Tuesday, June 24, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 34

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 34
பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருந்தால்தான் இந்தப் பூவுலகில் நாம் நிம்மதியாக வாழமுடியும். ரேஷன் கடை, ரயில் நிலையம், பேருந்துகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் கூட்டம்; எங்கு பார்த்தாலும் நெரிசல்; டிராஃபிக். இந்த நிலையில் பொறுமையைக் கடைப்பிடித்து சகிப்புத் தன்மையுடன் இருந்தால்தான், இந்தப் பிறப்பை நாம் சந்தோஷமானதாக ஆக்கிக் கொள்ளமுடியும்!
ஆனால், பகவானுக்கு இவை ஏதும் இல்லை. அவன், பொறுத்துக்கொள்ளவும் தேவையில்லை; சகித்துக்கொள்ளவும் அவசியமில்லை. தவிர, பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சகிப்புத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவர். பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற அளவுக்குப் பொறுமையற்று இருப்பவர். அதனால்தான், அப்பேர்ப்பட்ட மகாபாரத யுத்தத்தின்போதுகூட, ‘அர்ஜுனா… இன்னுமா யுத்தத்தை முடிக்காமல் இருக்கிறாய்? எப்போதுதான் முடிப்பாய் யுத்தத்தை?’ என்று அவசரப்படுத்தியபடியே இருந்தார்.
இத்தனை அவசரமும் வேகமும் இருந்தாலும், பகவான் எப்போதுமே புண்டரிகாக்ஷன்தான்! அதாவது, மிகப்பெரிய தாமரைப் பூக்களைப் போன்ற கண்களை உடையவன். அத்தனை ஒளிர்ந்த, விசாலமான, தீட்சண்யமான, மலர்ந்த கண்களைக் கொண்டவன் என்று அர்த்தம்.
இப்படியெல்லாம் பகவானையும் அவனுடைய கண்ணழகையும் வியந்து போற்றுவோர் யார் தெரியுமா? விண்ணவர்கள்! அவர்களே போற்றிக் கொண்டாடுகிற அளவுக்கு அழகன் என்றால், சாதாரணர்களாகிய நாம் எந்த வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பாராட்டிப் புகழ்வது?
பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மாவுக்கு ஆயிரமாயிரம் வேலைகள் உண்டு. மண்ணுலகில் உள்ள நம் அனைவரையும் ரட்சிப்பவனாயிற்றே! நம்முடைய சின்னக் குறையைக்கூடத் தீர்த்து வைக்க முனைந்து செயல்படுபவனாயிற்றே அவன்! அதனால்தான் அவனுக்கு ஜகத்கரணபூதன் என்றொரு திருநாமம் அமைந்தது.
இங்கே… மூன்று விஷயங்களில் உயர்ந்து நிற்கிறான் கமலக்கண்ணன். முதலாவது… எந்தக் காரணங்களையும் காரியங்களையும் வைத்துக்கொண்டு அவன் செயல்படவில்லை.
அடுத்து… எல்லாக் காரியங்களிலும் மிகவும் ஆர்வமாகவும், நாம் ஆச்சரியப்படும் படியாகவும் செயல்படுபவன். மூன்றாவது… முக்கியமாக, தனக்கு என்று எந்தக் காரணமும் வைத்துக்கொண்டு சுயநலமாகச் செயல்படாதவன்!
இங்கே… மனித குல வாழ்க்கையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இங்கு ஒவ்வொருவரும் காரியம் இருக்கிற காரணத்துடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருக்கு இந்தக் காரியத்தைச் செய்வதால், தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று சிந்தித்தே செயல்படுகிறார்கள். மூன்றாவதாக, அப்படி லாபம் கிடைத்தால்தான் ஆர்வத்துடனும் வேகத்துடனும் செயல்படுகிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், மனிதர்களாகிய நமக்கு உணர்த்துகிற இந்தப் பாடத்தை அறிந்து, உணர்ந்து செயல்படத் துவங்கினால்… இந்த உலகில் போட்டிக்கும் பொறாமைக்கும் வேலையே இருக்காது. கர்வம் தலைதூக்கவும் நம்பிக்கை துரோகம் இழைக்கவும் இங்கு எந்த அவசியமும் இராது! அந்த ஜகத்கரணபூதனை உணர்ந்து, தெளிவதே வாழ்தலின் முதல்படி.
தனக்கென எந்தக் காரணமும் இல்லாமல் செயல்படுபவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால் ஓர் ஆச்சரியம்… பூமி பிராட்டியின் மீது அளவற்ற ஆசையும் அத்தனை பிரியமும் உண்டு அவனுக்கு.
அதாவது, பூமி பிராட்டிக்காக அத்தனை பாரங்களையும் தவிர்த்தார் ஸ்ரீகிருஷ்ணர். பிரளய காலத்தில், கர்ப்பக்கிரகத்தில் வைத்துக் காத்தருளினார். கம்சனையும் துரியோதனனையும் அழித்து, பூமியையும் பூமியில் உள்ள மனிதர்களையும் காத்தார்.
மறைத்து வைத்ததை மீட்டுக் கொடுக்க, வராக பெருமாளாக அவதரித்து அருளினார். ஹிரண்ய வதத்துக்காக தூணில் மறைந்து இருந்து வெளிப்பட்டார். வாமனனாக, திரிவிக்கிரமனாக உலகை அளந்தார்.
பூமி பிராட்டியார்மீது கொண்ட ஆசையின் விளைவாகவே மண்ணில் பிறந்து, பிறந்து அவதாரக் கோலங்களை எடுத்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், இந்த பூமியில் உண்டார்; நடந்தார்; கிடந்தார்; அளந்தார். உலக மக்கள் அனைவரையுமே அரவணைத்தார். இதனால் அவருக்கு, ‘க்ஷிதிஸஹ:’ எனும் திருநாமம் அமைந்தது. க்ஷிதி என்றால் பூமி என்று அர்த்தம்!
‘ஆதிசேஷனில் இருந்தபடி பூமியைத் தாங்குகிறாய். பிரளயத்தின்போது பூமியையே தூக்கிக் காபந்து செய்தாய். வாயில் விழுங்கி, கருவறையில் வைத்துக் காப்பாற்றினாய். பூமாதேவியை இந்த அளவுக்கு நேசிக்கிறாயே… எப்போதும் உன் மார்பில் வைத்திருக்கும் ஸ்ரீதேவி நாச்சியாள், அதற்காக வருத்தப்படமாட்டாளா? உன் மீது கோபப்படமாட்டாளா?’ என்று கம்பநாட்டான்கூட சூசகமாகக் கேட்டிருக்கிறான்.
ஆனால், அதைப் பற்றி ஸ்ரீதேவி நாச்சியாரே வருத்தப்படாதபோது, நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?
உண்மையில் எங்கே போனாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் தன் மார்பிலேயே ஸ்ரீதேவி நாச்சியாரை வைத்திருக்கிறானே பகவான்! அப்படியிருக்க… அவள் ஏன் வருத்தப்படப் போகிறாள்?
இந்த வருத்தங்களும் கோபங்களும் தவிப்புகளும் சோகங்களும் நமக்குத்தான். உள்ளேயும் வெளியேயுமாக நமக்கு இருக்கிற பாபங்கள் பெருகிக்கொண்டே அல்லவா இருக்கின்றன? இந்தப் பாபங்களையெல்லாம் எங்கே, எப்படி, எவரால் போக்கிக் கொள்வது என்று நாம்தான் உழன்று, தவித்து, மருகி, கதறி, கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!
கவலையேபடாதீர்கள். ‘என் திருவடித் தாமரைகளை எவர் பற்றிக் கொள்கிறாரோ, அவரின் சகல பாபங்களையும், நானாவித அபசாரங்களையும் நான் போக்கித் தருவேன்’ என கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
நமக்குள்ளே இருக்கிற காம- குரோதங்களை, கர்வ- அகங்காரங்களை, மத மாச்சர்யங்களை நம்மிடம் இருந்து போக்கி, அந்தப் பாவங்களில் இருந்து நமக்கு விடுதலையைத் தருபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
அதேபோல், நமக்குள் பக்தி எனும் சிந்தனையை வளரவிடாமல் செய்கிற தீமைக் குணங்களைப் போக்கி, சகல பாபங்களில் இருந்தும் நம்மை விடுவித்து அருள்கிறார் பரம்பொருள். இதனால் ஸ்ரீகண்ணபிரானுக்கு, ‘பாபநாசனஹ’ என்கிற திருநாமம் அமைந்தது.
ஆமாம்… பகவானின் திருநாமங்களைச் சொன்னால் போதும்; அல்லது, பகவானின் அவதாரங்களை ஒருகணம் நினைத்தால் போதும்… நம் இடர்கள் அனைத்தையும் நீக்கி அருள்வான் பரந்தாமன் என்பதில் சந்தேகமே இல்லை!

அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்

அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்
பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.
அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது.
அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க, ‘‘பார்த் தாயா கிருஷ்ணா… நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால், பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான்.
அவசரமாக அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா… இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதுகிறாயா?’’
கண்ணபிரானது குரலில் பொதிந் திருந்த ஏளனத்தைக் கவனித்தான் அர்ஜு னன்.
‘‘கண்டிப்பாக! அதி லென்ன சந்தேகம்?’’ _ சற்று உஷ்ணமாகவே கேட்டான் அவன்.
மறு கணம் வாய் விட்டுச் சிரித்தார் கண்ணபிரான். எரிச் சலுற்றான் அர்ஜுனன்.
‘‘கிருஷ்ணா, ஏன் சிரிக் கிறாய்?’’
‘‘உனது அறியாமையை எண்ணி…’’ _ கண்ண பிரான் அமைதியாகக் கூறினார்.
‘‘அறியாமையா?’’
‘‘ஆமாம்! விளக்குகிறேன். உனது இந்தத் தேரின் மேலே என்ன இருக்கிறதென்று தெரி யுமா? சகல வல்லமையும் பொருந்திய ஸ்ரீஆஞ்ச நேயரின் கொடி. அவரது பலம் என்ன… பராக் கிரமம் என்ன? அவர் இந்தத் தேரில் இறங்கி நம்மைக் காத்து வருகிறார். மேலும் உலகைக் காக்கும் பரந்தாமனான நான், வில் வித்தையில் நிகரற்றவனான நீ… இப்படி மூன்று பேர் இதில் உள்ளோம். ஆனால், இதையெல்லாம் மீறி ஓர் அம்பின் மூலம் தேரை ஓரடி நகர்த்தி விட்டான் கர்ணன். அதனால் உண்மையில் அவன்தான் பெருமைக்குரியவன்!’’
கண்ணனின் விளக்கம் கேட்டு அர்ஜுனனின் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.

Monday, June 23, 2014

சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’

சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’

முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு, துர்வாச முனிவர் வருகை தந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர் முத்கலரின் குடும்பத்தார்.

துர்வாசரிடம், ”ஸ்வாமி, தாங்கள் இன்று இங்கு தங்கி, உணவருந்திச் செல்ல வேண்டும்!” என்று பணிவுடன் வேண்டினார் முத்கலர்.

”எனக்கு விருந்து படைக்க உம்மால் இயலுமா?”- சற்று ஏளனத்துடன் கேட்டார் துர்வாசர்.

”எளியேனிடம் இருப்பதை வைத்து உபசரிக்கிறேன்… பெருந்தன்மையுடன் ஏற்று அருள வேண்டும்!”- மாறாத புன்னகையுடன் பதிலளித்த முத்கலர் விருந்து ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

நதிக்கரைக்குச் சென்ற துர்வாசர் நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து வந்தார். முத்கலரும் அவரின் மனைவியும், துர்வாசருக்கு விருந்து படைத்தனர். எளிமையான விருந்தாயினும் சுவையாக இருந்தது. மன நிறைவுடன் சாப்பிட்டு முடித்தார் துர்வாசர். பெரும் ஏப்பத்துடன் எழுந்தவர், ஆசி கூட கூறாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

பத்து நாட்களுக்குப் போதுமான தானியங்களை உணவாக்கி துர்வாசருக்குப் படைத்தாகி விட்டது. அன்றும் அடுத்து வரும் நாட்களிலும் அரை வயிற்றுக் கஞ்சிதான் உணவு. தொடர்ந்து பத்து நாட்கள்… முத்கலர் வயல் வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வந்தால், பதினோராவது நாள் முழுச் சாப்பாடு கிடைக்கும்.

நாட்கள் கழிந்தன. பதினோராவது நாள், மிகச் சரியாக… முத்கலரும் அவரின் குடும்பத்தாரும் சாப்பிட அமர்ந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்தார் துர்வாசர்! முத்கலர், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும் முகமும் அகமும் மலர துர்வாசரை வரவேற்றார்.

”வரவேற்பு மரியாதைகள் எல்லாம் இருக்கட்டும்… எனக்கு, பசி காதை அடைக்கிறது. இன்று இங்குதான் உணவருந்தப் போகிறேன். சமையல் தயாரா?” என்றார் கடுகடு முகத்துடன்.

மறுகணம் வாழையிலை விரிக்கப்பட்டது. தங்களுக்காக தயார் செய்த உணவை, இன்முகத்துடன் துர்வாசருக்குப் பரிமாறினர் முத்கலர் தம்பதி. அன்றும் திருப்தியான சாப்பாடு. உண்டு முடித்த துர்வாசர், வழக்கம் போல எதுவும் பேசாமல் புறப்பட்டு விட்டார்.

முத்கலர் குடும்பத்தாரது அரைப் பட்டினி நிலை தொடர்ந்தது. எனினும், அவர்கள் எவரும் இம்மியளவேனும் முகம் கோணவில்லை. நித்திய கர்மானுஷ்டங்களை செய்வதும், எஞ்சியுள்ள நேரத்தில் வயல்வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வருவதும் வழக்கமானது.

சரியாக பதினோராவது நாள்… அழையா விருந்தாளியாக மீண்டும் துர்வாசர்! இந்த முறையும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவரை உபசரித்து விருந்து படைத்து அனுப்பினர்.

இப்படி தன் குடும்பத்தார் அரை வயிற்றுக் கஞ்சியுடன் காலம் கழிப்பதும், முத்கலர் தானியங்கள் சேகரித்து வருவதும், பதினோராவது நாள் துர்வாசர் வந்து உணவைக் காலிசெய்து விட்டுப் போவதும் தொடர்கதையானது.

இரண்டு மாதங்கள் கழிந்தன. துர்வாசர் வருவது… இது, ஏழாவது முறை! ஆனால் அன்று அவரின் முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒருவித மலர்ச்சி!

வந்ததும் பேச ஆரம்பித்தார்: ”முத்கலரே… உமது திட சிந்தையையும் விருந்தோம்பும் பண்பையும் சோதிக்கவே இப்படி ஒரு பரீட்சை. அதில் நீர் வென்று விட்டீர். உமக்கும் குடும்பத்துக்கும் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நான் சாப்பிட்டுச் சென்றாலும், ஒவ்வொரு முறையும் இன்முகத்துடன் நீங்கள் விருந்தளித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த சீரிய பண்பு என்னை மட்டுமல்ல; தேவர்களையே வியக்க வைத்தது. இனி, நீங்கள் இந்த பூவுலகில் துன்பப்பட வேண்டாம். உங்களுக்கு சொர்க்கவாசம் கிடைக்கப் போகிறது. வாசலில் பொன்மயமான ரதத்துடன் தேவ தூதர்கள் காத்திருக்கிறார்கள்!” என்றார்.

இதைக் கேட்டு முத்கலர் பெரிதும் மகிழ்வார் என்று எதிர்பார்த்தார் துர்வாசர். ஆனால், முத்கலர் முகத்தில் ஒருவித அமைதி!

அவர், ”மகரிஷியே, உங்களது கருணைக்கு மனமார்ந்த நன்றி. எளியேனுக்கு சொர்க்கத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால், சொர்க்கலோகம்- பூலோகம் இவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களை உபதேசிக்க வேண்டுகிறேன்!” என்றார் துர்வாசரிடம்.

துர்வாசர் விவரித்தார்: ”பூலோகம் கர்ம பூமி. ஆனால், சொர்க்கத்தை போக பூமி என்பர். கற்பனைக்கும் எட்டாத சுக- போகங்கள் நிறைந்தது அது. பருவகால வேறுபாடுகள் இன்றி எப்போதும் பூத்துக் குலுங்கும் மரங்கள், வேண்டியதைத் தரும் கல்ப விருட்சம் போன்றனவும் வசீகரமான அப்சரஸ் மங்கையர்களும் நிறைந்தது சொர்க்கம். மனிதன் ஒருவன், பூமியில் செய்த நற்செயல்களின் பயனால் மட்டுமே சொர்க்கத்தை அடைய முடியும். சுருங்கச் சொன்னால், உம்மைப் போன்ற புண்ணிய சீலர்களும், அறநெறிச் செல்வர் களுமே சொர்க்கத்தில் புக முடியும்!”

”ஸ்வாமி, சொர்க்கலோகத்தின் குறைகள் என்னென்ன?”- முத்கலர்.

”ஒன்றே ஒன்றுதான்! அங்கே, நாம் செய்த புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியுமே தவிர, புண்ணியத்தை மேலும் பெருக்கும் விதம், நற்காரியங்கள் ஆற்ற வாய்ப்பில்லை. ஆம், எவராக இருந்தாலும்… சொர்க்க புரியில் போகங்களை அனுபவிப்பதால், அவர்களது புண்ணிய பலன்கள் படிப்படியாகக் குறைந்து மீண்டும் பூமியில் பிறக்க நேரிடும்! அப்படி, ‘கர்மபூமி’யான பூமிக்கு வருபவர்கள்… இங்கு, தானம், தர்மம் மற்றும் நற்செயல்களை கடைப்பிடித்து மீண்டும் புண்ணியத்தைப் பெருக்கலாம்!” என்று முடித்தார்.

துர்வாசரை வணங்கிப் பணிந்த முத்கலர் பதில் உரைத்தார்: ”மன்னியுங்கள் ஸ்வாமி… அறச் செயல்கள் எதுவும் செய்ய வாய்ப்பில்லாத சொர்க்கம், எனக்குத் தேவை இல்லை. ஆயுள் உள்ள வரையிலும் இந்த கர்ம பூமியிலேயே உழன்று, பாடுபட்டு உழைத்து, அறநெறிகளைக் கடைப்பிடித்து, பிறருக்குத் தொண்டு புரிந்து வாழவே ஆசைப்படுகிறேன். அதில் கிட்டும் மன நிறைவும், மகிழ்ச்சியும், போக பூமியான சொர்க்கத்தில் கிட்டுமா?!”

முத்கலரின் இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த துர்வாசர், பெருமிதத்துடன் அவரை கட்டியணைத்துக் கொண்டார். அந்த பொன்மயமான ரதம், தேவதூதர்களுடன் விண்ணில் சென்று மறைந்தது!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 32

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 32

உணவு விஷயத்தில் நம்மில் எவ்வளவு பேர் கவனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உணவை எப்படிச் சாப்பிடவேண்டும், எந்த மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சில வரைமுறைகளும் வரையறைகளும் இருக்கின்றன என்பது சிலருக்குத் தெரியக்கூட இல்லை.

'அட... பசிக்காகவும் ருசிக்காகவும் சாப்பிடுகிறோம். அதிலேயே இத்தனை கணக்கு வழக்குகள் இருக்குதா?' என்று பலர் ஆச்சரியப்படவும் கூடும்.

உண்மைதான். நம் வயிற்றில் பாதி அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். மீதி கால்பாகம் தண்ணீர் குடித்து நிரப்ப வேண்டும். அடுத்த மீதியில், வாயு நிரம்பியிருக்கவேண்டும். அதாவது, சும்மா விட்டுவிடவேண்டும். அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு, மீதி வயிற்றுக்குத் தண்ணீரையும் வாயுவையும் நிரப்பிக்கொள்கிறவர்கள் புத்திசாலிகள் மட்டுமில்லை; ஆரோக்கியமானவர்கள்கூட!

ஆனால், உணவு வரையறைகள் என்பதெல்லாம் ஸ்ரீகண்ணபிரானுக்கு இல்லை. அவன் இஷ்டத்துக்குச் சாப்பிடுவான்; எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவான். சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூன்று வேளை உணவைப் பிரித்து ஆறு வேளையாக மாற்றிச் சாப்பிடுவார்கள் இல்லையா! அதுபோல் ஆறேழு வேளைகளில், ஆனால் உணவின் அளவைக் குறைக்காமல் சாப்பிடுபவன் ஸ்ரீகிருஷ்ணன். சர்க்கரையைப் போல் இனிப்பானவன் அல்லவா... அப்படித்தான் சாப்பிடுவான்!

நூற்றுக்கணக்கான குழந்தைகளை அழைத்துக்கொண்டு, நூற்றுக்கணக்கான பசுக்களை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு வந்தான் அல்லவா கண்ணபிரான்... அப்போது அகாசுரன் என்பவன் வாய் பிளந்து படுத்துக்கொண்டிருக்க, அவனை அழித்தொழித்தான்!

அதைக் கண்டு குழந்தைகள் ஆனந்தப்பட்டனர். துள்ளிக் குதித்தனர். 'அகாசுரன் என்பவனை இன்று நம் கண்ணன் கொன்று போட்டான்’ என்று குதூகலத்துடன் தெரிவித்தனர். ஆனால், இங்கே ஒரு விஷயம்... இந்தத் தகவலை அவர்கள் ஒரு வருடம் கழித்துதான் சொன்னார்கள்.

சரி... ஒரு வருடம் கழித்துச் சொல்லட்டும்; ஆனால், 'போன வருஷம் அகாசுரனைக் கொன்றான் கண்ணன்’ என்றுதானே சொல்லவேண்டும்? 'இன்று அகாசுரனைக் கொன்றான் கண்ணன்’ என்று ஏன் சொன்னார்கள்?

அதற்குக் காரணம் இருக்கிறது. 'இந்த இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணனுக்குதான் எத்தனை செல்வாக்கு! எவ்வளவு மரியாதை!' என்று பொறாமைப்பட்ட ஸ்ரீபிரம்மா, நேராக பூலோகம் வந்தார். கண்ணபிரான் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்தார்.

அங்கே... கடும் பசியில் இருந்த கண்ணன், பாலும் தயிருமாக ஊற்றிக் குழைத்துப் பிசைந்த தயிர்சாதத்தை பரமானந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதுவும் எப்படி? அங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தைக் கடந்து, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, இங்கே குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கண்ண பரமாத்மா. இவனிடம் இருந்து குழந்தைகள் ஒரு வாய் வாங்கிக்கொள்ள... பிறகு குழந்தைகள் இவனுக்கு ஊட்டிவிட... கொண்டாட்டத்துக்கும் பாசத்துக்கும் குறைவே இல்லாமல் பசியாறல் நடந்துகொண்டிருந்தது அங்கே!

நாமெல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நடுவில் எழுந்திருப்பது தவறு என்று திட்டுவார்கள் பெரியோர். நிறைவாகச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் எழுந்து கையலம்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? அதைப் பிறகு பார்ப்போம்.

அதற்கு முன்னதாக... இவற்றையெல்லாம் கவனித்து வந்த ஸ்ரீபிரம்மா, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்துக்கு விறுவிறுவெனச் சென்றார். சட்டென்று மாடுகள் அனைத்தும் மறைந்தன. 'பசுக்களின் சத்தத்தையே காணோமே...' என யோசித்த ஸ்ரீகிருஷ்ணர், 'நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று குழந்தைகளிடம் சொல்லிவிட்டு, பசுக்களைத் தேடிச் சென்றார்.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அல்லவா பகவான்? அந்தச் சாப்பாட்டை அவர் என்ன செய்தார்? எவருக்குக் கொடுத்தார்?

யாருக்கும் தரவில்லை. அப்படியே சாப்பிட்டுக்கொண்டே பசுக்களைப் பார்ப்பதற்காக எழுந்து போனாராம் பகவான். இப்படி அவர் செய்த குறும்புகள் ஒன்றா... இரண்டா?

மேய்ந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அங்கே ஒரு பசுவைக்கூடக் காணோம். குழப்பத்துடன் திரும்பி வந்தால்... அங்கே நின்றிருந்த குழந்தைகளையும் காணவில்லை. 'ஓஹோ... இது பிரம்மாவின் காரியம்’ என அறிந்தவர், சட்டென்று பிரம்மாவின் உருவத்துக்கு மாறினார். சத்தியலோகம் வந்தடைந்தார். அனைவரும் வரவேற்க, ஸ்ரீபிரம்மதேவனின் அரியணையில் கம்பீரமாக அமர்ந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

சிறிது நேரத்தில், குழந்தைகளுடனும் பசுக்களுடனும் சத்தியலோகத்தின் வாசலுக்கு ஸ்ரீபிரம்மா வந்தார். 'உள்ளே பிரம்மா இருக்கிறார். நீ அவரைப் போலவே வேடமிட்டு வந்திருக்கிறாயா? உள்ளே நுழையமுடியாது!' எனத் தடுத்து நிறுத்தினார்கள் சேவகர்கள்.

இதற்கிடையில், குழந்தைகளைக் காணோமே என்று அவர்களின் பெற்றோர்களும், பசுக்கள் எங்கே போயின என்று அவற்றின் உரிமையாளர்களும் கவலையும் பதற்றமும் கொள்ள... இங்கே பிரம்மாவாக உருக்கொண்ட அதே நேரத்தில், பூலோகத்தில் குழந்தைகளாக, பசுக்களாக, பசுக்களை விரட்டுகின்ற சாட்டைகளாக, கையில் வைத்திருந்த தயிர்சாதமாக, ஊறுகாயாக... என சகலமாகவும் உருவம் கொண்டார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆக, பூலோகத்தில் எந்தக் குழப்பமும் இல்லை.

இங்கே ஸ்ரீபிரம்மா, தன்னைத் தடுத்த சேவகர்களை மீறிச் செல்ல முற்பட... அங்கே நடந்த தள்ளுமுள்ளுவில்... புறப்பட்ட இடமான பூலோகத்தில், மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திலேயே வந்து விழுந்தார் அவர். அந்த இடத்தில்தான் ஸ்ரீபிரம்ம சூத்திரம் உருவானதாகச் சொல்வர்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது தெரியும்தானே?! எனவே தான், இந்திராதி தேவர்களிடம் இருந்து வந்த குழந்தைகள், 'அகாசுரன் என்பவனை இன்று நம் கண்ணன் கொன்று போட்டான்’ என்றார்கள். இப்போது புரிந்ததா?

இத்தனை விசேஷங்களுக்கு உரியவனான, ஸ்ரீபிரம்மாவுக்காகவும் இந்திரர்களுக்காகவும் அத்தனை ஆச்சரியங்களையும் செய்தவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனை எப்போதும் யாவரும் துதித்து வணங்கலாம். இதனால், இவருக்கு துதிதரஹ எனும் திருநாமம் அமைந்தது.

அதேபோல், சர்வசஸ்திர பிரதாம் வரஹ என்கிற திருநாமமும் ஸ்ரீகிருஷ்ணருக்கு உண்டு. அதாவது, எல்லா சஸ்திரங்களைத் தரிப்பவர்களுக்கு உள்ளேயும் தாமே சிறந்தவன் என்கிறான் கண்ணபிரான். அதுமட்டுமா? 'எந்த சஸ்திரத்தை யார் தரித்தாலும், அவருக்கு உள்ளே ஸ்ரீராமனாக நான் இருக்கிறேன்’ என்கிறான்.

இதில், ஸ்ரீகண்ணபிரானின் பெருந்தன்மை மட்டுமல்ல; ஸ்ரீராமபிரானின் மகோன்னதமும் நமக்கு விளங்குகிறது அல்லவா?

காமதேனுவால் வந்த கோபம்!

காமதேனுவால் வந்த கோபம்!

உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதா ரங்களில் குறிப்பிடத்தக்கவை 10 அவதாரங்கள். இதில், 6-வது அவதாரம்- ஸ்ரீபரசுராமர்.

ஜமதக்னி முனிவர்- ரேணுகாதேவி தம்பதிக்கு மக னாக அவதரித்தவர் ஸ்ரீபரசுராமர். முனி குமாரனாக இருந்த போதிலும் அரசர்களுக்கே உரிய சகல போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார் ஸ்ரீபரசுராமர். இவர், பரமேஸ்வரனை தியானித்து தவம் இருந்து, அவரிடம் இருந்து மழுவாயுதம் (கோடரி) பெற் றார். (பரசுராமரது பக்தி மற்றும் தவத்தால் மகிழ்ந்த சிவ னார், மழு ஒன்றைத் தோற்றுவித்ததாகவும், அதனால் இவருக்கு மழுவாளன், பரசுராமர் ஆகிய பெயர்கள் ஏற்பட்டதாகவும் கூறுவர்.)

ஒரு முறை க்ருதவீர்யன் என்ற மன்னன், தனது சேனையுடன் ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்தான். ஜமதக்னி முனிவரும் ரேணுகாதேவியும் தங்களிடம் இருந்த தெய்வீக பசுவான காமதேனுவின் உதவியுடன் அவர்களுக்கு சிறப்பான விருந்தளித்தனர். விருந்துண்ட க்ருதவீர்யனுக்கு, ‘சாதாரண முனிவர் ஒருவர், இவ்வளவு அருமையான- அறுசுவையுடன் கூடிய விருந்தளிப்பது சாத்தியமா?’ என்று சந்தேகம் எழுந்தது. அதை முனிவரிடமே கேட்டு விட்டான். ‘தனது ஆசிரமத்தில் வளரும் காமதேனுவின் கைங்கரியம் இது!’ என்று விளக்கினார் முனிவர்.

இதைக் கேட்ட க்ருதவீர்யன், காமதேனுவை தனக்குத் தரும்படியும் பதிலுக்கு ஏராளமான பசுக் களை தருவதாகவும் கூறினான். முனிவர் மறுத்து விட்டார். இதனால் சினம் கொண்ட க்ருதவீர்யன், காம தேனுவை கவர்ந்து செல்ல முற்பட்டான். ஆனால், காம தேனுவின் உடலில் இருந்து தோன்றிய ஏராளமான வீரர்கள், க்ருதவீர்யனையும் அவனது சேனையையும் அழித்தனர். க்ருதவீர்யன் இறந்த செய்தியைக் கேட்டு கோபமுற்ற அவன் மகன் கார்த்தவீர்யார்ஜுனன், ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்து, அங்கு தவத்தில் இருந்த முனிவரின் தலையை வெட்டி வீழ்த்தினான்.

ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் திரும்பிய ரேணுகாதேவி, தன் கணவரின் நிலை கண்டு கதறினாள். தன் மார்பில் 21 முறை அடித்துக் கொண்டு அழுதாள். அப்போது, அங்கு வந்த ஸ்ரீபரசுராமர் தன் தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். அருகில், ரத்தக் கறை படிந்த வாளுடன் நின்ற கார்த்தவீர்யார்ஜுனனை கண்டு சினமுற்று அவனை வெட்டி வீழ்த்தினார். ரேணுகாதேவி தீயில் மூழ்கி தெய்வநிலை எய்தினாள்.

பெற்றோரின் மரணத்துக்குக் காரணமான அரச குலத்தினர் மீது கோபம் கொண்ட ஸ்ரீபரசு ராமர், அவர்களை அழிப்பதாக சூளுரைத்தார். 21 தலைமுறைகளாக… அரசர்களைக் கொன்று அவர்களின் குருதியை ஓரிடத்தில் சேகரித்து, அதில் பெற்றோருக்கு இறுதிக் கடன் செய்தார். இருந்தும் அவரது கோபம் தணியவில்லை. இதனால் பயந்த அரசர்கள் பலரும் இறுதியில் காசிப முனிவரைச் சரணடைந்தனர்.

அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஸ்ரீபரசுராம ரிடம் சென்ற காசிபர், ”எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்!” என்று கேட்டார்.

”சொல்லுங்கள் செய்கிறேன்!” என்றார் ஸ்ரீபரசு ராமர்.

”பல்வேறு மன்னர்களை வெற்றி கொண்டு நீ அடைந்த பூமியை எனக்கு தானம் தர வேண்டும்!” என்றார் காசிபர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்ட பரசுராமர், பூமியை காசிபருக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். உடனே காசிபர், ”பரசுராமா… இனி, இந்த பூமி எனக்குச் சொந்தமானது. நீ இங்கிருந்து அகன்று, சினம் தணிந்து சிவபூஜை செய்வாயாக!” என்றார். அதன்படி அங்கிருந்து கிளம்பிய ஸ்ரீபரசுராமர் மேற்குக் கடற்கரை பகுதிக்குச் சென்றார். கரையில் நின்று தனது மழுவாயுதத்தை சமுத்திரத்தை நோக்கி வீசியெறிந்தார். அதன் தாக்குதலால் சமுத்திர நீர் உள்வாங்கியது. அங்கு தென்பட்ட நிலப் பரப்பை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் (இந்தப் பகுதியே இன்றைய கேரளம்). பரசுராமர் உருவாக்கியதால் இதை ஸ்ரீபரசுராம «க்ஷத்திரம் என்பர். இங்கு, ஸ்ரீபரசுராமர் அமைத்த சிவாலயங்களை ‘ஸ்ரீபரசுராமப் பிரதிஷ்டைகள்’ என்பர். பரசுராமர் இந்த இடத்தை விட்டு நீங்காது, சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

‘அரசர்களைக் கொன்ற தனது பாவம் தீர ஸ்ரீபரசுராமர், மகேந்திர மலையில் தவம் புரிந்து சிவனருள் பெற்றார்!’ என்கிறது சிவமகா புராணம். ஸ்ரீபரசுராமர் இன்னும் பல இடங்களில் சிவலிங்கம் அமைத்து பூஜித்ததாக புராணங்கள் கூறும். அவை, ‘பரசுராமேஸ்வரங்கள்’ எனப்படுகின்றன. அவற்றுள் சில:

பழுவூர்: இந்தத் தலம் அரியலூருக்கு தெற்கில் அமைந்துள்ளது. இங்குள்ள ஈசனின் திருநாமம் ஆலந்துறையீசர்; இறைவி- அருந்தவநாயகி.


ஒரு முறை தன் தந்தையின் கட்டளைப்படி, தாய் ரேணுகாதேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இந்த பாவத்தைப் போக்க எண்ணிய ஸ்ரீபரசுராமர், பழுவூர் வந்து, இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் அதன் இலைகளைப் பரப்பி, அவற்றின் மீது படுத்த நிலை யில் தவமியற்றி, பாவம் நீங்கப் பெற்றதாக கூறப் படுகிறது. இந்த ஆலயத்தில், மூலஸ்தானத்துக்கு முன்னே நிலைக்கல் ஒன்றில் சயனக்கோலத்தில் உள்ள ஸ்ரீபரசுராமரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

வேகாமங்கலம்: காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தலம் இது. இங்குள்ள இறைவன்- ஸ்ரீபரசுராமேஸ்வரர். இவரை வழிபட்ட பரசுராமர், மழுவாயுதம் பெற்று, அரசர்களைக் கொன்று, தன் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.

திரைலோக்கி: கும்பகோணத்துக்கு அருகே உள்ள இந்த ஊரை, ‘திரை லோக்கிய மகா தேவி சதுர்வேத மங்கலம்’ எனக் கல்வெட்டுகள் சில குறிப்பிடுகின்றன. இங்கு, நந்திதேவர் மீது, அழகிய பிரபைக்குள் ஸ்ரீஉமா மகேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி அற்புதம்!

திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்றது. ஸ்ரீபரசுராமர் இங்கு வழிபட்டு, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றார் என்பர். இதையே தமது திருநின்றியூர் பதிகத்தில்,

மொய்த்தசீர் முந்நூற்றறுபது வேலி
மூன்றுநூறு வேதியரோடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்று உமக் களிப்ப
பத்தி செய்த அப்பரசுராமர்க்குப்
பாதங்காட்டிய நீதிகண்டடைந்தேன்

_ என்று குறிப்பிடுகிறார் சுந்தரர்.

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம்.

‘வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!’ என்ற எண்ணத்துடன் ஒரு நாள், பரிவாரங்கள் புடைசூழ மகரிஷிகளது ஆசிரமத்துக்குச் சென்றார். மன்னரை முகம் மலர வரவேற்று, ஆசிர்வதித்தனர் மகரிஷிகள்.

அவர்களிடம், ”மகரிஷிகளே… நீண்ட காலமாக என்னுள் இருக்கும் ஓர் ஐயப்பாட்டுக்கு விளக்கம் பெற வேண்டியே இங்கு வந்தேன்!” என்றார்.

”உனது சந்தேகம் என்ன? சொல்… எங்களால் இயன்ற விளக்கத்தைத் தருகிறோம்!” என்றனர் மகரிஷிகள்.

மன்னர் தன் சந்தேகத்தைக் கேட்டார்: ”ஆத்மா என்பது எது? அதன் தத்துவம் என்ன? பல்வேறு நூல்களைப் படித்தும், பண்டி தர்கள் பலரிடம் கேட்டும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. தாங்கள் உதவ வேண்டும்!”

மகரிஷிகள், இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை! எனினும், மன்னரின் சந்தேகத்தைப் போக்குவதற்கான முயற்சியில் இறங்கினர். அனைவரும் ஒன்று கூடி, தாங்கள் கற்றதையும் ஆராய்ந்ததையும் கொண்டு விவாதித்த பிறகு ‘ஆத்ம தத்துவம்’ குறித்த தங்களது கருத்துகளை மன்னருக்கு விளக்கினர். ஆனால், அதிலும் திருப்தியடையாத மன்னர், வருத்தத்துடன் அரண் மனைக்குப் புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில், திடீரென மன்னரது ரதம் நின்றது. காரணத்தைத் தெரிந்து கொள்ள திரையை விலக்கி, வெளியே பார்த்த மன்னர், அருவருப்புடன் முகம் சுளித்தார். மிகவும் குள்ளமாக, கருப்பு நிறம், கோணல்மாண லாக ஆங்காங்கே வளைந்து புடைத்திருக்கும் மேனியுடன் அவலட்சணமான ஒருவன், ரதத்தின் பாதையை மறித்த படி அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தான். ‘இறைவனின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவியா?’

மன்னரது சிந்தனையைக் கலைத்தது, தேரோட்டியின் உரத்த குரல்: ”அடேய்… இளைப்பாற உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லை? பாதையை விட்டு விலகு; அரச தண்டனைக்கு ஆளாகி விடாதே!”

தேரோட்டி சொல்வதை சற்றும் பொருட்படுத்தாது, அலட்சியமாகப் புன்னகைத்த அந்த குரூபி, ”வேண்டுமா னால், ரதத்தைத் திருப்பி உன் மன்னனை வேறு வழியில் அழைத்துச் செல்!” என்றான்.

தேரோட்டி பதில் சொல்ல வாயெடுக்கு முன் அவனைத் தடுத்த மன்னர், ரதத்தை குரூபியின் அருகே நகர்த்துமாறு பணித்தார். ரதம், அந்த குரூபியை நெருங்கி நின்றது.

”குரூபிப் பிண்டமே… என்ன தைரியம் இருந்தால், எங்களுக்கே ஆணையிடுவாய்?”

- கோபத்துடன் கர்ஜித்த மன்னரைப் பணிவாக இடைமறித்தான் அவன்: ”மன்னிக்கவும் மன்னா. நெடுந்தூரம் பயணம் செய்ததால் நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால், ரதத்தில் பயணிக்கும் தங்களுக்கு, வேறு வழியாகச் செல்வதில் சிரமம் இருக்காதே!”

இதைக் கேட்டதும் மன்னரின் கோபம் கூடியது. அவர், ”இந்த விகார பிண்டத்தைத் தூக்கி அப்பால் போடுங்கள்!” என்று காவலர்களுக்கு ஆணையிட் டார். அதன்படி அந்த குரூபியை நெருங்கிய காவலர்கள், செயலற்று நின்றனர்!

இது எதையும் பொருட்படுத்தாதவனாகப் பேசி னான் அந்த விகார உருவத்தினன். ”மன்னா… ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை. பெரும் வேந்த ரான தாங்கள், எளியோனான என்னை அப்புறப் படுத்தி விட்டு, இந்த வழியில் செல்வதால் ஆகப் போவது என்ன?”

”ஒன்றும் இல்லை. ஆனாலும் இந்த வழியில்தான் செல்லப் போகிறேன்; வழியை விடு!”- கத்தினார் மன்னர். அவரைப் பார்த்துப் புன்னகைத்த குரூபி, ”எந்த வழியில் சென்றால், ஒரு லாபமும் இல்லையோ… அந்த வழியில், தெரிந்தே செல்வது அறிவீனம் இல்லையா?” என்றார்.

இதைக் கேட்டதும், ஒரு கணம் திகைத்துப் போனார் மன்னர். யாரோ ஒருவர், ஓங்கி சம்மட்டி யால் அடிப்பது போலிருந்தது அவருக்கு! ‘எவ்வளவு கருத்துச் செறிவான வார்த்தைகள்!’ என்று வியந்த மன்னர், ”நீ என்ன கூறுகிறாய்?” என்று வியப்புடன் கேட்டார்.

அவன் தொடர்ந்தான்: ”கண்ணை மூடிக் கொண்டு செல்பவருக்கு, வழியில் எதுவும் புலப் படாது. அப்போது எப்படி, ஞானிகளும் மகரிஷி களும் சொல்வது புரியும்? அவர்கள் எப்படி வழிகாட்டுவார்கள்?”

பிரமித்தார் மன்னர். ரதத்தை விட்டுக் கீழே இறங்கி பணிவுடன் கேட்டார்: ”சுவாமி! தாங்கள் யார்?”

”என்னைத் தெரிந்து கொள்வதால், உங்களுக்கு ஒரு லாபமும் இல்லை. ஆனாலும் லாபம் இல்லாத காரியத்தில்தான் உங்களுக்கு அதிக விருப்பம் ஆயிற்றே!”

கேலி தொனிக்கும் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னர் குற்ற உணர்ச்சியுடன், ”சுவாமி, அறியாமல் பேசி விட்டேன்… மன்னியுங்கள். தாங்கள் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்!” என்றார்.

அந்த குரூபியிடம் இருந்து பதில் வந்தது: ”எனது பெயர் அஷ்டாவக்ரர்!”

ஒரு கணம் ஆடிப்போனார் மன்னர்! ‘கல்விக் கடலான உத்தாலகரின் பெண் வயிற்றுப் பேரனும், மகா ஞானியான கஹோளரின் தவப் புதல்வருமான அஷ்டாவக்ரரா இவர்!’- நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

”தங்களது அபார மேதாவிலாசத்தைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுவரை தங்களை தரிசிக்காததால் தவறு நேர்ந்து விட்டது; மன்னியுங்கள்!” என்று வேண்டி நின்ற மன்னரின் கண்களில் நீர்!

அவரை, ஆதரவுடன் ஆரத் தழுவிக் கொண்ட அஷ்டாவக்ரர் கூறினார்: ”மன்னா, இதுதான் ஆத்ம ஞானம். உங்கள் மனதில் இருந்த குழப்பம் நீங்கி இப்போது தெளிவு ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலர், கண்களால் காண்பதை, ஆத்மாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறார்கள்.

மன்னா! நீங்கள் காண்பதே உங்களுக்கு அறிவூட்டு கிறது. அந்த அறிவே அனுபவம் மூலமாக… ஆத்மாவை, தன்னுள் இருக்கும் நித்திய தத்துவத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே, கண்களால் அறிவு பெறுங்கள்; அறிவால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!”

இந்த போதனை, மன்னருக்கு உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ச்சினாற் போல் இருந்தது. அவர், குழப்பம் நீங்கி, ஞானம் பெற்றவராக அஷ்டாவக்ரரை வணங்கி விடைபெற்றார்.

Friday, June 20, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 31

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 31

ஊர்ப்பாசம் யாருக்குத்தான் இல்லை? பிறந்த ஊரின் பெயரைச் சொன்னாலே மகிழ்ந்து போகிறவர்கள்தானே நாம்? வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ பிறந்த ஊர் மண்ணில் கால் வைத்ததும், ஒரு கணம் நம் உடம்பு சிலிர்ப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம் தானே!

'எங்க ஊரு மாதிரி வருமா? எங்க ஊரு தண்ணியோட சுவையும், நதியோட அழகும் காணக் கிடைக்காதது’ என்று ஊர்ப் பெருமை பேசுகிறவர்கள் அதிகம் உலவுகிற பூமி இது!

ஊர்க்காரர்கள் எவரையேனும் எங்கேனும் பார்த்தால், 'ஏங்க... நம்மூர்ல மழை உண்டுங்களா?' என்று விசாரிப்போம். 'காடு கண்மாயெல்லாம் நிறைஞ்சிருக்கா?' என்று அக்கறையுடன் கேள்வி கேட்போம். அப்படிக் கேட்கிறபோதே நம் முகமும் மனமும் பிரகாசமாகிவிடும்!

ஊர்ப்பாசம் என்பது நமக்கு மட்டும்தானா? கண்ணனுக்கும் உண்டு. பிறந்தவுடனேயே கோகுலத்துக்குச் சென்றுவிட்ட கண்ண பரமாத்மா, தன் பத்தாவது வயதில் மீண்டும் மதுராவுக்கு வந்தார். அக்ரூரர்தான் ஸ்ரீகண்ணனை தேரில் அழைத்து வந்தார். மதுராவை நெருங்கியதும் தேரை நிறுத்திய அக்ரூரர், ''கண்ணா... உன் ஊர் வந்துவிட்டது. நீ பிறந்த பூமியின் மீது உன் திருவடிகள் படட்டும். நடந்து வாயேன், கண்ணா!'' என்றார். மதுரா நகரில் காலடி எடுத்து வைத்தார் கண்ண பரமாத்மா. ஒவ்வொரு அடியையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எடுத்து வைத்தார். அந்த ஊரின் பெரிய தெருக்களில் நடந்தார். சிறிய சந்துகள் போன்ற குறுகலான தெருக்களுக்கும் சென்றார். ஒவ்வொரு தெருவையும், அதில் உள்ள வீடுகளையும் பார்த்துக்கொண்டே வந்தவர், 'அடடா... அலங்கரித்துக் கொள்ளாமலே வந்துவிட்டோமே!' என்று ஒரு கணம் யோசித்தார். உடனே, அந்தக் குறுகிய தெருவில் இருந்த துணி துவைப்பவரின் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் துவைக்கப்பட்ட ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு, மீண்டும் தெருக்களில் இறங்கி நடந்தார். அவர் நடையில் பெருமிதம் தெரிந்தது. கண்களில் பரவசம் மின்னியது. ஒரு சிறிய குடிசை வீட்டினுள் நுழைந்தார் கிருஷ்ணன்.

அது மாலாகாரகரின் வீடு. பூக்களையெல்லாம் பறித்து, மாலையாகத் தொடுப்பவரின் இல்லம். 'நான் கிருஷ்ணன் வந்திருக்கேன். எனக்கு ஒரு பூமாலை தருவீர்களா?' என்று ஸ்ரீகிருஷ்ணன் கேட்க... அந்த மனிதர் நெக்குருகிப் போனார். 'கண்ணா... கண்ணா..!' என்று அவரைச் சுற்றி வந்து நமஸ்கரித்தார். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கைகூப்பி வணங்கி, பின்பு கண்மூடியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். 'இந்த ஊரில் எத்தனையோ பெரிய தெருக்கள் இருக்கின்றன. அந்தத் தெருக்களில் எத்தனையே பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களது இல்லங்களுக்குச் செல்லாமல், இந்தச் சிறியவனின் எளிய குடிசைக்கு வந்து, உரிமையாக பூமாலை கேட்கிறாயே... இதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ..!' என்று நெகிழ்ந்து, நெக்குருகி கண்ணபிரானையே பார்த்தார்.

கூடைகூடையாகப் பூக்களை எடுத்து வந்து, ஸ்ரீகிருஷ்ணரின் சிரசில் அப்படியே சொரிந்தார். இரண்டு கைகளாலும் பூக்களை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்களில் வைத்து, பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். கண்களில் நீர் வழிய, கிருஷ்ணருக்கு அழகியதொரு பூமாலை சூட்டி மகிழ்ந்தார். ஸ்ரீகிருஷ்ணரும் இதில் மிக மகிழ்ந்து போனார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள இந்த அற்புதமான விஷயத்தை அடுத்தடுத்த யுகங்களிலும் எல்லோரும் சொல்லிப் பூரித்துப் போனார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தாம் நிகழ்த்திய ஓர் உபந்யாசத்தில் இந்த விஷயங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அந்த உபந்யாசகர் விவரிக்க... அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 'இது எனக்கும் நடக்குமா? என் கைகளால் நான் கட்டிய மாலைகளை ஸ்ரீகிருஷ்ணர் ஏற்றுக்கொள்வாரா? என் வீட்டுக்கும் அவர் வருவாரா?' என்று ஏங்கித் தவித்தனர்.

வேறு எவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய நந்தவனத்தில் இருந்த பூக்கள் யாவும் திருமாலுக்கு மாலை ஆகின. அவர்... பெரியாழ்வார். துளசிச் செடிகளுக்கு மத்தியிலே அவதரித்தவள் கோதை எனும் ஆண்டாள். ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்குக் கிடைத்த பாக்கியம்... அந்தப் பரம்பொருளுக்கே மாமனார் ஆனது!

இறைவன் இந்த உலகுக்கு ராமபிரானாக அவதரித்து வந்ததற்குக் காரணம் ராவணனை அழிப்பது என்றும், கிருஷ்ண பரமாத்மாவாக வந்தது கம்சனை அழிப்பதற்கு என்றும் பலரும் சொல்வார்கள். உண்மையில், இந்த அகண்ட உலகில் ராவணனும் கம்சனும் மிகச் சிறிய துகள்; சின்னஞ் சிறிய கொசுக்கள்! இவர்களை இருந்த இடத்தில் இருந்தபடியே பகவானால் அழித்திருக்கமுடியும். ஆனால், உலகத்தில் உள்ள அடியவர்களை, சாதுக்களை ரட்சிப்பதற்காகவே, அவர்களுக்கு சேவை சாதிப்பதற்காகவே இங்கே இறைவன் அவதரித்தார். தன் தேஜஸ் மூலம் அனைவருக்கும் அருள் வழங்குவதே அவர் நோக்கம்!

இதனால் அவருக்கு தேஜோப்ருஷ: எனும் திருநாமம் அமைந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தேஜஸால் அவரின் அடியவர்கள் அனைவரும் அருளைப் பெற்றனர் என்பதுதான் நாம் அறிந்ததாயிற்றே! ஒவ்வொரு தருணத்திலும் அந்தக் கண்ணபிரான் நமக்காக, நம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தன் தேஜஸ் முழுவதையும் கொண்டு நமக்குச் சேவை சாதிக்கிறார்.

வானில் உள்ள நட்சத்திரங்களையும், கடலின் அலைகளையும் எப்படி எண்ண முடியாதோ, அதுபோல் கண்ணபிரானைச் சுற்றிலும் உள்ள ஆநிரைகளின் எண்ணிக்கையையும் எண்ணமுடியாதாம். பசுவும் கன்றுமாக ஆயிரக்கணக்கில் சூழ்ந்திருக்க, அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வான் ஸ்ரீகிருஷ்ணன். அவனுடன் ஆயிரக்கணக்கான பசுக்கள் மட்டுமா வரும்? நண்டும்சிண்டுமாகக் குழந்தைகளும் குதூகலமாக வருவார்கள்.

ஒருநாள்... வழியில் அகாசுரன் என்பவன் படுத்துக் கிடந்தான். கம்சன் ஏவிவிட்ட ஆள் இவன். மலைப்பாம்பு போல் மிகப் பிரமாண்டமாக வாயைத் திறந்தபடி படுத்துக் கிடந்தவனைப் பார்த்துக் குழந்தைகள் அதிர்ந்து போகவில்லை. இன்றைக்குப் பொருட்காட்சிகள், ஷாப்பிங் மால்கள் என ஏகமாக வந்துவிட்டன. அங்கெல்லாம் ஒரு பிரமாண்ட உருவத்தில் டைனோசர் அல்லது ராட்சச பொம்மை ஒன்று வாய் பிளந்து நிற்கும். அதன் வாயில் நுழைந்து வாலின் வழியே வெளியே வரலாம். குழந்தைகள் அதைப் பார்த்துக் குதூகலிப்பார்களே தவிர, பயப்பட மாட்டார்கள்.

ஆனால், அன்றைக்கு இப்படியெல்லாம் இல்லை என்றாலும், அந்தக் குழந்தைகள் அந்த அசுரனைப் பார்த்துப் பயப்பட வில்லை. ஏனென்றால், அருகில் எது வந்தாலும் காத்தருளுவதற்குத்தான் கண்ணபிரான் இருக்கிறானே!

ஆமாம்... கண்ணன் இருக்க, கவலையும் பயமும் எதற்கு?

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்.

கிருஷ்ண ஆட்டம்!

குருவாயூர் கோயிலில் தினமும் ராத்திரி பத்து மணிக்கு ‘கிருஷ்ணஆட்டம்’ களி என்று ஒரு கலை நடந்துவருகிறது. கதகளி, மோஹினியாட்டம் போல் இதுவும் பிரபலமான கதை நாட்டியம். 

இதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம்,
காளியமர்த்தனம்,
ராஸக்ரீடை,
கம்ஸவதம், 
ஸ்வயம்வரம் 
என்று எட்டுநாள் கதகளி ஆடி அவதரிப்பார்கள். பக்தர்கள் பணம் கட்டி நடத்தினால், அவர்களது வேண்டுதல்கள் நிச்சயமாகப் பலிக்கும். குருவாயூரில் இது பிரபலமான நேர்ச்சையாகும்.

ஸ்ரீகிருஷ்ணாவதாரம்:- சந்தான சௌபாக்கியம், பாலாரிஷ்டம் நிவாரணம், பாலபயம், பாலகேஷமம்

காளியமர்த்தனம்:- விஷபாதசமனம், சத்ருநாசம், ஸர்ப்பதோஷம் பரிகாரம், ரோகசமனம்

ராஸக்ரீடை:- கன்யகாகேஷமம், ஐஸ்வர்யம், ப்ரணயவிரஹம்.

கம்ஸவதம்:- சத்ருநாசம், பூர்விக சம்பத்து ஸ்தானம், கோர்ட்விவகாரம், கீர்த்தி தனலாபம்.

ஸ்வயம்வரம்:- மாங்கல்யபாக்கியம், கல்யாணத்தடை, தாம்பத்திய சௌக்கியம், வித்யாவிஜயம், அபவாத பரிகாரம்

பாணயுத்தம்:- கர்மவிஜயம், கார்யலாபம், சைவ-வைணவ ப்ரீதி, பிரேம ஸாபல்யம்

விவிதவதம்:- விவசாயம், நிலபுலன் மேம் பாடு, பீதிநாசம், செல்வம்

ஸ்வர்க்ககாரோஹணம்:- சந்தானதோஷ பரிகாரம், மரணபயம், ஆத்ம சுகம், மோட் சப்ராப்தி, விரஹதுக்கம், கஷ்ட நிவர்த்தி.

குருவாயூர் கோயிலில் இந்தக் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் ஒரு கதைக்கு ரூபாய் 2000/- ஆகும். குருவாயூரப்பனுக்கு இது ரொம்பப் பிடித்த கலையாகும். 

குருவாயூரப்பனைக் குழந்தையாகப் பல தடவை நேரில் பார்த்துப் பேசியவர் ஸ்ரீ வில்வ மங்கலம் ஸ்வாமி. அவரது அனுக்கிரஹத்தால் கிருஷ்ண பக்தனான கோழிக்கோடு ராஜாவான மானவேதனுக்கு ஒருநாள் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அப்போது ராஜா தன்னையே மறந்து பகவானை அப்படியே கட்டிப் பிடித்துக்கொள்ள, பகவான் திருமுடியிலிருந்து ஒரு மயில் பீலி உதிர்ந்து விழுந்தது. 

ராஜா அதையே மூலமாகக் கொண்டு தான் கிருஷ்ணன் பிறப்பிலிருந்து, சுவர்க்கம் சென்றதுவரை, எல்லா லீலைகளையும் ‘கிருஷ்ண கீதி’ என்று வடமொழிக் காவியமாக்கி ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சமர்ப்பித்தார். அதுதான் ‘கிருஷ்ண ஆட்டம் களி’ என்று பிரபலமானதாக ஐதிகம்.

குருவாயூரப்பன் இன்றும் கிருஷ்ணஆட்டம் பார்க்க வருகிறார் என்று சொல்கிறார்கள்

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்.

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்.

கிருஷ்ண ஆட்டம்!

குருவாயூர் கோயிலில் தினமும் ராத்திரி பத்து மணிக்கு ‘கிருஷ்ணஆட்டம்’ களி என்று ஒரு கலை நடந்துவருகிறது. கதகளி, மோஹினியாட்டம் போல் இதுவும் பிரபலமான கதை நாட்டியம். 

இதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம்,
காளியமர்த்தனம்,
ராஸக்ரீடை,
கம்ஸவதம், 
ஸ்வயம்வரம் 
என்று எட்டுநாள் கதகளி ஆடி அவதரிப்பார்கள். பக்தர்கள் பணம் கட்டி நடத்தினால், அவர்களது வேண்டுதல்கள் நிச்சயமாகப் பலிக்கும். குருவாயூரில் இது பிரபலமான நேர்ச்சையாகும்.

ஸ்ரீகிருஷ்ணாவதாரம்:- சந்தான சௌபாக்கியம், பாலாரிஷ்டம் நிவாரணம், பாலபயம், பாலகேஷமம்

காளியமர்த்தனம்:- விஷபாதசமனம், சத்ருநாசம், ஸர்ப்பதோஷம் பரிகாரம், ரோகசமனம்

ராஸக்ரீடை:- கன்யகாகேஷமம், ஐஸ்வர்யம், ப்ரணயவிரஹம்.

கம்ஸவதம்:- சத்ருநாசம், பூர்விக சம்பத்து ஸ்தானம், கோர்ட்விவகாரம், கீர்த்தி தனலாபம்.

ஸ்வயம்வரம்:- மாங்கல்யபாக்கியம், கல்யாணத்தடை, தாம்பத்திய சௌக்கியம், வித்யாவிஜயம், அபவாத பரிகாரம்

பாணயுத்தம்:- கர்மவிஜயம், கார்யலாபம், சைவ-வைணவ ப்ரீதி, பிரேம ஸாபல்யம்

விவிதவதம்:- விவசாயம், நிலபுலன் மேம் பாடு, பீதிநாசம், செல்வம்

ஸ்வர்க்ககாரோஹணம்:- சந்தானதோஷ பரிகாரம், மரணபயம், ஆத்ம சுகம், மோட் சப்ராப்தி, விரஹதுக்கம், கஷ்ட நிவர்த்தி.

குருவாயூர் கோயிலில் இந்தக் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் ஒரு கதைக்கு ரூபாய் 2000/- ஆகும். குருவாயூரப்பனுக்கு இது ரொம்பப் பிடித்த கலையாகும். 

குருவாயூரப்பனைக் குழந்தையாகப் பல தடவை நேரில் பார்த்துப் பேசியவர் ஸ்ரீ வில்வ மங்கலம் ஸ்வாமி. அவரது அனுக்கிரஹத்தால் கிருஷ்ண பக்தனான கோழிக்கோடு ராஜாவான மானவேதனுக்கு ஒருநாள் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அப்போது ராஜா தன்னையே மறந்து பகவானை அப்படியே கட்டிப் பிடித்துக்கொள்ள, பகவான் திருமுடியிலிருந்து ஒரு மயில் பீலி உதிர்ந்து விழுந்தது. 

ராஜா அதையே மூலமாகக் கொண்டு தான் கிருஷ்ணன் பிறப்பிலிருந்து, சுவர்க்கம் சென்றதுவரை, எல்லா லீலைகளையும் ‘கிருஷ்ண கீதி’ என்று வடமொழிக் காவியமாக்கி ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சமர்ப்பித்தார். அதுதான் ‘கிருஷ்ண ஆட்டம் களி’ என்று பிரபலமானதாக ஐதிகம்.

குருவாயூரப்பன் இன்றும் கிருஷ்ணஆட்டம் பார்க்க வருகிறார் என்று சொல்கிறார்கள்.

 

ஆபத்துகளை வரமாகக் கேட்ட பக்தை!

ஆபத்துகளை வரமாகக் கேட்ட பக்தை!

நாம் கடவுளை வேண்டும்போது, பொன் - பொருள் வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் எனப் போன்ற வேண்டுதல்களைத்தானே முன்வைப்போம்? ஆனால் ஒரு பக்தை, தனக்கு நிறைய ஆபத்துகள் வர வேண்டும் எனப் பிரார்த்தித்தாளாம்!

ஏன் அப்படி? பேராபத்துகள் சூழும்போது, தன்னிடம் பிரியமுள்ள பகவான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்; தன்னை ரட்சிக்க நேரில் வருவார். அப்போது அவரைத் தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிடைக்கும் என்பதாலேயே அப்படி வரம் கேட்டாளாம் அந்த பக்தை.

அவள் யார் தெரியுமா? பாண்டவர்களின் அன்னையான குந்திதேவி. அவள்தான் கண்ணபரமாத்மாவிடம் இப்படியரு பிரார்த்தனையை முன்வைத்தாள் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். இந்த ஞானநூலின் முதல் ஸ்கந்தம், 8-வது அத்தியாயத்தில், குந்திதேவி செய்த ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் உள்ளது. அற்புதமான அந்த ஸ்தோத்திரத்தில் ஒன்று இங்கே உங்களுக்காக...

நமஸ்யே புருஷம் த்வாத்யமீஸ்வரம் ப்ரக்ருதே: பரம்
அலக்ஷ்யம் ஸர்வபூதானாமந்தர்பஹிரவஸ்திதம்

கருத்து: ஆதிபுருஷனும் ஈச்வரனும் மாயையை விட்டு விலகினவரும் எல்லா ஜீவன்களுக்கும் உள்ளும் புறமும் இருக்கிறவரும்... அப்படி வியாபித்திருந்தாலும் கண்டறிய முடியாதவருமான உம்மை நமஸ்கரிக்கிறேன்.

இதைப் படித்து ஸ்ரீகிருஷ்ணனை வழிபட, சர்வ மங்கலங்களும் உண்டாகும்

அனுமன் செய்த தியாகம்! தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அனுமன் செய்த தியாகம்! தெரிந்த புராணம்... தெரியாத கதை!

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரக்ஷிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.

'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. 'கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்’ என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.

அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகையைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் 'ஹனுமத் ராமாயணம்’ என்பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஹனுமத் ராமாயணம் தோன்றிய காவிய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வோம்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.

அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ''ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது!'' என்றார்.

அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. 'எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

''ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' என்று அமைதியுடன் கூறினார்.

அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார். ''ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்'' என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.

அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவிய வரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.

சீதாபிராட்டியால் சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.

கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, 'அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.

அனுமனை உபாஸித்து அருள் பெற, 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.

அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

குழந்தை பாக்கியத்துக்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

குழந்தை பாக்கியத்துக்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் ஓடிப்போச்சு. இன்னும் வயித்துல ஒரு புழு-புச்சி தங்கலையே... அந்த சாமி கண்ண திறக்க மாட்டேங்குதே’

'கோடி கோடியா சொத்து இருந்து என்ன பிரயோசனம்? வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேண்டாமா?’

- இப்படி, குழந்தை இல்லாத குறையால் மருகித் தவிக்கும் குடும்பங்கள் நிறைய. பொண்ணும் மாப்பிள்ளையுமாக வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்கள் கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இருக்காது. சம்பாதித்ததை சந்தோஷமாக அனுபவிக்கும் கொடுப்பினை இல்லாமல் தவிப்பார்கள். இன்னும் சில தம்பதிகள் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்போது பிள்ளைக்கனி வாய்க்காமல் போகும் சம்பவங்களும் உண்டு.

இப்படி, குழந்தை இல்லாமல் மருகும் நிலை ஏற்படுவது ஏன்? சந்ததி இல்லாமல் சங்கடப் படும் நிலைக்கு, ஜாதகத்தில் என்னென்ன குறைபாடுகள் காரணமாகின்றன? அந்தக் குறைகளைக் களைவதற்கு என்ன வழி?

அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றொரு கருத்து சொல்லப்படுகிறது. அதேபோன்று பெண்களுக்கு கருப்பையில் முட்டை வளர்ச்சி தடைப்படும்போது கரு தங்காமல் போய்விடுகிறது. இதற்கான காரணத்தை அறிய அவர்களின் சிலேஷ்டும நாடித்துடிப்பை அறிய வேண்டும். 56 நாடிகள் ஓடினால், கரு தங்கும். குறைந்தால் அதற்குத் தகுந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு உயிரணுக்களின் கவுன்ட்டிங் அதாவது எண்ணிக்கை '74 ஜீவ அணுக்கள்’ என்று இருக்க வேண்டும். குறைந்தால் குழந்தை பாக்கியம் தடைப்பட வாய்ப்பு உண்டு.

மிக முக்கியமாக... குழந்தையின்மைக்கு உணவும் சூழலும்கூட காரணமாகின்றன.

எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் என்பது கண்டிப்பாக உண்டு. திருமணமாகி 15 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து, தகுந்த பரிகார வழிபாடுகளை நம்பிக்கையுடன் செய்து வந்தால், விரைவில் பிள்ளைக்கனி வாய்க்கும்.

பிள்ளை பாக்கியம் தடையாகும் ஜாதக அமைப்புகள்...

* லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்து 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால், காலதாமதம் ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* 5-ஆம் பாவாதிபதி 3-ல் இருக்க... சந்திரனும், 4-ஆம் பாவாதி பதியும் 6-ல் இருந்தால் தாயாரின் சாப தோஷத்தால் குழந்தை பிறக்காது தடை ஏற்படலாம்.

* லக்னத்துக்கு ஒன்றில் குரு அமர்ந்து, குருவுக்கு ஒன்பதில் சுக்கிரனும், லக்னாதிபதியும் இருந்தால் 40 வயதுக்கு மேல் குழந்தை பாக்கியம் ஏற்படலாம்.

* லக்னாதிபதி, 5-ஆம் பாவாதிபதி, 7-ஆம் பாவாதிபதி, வாரிசுக்கு உரியவரான குரு ஆகிய நால்வரும் வலிமை இல்லாதிருந்தால், வாரிசு பிறக்க தடை உண்டாகும்.

* 5-ஆம் பாவத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திட, லக்னாதிபதி புதன் வீட்டில் இருந்து புதனின் பார்வையோ அல்லது சேர்க்கையோ ஏற்பட்டால், அந்த ஜாதகன் புத்திரன் இல்லாமல் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்.

* 5-ஆம் பாவத்தில் ராகு அமர்ந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால், சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, பிறக்கும்போது குழந்தை இறந்துபோய்விட வாய்ப்பு உண்டு.

* 7-க்கு உடையவன் 11-ல் அமர்ந்து, 5-க்கு உடையவன் சுபரின் இணைப்பு பெற்றிருக்க... செவ்வாயும் சனியும் 5-ல் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தத்து புத்திர யோகம் உண்டாகும் என்று பராசர ஹோராவின் விதிகள் சொல்கின்றன.

* பொதுவாக 5-ஆம் இடமே புத்திரஸ்தானம், லக்ஷ்மி ஸ்தானம் எனப்படுகிறது. 5-ஆம் இடத்துக்கு உரிய கிரகமானது 12, 8, 6-ஆம் இடங்களில் பாவரால் சூழப்பட்டால், 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக பிள்ளைப்பேறு வாய்க்கும். இப்படியான கிரக அமைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு வாரிசு இல்லையே என்று முடிவு கட்டிவிடக் கூடாது.

ஜாதக ரீதியான இந்த காரணங்களைத் தவிர, வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

* வீட்டில் பித்ருக்கள் வழிபாடு முறையாக நடைபெற வேண்டும்.

* கோயில், மடங்கள், குரு பீடங்கள் ஆகியவற்றின் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, வாரிசுத் தடை உண்டாகும்.

* திருமணம் ஆகாமலேயே கன்னி ஒருத்தி இறந்திருந்து, அந்த கன்னிக்கு உரிய பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் வாரிசு தடை ஏற்படும்.

* ஊரில் உள்ள அரசு, ஆல மரம் மற்றுமுள்ள தலவிருட்சங்களை உங்கள் வீட்டுப் பெரியவர்கள் எவரேனும் வெட்டியிருந்தால், பேரன் பிறக்காத நிலை உருவாகலாம். இதற்கு முறையான விருட்ச பரிகார பூஜை செய்ய வேண்டும்.

* கெமிக்கல் கலப்பில்லாத உணவுப் பழக்கமும், மன அமைதியும் விரைவில் குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத்தரும்.

சரி! இனி மேற்கண்ட குறைகளைக் களைந்து பிள்ளைப் பாக்கியம் பெறுவதற்கான வழிபாட்டை அறிவோம்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் நிறைந்த, அவர் வாசம் செய்கின்ற புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பதாலும், அதன் இலையை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

சுக்கில சதுர்த்தி, பௌர்ணமி தினங்களில் சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து ஆல், அரசு, புரசம் சமித்துக் களால் ஹோமம் செய்து, அவரவர் குல சம்பிரதாயப்படி வழிபட புத்திரத் தடை நீங்கும்.

வம்ச விருத்தி பூஜை

பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.

அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!

- வழிபடுவோம்...

வம்ச கவசம்!

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு.

மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு.

அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்… ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா குற்றவாளி?’

‘‘மன்னா! இந்த அந்தணர்கள், என் தாத்தாவை அடித்துத் துன்புறுத்தியதால், அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். முதியவரான அவர் இந்த நிலையில் அரச சபைக்கு வர முடியவில்லை. எனவே, அவர் பேரனாகிய நான் இதற்கு நீதி கேட்டு வந்துள் ளேன்!’’ என்று மிடுக்காகப் பேசினான் சிறுவன்.

மன்னர் முகத்தில் வியப்பு. ‘‘குழந்தாய், நீயும் உன் தாத்தாவும் சேர்ந்து, இந்த அந்தணர்களை அடித்துத் துன்புறுத்தியதாக அல்லவா புகார் வந்துள்ளது?’’ என்று மன்னன் கேட்டான்.

‘‘மன்னா, பொய்! நடந்தது இதுதான். இன்று காலையில் செல்வந்தர் ஒருவரது வீட்டில் நடந்த சமாராதனைக்குப் பின் உணவருந்த தாத்தா மற்றும் சகோதர& சகோதரிகளுடன் நானும் பந்தியில் அமர்ந்தேன். அப்போது இந்த அந்தணர்கள் எங்களை அடித்துத் துன்புறுத்தினர். தாத்தா மயங்கிக் கீழே விழுந்தார். எங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக நான் தடியால் இவர்களைத் தாக்கி னேன்!’’

மன்னன், ‘‘அந்தணர்களே… இவன் சொல்வது உண்மையா? சாப்பிட அமர்ந்தவர்களைத் துன்புறுத் தியது மாபெரும் குற்றம் அல்லவா?’’ என்று கேட் டான்.

‘‘மன்னா! அவர்களை அடித்தது உண்மைதான். இவர்கள் சமபந்தி போஜனத்துக்குத் தகுதியற்றவர்கள்! இவன் தந்தை விடோபா, துறவறம் பூண்டவன். துறவிக் கோலத்தில் ஆசாரம் கெட்டுப் பலரது வீட்டிலும் உணவு உண்டவன். அதனாலேயேதான் பந்தியிலிருந்து அவர்களை வெளியேற்றினோம்!’’

சிறுவன் துடித்துப் போனான். ‘‘மன்னா, இவர்கள் வேதத்தின் பொருள் புரியாமல் பேசுகிறார்கள்! ‘பவதி பிக்ஷ£ம்தேஹி’ என்று உஞ்சவிருத்தி எடுத்து உண்ணும் ஒரு சந்நியாசியைப் பந்தியில் அமர வைத்து, அவருடன் உணவு உண்பது உத்தமம் என்கிறது வேதம். என் தந்தை ஒரு பிரம்ம ஞானி! ஸ்ரீபாத சுவாமிகளிடம் தீட்சை பெற்ற அவர், பின்னர் அவரது ஆணைப்படி இல்லறம் மேற்கொண்டார். ஞானியான அவரை இல்லற வாழ்வு மாற்றி விடுமா என்ன? சந்நியாசி, சம்சாரி ஆகக் கூடாது என்று எந்த வேதத்தில் சொல்லி இருக்கிறது?

பல ஆண்டுகள் சந்நியாசியாகத் திரிந்த கும்பயோகீசர் அரசகுமாரியை மணம் புரியவில்லையா? கலைக்கோட்டு முனிவர் துறவறத்தைத் துறந்து மணம் புரியவில்லையா? வசிஷ்டர், அருந்ததியை மணம் புரியவில்லையா? மச்சகந்தி வயிற்றில் வியாசர் பிறக்கவில்லையா? பிறப்பு, உயர்வு தருமா… ஞானம், உயர்வு தருமா? கூறுங்கள் பெரி யோர்களே!’’ _ பளிச் பளிச்சென்ற சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு மெய்ம்மறந்தனர் மன்ன னும் அவையோரும்.

‘‘குழந்தாய், உன் வார்த்தைகள் நியாயமே! அந்தணர்களே, உண்ண உட்கார்ந்தவர்களை எழுப்புவது பாவம். அதர்மம். அமைச்சரே! இவர்களை உடனே வெளியேற்றுங்கள்!’’ என்று ஆணையிட்ட மன்னன், சிறுவனை வாஞ்சையுடன் வாரியணைத்தான்.

துணிச்சலும் ஞானமும் மிக்க அந்தச் சிறுவனே, பின்னாளில் ஸ்ரீஞானேஸ்வரர் என்ற மகானாகப் போற்றப்பட்டவர்! அவரையும், அவரது நூலான ஞானேஸ்வரியைப் பற்றியும் அறியாதோர் மகாராஷ்டிர மாநிலத்தில் இல்லை! பத்தாயிரம் குறட்பாக்கள் கொண்ட இந்த நூல், பகவத் கீதையை ஒட்டி எழுதப்பட்டது. இது தவிர, 28 அபங்கங்கள் கொண்ட ஹரிபாட் எனும் ஞான நூலையும், அம்குதானுபவ எனும் அத்வைத சித்தாந்த காவியத்தையும் அவர் எழுதியுள்ளார்.

பூவுலகில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாக அவதரித்த இந்த மகான், மக்களிடையே பக்தி& ஞான& கர்ம மார்க்கங்களை போதித்தார். பட்டினத் தடிகளைப் போலவே இவரும் தியான நிலையில் மகா சமாதி அடைந்தார்.

பூனா நகருக்கு அருகில் ‘தேவானா ஆனந்தி’ என்ற இடத்தில் இவரது சமாதி அமைந்துள்ளது. மகா ராஷ்டிர மக்கள் இந்தச் சந்நிதியில் திருமணங்கள் மற்றும் உபநயனங்களை ஒரு பிரார்த்தனையாகவே நடத்துகின்றனர்.

கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை நெருங்கி, ‘‘கிருஷ்ணா, உன் முக வாட்டத்துக்கு காரணம் என்ன?’’ என்று கேட்டான்.

துயரம் கவ்விய முகத்துடன் அவனை ஏறிட்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘‘தனஞ்சயா… பராக்கிரமசாலியும், தலைசிறந்த கொடையாளியுமான ஒருவன், இன்று வீழ்ந்து விட்டானே… அதை நினைத்து வருந்துகிறேன்!’’

‘‘ஓ… அந்த கர்ணனைப் பற்றிக் குறிப்பிடு கிறாயா?’’& மேற்கொண்டு பேசப் பிடிக்காதவ னாக முகத்தைத் திருப்பிக் கொண்டான் அர்ஜுனன். அவன் மனத்தைப் படம் பிடித் துக் காட்டியது போல் பேசத் துவங்கினார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா: ‘‘தனஞ்சயா… நான் அளவுக்கு அதிகமாக கர்ணனைப் புகழ்வதாக நீ நினைக்கிறாய். அது தவறு. இப்போதே கிளம்பு. போர்க்களத்துக்குப் போகலாம்!’’

‘‘என்ன, போர்க்களத்துக்கா? இப்போது எதற்கு?’’

‘‘கர்ணன் இன்னும் இறக்கவில்லை. போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது அர்ஜுனா! இந்த இக்கட்டான சூழலிலும்கூட அவனது கொடைத் தன் மையின் சிறப்பைக் காணலாம்! அதற்காகவே உன்னை அழைத்தேன்.’’

அர்ஜுனன் சம்மதித்தான். இருவரும் கிளம்பினர்.

யுத்த பூமி. பிணங்களும் எலும்புகளும் அம்புத் துண்டுகளும் நாற்புறங்களிலும் சிதறிக் கிடக்க… எங்கு பார்த்தாலும் மாமிசமும் உதிரமும் கலந்த சேறு. குற்றுயிரும், குலையுயிருமாக ஆங்காங்கே சிலர் வேதனையுடன் விழுந்து கிடக்க… பிணம் தின்னும் நரிகளின் ஆட்சி, அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘‘அர்ஜுனா, நீ இங்கேயே நில்! நான் மட்டும் செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே நடப்பதை கவனி!’’

அர்ஜுனனுக்கு ஆணை பிறப்பித்துவிட்டு, தான் ஒரு வயோதிக அந்தணர் வேடமிட்டுக் கொண்ட கிருஷ்ண பரமாத்மா, சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டவாறே உரத்த குரலில், ‘‘ஏ கர்ணா…. கொடை யாளி கர்ணா! எங்கே இருக்கிறாய்?’’ என்றவாறு கையில் ஊன்றுகோலைத் தாங்கி, தள்ளாடியவாறு நடந்து சென்றார். கண்கள் செருக, வாயினின்று குருதி பெருக்கெடுத்து வழிந்தோட… உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சதைப் பிண்டமாகத் தரையில் மூர்ச்சித்துக் கிடந்த கர்ணன், குரல் வந்த திசை நோக்கி பலவீனமான குரலில், ‘‘சகோதரா…. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்? தங்களின் குரலை மட்டுமே என்னால் கேட்க முடிகிறது!’’ என்று பதைபதைத்த கர்ணனின் முன்பாக புன்னகையுடன் நின்றார் அந்தணர் வடிவிலிருந்த கண்ணன்.

‘‘அழைத்தது நான்தான் கர்ணா. மிகுந்த நம்பிக்கையுடன் உன்னை நாடி வந்துள்ளேன்!’’

‘‘என்னவென்று கூறுங்கள் பெரியவரே!’’ ஈனசுரத்தில் முணுமுணுத்தான் கர்ணன்.

‘‘கர்ணா, உன்னைப் பற்றி நான் நன்கு அறிவேன். எந்தச் சூழ்நிலையிலும் உன் நாவிலிருந்து ‘இல்லை’ என்ற சொல் வந்தது கிடையாது! ஆகவேதான் உன்னை நாடி வந்தேன். இப்போது எனக்கு இரண்டு கடுகளவு தங்கம் வேண்டும்… அவ்வளவே!’’


அவரது வார்த்தைகள் கேட்டு தர்மசங்கடமாகப் புன்னகைத்தான் கர்ணன். ‘‘பெரியவரே! இரண்டு கடுகளவு என்ன… வேண்டிய அளவுக்குப் பொன்னும் பொருளும் பெற்றுச் செல்லலாம். ஆனால்…’’ _ கர்ணனின் குரலில் லேசான தயக்கம்.

மறு கணம் அவனை எரித்து விடுவது போன்று ஏறிட்டார் அந்தணர். ‘‘கர்ணா… என்ன தயக்கம்?’’

‘‘கோபம் வேண்டாம் பெரியவரே! நான் கூறுவதைச் சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள். நீங்கள் இக் கணமே எனது இல்லத்துக்குச் சென்று, என் மனைவியிடம் கேட்டு பொன்னையும் பொருளையும் பெற்றுச் செல்லுங்கள்!’’

உடனே அந்தணரின் முகம் கோபத்தில் சிவந்தது. ‘‘என்ன… உனது இல்லத்துக்குச் செல்வதா? இதோ பார் கர்ணா! கொடுக்க விருப்பமில்லையென்றால் இல்லை என்று சொல். எதற்காக என்னை அலைக் கழிக்கிறாய்?’’

அந்தணரது வார்த்தைகள் கேட்டுப் புழுவாகத் துடித்தான் கர்ணன். ‘‘அபசாரம்… அபசாரம்! என்ன வார்த்தை கூறி விட்டீர். உங்களுக்கு இப்போது தங்கம் தானே வேண்டும்… இதோ, இக்கணமே தருகிறேன். என் பற்களில் சிறிது தங்கம் வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்!’’

பரபரத்த கர்ணனை வெறுப்புடன் ஏறிட்டார் அந்தணர். ‘‘என்ன தைரியம் உனக்கு! ஓர் அந்தணனி டம் போய், மனிதனின் பல்லைப் பிடுங்கிக் கொள் என்கிறாய். வெட்கமாக இல்லை உனக்கு?’’

கர்ணனுக்கு தர்மசங்கடமான நிலைமை. எதுவும் தோன்றாமல் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டவனின் கண்களில் ஒரு சிறு கல் தென்பட்டது. அவன் மூளையில் ‘பளிச்’ சென்று ஒரு மின்னல். தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தைச் செயல்படுத்தும் விதமாக, மிகவும் சிரமப்பட்டுத் தன் உடலை அந்தக் கல் இருக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்று, அதன் மீது பல்லை வைத்து இழுத்தான் கர்ணன். அடுத்த கணம் பற்கள் உடைந்தன. முக்கி முனகியவாறு அந்தத் தங்கப் பற்களைக் கையில் எடுத்துக் கொண்ட கர்ணன், அவரை நோக்கி, ‘‘பெரியவரே! இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றான்.

ஆனால், அந்தணரோ சீறி னார். ‘‘சேச்சே! ரத்தத்தில் தோய்க் கப் பெற்ற, புனிதமற்ற இந்த எலும்பையா பெற்றுக் கொள்ளச் சொல்கிறாய்?’’


பரிதாபமாக ஏறிட்டான் கர் ணன். எப்படியாவது அந்தத் தங் கத்தை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. அதற்குண்டான அடுத்த முயற்சியில் இறங்கினான் அவன். தன் இடுப்பில் செருகப் பட்டிருந்த கத்தியை வெகு சிரமப்பட்டு உருவிய அவன், பின்னர் அதன் உதவியால் பற்களிலிருந்து தங்கத்தை மட்டும் சுரண்டி எடுத்து அவரிடம் நீட்டினான்.

ஆனால், அவரோ கண்கள் சிவக்க கோபத்துடன், ‘‘அக்கிரமம்! ஒருக்காலும் இதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்!’’ என்றார். என்ன செய்வதென்று புரி யாமல் நிலைதடுமாறிய கர்ணனின் கண்களில் சற்றுத் தொலைவிலிருந்த அவனது வில் தென்பட்டது. வெகு சிரமப்பட்டுத் தன் உடலை அதன் அருகே இழுத்துச் சென்று மிகுந்த பிரயாசையுடன் தன் தலையால் அழுத்தி, வில்லில் பாணத்தைப் பொருத்தி வருணாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அதிலிருந்து உண்டான மழையால் அவன் கையிலிருந்த பற்களில் ரத்தம் சுத்தமாக நீங்கப் பெற்று, இப்போது பளிச்சிட, அதைப் பணிவுடன் அவரிடம் நீட்டினான் கர்ணன். ‘‘பெரியவரே! இப்போது பெற்றுக் கொள்வதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையே?’’ _ மூச்சு வாங்கப் பேசினான் கர்ணன்.

வயோதிக அந்தணர் உருவிலிருந்த கிருஷ்ண பர மாத்மா குறுநகை புரிந்து மௌனம் சாதித்தார்.

‘‘பெரியவரே…’’ _ கலங்கிய கண்களுடன் ஏறிட்ட கர்ணனின் எதிரே கிருஷ்ண பரமாத்மா, சங்கு& சக்ர& கதாபாணியாக வெண்பட்டும், நவரத்தின அணிமணி மாலைகளும் பிரகாசிக்க, மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தார். அங்கே வயோதிக அந்தணரைக் காண வில்லை. அனந்தனின் ஆனந்த தரிசனத்தால் பூரித்துப் போன கர்ணனுக்கு, சந்தோஷத்தில் பேச நா எழவில்லை. குழந்தை போல் விம்மி விம்மி அழுதவாறு அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டான். அவனது பக்தியில் பெருமிதம் கொண்ட கிருஷ்ண பரமாத்மா தம் திருக்கரத்தை கர்ணனின் சிரம் மீது வைத்து, ‘‘அன்பனே, உனது கொடைத் தன்மையை மெச்சினோம். வேண்டிய வரங்களைக் கேள்!’’ என்று திருவாய் மலர்ந்தார்.

இப்போது சாவதானமாக பதில ளித்தான் கர்ணன். ‘‘ஹே பிரபோ… பரமதயாளா! மூவுலகுக்கும் அதிபதி யான, பரம கருணா மூர்த்தியான தாங்களே என் உயிர் பிரியும் இந்த வேளையில் இங்கு வந்திருக்கும் போது எனக்கு வேறு என்ன வரம் வேண்டும்!’’

கர்ணனின் உயிர் கண்ணபிரானின் திருவடிகளில் தலையை வைத்தவாறு பிரிந்தது. தொலைவில் நின்று கொண்டிருந்த அர்ஜுனனைத் தன் கருணை ததும்பும் விழிகளால் நோக்கினார் கிருஷ்ண பரமாத்மா. அந்த அர்த்தபுஷ்டியான பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் அர்ஜுனனின் தலை அனிச்சையாகக் குனிந்தது.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 30

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 30

'இவன், நான் தவமா தவமிருந்து பெற்ற பிள்ளை’ என்கிற வசனத்தை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லாதவர்கள், நம் தேசத்தில் மிகக் குறைவுதான். குழந்தை என்பது இங்கே மிகப் பெரிய உன்னதமான வரமாகப் பார்க்கப்படுகிறது. வரம் என்பது தவத்தால் அடையக்கூடியது.

தேடல் இருப்பவர்களே தவம் இருக்க முடியும். அது கடவுள் தேடலாக இருந்துவிட்டால், அந்தத் தவத்தின் பலனைச் சொல்லவே வேண்டாம். அப்படியொரு தவத்தின் பலனாக, வரமாகக் கிடைப்பது காணக் கிடைக்காத ரத்தினமாக, பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!

தசரத மகாராஜா, தனக்கும் தன் தேசத்துக்கும் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டார். புத்திர பாக்கியம் இல்லையே என்கிற சோகத்தைத் தவிர, வேறு எந்தச் சோகமும் அவருக்கு இல்லை. புத்திர பாக்கியம் என்கிற ஒரு சந்தோஷம் இருந்துவிட்டால், வேறு எந்தச் சந்தோஷமும் இந்த உலகில் முக்கியமில்லை.

அப்பேர்ப்பட்ட தசரத மகாராஜா, இறைவனை வேண்டித் தவமிருந்தார். கோயில் கோயிலாக அலைந்து தரிசித்து, மனமுருகப் பிரார்த்தித்தார். குருமார்களின் ஆசியுடனும் அறிவுரையுடனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த தவத்தின் பலனாக, யாகத்தின் பலமாக, கேட்ட வரம் அவருக்குக் கிடைத்தது. சந்தான பாக்கியம் கேட்டவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

இங்கே ராமாயணத்தில் இப்படி என்றால், அங்கே மகாபாரதத்தில் என்ன நிகழ்ந்தது?

'அழகிய மகனைப் பெறுகிற பாக்கியத்தைக் கொடு’ என்று யசோதை வேண்டினாள். நந்தகோபனின் சிந்தனையில் பிள்ளை வரம் தவிர, வேறு எதுவும் இல்லை. இதேபோல், அனவரதமும் வசுதேவன், குழந்தைச் செல்வம் வேண்டும் வேண்டும் என்றே பிரார்த்தித்து வந்தார். மனமுருகி, ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன்... குழந்தை கேட்டு தேவகியும் கண்ணீர்விட்டுப் பிரார்த்தனை செய்தாள்.

நந்தகோபன் - யசோதை, வசுதேவன் - தேவகி ஆகிய நான்கு பேரும் வேறெந்தச் சிந்தனையுமின்றி, 'எனக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்யும் விதமாக குழந்தை வேண்டும்’ என்பதையே வரமாகக் கேட்டனர். அந்த நான்கு பேரின் தவத்தை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார்.

அதாவது, ஒரேயொருவர் மட்டுமே வேண்டிக்கொள்ள, ஸ்ரீராமபிரான் உட்பட நான்கு பேர் பிறந்தார்கள். இங்கே நான்கு பேர் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்க, ஒரேயொரு கிருஷ்ண பகவான் அவதரித்தார். என்ன விளையாட்டு இது?

'சரி, அப்படின்னா... ஒருத்தர் வேண்டிக்கிட்டதுக்காக, நாலு பேர் பிறந்தது உசத்தியா? நாலு பேர் பிரார்த்தனை பண்ணினதுக்காக ஒருத்தர் பிறந்தாரே, அது உசத்தியா?' என்று கேள்வி எழலாம்.

இதில் உசத்தி என்ன, தாழ்த்தி என்ன? இரண்டு பேருமே உசத்திதான்! அதுவொரு விதம், இதுவொரு விதம்! ஒருவர் விரதமிருந்து நான்கு பேர் பிறந்தனர். அங்கே... மூத்தவருக்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீராம ரத்தினம் என்று பெயர் அமைந்தது. அதேபோல் நான்கு பேர் விரதம் மேற்கொண்டு, பிரார்த்தனை அனுஷ்டித்தனர். அந்தக் குழந்தைக்கு, ஸ்ரீகோபால ரத்தினம் எனும் பெயர் அமைந்தது. அவர்... ராமரத்தினம்; இவர்... கோபால ரத்தினம், இரண்டு பேருமே உலகை உய்விக்க வந்தவர்கள்தான்.

ஆக, தவமிருந்து, விரதம் மேற்கொண்டு பிறந்த ஸ்ரீகண்ணபிரானுக்கு 'மேதேஜ:' என்று திருநாமம் அமைந்தது. மேதேஜ என்றால் விரதத்தில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம். நான்கு பேர் மட்டுமின்றி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையையும் பிறப்பையும் அவதரிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துப் பிரார்த்தித்தனர்.

அதுமட்டுமா? ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு காரணத்தினாலும் அவதரித்தாராம்!

அதாவது, நந்தகோபனும் யசோதையும், வசுதேவரும் தேவகியும், தேவர்பெருமக்களும் வேண்டிக் கொண்டதற்காக மட்டுமின்றி, இந்த உலக மக்களுக்காக, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, அவதரிக்க வேண்டும் என தாமே விரும்பி, விரதம் போல் உறுதிகொண்டு, பூமியில் அவதரித்தாராம் பகவான் ஸ்ரீகண்ணன்.

இப்படி, தாமே விரும்பி விரத உறுதி கொண்டு, அவதரித்ததால், சமேதஹ என்கிற திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு. கிருஷ்ணாவதாரம் என்பது மிக உன்னதமானது. ஆகவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களில் எல்லாம் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திக்கொள்ளுங்கள்.

ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்து பெரியாழ்வார் பாடும்போது, ரோகிணியில் அவதரித்தவன் என்று நேரிடையாகச் சொல்லவில்லை. அஸ்தத்தில் இருந்து 10-ஆம் நாள் அவதரிப்பவன் என்று குறிப்பிடுகிறார். அதற்கு நேரடியாகவே ரோகிணி நட்சத்திரம் என்று சொல்லியிருக்கலாமே!

ரோகிணி நட்சத்திரம் என்று பளிச்சென்று சொன்னால், அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை, கம்சன் நிமிட நேரத்தில் கண்டுபிடித்துவிடுவான். பிறகு, ஆவேசத்துடன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பான். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் மரண பயமும் கொண்டு திரிகிற கம்சனுக்கு அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் அவதரித்த குழந்தை என்றால், சட்டென்று எந்த நட்சத்திரம் என்று தெரியாதாம்! அப்படித் தெரிந்து கொள்வதற்கு சில விநாடிகள் பிடிக்குமாம். தவிர, அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் என்றால் முன்னே வரவேண்டுமா பின்னே செல்ல வேண்டுமா என்று குழம்பித் தவிப்பானாம் கம்சன். இந்தத் தவிப்பு அடங்கி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று தெரிவதற்கு முன்பாக, தன்னை எப்படித் தற்காத்துக் கொள்வது என வியூகம் அமைத்துவிடுவானாம், குறும்புக் கண்ணன்!

பெரியாழ்வாரின் ஸ்ரீகிருஷ்ண பக்தி எத்தகையது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்க நி¬னைக்க... கண்ண பரமாத்மா மீதும் பெரியாழ்வார் மீதும் அளப்பரிய பக்தி வந்து நம்முள் வியாபிக்கிறது!

பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு யசோதை போல், நந்தகோபனைப் போல, வசுதேவரைப் போல, தேவகியைப் போல, ஏன்... நம் பெரியாழ்வார் போல், எத்தனையோ தன்யன்கள் இருக்கிறார்கள். கிருஷ்ண பிறப்பைச் சொல்லிச் சொல்லிப் பூரித்து, அவன் திருவடியை அடைந்தார்கள்.

ஆனால், இந்த உலக மக்களுக்கெல்லாம் அந்த கண்ண பரமாத்மா தன்யனாக இருக்கிறான். நம்மை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். நம் ஒவ்வொருவரின் நலனிலும் அதீத அக்கறை கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு தன்யஹ என்கிற அழகிய திருநாமமும் அமைந்தது.

நாம் அவனுக்குத் தன்யனாவோம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை, அவனுடைய மகா பிறப்பை நினைத்துப் பூரிப்போம். அவன், நமக்குத் தன்யனாவான். நம் வீட்டுக்கு வந்து, இல்லத்தையே சுபிட்சமாக்குவான்!