ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற போர்வையில், உலகத்தில் ஒழுக்கம் சரிந்து கொண்டிருக்கிறது. காதலில் சிக்கி தன்னையே இழக்கும் பெண்கள் பலர். காதலிகளால் பணம், அழகுக்காக கைவிடப்படும் ஆண்களும் இல்லாமல் இல்லை. இப்படி
ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்தால் நிலைமை என்னாகும் என்பதற்கு தர்மரின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவம் உதாரணம்.
பாரதப்போருக்குப் பின் சிலகாலம் ஆட்சி செய்த தர்மர், தன் தம்பிகளிடம், ""தம்பியரே! காலத்தை வென்றவர் எவருமில்லை. கலியுகம் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பவர்கள் அதிகரிப்பார்கள். இனியும், இந்த உலகில் இருக்க வேண்டாம்.
அரசாங்கத்தை அபிமன்யுவின் பேரன் பரீட்சித்திடம் ஒப்படைத்து விட்டு, நாம் திரவுபதியுடன் காடு செல்வோம். அங்கு சென்று தவவாழ்வு வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமாவோம்,'' என்றார். எல்லாரும் சம்மதித்தனர்.
மக்களிடம் பிரியாவிடை பெற்று அவர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர். அவர்கள் பின்னால் ஒரு நாய் மட்டும் சென்றது. செல்லும் வழியில் திரவுபதி மயங்கி விழுந்தாள். இதைக்கண்ட பீமன் தர்மரிடம், ""அண்ணா! யோக வாழ்வைத் தேடி செல்கிறோமே! இந்த சமயத்தில் திரவுபதி விழுந்துவிட்டாளே! என்ன காரணம்?'' என்றான்.
""அவள் அர்ஜுனன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். அவனைப் பிரியப்போகிறோமே என நினைத்தாள், மயங்கிவிட்டாள்,'' என்றார்.
சற்றுநேரத்தில் சகாதேவன் விழுந்தான். ""அண்ணா! இதென்ன ஆச்சரியம்! இவனுக்கென்ன ஆயிற்று?'' என்ற பீமனிடம், ""இவன் தன்னை விட உயர்ந்த கல்விமான் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான். அதனால் சரிந்தான்,'' என்றார்.
அடுத்து, நகுலன் விழுந்தான்.
""இவன் தன்னை விட அழகன் இல்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தான். அதனால் மயங்கினான்,'' என்றார் தர்மர்.
பின்பு, வில்லாதி வீரனான அர்ஜுனனே விழுந்தான்.
""பாரதப்போரில், தான் ஒருவனே தனித்து நின்று எதிரிகள் அனைவரையும் கொல்வேன் என உறுதிகூறினான். சொன்னபடி செய்யவில்லை. முடியாத ஒன்றை செய்து தருவதாகக் கூறுவது பாவம், அதனால் இறந்தான்,'"' என்றார் தர்மர்.
அடுத்து பீமன் மயங்கி விழ தர்மர் அங்கு நின்றபடியே,"" பீமா! உன்னைப் போல் பலசாலிகள் யாருமில்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தாயல்லவா! அதனால் தான் இந்தக்கதி,'' என்றார்.
மயங்கி விழுந்த எல்லாரும் சில நிமிடங்களில் இறந்து விட்டனர். தர்மர் பயணத்தைத் தொடர நாய் மட்டும் பின்னால் சென்றது. அப்போது, இந்திரன் ஒரு விமானத்தில் வந்தான். தர்மரை சொர்க்கத்துக்கு அழைத்தான்.
""என் தம்பிகள், மனைவி இறந்துவிட்டனர். அவர்களின்றி என்னால் வர முடியாது,'' என தர்மர் மறுத்தார்.
""அவர்கள் ஏற்கனவே சொர்க்கம் சென்று விட்டனர். எனவே, அங்கு வருவதில் தடையில்லை,'' என்றான் இந்திரன்.
""சரி...வருகிறேன், ஆனால், நான் நாட்டை விட்டுக் கிளம்பியது என்னையே பின்தொடரும் இந்த நன்றியுள்ள ஜீவனையும் அழைத்து வருவேன். சம்மதமா?'' என்றார்.
""நாய்கள் இழிபிறவிகள். சொர்க்கம் வர தகுதியற்றவை,'' என்ற இந்திரனிடம், ""ஐயனே! அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்றாமல் இருப்பது, பெண்களைக் கொல்வது, நல்லவர்களின் பொருளை அபகரிப்பது, நண்பனுக்கு தீங்கு செய்வது ஆகிய நான்கும் மிகக்கொடிய பாவங்கள். இதற்கு நிகரானது தான் நம்பி வந்தவனைக் கைவிடுவது. எனவே, நாயை விட்டு வரமாட்டேன். இதனால் சொர்க்கவாழ்வை இழக்கிறேன் என்றால், அதுபற்றி எனக்கும் கவலையும் இல்லை,'' என்றார் ஆணித்தரமாக.
அப்போது, அந்த நாய் தர்மதேவதையாக உருமாறி நின்றது.
""தர்மரே! உம் பெருமையை உலகுக்கு உணர்த்தவே உம் பின்னால் நான் வந்தேன். இழிந்தபிறவியான நாய்க்கும் நல்லது நடக்க வேண்டும் என நீர் நினைத்ததால், உனக்கு உமரான நிகரான ஒருவன் இனி விண்ணிலோ, மண்ணிலோ பிறக்கமாட்டான். எல்லாரும் இறந்தபிறகு ஆன்மா மட்டுமே சொர்க்கம் செல்லும். நீர் <உடம்புடன் சுவர்க்கம் செல்லலாம்,'' என்றது.
தர்மதேவதையை வணங்கிய தர்மர் உடலுடன் சொர்க்கம் கிளம்பினார்.
No comments:
Post a Comment