அட்லாண்டிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது அந்தக் கப்பல். பயணிகள் ஆர்வமாய் பயணம் செய்து கொண்டிருந்தனர். பயணிகளின் பயண நேரத்தை பயனுள்ளதாக்க விரும்பினார் கப்பலின் கேப்டன். இதற்காக, கப்பலில் பயணம் செய்த பிரடெரிக் பிரதர்டன் மேயர் என்ற ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம், ""எங்கள் பயணிகளுக்காக நீங்கள் நல்லதொரு உரையாற்ற வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார். மேயரும் சம்மதித்தார்.
இதுபற்றி கேள்விப்பட்டார் ஒரு பயணி. அவர் ஒரு அரைகுறை நாத்திகவாதி. ""தெய்வம் தொடர்பான விஷயங்களை மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. அப்படியிருக்க, ஒரு மனிதனால் தெய்வீக விஷயங்கள் பற்றி எப்படி பேச முடியும்?'' என்று தன் நண்பரிடம் வாதிட்டார்.
இருப்பினும், அவர் சொற்பொழிவைக் கேட்கச் சென்றார். செல்லும் வழியில் ஒரு அம்மையார் மிக களைப்பான நிலையில் சேரில் அமர்ந்தபடியே வாய் திறந்தநிலையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது கைகள் விரிந்த நிலையில் இருந்தன. இவர் தன் கைகளில் இருந்த இரண்டு ஆரஞ்சுப்பழங்களை கைகளில் வேடிக்கையாக வைத்து விட்டு சிரித்தபடியே சென்று விட்டார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, அவரது நண்பர்,""நீங்கள் தான் இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையில்லை என்றீர்களே! அப்படியிருக்க கூட்டத்துக்கு வருவானேன்,'' என்று கேட்டார்.
""அந்த உளறுவாயன் என்ன பேசுகிறான் என்று கேட்க வந்தேன்,'' என்றார் நாத்திகவாதி.
அவர்கள் வரும்போது அந்த அம்மையார் விழித்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் ஏகமகிழ்ச்சி. அதற்கான காரணத்தைக் கேட்டார் நாத்திகவாதி.
""ஐயா! கடல் பயணம் என் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மிகவும் களைப்பாக இருந்தேன். இந்த நிலையில் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே! நடுக்கடலில் பழத்துக்கு என்ன செய்வது?'' என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
என் குரல் இறைவனின் காதுக்கு எட்டிவிட்டதோ என்னவோ! நான் கேட்டது கிடைத்து விட்டது,'' என்றார்.
நாத்திகவாதி முகத்தில் ஈயாடவில்லை.
அத்தியாவசியமான ஒரு பொருள் நம்மிடம் "இல்லை' என்று வருத்தப்பட்டு பிரார்த்தித்தால் போதும். யார் மூலமாவது அந்தப் பொருளை நமக்கு கிடைக்கச் செய்து விடுகிறான் அனைவருக்கும் தந்தையான இறைவன்.
No comments:
Post a Comment