Saturday, February 22, 2014

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம்.

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம். நெருக்கடி மிகுந்த விட்ட இந்தக் காலத்தில், பஸ்சில் செல்லும் போது, ஒருவன் தெரியாமல் நம்மை மிதித்து விட்டால் கடுமையாக வலிக்கத்தான் செய்கிறது. அதை அவனிடம் இதமாகச் சொல்லலாமே தவிர, அவன் மீது கை நீட்டினால், பிரச்னை பெரிதாகத்தான் செய்யும்.
ஒரு இளைஞன், குரு ஒருவரிடம் வந்து, ""ஐயனே! தாங்கள் எனக்கு கடவுளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்,'' என்றான்.
""சீடனே! இதுபற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், நான் சொல்லும் விதிமுறைகளின்படி, கடுமையான விரதம் இருக்க வேண்டும். அந்த விரதத்தை நீ சரியாகப் பூர்த்தி செய்து விட்டதாக நான் கருதினால், உபதேசம் செய்வேன்,'' என்றார். இளைஞனும் சம்மதித்தான்.
குரு சொன்னதற்கும் ஒரு படி மேலே போய், மிகுந்த சிரத்தையுடன் விரதமிருந்தான். விரதம் முடிந்த மறுநாள் காலை நதியில் நீராடினான். கரையேறிய போது, அவ்வழியே வந்த ஒருவன் தான் சுமந்து வந்த குப்பையை சீடன் மீது கொட்டி விட்டான். சீடனுக்கே வந்ததே ஆத்திரம்! பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அடி விட்டான். ""என்னை அசுத்தப்படுத்தி விட்டாயே, பாவி,'' என திட்டிவிட்டு, மீண்டும் நீராடி குருவிடம் வந்தான்.
குரு அவனிடம், ""இன்று நடந்தது என்பதைச் சொல்,'' என்றார். நடந்த விஷயத்தை அப்படியே தெரிவித்தான் சீடன்.
""சரி...நீ மேலும் மூன்று மாதம் விரதத்தை தொடர வேண்டும்...போய் வா,'' என்றார்.
சீடன் ஒன்றும் புரியாமல், அவர் சொன்னபடியே விரதம் இருந்து முடித்தான். முன்பு போல், நதியில் நீராடி விட்டு, கரையேறிய போது, முன்பு வந்த அதே நபர், அவன் மீது தற்செயலாக குப்பைக்கூடை விழுவது போல், கொட்டித் தீர்த்தான். இப்போதும் சீடனுக்கு ஆத்திரம்.
""முட்டாளே! முன்பு ஒருமுறை இப்படித்தான் செய்தாய். இப்போதும் இப்படியே செய்து விட்டாயே,'' என்று திட்டித்தீர்த்தான். ஆனால், அடிக்கவில்லை.
குருவிடம் வந்தான். அவர் அவனிடம் அன்றைய தின நிகழ்வை விசாரித்து விட்டு, விரதத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்தார்.
விரதம் முடிந்து, அன்றும் குளிக்கச் சென்றான். அன்றும் அதே நிகழ்வு...ஆனால், சீடன் குப்பைக்காரனைத் திட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை.
""அப்பனே! நீ எனக்கு பொறுமை என்றால் என்னதென்று கற்றுத்தர உதவியாக இருந்தாய். ,'' என்று சொல்லிவிட்டு, குருவிடம் சென்றான்.
நடந்ததை அறிந்த குரு,""சீடனே! குப்பையுடன் அனுப்பிய ஆள் என்னுடையவன். நான் தான் உன் மேல் குப்பையைக் கொட்டுமாறு செய்தேன். கடவுளை அறிய விரும்புபவனுக்கு கோபம் கூடாது. சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும். அதைக் கற்றுக்கொடுக்கவே இவ்வாறு தேர்வு வைத்தேன்,''என்றார்.
அன்று முதல் கடவுளைப் பற்றிய பாடத்தையும், அவனுக்கு ஆரம்பித்து விட்டார்

நல்லதும் கெட்டதுமாய் நிறைந்த உலகத்தைக் கடவுள் படைத்தார்

ஒரு குருவும், சீடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஓரிடத்தில், பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
சீடன், குருவிடம் கேட்டான்.
""குருவே! ஆண்டவன் தானே உலகத்தைப் படைத்தார்.
எல்லோரையுமே நல்லவர்களாகவே படைத்திருந்தால்.... உலகத்தில் பிரச்னையே இருந்திருக்காதே....?''
குரு அதைக் கேட்டு சிரித்தார்.
""அப்பனே! நீ எத்தனை நாள் உயிர் வாழ்வாய்?'' என்றார்.
""தெரியவில்லை! அநேகமாய் எழுபது ஆண்டு வரை இருக்க ஆசை...''
""ஏனப்பா! சாகாவரம் பெற ஆசையில்லையா?
""எப்படி முடியும் குருவே! பிறந்தவன் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்...''
குரு மீண்டும் சிரித்தார்.
"" பிறப்பு என்றால் இறப்பும் இருக்கிறது அல்லவா! அது போல, நல்லது என ஒன்றிருந்தால் கெட்டது என ஒன்றும் இருக்கத்தானே செய்யும்! எல்லோரும் நல்லவர்களாக இருந்து விட்டால், அவர்களுக்கு எப்படி மரணத்தைக் கொடுக்க முடியும். அதனால் தான், நல்லதும் கெட்டதுமாய் நிறைந்த உலகத்தைக் கடவுள் படைத்தார். புரிகிறதா....'' என்றார்.
சீடனுக்கு பிறப்பின் அடிப்படை புரிந்தது.

வாங்குவதற்கும் நல்ல மனம் வேண்டும்

பணக்காரன் ஒருவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. பெரும் கடனாளியாகி விட்டான். அவனுடைய ஒரே மகள் திருமணத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது.
கல்யாணச் செலவுக்காக யாரிடமாவது உதவி கேட்கலாம் என முடிவெடுத்தான்.
அவனது தந்தை, ""யாரிடம் உதவி கேட்கப் போகிறாய்?'' என்று கேட்டார்.
""உறவினர், நண்பர், அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் தான்'' என்றான்.
""அவர்கள் பணம் கொடுக்க மறுத்தாலோ அல்லது மிகக் குறைவாக கொடுத்தாலோ என்ன செய்வாய்?'' என்றார்.
""போயா போ! நீயும் உன் பணமும் என்று அவர்களிடம் கோபித்துக் கொண்டு வந்து விடுவேன்'' என்றான் முன்னாள் பணக்காரன்.
அதற்கு அவர், ""என் அருமை மகனே! யாரிடமும் கோபித்துக் கொள்ளாதே! ஒவ்வொருவரின் வீட்டுக்குச் செல்லும் போதும், " உனக்கு அங்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே கடவுள் தீர்மானித்து விட்டார் என்று எண்ணிக் கொள். அப்போது கோபத்திற்கு பதிலாக நன்றியுணர்வு வந்து விடும். அப்போது அங்கிருந்து மகிழ்ச்சியாக புறப்படுவாய்'' என்று அறிவுரை சொன்னார்.
கொடுப்பதற்குத் தான் என்பதில்லை! வாங்குவதற்கும் நல்ல மனம் வேண்டும் என்பதை உணர்ந்தான் மகன்.

மனம் புண்படலாமா?

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள், ""இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!'' என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து, சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார்.
திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார்.
""அந்த அம்மாவுக்கு உடல் நலமில்லையாம்! அதனால் தான் வரவில்லை!'' என்றனர் அவர்கள்.
உடனடியாக பெரியவர் அந்த அம்மாவின் வீட்டுக்கே போய்விட்டார். தன் வீட்டு வாசலில் பெரியவர் வந்து நின்றதைக் கண்ட அந்த அம்மாவுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்... ஓடி வந்து பெரியவரை நமஸ்கரித்தார். அவரிடம் உடல்நலம் விசாரித்த பிறகு மடத்திற்கு திரும்பினார் பெரியவர்.
நாம் எந்த நிலையில் இருந்தாலும், தெய்வம் கருணை செய்யும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!

ஒரு எளிய ஜீவராசியிடம் கூட அன்பு காட்டிய காஞ்சிப்பெரியவரின் கருணை

இருப்பவர் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் பல உண்டு. அவற்றை நெறி பிறழாமல் முறையாக பின்பற்றியவர் காஞ்சிப்பெரியவர். குறிப்பாக சந்நியாசிக்கு உரியது ஜீவகாருண்யம். அதாவது எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது. இதை பெரியவர் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
காஞ்சிப்பெரியவர் தினமும் 21 முறை கைகால்களைச் சுத்தம் செய்து, ஜபம் செய்வார். ஒருநாள், மடத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து கை, கால்களைச் சுத்தம் செய்ய வந்தார். நீரில், கட்டெறும்பு ஒன்று மிதப்பதைக் கண்டார். உடனே தன் சிஷ்யர் சிம்சன் வைத்தாவை அழைத்து, ஒரு குச்சியினால் அதை எடுத்து தரையில் போடச் சொன்னார். அப்போது கட்டெறும்பு இறந்து விட்டது. கிணற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு, கை,கால்களைச் சுத்தம் செய்த பின், ஜபம் செய்யத் தொடங்கினார். அதைக் கண்ட வைத்தா பெரியவரிடம், ""பெரியவா! ஏன் இப்போது ஜபம் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு பெரியவர், ""டேய்! இந்த கட்டெறும்பு முக்தி அடைந்து விட்டது. அது எவ்வளவு நேரம் தண்ணீரில் தத்தளித்ததோ தெரியாது. அதற்கு மோட்சம் கிடைக்க வேண்டாமா? அதற்காக, ஸ்ரீமந்நாராயணனை நோக்கி ஜபம் செய்தேன். உலக ஜீவராசிகள் அனைத்தும் மோட்சம் பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்,'' என்றார். எறும்பை அடக்கம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இப்படி ஒரு எளிய ஜீவராசியிடம் கூட அன்பு காட்டிய காஞ்சிப்பெரியவரின் கருணையை என்னவென்று சொல்வது!

எல்லாப் புகழும் முருகனுக்கே!

கந்தனும், குமரனும் ஒரு அரசரிடம் பணிபுரிந்தனர். கந்தன் முருக பக்தன். "முருகனாலேயே எல்லாம் நடக்கிறது' என்று மன்னர் உள்ளிட்ட எல்லாரிடமும் சொல்வான். குமரனோ, "அரசரால் தான் எல்லாம் நடக்கிறது' என்று அவரைப் புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக் கொள்வான்.
இவர்கள் சொல்வதில் எது சரியானது என அரசருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மந்திரியை அழைத்து அவர்களை பரீட்சிக்க சொன்னார். மந்திரி அவர்களிடம் நூறு வெள்ளிக்காசுகளைக் கொடுத்து, ""இதை வைத்துக் கொண்டு நீங்கள் நூறு நாட்கள் வெளியூரில் தங்க வேண்டும். பிறகு இங்கே வாருங்கள். இது அரச கட்டளை,'' என்றார்.
அவர்களும் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு முருகன் கோயிலைப் பார்த்த கந்தன், முருகனுக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்தான். அதை அங்கு வந்த ஏழைகளுக்கு கொடுத்து, அவர்கள் பசியாறுவதைப் பார்த்து மகிழ்ந்தான். நூறு காசுகளும் ஒரே நாளில் செலவழிந்து விட்டது.
"அவனை வணங்குவது என் கடமை, என்னைக் காப்பது அவன் கடமை' என்று நினைத்தவனாய் பயணத்தைத் தொடர்ந்தான்.
வழியில், ஒரு வண்டி குளத்தில் விழுந்து இருவர் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்தான். அவர்களைக் காப்பாற்றினான். அதன்பிறகு தான், தத்தளித்தவர்கள் அவ்வூர் ராஜகுமாரன் மற்றும் வண்டியோட்டி என்பதைத் தெரிந்து கொண்டான்.
அவர்கள் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தன் மகனைக் காத்த கந்தனுக்கு, ராஜ உபசாரம் செய்த மன்னன், தங்கள் அரண்மனையில் தங்கிச் செல்லும்படி வேண்டினான். கந்தனுக்கு நூறு நாட்களும் ராஜ உபசாரம் நடந்தது.
குமரன், ஒரு சத்திரத்தில் தங்கினான். அவனது பணத்தை தலைக்கடியில் வைத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, சிலர் அதைத் திருடிச் சென்று விட்டனர். விழித்த அவன், வருத்தமடைந்து, பசியோடு நடந்த போது, கந்தன் தங்கியிருந்த அரண்மனை கண்ணில் பட்டது. அங்குள்ள நந்தவனத்திற்கு சென்றான். அப்போது, ஒரு மரத்திலிருந்த கழுகு, பாம்பைப் பிடித்து கொத்திக் கொண்டிருந்தது.
பாம்பின் விஷம் மரத்தடியில் படுத்திருந்த, ராஜகுமாரனின் கழுத்தில் விழுந்ததைப் பார்த்தான். தன் கத்தியை எடுத்து, அந்த விஷத்தை சுரண்டினான். அந்த நேரத்தில், மன்னன் வந்து விட, தன் மகனை அவன் கொலை செய்ய முயற்சிக்கிறானோ என்று எண்ணி, சிறையில் அடைத்து விட்டான்.
ஒருநாள், கந்தன் சிறைவாசிகளுக்கு, முருகனின் சிறப்பை எடுத்துரைக்க சென்றான். அங்கே குமரன் இருந்ததைப் பார்த்தான். நடந்ததை எடுத்துச் சொன்னான் குமரன்.
""குமரா! தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே! மன்னர்களும் ஒருநாள் அழியப் போகிறவர்கள் தானே! அழியாப்பொருளான முருகப்பெருமானை மட்டுமே புகழ்ந்து பேசு,'' என்று புத்திமதி சொன்னான்.
குமரனும் அதை ஏற்றான். தாங்கள் வந்த விஷயத்தை மன்னனிடம் சொன்ன கந்தன், குமரனை விடுவிக்கச் செய்தான். இருவரும் தங்கள் நாட்டை அடைந்தனர்.
மன்னரிடம் குமரன், ""முருகனுக்கே எல்லாப் புகழும் உரியது என்பதைப் புரிந்து கொண்டேன்,'' என்றான்.

ஏன் இத்தனை கடவுள்!

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், ""ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்'' என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார்.
""ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?''
பேச்சாளர் கேட்டார்.
""உன் வயதென்னப்பா?''
""ஏழு''
""உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா....?''
""என் அம்மா; அக்கா; அது என் அப்பா...''
பேச்சாளர் சொன்னார்.
""உனது கல்வி, உணவு, விளையாட்டுப் பொருள் என தேவையைப் பொறுத்து, அப்பாவிடமோ, அம்மாவிடமோ, அக்காவிடமோ கேட்கிறாய் இல்லையா....! அதே போல், எல்லோரும் அவரவருக்கு தேவையானதை அவரவருக்கு பிரியமான கடவுளிடம் கேட்கிறார்கள். இதனால் தான் பலதெய்வ வழிபாடு! புரிகிறதா!'' என்றார்.
சிறுவன் புரிந்து கொண்டான். கேட்ட எல்லாருக்கும் சிறந்த உபதேசமானது.

கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்''

பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.
ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.
உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.
பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.

உங்கள் பிள்ளை நல்ல பிள்ளை' என்று ஊர் சொல்லி கேட்பதற்கு கொடுப்பினை வேண்டுமே

இப்போதெல்லாம், அப்பாக்களுக்கு நிறைய பிரச்னை. ""என் இதயமே நின்று விடும் அளவில் மகன்களின் பேச்சு இருந்தது,'' என்றெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆனால், ஆன்மிகத்தில் அப்படியில்லை. தன் மகனைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார் தசரத மகாராஜா.
மூத்த மகன் ராமனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தார் தசரதர். நாட்டு மக்களை அழைத்து,""அன்பிற்குரிய மக்களே! என் மகன் ராமனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்,'' என்றார்.
""ஓ! தாரளமாக! அவர் சகல நற்குணங்களும் நிறைந்தவர். ஆட்சியமைக்க தகுதியானவர், அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்,'' என்றனர் மக்கள். ஆனால், அதோடு விட்டிருக்கலாம் இல்லையா!
""நீர் உடனடியாக பதவியை விட்டு இறங்கும்,'' என்றார்கள்.
தசரதருக்கு ஏக வருத்தம்.
"அறுபதாயிரம் ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்டிருக்கிறேன். இந்த மக்களுக்கு குறை ஏதும் வைத்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், இவர்கள் தன்னை இறங்கு' என சொல்லி விட்டார்களே என வருத்தப்பட்டார்.
""ஏன் இப்படி சொல்கிறீர்கள்?'' என மக்களை கேட்டும் விட்டார்.
""மாமன்னரே! தங்கள் ஆட்சியில் எங்களுக்கு குறை ஏதும் கிடையாது. ஆனால், உங்கள் மகன் மிகுந்த குணசாலி. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவே, ராமராஜ்யம் விரைவில் மலரட்டுமே என்று சொன்னோம்,'' என்றனர் மக்கள்.
இப்போது, தசரதர் ரொம்பவே பெருமைப்பட்டார். சந்தோஷமடைந்தார். அந்த சந்தோஷத்தின் அளவு என்ன தெரியுமா?
தன் மகனை யாகம் செய்து பெற்ற காலத்தை விடவும், விஸ்வாமித்திரருடன் சென்று தாடகை என்ற அரக்கியை வதம் செய்து பெற்ற புகழை விடவும், யாராலும் ஒடிக்க முடியாத சிவதனுசு என்ற வில்லை வளைத்து, சீதையை திருமணம் செய்து பெற்ற மகிழ்ச்சியை விடவும் அதிக சந்தோஷமடைந்தார்.
"உங்கள் பிள்ளை நல்ல பிள்ளை' என்று ஊர் சொல்லி கேட்பதற்கு, இப்போதும் தகப்பனார்களுக்கு ஆசை இருக்கத்தான் செய்கிறது. கொடுப்பினை வேண்டுமே!

விநாயகருக்கு வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி இரண்டிலும் விரதமிருப்பது சிறப்பு

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதியை விரதநாளாக பெரியவர்கள் நிர்ணயித்துள்ளனர். அது வளர்பிறையாகவோ அல்லது தேய்பிறையாகவோ இருக்கும். முருகனுக்கு உ<ரியது வளர்பிறை சஷ்டி. சிவனுக்கு தேய்பிறை சதுர்த்தசியன்று மாதசிவராத்திரி விரதமிருப்பர். ராமனுக்கு வளர்பிறை நவமியில் விரதமிருந்து ராமாயணம் படிப்பர். கிருஷ்ணருக்கு தேய்பிறை அஷ்டமி உகந்தநாள். அம்பிகைக்கு பவுர்ணமி திதியில் விரதமிருப்பது சிறப்பு. ஆனால், விநாயகருக்கு வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி இரண்டிலும் விரதமிருப்பர். இரண்டிற்கும் வெவ்வேறான பலன்களும் உண்டு. வளர்பிறையில் விரதமிருந்தால் விருப்பங்கள் நிறைவேறும். செல்வ வளம் பெருகும். தேய்பிறையில் விரதமிருக்க சங்கடங்கள் நீங்கும். மனக்கவலை அகலும். முயற்சி வெற்றி பெறும். தேய்பிறை சதுர்த்தி விரதத்தையே, "சங்கடஹர சதுர்த்தி' என்பர்.

ஓரெழுத்தில் "உயிர்'

சக்தியோடு இருந்தால் தான் சிவனால் அசைய முடியும் என்பர். ஒன்றும் செய்யாமல் இரு என்பதை "சிவனேன்னு கிட' என்பார்கள்.
துடிப்போடு செயலில் ஈடுபடும் போது, "சக்தியோடு புறப்பட்டான்' என்பதுண்டு. எழுத்தில் உயிர்,மெய் என இருவித எழுத்துக்கள் உண்டு. மெய்யெழுத்து சிவனுக்கும், உயிரெழுத்து சக்திக்கும் உரியவை. "சிவ' என்றும் நாமத்திலுள்ள "ச்' என்ற மெய்யோடு "இ' என்ற உயிர் சேர்ந்ததால் "சி' <உண்டானது. இதில் "இ' என்னும் சக்தி எழுத்தே, சிவனுக்கு ஜீவனை அதாவது உயிரைத் தருகிறது. சவுந்தர்ய லஹரியில், "சிவனும் கூட, சக்தியான உன்னோடு கூடியிருந்தால் தான் பிரபஞ்சமே நடத்த முடியும்.
இல்லாவிட்டால், அவரால் துளி கூட அசைய முடியாது' என்கிறார் ஆதிசங்கரர். "அம்மா இல்லாவிட்டால் ஐயாவுக்கு மதிப்பு ஏது?' என்று பாமரர்களும் கூட, தங்கள் பேச்சில் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.

லிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம்

சிவபெருமான் கழுத்து, கை, கால், தோள் என மேனியெங்கும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பார். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐம்பொறிகளும் பாம்பு போல விஷத்தன்மை கொண்டவை. ஆனால், மனதை வசப்படுத்தி விட்டால், இவை ஐந்தும் ஆபரணமாக மாறிவிடும் என்பதை இதன் மூலம் சிவன் உணர்த்துகிறார். லிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் குடைபிடித்தது போல அலங்காரம் செய்வதற்கு "நாகாபரணக்காட்சி' என்று பெயர். இக்காட்சியை கண்டால், மனம் நம் கட்டுக்குள் இருக்கும் என்பது ஐதீகம்

மகமாயி - பொருள்

காளியம்மனை "மகமாயி' என்று அழைப்பர். இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். "மகம்' என்றால் "இன்பம்' அல்லது "பலி'. ஆயி' என்றால் "அம்மா'. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்

பெண்களின் குலதெய்வம்!

பெண்களுக்கு திருமணமான பிறகு, தங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுவதா, கணவர் வீட்டு குலதெய்வத்தை ஏற்பதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு, கணவர் வீட்டு குலதெய்வத்தையே இவர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்க வேண்டும். அதற்கே முதலிடம் தர வேண்டும். அதேநேரம், பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் இவர்கள் கணவர், குழந்தைகளுடன் சென்று வழிபட்டு வரலாம். இரட்டிப்பு பலன் கிடைக்கும்

எந்த படத்தை எப்படி மாட்டலாம்?

வீடு, அலுவலகச்சுவரில் சுவாமி படங்களை மாட்டி வைத்திருப்பீர்கள். இந்தப் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இந்த திசைகள் சுத்தமானவை. மற்ற இரண்டும் அசுத்தமானவை. ஆனாலும், ஒரு விதிவிலக்கு இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மற்றும் உக்ர தெய்வங்களான காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு திசை நோக்கி மாட்டலாம். பெருமாள், லட்சுமி, சிவன், விநாயகர், முருகன்,மாரியம்மன் உள்ளிட்ட பிற படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும்.இதுவரை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் மாற்றிக் கொள்ளுங்களேன்!

பூஜை செய்ய வழியிருக்கு

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. குளிக்காமல் பூஜை செய்ய மனம் மறுக்கிறது. இந்தச் சூழலில், பூஜை செய்ய முடியவில்லையே, நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் உள்ளுக்குள் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மாற்றுவழி இருக்கிறது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும், தந்தைக்காக மகன் அல்லது மகளும், வசதி படைத்தவர்களுக்காக புரோகிதரும், அண்ணனுக்காக தம்பியும் பூஜை செய்யலாம். எங்காவது, புண்ணியதலத்துக்குப் போவதாக நேர்ந்து கொண்டு, அங்கே போக முடியாத நிலை ஏற்பட்டாலும், மேற்கண்டவர்கள் அவர்களது பிரதிநிதியாக சென்று வரலாம். இப்படி செய்தாலே, சம்பந்தப்பட்ட நபருக்கு புண்ணியம் கிடைத்து விடும் என்று "நிர்ணய ஸிந்து' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு "பிரதிநிதி நியாயம்' என்று பெயர்.

நாராயணனின் 24 திருநாமங்கள்

ராமாயணமும், மகாபாரதமும் பாரதத்தின் இரு கண்களாக போற்றப்படுகின்றன. இதில் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படும் மகாபாரதம், "மண்ணாசை கூடாது' என்பதை வலியுறுத்துகிறது. மகாபாரதப் போர் குரு÷க்ஷத்திரத்தில் முடிந்த சமயத்தில், பிதாமகரான பீஷ்மர் அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்தார். அப்போது கிருஷ்ணர், பாண்டவர்களை அவரிடம் அழைத்துச் சென்று, <உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்க வேண்டினார். பீஷ்மரும் அதை ஏற்றுக் கொண்டார்.
"" நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல சவுபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாக கிடைக்கும்'' என்று பீஷ்மர் உபதேசித்தார். அப்போது, இன்னொரு சுலபமான வழியையும் அவர்களுக்குக் கூறினார்.
""யார் ஒருவர் தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை(பெயர்களை) ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி, அஷ்ட ஐஸ்வர்யம், பொன், பொருள், தனதானியம், ஆரோக்கியம், நல்ல குடும்பம், குழந்தைகள், நல்ல புகழ், வாகனவசதி, வாழ்வில் ராஜயோகம் கைகூடும். பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம்,'' என்றார்.
அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை. எல்லாரும், காலையில் நீராடியவுடனும், மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.
ஓம் கேசவாய நமஹ:
ஓம் சங்கர்ஷணாய நமஹ:
ஓம் நாராயணாய நமஹ:
ஓம் வாசுதேவாய நமஹ:
ஓம் மாதவாய நமஹ:
ஓம் ப்ரத்யும்னாய நமஹ:
ஓம் கோவிந்தாய நமஹ:
ஓம் அநிருத்தாய நமஹ:
ஓம் விஷ்ணவே நமஹ:
ஓம் புருஷோத்தமாய நமஹ:
ஓம் மதுசூதனாய நமஹ:
ஓம் அதோக்ஷஜாய நமஹ:
ஓம் திரிவிக்ரமாய நமஹ:
ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ:
ஓம் வாமனாய நமஹ:
ஓம் அச்சுதாய நமஹ:
ஓம் ஸ்ரீதராய நமஹ:
ஓம் ஜனார்தனாய நமஹ:
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ:
ஓம் உபேந்த்ராய நமஹ:
ஓம் பத்மநாபாய நமஹ:
ஓம் ஹரயே நமஹ:
ஓம் தாமோதராய நமஹ:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ:
தினமும் இந்த மந்திரங்களை ஜபிக்கும்போது, துளசியும், சுத்தமான நீரும் நைவேத்யமாக வைத்து வழிபட்டால் போதும்.

திருமணத்தில் தாரை வார்ப்பது ஏன்?

துறவிக்குரிய தகுதியோடு வாழ்ந்தவர் மன்னர் ஜனகர். இவர் தன் மகளான சீதைக்கு, க்ஷத்திரிய குலதர்மப்படி சுயம்வரம் நடத்தினார். அதன்படி, சிவதனுசு என்னும் வில்லை ஒடிப்பவருக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். ராமன் அந்த வில்லை ஒடித்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது, ராமனின் கைகளில் சீதையின் கைகளைச் சேர்த்து வைத்த ஜனகர், ஒரு மந்திரம் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.
அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
""இல்லற வாழ்வில் நிழல் போல் என்றும் பிரியாமல் உன்னுடன் இவள் இருப்பாள். இவளது கையை நீ பிடிப்பதால், உனக்கு பெருமையும், நன்மையும் உண்டாகட்டும். தூய்மையானவளும், பதிவிரதையுமான சீதையால் உன் வாழ்வில் பெருமை சேரட்டும்,''. இந்த மந்திரத்தின்படி, சுயம்வர போட்டியில் வெற்றி பெற்றாலும், ஜனகர் தாரை வார்த்துக் கொடுத்தபிறகே, சீதை ராமனுக்கு உரியவள் ஆனாள். பெற்றோரின் சம்மதத்தோடு, திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணத்தில் தாரை வார்க்கும் சடங்கு இடம் பெறுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சுபநிகழ்ச்சி தான்

திருமணம், கிரகப்பிரவேசம் போல முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சுபநிகழ்ச்சி தான். இன்னும் சொல்லப்போனால், எந்த சுபவிஷயத்தையும், முன்னோர் வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது. திருமணச்சடங்கில், "நாந்தி சிராத்தம்' என்ற பெயரில் முன்னோர்களை வழிபடுவர். அமாவாசையன்று, விரதமிருந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மகிழ்ச்சியுடன் நம்மை ஆசிர்வதிப்பர். பீகாரிலுள்ள கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரம் பிதுர்வழிபாட்டிற்கு உகந்தது. இங்குள்ள பல்குனி நதியும், அட்சயவடம் என்னும் மரமும் முன்னோர்களுக்கு விருப்பமானவை. இங்கு விஷ்ணுபாதத்தில் பிண்டம் வைத்து செய்யப்படும் தர்ப்பணத்தை, முன்னோர்கள் நேரில் வந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்

எங்கே குளித்தால் புண்ணியம் அதிகம்?

 வீட்டில் குளித்தால் வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது.
* மற்றவர்கள் எடுத்து வைத்த நீரைக் குளிப்பதை விட, நீங்களே குழாயிலோ, கிணற்றிலோ, நீர்நிலையிலோ தண்ணீர் எடுத்து வந்து குளிப்பது மிகச்சிறந்தது.
* கிணற்று நீரில் குளிக்கலாம். அதை விட குளத்து நீர் உயர்ந்தது. குளத்தை விட ஆற்றுநீர் இன்னும் பிரமாதம்.
* புண்ணிய நதிகள் இருக்கும் தலங்களுக்கு சென்றால் அவசியம் குளித்து விடுங்கள். உதாரணம் கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்றவை. இந்தக்குளியல் பாவத்தைப் போக்கும்.
* புனித நதிகளை விட கடலில் நீராடுவது இன்னும் புண்ணியம். ஏனெனில், கடலில் எல்லா புண்ணிய நதிகளும் கலக்கின்றன. திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம் பக்கம் போனால் அவசியம் கடலில் நீராடுங்கள்.

விரதநாளில் குளிக்க முடியவில்லையா?

முக்கியமான விரதம் வரும் நாளில் தான் பாழாய் போன ஜலதோஷம் வந்து நம்மை குளிக்க முடியாமல் செய்து விடும். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா என்றால், ஒரு சில இருக்கிறது.
* "சிவசிவ', ஓம் முருகா, ஓம் சக்தி விநாயக நமஹ, ஓம் சக்தி. ஓம் நமோ நாராயணாய என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை "ப்ராம்ஹ ஸ்நானம்' என்பர்.
* உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை "காபில ஸ்நானம்' என்பர்.
* உடல் முழுவதும் திருநீறு பூசினால் குளித்ததற்கு சமம். இதை "ஆக்நேய ஸ்நானம்' என குறிப்பிடுவர்.
* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து அங்கே பசுவின் குளம்படி பட்ட மண் இருந்தால் அதைப் பூசிக் கொள்ளலாம். இதற்கு "வாயவ்ய ஸ்நானம்' என்று பெயர்.
* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டமிருந்து, நல்ல வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை "திவ்ய ஸ்நானம்' என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதைக் கடைபிடியுங்களேன்

பூஜைக்கு உகந்த ஆகமம்

நம் வாழ்வில் அன்றாடம் எவ்வளவோ செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அவற்றை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற நியதியைப் பெரியவர்களின் அறிவுரைப் படியும், புத்தகங்களின் வாயிலாகவும் தெரிந்து கொண்டிருக்கிறோம். நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்த ஆன்றோர்களும், சித்தர்களும், அவற்றை ஆயுர்வேதமாகவும், மருத்துவநூலாகவும் இயற்றித் தந்துள்ளனர். அதன் பரிணாமமே நவீனகால மருத்துவமாக வளர்ந்துள்ளது. திருக்கோயில் கட்டுவதற்கு சிற்ப சாஸ்திரங்களையும், வீடு கட்ட வாஸ்து சாஸ்திரங்களையும் பெரியோர் எழுதி வைத்த முறையிலேயே கடைபிடித்து வருகிறோம்.
இவற்றைப் போலவே, ஆன்மிகத்தில் வழிபாடு என்ற நிலையில் நித்யபூஜை, திருவிழாக்கள், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் மற்றும் வீட்டில் நடத்தும் பூஜை, யாகம், கல்யாணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என ஆன்மிக ரீதியான சம்பிரதாய பூஜைமுறைகளை முறைப்படுத்திக் கூறுபவையே ஆகம சாஸ்திரங்கள்.
நமக்கு வழிகாட்டும் ஆகமங்களை, சிவபெருமான் ஸ்ரீகண்ட சிவமாகத் தோன்றி "சிவாகமங்களாக' அருளிச் செய்தார். திருமால் விகனச முனிவராகத் தோன்றி வைணவ ஆகமங்களை அருளினார். நம் மீது கொண்ட கருணையினால், தம்மை வழிபாடு செய்ய வேண்டிய முறைகளை, ஆகமம் என்ற பெயரில் சாக்ஷாத் பகவானே அருளியுள்ளதை நாம் போற்ற வேண்டும்.
இக்கருத்தை,"அண்டர் தமக்கு ஆகமநூல் பொழியும் ஆதி' என சுந்தரர் தேவாரத்திலும், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "அண்ணிப்பான்' என்பதற்கு "உடனிருந்து வழிநடத்துபவர் என்று பொருள்.
இந்நிலையில், ஒரே ஒரு கருத்தை நன்றாக உணர வேண்டும். நம் மீதுள்ள கருணையினால், கடவுளே வழிபாட்டுக்குரிய வழிமுறைகளை ஆகமமாக அருளியுள்ளார். அவை குறித்த நூல்கள் மட்டுமே பூஜைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கவை. மனிதர்களால் மாற்றி எழுதப்படுபவை ஏற்றுக் கொள்ளக் கூடாததும், நாட்டுக்கும் மக்களுக்கும் துயர் விளைவிப்பதும் ஆகும்

எந்த தேவைக்கு யாரை வணங்கலாம்?

 அறிவு, வீரியம், அழகு - முருகன்
* ஆற்றல் அதிகரிக்க - ஆஞ்சநேயர்
* பணச்செழிப்பு - லட்சுமி
* மந்திர சக்தி பெற - காளி
* கலை, கல்விச் செல்வம் - சரஸ்வதி
* யோகாசனத்தில் சிறக்க - பரமேஸ்வரன்
* வெற்றி மேல் வெற்றி - கணபதி
* குடும்பக்கஷ்டம் தீர - மாரியம்மன், காமாட்சி
* நல்ல குழந்தைகள் - சாஸ்தா
* எல்லா இன்பமும் பெற - திருமால்

மயானத்தை ருத்ரபூமி என்கிறார்களே ஏன்?

மயானத்தை ருத்ரபூமி என்கிறார்களே ஏன்?
தேவாரத்தில், "காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். மயானச் சாம்பலைப் பூசிக் கொள்பவர் சிவபெருமான். படைத்தலை பிரம்மாவும், காத்தலை விஷ்ணுவும், அழித்தலை ருத்ரனும் செய்கின்றனர். ஒருவருடைய ஆயுள்காலம் முடிந்ததும், எமன் உயிரைப் பறிக்கிறான். இது ருத்ரனின் கட்டளைப்படியே நடக்கிறது. எனவே, தான் நீண்ட ஆயுள் பெற வேண்டி ருத்ராபிஷேகம், மிருத்யுஞ்ஜய ருத்ரஹோமம் போன்றவற்றை செய்கிறோம். உயிர் பிரிந்த உடல்கள் எரிக்கப்பட்ட பிறகும், உயிர்கள் மீதுள்ள கருணையாலும், அவை நல்வினை பெறுவதற்காகவும், சிவன் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொள்கிறார். உலக நன்மைக்காக மயானத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இதனை மாணிக்கவாசகரும் திருவாசகத்தில், "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே' என குறிப்பிடுகிறார்.

...காசி சென்று வந்தால் ராமேஸ்வரம் செல்வதும கட்டாயமா?






வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா?
காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது இயலாததாக இருந்தது. தற்போது ரயில், விமானம் என எல்லா வசதிகளும் இருப்பதால் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்




காசி சென்று வந்தால் ராமேஸ்வரம் செல்வதும கட்டாயமா?
தேசமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற உயர்ந்த தத்துவமே காசி- ராமேஸ்வர யாத்திரை. நாம் இங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்து அங்கிருந்து கங்கைநீரைக் கொண்டு வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வடநாட்டில் உள்ளவர்கள் ராமேஸ்வரம் வந்து, புனிதநீராடி ராமநாதரை தரிசித்து இங்குள்ள கடல் தீர்த்தத்தால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் யாத்திரை முழுமை பெறுவதோடு, தெய்வத்தின் திருவருளும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தன்வந்திரி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?

தன்வந்திரி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம். கையில் சங்கு, சக்கரம், அமுத கலசம், அட்டைப்பூச்சி ஏந்தி அருள்பவர். எவ்வளவு கடும் நோயாக இருந்தாலும், குணப்படுத்தி அருள்பவர். மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா மந்திரத் தால் ஹோமம் செய்ய, நோய்நொடி நீங்குவதோடு ஆயுளும் அதிகரிக்கும்

நீங்களும் நலமுடன் வாழுங்கள் ஏனைய உயிரினங்களையும் வாழவிடுங்கள்.

நண்பர்களே,நாம் எவ்வளவுதான் தானம்,தருமம் செய்தாலும் அசைவ உணவுகளை விடாதவரை நாம் ஆண்டவன் அருளை முழுமையாக பெற முடியாது. எப்படி ஒரு உயிர் உணவுக்காக கொல்லப்படும்போது ...துடிக்கிறதோ அவையனைத்தும் அதை சாப்பிடுபவரை நிச்சயம் பாதிக்காமல் விடவேவிடாது.எதிர்பாரத விதமாக நமக்கு உடலில் ஒரு காயமோ,கீறலோ ஏற்பட்டால் எப்படி துடிக்கிறோம் அதை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான அவஸ்தையை கொல்லப்படும் உயிர் அனுபவிக்கிறது.அதனுடைய உயிர் பலவந்தமாக பறிக்கபடும் போது ஏற்படும் அதிர்வு,அந்த உயிரின் அவஸ்தை,அது கொடுக்கும் சாபங்கள் அந்த உடலை உண்பவரையும்,கொண்றவரையும் விடாது.
அதோடு மட்டுமில்லாமல் எதிர்வரும் சந்ததிக்கு பெரும் தீமைகளை விளைவிக்கிறது.
எத்தனை உயிர்களை புசித்தீர்களோ அத்தனை பிறவிகள் கட்டாயம் பிறந்தாக வேண்டும்.அதோடு எந்த அங்கங்களை ருசித்து சாப்பிடுகிறோமோ அதே அங்கத்தில் உங்களுக்கோ அல்லது உங்கள் வாரிசுகளுக்கோ கட்டாயம் பாதிப்புண்டாகும்.
அதனால் விட்டுவிடுங்கள் அசைவ உணவுகளை. இதையே பல சித்தர்களும்,ஞானிகளும் தங்கள் பாடலில் பாடியுள்ளனர்.
அவை::-

"பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்து மனைத்துநினைக் கொன்றன
தின்றனை யனைத்து மனைத்துநினைத் தின்றன
பெற்றன யனைத்து மனைத்துநினைப் பெற்றன".
:-பட்டிணத்தார்.

"பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதூவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே".

"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றுஆரும் ஆவி அமர்ந்துஇடம் உச்சியே".
:-திருமூலர் திருமந்திரம்.

உயிர் கொலை,புலால் உண்பது மேலும் தெரிந்தே செய்யபடும் பாவஙகளுக்கு எவ்வித பரிகாரங்கள் கிடையாது.
ஜீவகாருண்யத்துடன் வாழமுடியுமென வள்ளலார்,ரமணர்.வாரியார் இன்னும் பல சான்றோர்கள் நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அன்பர்கள் இதனை உணர்ந்து நீங்களும் நலமுடன் வாழுங்கள் ஏனைய உயிரினங்களையும் வாழவிடுங்கள்.

கோபத்தைக் களைவது எப்படி ?

கோபத்தைக் களைவது எப்படி ?
*****************************

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று கோபத்தின் முழு காரணகர்த்தாவாக தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு ,பச்சாதாபம், இந்த கோபம் தேவைதானாஎன்கிற மறுபரிசீலனை.......என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக நாம் யாரிடம் கோபத்தைக் காட்டினோமோ அவருக்குபதிலுக்கு நம்மீது கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும்.அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம்.அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம்.விழுங்கியது வெளிப்படவே செய்யும்.

நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன.பின் என்ன செய்வது ?இந்த கேள்விக்குப் பதிலை ஒரு சிறு கதை மூலம் காண்போம்.

ஒரு துறவிக்கு படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார்.பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."அவர் தன் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும்...ஆனால் அந்த நிலைமையே அவருக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.....அந்தப் படகு அவருக்கு ஞானகுருவாக தெரிந்தது..

இப்போதெல்லாம் யாராவது அவரை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் அவர் புன்னகையுடன் "இது காலிப் படகு" என்று அவருக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து போக ஆரம்பித்துவிட்டார்..." கோபமே அவசியமில்லை கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும்.மனம் வீணாகப் புண்படும்.கடுகடுப்புக்கு முகமும் கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் நமக்கு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம்.

அடுத்தவரது சொற்களோ செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம்.ஆனால் உண்மையில் கோபமும் கோபமின்மையும் நம் மனப்பான்மையையும் மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள்.அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான்.அது கோபமாகட்டும் வெறுப்பாகட்டும் அன்பாகட்டும் நல்லதாகட்டும் தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே.எனவே யாராவது வந்து நம்மை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று நமக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து விட முயலுவது நல்லது




உடம்பை வருத்து வது ஆன்மிகமா










நீங்கள் சொன்னபடி உடம்பு கேட்கிறதா? அல்லது உடம்பு சொன்னபடி நீங்கள் கேட்கிறீர்களா? உடம்பு, உங்களின் உண்மையான ஊழியனா? அல்லது கள்ளத்தனமான எஜமானனா?
உங்கள் உடம்பு, உண்மை ஊழியனாக உங்களது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு... சுறுசுறுப்பாக, லகுவாக, ஒத்திசை வுடன் உங்களுக்கு ஒத்துழைத்தால், ஆனந்தம் உங்கள் வாழ்வில் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
'விசையுறும் பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்'
என்று, சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி சொல்லால் தவம் செய்கிறார் மகாகவி பாரதி. ஒளி படைத்த இந்தியாவை உருவாக்க எண்ணி, தான் பாடிக் கொடுத்த புதிய ஆத்திச்சூடி யில், 'உடலினை உறுதி செய்' என்று உத்தரவும் போடுகிறார்!
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்கள், மாபெரும் அறிவாளிகளாக இல்லாவிட்டாலும், குடிமுழுகிப் போய்விடாது. ஆனால் அவர்கள், பலவீனமான நோயாளி களாக இருக்கக் கூடாது என்பதே என் முதல் அக்கறை; முன்னுரிமைச் சிந்தனை.
தன்னைப் பார்க்க வந்த பையன் பலவீனமாக இருக்கிறானே என்று, டானிக் எழுதிக் கொடுத்தார் மருத்துவர். பத்தே நிமிடத்தில் திரும்பி வந்த பையன், ''டானிக் மூடியைத் திறக்க முடியலை டாக்டர்... அதை திறக்கற அளவுக்கு சக்தி வர்ற மாதிரி ஊசி போடுங் களேன்'' என்றானாம்!
உடல்தான் ஆனந்தத்தின் ஆதார சுருதி. பழைய மரபு வழுவாத கோயில்களில், ஐந்து திருச் சுற்றுகள் (பஞ்ச பிராகாரம்) இருக்கும். இதில்
முதல் சுற்று- அன்னமய கோசம். அதாவது உண வால் உண்டான உடல்... ஸ்தூல சரீரம்!
பொதுவாக இந்த உடலை, 'அழியக் கூடியது... கிழியக் கூடியது.. சோற்றுத் துருத்தி... அழுகி நாறும் அருவருப்பானது' என்று சொல்லி விடுகிறார்கள் சமயவாதிகள். ஆனால், வாழ்வைத் துவக்குபவர்கள் இந்த மேற்கோள்களை

இவ்வளவு அவசரப்பட்டு அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
'உடல் கண்ணுக்குத் தெரியும் ஆத்மா. ஆத்மா கண்ணுக்குத் தெரியாத உடல்' என்று கவித்துவமாக பேசுகிறார் ஓஷோ. உடம்பை - கேவலமாக- தாழ்வாக நினைப்பது இயல்பு என்றாலும், அது நமது அறியாமை என்கிறார் திருமூலர். 'முன்னம் உடம்பை இழுக்கென்றெருந்தேன்' என்று தனது தவறுக்கு வருத்தம் தெரி விக்கிறார். பின்னர், 'உள்ளம் பெரும் கோவில்; ஊன் உடம்பு ஆலயம்' என்று கண்டுபிடித்தும் விட்டார்.
அதனால் அடுத்து கவனமாக,'உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' என்று தன் தவறைத் திருத்திக் கொண்டதாக வாக்கு மூலம் தருகிறார் திருமூலர்.எனவே, உங்கள் உடம்பிடம் அன்பு காட்டுங்கள். அதைக் கொடுமைப்படுத்தாதீர்கள். உடம்பை வருத்து வது ஆன்மிகம் அல்ல. அதை பாதுகாப்பாக, கௌர வத்துடன் பராமரியுங்கள். அது, விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உன்னதமாகக் கட்டப்பட்ட மிகச் சிறந்த கோயிலை எவரேனும் இடித்தால், நீங்கள் சும்மா இருப்பீர்களா? உடம்பு, உன்னதமாக உருவாக்கப்பட்ட கடவுளின் கோயில். அதைச் சாட்டையால் அடிப்பது, ஊசிக ளால் குத்திக் கொள்வது, மண்டையில் தேங்காய் உடைப்பது... இவையெல்லாம் கோயிலை இடிக்கும் மோசமான செயல்கள்தான்.
உடம்பு எத்தனை உயர்ந்த கருவி தெரியுமா? ஒரு ரொட்டித் துண்டை வாயில் போட்டால், சில மணி நேரத்தில் அது ரத்தத்தில் ஒரு துளியாக மாறி விடுகிறது. எலும்பு, நரம்பு, மஜ்ஜை, கொழுப்பு, தோல் என்று பற்பல உறுப்புகளின் அடிநாதமாகிய சத்துப் பொருளாக அந்த ரொட்டி பிரித்தெடுக்கப்பட்டு, கூரியர் சர்வீஸ் மாதிரி அங்கங்கே அந்தந்த சத்துப் பொருளாகச் சேமிக்கப்பட்டு, சக்கை வெளியே தள்ளப்படுகிறது. இப்படியரு கருவியை மனித குலம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கிறதா?
இப்படி... ஒரு முனையில் ரொட்டியாகப் போட் டால் மறுமுனையில் ரத்தமாக மாற்றும்படியான தொழிற்சாலை ஒன்றை, 45 மைல் சுற்றளவில், பல கோடி ரூபாய் செலவில் அமெரிக்காவில் அமைத் தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த தாகப் படித்திருக்கிறேன்.
நண்பர் ஒருவருக்குப் பார்வைக் கோளாறு. கண் மருத்துவமனைக்குச் சென்றோம். அன்று கண் மருத்துவர் ஊரில் இல்லை! வயதான அவரின் தந்தை, தட்டுத் தடுமாறியபடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். என் நண்பருக்கு சொட்டு மருந்து ஊற்றி விட்டு, தம் வெற்றியைக் கொண்டாடும் விதம், 'மருந்து எப்படி இருக்கு?' என்று கொக்கரித்தார். என் நண்பரோ பீதியுடன், 'புளிப்பா இருக்கு' என்ற
படி வாயைத் துடைத்துக் கொண்டார்! ஒரு வழியாக சகல களேபரங்களும் முடிந்து, நண்பர் கண்ணாடி போட்டுக் கொண்ட போது கணக்குப் பார்த்தோம்... ஏழாயிரம் ரூபாய் செலவாகி இருந்தது! இப்படி கண்ணாடி போடும் அவசியம் உங்களுக்கு ஏற்படாமல் இருந்தாலே இந்தப் பணம் மிச்சம் ஆகும் என்பது புரிய வேண்டும். கண் மாதிரியே பல்! பல் வைத்தியரிடம் போனால்... பல்லையும் தட்டிவிட்டு, பில்லையும் நீட்டி விடுகிறார்!
கடவுள் நமக்கு இலவசமாக தந்துள்ள இரண்டு கிட்னிகளை விற்கத் தயார் என்றால், எத்தனையோ லட்சத்துக்கு ஏலம் எடுக்க பலர் தயாராக உள்ளனர் என்பதை அறிவீர்களா?
ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட பம்ப் செட்டு களை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுகிறது ஆனால், நம் உடம்பில் 24 மணி நேரமும் ரத்தத்தை பம்ப் செய்யும் இருதய மோட்டார் வருடக் கணக்காக இடைவெளி இன்றி இயங்கிக் கொண்டே இருக்கிறதே! உடல் என்கிற இந்த உன்னதக் கருவியின் மேன்மை உணர்ந்து, 'உடலை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் மாதிரி எம்பிக் குதிக்க வேண்டாமோ?
உடலை வளர்ப்பது என்பது நிறைய தின்று கொழுகொழுவென்று இருப்பது என்று பொருள் படாது. நண்பர் ஒருவர், என்னை விட பரும
னாக இருப்பார். உடல் இளைக்க மருத்துவரை நாடினார். ''உங்களது இரவு உணவு என்ன?'' என்று கேட்டார் மருத்துவர். ''முழு சாப்பாடு... சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொறியல்... முடிந்தால் வடை, பாயசம்!'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் நண்பர்.
டாக்டர் கடுப்பாகி, ''ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி இப்படியா சாப்பிடுவாங்க? ரெண்டே ரெண்டு சப்பாத்தி சாப்பிடுங்க!''என்று கடிந்து கொண்டார்.நண்பரோ, துளியும் கவலையின்றி... ''ரெண்டு சப்பாத்திதானா? சரி... சாப்பாட்டுக்கு முந்தியா? பிந்தியா?'' என்று விளக்கம் கேட்டாரே பார்க் கலாம். டாக்டர் நொந்தே போனார்!
இப்படி உடலை வளர்ப்பதா ஆனந்தம்! 'விருந்தும் விஷம்... விரதமும் வேண்டாம்' என்ற நடுநிலை உணர்வே உடலைப் பேணும் ரகசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எட்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர், அதை எப்படி வைத்திருக்கிறார்? எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே, அதன் மதிப்பு நிர்ணயம் ஆகிறது; கூடிக் கொண்டே போகிறது. அதுபோல, எண்சாண் உடம்பை வைத்திருக்கும் ஒருவர், அதை எப்படி வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அதன் மேன்மை நிர்ணயம் ஆகிறது.
திறமை மிக்க டிரைவர், தனது லட்சியத்தை எட்ட, தான் ஓட்டும் காரோடு ஒருபோதும் போராடுவதில்லை. அதை எவ்வாறு கொண்டு செலுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார். காரை, லாகவமாகக் கையாண்டும், அதிகமாக பராமரித்தும் தனது பயணத்தைச் சுகமாக்குகிறார். இலக்கை விரைவில் எட்டுகிறார். அதுபோல் கடவுளை நோக் கிய ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் விவேகிகள், தங்களது பயணம் சுகமாகவும் விரைவாகவும் அமைய உடலை எதிர்த்துப் போராடாதீர்கள். மாறாக, நன்கு பராமரியுங்கள்.
உணவைக் குறைப்பது குற்றமே அல்ல. ஆனால், தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒட்ட ஒட்ட கிடப்பது நல்லதல்ல. அதேபோல கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு, அளவுக்கு மீறி விருந்து உண்பதும் அறிவுடைமை ஆகாது. விரத காலங்களிலும் உடலில் உள்ள சர்க்கரைத் திறனுக்கு ஏற்ப பழங்கள், வெறும் வயிற்றில் நீர் அருந்திய பின் இளநீர், பானகம், பால் என்று (வெயில் மற்றும் மழைக்காலத்துக்கு ஏற்ப) திரவ உணவு கொள்வது விரதத்துக்குக் குறை ஆகாது.
சுரோணா என்ற அழகிய இளவரசன் திறமை மிக்க சிதார் கலைஞன். இவன், புத்தரிடம் சந்நியாசம் வேண்டி னான். 'அவன் போக நாட்டம் மிக்கவன். குடி, கூத்து, கும்மாளம் என்றே பொழுதைக் கழிப்பவன்... அவனுக்கு சந்நியாசம் தர வேண்டாம்' என்று சீடர்கள் தடுத்தனர். ஆனால், அவனுக்கு சந்நியாசம் தந்து விட்டார் புத்தர்.ஆனால், நிலைமை இப்போது தலைகீழ்... புத்தரின் துறவிகள் மூன்று ஆடைகள் வைத்திருக்கலாம் என்பது விதி. சுரோணா நிர்வாணமாக அலைந்தான். மற்ற துறவிகள் வெயிலில் சாலையில் நடந்தால், சுரோணாவோ கல்லிலும் முள்ளிலும் நடந்தான். மற்றவர்கள் ஓய்வெடுக் கும்போதும் இவன் வெயிலில் திரிந்தான். கொலைப் பட்டினி! எலும்பும் தோலுமாய்க் கறுத்து இளைத்து உடல் சுருங்கி விட்டான்! அன்புடன் அவனை நெருங்கிய புத்தர் ஒரு நள்ளிரவில் கேட்டார்: ''சிதாரின் நரம்புகள் இறுக்கமாக இருந்தால் அதில் இசை பிறக்குமா?''
''இல்லை, கம்பிகள் அறுந்து விடும்.''
''கம்பிகள் மிகவும் தளர்வாக இருந்தால் இசை பிறக் குமா?'' என்றார் புத்தர்.
''பிறக்காது... விரைப்பும் இல்லாமல் தளர்வும் இல்லா மல், நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும்'' என்றான் சுரோணா.
''இது உன் உடம்புக்கும் பொருந்துமே!'' என்றார் புத்தர்.
சுரோணா விழிப்படைந்தான்.
இது உங்களுக்கும் பொருந்தும்... யோசியுங்கள்!

சட்டை முனி ஞானம்::பூசை செய்யும் முறை

சட்டை முனி ஞானம்::பூசை செய்யும் முறை

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் ...
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.

தானென்ற "மேரு"வைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்;
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா;
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்;
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்;
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்;
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்;
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு;
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்;
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.

பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்;
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்;
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற்
காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!