. கவனிக்க, இறைவன் ஒவ்வொரு கிழமையாக ஒன்னொன்றையும் படைத்தான் என்று கூறவில்லை. இறைவனிடமிருந்து தோன்றியது என்று தான் கூறுகிறார்கள். ஆக இறைவனிடமிருந்து தோன்றியதே தவிற அவன் உட்கார்ந்து ஓவர் டைம் போட்டு படைக்கவில்லை. அதனாலேயே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தின் சக்தியாக நாம் புரிந்து கொள்வோம். அப்படி எடுத்துக் கொண்டால் படைப்பின் (ப்ரம்மத்தின்) ரகசியத்தை இன்னும் எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
சரி, படைப்பு என்பது ப்ரபஞ்சத்தில் இருந்து ஒரு சங்கிலித் தொடராக உண்டானது என்று கொண்டால், கர்மவினை, பாபம், புண்ணியம் போன்றவை எங்கிருந்து துவங்கியது என்பதையும் அறிய முற்படுவோம் அல்லவா. அந்தச் சங்கிலித் தொடரைப் பார்க்கலாம்.
அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியும் – முண்டக உபநிஷத்தின் மேற்கண்ட ப்ரம்மத்தின் தோற்றமும் ஒன்று படுவதை இங்கே கவனிக்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி என்கிறார்கள் அறிவியலாளர்கள். “அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது” – முண்டக உபநிஷத்து. இறைவன் = ப்ரபஞ்ச சக்தி.
இப்போது முதல் கர்மம், கர்மவினை அதனால் உயிர்த் தோற்றம் அவற்றினால் உண்டான பாபம் புண்ணியம் போன்றவற்றை முண்டக உபநிஷத்தின் வழியில் விளக்கமாகப் பார்ப்போம்!
ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி. நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா எனக் கொள்வோம். சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, செடி கொடி முதல் மனிதர்கள் வரை.
ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் தான் ‘நாம்’. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றறிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு ‘நம்’ வரை வந்திருக்கிறோம்.
ஆக இந்த ப்ரம்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு அதை உணர்ந்து வாழ்பவர்கள் யாரோ அவர்களே ஞானிகளாகின்றனர். அவர்கள் தங்களது ஞானத்தால் உணர்வுகளை இறைவனிடமே (அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தியிடமே) நிலை பெறச்செய்து இறுதியில் அதனுடனேயே கலந்து விடுகிறார்கள். அவ்வாறு இறைசிந்தனையில் ஆழ்ந்து கர்மங்களை தொலைப்பவர்கள் பாபங்களில் இருந்து தாமாகவே விடுபடுவார்கள்.
ஸ்ரீ க்ருஷ்ணர் இதை மெய்ப்பிக்கிறார்.
கீதைக்கு வருவோம், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார் –
“அர்ஜுனா! செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை” என்கிறார்.
மேலும் “அர்ஜுனா! எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ வாங்கிக் கொள்வதில்லை. எவருடைய குணங்களையும் பொருட்படுத்துவதில்லை, அறிவு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்கள் மாயையில் மூழ்கி உள்ளன.” என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
“அர்ஜுனா! யோகிகள் அறிவை இறைவனிடத்தில் நிலைக்கச் செய்வதாலும், அவர்கள் ஆன்மாவும் அதுவாகவே இருப்பதாலும், அதிலேயே நிலை பெறுவதாலும், அதுவே அவர்களுடைய மேலான லட்சியமாக இருப்பதாலும், அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஞானத்தால் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவாத நிலையான மோட்ச பதவியை அடைகிறார்கள்.” - ஸ்ரீ க்ருஷ்ணர், ஸந்யாஸ யோகம்.
அதாவது பாபங்கள் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதில்லை. தன்னுடைய உணர்வுகளை இறைவனிடத்திலே செலுத்தி கர்மங்கள் அதாவது பாபமோ, புண்ணியமோ எந்த விதமான உணர்ச்சிப்பூர்வ செயலிலும் ஈடுபடாமல் இறை சிந்தனையிலேயே கலந்து விடுபவர்கள் தன்னுடைய பாபங்களில் இருந்து தானே விடுபடுகிறான் என்பதே கீதோபதேசம்.
ஆக இந்து தர்மத்தின் எந்த உயர்ந்த உபதேசங்களும் இயற்கைக்கு மாறான நம்பிக்கையை வளர்ப்பதில்லை. அவை நிதர்சனமான உண்மையையும் இயற்கையின் சக்தியை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் மனிதர்கள் பாபம் செய்ய மாட்டார்கள். செய்த பாபத்தை வாங்கிக்கொள்ள (buy back) ஒரு சாமி வரும் என்று பாபத்தை விற்க வரிசையில் நிற்க மாட்டார்கள்!. இதனை நாமும் புர்ந்து கொள்வோம். மற்றவருக்கும் எடுத்துச் சொல்வோம்! அதாவது..