Saturday, March 5, 2011

திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?

திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?

மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையை திசை திருப்புவது. வீட்டிற்குள் வரும்போது உங்கள் புதிய வாகனத்தைப் பார்க்கிறார்கள். அப்போது அதற்கு முன்பு இந்த திருஷ்டிப் பொருள் ஆடிக் கொண்டிருந்தால் அந்த பார்வையை அது ஈர்த்துக் கொள்ளும். இது உளவியல் ரீதியாகச் சொல்வது.
ஜோதிடப்படி பார்த்தால், ஜீவக் கனியான எலுமிச்சைக்கு எதிர்மறையான சக்திகளை ஈர்த்து அழிக்கக் கூடிய சக்தி கொண்டது. அதனால்தான் எலுமிச்சையை வைக்கிறோம்.
உயிர் பலி கொடுப்பது என்பது உயிர் உள்ளவற்றைத்தானே நாம் பலி கொடுப்போம். எலுமிச்சை ஒரு ஜீவ கனி என்பதால்தான் புது வாகனம் வாங்கிய உடன் வாகனத்தின் டயருக்கு கீழே எலுமிச்சையை வைத்து அதன் மீது ஏற்றி இறக்குவோம். எனவே அந்த டயருக்குத் தேவையான உயிர் பலி கொடுத்தாகிவிட்டது, மேற்கொண்ட எந்த உயிர்பலியும் வாங்கக் கூடாது என்பதுதான் அதற்கு காரணம்.
படிகாரம் இயல்பாகவே திருஷ்டி எடுக்கக் கூடிய சக்தி கொண்டது.
ஊர்களில் எல்லாம் பல இடங்களில் படிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். நீரைத் தூய்மைப்படுத்த, மருத்துவத்திற்காக எல்லாம் பயன்படுத்துவார்கள்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எனவே அந்த தாது உப்பு, எலுமிச்சையின் சிட்ரிக் அமிலம், பச்சை மிளகாயின் காரம் போன்றவற்றிற்கு துர்தேவதைகளை தடுக்கும் சக்தி கொண்டவை.
துர் தேவதைகள் என்றால் என்ன?
துர் தேவதைகள் பல வகைப்படும். துர் மரணம் அடைபவர்கள் பெரும்பாலும் இறைவனிடம் ஐக்கியமாவதில்லை. அவர்கள் எதிர்பாராத வகையில், எதிர்பாராத வயதில் மரணம் சம்பவிக்கும். அவர்களது நிறைவேறாத ஆசைகளால் அவர்களது ஸ்தூல தேகம் உலவிக் கொண்டிருக்கும். அவ்வப்போது இந்த ஆவிகள் வருவதைத்தான் துர்தேவதைகள் என்று சொல்கிறோம்.
சாதாரணமாக அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களில் சிலர் துர் எண்ணங்களுடன் இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அது அவர்களது லக்னாதிபதி நல்ல கிரகத்துடன் இருந்தால் அக்கம் பக்கத்தில் இருப்பர்கள் நல்லபடியாக அமைவார்கள். லக்னாதிபதியே ஆறுக்குரியவனாக இருந்துவிட்டால், இவர்கள் வீட்டில் சாப்பிட்டுப் போனவர்களே எதிரிகளாகவிடுவார்கள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கவும் இந்த படிகாரம் உதவுகிறது.
அதாவது படிகாரம், எலுமிச்சை, மிளகாய் இவற்றின் கலப்புதான் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கிளி ஜோதிடம், கை ரேகை பார்த்து சொல்வது என்று ஜோதிடர்கள் பலர் உள்ளனர். அவற்றை எப்படி ஒரு வழிகாட்டலாக எடுத்துக் கொள்வது?
சில சமயங்களில் மனசு சம்பந்தப்பட்டதாகவும் அமைகிறது ஜோதிடம். எங்களிடம் வருபவர்களிடம் பலதரப்பட்டவர்கள் உள்ளனர். ஒரு சிலர், தங்களுக்கு கெடு பலன்கள் இருந்தாலும் அவற்றை உங்கள் வாயால் சொல்லிவிடாதீர்கள். நல்லவற்றையேக் கூறுங்கள் என்று கூறுகிறார்கள்.
சிலர் என்ன இருக்கிறதோ அதைச் சொல்லுங்கள். அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று சொல்வார்கள்.
என்னதான் பயப்பட மாட்டோம் என்று சொன்னாலும், ஒரு கண்டம் இருக்கிறது, பொருள் அழிவு இருக்கிறது, சேதம் இருக்கிறது என்று சொன்னால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த அளவிற்கா மோசமாக உள்ளது என்று மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஆறுதல் தரக்கூடியதற்காகவே பலர் ஜோதிடத்தை அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் போன்றவற்றை அணுகுகிறார்கள்.
தனது குறைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இதுபோன்று செல்கிறார்கள். குறி பார்ப்பவர்களிடம் செல்பவர்களும் இதுபோன்றுதான்.
தங்களைப் பற்றி கொஞ்சம் புகழ்ந்து சொல்வதும், பின்னர் ஏதாவது ஒரு பிரச்சினையை அவர்கள் சொல்ல, மீதம் அனைத்தையும் இவர்களாகவே ஒப்பித்துவிடுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்பார்கள்.
இதுபோன்று பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால் தற்போது முதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோதிடர்கள் என்னதான் படிப்புப் படித்து அதிகம் தெரிந்திருந்தாலும், அருள் வாக்குக் கேட்டு அவர்கள் காலில் விழுந்து ஏமாறும் மக்கள்தான் அதிகம்.


No comments:

Post a Comment