தானம் செய்ய வேண்டும்:
யே கே சாஸ்மச்ச்ரேயாக்ம்ஸோ ப்ராஹ்மணா: I தேஷாம்
த்வயாஅஅஸனேன ப்ரச்வஸிதவ்யம் II 11.5 II
பொருள்: நம்மை விட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.
ச்ரத்தயா தேயம் I அச்ரத்தயாஅதேயம் I ச்ரியா தேயம் I ஹ்ரியா தேயம் I
பியா தேயம் I ஸம்விதா தேயம் II 11.6 II
பொருள்: நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தியானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தியானம் செய்ய வேண்டும்.
தானம் பற்றிய சிறந்ததொரு விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இந்த மந்திரம் கூறுகின்ற 4 அடிப்படை நியதிகளுடன் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் போது மட்டுமே அது தானம் ஆகிறது.
i ஏனோதானோ என்று கொடுக்கக் கூடாது. ஈடுபாட்டுடன் கொடுக்க வேண்டும். அந்த ஈடுபாட்டின் பின்னணியில் ‘இது உண்மையிலேயே மகோன்னதமான சேவை, உண்மையிலேயே நற்பணியில் ஈடுபடுபவனுக்கு மனிதன், மனிதன் ஏன், இறைவனே உதவுவார்’ என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.
ii வருமானத்தில் இயன்ற அளவு ஒரு பகுதியைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அதே வேளையில் வருமானத்தை மீறி தானம் செய்து விட்டு, தான் பிறரிடம் யாசிக்கும் நிலையை உண்டாக்கக் கூடாது.
iii ‘ஐந்து காசுகளைக் கையில் எடுத்துக் கொண்டு உயரமான இடத்தில் நின்று கொண்டு, “பிச்சைக்காரா, இதோ “ என்று கூறாதீர்கள். அவன் இருந்தால்தானே அவனுக்குத் தானம் செய்து, அதன் மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவன் அல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன். உங்கள் தானத் திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன் மூலம் நீங்கள் தூய்மையும், நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள்.’ – விவேகானந்தர் ஞான தீபம்.
iv தானம் செய்யும் போது இரண்டு விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். ‘நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள், நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம். இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்துக்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை மனத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர் கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப் போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக் கொண்டுதான் இருக்கும். உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது. பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பது ஒன்று.
இரண்டாவது: ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்பார்கள். நாம் ஒன்றை ஒருவருக்குக் கொடுக்குமுன் அவருக்குத் தேவையிருக்கிறதா, அந்த தானத்தால் அவர் பயன் பெறுவாரா என்பவற்றை அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment