தர்மம் என்றால் என்ன
1. காளியின் காட்சி
குருநாதர் எம்மைக் காட்டிற்குள் கூட்டிச் சென்று, பல உபதேசங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, இரவில் சுமார் 12 மணி இருக்கும். திடீரென்று, காட்டிற்குள் ஒளி வெள்ளம் தெரிந்தது. எமக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.
அவ்வொளி வெள்ளத்தின் நடுவே, காளி உருவம் தெரிந்தது. அது மறைந்து, விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள் குவியலாகத் தெரிந்தது. அவைகள் வைரங்கள், வைடூரியங்கள், நகைகள் போன்றவைகளாக இருந்தன. குருதேவர், எம்மிடம் வந்து அவைகளைச் சுட்டிக் காட்டி, “இவைகள் பொய்யல்ல நிஜமானவைகள்தான், எடுத்துக் கொள்” என்றார்.
எம்மால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னால் இவ்வளவு நகைகளை யாம் கண்டதில்லை. மேலும், குருதேவர் தொட்டுப் பார் என்று கூறி, “நீ காண்பது கனவல்ல நிஜம்தான்” என்று சொல்லி, அதை நிரூபிக்க எம்மை நறுக்கென்று கிள்ளினார். எமக்கு வலி தெரிந்தது. நகைகளைத் தொட்டுப் பார்த்தோம், நிஜமானவைகள்தாம் என நம்பினோம்.
“இவைகளெல்லாம் உனக்குச் சொந்தமாக்கினால் என்ன செய்வாய்? என்று குருதேவர் எம்மிடம் கேட்டார்.
அவர் கேட்ட வேகத்தில், யாம் சொன்ன பதில் “ஏழைகளுக்கு தர்மம் செய்வேன்” என்றோம். பதில் சொன்ன வேகம்தான், எமக்குப் படாரென்று ஓர் அடி கன்னத்தில் விழுந்தது. அடித்தவர் குருதேவர், யாம் கதிகலங்கி விட்டோம். அந்த நிமிடம், அனைத்துப் பொருள்களும் மறைந்து போயின.
2. தர்மம் என்றால் என்ன?
குருநாதர் எமக்கு விளக்கம் கொடுக்கின்றார். தர்மம் என்று நீ செய்தால், நியாயமாக இருப்பவன் அருகில் வந்து வாங்க முடியாது.
சாப்பாடு போடுகிறாய், தர்மம் செய்கிறாய் என்றால், வருபவன் ஆயிரம் கஷ்டங்களைச் சொல்லி, அதை அவன் வாங்கி அது கெட்டதற்குத்தான் போகுமே தவிர, நீ நல்லதை தர்மம் பண்ணி நல்லதாக்க முடியாது. “தர்மம் என்றால் என்ன?” என்பதை நீ புரிந்து கொள் என்றார் குருநாதர்.
ஒருவன் சிரமப்படப் போகும் பொழுது,
நல்லதைச் செய்ய முயற்சிக்கின்றான் என்றால்,
அந்த நல்ல வழியைக் காட்டி,
நல்ல உபதேசத்தைக் கொடுத்து, நல்லதைச் செய்து,
அவனுக்குப் பொருளைக் கொடுத்தால்,
அவன் அதைக் காப்பான்.
அது இல்லாதபடி செய்தால், நீ தர்மம் செய்யப்படும் பொழுது, ஆயிரம் பொய்களைச் சொல்வான், இரக்கமாகச் சொல்வான். அதே சமயத்தில், நல்லவன் ஒருவன் இருந்தானென்றால், அவனை இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு உன்னிடம் ஒண்டுவான்.
கெட்டது எல்லாவற்றையும் அவன் மேலே சொல்லி, நல்லவனைக் கெட்டவனாக்கிவிட்டு, உன்னிடம் பாசமாக நடித்து, உன்னிடம் வாங்கித் தின்பதற்கு வருவான். இதுதான் தர்மமாகிப் போகும்.
ஆக, நீ சாப்பாடு போடுவதால், என்னென்ன நிலை இருக்கிறது? தர்மத்தை நீ எப்படியடா காக்கப் போகிறாய்? இவ்வளவு சிரமப்பட்டு தர்மம் செய்தால், முன்னாடி வருபவன், நல்லவனைத் தள்ளிவிட்டு விடுவான். நல்லவனுக்குப் போட முடியாது. ஆக நீ எந்த அளவில் தர்மம் போடப் போகிறாய்? என்று கேட்டார் குருநாதர்.
யாம் அவரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம். அவ்வாறு அந்த அடி வாங்கியபின் தான், தர்மம் என்றால் என்ன? என்று இந்த விளக்கத்தைச் சொல்கின்றார் குருநாதர்.
3. தர்மத்தைப் பற்றி அறிந்து கொள்ள நேரடி அனுபவம்
தர்மம் செய்வதைப் பற்றி அறிவதற்காக வேண்டி, குருநாதர் எம்மை இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். ஒருவருக்குப் பணம் வரவில்லை. அவர் எனது நண்பர். அந்த நண்பர் ஒருவருக்குக் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்த இடத்தில் இருந்து, பணம் திரும்ப வரவில்லை.
பணத்தைக் கொடுத்த, அந்த நண்பர் என்னைத் தேடி வருகிறார். நீ சாமியிடம் (குருநாதரிடம்) போய்க் கொண்டிருக்கின்றாயே, எப்படியாவது அவரிடம் சொல்லி, வராத இந்தப் பணம் வந்துவிட்டால், உனக்கு வேண்டியதைச் செய்கின்றேன், என்று எம்மிடம் சொல்கின்றார்.
அந்தப் பணத்தை அவனிடம் விடுவதற்கில்லை. இல்லை என்று சொல்லிவிட்டான். அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும். அந்தப் பணத்தை வாங்க வேண்டும். உன் குருநாதரிடம் சொல்லி வாங்கிக் கொடு, என்று எம் நண்பர் கேட்டார்.
என்னால் குருநாதரிடம் கேட்க முடியாது, இதெல்லாம் வம்பான நிலைகள். எதாவது ஆகிவிட்டால், நான் சிக்கிக் கொள்வேன் என்று, யாம் நண்பரிடம் கூறினோம்.
நண்பரோ, சும்மா உன் குருநாதரிடம் கேட்டுப்பார் என்றார்.
நான் இங்கிருந்து போனவுடன், குருநாதர் எம்மைப் பார்த்து, “நீ சரி என்று சொல்ல வேண்டியதுதானடா” என்கிறார். பணம் அனைத்தையும் உன்னிடம் தருகிறான், “வாங்கிக் கொள்ளடா” என்று சொல்கின்றார்.
எனக்குத் தெரியாது சாமி, என்றேன்.
தெரியாதவன் ஏன்டா இங்கு வருகிறாய்? அப்படியே எம்மிடம் வம்பு செய்து, அதைச் சொல்லி, இதைச் சொல்லி, கடைசியில் வாங்கிக் கொள் என்கிறார் குருநாதர். “கிடைக்கும்” என்று அவனிடம் போய்ச் சொல் என்று, சொல்கின்றார்.
அவ்வாறு சொல்லியவுடன், அவருக்குப் போன பணம் வந்துவிட்டது. அவர் என்ன செய்கிறார்? அவர்களிடம் பணத்தை விட்டுவிடக் கூடாது. எப்படியாவது, தர்மத்திற்காவது செய்து விடுவேன். விடக்கூடாது என்ற எண்ணத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு, நேராக எம்மிடமே கொண்டு வந்தார்.
கொண்டு வந்தவுடன், குருநாதர், சீட்டைக் கையில் கொடுத்து, பழனியில் எத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் சீட்டைக் கொடு என்கிறார்.
சீட்டைக் கொடுத்து நீ சொல்லும் பொழுது, இலவசமாக இரண்டு வேஷ்டி, அதில் 1¼ ரூபாய், முழுச் சாப்பாடு, அவர்களுக்கு வேண்டிய பலகாரம், பாயாசம் இதெல்லாம் உண்டு என்று சொல்ல வேண்டும் என்றார்.
ஆக, ஒரு இலைக்கு ரூபாய் 6 முதல் 8 ரூபாய் வரை ஆனது. எல்லாவற்றையும் இலை போட்டு, பந்தி போட்டுக் கொடுக்கச் சொன்னார். சுமார் 4000 பேர், பழனியில் பிச்சை எடுப்பவர்கள், சாமியார்கள் இருந்தார்கள்.
இவ்வளவு பேருக்கும் சாப்பாடு தயாராகிவிட்டது. அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து, எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்துவிட்டார் குருநாதர்.
அங்கே பழனி தேவாஸ்தான சத்திரத்தில் ஓட்டல் ஒன்று உண்டு. சாப்பாடு வந்தவுடன் முழுவதுமாகப் போட்டு விடவேண்டும். ஆனால், எல்லோரையும் ஒரே நேரத்தில் சாப்பிட வைக்க வேண்டும் என்று, அங்கே உள்ளவரிடம் குருநாதர் சொல்லிவிட்டார்.
வேஷ்டி, துண்டு எல்லாம் வாங்கிவந்து வைத்துக் கொண்டு, வரிசையாக வரச் சொல்கின்றார். டிக்கெட்டும் கொடுத்துவிட்டோம். எல்லோரும், “ஓம் ஈஸ்வரா”, ஒம் நமச்சிவாய” என்று சொல்லிவிட்டு, சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.
சாப்பிடும் பொழுது, வேஷ்டி, துண்டு, ரூபாய், எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். எல்லோரும் வரிசையாக நிறகும் பொழுது, அங்கிருந்து ஒருவன் ஓடி வந்தான், முதலில் வந்தான். அவனை உள்ளே விட்டு விடச் சொன்னார் குருநாதர்.
விட்டுவிட்டோம். அவனை விட்டவுடன், மற்றவர்களெல்லாம் முதலில் இருப்பவரை விலக்கிவிட்டு, கிடுகிடு என்று எல்லோரையும் தள்ளிவிட்டு, காசு துணிமணி போனாலும் பரவாயில்லை, நாம் அங்கு உட்கார்ந்து கொள்ளலாம், என்று வேகமாகத் தள்ளிவிட்டு, திமு திமு என்று சென்று, சாப்பாட்டை எல்லாம் மிதித்துவிட்டார்கள்.
“பார்த்தாயாடா? தர்மம் தலைகாப்பதை” என்று குருநாதர் எம்மிடம் சொன்னார். அவன் சாப்பாட்டிற்கும், துணிக்கும் தான் இந்த நிலை. சாப்பாட்டைப் பற்றி அவன் நினைக்கவில்லை. வேஷ்டி, துண்டை விற்றால், நாளைக்குக் கஞ்சா அடிக்கக் காசு கிடைக்கும் என்று, இப்படிச் செய்கின்றார்கள்.
அவன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல்
தவறான நிலைக்குப் போய்த்தான்,
இந்த நிலைக்கு வந்திருக்கின்றான்.
அவனுக்கு அறிவு இல்லையென்றால்,
நீ தர்மம் கொடுத்துப் பிரயோஜனம் இல்லை என்றார், குருநாதர்.
அவனுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும். ஆக, நீ முதலில் அறிவைக் கொடுத்து, பின் உணவைக் கொடுத்தால், அந்த உணர்வின் தன்மை இருக்கும் என்று, அந்த தர்மத்தைப் பற்றிக் கூறினார் குருநாதர். முதலில், அங்கே அடி கொடுத்ததற்குப் பதில், இங்கே அதைச் செய்தே காட்டுகின்றார்.
யாருக்கும் அறியாத சந்தர்ப்பம், முதலில் தீய நிலைகளில் இட்டுச் செல்கிறது. ஆனால், அவனறியாமலேயே அந்த வலைகளில் சிக்குகின்றான்.
அவனை மீட்டும் நிலைகளில்,
நீ எண்ணத்தைக் கொண்டு,
நல்லறிவை அவனுக்குப் புகட்டு.
அதன்பின், நீ கொடுக்கும் பொருள் அவனிடத்தில் வளரும் என்று, தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.