Thursday, August 22, 2013

பெற்றோரை கவனிக்கவில்லையா? பிதுர்தோஷம் வருமே!

நம் குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்யாமல் போனால், பிதுர் தோஷம் ஏற்படும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நன்மைகள் தடைபடும். சிலருக்கு கனவிலும் வந்து ஏதாவது தேவைகளைக் கேட்கக்கூடும்.  சிலர் வயதான காலத்தில் பெற்றோரைச் சரிவர கவனிக்காமல் விட்டு, அவர்களின் இறப்புக்கு பின் பிதுர் சாபத்திற்கு ஆளாவதும் உண்டு. இந்த தோஷம் நீங்க அமாவாசை விரதம் இருந்து, பசுமாட்டிற்கு புல்,கீரை,பழம் ஆகியவற்றைக் கொடுத்து வழிபட வேண்டும்.  காலையில் நீராடி, பசுவை மும்முறை வலம் வந்து, கைகளால் தொட்டு வணங்கவேண்டும். வசதியிருப்பவர்கள் சமுத்திரக்கரையில் நீராடி பசுவும் கன்றுமாக தானம் கொடுக்கலாம்.

கருடபுராணம் சொல்றதைக் கேளுங்க!

இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.  ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது. பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்.

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர்

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள்.  ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியைஅடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

இதிகாசம் என்றால் என்ன?

இதி- ஹ-ஆஸம் என்று இதனைப் பிரிப்பர். இதி ஆஸம் என்பதற்கு இப்படி நடந்தது என்றும், ஹ என்பதற்கு நிச்சயமாக என்பது பொருள். கொஞ்சம் கூடப் பொய் கலக்காமல், உள்ளதை உள்ளபடியே எழுதியதே இதிகாசம் என்பர்.

உண்ணும் உணவைப் பழிக்காமல் இருப்பதே விரதம் தான்

உண்ணாமல் தெய்வசிந்தனையுடன் இருப்பது விரதம். திதி, நட்சத்திர அடிப்படையில் சாப்பிடாமல் இருக்கும் எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன. தைத்ரிய உபநிஷத்தில் வித்தியாசமான விரதம் பற்றி கூறப்பட்டுள்ளது. உண்ணும் உணவைப் பழிக்காமல் இருப்பதே விரதம் தான் என்று பிருகு மகரிஷிக்கு, அவருடைய தந்தை உபதேசிக்கிறார்.  சாப்பாடு சகிக்கவில்லை என்று யாரும் இகழக் கூடாது.  இந்த உணவு எனக்கு நன்மை தரும். ஆரோக்கியம் தரும். மனத்தூய்மை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக உண்ணவேண்டும். இப்படி தைத்ரியஉபநிஷத்தில் உணவின் மகத்துவம் கூறப்படுகிறது. இறுதியாக உணவே கடவுள் என்று அந்த ரிஷி சிறப்பிக்கிறார். இதனையே அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று குறிப்பிடுவர். இதையே கிராமங்களில் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதசுவாமி என்று சொலவடையாகவும் சொல்வர். அன்னலட்சுமி, அன்னத்தாய் என்று உணவை தெய்வாம்சமாக வணங்குவர்.

பிரச்னை இருக்கா? செவ்வாயில் பேசுங்கள்!

பிரச்னை இல்லாத வாழ்க்கை ஏது! ஆனால், அது இழுத்துக்கொண்டே போனால் தீர்வு தான் என்ன! பிரச்னைகளை செவ்வாய்க்கிழமையன்று பேசி முடித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார் ஜோதிடமுரசு மிதுனம் செல்வம்.நமது வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் இரு கண்களாக இணைந்தே இருக்கின்றன. வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விஷயங்களையும், விசேஷங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் காலம்,நேரம், சகுனம் பார்ப்பது என்பது தொடர்ந்து வரும் நிகழ்வு தான். அதற்காக ஆதாரம், சான்றுகள் இல்லாமல் தலைகால் வைத்து,இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! இந்த நேரம் பொல்லாத நேரம்! இந்த நாள் மோசமான நாள்! என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கிழமை தான் செவ்வாய். உண்மையில், செவ்வாய்க்கிழமையை ஒதுக்க வேண்டும் என்பதற்கு எந்தவித சாஸ்திர ஆதாரமும் இல்லை.மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பார்கள். ஆனால், உண்மையில் பீத(பீடு) மாதம் என்பது தான் பீடைமாதம் என வழக்கத்தில் வந்து விட்டது. மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணரும் கீதையில் கூறுகிறார். மார்கழி மாதத்திற்கு வந்த கதி தான் செவ்வாய்க்கிழமைக்கும் வந்துவிட்டது. இன்னும் சில ஜோதிட ஆதாரங்களையும் சொல்லலாம்.
நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஆனால், சப்தரிஷி வாக்கியங்களில் இதற்கு ஆதாரமோ, சான்றுகளோ இல்லை. இது போலத்தான், கிழமைகளைப் பற்றிய கருத்துகளும் மக்கள் மத்தியில் பதிந்து விட்டன. கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாள் என்பதால், செவ்வாய்க்கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்று தான் பொருள். சுபநிகழ்ச்சிகளையே மங்கள நிகழ்ச்சிகள் என்று சொல்வர். இவ்வாறு இருக்கும்போது, செவ்வாய்க்கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான அங்காரகனையும் மங்களன் என்ற வார்த்தையால் குறிப்பிடுவர். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பூமாதேவியின் அம்சமாவார். ஆகையால்தான், இவரை பூமிகாரகன் என சாஸ்திரம் புகழ்கிறது. நம் உடம்பில் ரத்தம், வெப்பம் ஆகியவற்றிற்கும் செவ்வாயே காரணம். பெண்கள் பூப்படைதல், திருமணம், மண், மனை, வீடு, சகோதரன், உத்தியோகம் போன்றவற்றிற்கெல்லாம் செவ்வாயே அடிப்படைக்காரணம். நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம் செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்கள் செவ்வாயை மங்கள்வார் என்று குறிப்பிடுகின்ற னர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன. இந்தநாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமிபூஜை போடலாம். வீடு மாறலாம். பால்காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்கு கூட வாய்ப்புண்டு. இந்தநாளில் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும் வினையும் நம்மை எதுவும் செய்யாது. செவ்வாய்க்கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும்.

லட்சுமி குபேரர் விரதம்!

குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி. சங்கநிதி, பதுமநிதி என்னும் ஐஸ்வர்யங்கள் அவரிடம் உள்ளன. ஐஸ்வர்யங்களுக்கு அதிபதி லட்சுமி. குபேரனிடம் இருக்கும் அபூர்வமான ஐஸ்வர்யத்தை குபேரலட்சுமி என்பர். இவர்களை வழிபட்டால் வறுமை, கடன் தொல்லை நீங்கி, லட்சுமி கடாட்சம் உண்டாகும். வெள்ளி,பவுர்ணமி  நாட்களிலும், தீபாவளி, சித்ராபவுர்ணமி போன்ற விசேஷ தினங்களும் குபேரலட்சுமி பூஜைக்கு உகந்தவை.

கணபதி ஹோமத்துக்கு நல்ல நாள்!

எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம். குறிப்பாக, புதுவீடு கட்டி பால்காய்ச்சும் போது இதனை நடத்த வேண்டும். சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் நடத்துவது சிறப்பு. சூரிய உதயத்துக்குள் நடத்துவது உத்தமம். ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு.
கொழுக்கட்டை -  வெற்றி
நெல்பொரி -  திருமணம் கைகூடுதல்
தேன் -  கடன் நீங்குதல்
அருகம்புல், நெய்-  செல்வ வளம்
கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் அதில் பங்கு பெறுபவருக்கும், சுற்றியுள்ள வீட்டாருக்கும் நன்மை சேரும். அதனால், உறவினர்கள் இல்ல கிரகப்பிரவேசங்களுக்கு அதிகாலையே சென்று கணபதி ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்

தீர்க்க சுமங்கலியாய் வாழ்க!

காஞ்சி மகாப்பெரியவர் அன்று மடத்தில் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார். பெரியவர் அந்தப் பெண்ணிடம், நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார். அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார். பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார். அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார். பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார். அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார். அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர். அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார். அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார்.  இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண். மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!

கடவுள் சிலைகளுக்கு அருள்பாலிக்கும் சக்தி எப்படி உண்டாகிறது?

கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது இதற்காகவே. உயிர்வாழ உணவு அவசியமாவது போல, கோயிலில் இருக்கும் சிலைகளுக்கு மந்திர ஜெபம் அவசியம். உருவேற திருவேறும் என்று இதனைக் குறிப் பிடுவர். ஆகமவிதிப்படி கோயிலில் பூஜைகளை நியமத்துடன் நடத்துவது அவசியம். கோயில் விளங்க குடி(ஊரிலுள்ள மக்கள்) விளங்கும் என்பதும் இதனால் தான்.

அடுத்த பிறவிக்காக இந்த பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... எண்ணம்போல் வாழ்வு போன்ற கருத்துகள் உலக வாழ்வுக்கு மட்டுமின்றி மறுபிறவிக்கும் பொருந்தும். நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே செல்லுங்கள். நிச்சயம் அவற்றின் பலன் மறுபிறவியில் உங்களை வந்தடையும்.

சொல்லின் செல்வர் என்று அனுமனைப் புகழ்வது ஏன்?

சீதையை என்று ஆரம்பித்தால் கூட சீதைக்கு என்ன ஆனதோ? என்று ராமன் பயந்துபோவார் என எண்ணி, கண்டேன் சீதையை என்றார் சொல்லின் செல்வர் ஆஞ்சநேயர். இதனை ராமாயணத்தில் கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால் என கம்பர் வர்ணிப்பர். இந்த சொல் ஒவ்வொன்றுக்கும் ஆன்மிக பேச்சாளர்கள் ஒரு விரிவுரையே நடத்துவர்.

வீட்டில் உள்ள பசு வழிபாட்டிற்கு எந்தநாள் ஏற்றது?

பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்குங்கள். பசுவழிபாட்டிற்கு வெள்ளிக்கிழமை மிகவும் உகந்தது.

பக்தியின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும்

பக்தியின் நோக்கம் மனிதனை பக்குவப்படுத்துவது தான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று பராபரக்கண்ணியில் தாயுமானவர் சிவனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதுவே நம் அனைவரின் விருப்பமாகி விட்டால் அதுவே பக்தியில் கனிந்த நிலை... அதாவது பக்குவநிலை.

பொறுமை மிக்கவரை பூமாதேவியாகவும், ஆயுதங்கள் ஏந்தியவரை பத்ரகாளியாகவும் சித்தரிப்பதன் நோக்கம் என்ன?

தென்றலானாலும், புயலானாலும் காற்று என்னவோ ஒன்று தானே. தெய்வீக சக்தியையும் நேர் எதிரான அம்சங்களில் வழிபடுகிறோம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட காளியாகவும், உயிர்களுக்கு எல்லாம் தாயாக நீர், உணவு அளிக்கும்போது பூமா தேவியாகவும் வழிபடுகிறோம்.

பிரதோஷத்தில் வழிபட வேண்டியது சிவனையா, நந்தியையா?

பிரதோஷ வேளையில், சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடனமாடுகிறார். அதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்வர். அதனால், இருவரையும் வழிபட்டு இறையருள் பெறுங்கள்

கிருஷ்ணர் அர்ஜூனனுக்காக தேரோட்டும் படத்தை வைப்பது கூடாது என்கிறார்களே ஏன்?

கிருஷ்ணர் தேரோட்டும் படத்தை வைப்பதில் தவறில்லை. குரு÷க்ஷத்திர யுத்த களத்தில் தான் கிருஷ்ணர் பகவத்கீதையை உபதேசித்தார். அதைக் கேட்ட அர்ஜூனனுக்கு குழப்பம் நீங்கி மனத்தெளிவு கிடைத்தது. இந்த படம் வீட்டில் இருந்தால் தைரியம், மனத்தெளிவு, ஞானம் உண்டாகும். தவறான வதந்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள்.

ஆப்பரேஷன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதக பலன் சரியாக இருக்குமா?

 
ராசி சக்கரத்தில் லக்னம் என்று குறிப்பது இப்பூவுலகத்தில் குழந்தையின் ஸ்பரிசம் பட்ட நேரம். சுகப்பிரசவம், ஆப்பரேஷன் எதுவானாலும் ஜாதகபலன் மாறாது.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் - இதன் பொருள் என்ன?

இளமை இருக்கும் போதே பக்தி, தானதர்மம், பொருள் ஈட்டல், ஆரோக்கியம் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டு, வாழ்வைப் பயனுள்ளதாக்க வேண்டும். எதையும் செய்ய வேண்டிய நேரத்தில், உடனடியாக செய்து விட வேண்டும்.

ஏழைக்கடன் ஏழு வருஷம் என்பதன் விளக்கம் என்ன?

சிலர் விபரம் புரியாமல் பெரிய அளவில் நேர்ந்து விடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் விலை தெரியாமலும், உணர்ச்சி வேகத்திலும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை நேர்ந்து விட்டார். அவரது மாத வருமானமோ ஆயிரம் ரூபாய் தான் என்றால், அவர் நேர்த்திக்கடனைச் செய்ய 84 மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம். தனது வருமானத்தில் மாதம் 100 ரூபாய் சேர்த்தால் வட்டியுடன் பத்தாயிரம் ரூபாய் ஆகி விடும். அப்போது அந்த மதிப்புக்கு என்ன பொருள் வருகிறதோ அதைச் செய்து விடலாம். இது ஒரு உதாரணக் கணக்கு. மற்றவர்கள் உடனடியாக அதை நிறைவேற்றி விட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?

வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?

வீட்டில் பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் தான் சிறப்பு. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சந்நிதிக்கென்று விசேஷமான சக்திகள் நிறைய உள்ளன. அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களின் ஒலி அதிர்வுகள் கோயில் முழுதும் நிரம்பியுள்ளன. அந்த அருளைப் பெற கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும்

கொடிமரத்தில் தர்ப்பை கட்டுவது ஏன்?

திருவிழா சமயத்தில் கோயில் கொடிமரத்தை தர்ப்பைப் புல்லால் அலங்கரிப்பர். ஹோமம், யாகம் நடத்தும் போது அந்தணர்கள் தர்ப்பையை அணிந்திருப்பர். தர்ப்பைப் புல்லால் ஆன மாலையை பவித்ரம் என்பர். பவித்ரம் என்றால் தூய்மையானது. அசுர சக்திகள் யாகத்தை அழிக்கும் நோக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், தர்ப்பை இருக்கும் இடத்தில், தீயசக்தியின் ஆற்றல் காணாமல் போய்விடும். சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், இந்திரனின் வஜ்ராயுதம் போல, யாகம் நடத்துபவர்களுக்கு தர்ப்பை புல்லால் ஆன பவித்ரமே கவசமாகும். தாமரை இலைத் தண்ணீர் போல, பவித்ரம் அணிந்தவரைப் பாவம் தீண்டுவதில்லை என ப்ரபா என்னும் மந்திர நூல் கூறுகிறது.

சந்நியாசம் பெற்றவர்கள் பூணூல் அணிவதில்லையே ஏன்?

உலகியல் வாழ்விலிருந்து விடுபடுபவர்களே சந்நியாசிகள். ஜாதி, மதம், உறவு, பந்தபாசம் எல்லாவற்றையும் துறந்தவர்களே துறவிகள். துறவுநிலை மேற்கொள்ள மற்றொரு துறவி தீட்சை கொடுக்க வேண்டும். அன்றைய தினம் தலை முழுகும்போது மண்,பெண், பொன் ஆகிய மூவாசைகளையும் துறந்து விட்டேன் என்று சொல்லி மூழ்கி எழும்போது பூணூல் அணியும் வழக்கில் உள்ளவர்களாக இருந்தால் அதையும் கழற்றி விட வேண்டும். அனுஷ்டானத்திற்கு ஒரு சாதனம் தான் பூணூல். சந்நியாச நிலைக்கு உயர்ந்து விட்டால் அது தேவையில்லை.

உண்மையான பக்தி என்றால் என்ன?

நாயன்மார் அறுபத்துமூவரின் வரலாற்றையும் படித்துப்பாருங்கள். இவர்கள் அனைவருமே உண்மையான பக்தர்கள் தான். கண்ணப்பர் கண்ணைக் கொடுத்து அருள் பெற்றார். சாக்கியர் இறைவனைக் கல்லால் அடித்தாலும் சிவபதம் அடைந்தார். கொடுத்தாலும், அடித்தாலும் அவனருள் கிடைக்கிறது. அதனால், இது தான் பக்தி என்று வரையறை எதுவுமில்லை. பக்தியைப் பொறுத்தவரையில் நோக்கமே முக்கியம். பசுவைக் கொன்று தின்பவர் என்றாலும் ஈசருக்கு அன்பரானால் அருள் கிடைக்கும் என்கிறார் நாவுக்கரசர். அன்பு நெஞ்சத்தையே இறைவன் விரும்புகிறான்.

மனையில் சங்கு ஸ்தாபனம் செய்ய வேண்டும் என்கிறார்களே. ஏன்?

லட்சுமி அம்சம் கொண்ட மங்கலப் பொருள்களில் சங்கும் ஒன்று. இதனை தலைவாசலில் வைப்பதே சங்கு ஸ்தாபனம். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்

பூஜை...புனஸ்காரம் என்கிறார்கள். புனஸ்காரம் என்றால் என்ன?

பூஜை...புனஸ்காரம் என்கிறார்கள். புனஸ்காரம் என்றால் என்ன?

பூக்களால் இறைவனை பூஜிப்பது பூஜை. புனுகு சாத்துவதை புனஸ்காரம் என்பர். வழிபாட்டின் போது, இறைவனின் திருமேனியில் வாசனைப்பொருளான புனுகு சாத்துவர். புனுகுப்பூனையிடம் இருந்து இது கிடைக்கிறது. இந்த வகை பூனைகளை பூக்கடைகளில் வளர்ப்பர்.

நம:பார்வதீ பதயே என்பது ஏன்?

பார்வதி தேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீ பதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு ஹர ஹர மகாதேவா என்று சொல்ல வேண்டும்.
நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மகாதேவா!!
-காஞ்சி பெரியவர் விளக்கம்

குடும்பத்தில் அப்பா, அம்மா, பிள்ளை மூவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் அதன் விளைவு என்ன?

அவரவர் சுயஜாதகத்தைப் பொறுத்த விஷயம். கிரக பெயர்ச்சி காலங்களில் எல்லாருக்கும் ஏழரை,அஷ்டமம், ஜென்மம் என கிரகங்கள் சற்று ஆட்டிப் படைக்கலாம். எனக்குத் தெரிந்த வரையில், உழைப்பை மூலதனமாகக் கொண்ட இதுபோன்ற குடும்பங்கள் நன்றாக தான் இருக்கிறார்கள்.

நல்லவன் வாழ்வான்

உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம் என்று திருமந்திரம் கூறுகிறது. இந்த உண்மையை வேதங்களின் மூலமாக அறிய முடிகிறது. நம் பேச்சே அக்னி. வாயுவே மூச்சாக வெளிப்படுகிறது. வருணதேவன் உடலில் நீராக இருக்கிறார். எமதர்மன் குதத்திற்கு தேவதையாக உள்ளார். சந்திரன் மனோகாரகனாக இருந்து மனதை இயக்குகிறார். சூரியன் ஆத்மாவிற்கும், கண்ணிற்கும் அதிபதி. செவியில் ஆகாயத்தத்துவம் இருக்கிறது. புலன்களுக்கு (உறுப்புகள்) அதிபதி தேவேந்திரன். நன்மைக்காக இந்த கருவிகள் பயன்பட்டால் தேவர்களின் பக்கம் நாம் இருக்கிறோம். தீயவிஷயங்களில் ஈடுபட்டால் அசுரசக்திகளுக்கு நாம் அடிமை என்பது அர்த்தம். இனி நல்லவர் பக்கம் நம் மனதைச் செலுத்துவோம்.

கோயிலுக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்கள் ஊரிலும் சிவன், முருகன், பிள்ளையார், பெருமாள் எல்லாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். தினமும் ஒரு கோயிலுக்குப் போய் வாருங்கள். பிரச்னை தீர்ந்து விடும். நமக்கிருக்கும் வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு, இன்ன ஊருக்கு பணத்தைச் செலவழித்துக் கொண்டு வா என எந்த தெய்வமும் கூறியதில்லை. உங்களால் முடிந்தால் போய் வாருங்கள். இருந்த இடத்திலேயே மனமுருகி அழுது வழிபட்டால் போதும். இறைவன் எந்த ஊரில் இருந்தாலும் நம் வீடு தேடி வருவான்