Sunday, September 30, 2012
சிவபுராணம் – பொருள் / விளக்கம்
நமச்சிவாய வாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க;
நாதன் தாள் வாழ்க – திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க;
கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க – திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க;
வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
“ஏகன் அநேகன்” என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக;
மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் – தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க – பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக;
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க – தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக;
இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், “புறத்தார்க்குச் சேயோன்” என்றார்.
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க – கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக;
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார், சிரங்குவிவார்” என்று கூறினார்
ஈசன் அடி போற்றி – ஈசனது திருவடிக்கு வணக்கம்,
எந்தை அடி போற்றி – எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம்,
தேசன் அடி போற்றி – ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்;
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்;
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்;
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்.
ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க
———————————————————————————————————————————-
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி,
சிந்தை மகிழ – மனம் மகிழும்படியும்,
சிவபுராணந்தன்னை – சிவனது அநாதி முறைமையான பழமையை
முந்தை வினை முழுதும் ஓய – முன்னைய வினை முழுமையும் கெடவும், ,
யான் உரைப்பன் – யான் சொல்லுவேன்.
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி – நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து,
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி – நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின்,
——————————————————————————————————————————————
விண் நிறைந்தும் – வானமாகி நிறைந்தும்,
மண் நிறைந்தும் – மண்ணாகி நிறைந்தும்,
மிக்காய் – மேலானவனே,
விளங்கு ஒளியாய் – இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி,
எண் இறந்து – மனத்தைக் கடந்து,
எல்லை இலாதானே – அளவின்றி நிற்பவனே,
நின்பெருஞ்சீர் – உன்னுடைய மிக்க சிறப்பை,
பொல்லா வினையேன் – கொடிய வினையையுடையவனாகிய யான்,
புகழும் ஆறு ஒன்று அறியேன் – புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, “விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்” என்றார். “உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்” என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார்.
புல் ஆகி – புல்லாகியும்,
பூடு ஆய் – பூண்டாகியும்,
புழு ஆய் – புழுவாகியும்,
மரம் ஆகி – மரமாகியும்,
பல்விருகமாகி – பல மிருகங்களாகியும்,
பறவை ஆய் – பறவையாகியும்,
பாம்பு ஆகி – பாம்பாகியும்,
கல் ஆய் – கல்லாகியும்,
மனிதர் ஆய் – மனிதராகியும்,
பேய் ஆய் – பேயாகியும்,
கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும்,
வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும்,
முனிவர் ஆய் – முனிவராகியும்,
தேவர் ஆய் – தேவராகியும்,
சொல்லாநின்ற – இயங்குகின்ற,
இ – இந்த,
தாவர சங்கமத்துள் – அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே,
எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து,
இளைத்தேன் – யான் மெலிவடைந்தேன்,
எம்பெருமான் – எம்பெருமானே,
மெய்யே – உண்மையாகவே,
உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு,
இன்று – இப்பொழுது,
வீடு உற்றேன் – வீடு பெற்றேன்.
எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.
இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம்
உய்ய – நான் உய்யும்படி,
என் உள்ளத்துள் – என் மனத்தில்,
ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற,
மெய்யா – மெய்யனே,
விமலா – மாசற்றவனே,
விடைப்பாகா – இடபவாகனனே,
வேதங்கள் – மறைகள்,
ஐயா என – ஐயனே என்று துதிக்க,
ஓங்கி – உயர்ந்து,
ஆழ்ந்து அகன்ற – ஆழ்ந்து பரந்த,
நுண்ணியனே – நுண்பொருளானவனே.
ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,” என்றார்.
சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, “விடைபாகா” என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.
இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.
“அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்”
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், “வேதங்கள் ஐயா என ஓங்கி” என்பதனால் கிடைக்கிறது.
இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட “ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்றார். “அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்” என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
வெய்யாய் – வெம்மையானவனே,
தணியாய் – தன்மையானவனே,
இயமானன் ஆம் விமலா – ஆன்மாவாய் நின்ற விமலனே,
பொய் ஆயின எல்லாம் – நிலையாத பொருள்கள் யாவும்,
போய் அகல – என்னை விட்டு ஒழிய,
வந்தருளி – குருவாய் எழுந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி – மெய்யுணர்வு வடிவமாய்,
மிளிர்கின்ற – விளங்குகின்ற,
மெய்ச்சுடரே – உண்மை ஒளியே,
எஞ்ஞானம் இல்லாதேன் – எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு,
இன்பப் பெருமானே – இன்பத்தைத் தந்த இறைவனே,
அஞ்ஞானந்தன்னை – அஞ்ஞானத்தின் வாதனையை,
அகல்விக்கும் – நீக்குகின்ற,
நல் அறிவே – நல்ல ஞானமயமானவனே.
இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது,
“வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா”
என்றதனால் கிடைக்கிறது.
ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, “பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே” என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” என்றார்.
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் – தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே,
அனைத்து உலகும் – எல்லா உலகங்களையும்,
ஆக்குவாய் – படைப்பாய்,
காப்பாய் – நிலைபெறுத்துவாய்,
அழிப்பாய் – ஒடுக்குவாய்,
அருள் தருவாய் – அருள் செய்வாய்,
போக்குவாய் – பிறவியிற்செலுத்துவாய்,
என்னை – அடியேனை,
புகுவிப்பாய் – புகப்பண்ணுவாய்,
நின் தொழும்பில் – உன் தொண்டில்,
நாற்றத்தின் நேரியாய் – பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே,
சேயாய் – தொலைவில் இருப்பவனே,
நணியாய் – அண்மையில் இருப்பவனே,
மாற்றம் மனம் கழிய நின்ற – சொல்லும் மனமும் கடந்து நின்ற,
மறையோனே – வேதப் பொருளாய் உள்ளவனே,
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல,
சிறந்த அடியார் சிந்தனையுள் – சிறந்த அன்பரது மனத்துள்,
தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் – எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற,
எங்கள் பெருமான் – எம்பெருமானே.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, “ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்” என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே, மறைத்தலும் கொள்ளப்படும்.
ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், “ஆக்கம் அளவிறுதி யில்லாய்” என்றார்.
இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், “போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்றார்.
பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் – ஐந்து நிறங்களை உடையவனே,
விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க,
மறைந்து இருந்தாய் – அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே,
எம்பெருமான் – எம் பெருமானே,
வல்வினையேன் தன்னை – வலிய வினையையுடையவனாகிய என்னை,
மறைந்திட மூடிய – மறையும்படி மூடியுள்ள,
மாய இருள் – அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு,
அறம் பாவம் என்னும் – புண்ணிய பாவங்கள் என்கின்ற,
அருங்கயிற்றால் கட்டி – அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று,
புறம்தோல் போர்த்து – வெளியே தோலால் மூடி,
எங்கும் புழு அழுக்கு மூடி – எவ்விடத்தும் புழுக்கள் நௌ¤கின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,
மலம் சோரும் – மலம் ஒழுகுகின்ற,
ஒன்பது வாயில் குடில் – ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை,
மலங்க – குலையும்படி,
புலன் ஐந்தும் – ஐம்புலன்களும்,
வஞ்சனையைச் செய்ய – வஞ்சனை பண்ணுதலால்,
விலங்கும் மனத்தால் -உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே,
விமலா – மாசற்றவனே,
உனக்கு – உன்பொருட்டு,
கலந்த அன்பு ஆகி – பொருந்தின அன்பை உடையேனாய்,
கசிந்து உள் உருகும் – மனம் கசிந்து உருகுகின்ற,
நலந்தான் இலாத – நன்மையில்லாத,
சிறியேற்கு – சிறியேனுக்கு,
நல்கி – கருணை புரிந்து,
நிலத்தன்மேல் வந்தருளி – பூமியின்மேல் எழுந்தருளி,
நீள் கழல்கள் காட்டி – நீண்ட திருவடிகளைக் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு – நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு,
தாயின் சிறந்த – தாயினும் மேலாகிய,
தயா ஆன – அருள் வடிவான,
தத்துவனே – உண்மைப்பொருளே.
இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும் சாத்திரம் கூறும். “பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்” என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், “வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய” என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், ‘ஒன்பது வாயிற்குடில்’ என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள்.
ஒன்பது வாயிலாவன – செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், “குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், ‘விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்’ என்றும் கூறினார்.
“நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே” என்றார்.
இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார்.
மாசு அற்ற சோதி மலர்ந்த – களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த,
மலர்ச்சுடரே – பூப்போன்றே சுடரே,
தேசனே – குரு மூர்த்தியே,
தேனே – தேனே,
ஆர் அமுதே – அரிய அமுதே,
சிவபுரனே – சிவபுரத்தையுடையானே,
பாசம் ஆம் பற்று அறுத்து – பாசமாகிய தொடர்பையறுத்து,
பாரிக்கும் – காக்கின்ற,
ஆரியனே – ஆசிரியனே,
நேச அருள் புரிந்து – அன்போடு கூடிய அருளைச்செய்து,
நெஞ்சில் வஞ்சம் கெட – என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய,
பேராது நின்ற – பெயராமல் நின்ற,
பெருங்கருணை – பெருங்கருணையாகிய,
பேர் ஆறே – பெரிய நதியே,
ஆரா அமுதே – தெவிட்டாத அமிர்தமே,
அளவு இலாப் பெம்மானே – எல்லையில்லாத பெருமானே,
ஓராதார் உள்ளத்து – ஆராயாதார் மனத்தில்,
ஒளிக்கும் – மறைகின்ற,
ஒளியானே – ஒளியையுடையானே,
நீராய் உருக்கி – என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி,
என் ஆர் உயிராய் நின்றானே – என் அரிய உயிராய் நின்றவனே,
இன்பமும் துன்பமும் – சுகமும் துக்கமும்,
இல்லானே – இயற்கையில் இல்லாதவனே,
உள்ளானே – அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே,
அன்பருக்கு அன்பனே – அன்பர்களிடத்து அன்புள்ளவனே,
யாவையும் ஆய் – கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி,
அல்லையும ஆம் – தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற,
சோதியனே – பேரொளியையுடையவனே,
துன் இருளே – நிறைந்த இருளானவனே,
தோன்றாப் பெருமையனே – புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே,
ஆதியனே – முதல்வனே,
அந்தம் நடு ஆகி – முடிவும் நடுவும் ஆகி,
அல்லானே – அவையல்லாது இருப்பவனே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட – என்னை இழுத்து ஆட்கொண்டருளின,
எந்தை பெருமானே – எமது தந்தையாகிய சிவபெருமானே,
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் – மிகுந்த உண்மை ஞானத்தால்,
கொண்டு உணர்வார்தம் கருத்தில் – சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்,
நோக்கு அரிய – எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய,
நோக்கே – காட்சியே,
நுண்உணர்வே – இயற்கையில் நுட்பமாகிய அறிவே,
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே – எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே,
காண்பு அரிய பேர் ஒளியே – காண்பதற்கரிய பெரிய ஒளியே,
ஆற்று இன்ப வெள்ளமே – மகாநதி போன்ற இன்பப் பெருக்கே,
அத்தா – அப்பனே,
மிக்காய் – மேலோனே,
நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் – நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்,
சொல்லாத நுண் உணர்வு ஆய் – சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும்,
மாற்றம் ஆம் வையகத்தின் – மாறுபடுதலையுடைய உலகத்தில்,
வெவ்வேறே வந்து – வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து,
அறிவு ஆம் – அறிவாய் விளங்கும், தேற்றனே – தௌ¤வானவனே,
தேற்றத் தௌ¤வே – தௌ¤வின் தௌ¤வே,
என் சிந்தனையுள் ஊற்று ஆன – என் மனத்துள் ஊற்றுப் போன்ற,
உண் ஆர் அமுதே – பருகுதற்கு அரிய அமிர்தமே,
உடையானே – தலைவனே.
சோதி – பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் “சோதி மலர்ந்த சுடரே” என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், “மலர்ச்சுடர்” என்றார். பாசம் – அறியாமை.
அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, “நெஞ்சில் வஞ்சங்கெட …………….. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்றான்.
இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே,” என்றார்.
இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் “யாவையுமாய்,” தன்மையால் வேறாதலால் “அல்லனுமாய்” இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், “சோதியனே, துன்னிருளே” என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், “ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே” என்றார்.
இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், “நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, “சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே” என்றார்.
உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, “மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே” என்றார்.
இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன.
வேற்று விகார – வெவ்வேறு விகாரங்களையுடைய,
விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் – ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன்,
எம் ஐயா – எம் ஐயனே,
அரனே – சிவனே,
ஓ என்று என்று – ஓ என்று முறையிட்டு,
போற்றி – வணங்கி,
புகழ்ந்து இருந்து – திருப்புகழை ஓதியிருந்து,
பொய் கெட்டு – அறியாமை நீங்கி,
மெய் ஆனார் – அறிவுருவானவர்கள்,
மீட்டு இங்கு வந்து – மறுபடியும் இவ்வுலகில் வந்து,
வினைப்பிறவி சாராமே – வினைப் பிறவியையடையாமல்,
கள்ளப்புலம் குரம்பைக் கட்டு – வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை,
அழிக்க வல்லானே – அறுக்க வல்லவனே,
நள் இருளில் – நடு இரவில்,
நட்டம் பயின்று – மிகுந்து,
ஆடும் – நடனம் செய்கின்ற,
நாதனே – இறைவனே,
தில்லையுள் கூத்தனே – திருத்தில்லையில் நடிப்பவனே,
தென்பாண்டி நாட்டானே – தென்பாண்டி நாட்டையுடையவனே,
அல்லல் பிறவி அறுப்பானே – துன்பப் பிறப்பை அறுப்பவனே,
ஓ என்று – ஓவென்று முறையிட்டு,
சொல்லற்கு அரியானைச் சொல்லி – துதித்தற்கு அருமையானவனைத் துதித்து,
திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் – அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின்,
பொருள் உணர்ந்து சொல்லுவார் – பொருளையறிந்து துதிப்பவர்,
சிவபுரத்தினுள்ளார் – சிவநகரத்திலுள்ளவராய்,
சிவன் அடிக்கீழ் செல்வர் – சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
பல்லோரும் ஏத்த – எல்லாரும் துதிக்க,
பணிந்து – வணங்கி
வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், “விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்” என்றார். நாயனாரும், “பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை,” என்று கூறினார்.
பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், “மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.” ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார்.
நள்ளிருள் – சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, “தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை.
இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.
சமஸ்கிருத நாளிதழ்--சமஸ்கிருதம் பேசும் ஒரிசா கிராமம்
சமஸ்கிருதம் பேசும் ஒரிசா கிராமம்;
மத்திய அரசின் அட்டவணையைப் பட்டியலில் சமஸ்கிருதம் இருந்தாலும், இன்று சமஸ்கிருதம் என்பது, பேச்சு மொழியாக இந்தியாவில் இல்லை. உலக செம்மொழிகளில் தமிழ் மட்டுமே, வழக்கத்தில் உள்ள பேச்சு மொழியாக உள்ளது. சமஸ்கிருதம் தற்போது இலக்கிய, பாட மொழியாக மட்டுமே உள்ளது. கோயில்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது. யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப் பட்ட சில பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.ஏ., சமஸ்கிருதம் கூட, ஆங்கில மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. தேர்வுகளும் ஆங்கில மொழியில் தான் எழுதப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்துரைத் தொடர்ந்து, ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டத்தில் சியாம்சுந்தர் கிராம் பஞ்சாயத்தில் உள்ள சசனா கிராமம், சமஸ்கிருதம் பேசும் கிராமமாக மாறியுள்ளது. சமஸ்கிருத மொழி மட்டுமின்றி, பாரம்பரிய வரலாற்றை வெளிப் படுத்தும் வகையில், இந்த கிராமத்தின் பழக்க வழக்கங்கள் உள்ளன. மொழியியல் வல்லுனர்கள் இந்த கிராமத்தை வந்து பார்ப்பதால், சசனா கிராமம் ஒரிசாவின் புகழ்பெற்ற கிராமமாக மாறி வருகிறது.
சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை.
கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன.
சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது.
சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு.
டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது.
எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது.
ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை.
ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள்.
சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.
உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழ்
உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழாக வெளியாகி வரும் "சுதர்மா” பத்திரிகை ஆதரவு இன்றித் தள்ளாடி வருகிறது.
தற்போது 43ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சுதர்மா நாளிதழ் பல்வேறு ஜாம்பவான்கள் ஆதரவளித்து நடத்தி வந்த நிலையில், தற்போது கணவன் - மனைவி இருவரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பொருளாதார பலத்தை அதன் ஆலோசகர்களால் அளிக்க முடியாத சூழ்நிலையில், பத்திரிகை நடத்துவது கேள்விக்குறியாகி வருவதாக அதன் வெளியீட்டாளர் ஜெயலட்சுமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சுதர்மா இதழின் ஆசிரியர் சம்பத் குமார் இது பற்றிக் கூறியபோது, பல்வேறு தடைகளையும் தாண்டி பத்திரிகையை நடத்தி வருகிறோம். இது எங்களுக்கு ஒரு இயக்கத்தைப் போன்றது என்றார். இவர் அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் அலுவலகம் திரும்பியுள்ளார்.
"நாங்கள் எக்காரணம் கொண்டும் முன்வைத்த காலை பின்வாங்கப் போவதில்லை. லட்சியத்துடன் நடத்துகிறோம். ஆனால் எங்களுக்கான ஆதரவாளர்கள் குறைந்து வருகின்றனர். 4 ஆயிரம் சந்தாதாரர்கள் மற்றும் பள்ளி கல்லூரி அமைப்புகளை வைத்தே இயங்குகிறோம். செய்தி, செய்திக் கண்ணோட்டம் என நாளிதழுக்கான அம்சங்களுடன் இயங்கி வருகிறோம். சம்ஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். கர்நாடக மாநில அரசின் விளம்பரத்துறை மற்றும் டிஏவிபி இயக்குநரகம் விளம்பரம் தந்து ஊக்குவிப்பதில் அலட்சியம் காட்டுகிறது” என்றார் வெளீயீட்டாளர் ஜெயலட்சுமி.
சுதர்மா இதழ், சம்பத்குமாரின் தந்தையார் வரதராஜ ஐயங்காரால் 1970ல் தொடங்கப் பெற்றது. தன் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது, எக்காரணம் கொண்டும் அவர் தொடங்கிய பத்திரிகையை மூடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தாராம் சம்பத் குமார். அதன் பின்னர் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடத்தி வருகிறேன் என்கிறார் அவர். மேலும், நாட்டின் கௌரவத்தை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் ஒரு மொழியினை நாம்தான் பாதுகாக்க வேண்டும். உலகமயமாக்கல் அதிகரித்தபிறகு ஆங்கிலமே அனைத்துக்கும் என்று நாம் எண்ணி மாய்ந்து போகிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றார் சம்பத் குமார்
சம்ஸ்கிருத மொழி பற்றி .....
சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா?
’நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படி செயல்படு’
என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.
‘இந்திய மொழிகளிலேலே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்.
‘பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் கூறினாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை. அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்’ என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல் (11.18.2.3).
பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’.
இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.
சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.
’அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)
‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.
வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.
‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.
மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.
ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.
தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.
தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.
கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.
பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.
அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.
உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்
‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.
அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.
‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.
‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘
என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.
பண்டிதமணி பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்துகொள்ள சோமலெ எழுதி இன்ப நிலையம் வெளியிட்டுள்ள புத்தகத்தைப் பார்க்கலாம்.
வால்மீகி முனிவர்
சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழிஅல்ல என்பதைச் சொல்லி வருகிறேன். இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளால் சமாதானம் அடையாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து கீழே வரும் பட்டியலைப் பார்க்கவும்.
மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….
இவர்களெல்லாம் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர்கள். இவர்களுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்க்ருதத் தொடர்புடையவை.
அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் கொண்டவர் முன்னணியில் இருக்கிறார்.
நூற்றாண்டுகளாகத் தனித்தமிழ் இயக்கம் நடந்த பிறகும் இதுதான் நிலைமை.
தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்;
முதல் அமைச்சர் கருணாநிதியின் இருப்பிடமான கோபாலபுரமும், ஜி.கே. வாசனின் ஊரான கபிஸ்தலமும் சமஸ்க்ருதப் பெயர்களே. தொடர்கின்ற மற்ற ஊர்களையும் பாருங்களேன்.
திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது.
தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல்.
சமஸ்க்ருத வளர்ச்சி பா.ஜ.க வுக்கு உதவுமா?
இந்தியக் கலாச்சாரம், சமஸ்க்ருத வளர்ச்சி ஆகியவற்றில் பல்லாண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ‘பாரதிய வித்யா பவன்’ ஒரு காங்கிரஸ்காரரால் நிறுவப்பட்டது. அவர். கே. எம். முன்ஷி.
‘இந்தியாவின் செல்வங்களிலேயே அதிக சிறப்புடையது எது என்று என்னைக் கேட்டால் தயக்கமில்லாமல் நான் சம்ஸ்க்ருதம் தான் என்று சொல்லுவேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு.
மற்றபடி சமஸ்க்ருத வளர்ச்சி இந்தியாவின் எழுச்சிக்கு உதவும், இந்தியாவின் எழுச்சி பா.ஜ,க வுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும், குடியரசுக் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும் கூட உதவும்.
பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்ருத மொழியை ஆதரிப்பதால் பயன் உண்டா?
வாழ்க்கை நமக்கு ஒரு வரப்ரசாதம் என்கிறார் காலை நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் யோகப்பியாசம் சொல்லித்தரும் பெண்மணி. இந்த வரமும் பிரசாதமும் தமிழா, சமஸ்க்ருதமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை.
கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன.
சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது.
சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு.
டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது.
எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது.
ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை.
ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள்.
சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்
‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு’ மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.
முதல் அமைச்சரே மொழி மாற்றத்தை விரும்புகிறார் என்றால் அந்த மொழி, புழக்கத்தில் உள்ளதா, இல்லையா என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.
பரிசுப் பொருட்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் பரிசு பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை – ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன். – காமராஜர்.
தமிழர் வாழ்வில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு என்ன?
தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இசைவாக, இணையாக இறைமையாகக் கருதுவது வள்ளுவர் காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் தமிழ் மரபு.
இன்னும் தமிழ்நாட்டில் கவிஞர்களின் கற்பனைச் செழுமைக்கும் எழுத்தாளர்களின் உயர்ந்த சிந்தனைக்கும் வாக்கிய வனப்புக்கும் ஊற்றுக் கண்ணாயிருக்கிறது சமஸ்கிருதம்.
‘புதுக்கவிதையில் சமஸ்க்ருத கூறுகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம்.
சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளுக்கும்; காவ்ய தரிசனங்களுக்கும், தர்க்கம், மொழியியல், மானுடவியல், தாவரையல், அகராதியியல் என்ரு ஆழ்ந்து அறிவதற்கும், கணித நுண்மைக்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும், ஒவ்வாமை, பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சோதிடத் திறமைக்கும் சம்ஸ்க்ருதப் பலகணியைத் திறக்கவேண்டும்.
தென் குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கணபதி ஸ்தபதிக்கு கட்டிடக் கலை தொடர்பான சம்ஸ்க்ருத நூல்கள் பயன்பட்டன என்று அவரே சொல்லியிருக்கிறார்.
தமிழ்ப் பற்றாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் கவிஞர் பாரதிதாசன். அவருடைய கவிதை வரி ஒன்றைப் பார்ப்போமா!
‘’ஊரின நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’
என்ற வரிகளில் ‘பத்திரிகை’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதழ், ஏடு, தாளிகை என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
வற்றாக் கருணையோடு வந்து உதித்த அருட்பிரகாச வள்ளலார் தாம் நிறுவிய பாடசாலையில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயிற்றுவித்தார்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் செய்யப்படும் சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தம் கூறுகிறார்.
‘உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒலியன்கள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் நிறைந்து இருக்கின்றன. முள்ளை மலராக்கும் – கல்லைக் கனியாக்கும், காட்டை நந்தவனமாக்கும் வல்லமையை அந்த மொழி பெற்றிருப்பதால் தான் ஆண்டவனுக்கு அர்ச்சனை உரிய மொழியாக உயர்ந்து நிற்கிறது. செம்பில் சிறந்த தெய்வத்தைக் காட்டுகிறது. சீரிய காட்சியைக் காட்டிக் கண்ணீரில் நம்மை நாளும் நனைய வைக்கிறது.’’
தமிழ் என்னும் அமுதத்தால் இறைவனைக் குளிர்வித்தாலும் அது சிறப்புதான். கோயில்களிலிருந்து சம்ஸ்க்ருதம் அகற்றப்படவேண்டும் என்ற கூக்குரல் இப்போது கேட்கிறது அதற்காக சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி சொல்லவேண்டியதாயிற்று.
தமிழர் வாழ்வில் தனியாகப் பிரித்தெடுக்க முடியாதபடி சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் இருக்கிறது.
சம்ஸ்க்ருதம் பிராமணர்களுக்கான மொழி என்று ஒரு கருத்து இருக்கிறதே?
அந்தக் கருத்து தர்ம விரோதமானது என்று ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் நடத்தும் சம்ஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன.
தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.
கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.
’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.
சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர்.
மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.
உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.
காளிதாசன்
இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன்.
வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.
இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.
சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல.
பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சம்ஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல.
‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.
மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல.
பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேலியைச் சுருட்டி வைத்து அந்த இடத்தில் வீதி உருவாகிவிட்டது.
பொதிகை தொலைக்காட்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தும் கீதை சொற்பொழிவுக்கு எல்லாத் தரப்பிலும் நல்ல வரவேற்பிருக்கிறது.
மதுரை நகரில் சின்மயா மிஷன் நடத்தும் கீதைப் போட்டியில் எல்லா வகுப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் தலைவரே ஒரு கிறிஸ்தவர்தான் – டாக்டர். அலெக்ஸ்.
சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று சொல்கிறார்களே?
தமிழுக்கு ஆபத்து சம்ஸ்க்ருதத்தால் வராது. அது வேறு திசையிலிருந்து வருகிறது. ஆபத்தின் பெயர் ஆங்கிலம். அதன் வாகனத்தின் பெயர் சன் தொலைக்காட்சி.
யோசித்துச் சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று பேச வேண்டியவர்
‘திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ என்கிறார்.
நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ள வேண்டும்.
உச்சரிக்கும் முறையினால் ஒரு சமுதாயத்தையே காயடித்துவிடக்கூடிய திறமை தொலைக்காட்சித் தொகுப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு எதிராக ஒர் இயக்கமே நடத்த வேண்டும்.
மற்றபடி சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து இல்லை. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.
தமிழ் இலக்கிய மரபில் சம்ஸ்க்ருதத்திற்கு இடமில்லை என்கிறார்களே?
தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் ‘வடமொழி இலக்கணம் நிறைந்த தொல்காப்பியர்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மாணவரான அதங்கோட்டாசிரியர் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்று அழைக்கப்படுகிறார்.
தமிழின் இலக்கண நூல்களிலே மிகத்தொன்மையானது தொல்காப்பியம்; தொல்காப்பியத்திலேயே சமஸ்க்ருதத் தொடர்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.
‘தம்பியோடு கானகம் சென்று இலங்கையை அழித்தவன் ஸ்ரீ ராமன். அவனுடைய மகிமையைக் கேளாதவர்களுக்குக் காது எதற்கு?’ என்று கேட்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள். வால்மீகி ராமாயணத்தை அவர் அறிந்திருக்கிறார்.
மணிமேகலையில் மாதவி சம்ஸ்க்ருதத்தில் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது.
’ஊன்பொதி பசுங்குடையார்’ என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலில் கிஷ்கிந்தா காண்டத்தின் காட்சி சொல்லப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை ‘வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி’ என்று வாழ்த்துகிறார்.
’வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’ என்றார் திரு.வி.க.
‘சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிறார் கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி.
தமிழ்வளத்தையும் தமிழர் நலத்தையும் விரும்புகிறவர்கள் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதில்லை.
எப்படியாவது தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று நோக்கமுடையவர்கள்தான் சம்ஸ்க்ருத எதிரிப்பாளர்கள். நல்லறிவுடையோர் இந்த மோதல் போக்கை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
தமிழர் வாழ்விலும் வழக்கிலும் சம்ஸ்க்ருதம் அன்றும் இன்றும் அழகு சேர்க்கும் அணிகலனாகத் தொடர்கிறது.
மதச்சார்பில்லாத நாட்டில் சம்ஸ்க்ருதக் கல்வி தேவையா?
சம்ஸ்க்ருதத்தை தேர்வுப் பாடமாகக் கற்பிப்பது எந்த விதத்திலும் மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாகாது’ என்கிறது 1994 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
சம்ஸ்க்ருத மொழி என்பது பிராமணர்களுக்கு மட்டும்தான் என்று யாரவது கூறினால் அதை நம்மால் ஒப்புக்கொள்ளவே முடியாது – ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்
அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் – ஜெயகாந்தன்
நன்றி: விஜயபாரதம் வார இதழ்.
Friday, September 28, 2012
ஆத்ம பலம் என்பது என்ன?
<
சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, `ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். `நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை. உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன் பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!’ என்றார் சனத்குமாரர்.
நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார். `குருதேவா! எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச புராணங்கள் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை, இவை அனைத்துமே தெரியும்’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் தெளிவுபடுத்தினார். `தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக் கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. `எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக் கற்றுத் தர வேண்டும்’ என்றார், நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார். `நாரதரே! நீர் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ என்றார் அவர்.
`எவையெவை பெரியவை?’ என்று கேட்டார் நாரதர். `நீ சொன்ன பெயர்களை எல்லாம் விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய். செயலில் இறங்குகிறாய். அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம். அந்த மனது தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று: சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான்; அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன. ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.’ `தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’
நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே பொதுவாகப் பேசப்படுகிறது.
ஆத்ம பலம் என்பது என்ன?
தன்னை உணர்தல்.
`நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல்.
கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
ஒரு கதை உண்டு.
ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய் விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார். ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான். நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார். அவன் `இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்து விட்டான்.
இந்த பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது. இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும். இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.
`நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது.
முதலில் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள். அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
`அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் `அவன் உடம்பு தான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள்.`என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது. இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள். இமய மலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா? ஆன்மாவை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
About admin
பாவம் விலகி புண்ணியம் கிடைக்க
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, “பகவானே… இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்…’ என்று தியானம் செய்வது நல்லது.
அதேபோல், இரவு படுக்கும்போதும், “பகவானே… உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக…’ என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது.
இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது.
எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை:
பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர்,
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்!
வாக்கு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பாற்றியாக வேண்டும். அதிலும், பெண்களுக்கு வாக்களித்து விட்டு, அதைச் செய்ய மறுத்தால், கண் பார்வையே போய் விடும்’ என்கின்றன நம் புராணங்கள். சுந்தரரின் வரலாறு இதை நமக்கு உணர்த்துகிறது.
திருநாவலூரை சொந்த ஊராகக் கொண்ட சுந்தரருக்கு, திருவெண்ணெய்நல்லூரில் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால், சிவன் அதைத் தடுத்து, சுந்தரரை தன் அடிமை என நிரூபித்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். அன்று முதல், சிவத்தொண்டையே செய்து வந்தார் சுந்தரர். பூர்வ ஜென்மத்தில், சுந்தரர் சிவனது அடிமையாக இருந்தார். அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில், அங்கிருந்த இரண்டு பெண்கள் மீது காதல் கொண்டார். அவர்களும் அவரை விரும்பினர். இதன் காரணமாக, அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர்.
ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார்; காதல் கொண்டார். சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம், அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார். திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார். பூர்வஜென்ம வினைப் பயனால், அவளையும் திருமணம் செய்யும் எண்ணம் கொண்டார்.
சங்கிலியின் கனவில் தோன்றி, “என் பரமபக்தன் சுந்தரனை மணம் செய்து வாழ்வாயாக’ என்றார் சிவன்.
அதற்கு சங்கிலி,”அவர் ஏற்கனவே திருமணமானவராயிற்றே…’ என்றதற்கு,”உன்னை விட்டு அவன் பிரியாமல் இருக்க வாக்குறுதி தரச் சொல்கிறேன்…’ எனக்கூறி மறைந்தார் சிவன்.
இதேபோல சுந்தரர் கனவில் தோன்றி,”உனக்கும், சங்கிலிக்கும் திருமணம் நிச்சயம். ஆனால், அவளைப் பிரிய மாட்டேன் என அவளிடம் சத்தியம் செய்ய வேண்டும்…’ என்றார்.
இதன்பின், சுந்தரரும், சங்கிலியும் சந்தித்தனர்.
சங்கிலியிடம், “உன்னைத் திருமணம் செய்த பின், திருவொற்றியூரை விட்டு எங்கும் போக மாட்டேன்…’ என வாக்கு கொடுத்தார் சுந்தரர். இருவருக்கும் திருமணம் நடந்தது. சிலகாலம் சென்றது. திருவாரூரில் வசந்தவிழா விசேஷம். அதை எப்படியாவது பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் சுந்தரருக்கு பிறந்தது. சங்கிலிக்கு கொடுத்த வாக்கை மீறி, அவளுக்குத் தெரியாமல், ஊர் எல்லையைத் தாண்டினார் சுந்தரர். உடனே அவரது கண் பார்வையைப் பறித்து விட்டார் சிவன்.
அதன்பின் பல சிவத்தலங்களுக்கு சென்று, பார்வை வேண்டி பதிகம் பாடினார் சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால் திருவெண்பாக்கம் (திருவள்ளூர் அருகிலுள்ள திருவளம்புதூர்) என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோல் மட்டும் கிடைக்கச் செய்தார் சிவன். காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைத் தரிசித்து உருகிப் பாடியதும், சிவனும் மனமுருகி இடதுகண் பார்வையை அளித்தார். அதன்பின் பல தலங்களைக் கடந்து திருவாரூரை அடைந்தார். அங்கு வந்து இறைவனிடம் மன்றாடி, வலது கண் பார்வையையும் தந்தருள வேண்டினார். அவருக்கு பார்வை கிடைத்தது.
சுந்தரர் போன்ற தெய்வப்பிறவிகளின் மூலம், இறைவன் நமக்களித்துள்ள பாடம், வாக்கு தவறக் கூடாது என்பது தான்!
இது ஒருபுறமிருக்க, பார்வையற்றவர்களுக்கு கண் தானம் செய்ய வேண்டும் என்றும் சிவன் கண்ணப்ப நாயனார் மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார். கண் தானத்தின் அவசியம் அந்தக் காலத்திலேயே வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
இறப்புக்கு பிறகும், இந்த பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பளிப்பது கண் தானம். கண் தான நாளில், கண்களைத் தானம் செய்வதுடன், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் நற்பண்பை வளர்க்கவும் உறுதி எடுப்போம்.
அஷ்டலட்சுமிகள் பற்றி
1. கஜலட்சுமி:-
நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.
2. ஆதிலட்சுமி:-
ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.
3. சந்தானலட்சுமி:-
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்.
4. தனலட்சுமி:-
மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.
5. தானியலட்சுமி:-
எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.
6. விஜயலட்சுமி:-
உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின் இயல்பு ஆகும்.
7. வீரலட்சுமி:-
எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.
8. மஹாலட்சுமி:-
தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.
Thursday, September 27, 2012
ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)
ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணருபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.
நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவிலகளில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.
நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும் அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் நடுவிலுள்ள ஐந்தாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.
பெரிய புதிர்
உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
நமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.
( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)
வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?
இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.
அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !
ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...
நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.
பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.
முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !
சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.
வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
சுத்தா சுத்தம்--திரு மந்திரம்
33. சுத்தா சுத்தம்
(சுத்தம் - தூய்மை; அசுத்தம் - தூய்மையின்மை. சுத்தாசுத்தமாவது அகத் தூய்மையும் அகத் தூய்மையின்மையுமாம். சுத்த+அசுத்தம்=சுத்தாசுத்தம் - வடமொழி தீர்க்கசந்தி.)
2546. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி இருக்கும் குணம்அது வாமே.
பொருள் : நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப்போதரும் உயிர்ப்பு பன்னிரண்டு விரல் அளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ் உயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கி அருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும் எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம்மறையின் குணமாகும்.
2547. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்
கருவினை யாவது கண்டகன்று அன்பில்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.
பொருள் : உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் உள்ளது. இவ்விதம் செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் நீங்கி அன்பினால் செய்வன உயிர்களுக்குரிய கன்மத்தைத் தேய்ப்பதாகும்.
2548. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
பொருள் : மாயையாகிய திரைசீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈஸ்வரன், அம்மாயை யாகிய திரை அகன்ற போது அப்பொருளான ஈஸ்வரன் வெளிப்படும். மாயை நீங்கும் படி அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடலும் இல்லை; மனமும் இல்லை என்பதாம்.
2549. மோழை யடைந்து முழைதிறந்து உள்புக்குக்
கோழை அடைக்கின்ற அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்தங்கு அனலில் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.
பொருள் : தியானத்தினால் புருவமத்தியை யடைந்து, கபால வழியைத் திறந்து அதனுள் புகுந்து, கோழை வந்து அடைக்கின்ற இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பினில், கீழ்ப் போதலின்றி அடைத்து அங்கு உண்டாகும் அக்கினி கலையைப் பிரகாசப்படுத்தும் முறையில் மனம் தாழ்வான மாயைவழிச் செல்லாமல் நிறுத்துவதே தன்னுடைய சாதனா பலமாகும். (மோழை - புருவநடு.)
2550. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
பொருள் : உடலில் இருந்து கொண்டு சூக்கும தேகத்தோடு உறவு செய்து வைப்பவனை உடலின்கண் அக்கினி கலையில் விளங்கும் சிவத்தை, தேசங்களில் சென்று புறத்தே வழிபாடு செய்பவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவராவர்.
2551. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே.
பொருள் : ஆசூசமாகிய தீட்டுத் தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத்தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரணமுதலாகும் என்னும் உண்மை புலனாகும். (ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாகும் இடம்.)
2552. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
பொருள் : தத்துவ ஞானத்தால் தன்னை உணர்ந்தவருக்கு அசுத்தம் என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் சங்கரிக்கும் அரனை வணங்குவார்க்கு அசுத்தம் இல்லை. மூலாக்கினியைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினிகாரியம் செய்வார்க்கும் அசுத்தம் இல்லை. மேலான வேதத்தை உணர்ந்த ஞானிக்கு அசுத்தம் என்பதே இல்லை.
2553. வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
பொருள் : அரனை வழிபாடு செய்து வணங்குவார்க்கு, உச்சிக்குழிக்கு மேலுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளம் சிறப்புற அமைந்து ஒளிபெருகி நிற்பதில் அகத்தூய்மை தொடங்கும். குழியில்பட்டு விந்து நீக்கம் செய்பவர் ஆதார நீராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள அதோ முகத்தை ஊர்த்துவ முகமாக்கினவர்க்கின்றிச் சிவம் காணப்படாததாகும். (சுழி - உச்சிக்குழி. கழி - வீணாத்தண்டம்.)
2554. தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவும் ஆமே.
பொருள் : தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான், தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய் நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன் மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ்விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூய மாமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. முதல் அவ்விரண்டின் மூலமாகிய அருளையும் தூமாயையையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். (தூரி - மூலம்).
2555. தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளாத் தூயடிச் சொல்லே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறித் தூய்மையான மணியில் விளங்கும் சிவன் வைத்த தூய்மையான நெறி கரும நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அவ்வாறான மணியைச் செழிப்பிக்க நாதன் திரு நாமமாகிய ஒளி வேண்டும். அம்மணி கருவிகளை ஓயச் செய்து அட்டமா சித்திகளை அளிக்கும். தூய மணி மௌனாட் சரத்தின் பீடமாகும். (வாளா - (1) கருமநிவாரனம். (2) பிரணவஒளி. (3) ஓய்வு (4) மௌனம்.)
2556. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.
பொருள் : எமது ஐயனாகிய சிவபெருமான் விரும்பப்பெறும் விழுப்பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் உள்ளவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர், சொர்க்கம் நரகம் பூமி எனச் சுழன்று வரும் பிறவித் தளையில் மயங்கின உள்ளம் உடையவராய் அசுத்தமுடையவராவர்.
2557. வினையாம் அசத்து விளைவது உணரார்
வினைஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினைவிட வீடுஎன்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவுஅறி யாரே.
பொருள் : மயக்கத்தில் உள்ள சீவர்கள் வினையால் அசத்தாகிய மாயை வலுவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சூழலை அறிய மாட்டார்கள். ஞானத்தை உணர்ந்து அதன்வழி நிற்பதில் கொடிய வினை நீங்குதலையும் தெளிந்து அறியமாட்டார். வினைகள் சீவர்களைப் பற்றாமல் நிற்பதில் முத்திநிலை உள்ளது என்று வேதம் கூறும் உண்மையை அறியமாட்டார். தீவினையால் பந்திக்கப்பட்ட சீவர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியமாட்டார்.
வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?
வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவைகளாகும்.
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு – வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் (தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக் கொண்டதாகும்.
எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.
பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.
மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 ...
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்குஎந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா?
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு......
Wednesday, September 26, 2012
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை
கடவுள் வாழ்த்து 1
மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.
பொருள்:
நிலவு, நிலையான திருமாலின் ஒளிமயமான முகத்தைப் போன்றது. ஒளி வீசும் சூரியன் திருமாலின் சக்கரத்தைப் போன்றது. நீர் நிறைந்து இருக்கும் பழமையான குளங்களில் உள்ள தாமரைத் தண்டில் முளைக்கும் செந்தாமரை மலர் திருமாலின் விழிகளைப் போன்றது. காயாம்பூவின் நீல நிறம் திருமாலின் மேனி நிறத்துக்கு ஒப்பானது.
கடவுள் வாழ்த்து 2
படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்.
பொருள்:
உலகத்தை தன் மடியில் வைத்தவன். தன் திருவடியால் மூன்று உலகையும் அளந்தவன். இந்திரனுக்கு மக்கள் பயந்த காலத்தில் பசுக்களையும் மக்களையும் காக்க கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன். அசுரரின் நெருப்பு மதிலை அழித்தவன் -திருமால்.
நான்மணிக் கடிகை - பாடல் 3
எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார் கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து
இந்தப் பாடல் கூறும் அறிவுரை என்னவென்றால்:
எப்போதுமே நம்மை விட வலிமை குறைந்தவரையும் ஏழைகளையும் பார்த்து ஏளனமாகப் பேசக்கூடாது. அதே சமயம் ஒழுக்கம் இல்லாதவர்கள் அல்லது ஆணவக்காரர்கள் இடமிருந்து எந்த உதவியையும் பெறக் கூடாது. வசதியில்லாத குடும்பங்களில் பிறந்தவர்கள் வருத்தத்தினால் அல்லது பொறாமையால் கடும் சொல் பேசக் கூடும். அப்போது மனதுக்குள் வருத்தம் வந்தாலும் அவர்களிடம் கோபம் காட்டக் கூடாது. திட்டிப் பேசக் கூடாது.
நான்மணிக் கடிகை நூலின் நாலாம் பாடல்.
பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு
இனி பாடலின் பொருள்:
அசுணம் என்பது மென்மையான இசையை ரசிக்கக்கூடிய ஒருவகைப் பறவை. பறை எனும் கடினமான தாளவாத்தியக் கருவியின் அதிர வைக்கும் சத்தத்தைக் கேட்டால் அந்த இரைச்சல் தாங்காமல் அந்தப் பறவை இறந்து விடுமாம். அதுபோல்தான் சில மனிதர்களும். வாழ்க்கையில் தங்களுக்கு இனிமை மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக துன்பம் ஏதேனும் வந்துவிட்டால் உயிரை விட்டு விடுவார்கள்.
காட்டில் மரங்கள் மிக அடர்த்தியாக வளர்ந்திருந்தால் அங்கு நெல் முளைக்க வழி இல்லை. வளரத் தொடங்கும் போதே அழிந்து விடும். அது போல, ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய முயலும்போது சுற்றி உள்ளவர்கள் அதனை ஊக்குவிக்காமல் எதிர்மறையாகப் பேசி அவன் மனதைப் புண்படுத்தினால் அவனது முயற்சி ஆரம்பத்திலேயே முடங்கிவிடும்.
நான்மணிக் கடிகை நூலின் ஐந்தாம் பாடல்.
மண்ணியறிப மணி நலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன்
இந்தப் பாடலின் பொருள்:
நவரத்தின மணிகளின் சிறப்பை அறிய அவற்றை நன்றாக தூய்மை செய்து பார்க்க வேண்டும். ஒரு குதிரையின் சிறப்பை அறிய அதன் மீது சேணம் முதலியவற்றை அமைத்து அதன் மீது ஏறி அமர்ந்து ஓட்டிப் பார்க்க வேண்டும். பொன்னின் தரத்தை அறிய அதனை நெருப்பில் சுட்டுப் பார்க்கலாம். பணம் இல்லாத வறுமைச் சூழல் வந்தால் உறவினர்களின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ளலாம்.
நான்மணிக் கடிகை நூலின் ஆறாம் பாடல்.
கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரிதாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி
இந்தப் பாடலின் பொருள்;
கள்ளிச் செடி சாதாரணமானது. ஆனால் அதில் மதிப்புள்ள அகில் கட்டை தோன்றும். மானின் வயிற்றில் ஒளி மிகுந்த அரிதாரம் தோன்றும். பெரிய கடலுக்குள்ளே விலையுயர்ந்த முத்து கிடைக்கிறது.
நல்ல குணம் கொண்ட உயர்ந்த மனிதர் எந்தக் குடும்பத்தில் பிறப்பார் என்பதை யார் அறிவார்?
நான்மணிக் கடிகை நூலின் ஏழாம் பாடல்.
கல்லில் பிறக்கும் கதிர்மணி காதலி
சொல்லில் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று
அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளில் பிறந்து விடும்
இந்தப் பாடலின் பொருள்:
கல் பாறைகளில் ஒளி வீசும் ரத்தின மணிகள் கிடைக்கும். காதலியின் இனிய பேச்சால் மனதில் களிப்பு தோன்றும். அருளாளர்களின் மென்மையான கருணையால் அற நெறிகளும் நல்ல வாழ்க்கை முறைகளும் தோன்றும். மற்றபடி மனிதர்களின் நன்மை எல்லாம் செல்வத்தால் கிடைக்கும்.
நான்மணிக் கடிகை நூலின் எட்டாம் பாடல்.
திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு
இந்தப் பாடலின் பொருள்:
யாருக்கும் தீங்கு செய்யாத குணம் பெரும் செல்வத்துக்கு இணையானது. குடும்பக் கடமைகளைத் தவறாமல் செய்து வருவது சீரிய தவத்துக்கு இணையானது. ஒருவரிடம் நண்பராகப் பழகிக் கொண்டே அவரை ஏமாற்றுவது கொலைக் குற்றத்துக்கு இணையானது. தம்மை மதிக்காதவரிடம் சென்று உதவி கேட்பது மிகவும் கேவலமானது.
நான்மணிக் கடிகை நூலின் ஒன்பதாம் பாடல்.
கள்வமென்பார்க்கும் துயிலில்லை காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென்பார்க்கும் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
இந்தப் பாடலின் பொருள்:
துயில் என்றால் தூக்கம்.
பிறர் சொத்தை எப்படிக் கொள்ளையிடலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருப்போர்க்கு தூக்கம் வராது. காதலியை நினைத்து உருகும் ஆணுக்கும் உறக்கம் வராது. எப்படி உழைத்து முன்னுக்கு வந்து பணக்காரராவது என்று இடைவிடாது சிந்திப்பவரும் தூக்கத்தை மறந்து விடுவார். சிரமப் பட்டு சேர்த்த பொருளை யாராவது திருடி விடுவார்களோ என்று பயந்து பாதுகாப்பவர்க்கும் தூக்கமில்லை.
நான்மணிக் கடிகை நூலின் பத்தாம் பாடல்.
கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று
உற்றார் முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும்
இந்தப் பாடலின் பொருள்:
அறிவு நூல்களைக் கற்றவர்கள் எதையாவது இழக்கும்போது வருந்த மாட்டார்கள். உலகமே நிலையில்லை என்று ஆறுதல் அடைவார்கள். விரும்பி ஒரு காரியத்தை செய்பவர் அதில் தோல்வி வரும்போது அழமாட்டார்கள். எல்லாம் நன்மைக்கே என அமைதி காண்பார்கள். தான் செய்வது தவறு எனத் தெரிந்தே தீங்கு செய்வோர் கடவுள் அருள் பெறமாட்டார்கள். கோபம் கொள்வோர் எந்த நன்மையையும் அனுபவிக்க மாட்டார்கள்.
நான்மணிக் கடிகை நூலின் பதினோராம் பாடல்.
நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத்து அறம்
இந்தப் பாடலின் கருத்து:
நெல்லும் கரும்பும் விளையும்போது நிலத்துக்கு மதிப்பு கூடுகிறது.
தாமரை மலர்ந்துள்ள போது குளம் அழகு பெறுகிறது.
நாணம் என்னும் குணம் பெண்ணுக்கு அழகு என கவிஞர்கள் கூறுவர்.
மனிதர்க்கு அழகு மரணத்துக்குப் பின் செல்லும் உலகத்தைப் பற்றி எண்ணி இப்போதே தர்ம காரியங்கள் செய்வது.
நான்மணிக் கடிகை நூலின் பன்னிரண்டாம் பாடல்.
கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர
மந்திரத்தாற் பிணிப்பர் மாநாகம் - கொந்தி
இரும்பிற் பிணிப்பர் கயத்தைச் சான்றோரை
நயத்தில் பிணித்து விடல்
இந்தப் பாடலின் பொருள்:
யானையை அடக்கி வைக்க கட்டுத் தறியில் கட்டி வைப்பார்கள்.
பாம்புகளின் சீற்றத்தை அடக்க மந்திரங்களைப் பயன்படுத்துவர் பாம்பாட்டிகள்.
கொடிய குற்றவாளிகளை விலங்கு மாட்டி கட்டுப்படுத்துவர்.
நன்கு படித்த பெரியவர்களிடம் நயமாக இனிமையான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்களை நம் வசப்படுத்தலாம்.
நான்மணிக் கடிகை நூலின் பதின்மூன்றாம் பாடல்.
கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கம் சிதைக்கும் வினை
இந்தப் பாடலின் பொருள்:
நமக்கு பிறர் செய்த கொடுமைகளை மீண்டும் மீண்டும் நினைத்து வெறுப்படைய வேண்டாம்.
நமக்கு பிறர் செய்த நன்மையை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மதிக்க வேண்டும்.
கோபத்தை உடனடியாக விட்டு விட வேண்டும்.
நம்மை வளர விடாமல் தடுக்கும் கெட்ட பழக்கங்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினாலாம் பாடல்.
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு
கோட்டால் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர் நோய்.
இந்தப் பாடலின் பொருள்:
பாம்புக்கு கோபம் வந்தால் அது பல்லால் கொத்தி துன்புறுத்தும். கொடிய விலங்கு சினமடைந்தால் கொம்பால் தாக்கும். பெண்கள் கோபம் வந்தால் முகக் குறிப்பினால் காட்டுவார்கள். தவ வலிமை உள்ள முனிவர்களுக்கு கோபம் வந்தால் சாபம் கொடுத்துவிடுவார்கள்.
நான்மணிக் கடிகை நூலின் பதினைந்தாம் பாடல்.
பறைநன்று பண்ணமையா யாழின் - நிறை நின்ற
பெண் நன்று பீடிலா மாந்தரின் - பண் அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று
இந்தப் பாடலின் பொருள்:
இனிமையான யாழில் சுருதி சரியாக அமையாவிட்டால், அதை விட, இரைச்சலான பறை ஒலியே மேலானதாகும். உதவாத ஆண் பிள்ளைகளை விட நல்ல பெண் பிள்ளைகளே மேலானவர்கள். கெட்டுப் போன உணவை உண்பதை விட எதுவும் உண்ணாமல் பட்டினியாக இருப்பதே மேல். அன்பு கொண்டவரை விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதை விட தீயில் புகுந்து மாள்வதே மேல்.
நான்மணிக் கடிகை நூலின் பதினாறாம் பாடல்.
வளப்பாத்தியுள் வளரும் வண்மை கிளைக்குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து
இந்தப் பாடலின் பொருள்:
செல்வம் எனும் பாத்திக்குள் வள்ளல்தன்மை எனும் செடி வளரும். அதாவது பணம் கொழித்தால் ஈகை குணம் தானே வரும். அதுபோல இனிமையாகப் பேசும் பழக்கம் இருந்தால் உறவினர் வட்டம் தானே பெருகும். கண்ணோட்டம் எனும் இரக்க குணம் இல்லாதபோது வஞ்சனையும் சூழ்ச்சியும் வளரும். வறுமை நீடித்தால் பிறரிடம் யாசிக்கும் பழக்கும் வளரும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினேழாம் பாடல்.
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவன் தன்னைப் பிறர் கேவலமாக நினைக்கட்டும் என்று நினைத்தால் அவன் பிச்சை கேட்கப் புறப்படலாம். இந்த உலகில் புகழோடு வாழ வேண்டும் என்று விரும்பினால் ஒழுக்கத்தோடு விளங்க வேண்டும். மரணத்துக்குப் பின் தன்னோடு துணையாக வரும் புண்ணியத்தைச் சேர்க்க விரும்பினால் தர்மம் செய்ய வேண்டும். எப்பொழுதும் வெற்றி வேண்டுமென்றால் கோபத்தைக் கைவிட வேண்டும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினெட்டாம் பாடல்.
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்
இனி பாடலின் பொருள்:
குட்டம் என்றால் ஆழம். நல்ல கப்பலை உடையவர் ஆழ்கடலை எதிர்த்துப் பயணம் செய்வார்கள். விரைந்து ஓடும் படைக் குதிரையை உடையவர் பெரிய படைக் கூட்டத்தை எதிர்த்து முன்னே செல்வர். தன் மனத்தை அடக்கத் தெரிந்தவன் தவம் எனும் ஆழமான கடலை நீந்திச் சென்று சாதனை புரிவான். நன்றாக தெளிவாகப் படித்து உணர்ந்தவன் புலவர்கள் நிரம்பிய சபைகளை எளிதாக எதிர்கொள்வான்.
நான்மணிக் கடிகை நூலின் பத்தொன்பதாம் பாடல்.
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர்
இந்தப் பாடலின் பொருள்:
நட்பு எல்லாமே ஒரு பொய் வரைக்கும்தான். நண்பர்களில் ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றியது தெரிய வந்தால் அதோடு நட்பு முடிந்துவிடும். இளமை அழகு என்பது நோய் வரும் வரைதான். ஆரோக்கியம் கெட்டால் அழகும் கெடும். ஓர் அளவை எட்டும் வரைதான் செல்வம் மகிழ்விக்கும். அளவைத் தாண்டி பணம் சேரும்போது அதன் மதிப்பு போய்விடும். உயிர் வாழ்க்கை என்பது ஆயுள் இருக்கும் வரைதான். அதன்பின் உயிருக்கு இவ்வுலகில் செய்ய ஒன்றுமில்லை.
நான்மணிக் கடிகை நூலின் இருபதாம் பாடல்.
மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம் செவ்வியனாதல் சினச் செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல்
இந்தப் பாடலின் பொருள்
திறமை உடைய பெண்களால் குடும்பத்துக்கு சிறப்பு வளரும். வேற்படையில் நிறைய கற்றுத் தேர்வது ஒரு வீரனின் வேலைக்கு சிறப்பு சேர்க்கும். தன் நாட்டு அரசன் நல்லவன் என்று மக்கள் நம்பும்படி அரசன் நடப்பது நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும். உறவினர்களைப் பகைத்து விலக்கி விடுவது கேடுகளை வளர்க்கும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்தோராம் பாடல்.
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும்
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு குடும்பத்தில் கணவன் கடமையிலிருந்து தடுமாறினால் மனைவியின் நிம்மதி கெட்டு அவள் கடமைகளும் தடுமாறும். படித்த புலவர் அறிவு கலங்கினால் அவர் எழுதும் நூல்களில் உள்ள பொருள் தவறாகி விடும். மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து அவர்கள் எதிர்த்தால் அரசனின் ஆட்சி கவிழும். இசைக்கருவியின் நரம்புகள் சீர்கெட்டால் அதிலிருந்து எழும் இசை தாறுமாறாகும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்திரண்டாம் பாடல்.
மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்
திசைக்குப் பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லாத உடம்பு
இந்தப் பாடலின் பொருள்:
வீட்டில் பொறுப்பேற்று கடமையாற்ற பெண் ஒருத்தி இல்லையென்றால் அந்த வீடு சிறப்பாக இயங்காது. புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்கு தெரிந்தவர் யாரும் இல்லையென்றால் எளிதாக காரியமாற்ற முடியாது. பலர் கூடும் சபை நிகழ்ச்சிகளில் வழிகாட்ட அனுபவம் வாய்ந்த பெரியவர் இல்லாவிட்டால் அங்கு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெறாது. படிப்பு எதுவுமே இல்லாத மனிதனின் உடம்பு அவனுக்கு எந்த சிறப்பையும் சேர்க்காது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து மூன்றாம் பாடல்.
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியைப் -பெய்த
கலஞ் சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின்
இந்தப் பாடலின் பொருள்:
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதபோது அது சீரழியும். ஒழுக்கம் இல்லாதவனின் உடம்பு நோய் வந்து கெட்டழியும். ஊற்றும் பாத்திரம் சுத்தமாக இல்லாவிட்டால் பால் கெட்டுப் போகும். சேரக் கூடாதவர்களிடம் சேர்ந்து பழகினால் குலமே அழியும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து நாலாம் பாடல்.
புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை - காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு
இந்தப் பாடலின் பொருள்:
பொய் பேசாமல் ஏமாற்றாமல் நேர்வழி நடப்பது புகழைக் கொண்டு வரும். அறிவில்லாத போது மதிக்க வேண்டியவரையும் மதிக்காமல் நடக்கத் தோன்றும். படிப்பு இல்லையென்றால் கண் பார்வை இல்லாதவர் வழி தெரியாமல் தடுமாறுவதுபோல் வாழ்வில் நிலை தடுமாற நேரும். கல்வியறிவு வளரும்போது இருள் விலகி ஒளி தெரிவதுபோல் வாழ்வில் தெளிவு உண்டாகும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஐந்தாம் பாடல்.
மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும்
அன்னேயென்றோடும் குழவி சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்
இந்தப் பாடலின் பொருள்:
யானை மீதுள்ள பாகன் அதனை அடித்துக் கட்டுப்படுத்தினாலும் யானை அவனைக் கீழே தள்ளி விடுவதில்லை. குழந்தையை தாயார் கண்டித்தாலும் அது தாய் மீது பாசத்துடன் அம்மா என்றழைத்து ஒட்டிக் கொள்ளும். நல்ல நண்பர்கள் இடையே எவ்வளவு தகராறு, கோபம் வந்தாலும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யமாட்டார்கள். ஆனால் மனத்தளவில் ஒட்டாத பகைவர்கள் ஒன்று கூடி வாழும் காலம் வரவே வராது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஆறாம் பாடல்.
நகைநலம் நட்டார்கண் நந்தும் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனால் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும்
இந்தப் பாடலின் பொருள்:
நட்பு என்பது உள்ளத்தில் உள்ளது என்றாலும் அது புன்னகையால்தான் வெளியே அறியப்படும். அறிஞர் பெருமக்களின் சபைகளில் ஆராயப்படுவது அறிவுத்திறன்தான் என்றாலும் அங்கு அன்பும் சேர்ந்திருப்பதே சிறப்பு. தேர் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அதனை ஓட்டுபவனின் திறமையால்தான் அதன் சிறப்பு அறியப்படும். ஒரு நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதனை ஆள்பவரின் சிறப்பை வைத்துதான் அந்த நாட்டின் பெருமை அமையும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஏழாம் பாடல்.
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி
நட்டார்கண் விட்ட வினை
இந்தப் பாடலின் பொருள்:
பழி பாவங்களுக்கு அஞ்சாத கொடிய குணம் நமக்கு வரக்கூடாது; அதற்கு பயப்பட வேண்டும். முடிந்த அளவு உதவிகள் செய்துவிட வேண்டும். கடமைகளில் மிச்சம் வைக்கக் கூடாது. மனதறிந்து யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டதென்றாலும் நண்பரிடம் ஒரு வேலையை ஒப்படைத்த பின் அதில் நம்பிக்கையின்றி குறுக்கிடக் கூடாது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து எட்டாம் பாடல்.
அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம்
இந்தப் பாடலின் பொருள்:
கொன்று தின்பதற்காக பிராணிகளை வளர்ப்பது குற்றம்
விலைக்கு விலங்குகளை விற்பதும் அவற்றை வாங்கி இறைச்சியாகத் தின்பதும் குற்றம். சொல்லத் தகுதியில்லாத சொற்களைப் பேசுவதே குற்றம் என்னும்போது கொலை வகைகள் எல்லாமே குற்றங்கள்தாம்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஒன்பதாம் பாடல்.
கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று
இந்தப் பாடலின் பொருள்:
நாட்டில் வாழும் குடிமக்கள் அரசாங்கத்தின் திறமையை நம்பி வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை நம்பி உயிர் வாழும். வானத்தின் மழைநீரை நம்பி பூமியில் உயிர்கள் வாழ்கின்றன. உயிர்களின் முடிவை எண்ணி மகிழ்வான் எமன். அதாவது எல்லா வாழ்க்கை சுழற்சியும் ஒரு முடிவுக்கு உட்பட்டது என்பது பொருள்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பதாம் பாடல்.
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந் தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் - கோளுணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும்
இனி பாடலின் பொருள்:
நீதி நூல்களைப் படிக்கப் படிக்க குழப்பம் நீங்கும். இந்த உலகைப் பற்றிய தெளிவு உண்டாகும். இந்த பூமி எனும் கோளின் தன்மைகளை முழுமையாக உணர்ந்தால் தத்துவ சிந்தனைகளில் மனம் சேரும். அருள் நெறி மனதில் வளர்ந்தால் இவ்வுலகில் வாழும்போது புகழுக்குரிய நல்ல காரியங்கள் செய்யத் தோன்றும். தொடர்ந்து மரணத்துக்குப் பின்னும் மேலுலகில் உயர்ந்த நிலை கிட்டும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்தோராம் பாடல்.
குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவழி நிற்பது காமம் தனக்கொன்று
உறுவழி நிற்பது அறிவு
இந்தப் பாடலின் பொருள்:
குழியில் விழுந்த தண்ணீர் அங்கிருந்து அகலாமல் தேங்கி நிற்கும். பல நல்லவர்கள் பழிக்கும்படி தீங்குகள் செய்தவரிடம் அந்தப் பாவம் தேங்கி நிற்கும். காமம் என்னும் உணர்வு தவ நெறியில் நிற்க விடாமல் தடுக்கும். எந்தத் துன்பத்திலும் உதவியாகக் கைகொடுப்பது சொந்த அறிவுதான்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்திரண்டாம் பாடல்.
திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிற இல்லை -எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை இல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல்
இந்தப் பாடலின் பொருள்:
வாழ்க்கையில் பெரிய பலமாக விளங்குவது பணம் போல் வேறெதுவும் இல்லை. எப்போதும் உதவும் துணையாக விளங்குவது கல்வியைத் தவிர எதுவுமில்லை. வறுமை போல துன்பம் வேறெதுவும் இல்லை. உதவி கேட்பவர்க்கு மறுக்காமல் எடுத்துத் தரும் மன உறுதி போல் சிறந்த குணம் வேறெதுவும் இல்லை.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து மூன்றாம் பாடல்.
புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்
முன்னம் வித்தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னா வித்தாகி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
நெருப்பு இருப்பதை புகை காட்டிக் கொடுக்கும். மனதில் மகிழ்ச்சி இருப்பதை முகத்தின் புன்னகை காட்டி விடும். பகை உணர்ச்சி கொண்டவனின் நோக்கத்தை அவனது செயல்கல் காட்டிக் கொடுத்துவிடும். பகை மூண்டபின் அது பல துன்பங்களுக்கு வழிவிடும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து நாலாம் பாடல்.
பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத்தவர்
இந்தப் பாடலின் பொருள்:
பின்விளைவுகளை எண்ணிப்பார்த்து முடிவெடுக்கும் திறமை இல்லாத பெண்கள், குடும்பத்துக்கு ஒரு நோய் போன்று துன்பம் தருபவர்கள். பிறர் மீது அன்பு செலுத்தும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உலகத்துக்கு அழகு சேர்க்கும் அணி ஆவார்கள். தானே உயர்வு என ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் பயிர் வளர விடாமல் தடுக்கும் களை போன்றவர்கள். அதாவது அவர்கள், தங்கள் குடும்பத்துப் பெண்களையும் பிறரையும் வளர விடாமல் தடுப்பவர்கள். மற்றவர்களின் துன்பத்தைப் பார்த்து மனம் இரங்காதவர்கள் கல்லைப் போன்றவர்கள்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஐந்தாம் பாடல்.
அந்தணரின் நல்ல பிறப்பில்லை என் செயினும்
தாயின் சிறந்த தமரில்லை யாதும்
வளமையோடொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோடு ஒப்பதூஉம் இல்
இனி பாடலின் பொருள்:
அந்தணரின் வாழ்க்கை பிறருக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொள்வது. அதை விடச் சிறந்த வாழ்க்கை முறை கிடையாது. மற்றவர்கள் நமக்கு என்னதான் உதவி செய்தாலும் நம்மைப் பெற்ற அன்னையை விட நெருக்கமாகிவிட முடியாது. செல்வம் சேரும்போது வரும் அழகுக்கு இணையாக வேறு அழகில்லை. என்னதான் செல்வம் இருந்தாலும் அதனை அனுபவிக்க முடிவது இளமையில்தான். அதைப் போல நல்ல காலம் கிடையாது.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஆறாம் பாடல்.
இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய
பெரியரான் எய்தப் படும்
இனி பாடலின் பொருள்:
இரும்புப் பொருளை வெட்ட இரும்புக் கருவியை பயன்படுத்துவர். நீர் கொண்டு சமைத்த உணவை உண்டபின் நீரால்தான் வாயைக் கழுவ நேரும். பார்க்கப்போனால் எவ்வளவு சிரமப் படுகிறோமோ அவ்வளவு நன்மை கிட்டும். சிறப்புகள் நிறைய உள்ள திறமைசாலிகள் மேலும் மேலும் சிறப்புகளை எட்டுவர்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஏழாம் பாடல்.
மறக்களி மன்னர் முன் தோன்றும் சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயுமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
மன்னர் முன்னிலையில் வீரம் காட்டும்போது படை வீரர்களுக்கு மகிழ்ச்சி தோன்றும். ஏழைகளுக்கு தானம் செய்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்கும்போது நல்ல மனிதர்க்கு மகிழ்ச்சி தோன்றும். வறுமையில் வாடியவர், யாராவது உதவி செய்தால் உடனே மனம் மகிழ்வர். அற்பமானவர்கள், ஊரில் ஏதேனும் ஆரவாரம் ஏற்பட்டால் மகிழ்ச்சி கொள்வர்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து எட்டாம் பாடல்
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்
இந்தப் பாடலின் பொருள்
அழகான கண்கள் மையிட்டால் இன்னும் அழகாகும்.
எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றினால் இன்னும் அதிகம் எரியும்.
குருக்கத்தி மரத்தின் இலை அதிக மழை பெய்தால் இன்னும் பசுமையாகும்.
பணம் படைத்தவர் தங்கள் உறவினர்க்கு உதவிகள் செய்தால் அவர்களிடம் இன்னும் செல்வம் பெருகும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஒன்பதாம் பாடல்
நகை இனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகை இனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்
பெண் இனிது பேணி வழிபடின் - பண் இனிது
பாடல் உணர்வார் அகத்து
இந்தப் பாடலின் பொருள்
நண்பர்கள் பார்த்ததும் நட்போடு புன்னகை செய்தால் அது இனிமை. நிறைய பொருளை அன்பளிப்பாக வள்ளல்கள் கொடுக்கும்போது அந்தப் பணத்துக்கு தனி மதிப்புதான். நல்ல பெண் குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தினால் அவள் மிக இனிமையானவள். இசையின் இனிமையை உணரக்கூடிய மக்களுக்கு பண் எனும் ராகங்கள் மிகவும் இனிமை தரும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பதாம் பாடல்
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றீவார் பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு
இனி பாடலின் பொருள்:
யாருக்கும் ஒன்றையும் தர விரும்பாத கஞ்சர்க்கு, தம் பொருள்களை மறைத்து வைப்பதே குறிக்கோளாக இருக்கும். பிறர் உதவியை நம்பி வாழ்பவரின் குறிக்கோள், தனக்குதவும் வள்ளலைக் கண்டுபிடிப்பதுதான். படைக்குச் செல்லும் வீரரின் எண்ணம் வெற்றியை நோக்கி இருக்கும். மேல் உலகத்தில் நல்ல இடம் பெற எண்ணுவோரின் எண்ணம் எந்த உயிரையும் கொன்று தின்னாத கொள்கையில் இருக்கும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்தோராம் பாடல்
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யுந் திரு
இந்தப் பாடலின் பொருள்:
பார்த்துக் கற்றுக் கொண்டதை வைத்துதான் மனிதர்கள் தொழில் செய்வார்கள். முன்னர் ஞானியர் சொல்லி வைத்ததைக் கேட்டுதான் அறநெறியாளர்கள் தியானம் செய்வர். நல்லவர்கள் தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்காக உழைப்பார்கள். யாரிடமும் சினம் கொள்ளாமல் உதவுகிற மனிதருக்கு திருமகளின் அருளால் செல்வம் பெருகும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்திரண்டாம் பாடல்
திருவும் திணைவகையான் நில்லாப் பெருவலிக்
கூற்றமும் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற
மறைக்க மறையாதாங் காமம் - முறையும்
இறைவகையான் நின்று விடும்
இந்தப் பாடலின் பொருள்:
எந்தக் குடும்பம், குலம் என்று பாராமல் எவரிடமும் சேரக் கூடியது பணம். யார் எப்படிப்பட்டவர் என்று பாராமல் வந்து தாக்குவது மரணம். இனப் பெருக்கத்துக்குரிய காமம் என்னும் உணர்ச்சி மனிதர்க்கு இயற்கையாக வருவதைத் தடுக்க இயலாது. மனித சமுதாயங்களின் வாழ்க்கை முறை, ஆட்சியில் உள்ளவர்களைப் பொறுத்து அமையும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து மூன்றாம் பாடல்
பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடம்படின் தானே பெருகும் - கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும்
இந்தப் பாடல் விதியின் வலிமையை உணர்த்துகிறது. அதாவது:
பிறக்கும் என விதியுள்ள உயிரை, பிறக்க வேண்டாம் எனத் தடுத்தாலும் அது போகாது. இறக்கும் விதியுள்ள உயிரைப் போகாதே எனத் தடுத்தாலும் அது நில்லாது பிரிந்து போகும். ஒருவருக்கு திருமகள் அருள் சேரும் காலத்தில் அவர் முயற்சி எடுக்காதபோதும் செல்வம் வந்து குவியும். கெட்ட காலம் வரும்போது கண் முன்னாலேயே செல்வம் காணாமல் போகும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து நாலாம் பாடல்
போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த
வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்
மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி
மன்னர்சீர் வாடி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
போர் வீரர்களுக்கு பயிற்சி இல்லாவிட்டால் திறமை குறைந்துவிடும். மண்ணின் கீழ் பரவும் வேர் உறுதியாக இல்லாவிட்டால் மரம் பலவீனமாகும். நல்ல விதமாக தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் வயல்களில் பயிர் பச்சைகள் வாடிப்போகும். தேர்ச்சி பெற்ற படை இல்லையென்றால் ஒரு நாட்டின் சிறப்பு குன்றிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஐந்தாம் பாடல்
ஏதிலாரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்
காதலாரென்பார் தகவுடையார் - மேதக்க
தந்தையெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்
முந்துதான் செய்த வினை
இந்தப் பாடலின் பொருள்:
நமக்கு வேண்டாதவர் யாரென்றால் நல்ல பண்புகள் இல்லாதவர். நம்மிடம் அன்பும் அக்கறையும் உள்ளவர்தாம் நமக்கு வேண்டியவர். நல்ல கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தந்தைக்கு நிகராக மதிக்க வேண்டும். நாம் முன்பிறவியில் செய்த வினைக்கு ஏற்பத்தான் இப்பிறவியில் நம்மைப் பெற்றெடுக்கும் தாயார் அமைகிறார்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஆறாம் பாடல்
பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலம் மாறின்
நண்பினார் நண்பு கெடும்
இந்தப் பாடலின் பொருள் :
ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடத் தயங்கும் கூச்சம் வேண்டும். அந்தக் கூச்சம் இல்லையென்றால் உடல் கெடும். கண், காது, மூக்கு, வாய், உடல், ஆகிய ஐந்தையும் நல்வழியில் பயன்படுத்தினால் தீமை எல்லாம் மறையும். நீர் ஊற்றாதபோது செடிகொடிகள் வாடும். நன்மை எதுவும் இல்லையென்றால் நட்பின் தன்மை மாறிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஏழாம் பாடல்
நன்றிசாம் நன்றறியாதார் முன்னர்ச் சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியாதார் முன்னர் ஊடல்சாம்
ஊடல் உணரா ரகத்து
இந்தப் பாடலின் பொருள்:
நன்றி காட்டத் தெரியாதவர்க்கு உதவி செய்தால் அதன் மதிப்பு கெடும். அன்பு இல்லாதவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மன வருத்தம்தான் மிஞ்சும். ரசனை இல்லாதவர் முன் அருமையான பண் அமைந்த பாடலைப் பாடினால் பாட்டின் பெருமை கெடும். காதலின் தன்மை உணராதவரிடத்து மறைமுக ஊடல் பேச்சுப் பேசினால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து எட்டாம் பாடல்
நாற்றமுரைக்கும் மலருண்மை கூறிய
மாற்றமுரைக்கும் வினை நலந்தூக்கின்
அகம் பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்பதில்
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு பூவைப் பார்க்காதபோதும் அது அருகில் உள்ளதென்று உணரலாம் - அதன் வாசத்தைக் கொண்டு. ஒருவர் ஒரு செயலை நல்ல நோக்கத்தொடு செய்கிறாரா, கெட்ட நோக்கத்தோடு செய்கிறாரா என்பதை அவர் பேச்சை வைத்து உணரலாம். தீய குணமுடையவரின் உள்ளத்தில் தீய எண்ணங்கள், தானே தோன்றும். மனத்தில் உள்ள உணர்வை முகம் தெளிவாகக் காட்டிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஒன்பதாம் பாடல்
மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்
தவமிலார் இல்வழி இல்லை தவமும்
அரசனிலா வழி இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழியில்
இந்தப் பாடலின் பொருள்:
மழையின்றி மக்கள் வாழமுடியாது. நல்ல குணம் கொண்ட தவமுனிவர்கள் இல்லாதபோது மழை பொழியாது. அந்த முனிவர்கள் தவ வாழ்க்கை வாழ அரசரின் ஆதரவு வேண்டும். அரசர் நிம்மதியாக ஆட்சி புரிய நல்ல குடிமக்கள் இருக்க வேண்டும்.
உலக வாழ்வெல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பதாம் பாடல்
போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்
தாதினான் நந்தும் சுரும்பெல்லாம் தீதில்
வினையினான் நந்துவர் மக்களும் தத்தம்
நனையினான் நந்தும் நறா
இந்தப் பாடலின் பொருள்:
மாலைகள், அதில் தொடுக்கப்பட்ட மலர்களால் சிறப்படையும். அந்த மலர்களில் உள்ள தேனை சேகரிப்பதால் தேனீக்கள் சிறப்படையும். தேன், அது உள்ள பூவின் அரும்பினால் பெருகி சிறப்படைகிறது. மனிதர்கள் தாங்கள் செய்யும் நல்ல செயல்களால் பெருமை அடைகின்றனர்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்தோராம் பாடல்
சிறந்தார்க்கரிய செறுதல் எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க்கரிய வகுத்தூண் இரந்தார்க்கு ஒன்று
இல்லென்றல் யார்க்கும் அரிது
இந்தப் பாடலின் பொருள்:
கருணை உள்ளம் கொண்டவர், யாராவது தவறு செய்தாலும் அவரை உடனே வெறுத்து ஒதுக்கிவிடாமல் மன்னித்து விடுவார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினரை விட்டுப் பிரிந்து தனியே வாழ விரும்பமாட்டார்கள். வறுமையில் வாழ்பவர், பிறர்க்கு உணவு வழங்கி தான தர்மம் செய்வது கடினம். நல்ல மனம் கொண்டவர் உதவி நாடுவோர்க்கு தம்மிடம் உள்ளதை நிச்சயமாகத் தருவார்கள்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து இரண்டாம் பாடல்
இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரைசுடும் ஒண்மையிலாரை - வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையும்
தன்னடைந்த சேனை சுடும்
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல உணவாக இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட வயிற்றுக்குள் சென்றால் அது வலியைத் தரும். தெரியாத வேலையை தெரிந்ததாகப் பொய் கூறுவது தீங்கு விளைவிக்கும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத மனிதனின் வாழ்வில் அவனது முன்பிறவி வினைகள் வந்து பாதித்து துன்பம் ஏற்படுத்தும். அரசனாக இருந்தாலும் நீதி இல்லாதபோது தன் படைகளாலேயே எதிர்க்கப்படுவான்.
நான்மணிக்கடிகை நீதி நூலின் ஐம்பத்து மூன்றாம் பாடல்
எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருளது உறுதிச் சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருளது அறநெறி பன்னூலும்
தேர்தற் பொருள பொருள்
இந்தப் பாடலின் பொருள் :
ஒருவரைக் கேலி செய்து பேசுவது அவரது மனத்தை பலம் இழக்கச் செய்யும். ஒருவரைப் பாராட்டிப் பேசுவது அவர் மனதுக்கு வலிமையைத் தரும். உள்ளத்துக்கு மிகவும் உறுதியைத் தருவது நல்ல அறநெறிக் கொள்கைகள். அறநெறிகளை நன்கு உணர்வதற்கு சிறந்த வழி பல நூல்களைப் படிப்பது.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து நாலாம் பாடல்
ஆறுள் அடங்கும் குளமுள வீறுசால்
மன்னர் விழையும் குடியுள - தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடொப்ப உள
இனி பாடலின் பொருள்:
குளம் என்றால் சிறியதாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆற்றை உள்ளடக்கும் பெரிய குளங்களும் உண்டு. மன்னர்தான் எப்போதும் உயர்வெனச் சொல்ல முடியாது. மன்னரே விரும்பும் சிறந்த குடிமக்களும் உண்டு. வேதம் என்ற நூல் மட்டுமே சிறப்பெனச் சொல்ல முடியாது. அதைவிட நல்ல கருத்துள்ள நூல்களும் உண்டு. வேள்வி முதலிய சடங்குகளை விட அதிகம் புண்ணியம் தரும் ஈகைச் செயல்களூம் உண்டு.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஐந்தாம் பாடல்
எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்
ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி
இந்தப் பாடலின் பொருள்:
எருதுகளை வாங்கி அவற்றைப் பழக்கி வேலை செய்யத் தெரிந்தவர் உழவர். உழவுத் தொழில் தெரியாதவர் பார்ப்பன இனத்தவர். அவர் ,சேவல் ஒன்று பெட்டைக் கோழிக் கூட்டத்தோடு பழகுவது போல் வேற்று இனக் கூட்டத்தோடு பழகத் தெரிந்தவர். புகுந்த வீட்டு மக்களுடன் பழகத் தெரிந்த பெண் சிறந்த இல்லத்தரசி ஆவாள். படை வீரர் கூட்டத்துடன் நன்கு பழகும் முறை அறிந்தவர் சிறந்த படைத்தளபதி ஆவார்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஆறாம் பாடல்
யானையுடையார் கதன் உவப்பர் மன்னர்
கடும்பரிமாக் காதலித்தூர்வர் - கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு
இந்தப் பாடலின் பொருள்:
யானையை போருக்குப் பயன்படுத்துவோர், அது மதம் பிடித்து கோபத்தோடு அலைவதை விரும்புவார். மாறாக, குதிரையை விளையாட்டுப் பயணத்துக்குப் பயன்படுத்தும் மன்னர்கள் அதன் சாந்தமான குணத்தை விரும்புவர். நல்ல பண்போடுள்ள ஒழுக்கமான பெண்களை ஒழுங்கான ஆண்கள் மதிப்பர். ஒழுக்கமில்லாத பெண்களை அதேபோன்ற ஒழுக்கம் கெட்ட ஆண்கள் விரும்புவர்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஏழாம் பாடல்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோடு
எண்ணக் கடவுளுமில்
இந்தப் பாடலின் பொருள்:
மனிதர்க்கு கண்ணை விடச் சிறந்த வேறு உடல் உறுப்பு இல்லை. பெண்களுக்கு நல்ல கணவரை விட நெருங்கிய உறவினர் வேறு இல்லை. ஒரு தாயின் வாழ்க்கையில் ஒளியூட்டுவதற்கு அவர் பெற்ற பிள்ளைகளை விடச் சிறந்த பொருளில்லை. பெற்ற தாயை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து எட்டாம் பாடல்
கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்
செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென
உற்றதுரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புற்றன்னர் புல்லறிவினார்
இந்தப் பாடலின் பொருள்:
படித்தவர்களுடன் நன்றாகப் பழகும் மக்களை படித்தவர்க்கு இணையாக மதிக்கலாம். யாரிடமும் இரக்கம் காட்டாதவர்கள், பெரும் கொடுமைக்காரர்களுக்கு இணையானவர்கள். நம்மிடம் உண்மையை மறைத்துப் பேசுகிறவர்கள், நம் எதிரிகளுக்கு சமமானவர்கள். பிறர் துன்பத்தை விரும்பும் கீழ்மக்கள் புற்றில் மறைந்து வாழும் பாம்பைப் போல் ஆபத்தானவர்கள்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஒன்பதாம் பாடல்
மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின்புறுவர்
துறப்பார் துறக்கத் தவர்
இந்தப் பாடலின் பொருள்:
உயர்ந்த மனிதர்கள், இயற்கையாகவே சமூகத்துக்கு நல்லது செய்யும் எண்ணம் கொண்டிருப்பார்கள். கீழானவர்கள், இயல்பாகவே தீமை செய்ய முனைவார்கள். நல்ல அறச் செயல்களைச் செய்யும் மனிதர்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் நன்மைகளைச் செய்து மகிழ்வார்கள். எந்த இன்பமும் வேண்டாம் என்று துறக்கும் துறவிகள் மேல் உலகத்துக்கு உரியவர்கள்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபதாம் பாடல்
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்
இப்பாடலின் பொருள்:
சூரியனும் சந்திரனும் இரு சுடர்களாக நிரந்தரமாக ஒளி வீசும்.. உலகில் எப்போதும் துன்பங்கள் இருக்கும். வேலைகளும் நடக்கும். அள்ளிக் கொடுத்து உதவும் செல்வர், உதவி பெற்று வாழும் ஏழைகள் என இரு பிரிவுகள் தொடர்ந்து உலக சமூகத்தில் நிலவும். மனிதர் பிறப்பதும் இறப்பதும் தொடர்ந்து நிகழும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்தோராம் பாடல்
இனிதுண்பான் என்பான் உயிர்கொல்லாதுண்பான்
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனியன் எனப்படுவான் செய்த நன்றில்லான்
இனியன் எனப்படுவான் யார்யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன்
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல உணவு என்பது எந்த உயிரையும் கொல்லாத சைவ உணவுதான். வெறுப்புக்குரியவர் யார் என்றால் அது எவரிடமும் நட்புக்கொள்ள விரும்பாத கோபக்காரர்தான். யாருக்கும் எந்த நன்மையும் செய்யாத மனிதன், தனியாக ஒதுக்கப்பட வேண்டியவன். எவரிடமும் கோபம் காட்டாத மனிதன்தான் இனியவன் ஆவான்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்திரண்டாம் பாடல்
ஈத்துண்பான் என்பான் இசைநடுவான் மற்றவன்
கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியாதானை இரவு
இந்தப் பாடலின் பொருள்:
மற்றவர்களுக்கு கொடுத்தபின் தான் உணவு உண்ணும் கருணையாளரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும். மற்றவர் கையில் உள்ளதைப் பறித்து வாழ்பவன் கேவலமானவன். தன்னை மதிக்காதவரிடம் சென்று கெஞ்சிக் கொண்டு வாழ்வது பிறர் பார்த்து சிரிக்கும் நிலையை உண்டாக்கும். தகுதியில்லாதவரிடம் உதவி கேட்பது பகைமைக்கு வழிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து மூன்றாம் பாடல்
நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து
வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து
கன்றூட்ட நந்தும் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து
இந்தப் பாடலின் பொருள்:
எரியும் நெருப்பில் நெய் ஊற்றினால் அது இன்னும் அதிகமாக கொழுந்து விட்டெரியும். இருக்கும் வாழ்வுக்கு நன்றி கூறி கடவுளை வணங்கி வந்தால் வரங்கள் பெற்று வாழ்வில் உயரலாம். கன்றுக்குட்டியை அருகில் விட்டால் பசு, இன்னும் அதிகம் பால் கறக்கும். உற்றார் உறவினர்களுக்கு விருந்து வைத்துப் போற்றினால் அன்பு இன்னும் அதிகம் பெருகும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து நாலாம் பாடல்
பழியின்மை மக்களால் காண்க ஒருவன்
கெழியின்மை கேட்டால் அறிக பொருளின்
நிகழ்ச்சியால் ஆக்கமறிக புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப்படும்
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவருக்கு நல்ல பிள்ளைகள் பிறக்கின்றனர் என்றால் அவர் ஏதோ புண்ணியம் செய்துள்ளார் என்று பொருள். பணம் இல்லாதபோது விலகிப் போகும் நண்பர்கள், உண்மையில் என்றுமே நட்பு கொண்டதில்லை என்று அர்த்தம். நாம் செய்யும் வேலையால் நமக்கு வருமானம் வந்தால்தான் அது பயனுள்ள வேலையாகும். உண்மையான புகழ் எப்போது தோன்றுகிறதென்றால் பகைவரும் தம் பகைமையை மறந்து பாராட்டும்போதுதான்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஐந்தாம் பாடல்
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் - பெண்ணின்
உருவின்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதியுள - பாட்டுள்ளும்
பாடெய்தும் பாடல் உள
இந்தப் பாடலின் பொருள்:
எல்லா மனிதருக்கும் கண்ணிருக்கலாம். ஆனால் சிலரின் கண்கள் மட்டும் மிகக் கருணையானவை. பெண்கள், உருவத்தில் ஆணை விடச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலரின் உள்ளம் மிக உயர்ந்தது. நாட்டில் பல இடங்கள் இருந்தாலும் சில தலங்கள் மட்டும் மிகப் பெருமைக்குரியனவாக விளங்குகின்றன. பாடல்கள் பல ஒலித்தாலும் சில மட்டும் மிகப் புகழ் பெறுகின்றன.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஆறாம் பாடல்
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப - ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு
இந்தப் பாடலின் பொருள்:
விளக்கில் உள்ள நெருப்பு சிறிதாக எரிந்தாலும் அதை மதிப்புடன் பார்த்து வணங்குவார்கள். ஆனால் அதே நெருப்பு பெரிதாக அடுப்பு விறகில் எரியும்போது யாரும் மதிப்பதில்லை. அதுபோல ஒரு சமூகத்தில் வயதில் மூத்தவராக இருந்தாலும் அவர் படிக்காவிட்டால் யாரும் மதிக்கமாட்டார். மாறாக மிக இள வயதாக இருந்தாலும் படித்தவர் என்றால் தனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஏழாம் பாடல்
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகின் கெடும்
இந்தப் பாடலின் பொருள்:
கையில் பணம் இருந்தால் விரும்பியதைப் பெற முடியும். போதிய நீர் கிடைத்தால் விதையிலிருந்து பயிர்கள் முளைத்தெழும். திருமகள் அருள் இருந்தால் செல்வ வளம் தானே பெருகும். அருள் இல்லையென்றால் உள்ள செல்வமும் கரையும்.
நான்மணிக் கடிகை நூலின் அறுபத்தெட்டாம் பாடல்
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்
அரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல்.
இந்தப் பாடலின் பொருள்:
புலி, மாமிச உணவை உண்டு, தன் உடல் நிறத்தைப் பொலிவுறச் செய்கிறது. பசுக்கூட்டம் ஈரமான நிலத்தில் விளையும் புல்லை மேய்ந்து மகிழ்கிறது. கீழ் மக்கள், வெறும் அரிசிச் சோற்றை தின்பதுடன் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். ஆனால் மேன்மக்கள் தம் தகுதிக்கேற்ற சாதனை எதுவும் செய்தால்தான் மன நிறைவு அடைவர்.
நான்மணிக் கடிகை நூலின் அறுபத்தொன்பதாம் பாடல்
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை.
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு காரியத்தின் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று முன்கூட்டியே யோசிக்காமல் விடுவது தவறு. எந்த நன்மையும், முன்கூட்டியே யோசிப்பவர்க்குதான் முதலில் கிட்டும். எவ்வளவு பயன் கிடைத்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்படுவதே மனித மனம். எந்த ஆசையும் இல்லாத துறவிகள் மேற்கொள்ளும் தவங்கள் சிறந்த பயன் தரும்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபதாம் பாடல்
கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையா தவர்.
இந்தப் பாடலின் பொருள்:
செல்வம் இருந்தும் அதை அனுபவிக்காமல் பதுக்கி வைப்பவரை விட, பணம் இல்லாமல் வறுமை வாழ்க்கை வாழ்பவரே மேல். சேர்த்து வைத்த பணத்தை இழந்து வருந்துவதை விட பணம் இல்லாமல் வருந்துவதே மேல். கோபத்தோடு பிறரை திட்டுபவரை விட திட்டலைப் பொறுத்துக் கொள்பவர் சிறந்தவர். ஒரு நன்மையைச் செய்தவரை விட அந்த நன்மையை மறவாமல் இருப்பவர் இன்னும் உயர்ந்தவர்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபத்தோராம் பாடல்
மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்
புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
தந்தை தன் மகனை நல்ல விதமாக வளர்த்திருக்கிறார் என்பது அந்த மகனின் நடத்தையால் தெரிய வரும். ஒருவன் முகத்தைக் கொண்டே அவன் மனத்தில் உள்ள ஆசையை அறிய முடியும். நீர் நிறைந்த குளங்களின் தன்மையை அதில் வளர்ந்துள்ள தாவரங்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் கொண்டு அறியலாம். வயலில் இருந்து கிடைக்கவிருக்கும் விளைச்சல் அளவை வானில் இருந்து பொழியும் மழை அளவைக் கொண்டு அறியலாம்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபத்திரண்டாம் பாடல்
பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்தும் குடி.
இந்தப் பாடலின் பொருள்:
பலவித மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் அந்த ஊர் சிறப்படையும். ஐயம் எல்லாம் தெளிவாகும்படி ஆழ்ந்து படித்தால் ஒருவரின் மூளை வளர்ச்சியடையும். கூர் கொம்புகள் உடைய எருதுகள் சேரும்போது பசுக்கூட்டம் பாதுகாப்பும் பலமும் பெறும். ஒருவன் பிறருக்கு உணவளித்து உதவும்போது அவன் குடும்பத்துக்கு புண்ணியம் சேர்கிறது.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து மூன்றாம் பாடல்
ஊர்ந்தான் வகைய கலினமா - நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய அறஞ்செய்கை தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு
இந்தப் பாடலின் பொருள்:
குதிரைகள் அவற்றின் மீதமர்ந்து செலுத்தும் மனிதனின் போக்குக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். அறச்செயல்கள் செய்ய விரும்புவோரின் செயல்திறமைக்கு ஏற்றவாறு அந்த செயல்கள் விரைவாகவோ மெதுவாகவோ நடக்கும். நீர் நிறையும் தேக்கங்களின் பரப்பு, தோண்டிய நீர்நிலைகளின் அளவைப் பொறுத்து அமையும். குடும்பங்களின் செயல்பாடுகள் அவற்றின் பணவரவைப் பொறுத்து அமையும்.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து நாலாம் பாடல்
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை யானே நடந்தன - தாழியாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலால் இன்புறுவார்
இந்தப் பாடலின் பொருள்:
யுகங்களை ஆண்டுகளாகக் கணக்கிட்டனர் நம் முன்னோர். காலமும் நாழிகை அளவால் குறிக்கப்பட்டது. ஆயூள் காலத்தை வீணாக்காமல், அறிவுடையாரிடம் கேட்டறிந்து ஞானம் பெற்றனர் நல்ல மக்கள். அதைச் செய்யாமல் வீண் கொடுமைகளில் நேரத்தைப் போக்கியவர்க்கு வெட்கக் கேடுதான் மிஞ்சும்.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து ஐந்தாம் பாடல்
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யா வித்தாகி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
படித்தவன் ஏதாவது சிக்கல் வந்தால் அதிலிருந்து மீள வழி காண்பான். படிக்காதவன் தடுமாறி நிற்பான். ஒருவன் இந்தப் பிறவியில் செய்யும் காரியங்களின் விளைவுகள் அடுத்த பிறவியிலும் தொடரும். ஆழ்ந்து சிந்தித்தால் முற்பிறவிப் பலன் இப்பிறவியில் தொடர்வதை உணரலாம்.
நான்மணிக் கடிகை 76- ம் பாடல்
தேவ ரன்னர் புலவரும் தேவர்
தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாரைக் காத லவர்.
இந்தப் பாடலின் பொருள்:
அறிவைப் பரப்பும் புலவர்கள் தேவலோகத்து மனிதர் போல் உயர்ந்தவர்கள். புலவரின் ஊரில் வாழும் மக்கள் அவரை தங்கள் உறவினராகப் போற்றி மதித்து நடந்து அவரிடமிருந்து அருளும் கல்வியும் பெறலாம். அவ்வாறு செய்தால் தாங்களும் புலவர் போல் உயர்ந்த மனிதராகலாம்.
நான்மணிக் கடிகை - 77 ம் பாடல்
தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து.
இந்தப் பாடலின் பொருள்:
நண்பன் பொய் கூறினால் அந்த நட்பை உடனே முறித்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரவுள்ள மருத்துவர் கேட்டால் உடனே வலியையும் நோயையும் பற்றி அறிந்த விவரம் எல்லாம் தர வேண்டும். பெற்றோர் பெரியவர் ஆகியோர், ஒரு கெட்ட செயல் வேண்டாம் என்று அறிவுறுத்தினால் அதனை உடனே விட்டுவிட வேண்டும். சொத்துக்குரியவர் கேட்டால் உடனே அவர் பாகத்தை பங்கிட்டுத் தந்துவிட வேண்டும்.
நான்மணிக் கடிகை - 78 ம் பாடல்
நாக்கி னறிப இனியதை மூக்கினான்
மோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணினான் எண்ணப் படும்.
இந்தப் பாடலின் பொருள்:
உணவின் சுவையை அனுபவிக்க நாக்கு உதவுகிறது. மலர்களின் இனிய வாசனையை உணர மூக்கு உதவுகிறது. அழகிய காட்சிகளைக் காண கண் உதவுகிறது. வாழ்வுக்கு தேவையான கருத்துகளை உணர மூளையும் மனமும் உதவுகிறது.
நான்மணிக் கடிகை 79 - ஆம் பாடல்
சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
உலகில் பிறக்கும் உயிரெல்லாம் மறையக் கூடியவைதாம். வலிமை அல்லது பலம் எல்லாம் குறைந்து போகக் கூடியவைதாம். இளமை என்பதும் நிலையாக நீடிப்பதில்லை. செல்வ வளம் என்பது எப்போதும் நீடிக்கும் என்று உறுதியில்லை.
நான்மணிக் கடிகை 80 - ஆம் பாடல்
சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா.
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவரின் பேச்சைக் கொண்டு அவர் எவ்வளவு படித்தவர் என்று அறியலாம். ஒரு நீர்நிலையில் உள்ள தண்ணீரின் தன்மையை வைத்து அங்குள்ள மண்ணின் குணத்தை அறியலாம். ஒருவர் எந்த அளவு பொது நலத்தில் அக்கறை காட்டுகிறார் என்பதைக் கொண்டு அவரது பெருந்தன்மையை உணரலாம். ஒருவன் குடிகாரன் என்பதை அவனது தடுமாற்றத்தால் உணரலாம்.
நான்மணிக் கடிகை 81 - ஆம் பாடல்
நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு.
இந்தப் பாடலின் பொருள்:
குற்றம் கூறும் கெட்ட பேச்சால் நட்பு அழிந்து விடும். அறிவு தெளிவில்லாத மூடனை வற்புறுத்தி ஒரு பொறுப்பை ஏற்கச் சொன்னால் அவன் அதைப் பாதியில் கைவிட்டு விடுவான். பல நூல்கள் படித்து வாழ்வில் தெளிவு பெறுவோர்க்கு பேராசைகள் வராது. பகைமை உணர்வு நன்மையைத் தராது.
நான்மணிக் கடிகை 82 - ஆம் பாடல்
கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.
இந்தப் பாடலின் பொருள்:
உதவி செய்ய விரும்புவோர், பசியுள்ளவர்க்கு உணவு தந்து உதவலாம். எதையாவது விட விரும்புவோர் உயிர் மீதுள்ள பற்றை விடலாம். யாரையாவது உயர்த்திவிட வேண்டும் என நினைப்போர், தங்கள் உறவினருள் ஏழையானவரைத் தாங்கி உயர்த்தலாம். எதையாவது ஒழிக்க விரும்பினால் கோபம் எனும் குணத்தை ஒழித்து விடலாம்.
நான்மணிக் கடிகை 83 - ஆம் பாடல்
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.
இந்தப் பாடலின் பொருள்:
வறுமையில் வாழ்ந்தால் ஒருவரின் அழகும் இளமையும் வீணாகிவிடும். ஒரு குடும்பத்தின் பெருமையும் மதிப்பும் அக்குடும்பத்தினரிடம் கல்வி உள்ள வரைதான். படிப்பு இல்லாவிட்டால் மதிப்பு மறைந்துவிடும். தண்ணீரில்லாத வறட்சி ஏற்பட்டால் வயலில் பயிர் வளராமல் வாடிவிடும். எருதின்மேல் சுமையை அளவுக்கு மேல் ஏற்றினால், அதை சுமக்க முடியாமல் எருது இறந்துவிடும்.
நான்மணிக் கடிகை 84 - ஆம் பாடல்
நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்
கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்
துடையார்க்கும் எவ்வூரு மூர்.
இந்தப் பாடலின் பொருள்:
கல்வியறிவு அதிகமுள்ள அறிஞர்கள் எந்த ஊரிலும் உயர்ந்து விளங்குவார்கள். துறவிகளுக்கு சொந்த ஊர் என்று எதுவுமில்லை. எல்லா ஊரும் அவர்க்கு ஒன்றுதான். நாடோடி மக்கள் சொந்த ஊர் எதுவுமின்றி அலைவார்கள். பணம் அதிகம் வைத்துள்ள செல்வந்தர்களே எல்லா ஊரிலும் சொத்துக்கள் வாங்கி அதனை தம்மூர் என்பார்கள். ஆக மொத்தம், மக்கள் வாழ்வு ஓர் ஊரில் முடங்குவதில்லை.
நான்மணிக் கடிகை 85 - ஆம் பாடல்
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
இந்தப் பாடலின் பொருள்:பண்பும் படிப்பும் இல்லாதவருக்கு அவரது பேச்சே எமனாக வாய்க்கக்கூடும். மெல்லிய இலை கொண்ட வாழை மரத்துக்கு அதன் குலைதான் எமன். குலை ஈன்றதும் தாய் மரம் விழுந்துவிடும். பிறருக்கு தீமை செய்து மகிழ்வோருக்கு அறக் கடவுள் தண்டனை கொடுத்து அழிக்கும். வீட்டில் உள்ள மனைவி ஒழுக்கம் தவறினால் அவளது குடும்பத்தை அழிப்பவளாவாள்.
நான்மணிக் கடிகை 86 - ஆம் பாடல்
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
ஆடலாற் பாடு பெறும்.
இந்தப் பாடலின் பொருள்:
பயிர் விளையும் நிலத்திற்கு நல்ல விதமாக நீர் பாய்ச்சினால் நிலம் வளமடையும். கடலில் இருந்து கிடைக்கும் முத்து போன்றவற்றால் நகரத்தில் வர்த்தகம் வளரும். நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட்டால் நாட்டை ஆளும் மன்னருக்கும் பெருமை சேரும். கூத்து போன்றவற்றில் ஈடுபடுவோர் திறமையை வளர்த்துக்கொண்டு பாடி ஆடினால் கலை வளரும்.
நான்மணிக் கடிகை 87 - ஆம் பாடல்
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்.
இந்தப் பாடலின் பொருள்:
பெண்கள் குடும்ப ஒற்றுமையை ஊக்குவிக்கும் வண்ணம் உழைப்பது சிறப்பு. அம் தணர் எனும் அழகிய அருள் உள்ளம் கொண்ட துறவியர் இறை எண்ணம் மக்களிடையே பரவ உழைப்பது சிறப்பு. மற்ற நாட்டுடன் போர் புரியச் செல்லும் போது வீரர்களை ஒற்றுமையாக வழிநடத்தும் திறமை மன்னர்க்கு வேண்டும். உறவினர்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் அது அனைவருக்கும் கேடுதான்!
நான்மணிக் கடிகை 88 - ஆம் பாடல்
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.
இந்தப் பாடலின் பொருள்:
பிறர் பொருளைத் திருட முயன்றால் துன்பம்தான் வரும். எனவே அது கூடாது. நம் தகுதிக்குரிய வேலைகளையும் கடமையையும் செய்யாமல் இருக்கவும் கூடாது. ஒழுக்கமில்லாத மக்களுடன் சேர்ந்து பழகுவதும் கூடாது. எவரிடத்தும் பகை கொள்ளக் கூடாது.
நான்மணிக் கடிகை 89 - ஆம் பாடல்
பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம்.
இந்தப் பாடலின் பொருள்:
நண்பருக்கு உதவி செய்து அவரை வாழ்வில் உயர்த்திவிடுவது நல்லது. பகைவரை ஒடுக்குவதற்கு எற்ற காலம் வரும்வரை காத்திருந்து பின் எதிர்க்க வேண்டும். பிறரை நம்பி வாழும் நிலைமையை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
நான்மணிக் கடிகை 90 - ஆம் பாடல்
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு.
இந்தப் பாடலின் பொருள்:
சோம்பல் உள்ளவர்க்கு தாழ்வுதான் வரும். நல்ல ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதோருக்கு பிறரை துன்புறுத்தும் கெட்ட எண்ணங்கள் தோன்றும். நல்ல பெண்கள் தனக்குத் தானே பண்பாட்டு எல்லைகளை வகுத்து அதற்குள் நிற்பார்கள். யானை, நிலத்தில் அமைக்கப்படும் உறுதியான தூணுடன் சேர்ந்து நிற்கும்.
நான்மணிக் கடிகை 91 - ஆம் பாடல்
மறையறிய அந்தண் புலவர் முறையொடு
வென்றி அறிப அரசர்கள் - என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண்.
இந்தப் பாடலின் பொருள்:
அருள் உள்ளம் கொண்ட புலவர்கள் மறைநூல்களைப் படித்து ஆராய்வார்கள். நல்ல அரசர்கள், மக்களுக்கு பகையரசரால் துன்பம் வராமல் பாதுகாக்க வழிவகைகளை ஆராய்வார்கள். ஞானிகள் எப்போதும் கர்வமின்றி பணிவாக இருப்பார்கள். நல்ல பெண்கள் தெய்வத்தை வணங்குவதை விடவும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதையே முக்கியமாக கருதுவர்.
நான்மணிக் கடிகை 92 - ஆம் பாடல்
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல் நிற்குங் கொலை.
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல பண்புள்ள பெண்கள் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கமாக வாழ்வார்கள். கற்பில்லாத பெண் எவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் கெட்டுப் போவாள். மனதில் காதல் ஏற்பட்டால் அதன் விளைவைத் தடுக்க இயலாது. கொலை செய்தவர் அந்தப் பழியிலிருந்து தப்பிக்க முடியாது.
நான்மணிக் கடிகை 93 - ஆம் பாடல்
வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்
கயம்பெருகின் பாவம் பெரிது.
இந்தப் பாடலின் பொருள்:
மனத்தில் துணிவு அதிகரித்தால் உடல் பலமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி கனிவான பழக்கம் கொண்டிருந்தால் உறவினரின் அன்பும் நட்பும் பெருகும். உள்ளத்தில் கருணை வளர்ந்தால் தர்மச் செயல்கள் நிறைய செயத் தோன்றும். மனதில் கெட்ட எண்ணங்கள் மிகுந்தால் பாவம் வந்து சேரும்.
நான்மணிக் கடிகை 94 - ஆம் பாடல்
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார் கையகத் தூண்.
இந்தப் பாடலின் பொருள்:
இளவயதில் கல்வி பயிலாதிருப்பது குற்றமாகும். கையில் பணமில்லாதபோது தானம் செய்ய முயல்வது தவறு. தம் பக்கம் ஆதரவுக்கு உறவினர் இல்லாதபோது கோபத்தைக் காட்டுவது தவறு. நம்மிடம் உள்ளன்பு இல்லாதவரிடம் உணவு பெற்று உண்பது தவறு.
நான்மணிக் கடிகை 95 - ஆம் பாடல்
எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா வளர விடல்தீது - நல்லார்
நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை.
இந்தப் பாடலின் பொருள்:
உயிரைக் கொல்வது எப்போதுமே பாவம்தான். வேள்வி போன்றவற்றில் ஆடு, மாடு கொல்வதும் கூட குற்றமே. பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் சும்மா வளரவிடுவதும் குற்றம். மான அவமானம் பார்க்காமல் வாழ்வது குடும்பத்துக்கு நல்லதில்லை. சிறந்த கொள்கைகளைக் கைவிட்டு மாறிப் போவது குலத்துக்கு நல்லதில்லை.
நான்மணிக் கடிகை 96 - ஆம் பாடல்
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
நல்லொழுக்கம் தான் நாம் கற்கும் கல்வியின் பயனாகும். தர்ம காரியம் செய்து கொண்டே வசதிகளை அனுபவிப்பதுதான் செல்வம் சேர்ப்பதன் பயனாகும். யாருக்கும் சலுகை காட்டாமல் நடப்பதுதான் நீதித் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்க்கு முறையாகும். அரசன், அமைச்சர்களுடன் ஆராய்ந்து, தன் சொந்த விருப்பங்களை ஒதுக்கி விட்டு முடிவெடுப்பதே சிறப்பு.
நான்மணிக் கடிகை 97 - ஆம் பாடல்
கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
கள் குடிப்பதன் தீங்கு என்ன என்பதை அதைக் குடித்தவன் அறிந்துகொள்வான். நெடுந்தூரம் பறக்கும் பறவை, தண்ணீர் கிடைக்காத துன்பத்தை உணர்ந்து கொள்ளும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்பவன் குடும்பத்தை நடத்த முடியாமல் துன்பப்படுவான். பொருள்களைக் களவாடும் திருடன், அவற்றை மறைத்து வைக்க முடியாமல் அவதியுறுவான்.
நான்மணிக் கடிகை 98 - ஆம் பாடல்
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
அன்பில்லாதவர் கடுமையான சொற்களைப் பேசி புண்படுத்துவார். நீதி நூல்களைப் படித்தவர் எந்த சூழ்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வஞ்சனைப் பேச்சு பேசமாட்டார். நல்லவர்கள் பொய் வதந்திகளை பரப்ப மாட்டார்கள். தாழ்ந்த குணம் கொண்டவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்கள்.
நான்மணிக் கடிகை 99 - ஆம் பாடல்
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.
இந்தப் பாடலின் பொருள்:
ஒளிவீசும் நகையணிந்த அழகிய மங்கையர் கூட்டத்தில் அழகில்லா ஆணுக்கு மதிப்பு கிடைக்காது. படித்தவர்கள் கூடியுள்ள சபையில் படிக்காத மனிதனுக்கு மதிப்பிருக்காது. அதேபோல, கல்வியறிவு இல்லாத மூடர்களின் கூட்டம் நிறைந்திருக்கும் இடத்தில் படித்த மனிதனுக்கு மரியாதை கிட்டாது.
நான்மணிக் கடிகை 100 - ஆம் பாடல்
மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
நவரத்தினக் கல்லில் அழுக்கு படிந்தாலும் அதன் பெருமை குறையாது. இரும்பை நன்றாக கழுவி வைத்தாலும் அதில் துரு பிடிக்கும். இயல்பான குணம் என்றும் மாறாது! கெட்ட புத்தி கொண்டவனை விலங்கிட்டு தண்டித்தாலும் அறிவுரை கூறி அன்பு காட்டினாலும் அவன் திருந்தமாட்டான்.
நான்மணிக் கடிகை 101 - ஆம் பாடல்
எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.
இந்தப் பாடலின் பொருள்:
உயர்ந்த மனிதர்களுடன் சேர்ந்து பழகும் பழக்கம் அறிவு வளர்ச்சிக்கு உதவும் கல்வி போன்றது. நம்மை மதிக்காதவருடன் சேர்ந்து வாழ்வது புண் போல துன்பமானது. நல்ல நண்பர்களின் அறிவுரை யாழிசை போல் இனிமையானது. சிறப்பான மனைவி இல்லாத வீடு பாழடைந்த மனை போல் வெறுமையானது.
நான்மணிக் கடிகை 102 - ஆம் பாடல்
ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை.
இந்தப் பாடலின் பொருள்:
குளம் சிறிதாக இருந்தால் அதில் சேரும் மழைநீர் வழிந்து வீணாகி விடும். குடும்பத்தில் போதுமான வருமானம் இல்லையென்றால் குடும்பத் தலைவியின் மகிழ்ச்சி போய்விடும். முன்பிறவியில் செய்த புண்ணியம் குறைவென்றால் இப்பிறவி வாழ்வில் துன்பம் இருக்கும். ஒருவருக்கு மனத்தில் பலம் இல்லாதபோது அவரது பகைவர்கள் வென்றுவிடுவர்.
நான்மணிக் கடிகை 103 - ஆம் பாடல்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.
இந்தப் பாடலின் பொருள்:
பிறரைத் திட்டிப் பேசுவதால் மன வருத்தங்கள் தோன்றும். எல்லாரிடமும் வணங்கி பணிவோடு நடந்தால், உறவு வட்டம் பெருகும். உழைத்து நிறைய செல்வம் சேர்த்தால் இன்ப வாழ்வு கிட்டும். மனம் நெகிழ்ந்து பிறருக்கு உதவிகள் செய்தால் புண்ணியம் சேரும்.
நான்மணிக் கடிகை 104 - ஆம் பாடல்
ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
எல்லாக் கலைகளும் கற்றவர் என்று ஒருவர் கிடையாது. ஒரு திறமையும் இல்லாதவன் என்று வெறுமையான மனிதரும் கிடையாது. குற்றமே இல்லாத முழு குணம் உள்ளவரும் இல்லை; எல்லாம் அறிந்த முழு அறிவாளியும் இல்லை.
நான்மணிக் கடிகை 105 - ஆம் பாடல்
மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு.
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு குடும்பத்துக்கு வழிகாட்டும் விளக்கு போன்றவர்கள் குடும்பத் தலைவியரான பெண்கள். அவர்களின் உள்ளத்துக்கு ஒளியாக விளங்குவோர் குழந்தைகள். அந்தக் குழ்ந்தைகளின் வாழ்வில் ஒளி உண்டாக்குவது கல்விதான். அந்தக் கல்விச் செல்வம் ஒளி வீச பக்தி உணர்வே உதவும்.
நான்மணிக் கடிகை 106 - ஆம் பாடல்
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
இனிமையாகப் பேசும் பழக்கம் இருந்தால் நட்பு உருவாகும். கடுமையாக வன்சொல் பேச்சு பேசினால் பகை உண்டாகும். பிறருக்கு நம்பிக்கை தரும்படி நல்லனவற்றைக் கூறும் பழக்கத்தால் அருள் குணம் அதிகரிக்கும். மனத்தில் அருளை வளர்த்துக் கொண்டால், மரணத்துக்குப் பின் அழிவிலா வீடுபேறு அடையலாம்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் புலவர் விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை நூலின் மூலமும் விளக்கமும் முற்றிற்று.
விளக்கவுரை: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர் தமிழ் வானொலி ஒலி 96.8
Subscribe to:
Posts (Atom)