Friday, April 15, 2011

பைரவர் உருவான புராணக்கதை

பைரவர் உருவான புராணக்கதை

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.
இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.
தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.
அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா
ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.
ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.
அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

No comments:

Post a Comment