Monday, October 20, 2014

சரஸ்வதி தேவியின் உருவ தத்துவம்

சரஸ்வதி வைரத்தின் அழகாக இருப்பவள். அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். ஞான சக்தி. குறைந்த கல்வி கற்றவர்களில் சிலர் மேதையாக இருந்திருக்கின்றனர். பள்ளிக்கே செல்லாத சிலர் நாட்டைக்கூட ஆண்டிருக்கின்றனர்.

கையெழுத்துகூடப் போடத் தெரியாத சிலர் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பெரும் வர்த்தக நிர்வாகியாக இருந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் கலைமகளின் கருணையே காரணம் எனலாம். சரஸ்வதியின் இரு கைகளிலும் புத்தகமும் ஸ்படிக மணி மாலையும் இருக்கின்றன.

கூடவே வீணையும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் அணிந்துள்ளாள். கல்வி கற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் வெள்ளை உடையும் குறிக்கின்றன.

சரஸ்வதியின் நான்கு கைகளும் மனிதனுடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்ம ஞானம். தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால் "நான்' என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது.

ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது. அதை அடைய வேண்டுமென்றால் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணியை மனமாரத் துதிக்க வேண்டும். சரஸ்வதியின் பிரசாதத்தைப் பெற வேண்டும்.

நவராத்திரியில் சரஸ்வதி தேவியும் மற்ற இரு தேவிகளும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழு வலிமையையும் பெற்று அருள்பாலிக்கிறார்கள். அந்த வகையிலே சரஸ்வதிதேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டிப் பிரார்த்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள். ஆகவே சரஸ்வதி பூஜை செய்கிறவர்களுக்கு சரஸ்வதியின் அருட்கடாட்சம் நிறைவாகக் கிடைக்கும்




சரஸ்வதி தேவியின் உடம்பை தத்துவமயமாக கூறுவதுண்டு. சரஸ்வதியின் முகம் பிரம்ம வித்தை கொண்டது. அவள் கைகள் நான்கு வேதங்களையும், கண்கள் எண்ணையும், எழுத்தையும் உடையது.

இயல் இலக்கியங்களை மார்பும், திருவடிகள் இரண்டும் இதிகாச புராணங்களையும் குறிக்கிறது. அவள் கையில் உள்ள வீணை ஓங்கார ஸ்வரூபத்தை காட்டுகிறது. இவ்வாறு கலைவாணியின் உருவத்தை தத்துவமயமாக கூறுவர்.






ஞானம் தரும் கடவுளாக இரண்டை சொல்கிறது இந்து மதம். ஒன்று தட்சிணாமூர்த்தி, மற்றொன்று சரஸ்வதி. இந்த இருவரும் அறியாமையை நீக்குபவர்கள். கலைவாணி வெள்ளை ஆடை உடுத்தி, வெண் தாமரைப் பூவில் வீற்றிருப்பாள்.

வெண்மை தூய்மையின் அடையாளம். இந்த வெண்மையே அன்னத்தின் நிறமும் ஆகும். சில நூல்கள் அன்னத்தையும், சரஸ்வதி தேவியின் வாகனமாகக் கூறுகிறது. அன்னம் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி கொண்டது. இதிலிருந்து கெட்டவற்றை விட்டு விட்டு நல்லதையே நாட வேண்டும் என்ற உண்மை விளக்கப்படுகிறது. சரஸ்வதி தேவி தன்னை வழிபடுபவர்களுக்கு, புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையின் கவியுருவாகவும்,

அக்கவியின் யுக்தியில் நுண்பொருளின் வடிவமாகவும் உள்ளனர். இவள் எப்போதும் வீணையும், புத்தகத்தையும் ஏந்தியபடி காட்சியளிப்பவள். சங்கீதத்தின் வடிவமாகவும் விளங்குபவள். கற்பூரம், சந்தனம், முல்லை பூ ஆம்பல், வெண் தாமரை முதலானவற்றிற்கு இணையான நிறமுடையவள்








சரஸ்வதி, ஸ்படிகம் என்னும் பளிங்கு போல் மேனியும் நான்கு கரங்களும் கொண்டு திகழ்கிறாள். வலகரத்தில் அட்ச மாலையும் முன் வலக்கரத்தில் வியாக்கியான முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் புத்தகம் ஏந்திய கோலத்தில் வீற்றிருப்பாள்.

வீணை தாங்கிய நிலையில் வியாக்கியான முத்திரையும், வெண் தாமரையும் இடம் பெறாது. அவ்விரு கரங்களால் வீணையை மீட்டிய கோலத்தில் காட்சியளிப்பாள். சற்றே நீலமோடிய தூய வெண்பட்டாடை உடுத்தி வெண்தாமரை மலரின் மீது,

கால்மேல் கால் போட்டு கல்விக்கு உரிய ஒய்யாரத்துடன் முறுவல் பூத்த முகத்துடன் வீற்றிருப்பாள். அன்னப்பறவை சரஸ்வதி தேவிக்கு உரிய வாகனமாகும். சில நேரங்களில் மயில் வாகனத்திலும் வீற்றிருப்பதுண்டு.



No comments:

Post a Comment