தருமம் தலை காக்கும்!
தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள்
தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.
ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.
'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.
குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.
கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.
கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.
இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!
துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.
அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!
அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.
அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.
சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.
தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்
No comments:
Post a Comment