Friday, March 27, 2015

ஏழு வகையான லிங்கங்கள்

நாம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலங்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும்.

• சுயம்புருவ லிங்கம் - தானாக உண்டானது.

• தேவியகம் லிங்கம் - அம்பிகை வழிபட்டது.

• தைவிகம் லிங்கம் - தேவர்கள் வழிபட்டது.

• மானுஷம் லிங்கம் - மனிதர்கள் வழிபட்டது.

• ராட்ஸச லிங்கம் - அசுரர்கள் வழிபட்டது.

• ஆரிஷம் லிங்கம் - ரிஷிகள் வழிபட்டது

• பாணலிங்கம் - பாணாசுரன் வழிபட்டது.

சிவனின் முகவகைகள்

ஒரு முகம் - சந்திரசேகர்

இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்

மூன்று முகம் - தாணு மாலயன்

நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள

ஐந்து முகம் - சதாசிவம்

ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம்

இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர்

கொடி மர தத்துவம்

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.

அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.

இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?

அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.

கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.

கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.

அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.

உருவ வழிபாடு உயர்வு தரும்

இறைவனுடன் நாம் தொடர்பு கொண்டால் இன்னல்கள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. கண்ணுக்கு புலப்படாத இறைவனை நாம் கருத்தில் நிறுத்தி வழிபடுவதும், நம் குறையைச் சொல்வதும் தொலைபேசியில் மறுமுனையில் உள்ளவரை மனதால் நினைத்து நம் கருத்துக்களைச் சொல்வது போலத்தான் ஆகின்றது.

நம்மோடு கூட இருப்பவரோடு பேசாமலும், அவருக்கு சாப்பாடு கொடுக்காமலும் இருந்தால் அவர் எப்படி நமக்கு உதவிக்கரம் நீட்டுவார். எனவே நமக்கு பொருத்தமான அளவுள்ள சிறிய விக்ரகங்கள், சாமி சிலைகள், பொம்மைகள் போன்றவற்றை வீட்டில் வைத்து முறையாக வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். தொலை பேசியிலும், அலை பேசியிலும் எதிர்முனையில் உள்ளவர்களின் தோற்றத்தை பார்க்க இயலாது.

தோற்றத்தைப் பார்த்து பேசும் பொழுது நமக்கு உற்சாகம் அதிகரிக்கும். எனவே தான் உருவ வழிபாடு நமக்கு உறுதுணை புரிகின்றது. அதே சமயத்தில் அந்த உருவ சிலைக்கு தினமும் தவறாமல் பூஜையும், நைவேத்தியமும் செய்வது அவசியமாகும். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும். இல்லையென்றால் மாறாக பலன்கள் நடைபெறும்.

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது, அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்; அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டு முறை ஜபித்துவிட்டு, கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்; கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;

அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்; இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்; பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர், ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;

மேலும், சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர, வேறு எவரையும் வணங்கக் கூடாது; அனாவசியமான பேச்சு, செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்; நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;

ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத்

என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்; பிறகு, மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்; ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்; நினைத்துவிட்டு, ஓம் சிவசக்தி ஓம், ஓம் சிவசக்தி ஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;

சிவனை வழிபட்டு விட்டு, பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்; இதே போல, அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே, அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்; இங்கேயும் மனதிற்குள் ஓம் சிவசக்தி ஓம், ஓம் சிவசக்தி ஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;

சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ, அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்; சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும், அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;

பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி, குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்; இது தவறு மட்டுமல்ல;  பாவமும் கூட!

பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால், நமக்கும், நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது; (நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!) ஏனெனில், இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும், பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலய தல வரலாறு

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.

இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார்.

இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை. பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார்.

உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார்.

மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்களை கயிலையில் இருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இதுவே சிதம்பரம் நடராஜர் ஆலய தல வரலாறாகும்.

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் என்றாலே ரகசியம் என்ற வார்த்தையும் உடன் சேர்ந்து கொள்கிறது. பேச்சு வழக்காகிப்போன இந்த ரகசியத்தின் அர்த்தம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருவாரூரில் மண்ணாக, திருவண்ணாமலையில் நெருப்பாக, திருவானைக்காவலில் நீராக, திருக்காளத்தியில் காற்றாக வழிபடப்படும் இறைவனை சிதம்பரத்தில் ஆகாய உருவில் வழிபடுவதுதான் அந்த ரகசியம்.

ஆலயத்தின் சித்சபையில் ஸ்ரீநடராஜபெருமான் நடன கோலத்தில் காட்சி தருகிறார். வலது பக்கம் திரைபோடப்பட்ட நிலையில் சிறுவாயில் உள்ளது. நடராஜருக்கு ஆரத்தி காட்டப் பெறும் போது அந்தத்திரை அகற்றப்படும். அப்போது அந்த இடத்தில் திருவுருவம் எதுவும் தெரியாமல் தங்கத்தினால் ஆன வில்வதளமாலை ஒன்று தொங்க விடப்பட்ட நிலையில் தெரியும்.

இதற்கு அர்த்தம் அங்கு இறைவன் அருவ வடிவில் (ஆகாய உருவில், உள்ளார் என்பது தான். இது தான் சிதம்பர ரகசியம்

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன.

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய

முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய

கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி.

இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.

(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது).

வைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த

கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. (உக்கிர தெய்வங்கள் நமது குல

தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)

ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே

இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து

பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.

ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட

வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.

மேரு, ஸ்ரீசக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம், தியானம் செய்வதாக இருந்தால்

மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்.

தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடுபலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே

ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது

ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி

வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்

ராமர் அழிக்க மறந்த வடிவம்

முன்பு ஒரு காலத்தில் விசுவா மித்திரர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் அவர் அரசு குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். இவ்வாறு துறவியான விசுவாமித்ரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ஒருமுறை அவர் கடக நாச்சி மலை என்ற இடத்திற்குச் சென்று அங்கு, அந்த மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார்.

விசுவாமித்திரர் கடுந்தவங்கள் பல இருந்தவர். திரியாக தன் உடம்பை எரித்து, வரம்பெற்றார். ராஜரிஷி என்ற பட்டம் பெற்றவர். இத்தகைய விசுவாமித்திரர் கடக நாச்சி மலையில் தவம் மேற்கொள்ள முடிவெடுத்தார். ஆனால் கடக நாச்சி மலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் இராவணின் மாபெரும் அபாய சக்திகள் பெற்றவள்.

பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அம்மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்க, ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினாள்.

அரக்கியை அழிக்கப் போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்து விட வேண்டும் என்றார். அதை ஏற்று பூஜை செய்து ராமர் அதை அழிக்க மறந்து விடுகிறார். பிறகு அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவை அழிக்க வேண்டாம் என்று கூறி விட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரைக்காத்து வரும் என்று கூறினார்.

அவ்வாறு அமைந்த தெய்வமே நமது மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வம். மாசாணி அம்மனை நினைத்து ஒரு காரியம் கை கூட வேண்டினால், கண்டிப்பாக நிறைவேறும். தவறு செய்தவர்களைத் தண்டிப்பதில் கடுமையான அம்மன் இந்த மாசாணி அம்மன்.

மாசாணித் தாயின் படம் வீட்டில் இருப்பது, அந்த ஈஸ்வரியே வீட்டில் இருப்பதற்கு சமமாகும். அன்னையின் தரிசனம் காண பருவமழை பெய்யாது பெய்யும். எப்பொழுதும் செழித்து வளமுடன் விளங்கும் இப்பகுதி, கொங்கு மண்டலத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் கம்பீரமாக சாட்சியளிப்பது ஆனைமலை.

இவ்விடத்திலிருந்து திருச்சூர் நெடுஞ்சாலையில் சென்றால் ஆனைமலை பிரிவு வருகிறது. ஆனைமலையடுத்து சேத்து மடை சாலையில், அருள்மிகு மகாசக்தி மாசாணியம்மன் திருக்கோவில் என்ற அழகிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து சற்று உள்ளே சென்றால் அருள்மிகு அன்னையின் எழிலார்ந்த மாளிகை.

அடுத்து ஆழியாற்றின் அழகினைக் காணலாம். அதன் கிளையாறாகிய உப்பாறு மிகவும் சிறப்புடையது. இந்த நதியில் இறங்கி நீராடினால் நம் பாவங்கள் நீரில் விழுந்த உப்பாக கரைந்தோடும், பிறகு அகத்தூய்மை புறத்தூய்மையோடு மாசற்ற மனத்துடன் அன்னையை தியானித்து அவள் கம்பீரமாக சயனித்திருக்கும் கண்கொள்ளாக் கட்சியைக் காணலாம்

சிந்தூரக்காப்பு வழிபாடு

அசோக வனத்தில் அனுமன் சீதாவை பார்த்த போது அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். அப்போது அனுமான் பல விளக்கங்களை நேரில் சொல்லி ராமபிரான் சுகமாகவும், பத்திரமாகவும் இருப்பதாகவும் சீதா பிராட்டியாரின் நினைவாகவே இருப்பதாகவும் சீதா பிராட்டியாரைத் தேடித்தான் அலைந்துக் கொண்டு இருக்கிறார் என்ற நல்ல செய்திகளைச் சொன்னார்.

இச்செய்திகளை கேட்டதும் சீதா மகிழ்ச்சி அடைந்து கீழே இருந்த சிந்தூரப் பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டார். ராமபிரான் மங்களகரமாகவும், பத்திரமாகவும் இருப்பதன் சின்னமாக சிந்தூரப்பொடி அணிந்துக் கொண்டார்.

உடனே அமனுர்பிரானும் ஸ்ரீராம பிரான் சகல மங்களங்களுடன் இருப்பதற்காக தானும் உடனே அங்கிருந்த சிந்தூரப் பொடியை எடுத்து உடம்பு முழுவதும் பூசிக் கொண்டார். இதனால் தான் நாம் அனுமாருக்கு சிந்தூரம் அணிவிக்கிறோம். நமது நெற்றியில் சிந்தூரப் பொட்டு அணிந்து கொள்கிறோம்.

அனுமார் வால் வழிபாடு

ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார். இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார். அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாக போகக்கூடாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

நான் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார். உடனே சிவபெருமான் அப்படியானால் 'நீ எனது வாலினுள் புகுந்துவா' என்றார். அதன்படி அனுமானுடைய வாலாக பார்வதி தேவி உருப்பெற்றார். ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால் அனுமன் வாலை கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.

அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும். ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதீகம் உள்ளது. ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது நவக்கிரகங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.

நினைத்த காரியங்கள் கைகூடும் வெண்ணைக்காப்பு வழிபாடு

ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஒடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்த போது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்ற கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து 'இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்கள்.

அதன்படி அனுமன் கையில் அசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார். ஆகவே அதே போல நாம் வெண்ணை சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

வடைமாலை வழிபாடு

உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது. ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவருமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.

ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனா தேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள். ஒரு வடை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.

ஆகவே தான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது. அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.

ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார். ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது

வெற்றிலையால் வாழ்த்திய சீதை

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள்.

இலங்கை அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது, ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து ‘ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார்’ என்று கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

அனுமாருக்கு உடல் முழுவதும் செந்தூரம்

அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். இதை அருகில் இருந்து கவனித்த அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார்.

அதற்கு சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார். இதையடுத்து அனுமான் கருணைக்கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார்.

இன்றும் அனுமான் கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் அனுமான் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்திய பிறகு சிலைக்கு எண்ணெய் கலந்த செந்தூர பவுடரை பூசி விடுகின்றனர். பக்தர்களும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி நலமுடன் வாழ செந்தூரத்தை நெற்றியில் பொட்டாக வைத்து கொள்கின்றனர்.

பீமனும், மாருதியும்

அஞ்ஞாதவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பும் போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று பாஞ்சாலி மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனையில் மனதைப் பறிகொடுத்த பாஞ்சாலி, அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமான் திருவுள்ளம் கொண்டார். இமயமலைச் சாரலை அடைந்து அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டு இருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப்படுக்குமாறு கூறினார்.

இருவரிடையே வாக்குவாதம் வளர்ந்தது. முடிவில் மாருதி பீமனைப் பார்த்து நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல் என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

பீமன் பிரமித்தான். நிலை தளர்ந்தான். அதற்கு மேல் ஆஞ்சநேயர் பீமனுக்கு விளையாட்டுக் காட்ட விரும்பவில்லை. பீமா! யாம் உன் அண்ணன் ஆஞ்சநேயர் என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்து மகிழ்ந்தான். தொழுது சேவித்தான்.

பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பின்னர் பீமன் விருப்பத்தை பூர்த்தி செய்ய ஆஞ்சநேயர் விசுவரூபம் எடுத்தார். பீமன் அவரை பணிந்து, சவுகந்திகா மலர்களை பறித்துக் கொண்டு சென்றார்

நவக்கிரகங்களின் சிறப்புக்கள்

சூரியன் :

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடமிருந்து பெற்று பித்ரு தேவதைகளின் வழியாக இறந்து போன நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியன். தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு மிகவும் உகந்தது.

சந்திரன்:

சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கிறது. வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. தேய்பிறையில் அறிவாற்றல் குறைகிறது. அதனால்தான் நல்ல காரியங்களை வளர்பிறையில் துவங்குகிறார்கள். திங்கட்கிழமையில் விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது சந்திர தோஷத்தை நீக்கும் பரிகாரம் ஆகும்.

செவ்வாய்:

பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.

புதன்:

வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவி பாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.

வியாழன்:

திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

சுக்கிரன்:

கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

சனீஸ்வரன்:

நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.

ராகு:

ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சயன தோஷம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகுவிற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை பயக்கும். அருகில் உள்ள கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெய் சேர்த்து வருவது ராகுவிற்குரிய தோஷப் பரிகாரமாக விளங்கும்.

கேது:

உலக பாசங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் கேதுவின் அருள் பெற்றவர்களே. பாப விமோசனத்தை நமக்கு அளிப்பவர் கேது. கேதுவினால் தோஷம் ஏற்படுபவர்களுக்கு சரும நோய்கள், பில்லி சூனிய துன்பங்கள் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தினம்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கேதுவை வழிபடுவதுடன், காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள சித்ரகுப்தர் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் கேது தோஷங்களை நீக்கி நிம்மதியான வாழ்வைத் தரும்.

3 வகை வீரபத்திரர்கள்

அகோர வீரபத்திரரும் அக்னி வீரபத்திரரும்:

தமிழகத்தின் பல பகுதிகளில் நாயக்கர் ஆட்சி மேலோங்கிய காலத்தில் உருவான பல கோயில்களின் மண்டபங்களில், பெரிய சிற்பங்களாகவும் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும் வீரபத்திரர் உருவங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், கம்பத்தடி மண்டபத்தின் அருகில், மேற்கு நோக்கியபடி உள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலை வடிவங்கள், வீரபத்திரர் சிலைகளிலே மிகப் பெரியவை ஆகும்.

எட்டு, பத்துக்கரங்களுடன், கனல் கக்கும் கண்களுடன் அக்னி சுவாலையாக சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் காட்சி தரும் வீரபத்திரர் திருமேனிகள், காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இவைபோன்ற சிற்பங்கள் பேரூர், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, தாரமங்கலம், அவினாசி போன்ற தலங்களிலும் இடம் பெற்றுள்ளன. பேரூரிலுள்ள அக்னி வீரபத்திரர் ஜடா மகுடத்தில் தேள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நடன வீரபத்திரர்:

தட்சனின் யாகத்தைத் துவம்சம் செய்து தேவர்களை எல்லம் புறமுதுகிட்டு ஓடச் செய்த மகிழ்ச்சியில், ஆனந்த நடனமிடும் கோலத்திலும் வீரபத்திரரை நாம் பல ஆலயங்களில் காணலாம். கிருஷ்ணாபுரம், மதுரை ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் நடன வீரபத்திரர் சிலை கலை நயம் மிக்கதாகக் காணப்படுகின்றன.

இடது கரத்தில் வீரபத்திரரின் உருவம் பதித்த கேடயத்துடன், வலது காலைத்தூக்கி உயர்த்திய கோலத்தில் நடன வீரபத்திரரைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் போன்ற பல ஆலயங்களின் மண்டபத்தூண்களில் புடைப்புச் சிற்பமாகவும், நான்கு கரங்கள் கொண்ட வீரபத்திரரைக் காண முடிகிறது.

பிரளயகால வீரபத்திரர்:
தட்சனின் யாகத்தை அழித்துத் துவம்சம் செய்ய 32 கரங்களுடன் வெகுண்டெழுந்த பிரளய காலருத்திரரின் அற்புதத் திருமேனி ஒன்று, பெங்களூருக்கு அருகில் குட்டஹள்ளி என்ற சிற்றூரில் காணலாம். இங்கு தை மாதம் ரதசப்தமி நாளன்று, அக்னி குண்டம் வளர்த்து, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் தனிச்சிறப்பு ஆகும்.

வீரபத்திரருக்கு உகந்த 5 வகை வழிபாடு

சதுர்த்தி வழிபாடு :

பவுர்ணமி, அமாவாசை நாட்கள் விரதமிருந்து ஸ்ரீவீரபத்திரரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாகும். இதனால் காரியங்கள் கைகூடும். தடைகள் விலகும். துன்பம் தீரும். அமாவாசை பவுர்ணமிக்கு பிறகு நான்காவது நாள் வருவதே சதுர்த்தி திதியாகும். அழகில் சிறந்த சந்திரன் விநாயகரின் உருவத்தை கண்டு ஏளனம் செய்தான் அதனால் வெகுண்ட விநாயகர் அவனை ஒளி குன்றிப்போகுமாறு சபித்தார்.

சாபம் பெற்ற சந்திரன் தன் நிலை உணர்ந்து வருந்தி விநாயகரைச் சரண் அடைந்தான். அதனால் மனம் இரங்கிய விநாயகர், அவரை இகழ்ந்த சதுர்த்தி திதியன்று மட்டும் எவரும் சந்திரனைக் காணலாகாது என்றும் அவ்வாறு கண்டால் நினைவாற்றலை இழப்பர் என்றும் வீண்பழிக்கு உள்ளாவர் என்றும் சாபத்தில் இருந்து விடுவித்தார்.

எனவே சதுர்த்தி அன்று விநாயகரை குறித்து தவம் செய்வதும், விரதம் மேற்கொள்வதும் வழக்கம். சதுர்த்தி விரதம் இருப்போர் வாழ்வியல் துன்பங்கள் நீங்கி நலம் அடைவர். இக்கருத்தை மனதில் கொண்டு, சேலம் குகை நரசிங்கபுரம் வீரபத்திரசாமி கோயிலிலும், பட்டீசுவரம் அங்காள பரமேசுவரி கோவிலிலும் சதுர்த்தியன்று வீரபத்திரரைச் பூஜை செய்கிறார்கள்.

அஷ்டமி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 8-வது நாள் அஷ்டமி நாளாகும். இது ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள், பைரவருக்கு உகந்த நாள். பல்வேறு சிறப்புகளுடைய இந்நாளில் வீரபத்திரரை வழிபடும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது.

மாயவரம் வீராவடி வீரபத்திரசுவாமி கோவிலில் பவுர்ணமியை அடுத்த அஷ்டமி திதியில், குறை தீர்வதற்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். அஷ்டமியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் வீரபத்திரரை வழிபட்டால் வெகு விரைவில் பலன் கிட்டும்.

திரயோதசி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 13-வது நாள் வருவது திரயோதசி நாளாகும். இது சிவபெருமானுக்கு உகந்த நாள். தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த நாள். சிவபெருமான் நந்திக்கு அருளிய நாள். வீரபத்திரரின் மறுவடிவாகிய சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை அடக்கிய நாள். இந்நாளில் ஆதிசிவன் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு அருளும் நாள்.

எனவே துன்பங்கள் நீங்க வினைப்பயன்கள் தீர இந்நாளில் சிவபெருமானைப் போற்றி வணங்குவது மரபு. வினைத் துன்பம் நீங்கும் என்பதால் இந்நாள் பிரதோஷ நாள் எனப்படும். சிவபெருமானின் வீர வடிவங்களுள் ஒருவராய்த் திகழும் வீரபத்திரரையும் விரதமிருந்து திரயோதசி திதியில் சிறப்பாக வழிபடுகின்றனர்.

பழங்காநத்தம் கணேச அக்னி வீரபத்திரசாமி கோவிலில் பிரதோச நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும். வீரபத்திரரின் எதிரில் இருக்கும் நந்தீசுவரருக்கு மட்டுமே பிரதோசப் பூஜை செய்கின்றனர். மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்திரர் கோவிலிலும், திண்டுக்கல் கத்தரிக்காய் சித்தர் கோவிலிலும், தனநாயக்கன் கோட்டை வீரபத்திரசுவாமி கோவிலிலும் உளள வீரபத்திரரைப் பிரதோசத்தன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

சதுர்த்தசி வழிபாடு :

அமாவாசை, பவுர்ணமிக்கு 14-வது நாள் வருவது சதுர்த்தசி திதியாகும். இது உலகம்மையாகிய பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட நாள். ஊழியின் இருளை இறைவன் அகற்றிய நாள். இதன் பெருமை சொல்லில் அடங்காது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்வரும் சதுர்த்தசி திதியை மாத சிவராத்திரியாக கொண்டாடுவது மரபு.

திருவெண்காட்டிலும், மம்சாவரத்திலும் உள்ள வீரபத்திரரைக் குலதெய்வமாகக் கொண்டோர், மாத சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். நட்சத்திர வழிபாடு : ///////// 27 நட்சத்திரங்களில் பூரம், கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களில் வீரபத்திரரைச் வழிபாடு செய்வது நல்லது.

வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்?

அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும். வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப் பிறப்பு மற்றும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் இவரை வழிபடுவதற்குரியவை.

பால், தயிர், சந்தனம், வெண்ணெய் முதலியவற்றை வழிபாட்டில் பயன்படுத்தலாம். வெற்றிலை மாலை சாத்தலாம். மஞ்சள்,ரோஜா செம்பருத்தி தும்பை செவ்வரளி வில்வ தளங்கள் கொண்டு அர்ச்சிக்கலாம். பசும்பால் எலுமிச்சை சாறு மஞ்சள் நிற இனிப்புகளை படைத்து இவரை வழிபட எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

வீரபத்திரர் யார்?

தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.

அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.

அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நின்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை. இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்? வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அவர் வீற்றுள்ள தலங்கள் எங்கெங்கு உள்ளன? என்பன போன்ற தகவல்கள் இந்த மலரில் தொகுக்கப் பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

அனுமன் பிறந்த கதை

கேசரி என்ற சிவ பக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். சிவபெருமான் கேசரி முன் காட்சித் தந்தார்.

அவரிடம் கேசரி தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்றார். அதற்கு சிவபெருமான் பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள் பிறக்கவே பாக்கியம் உள்ளது. அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாக திகழ்வான் எனக் கூறிவிட்டு மறைந்து போனார்.

சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர். அஞ்சனைக்கு திருமண வயது வந்ததும் அவளை வானர வீரன் ஒருவனுக்கு கேசரி மணமுடித்து வைத்தார். ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி திருவேங்கடமலைக்கு கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி வந்தால் ஆண் மகன் பிறப்பான் எனக் கூறினாள். அஞ்சனாதேவி கணவருடன் சென்று பெருமாளை வணங்கினாள். அதன் பிறகு காற்றையே எந்த நேரமும் உணவாகக் கொண்டு இறைவனைக் குறித்து கடும் தவம் இருந்தாள்.

இதன் காரணமாய் வாயு பகவானின் அருளினால் ஒரு கரு அவள் வயிற்றில் வளர்ந்தது. தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள். அப்போது அசரிரியாய் ஒரு குரல் வந்தது.

மகேஸ்வரனின் கருணையால், வாயுதேவனின் உருவமே உன் கருவில் இருப்பதால் பிறக்கும் குழந்தைக்கு வாயு புத்திரன் எனப்ப பெயரிடு, அவன் சகல சக்திகளும் பெற்றவனாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வான் என அந்தக் குரல் கூறியது. அதன்படி அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.

இதுதான் அனுமனின் அவதார நிகழ்வாகும். அனுமன் வளர வளர அற்புதங்கள் பல செய்தார். பிறகு அவருக்கு ராமபிரானின் அறிமுகம் கிடைத்தது. சீதையை மீட்க அனுமன் மிகப்பெரும் உதவியாக இருந்தார். நாடு திரும்பிய ராமன், அனுமனை அழைத்து, "உலகில் உனக்கு நிகர் யாரும் இல்லை.

அத்தகைய ஆற்றல் மிகுந்தவன் நீ, அசோக வனத்தில் சீதையைக் கண்டு வந்து நற்செய்தி சொல்லி சோகத்தில் ஆழ்ந்திருந்த என்னை மகிழ்வித்ததற்கு நான் என்ன செய்யப் போகிறேன்... பரந்த தோளை உடையவனே! என்னை ஆலிங் கனம் செய்து கொள்" என்றபடி தன் மார்பை அனுமனுக்குக் கொடுத்தார். அனுமன் தலை குனிந்து பணிவுடன் நின்றார்.

ராமன் அனுமனுக்கு உயர்ந்த மாலைகளையும், பட்டாடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் பரிசாக வழங்கினார். முடிசூட்டு விழா முடிந்ததும் அனைவரும் தத்தம் ஊருக்குச் செல்ல ராமனிடம் விடை பெற்றுக் கொண்டனர். பல ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் ராமாவதார நோக்கம் நிறைவேறியதும் ராமன் சராசரங்களை ஏற்றிக் கொண்டு சென்றார்.

ஆனால் அனுமன் மட்டும் அங்கு போக விரும்பவில்லை. ராம சத்தம் உலகில் நடமாடும் வரையில் தான் உயிருடனிருந்து ராம கதாகாலட்சேபங்களை ஆனந்தமாய்க் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்க அனுமதி வேண்டினார். "அப்படியே ஆகட்டும் என ராமனும் அருள் செய்தார். ராமனிடம் விடைபெற்று அமைதியான சூழ்நிலையில் ராம தியானத்தைச் செய்ய அனுமன் இமயமலையை அடைந்தார்.

இன்றும் அனுமன் ராம தியானத்திலும் ராமநாம சங்கீர்த்தனத்திலும் ஆழ்ந்து ஆனந்தப்பட்டு சிரஞ்சிவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகின்றார். உடல் வலிமையை பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிபட்டால் பலன் கிடைக்கும். மார்கழி மாத அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.

எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை பளிங்குபோல் களங்கமற்ற மனமுடையவனும், பொன்னிறமுடையவனும், கரங்கூப்பி வணங்கிக் கொண்டிருப்பனும், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவனுமாகிய, அஞ்சனை மைந்தன் அனுமனை வழிபட்டால், மக்கள்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றன பெறலாம்

மார்கழி நீராடலின் மகத்துவம்

பனி விழும் மாதம் மார்கழி. இம்மாதத்தில் ஆண்கள் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறிக்கொண்டும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டு வீதிகளில் செல்வார்கள்.

கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். அந்த நேரத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாததால், வீட்டில் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரியகோலங்கள் போடுவார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு கீழே வெளிப்படுகிறது. அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.

அந்த நேரத்தில் ஓசோன் நம் மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

‘மார்கழி திங்கள், மதிநிறைந்த நன்னாள், நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்று திருப்பாவை பாடிய ஆண்டாள், விடியற்காலையில் அனைவரையும் அழைத்து பாவை நோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

வசிஷ்டர் பற்றி அறிவோமா?

வேத காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் மாமுனிவர்களுள் ஒருவரான வசிஷ்டர், சப்தரிஷிகளிலும் ஒருவராக திகழ்கிறார். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக் கொண்ட பல சுலோகங்கள் உள்ளது.

இவர் பெயரால் வழங்கும் நூல் 'வசிட்ட சம்கிதை' என்பதாகும். இவரது மனைவி அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு, நந்தினி ஆகியவற்றை பராமரித்து வந்தவர். மன்னர் கவுசிகர் இந்த பசுக்களை பறிக்க முயன்றும், அதில் தோற்று பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம ரிஷி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். வசிஷ்டரின் பிள்ளைகளில் ஏழு பேர், 3-வது மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாக இருந்தவர்கள். நிமியின் சாபத்தினால் வசிஷ்டர் தேகம் இழந்தார். பின் ஊர்வசியிடம் தோன்றினார்.

இப்பிறவியின் பின் அவர் சூர்யகுல மன்னர்களுக்கு குலகுரு ஆனார். வசிஷ்டருடன் பிறந்தவர் அகத்தியர். தேவர்களின் பொருட்டு தம் நேத்ர அக்னியால் அசுரரை எரித்தவர்.

சபரிமலை யாத்திரைப் பலன்கள்

வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ள சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

எருமேலி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.

அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன. வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதாநதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.

இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள். சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை.

ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.

சபரிமலை யாத்திரையின்போது சாதி, சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை.

ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள்.

இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடத்திக் காட்டப்படுகிறது.

நவ கைலாயங்கள்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. அவை வருமாறு:-

பாபநாசம் - சூரியன்
சேரன்மாதேவி - சந்திரன்
கோடகநல்லூர் - செவ்வாய்

தென்திருப்பேரை - புதன்
முறப்பநாடு - வியாழன்
சேந்தமங்கலம் - சுக்கிரன்

ஸ்ரீவைகுண்டம் - சனீஸ்வரன்
குன்றத்தூர் - ராகு
ராஜபதி - கேது

விரத காலங்களில் காகத்திற்கு உணவளியுங்கள்

விரத காலங்களில் விரதத்தை முடிப்பதற்கு முன்னர் கடவுளை பிரார்த்தித்து ஒரு பிடி அன்னத்தை காகத்திற்கு வைப்பது வழக்கம். ஆனால் சில வேளைகளில் அந்த அன்னத்தை காகம் வந்து உண்ணாது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை கிணற்றில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காகத்திற்கு அன்னம் வைப்பதன் மூலம் ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தே புலப்படுகின்றது.

எனவே, அன்னத்தை காகம் உண்ணாத சந்தர்ப்பங்களில் அதனை கிணற்றில் உள்ள மீன்களுக்கு போடலாம். ஆனால், மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதை விட அந்த அன்னத்தை நாய்களுக்கு வைக்கலாம் என கூறப்படுகின்ற போதிலும், சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்துவதில்லை.

எனவே, அவ்வாறு சிராத்தம் செய்த பின் வைத்த அன்னத்தை காகம் எடுக்க வராவிட்டால் அதனை ஆறு, குளம், ஏரி அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே சுபம்

நவக்கிரக ஆலயங்களை வழிபடுவதால் என்ன பலன்?

1. சூரியன் கோவில் - கண் நோய்கள் தீரும்
2. சந்திரன் - செல்வ வளம், ஆயுள் விருத்தி
3. செவ்வாய் - தைரியம், காரிய வெற்றி

4. புதன் - கல்வியறிவு, சாஸ்திர வெற்றி
5. வியாழன் - மக்கள் பேறு, நல்ல வாழ்வு
6. சுக்கிரன் - புகழ், செல்வம், வசீகரத் தன்மை

7. சனீஸ்வரன் - நீண்ட ஆயுள்
8. ராகு - அனைத்து நோய்கள் நீங்கும்
9. கேது - ஞானம், வெற்றி கிடைக்கும்

மனிதனும் நவக்கிரகங்களும்

மனிதனும் நவக்கிரகங்களும்
நவக்கிரகங்களின் அம்சங்கள் மனிதனின் உடலில் உள்ளதாக நிஜானந்தபோதம் கூறுகிறது. அதன்படி மனித உடலில் நவக்கிரகங்களின் ஆட்சி நடைபெறுவது கீழ்க்கண்டபடி கூறப்படுகிறது.

1. சூரியன் - உயிர்
2. சந்திரன் - உடல்
3. செவ்வாய் - கண்

4. புதன் - உணர்வு
5. வியாழன் - மூக்கு
6. சுக்கிரன் - நாக்கு

7. சனீஸ்வரன் - காது
8. ராகு - குதம்
9. கேது - இன அடையாளம்

Wednesday, March 25, 2015

ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். “எதையுமே யாரிடமிருந்தும் எதிர்பார்க்கமாட்டேன்” என்று ;

இன்றைய தினத்திலிருந்து ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். “எதையுமே யாரிடமிருந்தும் எதிர்பார்க்கமாட்டேன்” என்று ;
.
அது எப்படி முடியும் ?
குழந்தைகள் படிப்பதை எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
.
மனைவியிடம் கணவன் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
என்று எண்ணுவீர்கள்.
எதிர்பார்ப்பதினால் மட்டும் அவர்கள் செயலில் தடை இருக்காது.. செய்து வருவதும் நிற்காது. அதற்கு முன்னே நீங்கள் செய்த செயலுக்கு தக்க விளைவாக உங்களுக்கு வரவேண்டியது வந்துகொண்டே தான் இருக்கும்.
.
.
எதிர்பார்ப்பில் நான்கு தன்மைகள் உண்டு
.
.அதாவது உங்களிடமிருந்து நான் எதயாவது எதிர்பார்த்தேனேயானால் அந்த தேவையில் ஒரு நீதியுணர்வு(Need),அதன் அளவு(Quantity), தன்மை (Quality), காலம் (Time) இந்த நான்கும் இருக்கின்றன.
.
.
யார் எதை எதிர்பார்த்தாலும், அல்லது பிறரிடமிருந்து கேட்டாலும் இந்த நான்கும் இருக்கும்.
.
.
எனவே எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள். எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால் ஏமாற்றமே இருக்காது..
.
மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணமென்றால்... எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றமே. அது எப்படி வருகிறது எனில், கற்பனையாக ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனக்கு இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும். இப்படி இருக்க வேண்டுமென்று.
.
.
எப்பொழுதுமே நமக்கு கிடைப்பது எல்லாம் நாம் செய்ததினுடைய விளைவாகத்தான். ஆகையால், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று யோசித்து செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக்கொள்ளலாம்.
.
.
உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம்.பிறருக்கு மனப்பூர்வமாக எவ்வளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும், மன அமைதியும், ஆற்றலும் உண்டாகும்.
.
.
ஆகவே, முதலில் எதிர்பார்ப்பதைத் தவிருங்கள். இரண்டாவதாக நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்ய தயாராக இருங்கள்.
.
.
பொருளைக்கொடுத்துத்தான் உதவி செய்யவேண்டுமென்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ, அந்த ஆற்றலைக்கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலோ , பொருளாலோ பிறருக்கு என்ன செய்யமுடியுமென்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.
.
.
காலையிலும், மாலையிலும் இந்த உலகம் சாமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்தமுடியாதா உங்களால்? அதை செய்யலாமே.! அம்மாதிரி எதை செய்யமுடியுமே அதை செய்துகொண்டே இருப்போமேயானால் மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
எப்போதும் பிறரிடம் எதிர்பார்ப்பதினாலேயே நாம் பிச்சைக்காரர்களாக மாறுகிறோம். முக்கியமாக நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களானால் எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் ஏழ்மை நிலையில் தான் இருப்பார்கள்.
.
.
ஆகவே, எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு நாம் என்ன செய்யவேண்டும், நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக்கொண்டு என்னென்ன வகையில் பிறருக்கு சேவை, உதவி செய்யமுடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
இதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால், மேலும் மேலும் ஆற்றல் வளரும், செல்வமும் வளரும், மகிழ்ச்சியும், நிறைவும் வளர்ந்துகொண்டே போகும். அப்போது மனதில் ஏழ்மை என்ற எண்ணம் இருக்கவே இருக்காது. இன்பமாக வாழலாம்