** ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
திரி பக்ஷம்= ஒரு மண்டலம். ஒரு பக்ஷம் என்பது பதினைந்து நாட்கள். திரி என்றால் மூன்று. மூன்று பக்ஷம் என்றால் 45 நாட்கள். எனவே ஒரு மண்டலம் என்பது நாற்பத்தைந்து நாட்கள் தான். 48 எப்படி வந்தது என்று புரியவில்லை.
* மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை திறந்து வைக்கலாமா?
மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருகிறாள். அது சமயம் நம் வீட்டில் விளக்கேற்றி வைத்தும் கொல்லைப் புறக்கதவை சாத்தியும் வைக்க வேண்டும். இவற்றால் மகாலட்சுமி மகிழ்ந்து நமக்கு லட்சுமி கடாட்சத்தை அருளுகிறாள்.
* கோயிலில் மூலவரை தரிசித்த பின் வலம் வரவேண்டுமா? வலம் வந்தபின் தரிசிக்க வேண்டுமா?
கோயிலுக்குள் சென்றவுடன் கொடிமரம் முன்பு நமஸ்காரம் செய்து, பிறகு உள்ளே சென்று ஒரு முறை வலம் வந்து, மூலவரைத் தரிசிக்க வேண்டும். பிறகு அம்பாள் சந்நிதியை தரிசித்து, இரண்டாம் முறை வலம் வரும் பொழுது மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். மூன்றாம் முறை வலம் வந்து, சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் மூலவரின் எதிரே மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். மூன்று முறை ப்ரதக்ஷிணமும் (வலம் வருதல்), ஐந்து முறை நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
* உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாதா?
நீங்களே பயப்படும்படியாக கன்னாபின்னாவென்று முகத்தைக் காண்பித்து விடுமோ என்று இருக்கலாம்! உடைந்த இருக்கையில் உட்காருவது, ஆடும் படுக்கையில் படுப்பது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆகியவை கூடாது.
* உறுப்பு தானத்தை ஆன்மிகம் ஏற்கிறதா?
இறந்தவர்களின் உடல் உறுப்புக்களை எடுத்து பத்திரப்படுத்தி அதை மற்றவருக்கு உபயோகிக்கலாம் என்ற வசதி சித்தர்களைத் தவிர மற்றவர்களுக்கு இல்லாததால் அக்காலத்தில் வழக்கத்தில் கொள்ளப்படவில்லை. எனவே அது பற்றிய விபரங்களும் தெளிவாக இல்லை. இக்காலத்தில் அந்த வசதி உள்ளது. மண்ணோடு கலப்பதைவிட வாழும் மனிதனுக்கு உபயோகிக்கப்படுவதை ஆன்மிகம் ஒரு போதும் மறுக்காது.
* என் மகன் வெளிநாடு செல்ல இருக்கிறார். அங்கே சந்தியா வந்தனம் போன்ற அனுஷ்டானங்களை செய்வதற்கு இடமுண்டா?
அமெரிக்காவில் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கம் தோன்றுவதற்குக் காரணமே அங்கு வாழும் இந்தியர்கள் செய்யும் சந்தியாவந்தனம் அனுஷ்டானம் போன்றவற்றினால் ஏற்பட்ட ஈர்ப்புதான். சில நாடுகளின் விமான நிலையங்களில் கூட பிரார்த்தனைக் கூடம் தனியாக அமைக்கப் பட்டுள்ளது. நாம் சந்தியாவந்தனம் செய்கிறோம், சிவ பூஜை செய்கிறோம் என்றால் வெளிநாட்டவர் சற்று அதிகமாகவே நம்மை மதிக்கிறார்கள்.
No comments:
Post a Comment