சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சிந்தை கலங்காதவர்கள், மனம் குழப்பமடையாதவர்கள், பாவ புண்ணியம் பற்றி சிந்திக்காதவர்களுக்கு அச்சம் என்பது அணுவளவும் இல்லை. தவறான கொள்கைகளைத் தழுவி, தீயபாதையில் செல்பவர்களே அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதவராயும் இருப்பர். உடல், நாக்கு, மனம் ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள அறிவாளிகளே உண்மையான நல்ல அடக்கம் உடையவர்கள். அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பை அழிப்பதுபோல், அறநெறியில் தவறியவனை அவனது செயல்க@ள அழித்துவிடும். அதிகமாகப் பேசுவதால் மட்டும் ஒரு அறிஞனாகிவிட மாட்டான். அறியாமையுடன் தன்னடக்கமில்லாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன், தன் நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. கொடிய நஞ்சைப் போன்ற ஆசை எவரைப் பிடித்துக்கொள்கிறதோ, அவருக்கு காட்டுப் புல்லைப்போல துக்கம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தூய்மையான எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவரது நிழல் போல மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்கிறது. அதே போல் தீய எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும், செயல்புரிந்தாலும், மாட்டின் காலைப்பின்பற்றும் வண்டிச்சக்கரம் போல, துக்கம் அவனைப் பின்பற்றிச் செல்கிறது. சோம்பேறிகள் வெறும் பேச்சே பேசுகிறார்கள். சுதந்திர உலகில் வாழ்வது போல் கனவு கண்டு கொண்டு, சுதந்திரம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள். அவர்களால் ஒருபோதும் அறிவு வழியைக் காண முடியாது. மலரின் வண்ணத்துக்கோ, நறுமணத்துக்கோ குறை நேராமல் வண்டு தேனைச் சேகரிக்கிறது. அதுபோல், பிறரைப் புண்படுத்தாமல் நல்லதை எடுத்துரைக்க வேண்டும். முட்டாளின் தோழமையைவிட, ஒருவன் தனிமையில் வாழ்வது எவ்வளவோ மேலானது. என் உடல் நோய் பிடித்திருந்தாலும் என் மனம் நோய் பிடித்ததாக இருக்கக்கூடாது என்று நீங்களே உங்களை பயிற்சி செய்துகொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் பகைமையை வெல்லக்கூடிய ஆயுதம் அன்பு ஒன்றே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கிவிடுவதுபோல், உங்கள் மனதைத் தீய வழியிலிருந்து நீங்கள் மீட்டுக் கொள்ளுங்கள். உங்கள் நல்ல எண்ணங்களை சோர்வடையாமல் கட்டிக்காத்துக் கொள்ளுங்கள். புயலுக்கும் அசையாத பாறையைப் போல, அறிவாளி புகழுக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுப்பதில்லை. கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும், கருமியை ஈகையாலும், பொய்யனை உண்மையாலும் வெல்ல வேண்டும். தன்னைத்தானே வெற்றி கொள்பவனே, போரில் ஆயிரம் பேரை அழித்து வெற்றிபெற்றவனை விட சிறந்தவன். நல்ல மனிதனின் பெருமை எந்தத்திசையிலும் பரவி நிற்கும்.
No comments:
Post a Comment