Friday, March 13, 2015

மூச்சு

மூச்சு பிறக்குமிடத்தே மனமும் பிறக்கிறது. மனம் பிறக்குமிடத்திலேயே மூச்சு பிறக்கிறது. மனமனமெங்குண்டோ வாயுவங்குண்டு. மனமனமெங்கில்லையோ வாயுவங்கில்லை என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மூச்சு எனும் வாயுவைக் கட்டுப்படுத்தும் யோகிக்கு மனமும் கட்டுப்படும். மனம் உதிப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ப்ராணவாயு என்கிற மூச்சுக் காற்றேயாகும். மனதின் கட்டுப்பாடே புலன்களின் கட்டுப்பாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. மனம் நசிக்காதவரை வினைகளும் நசிக்க மாட்டா. வினைகள் என்கிற வாசனைகள் நசிக்காத வரை சித்தம் நசிக்காது. சித்தம் நசிக்காத வரை தத்துவஞானம் உண்டாகாது. தத்துவஞானம் உண்டாகும் வரையில் ஆசைகள் நசிந்து போகாது. எனவே ஆத்ம தரிசனம் வாய்ப்பதற்கு மனதின் கட்டுப்பட்ட நிலை அவசியமாகிறது. அதற்கான எளிய உபாயம் ப்ராணனைக் கட்டுப்படுத்துவது. அதாவது ப்ராணனின் விரையத்தைக் கட்டுப்படுத்தி உடலில் ப்ராண சக்தியை அதிகப்படுத்திக் கொள்வது.
அதற்கு ஆழ்ந்து, இழுத்து , மெதுவாக மூச்சு விடுவது சிறந்த உபாயமாகும். இதனால் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறைவதோடு, ஆயுள் அதிகரிப்பதோடு ஆரோக்யமும் அதிகரிக்கும். எல்லோருக்கும் ப்ராணாயாமம் கற்றுக் கொள்ள வாய்ப்பதில்லை. எல்லோரும் சந்தியா வந்தனம் செய்வதில்லை. இவர்கள் என்ன செய்வது ? கவலையே வேண்டாம். எப்போதும் மூச்சைக் கவனிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதாவது நடக்கும் போதும், கிடக்கும் போதும், உட்காரும் போதும், எதுவும் செய்யாமலிருக்கும் போதும் எப்போதும் மூச்சைக் கவனித்துக் கொண்டே இருப்பதோடு, மூச்சை இழுத்து, உள்நிறுத்தி, மெதுவாக வெளியற்றிப் பழக வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தோன்றும். ஆனால் போகப்போக பழக்கத்துக்கு வந்து விடும். அதன் பிறகு அதுவே உங்கள் இயல்பாகி விடும். உறக்கத்திலும் தன்னிச்சையாகவே மெதுவாக மூச்சு விடும் பழக்கம் வந்து விடும். இதன் பலன் அதிகமாகும். இதன் நன்மைகளை நீங்கள் ஆறு மாத காலத்தில் உணர முடியும்.
நம்மை அறியாமல் நாம் மூச்சு விடும் போது ஒலிக்கும் மந்திரம் ஒன்று உண்டு. அதை அஜபா மந்திரம் என்பார்கள். ஸோஹம் என்பதாகும் அந்த மந்திரம். மேலே குறிப்பிட்ட படி மெதுவாக இழுத்து மூச்சு விடும் போது, ஸோ என்று மனதில் உச்சரித்தபடி காற்றை உள்ளிழுக்க வேண்டும். சிறிது நேரம் உள்ளே வைத்திருப்பவர்கள் வைத்திருக்கலாம், இல்லையேல் மெதுவாக மூச்சை வெளியே விடும் போது ஹம் என்று மனதில் உச்சரித்தபடி விட வேண்டும். நமது மூச்சை பிரம்மசூத்திரம் என்றும், நூல் என்றும் கால் என்றும் பல பெயர்களில் குறிப்பிடுவார்கள். இந்த பிரம்மசூத்திரம் என்ற நூலினால் ஸோஹம் என்ற மந்திரத்தையும் மனதையும் சேர்த்து கட்டி ஜெபம் செய்து வந்தால் சம்ஸ்காரங்கள் அற்று மனம் அடங்கிவிடும். எனவே இந்த மந்திரத்தை ஆத்ம மந்திரம் என்பார்கள். ஹம்ஸ காயத்ரி என்றும் கூறுவார்கள். விடாமுயற்சியுடன் ஆறுமாத காலம் செய்து வந்தீர்களானால் இதன் பலனை அனுபவித்து உணர்வீர்கள். இதைவிட பெரிய உபதேஷம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறேதுமில்லை. உலகத்தில் ராஜயோகம் என்பது இந்த ஸோஹம் மந்திர ஜெபமேயொழிய, இதைவிட மற்றொரு ராஜயோகம் இல்லை. இதை யார் வேண்டுமானாலும் கடைபிடித்து மேன்மை அடையளாம். இதன் அடுத்த நிலைக்கு இயற்கையாகிய ப்ரகிருதியே உங்களை இட்டுச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனென்றால் இயற்கையான அஜபா மந்திரத்தையே நீங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்களல்லவா ?

No comments:

Post a Comment