Sunday, December 30, 2012

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!


குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா?


மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா?

பொதுவாக மந்திரங்கள் அனைத்துமே குருமுகமாக உபதேசம் பெற்றே பாராயணம்,ஜபம் செய்யவேண்டும்.இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. சரி அப்படியெனில் பல புஸ்தகங்களிலும் பல ஒலிதட்டுகளிலும் பல மந்திரங்கள் அச்சிடப்பட்டு , ஒலிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதே அது தவறா? எனில் இல்லை. பொதுவாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இன்ன மந்திரத்தை இன்ன பலனுக்காக இவ்வளவு உரு ஜபிக்கப்போகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜபிப்பவர்கள் தான், தான் ஜபிக்கவேண்டிய மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கவேண்டும். அதை விடுத்து சாதாரணமாக ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாக இதை தெரிந்துகொள்வதற்கு புஸ்தகத்தை பார்த்தோ, இதுபோல் இணையத்தை பார்த்தோ தெரிந்துகொள்வது தவறில்லை

Saturday, December 29, 2012

ஸ்ரீமத் பகவத்கீதை

பாரத நாட்டின் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்ற ஸ்ரீமத் பகவத்கீதை பாரதக் கலாசாரத்தின் உயிர்ச் சக்தியாக விளங்குகிறது. பகவத் கீதையில் அனைத்து உபநிஷத்துக்களின் சாரம் அடங்கியுள்ளது, மட்டுமில்லாமல் பாரதக் கலாசாரத்தின் சிறந்த வடிவமும் பரிசுத்தமான கண்ணாடியைப் போல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனரின் உரையாடலின் மூலமாக அனைத்து மனிதர்களின் நன்மைக்காக, நல்லவர்களால் மிக்க ஆதரவுடன் சேவிக்கக்கூடிய பகவத்கீதை நல்வழியைக் காட்டுகிறது. இப்பேர்ப்பட்ட கீதை ஸம்ஸ்க்ருதத்தின் மூல ஆதாரமாகியுள்ள பல ரஹஸ்யமான அர்த்தங்களையும் எடுத்துரைக்கின்றது.
நமது பாரதக் கலாசாரத்தின் சிறப்பு என்னவென்றால், அனைத்திற்கும் தர்மமே மூலாதாரமாக நிற்கிறது. தர்மம் இரண்டு வகைப்படும் - சாமான்ய (சாதாரண) தர்மம், விசேஷ (அசாதாரண) தர்மம். அஹிம்ஸை, உண்மை, திருடாமலிருப்பது, சுத்தமாக இருப்பது, புலனடக்கம், தயை, மன்னிப்பு ஆகியவை சாதாரண தர்மம் எனப்படும். ஏனெனில் இவை எந்தவொரு குறிப்பிட்ட ஜாதிக்காகவோ, சம்ப்ரதாயத்தினர்களுக்காகவோ கூறப்படவில்லை, மொத்த மனிதர்களுக்காகக் கூறப்பட்டுள்ளன. அசாதாரண தர்மங்கள் குறிப்பிட்ட ஜாதி, மற்றும் வகுப்பினர்களின் பொருட்டு அவர்களுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர்மங்களை அனுஷ்டிக்காமல் அசாதாரண தர்மங்களை அனுஷ்டித்தாலும் கூட பலன் ஏற்படாது. இந்த இரண்டு வகையான தர்மங்களுக்கும் சாஸ்த்ரம் மட்டுமே பிரமாணம் என்று கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது -
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொ)
சாஸ்த்ரத்தில் கூறப்பட்டதை மீறினால் இப்பூவுலகிலும், பரலோகத்திலும் நஷ்டம் தான் ஏற்படும் என்பதையும் கீதா சாஸ்த்ரத்தில் கூறியுள்ளதைப் பார்க்கலாம் -
(ய: சாஸ்த்ரவிதிமுத்ஸ்ர்ஜ்ய வர்ததே காமகாரத: ந ஸ ஸித்திமவாப்னோதி ந ஸுகம் ந பராங்கதிம்)

இப்போது உலகத்தில் பலவிதமான தர்மங்கள், சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையனைத்திலும் மனிதர்களால் பின்பற்றக்கூடிய கருத்துகளும் உள்ளன. அவற்றில் அடங்கியுள்ள கருத்துகள் சிலவற்றில் சிறிது குறைவாகவோ அல்லது சிறிது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் நாம் சூக்க்ஷம பார்வையால் பாரதீய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்களைப் பற்றி சிந்தித்தால், அந்த அனைத்துக் கருத்துகளும் பாரதீய சாஸ்திர பார்வையில் சாதாரண தர்மங்களுள்ளே அடங்கிவிடும். அனைத்து நாடுகளிலும் சுகத்தின், அமைதியின், நிறைவின், சமூகசகோதர மனப்பான்மையின் வளர்ச்சிக்காக அஹிம்சை, உண்மை முதலிய சாமான்ய தர்மங்கள் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இந்த தர்மங்களைக் காப்பாற்றுவதற்கான உற்சாகம் நம்மிடத்தில் இல்லை. சுகம் - நிறைவுகளில் விருப்பமில்லை என்பது கலிகாலத்தின் லீலையாகும். இந்நாளில் அடிப்படையான இந்த தர்மத்திற்குக் குறை ஏற்பட்டுள்ளது, இதனால் மனிதசமுதாயம் எங்கும் கஷ்டத்தில் மூழ்கியுள்ளதைக் காணலாம். இன்று காம, க்ரோத, லோபங்களின் சாம்ராஜ்யம் மனித சமாஜத்தில் பலவிதமான பொருளாதாரச் சேர்க்கைகளுக்குக் காரணமாக உள்ளது. பாரதக் கலாசாரத்தில் அவற்றுக்கு இடமில்லை. பகவத்கீதையில் கூறுவதாவது -
(த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:
காம: க்ரோத: ததா லோப: தஸ்மாத் ஏதத்ரயம் த்ய«ஐத்)
தெய்வசம்பத்தையும் அசுரசம்பத்தையும் விரிவாகக் கூறுவதன் மூலம் கீதாசாஸ்திரம் மேற்கூறிய விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. சாத்வீகம் முதலிய குணபேதங்களால் மூன்று விதமான ஸ்ரத்தைகளைப் பற்றியும், புலனடக்க உபாயங்கள் பற்றியும் கூறியிருப்பது நன்மைக்காகத்தான் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் அறிந்த பரமேஸ்வரன் தான் நாம் செய்த கர்மங்களுக்குப் பலனளிப்பவன். அவனோ! பக்ஷபாதமில்லாமல், கர்மங்களை அனுசரித்து ப்ரஜைகளை சிருஷ்டி செய்கிறான். அப்போது பிராணிகளில் உச்ச, நீச எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவற்றின் அனைத்து செயல்பாடுகளும் சாஸ்திர ப்ரமாணங்களை மீறி சமமாக இருக்க இயலாது. கருணை சகோதரத்துவம் ஆகிய குணங்கள் எங்கும் சமமாக இருக்கவேண்டியவை. பகவத்கீதையில் கூறுவதாவது:
(ஆத்மொபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி சோர்ஜுன
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:)
இவ்வாறு அந்தந்த வர்ணங்களுக்குச் சொல்லப்பட்ட விசேஷ தர்மங்களும் கூடி அந்தந்த தர்மங்களுக்குத் தகுதி பெற்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுகின்றன. இது இவ்வாறு கூறப்பட்டுள்ளது -
விசேஷ தர்மங்களைக் குறித்தே இந்த கீதாவாக்யம் சொல்லப்பட்டுள்ளது.
(ஸ்வதர்மே நிதம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:)
ஆக பாரதக் கலாசாரத்தை நிலை நிறுத்துவதில் கீதாசாஸ்திரத்தின் பங்களிப்பு மிக உயரியதாகும்.
சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் பகவத்கீதையின் பங்களிப்பு மிக உன்னதமானது. அனைத்து மொழிகளின் வளர்ச்சியானது அந்தந்த இலக்கியத்தின் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழியில் உள்ள நூல்களின் கருத்துகளைப் பிரசாரம் செய்வதால் அந்தந்த மொழிகளின் எழுச்சியானது வளர்ச்சியடையும். இவ்வாறு இருந்தபோதிலும் சரளமான சம்ஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த கீதா சாஸ்திரம் “சிந்தாமணியைப் போல்” சகல விதமான நன்மைகளையும் அடையக் காரணமாகி, பிரசாரத்தை அடைந்து, சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

பற்றுக பற்றற்றான் பற்றினைஅப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’

நியமமும், நிஷ்டையும் கூடிய பெருந்தவத்தோர் வாழும் ஓர் ஆசிரமம் அது. அங்கு நிலவும் தெய்விகச் சூழலே மனித மனத்தில் அதிர்வுகளை உண்டாக்கி, நன்னெறிப்படுத்தும் தன்மை பெற்றது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வர்ணிக்கிறாரே அந்த மாதிரி மரவுரி உடையும், வெண்மையான வலம்புரிச் சங்கு போன்ற ஜடா முடியும், மான் தோலால் அணியப்பட்ட மாசற்ற மேனியும், விரதங்களால் நலிந்த தேகமும் கொண்டு கல்வியில் கரை கண்டவர்களும், கோபமும், காமமும் நீக்கியவர்களும் ஆக விளங்கிய தவயோகிகளின் வாழ்விடம் அது.
‘சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்
.... .... ... கற்றோர்க்கு
தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர்
அவர்கள் அங்கு தொண்ணூறையும் தாண்டிய வயதான துறவி ஒருவர். எல்லாருடைய பெருமதிப்பிற்கும் உரியவர். வாழ்ந்தது போதும் என நினைத்து உண்ணாமல் உயிரை விடமுடிவு செய்து சீடர்களை அழைத்து ‘உண்ணாநோன்பு இருந்து இறைவனை அடைய நினைக்கிறேன். நான்கு நாள்கள் தண்ணீர் மட்டும் சிறிது, சிறிது கொடுத்து பிறகு அதையும் நிறுத்தி விடுங்கள்’ என்றார். குருவின் கட்டளை ஆயிற்றே! சீடர்கள் பணிவுடன் அவர் சொற்படி நடந்தனர். நான்கு நாள்களுக்குப் பின் அவருக்கு நீரும் தரவில்லை. நினைவு வருவதும், போவதுமாக இருந்தது. அனைவரும் ஒரு தவிப்புடன், சோகத்துடன் எதிர்பார்ப்புடன் சுற்றிச் சுற்றி வந்தனர். மெதுவாக தங்களுக்குள், தங்களது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு வந்த ஒரு நடுவயதுத் துறவி கூறினார் ‘இந்த மகான் மகா சமாதி அடைந்தபின், அவரது ருத்திராட்ச மாலையிலிருந்து ஒரு ருத்திராட்சத்தை எனக்குப் பிரசாதமாக அளியுங்கள். அது என்னை மேன் மேலும் நன்னிலைப்படுத்தும்’ என்றார். திடீரென முதிய துறவிக்கு நினைவு திரும்புகிறது. உடலில் எழுந்திருக்க பலமில்லை. ஆனால் ருத்திராட்சத்தைத் தர முடியாது என்பதாக, கையை அசைத்துச் சைகை செய்தார். இவரோ எப்படியும் உயிரைத் துறக்க முடிவு செய்து விட்டார். இவர் தன்னுடன் எதைக் கொண்டு போகப் போகிறார்? பின் ஏன் முடியாது என்று கை அசைக்கிறார்? கீதையின் அக்ஷரப்ரம்ம யோகம் என்ற எட்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறிய படி
(ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோஹ்ருதி நிருத்யச)
என்று தன் புலன்களை வசப்படுத்தி மனத்தில் இறைவனையே நிறுத்தி, சிந்தித்துக் கொண்டு இருந்திருந்தால் ருத்திராட்சப் பித்து வந்திருக்காது. கூறுவது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் பற்றை நீக்குவது துறவிக்குக் கூட கடினம் என்பதைத் தான் அவரது செயல் காட்டுகிறது.
‘மற்று பற்று எனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்’ என்று தான் அடியவர்கள் பாடுகிறார்கள். சதா சலித்துக் கொண்டே இருக்கும் நம் மனம் எதையாவது பற்றிக் கொள்ளும் இயல்பை உடையது. கொடியானது, ஒரு கொழுகொம்பைப் பற்றுவது போல மனத்திற்கு ஒரு பற்று தேவை. அதனால் தான் வள்ளுவர்
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’
என்கிறார். இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு விட்டால், உலகியல் பந்தங்களும், பாசங்களும் புளியின் ஓடு போல தானே கழன்று விடும்.
பற்று என்பது நான் என்னும் அகப்பற்றாகவும், எனது என்னும் புறப்பற்றாகவும் விளங்குகிறது. நான் என்பதை ஒரு மரத்தின் நடுப் பகுதியாக, அடி மரமாகக் கற்பனை செய்வதால், எனது, எனது என்று தோன்றி வளர்ந்து கொண்டே வரும் பற்றுகளை மரத்தின் கிளைகளாகச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சங்க இலக்கியங்களில் கூட பற்றுகளை வென்று, வீடு பேறடைந்த மன்னர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கிடைத்தற்கரிய கனி, உண்டவர்களின் ஆயுளை அதிகமாக்கும் என்ற பெருமையுடைய நெல்லிக்கனி கிடைத்தும் அதை, தான் உண்ணாமல் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி மற்றும் பல பாடல்களால் மக்களை நன்னெறிப்படுத்திய ஔவையார் உண்பது தான் சிறந்தது என்று அக்கனியை ஔவைப் பாட்டிக்கு அதியமான் அளித்தது, முழுமையாக அகப்பற்றை நீக்கியதால் தான். நான் வாழ வேண்டும். நான் தான் வாழ வேண்டும். நான் தான் பெறற்கரிய கனியை உண்ண வேண்டும் என்ற தன்முனைப்பு இருந்தால் தியாக உணர்வே வராதே!
உண்மையாகவே தன் நாட்டில் வாழும் மக்களுக்கான பலனுள்ள தொண்டை மகேசன் தொண்டாகப் போற்றியவர்கள் அந்நாளைய மன்னர்கள். இறைவனின் அடியவர்களாக நாட்டை ஆண்டவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு தருமபரிபாலனம் பண்ணிய மன்னன் மனுநீதிச் சோழன். அவனது மகன் இந்தக் காலத்துப் பையன்களை போலவே செயல்பட்டு, அனுபவமின்றி தேரோட்ட ஒரு கன்றுகுட்டி இறக்க, தாய்ப்பசு கடைவாயிலில் மணியடிக்க, தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்து நீதி வழங்கிய மன்னர், சுயநலப் போக்கை நீக்கி புறப்பற்றை வென்று விடுகிறார். மக்கள் மீதுள்ள பற்றை விடுவது மிகவும் சிரமமான செயல், புறாவைத் துரத்தி வந்த பருந்து விவாதம் செய்ய, புறாவைக் காக்க வேண்டி தன் உடல் சதையையே அரிந்து கொடுத்த மாமன்னன் ‘புள்ளுறு புன் கண் துயர்’ மட்டுமா தீர்க்கிறான்? தான், தன் உடல், உடல்வலி என்ற எந்த நினைவுமின்றி, தர்மத்தை தான் காத்து; தர்மத்தால் காக்கப்படுகிறான். ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ பருந்தாகவும் புறாவாகவும் வந்து அவனைச் சோதித்த இந்திரனும் வருணனும், அவன் முன் சுய உருவில் தோன்றி வரமளித்து மறைந்தனர். அகப்பற்று நீங்கினால் ஆனந்தம் தானே! சிபியின் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறதே!
‘பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரிய’னின் திருவடிகளில் சரணடைந்தவர்களால் பற்றுகளை அறுக்க முடியும். ‘கொடுந்தொழில் வல்வில் கொலை இய கானவர்’ குடிப் பிறந்த அரசிளம் குமாரர் பின்னால் திண்மையடையப் போகும் மனத்திற்குப் பொருத்தமாக பெயர் ‘திண்ணன்’ என்று அமைந்தது கூட இறையருள் தான். காட்டாச்சிக்கு ஏற்ற வேட்டையில் திறமைசாலி. சுற்றமும், நட்பும் நிறைந்த காட்டு வாழ்க்கை நன்றாகவே நடந்தது. காளஹஸ்தி மலையில் சிவலிங்கத்தைக் கண்டவுடன் எல்லாம் மாறியது. வேட்டையில் நாட்டமில்லை. விளையாட்டில் தேற்றமில்லை. குலத் தொழில் என்று செய்கின்ற வேட்டையையும் கர்ம யோகமாக்கி விட்டான். புறாவை வாயால் கடித்துக் கடித்து மெதுவாகக் காளத்தியானுக்குப் படைத்து, வாயில் கொண்டு போன நீரை லிங்கத்தின் மேல் உமிழ்ந்து அபிஷேகமாக்கி, அவனுக்கு தெரிந்த ஆசாரத்தில் இறைவழிபாட்டை தினம் செய்தான். சிவகோசரியார் படைத்த பூக்களையெல்லாம் குப்பையாகக் கருதி வெளியே வீசி விடுவான். நாள்கள் கழிந்தன. ஒருநாள், கண்ணிலும், மனத்திலும் நிறைந்து, எண்ணமெல்லாம் இனிக்கச் செய்யும் காளத்தியானை தரிசிக்க திண்ணன் வந்தான். காளத்திநாதரின் கண்ணில் இருந்து குருதி கொப்பளிக்க, திண்ணன் உடல் சாம்பி, உள்ளம் நைந்து, செய்வதறியாது திகைத்துத் திணறியது. சில நொடிகள் தான். காட்டு ஆட்சி முறையே, கண்ணுக்கு பதில் கண், உயிருக்கு பதில் உயிர் என்பது தானே.
தனக்கு நேரப் போகும் அவலத்தைக் கருதாது, காளத்தியாருக்கு கண் நேராக வேண்டும் என்பது ஒன்றே குறியாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து காளத்திநாதரின் கண்ணில் பொருத்த ஈசனின் கண்ணின் புண் நேராகி விட்டது. ஈசன் விளையாட்டு மேலும் தொடர அவருக்கு, அடுத்த கண்ணில் குருதி கொப்பளித்தது. பார்த்தான் திண்ணன். அடுத்த கண்ணையும் தோண்டிய பின், எப்படி அதை இறைவனுக்குப் பொருத்துவது என யோசித்து அவனது அன்பின் ஆழத்தில் தன் கண்ணை எடுத்த வலி கூட தெரியவில்லையே - தன் காலை அந்த கண்ணில் அடையாளத்துக்கு வைத்தான். அடுத்த கண்ணையும் நொடியில் இறைவனுக்கு அளிக்க, இறைவன் அவன் முன் தோன்றி இழந்த கண்களை அளித்து, பெறற்கரிய பேற்றை அளித்தார். திண்ணன் கண்ணப்பர் ஆகி, இன்றும் நாம் பூசைசெய்யும் நிலையில் இறவா வரம் பெற்றல்லவா இருக்கிறார்? ‘கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்’ என்று சுந்தரர் பாடுகிறாரே. தன் உடல் மீது, உயிர் மீது பற்று என்பதான அகப்பற்று நீங்க ‘இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காதான் தாள்களைப் பற்றியவராயிற்றே கண்ணப்பர்! ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு தானே! சிவகோசரியார், நறும்புனலாடி, ருத்ரம் சமகம் செபித்து, கொண்டு வந்த தூயநீரையும், ‘சுரும்பும் ஊசாச் சுடர்’ பூக்களையும் ஏற்ற இறைவன், கண்ணப்பன் தன் வாயிலே கொண்டு வந்து உமிழ்ந்த நீரையும், அழுக்கு நீரையும், கடித்துச் சுவைத்துக் கொணர்ந்த பன்றி மாமிசத்தையும் -அதுவும் அழுக்கு தான்- ஏற்றார். அவருக்கு தன் மீது பக்தன் வைக்கும் பற்று தானே பெரியது? ஒரு புலவர் பாடுகிறார்:
தருமம் தவஞ்சற் றறியாத வேடுவன் தன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிகாமலர் அவன் வாய்உதகம்
திருமஞ் சனப்புனல், பல்லால் அவன்மென்று தின்றதசை
அருமந்த போனகம் அன்றோநம் காளத்தி அப்பனுக்கே.
சோழநாட்டில் செங்காட்டாங்குடியில் பிறந்தவர் பரஞ்சோதி. வீரமும், தீரமும் மிக்க இவர் பல்லவ மன்னர் நரசிம்மரின் படைத் தளபதியாக, வலக்கரமாக, நாட்டைக் காக்கும் நல்லாண் மகனாக உயர்ந்தார். சிவபக்தி முறுக்கேறியது. அவரை ஆட்கொள்ள நினைத்த ஈசன் சிவனடியாராக வந்து பிள்ளைக் கறி கேட்டார். சிவனடியாரின் ஆவலை நிறைவேற்ற, தன் மகனையே கொல்லப்போகும் வேளையில், சிவனடியார், ஈசனாகக் காட்சி தந்து அருளினார். பரஞ்சோதி, சிறுத்தொண்ட நாயனாரானார். ‘செங்காட்டாங்குடி மேய சிறுத் தொண்டர்க்கடியேன்’ என்று சுந்தரரால் திருத் தொண்டர் தொகையில் புகழப்படுகிறார்.
நமக்குத் துன்பம் வந்தால் பொறுத்துக் கொள்வோம். நம் குழந்தைகளின் துயரையோ, இழப்பையோ தாங்குவது கடினம். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று பாரதி அழகாகப் பாடி விட்டார். அப்படி அருமையான, தன் மகனையே, சிவனடியாருக்காக இழக்கத் துணிந்ததால், பரஞ்சோதியாரின், சிறுத் தொண்டரின் பற்றின்மை எந்த அளவு உரம் பெற்று இருந்திருக்கும்? அப்பூதி அடிகள், மெய்ப்பொருள் நாயனார் என்று வரிசையாகக் கூறிக்கொண்டே போகலாம். நாயன்மார்களாகட்டும், ஆழ்வார்கள் ஆகட்டும், தங்கள் பற்றை மடை மாற்றி இறைவனைக் கொழு கொம்பாகப் பற்றிக் கொண்டவர்கள். கோதை நாச்சியார் அழகாகப் பாடுகிறாள் ‘உன்தன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது’ என்று யாக்கை நிலையாமையையும், நாம் பற்று வைக்கும் பொருள்களின் நிலையாமையையும் கண்டு ஞானியர், தாமரை இலை மேல் இருக்கும் நீர், குளத்து நீருடன் ஒட்டாதிருப்பது போல உலகியலில் பற்றற்று வாழ்வார்களாம். ஔவையார் பாடுகிறார்:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
அம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே திருமாலின் மகனான, காமனின் கையிலும் உள்ளது. காமன் கரும்பு வில்லுடன் தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலோத்பலம் என்ற ஐந்து மலரம்புகளையும் கொண்டு உலகைத் தன்வயப் படுத்துகிறான். அவனுக்கு இந்த படைக்கலனை தந்தவளே அம்பிகை தான். அவனுடையது மாயா சொரூபமான படைக்கலம் என்றால், அம்பிகையின் கரும்புவில் ஞான சொரூபமாக, காமனால் ஏற்பட்ட மாயையை அழிக்கிறது. அதே போன்று இவர் நல்லவர், அவர் கெட்டவர், இவரைப் பிடிக்கும் அவரைப் பிடிக்காது என்று உலகையே கூறு போட்டு விருப்பு வெறுப்புகளால் பிரித்துப் பிரித்து வைக்கும் மனிதனை யமதருமராஜன் தன்னிடமுள்ள பாசக்கயிற்றால் கூறு போட்டு, உயிரை உடலிலிருந்து பிரித்து நல்வினை, தீவினைக்கேற்ப, ஓயாத பிறவிக் கடலில் சிக்கி அல்லலுற வைத்து மாய விளையாட்டு விளையாடுகிறான். அஞ்ஞானத்தை, அகங்காரத்தை அடக்கும் அன்னையோ, தன் கையிலுள்ள பாசக்கயிற்றால், தன் திருவடியில் கட்டி. மற்ற கட்டுகளை அவிழச் செய்துவிடுகிறாள். பாச அங்குசத்துடன் கூடிய அன்னையை தியானிக்க, தியானிக்க, நம்முடைய உலகியல் பற்றுக்கள் நீங்கும், விறகுக் கட்டைச் சுற்றியுள்ள இறுகிய கயிற்றை அவிழ்க்க, வேறு ஒரு கயிற்றினால் விறகுக்கட்டை இறுக்க முதல் கட்டு அவிழ்கிறதே அது போன்ற செயல் தான் இது.
யாருக்கும், எந்த தெய்வம் வேண்டுமானாலும் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். முருக பக்தர்கள் ‘வேல், மயில்’ என்றே தியானம் செய்வர். அகப்பற்று, புறப்பற்றும் நிறைந்த சூரபத்மன், முருகனால் வதம் செய்யப்பட்ட போது முருகன், அவனது தீய பற்றுகளை மட்டும் அழித்து அவனைச் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி வாகனமாகவும் கொடியாகவும் கொண்டாரே. “பற்றுகள் அழிந்த நிலையில் உன்னையே தாங்கும் வாகனமாகி, உன்னுடன் பூசையும் பெறுகிறதே கோல மயில், சூரமயில். அந்த அளவு இல்லை என்றாலும், என் பற்றையும் நீக்கி, உன் திருவடியில் சேர்த்துக் கொள்” என்று வேண்டலாம்.
“தருக்குற்று வந்த கங்கையைத் தலையில் கொண்டாய். தாருகாவனத்து முனிவர் ஏவிய பாம்புகளை அணிகலனாக்கிக் கொண்டாய். அவர்களது மதயானை உரி போர்த்தாய். இவற்றை எல்லாம் விட கொடியவனா, அகந்தையுடையாவனா நான்? இல்லை. அதனால் என் பாசத் தொடரை அறுத்து, ‘நின் சேவடிக் கீழ் சிறு தொண்டன் ஆக்கிக் கொள்” என வேண்டலாம்.
“கோபிகைகளுக்கு அருளியவா! சதா சலிக்கும் குரங்குகளைச் சலிக்காமல், உன் திருவடியில் கொண்டவனே! வேடனுக்கும், விலங்குகளுக்கும் அருள் செய்தவா! விலங்கு புத்தியுள்ள என் பற்றுகளை அறுத்து, நின் திருவடிச் சரணங்களை பற்ற. நின் அருளாலே நின் தாளைப் பற்றிட வழிகாட்டு” என கண்ணனையும், இராமனையும் வேண்டலாம். “எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்பது குறள் கூறும் நல்லுரையல்லவா!.”


அம்பாளின் மஹிமை

வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ ||
காளிதாசன் தன்னுடைய ரகுவர்மச காவ்யத்தை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் உலகின் தாயும் தந்தையுமானவர்களும், சொல்லும், பொருளும் போன்று பிளீக்க முடியாதவர்களும் லோகத்தின் மங்களமான தம்பதியுமான பார்வதீ பரமேச்வரர்களை நமஸ்கரிக்கின்றேன், என்று மங்கள ஸ்லோகத்தில் கூறுகின்றான்.
உலகத்தின் தாயும் தந்தையுமாகிய அந்த பார்வதீ பரமேஸ்வரர்களின் மஹிமைகளை வார்த்தைகளால் வடித்துக் கூற இயலாது. அதிலும் அந்தப் பரமேஸ்வரனையே மங்களமாக்குகின்ற ஸர்வமங்களையான அந்தப் பரமேஸ்வரியின் மஹிமைகள் பற்றிச் சிந்திப்பதே நமக்கு மிகுந்த மனமகிழ்வைக் கொடுக்கும்.
ஞானசம்பந்த பெருமான், தமது தேவாரத்தில் “பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே” என்று அம்பாளை “பெண்ணில் நல்லாள்” என்று குறிப்பிடுகின்றார்.
எக்காலத்திலும் எல்லாரிடத்திலும் பூரணமான தாய்மையுணர்வு அம்பாளின் ஹ்ருதயத்தில் பொங்கி வழிகின்றது. தன்னால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னுடைய கருணையை மழையாகப் பொழிவிக்கின்றாள் அந்தப் பராசக்தி.

அந்த அம்பாளின் மஹிமைகளும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அவளுடைய கருணையானது ஸாகரம் போன்று பரந்து அதுவும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அம்பாளைப் பற்றி அபிராமி பட்டர்,
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே!
என்று கூறுகின்றார்.
அம்மா! என்று தன்னுடைய சிறு குழந்தையானது அன்புடன் ஓடிவரும் போது அதனுடைய தாயானவள் எவ்வாறு தாயுள்ளத்துடன் தன்னுடைய குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்கின்றாளோ, அது போன்று ஜகன்மாதாவான அம்பாளையும் நாம் ஒரு முறையாவது “அம்மா!” என்று உளங்கனிந்த அன்புடன் அழைத்துவிட்டால் நம்முடைய இடர் களைய அவள் ஓடிவருகின்றாள்.
தன்னிடம் அன்பு செலுத்தாத பிள்ளையிடம் கூட ஓர் அன்னை அன்பு செலுத்துவதைப் போன்று நாம் அவளை நினைக்காவிட்டாலும் நம்மிடையே அவள் இன்றளவும் கருணை மழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றாள். அதனால்தான் நாம் இன்றளவும் இம்மண்ணில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் மறந்தாலும் நம்முடைய தாய் நம்மை மறவாமல் இருக்கின்றாள். ஆனால் பெற்ற தாயினை மறப்பது என்பது பரிஹாரமே இல்லாத மஹாபாபமாகும். பெற்ற தாயினை மறப்பதே இவ்வளவு பெரிய பாபத்தினைத் தருமானால் ஜகன்மாதாவான அந்த அம்பாளை மறப்பது தகுமா? அவள் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒன்றைத் தவிர அது சற்றும் கலக்கமுறாத தூய அன்பு!
அந்த பராசக்தியான அம்பாள் ஜகத்பிதாவான பரமேஸ்வரனின் பத்நியாக இருந்து கொண்டு நம்மனைவர்க்கும் தாயாக இருந்து கொண்டு இந்த உலகத்தினை நடத்துகின்றாள்.
அபிராமிபட்டர் கூறுகிறார்:
“துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே!
என்று,
மேலும் அந்தப் பரமேஸ்வரனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்குகின்றாள். ஆதிசங்கர பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரியில் அம்பாளைப் பற்றிக் கூறும் போது.
“சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |
அதஸ் - த்வா- மாராத்யாம் ஹரி - ஹர விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி ||
பரமேஸ்வரன் அம்பாளுடன் பிரியாமல் இணைந்திருப்பதனால் தான் இந்த உலகினை இயக்க சக்தியுடையவர் ஆகின்றார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் அசைவதற்குக் கூடத் திறமையற்றவர் ஆகிவிடுவார். எனவே ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ரர்களால் பூஜிக்கப்பட்ட உன்னை வணங்குவதற்கோ, அல்லது துதிப்பதற்கோ கூட புண்யம் செய்தவனால் மட்டுமே முடியும்! என்று கூறுகின்றார்.
அம்பாளைப் பற்றி நினைப்பதற்கும், அவளைத் துதிப்பதற்கும் அவளுடைய அருள் இருந்தாலன்றி முடியாது.
அம்பாளைப் பற்றி நம்மால் எவ்வாறு அறிய முடியும்? ஆனால் ஜகன்மாதாவான அந்தப் பரமேஸ்வரியே தன்னுடைய கருணை விழிகளால் நம்முடைய அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஞானம் என்ற வெளிச்சத்தினால் தன்னை அறியுமாறு செய்கின்றாள். தாமரையை விடவும்ம் மென்மையான அந்த அம்பாளின் திருவடிகளை இடைவிடாது ஆராதிப்பதே நம்மைத் துன்பமில்லாத சிவானந்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
அத்தகைய அந்த அம்பாளின் பாதத் தாமரைகள் எவ்வாறு விளங்குகின்றன?
அவித்யானாம் அந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணிகுணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி
அம்பாளுடைய திருவடித் தாமரைகள் அவித்யை உடைய உள்ளத்தினர்க்கு, இருளினை நீக்கும் சூர்யனுடைய உதயத்தீவின் நகரத்தினைப் போன்றும், விவேகமற்றவர்களுக்கு ஞானமாகிய கற்பக விருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச்செல்லும் மகரந்தம் போலவும், ஏழைகளுக்கு நினைத்ததை அளிக்கும் சிந்தாமணிக் குவியலாகவும், பிறவிக்கடலில் மூழ்கியவர்களை மீட்டெடுக்கும் வராஹமூர்த்தியின் கோரைப்பற்கள் போன்றும் விளங்குகின்றது என்று ஸௌந்தர்ய லஹரீ கூறுகின்றது.
அத்தகைய அம்பாளின் திருவடிகளே நம்மை உய்விக்க வல்லது. இதை அபிராமிபட்டர் இவ்வாறு கூறுகின்றார்.
“சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்தூர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே!
எனவே பரமேஸ்வர பத்நியும், கணபதி, ஸ்கந்தன் ஆகியோரின் குறும்புகளால் மகிழ்வடையும் அன்னையும், நம்மை பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்டெடுப்பவளும், நித்ய சுமங்கலியும், கருணைக்கடலாகியவளுமான அந்த அம்பாளின் திருவடிகளில் சரணமடைவதே நம்முடைய பிறவிப்பயனை அடைய வழிவகுக்கும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயுமென்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
-அபிராமி பட்டர்

ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோர் கூற்றில் முதன்முதலாகப் போற்றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாதுகாத்து வருவதில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவனாயினும் தாய் தன் அன்பினால் அவனைத் திருத்த முயல்வாளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் தீங்கு எண்ணமாட்டாள். இதுவே தேவ்யபராத - க்ஷமாபனஸ்துதியில் -
(குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி)
என்றவாறு தாயின் மேன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக உலகில் ஒருவன் அல்லலுறும்போது அன்னையை நினைந்து அவளுடைய ஆறுதலை எதிர்பார்ப்பது இயல்பு என்று பாஸ்கரராயர் என்ற உரையாசிரியர் தமது லலிதா ஸஹஸ்ரநாம உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புவியிலுள்ள அன்னையர் தமது மக்களின் துயர்துடைத்து ஆறுதலளிப்பார்களேயன்றி ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆத்யாத்மிகமெனும் மூன்றுவித தாபங்களைப் போக்க அவர்களால் இயலாது. அவ்விதமான மூன்று தாபங்களையும் போக்கவல்லது ஜகன்மாதாவான அம்பிகையின் அருளே என்று திண்ணமாக உரைக்கிறார் -
(அநுபூதாஸ்து மாதரோ ந தாபத்ரய ஹரண-ஸமர்த்தா:
அதோ துரந்த துஃக்க ஹரணக்ஷமாஸு ஸர்வோத்தமா ஜகன்மாதா ஏவ
ஸ்வஸ்மின் தயாவத்வாபாதனாய மாத்ருத்வேன ஸ்தோதவ்யா)
ஆகவே பிறப்பு இறப்பு என்று மாறி மாறி உழலும் சக்கரத்திலிருந்து முழுமையாக விடுபட ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை. ஜகன்மாதாவான அம்பிகையானவள் தன்னைத் துதிப்போர்களை, துதித்த மாத்திரத்தில் அவர்களுக்கு தன்னுடன் இரண்டறக் கலக்கும் மேலான நிலையை - ஸாயுஜ்யத்தை - அருள்வாள் என்று பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரீயின் 22ஆவது சுலோகத்தில் கூறுகிறார் -
(ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்)
என்று ஆசார்யர், ஜீவாத்மாவானது பரமாத்மாவான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை நிலை நாட்டியிருப்பினும் அந்தப் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்வதற்கு ஸகுணப்ரஹ்ம உபாஸனை வழிவகுக்கும் என்றும், அதற்கு பக்தி ஓர் இன்றியமையாத ஸாமக்ரீயென்று விவேகசூடாமணியில் னீணீமீ]sணீஜ்ஸீ sணீனீ¢(ணீனீ! தூவீடுக்ஷீமீஸ் ரீக்ஷீமிஹ்sமி (மோக்ஷஸாதனஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) என்று சொல்லப் பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார். இவ்விதம் சுத்த சைதன்யஸ்வரூபமான நிர்குணப்ரஹ்மணை உணர ஸகுணப்ரஹ்மஸ்வரூபமாக தமக்கு உகந்த இறைவடிவங்களைத் துதிக்கிறார். பாவனோபனிஷத்தில்
(நிருபாதிக ஸம்விதேவ காமேச்வர:, ஸதானந்தபூர்ண: ஸ்வாத்மைவ பரதேவதா லலிதா)
என்று உபாதியற்ற சுத்தசைதன்யமே ஸம்வித் வடிவான காமேச்வரன், எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்து பரிபூர்ணமாயிருக்கின்ற தன்னுடைய ஆத்மசைதன்யத்தின் ஓர் அம்சமே பரதேவதையென்னும் லலிதாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் மற்றும் ஸௌரம் என்ற ஆறு மதங்களை ஸ்தாபித்து அந்த தெய்வங்களுக்கான துதிகள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அந்த ஸ்தோத்ரப் படைப்புகளில் அம்பிகையைக் குறித்ததான சிலவற்றில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை இங்கு காண்போம். பகவத்பாதரின் தேவீ ஸ்தோத்ரங்களில் முதன்மையாகத் திகழ்வது ஸௌந்தர்யலஹரீயாகும். 103 சுலோகங்களைக் கொண்ட இந்த அரிய படைப்பு முதல் 41 சுலோகங்களுடன் ஆனந்தலஹரீ யெனும் பெயரில் முதல் பாகமாகவும், எஞ்சியிருக்கும் பாகம் ஸௌந்தர்யலஹரீ என்ற பெயரில் இரண்டாவது பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளதை உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அருணா மோதினீ உரையாசிரியரான காமேச்வர ஸூரி அல்லது காமதேவ கவி தம் உரையில் -
(வஸ்துதஸ்து அத்ர ஆனந்தலஹரீ ஸௌந்தர்யலஹரீ இதி வ்யவஹாரேண)
என்ற மரபைக் குறிப்பிடுகிறார். இதே கருத்தை டிண்டிம உரையாசிரியரான இராமகவியும், கோபாலஸுந்தரீ, ஆனந்தலஹரீ உரையாசிரியர்களான கோபாலசுந்தரரும், கௌரீகாந்தபட்டரும் குறிப்பிடுகின்றனர். மேலும் முதல் பகுதியில் காணும் 41 சுலோகங்கள் மந்த்ர சாஸ்த்ரத்தை விவரிப்பதாகவும் இரண்டாம் பகுதி அம்பிகையின் எழிலை வர்ணிப்பதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய மேன்மையான ஸ்தோத்ரத்தை தம் அடியவர்களின் மேன்மைக்காக சிவபெருமானின் அவதாரமான பகவத்பாதர் அருளியுள்ளாரென்று ஆனந்தகிரி என்ற உரையாசிரியரும் தெரிவிக்கிறார். அருணாமோதினீ உரையாசிரியர் இந்த ஸ்தோத்ர காவ்யத்தின் சிறப்பை suஜ்ணீவீsழிஜ்ணீமீனீஸிஙீஹ்மீ (ஸுதாஸிந்தோர் மத்யே) என்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் - பகவத்பாதர் இந்த ஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரத்தை எடுத்துக் கொண்டு கயிலாயத்திற்குச் சென்றபோது அங்கு ஏற்கெனவே அத்துதியைப் பாடக்கேட்டு, தம் இதயத்தில் இத்துதியைத் தோற்றுவித்து அருள்புரிந்தவர் கயிலாயத்தில் உள்ள உமாமஹேச்வர தம்பதியே என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(பகவத்பாதா: ஸ்தோத்ரமேதத் விதாய கைலாஸம் கத்வா தத்ர ஏதாமேவ
ஸ்துதிம் பார்வதீ பரமேச்வர ஸமீபே பட்யமானாம் த்ருஷ்டவந்த: இதி ப்ரஸித்தி:)

ஸ்தோத்ரம் அல்லது வழிபாடு தமது மனத்துக்குகந்த கடவுளைக் குறித்த புறவழிபாடாக அமைவது அனைவராலும் இயன்ற ஓர் எளியமுறை. ஆனால் அதையே உட்புற வழிபாடாக தம் இதயத்தின் தஹராகாசத்தில் அமைந்திருக்கும் ஜ்யோதிஸ்வரூபத்தைக் குறித்ததாக அமையும் போது அது புலன்களைக் கட்டுப்படுத்திய துறவிகளால் மட்டுமே இயலும். இதுவே ஸமயாசாரமென்று அழைக்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில்(ஸமயாசார தத்பரா) என்ற பெயருக்கான உரையில் பாஸ்கரராயர் இவ்வாறு விளக்குகிறார் -
(தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:)
இதயத்தின் தஹராகாசத்தில் ஸ்ரீசக்ரத்தைப் பாவித்து அதற்குச் செய்யப்படும் பூஜையே ஸமயாசாரம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார், பாஸ்கரராயர். இவ்வகையான ஸமயாசார முறையையொட்டியே ஸௌந்தர்யலஹரீ அமைந்ததாகவும் லக்ஷ்மீதரர் தம் உரையில் குறிப்பிட்டு பகவத்பாதரின் ஸமயாசார முறையில் ஆழ்ந்த புலமையையும் விவரித்துக் கூறியுள்ளார் -
(பகவத் பாதாசார்யா: ஸமயமத பாரத்ருச்வான: ஸமயாசாரப்ரவீணா: ஸமயரூபாம் பகவதீம் -
ஸ்துவந்தி ஸமயாசாரோ நாம ஆந்தரபூஜாரதி: குலாசாரோ நாம பாஹ்யபூஜாரதி: இதி ரஹஸ்யம்)
என்றும், மேலும் இதையே விவரிக்கும் போது பாஹ்யபூஜா என்னும் புறவழிபாட்டில் பூர்ஜபத்ரம் அல்லது துணி அல்லது தங்கம் அல்லது வெள்ளியாலான தகட்டில் சக்ரவடிவம் எழுதி வழிபடுவது. இதையே ஆன்றோர் கௌல பூஜையென்று அழைப்பதாகவும் கூறுகிறார் -
(பாஹ்யாகாசஜம் நாம பாஹ்யாவகாசே பீடாதௌ பூர்ஜ பத்ர சுத்த பட ஹேம
ரஜதாதி பட்டதலே லிகித்வா ஸமாராதனம் ஏததேவ கௌல பூஜேத்யாஹு: வ்ருத்தா:)
பகவத்பாதர்களும் புறவழிபாட்டினும் மேலான உட்புறமான ஆறு சக்ரங்களின் வழிபாட்டின் வாயிலாக தஹராகாசத்தில் தேவியை உபாஸிப்பதையே உணர்த்துகிறார். ஆத்மானு ஸந்தானமெனப்படும் சிவ-சக்தி வேறுபாடற்ற சுத்த சித்சக்தியான அம்பிகையை துதியின் மூலம் வர்ணிப்பதற்காகவே பகவத்பாதர் மந்த்ரங்களைக் குறிப்பிடுகிறாரென்று ஸௌபாக்யவர்த்தனீ உரை யாசிரியரான கைவல்யாச்ரமியும் தெரிவிக்கிறார் -
சிவ-சக்த்யோ: அபேதம் ஞாபயிதும் ஸகல ப்ரபஞ்ச ஸாக்ஷிண்யா: ப்ரஹ்ம –
அவினாபூத சித்-சக்தே: ஸ்துதித்வாரா மாத்ருகாதி மந்த்ரான் உத்தரதி
இதையே பாவனோபனிஷத் உணர்த்துவதாக முன்னர் குறிப்பிடப்பட்டது.
அம்பிகையை வழிபடவும் ஒருவர் ஈட்டிய நற்பலன்களே வழிவகுக்கும் என்பதை ஆசார்யர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஸௌந்தர்யலஹரியில் காணும் சுலோகங்களை விளக்கும் பொழுது உரையாசிரியர்களனைவரும் ஆசார்யரின் உத்திகளில் காணும் பொருட்செறிவையும். அவரது ஆழ்ந்த புலமையையும் போற்றியுள்ளனர். ஒவ்வொரு சுலோகத்தின் உரையிலும் சாக்த விஷயமானதும், பீஜமந்த்ரங்களைக் குறித்ததுமான பல சீறிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டாம் சுலோகத்தில் காணும் tஸீமிஹ்ணீ
(சரணா: சத்வார: - சுக்ல-ரக்த-மிச்ர-நிர்வாணா: தேஷாம் த்யான ஸ்தானானி - சுக்ல-ரக்தயோ: ஆக்ஞாசக்ரம் த்விதலம் மிச்ரஸ்ய ஹ்ருத்கமலம் நிர்வாணஸ்ய ஸஹஸ்ரதலம் த்வாதசாந்தம் சுக்லரக்தயோ: ப்ரஹ்ம-விஷ்ணூ த்யேயௌ மிச்ரே ருத்ர: நிர்வாணே ஸாக்ஷாத் பரமானந்த நிர்பர: ஸதாசிவரூப:)
என்று வர்ணித்து ப்ரஹ்மா அம்பிகையின் ரக்தவர்ணமான திருவடித்தாமரையின் துகளைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார்; விஷ்ணு வெண்மையான துகளைக் கொண்டு காத்தலையும், ஹரன் மிச்ரமான துகளைக் கொண்டு அழித்தலையும் புரிகின்றனரென்று சாக்த ஸம்ப்ரதாயத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.
அடுத்ததாக ஸுதாஸிந்தோர் மத்யே என்று தொடங்கும் 8ஆவது சுலோக உரையில் டிண்டிம உரையாசிரியர், தியானம், 64 உபசாரங்களுடனான பூஜை மற்றும் மந்த்ரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்காங்கே ஆகம ரஹஸ்யங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் உரையாசிரியர்கள். மேலும் (ஸுதா ஸிந்தோர் மத்யே) என்று தொடங்கு (குல குண்டே குஹரிணி) என்று முடியும் 10ஆம் சுலோகம் வரையிலான மூன்று சுலோகங்களில் குண்டலினியின் ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டு துதிக்கப்படுகிறது. (சதுர்பி: ஸ்ரீகண்டை:) யென்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் ஸ்ரீசக்ரம் அதை எழுதும் முறை ஆகிய விளக்கப்பட்டுள்ளன. (முகம் பிந்தும் க்ருத்வா) என்ற சுலோகத்தின் மூலம் ஆசார்யர் அர்த்தநாரீச்வர த்யானத்தை வர்ணித்து அதன் பலனையும் குறிப்பிடுகிறார். இங்கு பெரும்பாலான உரையாசிரியர்கள் 'க்லீம்' என்ற காமபீஜத்திலுள்ள உயிரெழுத்தாகிய 'ஈம்' என்ற எழுத்தின் வடிவத்தைக் குறிப்பிட்டு வேத மந்த்ரமான யஸ்தித்யாஜ ஸசிவிதம் என்று தொடங்கும் ரிக்வேத மற்றும் தைத்திரீய ஆரண்யகத்தில் இடம் பெறும் மந்திரத்தை மேற்கோளாகக் காண்பித்து பகவத்பாதரின் கருத்தை விளக்குகின்றனர். குறிப்பாக டிண்டிம உரையாசிரியரான இராமகவி சாரதா இலிபியெனும் காச்மீரதேசத்து எழுத்துகளில் 'ஈம்' என்ற எழுத்தின் வடிவம் ஸ்த்ரீரூபமாகப் புலப்படும் என்று விளக்குகிறார் -
(அத்ர லகார ககார வர்ஜனேன நிஷ்க்ருஷ்ட ரூப மன்மத பீஜம் ஸா ஏவ மஹாவித்யா
தஸ்யா சாரதாலிபிப்ரகாரேண லேகனேன ஸ்த்ரீரூபம் ஸம்பவதி முகம் பிந்துதயா
பாதி தத் அதஸ்தாத் த்வி பிந்துகம் குசத்வயம் ததா ஞேயம் அதஸ்தாத் த்ரிகோணகம்
ஏவமீகாரம் ஸ்யாத் ஏவம் காமகலா பரா)
முன்னர் குறிப்பிட்டவாறு ஸௌந்தர்யலஹரீயின் முதல் பகுதியில் காணப்படும் சுலோகங்கள் பெரும்பாலும் மந்த்ரகர்பமாக - அதாவது மூலமந்த்ரங்களை மையமாகக் கொண்டு வர்ணிக்கப்படுவதாக இருப்பினும் பாமரமக்களின் நலன் கருதி எளிய முறையில் கடைப்பிடிக்கப்படும் நாமோச்சாரணத்தின் மகிமையையும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். ராமகவி இக்கருத்தை தமது 22-ஆவது சுலோகத்திற்கான உரையில் விளக்குகிறார். “ஆகமங்களில் கூறப்பட்டுள்ள அந்தர்யாக முறைகள் கவனமிக்க மனநிலை கொண்டவர்களால் மட்டுமே பின்பற்ற இயலும். ஒவ்வொரு கணத்திலும் உலக வாழ்க்கையின் ஜ்வரத்தால் அல்லது தாபத்தால் மிகவும் அல்லல்பட்டு பக்தியொன்றை மட்டுமே ஸாதனமாகக் கொண்டு ஏதேனும் ஒரு தேவீஸ்தோத்ரத்தால் அம்பிகையைக் காண விழைவோர்க்கு உகந்த உபாயமிது”. “பவனாகிய சிவனின் துணைவியே! உன்னை வழிபடுகின்ற அடியவன் மீது கருணை நிரம்பிய பார்வையைச் செலுத்துவாய்!” எனச் சொல்லத் தொடங்கியதுமே 'பவானி த்வம்' என்ற இரு பதங்கள் முன் வந்தன. உடனே நீ அந்த அடியவனுக்கு முகுந்தனும், பிரம்மனும் இந்திரனும் தன் கிரீட ஒளிகளால் தீபாராதனை செய்கிற தனது நேரிடைக் காட்சியையளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாய்' என்று உரைத்து -(ஸாலோக்ய ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய) போன்ற நான்கு உன்னதமான நிலைகளையும் அழகாக விளக்குகிறார். இந்த சுலோகத்தின் மற்றொரு சிறப்பு அத்வைதக் கோட்பாடுகளுக்கு அடிப்படையான மஹாவாக்யமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதையும் விளக்குவதாக அமைந்ததுவே. வ்யாகரண ரீதியில் விளக்குங்கால் “அஹம் த்வம் பவானி” என்ற 'லோட்' உத்தமபுருஷ ஏகவசனப்ரயோகத்தால் “நான் நீயாவேன்” என்பதாகவும் பொருள் அமையும். லக்ஷ்மீதரர் இந்த சுலோகத்தின் உரையில்-
(பவானி இதி பதஸ்ய லோட் உத்தமபுருஷ ஏகவசானந்தத்வம் அவகம்ய தத்ஸாமா
மஹாவாக்ய ப்ரயோகோ அனேன ஸாதகேன னாதிகரண்யேன த்வம்பதஸ்ய அன்வயே
ப்ரயுக்த இதி மத்வா மஹாவாக்யபலம் தாதாத்ம்யம் திசதி பவதீ)
என்று குறிப்பிடுகிறார். இதுபோல் தாதாத்ம்யம் வேண்டி தியானிப்போரின் பலனை “ஸ்வதேஹோத் பூதாபி: க்ருணிபி:” என்று தொடங்கும் சுலோகத்திலும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். இவ்விதமாக ஒவ்வொரு சுலோகத்தின் பொருட்செறிவும் கருத்தாழமும் உரையாசிரியர்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஸ்ரீசக்ரத்தை வர்ணித்தது போல் பகவத்பாதர் ஆறு சக்ரங்களையும் வர்ணிக்கும் பொழுது ஆசார்யர் அவரோஹக்ரமமான ஆக்ஞாசக்ரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான வர்ணனை அருளியுள்ளார். சுலோகம் 36-ஆவது முதல் 41-ஆவது சுலோகம் வரை ஆறு சக்ரங்களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்கு 41-ஆவது சுலோக உரையில் லக்ஷ்மீதரர் ஸமய மார்கத்தையும் அதைப் பின்பற்றுவோரையும் விளக்கிவிட்டு பகவத்பாதர் இந்த ஸ்தோத்ரத்தில் மூலாதாரத்திலிருந்து தொடங்காமல் மாறாக ஆக்ஞாசக்ரத்திலிருந்து அவரோஹக்ரமமாக வர்ணித்ததன் நோக்கம் வேதங்களின் வசனத்தை அனுஸரித்ததுவே என்று குறிப்பிடுகிறார் -
(அத்ர பகவத்பாதை: ஆதாரகமலாதிக்ரமம் விஹாய
ஆக்ஞாசக்ராதிக்ரமேண அவரோஹக்ரமேண பூஜாப்ரகார: கதித:
அயமாசய: - ஆத்மன: ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ
இதி ச்ரௌதக்ரமமவலம்ப்ய அவரோஹக்ரம: உக்த:)
இங்கு கௌல மார்க்கத்தையும், திகம்பர, க்ஷபணகர்களின் உபாஸனா முறைகளைக் குறிப்பிட்டுச், சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. ஆனால் அவையனைத்தும் வேதமார்க்கத்திற்குப் புறம்பானதால் நினைத்துப் பார்க்கவும் உகந்ததல்ல என்றும் கூறுகிறார் -
(அத்ர பஹு வக்தவ்யமஸ்தி: தத்து அவைதிகமார்கத்வாத் ஸ்மரணார்ஹம் அபி ந பவதி)
ஸௌந்தர்யலஹரீயின் இரண்டாவது பாகமான 42 -முதல் 103 வரையிலான 62 சுலோகங்களில் அம்பிகையின் ஸௌந்தர்யம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ பரிவ்ராஜகரான ஆசார்யர் முற்றிலும் அனைத்தையும் துறந்தவர். அவர் ஏன் பவானியின் அழகை வர்ணிக்க முனைந்தார் என்று பூர்வபக்ஷமாகக் கேள்வியெழுப்பிய பதார்த்த சந்த்ரிகா உரையாசிரியர் அதற்கு இவ்வாறு பதிலுமளிக்கிறார் - பவானீ ப்ரஹ்மவடிவினள். ப்ரஹ்மத்தை உருவகப்படுத்துவதே பவானியின் வர்ணனை என்று -
(பவான்யா ப்ரஹ்மரூபத்வேன ப்ரஹ்மஸ்வரூப வர்ணனமேவ
பவானீ வர்ணனம் இதி ந அநௌசித்யம்)
சித்சக்தியாக அனைத்திலும் பரவிநிற்பவள் இவளேயென்று மார்க்கண்டேய, புராணமும் வர்ணிக்கிறது.
(சிதிரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்)
பகவத் பாதர் அருளிய தேவீஸ்தோத்ரங்களில் பவானீபுஜங்க ஸ்தோத்ரத்தில் பதினாறு சுலோகங்களும் ஸௌந்தர்யலஹரீயில் காணப்படும் கருத்துகளுக்கு ஒப்பானதாகவே பெரும்பாலும் உள்ளன. பகவத்பாத ஸ்தோத்ர ரத்னாவளி என்ற தலைப்பில் வெளியான நூலில் ஸ்ரீலலிதா பஞ்ச ரத்னம், கௌரீதசகம், ஸ்ரீத்ரிபுரஸுந்தர் - யஷ்டகம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம் பவானீ புஜங்கம், கல்யாணவ்ருஷ்டிஸ்தவம், மற்றும் ஆனந்தலஹரீ ஸ்தவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ மெனும் ஸ்தோத்ரத்தில் பீஜாக்ஷரங்களான க,ஏ,ஈ,ல, ஹ்ரீம்;, ஹ,ஸ,க,ஹ,ல,ஹ்ரீம்; ஸ,க,ல, ஹ்ரீம் என்ற எழுத்துகளில் தொடங்கி அவற்றை மாலையாக அம்பிகைக்கு அர்ப்பணித்துள்ளார். இங்கு காணப்படும் 'ஹ்ரீம்' என்ற பீஜாக்ஷரத்திற்கு இருக்கும் சிறப்பை ஆசார்யரின் துதிகளில் பல இடங்களில் அறியலாம். இங்கு 15-ஆவது சுலோகத்தில் - (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மனுனா) என்று குறிப்பிடுவதற்கேற்ப அவரது கல்யாணவ்ருஷ்டி ஸ்தவத்திலும் தெளிவாகக் கூறுகிறார் -
(ஹ்ரீங்காரமேவ தவ நாம க்ருணந்தி வேதா:) (சு:5), என்றும்,
(ஹ்ரீம் - ஹ்ரீமிதி ப்ரதிதினம் ஜபதாம்) (சு:11), என்றும்,
(ஹ்ரீங்காரமேவ தவ நாம ததேவ ரூபம்) (சு:14), என்றும், வர்ணித்து இறுதியாக பலச்ருதியில்,
(ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம் ஸ்தோத்ரம் ய: ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேன் மந்த்ரவித் தஸ்ய க்ஷோணி புஜோ பவந்தி வசகா லக்ஷ்மீ சிர: ஸ்தாயினீ வாணீ நிர்மலஸூக்தி பார பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் வய:)
“ஹ்ரீங்காரத்தை மூன்று முறை ஸம்புடீகரணம் செய்வதாக அமைந்த இத்துதியை அன்னையே! எவனொருவன் உனது முன்னிலையில் ஒவ்வொருநாளும் ஜபிப்பானோ அவனுக்கு அரசர்களும் கட்டுப்பட்டு, நிலையான செல்வம், குறையேதுமில்லாத தெளிவான சொல்வன்மை, மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கப்பெறும்” என்று உணர்த்துகிறார். மேலும் இதே துதியில் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவது மிகுந்த பலனை அளிக்கும் என்பதை -
(ஸர்வக்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே தேவி த்வதங்க்ரி ஸரஸீருஹயோ: ப்ரணாம:)
என்றும் வர்ணிக்கிறார். “இறைவன் என்று ப்ரஹ்மா முதலானோரிருப்பினும் அவர்களனைவரும் ப்ரளயகாலத்தில் மறைந்து போவார்கள். அன்னையே! எவனொருவன் உனது திருவடிகளில் ஒருமுறை பணிந்து வணங்குவானோ அவன் ஒருவனே நிலையாக இருப்பான்” என்றும் “உன்னைக் குறித்து செய்யும் வழிபாட்டில் உனது மேன்மையான வடிவங்கண்டு எனது கண்களில் நீர்மல்கி களிப்படையவேண்டும் என்பதே நான் விரும்புவது” என்றும் பிரார்த்திக்கிறார்.
(ஏதாவதேவ ஜனனி ஸ்ப்ருஹணீயமாஸ்தே த்வத்வந்தனேஷு ஸலில ஸ்தகிதே ச நேத்ரே
ஸான்னித்யம் உத்யதருணாயுத ஸோதரஸ்ய த்வத்விக்ரஹஸ்ய பரயா ஸுதயாப்லுதஸ்ய) (சு:2)
இவ்விதம் ஸ்ரீசிவனின் அவதாரமாகப் போற்றப்பட்ட பகவத்பாதர் அடியவர்களின் நலன் கருதி அருளிய துதிகள் ஏராளம். சில துதிகள் அவர் பெயரில் காணப்படினும் அவற்றின் நடை மற்றும் பொருட்செறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது அவை விலக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பீஜாக்ஷரங்களனைத்தும் தகுந்த குருவின் உபதேசத்தால் மட்டுமே முறையாகப் பயிலவேண்டும். ஸ்ரீவித்யாஉபாஸனையில் நன்கு தேர்ச்சிபெற்ற தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்ற பின்னர் பயில்வதன்மூலம் தக்க பலனைப் பெற இயலும். மந்த்ரகர்பமான பல துதிகள் ஸாதகனின் வினைப்பயன்களுக்கேற்ப அமையும். அம்பிகையைத் தொழுவதும் அவரவர்களின் நற்பலன்களால் மட்டுமே இயலும் என்பதையே பகவத்பாதர், (ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவதி) என்று குறிப்பிடுகிறார். பகவத்பாதர் போன்ற அவதாரபுருஷர்கள் தாம் ஆத்மஸாக்ஷாத்காரமெனும் முக்திபெற்று, தம் ஆனந்தானுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் உலகத்தோர் உய்யத் துணை புரிவார்கள் என்று அவரது விவேக சூடாமணியின் வசனம் மூலம் அறியலாம் -
(சாந்தா மஹாந்தா நிவஸந்தி ஸந்த: வஸந்தவல்லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனான் அஹேதுனா அன்யானபி தாரயந்த:) (சு:39)
மஹான்கள் சாந்தஸ்வரூபத்துடன் அனைவருக்கும் வஸந்தருதுபோல் நன்மை புரிந்து பயங்கரமான பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஏனையோரையும் எந்தவொரு பலனையும் கருதாது பிறவிப் பெருங்கடலைக் கடக்கவைப்பார்கள்.

தாய்மார்கள் மூன்றுவகை.

தாய்மார்கள் மூன்றுவகை. மூன்றாவது வகைத் தாய்மார்கள் பிள்ளை பாலுக்கு அழுதாலும் அழவிட்டுவிட்டு, தன்வேலை முடிந்தபின்னர் வந்து பசியாற்றுவர். இரண்டாவது வகைத்தாய்மார்கள் பிள்ளை அழுதபின்னர் தன் தவற்றினை உணர்ந்து ஓடிச் சென்று பால் ஊட்டுவர். ஆனால் முதல்வகைத் தாய்மாரோ பாலூட்டி நேரமாயிற்றே! குழந்தைக்கு பசி எடுக்குமே! என்று நினைத்து தானே சென்று குழந்தை பசியினால் துடித்து அழுவதற்கு முன்பாகவே பாலூட்டுவர்.
ஆனால் இறைவனோ இவர்கள் யாவரிலும் மேலான தாயாக விளங்குபவன். பால் நினைந்து ஊட்டும் தாயினைவிட மேலான பரிவினை நம்மீது காட்டுபவன் இறைவன்.
நம்மை முழுமையாக அவனிடம் ஒப்புவித்தால் போதும். அவன் நம்மைத் தன் கருணை வட்டத்தில் வைத்து விடுவான். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை மட்டும் வைத்தால் போதும். இறைவன் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கக் காத்திருக்கின்றான். இக்கருத்தைத் தான் மாணிக்க வாசகப்பெருமான் தேனினும்இனிய திருவாசகத்தில் ‘பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்தவன்’ என்று சிவபெருமானைக் குறிப்பிடுகின்றார். இக்கூற்றினை மெய்ப்புக்கும் வரலாறுகள் நிறைய இம்மண்ணிலே உண்டு. விரிவஞ்சி ஒன்றிரண்டு வரலாறுகளை மட்டும் இங்கே காண்போம்.
சீர்காழியில் வாழ்ந்த சிவபாத இருதயர் சிவபெருமான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார். “சைவநெறி வளர வழிகாட்டு” என்று வேண்ட, சைவநெறி வளர்க்கும் திருஞான சம்பந்தப் பெருமானை இறைவன் அவருக்கு மைந்தனாகப் படைத்தார்.
மூன்று வயதுப் பாலகனாகத் திருஞானசம்பந்தர் விளங்கியபோது ஒரு நாள் குளக்கரைக்கு தந்தையுடன் செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தார். குழந்தையின் பிடிவாதத்தை உணர்ந்து சிவபாத இருதயரும் குழந்தையுடன் குளக்கரைக்குச் சென்றார். நீராடுவதற்கு முன்பாக குழந்தையை யார் பொறுப்பில் விடுவது? என்று தந்தையாருக்கு ஒரு குழப்பம். திருத்தோணிபுரம் திருக்கோயில் கோபுரத்தில் வீற்றிருந்த சிவபெருமானிடம் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் நிம்மதியாக நீராடத் தொடங்கினார்.
தந்தையைக் காணாத பாலகனாம் திருஞானசம்பந்தர் அழத் தொடங்கினார். தன்னிடம் பொறுப்பை சிவபாத இருதயர் ஒப்படைத்து விட்டாரே என்று சிவபெருமான் அம்பாளை நோக்க அம்பாள் பொற்கிண்ணத்தில் பால் கறந்து பச்சைப் பசும் தளிரான பாலகனாம் சம்பந்தன் கொச்சை மொழி குதறி குளக்கரையில் அழும்போது ஊட்டினார். குழந்தையின் பசி தீர்ந்தது. அம்பாளிடம் ஞானப்பால் உண்ட குழந்தை அழுகை மாறிச் சிரித்தது.
நீராடிவிட்டு குளக்கரைக்கு வந்த சிவபாத இருதயர், “யார் உனக்குப் பாலூட்டியது?” என்று கேட்க. குழந்தை கோபுரத்தில் வீற்றிருந்த சிவபெருமானைக் காட்டி “தோடுடைய செவியன்” தான் பால் கொடுத்ததாகக் கூறியது.
தன்னை முழுமையாக நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தையின் பசி தீர்த்ததோடு இறைவன் அக்குழந்தையைக் கைவிடவில்லை. சாதாரணத் தாய் என்றால் குழந்தையின் பசி தீர்ந்ததும் அக்குழந்தையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தன் வேலையில் மூழ்கி விடுவாள்.
இறைவன் அப்படிப்பட்ட தாய் அல்லன். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சிறந்தவன் அல்லவா? அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டே வந்தார்.
குழந்தை இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலம்தோறும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடும்போது கை சிவக்கச் சிவக்க தாளம் போட்டது.
தாயுமான ஈசனுக்கே குழந்தைக்குக் கை வலிக்குமே என்று கவலை வந்தது. உடனே பொன்னாலாகிய தாளத்தைத் தந்தார். ஆனால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு “தாளபுரீஸ்வரர்” என்று பெயர். அம்பாளோ உடனே அந்தத் தாளத்தில் ஓசையாக வந்து அமர்ந்தாள். அதனால் அவளுக்கு “ஓசை கொடுத்த நாயகி” என்று பெயர்.
இத்துடன் இறைவனின் கருணை நின்றுவிடவில்லை. தான் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் குழந்தை கால் வலிக்க வலிக்க நடந்து வருகின்றதே என்று முத்துப்பல்லக்கு தந்தார். குழந்தை வெயிலில் வாடக்கூடாதே என்று முத்துக்குடை தந்தார். இவையனைத்திற்கும் மேலாக தந்தையாரைப் போன்றே இந்த ஞானசம்பந்தரும் தன்னயே முழுமையாக நம்பியிருக்கின்றாரே என்று அவரது பெற்றோர் அவரோடு திருத்தலங்களுக்கெல்லாம் தொடர்ந்து செல்ல இயலாது என்பதனை உணர்ந்து, குழந்தை தாய் தந்தை அரவணைப்பினை இழக்க நேரிடுமே என்று கருதி, தன் சார்பாக திருஞானசம்பந்தருக்கு அன்பும் அக்கறையும் காட்டும் தாய் தந்தையைப் போன்று மதங்க சூளாமணி அம்மையாரையும் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் திருஞான சம்பந்தருடன் இறுதி வரையிலும் துணையாக அனுப்பி வைத்தார்.
இவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது பெற்ற தாயைவிட மேலானவன் இறைவன் என்பது நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.
பால் நினைந்து ஊட்டும் தாய் தன் குழந்தைக்கு நோய் வந்தால் தான் பட்டினி கிடப்பாள். தன்நலத்தை மறந்து குழந்தையின் நலத்தினையே நினைப்பாள். ஆனால் இறைவனோ தன்னை நம்பும் பக்தனுக்காகத் தன் இயல்பினை, தன் வடிவத்தினையே மாற்றிக் காட்டுகின்றான். நம் மீது மாறாத பாசம் கொண்ட இராசசேகர பாண்டியனுக்காக சிவபெருமான் தன் இயல்பினை தன் வடிவத்தினை மாற்றம் செய்தார்.

மதுரையை ஆண்ட இராசசேகர பாண்டியன் என்னும் மன்னன் அவ்வூரில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரப் பெருமானின் மிகச் சிறந்த பக்தன். அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். சிவபெருமானுக்கு உகந்த கலை என்று நடனக்கலை மட்டும் பயிலாமல் மற்ற அறுபத்து மூன்று கலைகளையும் கற்று உணர்ந்தார்.
சோழ நாட்டுப் புலவன் ஒருவன் “உமக்கு அறுபத்தி நான்கு கலைகளும் தெரியவில்லையே!” என்று எடுத்துரைக்க “இறைவா! நடனக்கலையும் நான் கற்க வேண்டும் என்பது உன் விருப்பம் போலும்” என்று நடனக் கலையையும் கற்றுக் கொள்ள முனைந்தான்.
நடனம் பயிலும்போது தன் உடம்பில் வலியும் சோர்வும் ஏற்படுவதை இராசசேகர பாண்டியன் நன்கு உணர்ந்தான். சிறிதுநாள் நடனம் பயிலும் நமக்கே இவ்வளவு அயர்வு நோய் வந்தால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த நாள்முதல் இன்றுவரை ஒரே காலை ஊன்றி நடனம் ஆடிக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கால்கள் எப்படி வலிக்கும்! காலை மாற்றாமல் கூட இறைவன் ஆடிக் கொண்டிருக்கின்றானே! என்று எண்ணி மனம் நொந்தான்.
சிவபெருமானுக்கு பூஜை செய்து, “இறைவா! உனக்கு அயர்வு நோய் வரக் கூடாது. உனக்கு கால்வலி வருமே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. ஆகவே இந்த நகரில் நீ கால் மாற்றி நடனமாட வேண்டும். இல்லையேல் நான் இறந்து விடுவேன்.” என்று அன்புடன் வேண்டினான்.
பக்தனின் அன்பினை எண்ணி சிவபெருமானும் வெள்ளியம்பலமாகிய மதுரையில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கால்மாற்றி இடக்காலை ஊன்றி வலக் காலை மேலே எடுத்து வீசி நடனமாடினார். இன்று வரை அக்காட்சி தொடர்கிறது.
தன்னை முழுமையாக நம்பும் தன் பக்தர்களுக்காக இறைவன் அவர்களின் ஒவ்வொரு நிலையிலும் எந்தக் குறையும் வாராமல் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு தன்மீது பக்திகொண்ட ஜீவாத்மாவுக்காக அந்தப் பரமாத்மா தன் இயல்பினை மாற்றி கால் மாறி ஆடியதை நினைக்குந் தோறும் மாணிக்க வாசகப் பெருமான் எழுதிய “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்தவன் இறைவன் என்ற உயரிய உண்மையை உணரும் போது நம் கண்களில் நீர் பெருகுகின்றது. அத்தகைய கருணை நிறைந்த எம்பெருமான் மீது நாமும் முழுநம்பிக்கை வைப்போம்! வாழ்வில் உய்வோம் !!

வேதம்

சிஷ்யன்: வேதம் ஆரம்பமில்லாதது என்று சொல்வதுண்டு. அப்படியா?
ஆசார்யாள்: ஆம், அது பரம்பொருளின் மூச்சுக் காற்றைப் போல் விளங்குகிறது.
சி: சிலர் 'வேதங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆரியர்களால் இயற்றப்பட்டது. மேலும் உபநிஷத்துகள் அதற்குப் பின்பு இயற்றப்பட்டன' என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தை ஒப்புக்கொள்வதில் ஏதாவது தவறுதல் இருக்கிறதா?
ஆ: இந்த அபிப்ராயம் எங்களுக்குச் சம்மதமில்லை. உபநிஷத்துகள் வேதங்களுக்குப் பிறகுதான் இயற்றப்பட்டன என்று வைத்துக் கொண்டாலும், இப்போது எல்லா இடங்களிலும் தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஆரண்யகத்தின் 7, 8, 9ஆம் பிரச்னங்களாக இருக்கிறது என்று ஏன் கருதப்பட வேண்டும்? தைத்திரீய உபநிஷத் ஏதோ ஓர் ஊரில் வேதங்கள் இயற்றப்பட்டதற்குப் பின்பு எழுதப்பட்டது என்று வைத்துக் கொண்டால், அதை எல்லா மக்களும் ஏன் வேதத்தின் பகுதியாகக் கருத வேண்டும்? மேலும் வேதத்தின் அதே பகுதிக்குச் சேர்ந்தது என்றும் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?
வேதம் பல வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டதென்று வைத்துக் கொள்வோம். அவற்றை இயற்றியவர்கள் சிரத்தையுடன் இருந்தார்களா? அல்லது மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தார்களா? எவ்விதமான யாகங்களைச் செய்தால், ஸ்வர்கத்தைப் பெறலாம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இவ்விஷயத்தை நாம் சாஸ்திரங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் வேதத்தை இயற்றியவர்கள் சிரத்தையுடன் இருந்தார்களென்று வைத்துக் கொண்டால், ஸ்வர்க்கத்தைத் தரும் யாகத்தைப் பற்றி தாமாகவே எழுதியிருக்க முடியாது. அவர்கள் அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால், அவர்களுக்கு அது தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் சிரத்தையில்லாதவர்களாக இருந்தால், இந்த யாகங்களைத் தாமாகவே எதற்காகப் பல வருடங்கள் செய்து வந்திருக்க வேண்டும்?
சம்பிரதாயத்தின்படி வேதத்தைக் கற்றுக் கொடுப்பவர்கள் வேதத்தை உச்சரிக்கும்போது அக்ஷரத்திலேயோ, ஸ்வரத்திலேயோ ஒரு விதமான தவறும் ஏற்படக் கூடாது என்கிற விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் ஏன் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் “அக்ஷரம் மற்றும் ஸ்வரங்களில் பிழை நேரக் கூடாது. அவ்வாறு நேர்ந்தால் நன்மை ஏற்படாது” என்று கூறியிருந்தனர். இவ்வாறு, குரு, அவருடைய குரு என்று விசாரித்துக் கொண்டே போனால், வேதத்தை இயற்றியவர்கள் என்று யாராவது இருந்திருந்தால் அவர்களுக்கும், 'ஸ்வரம் மற்றும் அக்ஷரங்கள் விஷயத்தில் கவனம் தேவை' என்ற நம்பிக்கையே இருந்திருக்கும் என்று தீர்மானம் செய்யலாம். ஸ்வரமில்லாமல் வேதத்தைக் கற்றுக் கொள்வது சுலபமாய் இருந்தபோதிலும், “ஸ்வரங்களைத் தவறாக உச்சரிக்கக் கூடாது; சரியாகச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் ஏன் தீர்மானமாக இருந்தார்கள்? வேதம் புனிதமானது. அதை உச்சரிப்பதில் தவறொன்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தெரிந்திருந்ததால்தானே அவர்கள் தீர்மானமாக இருந்து தத்தம் சிஷ்யர்களுக்குக் கட்டளை ஏற்படுத்தியிருந்தார்கள்? வேதத்தை இயற்றியவர்கள் என்று யாராவது இருந்திருந்தால், தாம் இயற்றிய வேதத்தை மிகவும் புனிதமானது என்று தாமே கருதுவதற்கு அவகாசமில்லை. ஆகையால், மனிதர்கள் வேதங்களை இயற்றியிருக்க முடியாது.
இராமாயணப் பல வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டதென்று பலர் ஒப்புக்கொள்கிறார்கள். இராமர் வேதத்தை அறிந்தவர் என்றும் நாம் காண்கிறோம். இராமனைப்போல, இலங்கையை ஆண்ட இராவணனும் வேதத்தை அறிந்தவன் என்று தெரிந்து கொள்கிறோம். அவ்வளவு வருடங்களுக்கு முன்பு வேதம் எப்படி இவ்வளவு தூரத்திற்குப் பரவியிருக்க முடியும்? ஒரே ஒரு சாகையைக் கற்றுக் கொள்வதற்கே பல வருடங்களாகின்றன. பழைய காலத்தில் புத்தகங்கள் உபயோகப்படுத்தாமல்தான் வேதத்தை அத்யயனம் செய்து கொண்டு வந்தார்கள். அதனால் அவ்வளவு தூரம் பரவியிருக்க வேண்டுமென்றால், வேதத்தை எல்லாரும் புனிதமென்று கருதி ஒரே வகையில் மனப்பாடம் செய்து கொண்டு வந்திருந்தால்தான் அதே வகையில் தொடர்ந்து வந்திருக்க முடியும். இராமர் ஸந்தியாவந்தனம் செய்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இராவணனும் ஸந்தியாவந்தனம் செய்து வந்தான் என்றும் பார்க்கிறோம். ஆதலால் அதே மந்திரங்கள் தான் பாரதத்திலும், இராவணன் வாழ்ந்த இடத்திலும் இருந்தன என்று தெரிகிறது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலும் கிருஷ்ணயஜுர்வேதம் ஒன்றாகத்தான் இருக்கிறது என்பதை நாம் காணலாம். வருடங்கள் பல ஆகிய பிறகு மாறுதல் ஏற்பட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா? ஆனால் மாறுதல் ஏற்படவில்லை. காரணம் என்ன? குரு - சிஷ்யர் ஆகிய இரண்டு பேருமே கொஞ்சம் கூட மாற்றாமல் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அதுவேதான் காரணம்.
சிலர், வேதங்கள் பல வருடங்களுக்கு முன்பு மனிதனால் இயற்றப்பட்டன என்று கூறுகிறார்கள். அவர்களிடம் இக்கேள்வியைக் கேட்க நாம் விரும்புகிறோம். வேதம் மனிதனால் இயற்றப்பட்டதென்றால் வேத மந்திரங்களுக்கு இவ்வளவு சக்தியும் பலமும் எப்படியிருக்கின்றன? பல வியாதிகள், வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்தாலும் அவையும் வேத மந்திரங்கள் மூலமாகக் குணமாகின்றன. இம்மாதிரி சம்பவங்களைப் பலர் கண்டிருக்கிறார்கள். வேதங்கள் பிராசீன காலத்தில் இயற்றப்பட்ட சாமான்யப் புத்தகங்கள் என்றால், இம்மாதிரி சக்தி வந்திருக்காது. ஆதலால், நாம் வேதத்தைப் பரம்பொருளால் உபதேசிக்கப்பட்டது என்றே கருதுகிறோம்.
சி: இப்படியிருந்தால் பல மந்திரங்களுக்குப் பல ரிஷிகள் இருக்கிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? ஏனென்றால், ரிஷிகள் மந்திரங்களை இயற்றியிருந்தால், அவர்கள்தானே மந்திரங்களுக்குக் கர்த்தாக்களாவார்கள்?
ஆ: ரிஷிகள் மந்திரங்களை உண்டாக்கியவர்களல்லர். முக்கியமாக, மந்திரத்தைப் பிரசாரம் செய்த முனிவரின் மந்திரத்தின் மஹிமையைப் புரிந்து கொண்டு அதைப் பிரசாரம் செய்தாரே தவிர, அந்த மந்திரத்தைத் தானாகவே உண்டாக்கவில்லை. பிரஹ்மா வேதத்தை, உலகத்தை ஸ்ருஷ்டி செய்யும்போது உபதேசம் செய்தார். காலம் ஆக ஆக சில மந்திரங்கள் அத்யயனக் கிரமம் விட்டுப் போனதால் லோபமாகி விட்டன. வேதவியாசர் பகவானின் அவதாரமானதால் முதலிலிருந்த வகையிலேயே மறுபடியும் ஜனங்களுக்கு உபதேசம் செய்தார். இவ்வளவுதான் விஷயம்.
சி: வேதத்தில் நாம் பல கதைகளைக் காண்கிறோம். அவை உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இருக்கின்றனவா?
ஆ: இல்லை. அவை உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இல்லை. பரம்பொருளின் மூச்சுக் காற்றைப் போலிருக்கும் வேதத்திற்கு ஆரம்பமேயில்லை. ஆகவே உண்மையாகவே நடந்த நிகழ்ச்சிகளை அங்குக் கூறியிருப்பதற்குச் சாத்யமேயில்லை. ப்ருஹதாரண்யக உபநிஷத்தில், யாக்ஞவல்க்யருக்கும், ஜனகருக்கும் நடந்த ஒரு பேச்சைப்பற்றி இருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி ஸம்வாதம் இல்லை. இதுபோன்று உண்மையாகவே ஒரு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதுதான் உபநிஷத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறதென்று கூற முடியாது. வேதத்தில் உள்ள கதைகள் ஒரு விஷயத்தை நன்கு புரியும்படிச் செய்வதற்காகத் தானிருக்கிறது.
சி: ‘முதலில் உலகம் உண்டான பிறகு மனிதன் குகையில் வசித்து வர ஆரம்பித்திருக்கலாம். சிறிது காலம் சென்ற பிறகு அவனது அறிவும் வளர்ந்திருக்கலாம். அதற்குப் பிறகு பகவான் வேதத்தை உபதேசம் செய்திருக்கலாம்'. இம்மாதிரி கருதுவதில் ஏதேனும் தவறிருக்கிறதா? இவ்வாறு வைத்துக் கொண்டால், நாம் விஞ்ஞானத்திற்கும் எதிர்மாறான கருத்தை வைத்துக் கொள்ளாமல் இருக்கலாம். வேதமும் இறைவனால் உபதேசிக்கப்பட்டது என்றும் கருதலாம். ஆகவே இதுபற்றி ஆசார்யாள் என்ன கூறுகிறார்கள்?
ஆ: இது சரிவராது. ஏனென்றால், எப்போது பகவான் மனிதனை உண்டாக்கினானோ அப்போதே அவன் வேதத்தையும் உபதேசித்திருக்க வேண்டும். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா,
(ஸஹ யக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:)
(முன்பு யக்ஞங்களுடன் ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்து ப்ரஜாபதி கூறினார்) என்று கூறியுள்ளார்.
யக்ஞம் என்றால் வேதத்தில் சொல்லப்பட்ட யக்ஞம். யக்ஞத்தைச் செய்ய வேண்டுமானால், அதற்கு முன்பு வேதம் இருந்திருக்க வேண்டும். ஆகவே இதிலிருந்து வேதத்தையும் இறைவன் உலகத்தை ஸ்ருஷ்டித்த சமயத்திலேயே உபதேசித்தான் என்று நமக்குத் தெரிகிறது. இதை நாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் நமக்கு எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் கிடைக்காது. வேதத்தில் சொல்லப்பட்டதையே நாம் தர்மம் என்கிறோம். ஆதிமனிதனுக்கு, வேதம் உண்டாவதற்கு முன்பு அவன் இருந்திருந்தானானால், எது தர்மம் எது அதர்மம் என்று அவன் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது? ஆகவே அவன் வேதத்திற்கும் முன்பு வாழ்ந்திருந்தானேயானால், அவனுக்கு தர்மம், அதர்மம் என்பதே தெரிந்திருக்காமல் இருந்திருக்க வேண்டும். அதாவது, அப்போது அவன் எதைச் செய்திருந்தாலும், அது அவனுக்கு, 'எல்லாம் நல்ல பலன்கள் அல்லது எல்லாம் கெட்ட பலன்கள் என்பதாகவே தந்திருக்க வேண்டும். அவன் செய்த எல்லாக் காரியங்களும் நல்ல பலனையே தந்தன என்ற கூற்றை ஆராய்ந்தால், 'வேதம் வருவதற்கு முன் ஒருவன் எது செய்திருந்தாலும் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் வேதம் வந்தபின், அவனுடைய செயல்களுக்குக் கெட்ட பலன்களும் கிடைக்கலாம்' என்றல்லவா முடிவு வரும்? இது நியாயமா? ஆகவே வேதம் உண்டாவதற்கு முன் ஒருவனுக்கு எப்போதும் நல்ல பலன்களே இருந்தால், நரகமே செல்லத் தேவையில்லையென்றும், வேதம் தோன்றிய பின்னர் ஒருவனுக்கு நரகம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னால் அதை ஒப்புக்கொள்ள முடியுமா?
அதேபோல் வேதம் தோன்றும் முன் எல்லாமே தீய பலன்களாகத் தந்தன என்ற கூற்றை எடுத்துக் கொண்டாலும் அதுவும் நியாயமில்லை. ஆகவே எப்போது பகவான் உலகத்தைப் படைத்தானோ, அப்போதே அவன் வேதத்தையும் உபதேசித்திருக்க வேண்டும். அதாவது தர்ம, அதர்ம விஷயங்களில் உபதேசம் பெற வழியிருந்திருக்க வேண்டும். இந்த உபதேசங்களையே நாம் வேதத்தில் காண்கிறோம். ஆதலால் முதலில் மனிதன் படைக்கப்பட்டு, பிறகுதான் வேதம் வந்தது என்பது சற்றும் சரியில்லை.

சி: வேத அத்யயனம் செய்ய வேண்டுமென்பது சாஸ்திரங்களின் கட்டளையா?
ஆ: ஆம், தகுதியுள்ளவர்கள் (அதிகாரிகள்) கட்டாயமாக வேத அத்யயனம் செய்ய வேண்டும்.
(ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய:)
(தன்னுடைய சாகையை அத்யயனம் செய்ய வேண்டும்) என்பது சாஸ்திரங்களின் கட்டளை. வேதங்களைக் குருமுகமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு டேப்ரிக்கார்டர் மூலம் வேத அத்யயனம் செய்து கொண்டால், அது வேத அத்யயனமாகாது. ஒரு கிளி ஒரு மனிதனைக் கூப்பிட்டால், அம்மனிதன் செல்வானா? அதே வார்த்தைகளை இன்னொரு மனிதன் கூறி இம்மனிதனைக் கூப்பிட்டால், அவன் கட்டாயமாகச் செல்வான். அதாவது வேறுபாடு என்பது வார்த்தைகளில் இல்லை. அவற்றைச் சொல்பவனிடம்தான் உண்டு. அதேபோல் வேத அத்யயனம் என்பது குரு சொல்லக் கேட்டு, அதை சிஷ்யன் மீண்டும் உச்சரிப்பதே ஆகுமே தவிர, டேப்ரிக்கார்டர் முதலியவற்றின் மூலம் கற்பது வேதமாகாது, வேத மந்திரங்களைக் கூறிய பலனையும் தராது.
சி: வேத அத்யயனம் செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
ஆ: ஆம். பலவிதமான நன்மைகள் உண்டு. வேதத்தை அத்யயனம் செய்வது என்பது அதிகாரிகளுக்கு (தகுதியுள்ளவர்களுக்கு) கடமையானதால், அவர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் தம் கடமையைச் செவ்வனே செய்து முடிக்கலாம். மேலும் வேதத்திலும், இவ்வுலகத்திலும், பரலோகமாம் மறு உலகத்திலும் நன்மை அடைய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நன்மையை அடைய வேத அத்யயனமே நமக்கு வழி காட்டும். மோக்ஷமடைய வேதத்தில்தான் சரியான வழி காட்டப்பட்டுள்ளது. ஆகவே லௌகீக இன்பமோ, ஸ்வர்க இன்பமோ அல்லது மோக்ஷமோ, இவற்றில் எதை நாம் விரும்பினாலும், வேதத்தின் பக்கமே கவனம் செலுத்த வேண்டும். வேத மந்திரங்களை உச்சரித்தாலே புண்ணியம் ஏற்பட்டு அது நமக்கு நன்மையளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வேத மந்திரங்களுக்கு அபாரமான சக்தியிருக்கிறது. சில மந்திரங்கள் வியாதிகள் போன்றவற்றையும் நீக்கும் சக்தி வாய்ந்தவை.
சி: இக்காலத்தில் பலர் வேத அத்யயனம் செய்வதில்லை. ஏனென்றால், அவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அலுவலகம், பள்ளிக்கூடம் முதலியவற்றிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், தக்க சமயமும் கிடைப்பதில்லை. அத்யயபனம் செய்து வைக்கும் புரோஹிதர்களும் சிரத்தையுடன் இருப்பதில்லை. இம்மாதிரி சூழ்நிலைகளில் வேதத்தை அத்யயனம் செய்யத் தகுதியுள்ளவன் என்ன செய்ய வேண்டும்?
ஆ: முடிந்த அளவிற்கு அத்யயனம் செய்ய வேண்டும். பூஜை போன்ற காரியங்களுக்கு மிகவும் தேவைப்படும் ருத்ரம், சமகம், ஸூக்தங்கள் போன்றவற்றையாவது அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலோ, மாலையிலோ, சிறிது நேரமாவது வேதம் கற்பதற்கு ஒதுக்கி வைப்பது கடினமில்லை. ஒவ்வொருவனும் தன் சாகை முழுதும் அத்யயனம் செய்வது உத்தமம். அப்படி முடியாவிட்டால் முடிந்த அளவிற்காவது அத்யயனம் செய்ய வேண்டும். புரோஹிதர்கள் மேலேயே பழியைப் போடுவது அவ்வளவு பொருத்தமாகாது. அவர்களும் வாழ வேண்டுமல்லவா? இது லௌகீகக் கல்வி பயிலுதலே நிறையப் பணம் சம்பாதிக்க வழி என்று அனைவரும் எண்ணும் காலம். வேத அத்யயனம் செய்பவனுக்கும், தான் சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே? ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. ஆனால் பேராசை என்பது இருக்குமாயின், அது நிச்சயமாகத் தவறுதான். புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள்? ஆகவே, நாம் வேதம் கற்றுத் தருபவர்களை மரியாதையுடன் நடத்தி, ஆதரவளிக்க வேண்டும். மேலும், அவர்களும் கர்வத்திற்கும் பேராசைக்கும் இடங்கொடாமல் சிரத்தையோடு வேத அத்யயனம் செய்வதில் உதவ வேண்டும்.

விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா?

சிஷ்யன்: விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா? இதை நான் கேட்பதற்குக் காரணம் என்னவென்றால் சாஸ்திரத்தில் ஒரு பக்கம் 'விதியை வெல்லலாம்' என்று காண்கிறோம். உதாரணத்திற்கு யோக வாஸிஷ்டத்தில்,
(சுபா சுபாப்யாம் மார்காப்யாம் வஹந்தீ வாஸநாஸரித்
பௌருஷேண ப்ரயத்னேன யோஜநீயா சுபே பதி)
(வாஸனைகளென்னும் ஆறு ஒருவனை, சுபம், அசுபம் என்ற மார்கங்கள் வழியாக அழைத்துச் செல்கிறது. முயற்சியினாலும், பௌருஷத்தினாலும் ஒருவன் நல் வழிக்குச் செல்ல வேண்டும்.) என்பதை நாம் காண்கிறோம், இது விதியை விடவும் முயற்சிக்கு அதிக பலமிருக்கிறது எனக் காட்டுகிறது. மற்றொரு பக்கம்,
(உபபோகேனைவ சாம்யதி)
(பிராரப்தம் பலனைக் கொடுத்துத்தான் தீரும்) என்றும்,
(யதபாவீ நதத்பாவீ பாவீ சேன்னததன்யதா)
(எது நடைபெற வேண்டாமோ அது நடைபெறாது. எது நடைபெறவேண்டுமோ. அது அப்படித்தான் நடைபெறும்) என்றும் நாம் காண்கிறோம். ஆகவே, எனது சந்தேகத்தை ஆசார்யாள் தெளிவுபடுத்துவார்களா?
ஆசார்யாள்: முதலாவதாக, 'பிராரப்தம்' என்றால் என்ன? அது எப்படிச் செயல்களைச் செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ, அவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன. இதையே நாம் பிராரப்தமென்று அழைக்கிறோம். பிராரப்தமானது வலுக்கட்டாயமாக ஒருவனை நல்வழியிலோ, தீயவழியிலோ இழுத்துச் செல்வதில்லை. அவை படிப்படியாக இம்மாதிரி வழிகளில் இழுத்துச் செல்கின்றன. எப்படியென்றால் அவை, மனத்தில் விருப்பு, வெறுப்பு என்ற வாஸனைகளைக் கிளப்பி விடுகின்றன. அதனால்தான் கிருஷ்ண பகவான்,
(ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர் ஞானவானபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி)
என்று கூறியுள்ளார்.
இச்சுலோகத்தின் வியாக்யானத்தின் போது சங்கரர் தானே ஓர் எதிர்க் கேள்வியை எழுப்புகிறார். அது என்னவென்றால் “இதுபோல் ஒவ்வொருவனும் தன் ஸ்வபாவம் போல் செயல்களைச் செய்வானென்றால் சாஸ்திரங்களுக்கே இடமில்லை. இதற்குக் காரணம் 'நடக்க வேண்டியதே நடக்கும்' என்று கூறுவதேயாகும். இப்படியிருக்கும்போது சாஸ்திரங்களில், 'நல்வழியில் நட' என்று கூறுவதில் என்ன பிரயோஜனம்?” இம்மாதிரி ஓர் எதிர்க் கேள்வியொன்றை அவரே எழுப்பி, இது தவறு என்று கூறி, அடுத்து வரும் சுலோகத்தையே உதாரணமாகக் காட்டுகிறார். அங்கு,
(இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ன வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ)
என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து விருப்பு வெறுப்புகளை வென்றால் நாம் அவற்றின் வசம் விழமாட்டோம் என்று தெரிகிறது. ஆகவே, சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு விருப்பையும் வெறுப்பையும் நாம் விட்டுவிட்டால், எப்போதும் நல்வழியிலேயே செல்வோம். 'பிராரப்தத்தை வெல்ல முடியுமா' என்று நீ கேட்டாயே அதற்கு 'நிச்சயமாக வெல்லலாம்' என்பதே பதிலாகும் பிராரப்தத்தை வெல்ல முடியாது என்று சொன்னால் மனிதனை அவன் செய்த செயல்களுக்குப் பொறுப்பாளி என்று கூற முடியாது. ஏனென்றால், அவன் அப்படித்தான் செய்ய வேண்டியதாக இருந்தது என்று கூறிவிடலாம்.
முன்பு செய்யப்பட்ட எக்கர்மா இப்போது பலனளிக்குமோ அதுவே பிராரப்தம் என்று நான் கூறினேன். அது முற்பிறவியில் செய்த நம் முயற்சிகளினால் ஏற்பட்ட கர்மா. ஆதலால் முயற்சியினும் மேலான அதிக பலமுள்ளதாக பிராரப்தம் என்றுமே இருக்க முடியாது. ஒருவன் முன் செய்த செயல்களின் வழியை இப்பிறவியில் முயற்சியால் மாற்றலாம். ஆனால் முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவின் வாஸனை மிக அதிகமாயிருந்தால் அதை மாற்ற நாம் மிகவும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். இது முக்கால்வாசி விஷயங்களிலும் உண்மை. இதற்கு உதாரணம் தூணில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பசுமாடே ஆகும். கட்டப்பட்டிருக்கும் கயிறு எவ்வளவு நீளமோ, அது வரை பசுமாடு சுதந்திரமாகச் சுற்றலாம். ஆனால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது. அதேபோல் நாட்டின் விதியும், மற்றவர்களின் விதியும், நம் செயல்களும் நமது சுதந்திரத்திற்கு ஓர் எல்லையை வைக்கின்றன.
ஒரு மனிதன் ஓரிடம் செல்வதற்காக ஒரு ரயில் வண்டியில் ஏறிச் செல்லலாம். ஆனால், அவ்வண்டி விபத்துக்கு ஆளாகலாம். அதேபோல் ஒருவன் சில சமயங்களில் தேர்வில் நன்கு எழுதியிருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண் கிடைக்காமல் இருக்கலாம். இதையெல்லாம் கண்டு வருத்தத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது.
ஆன்மிக வாழ்வில் ஏறக்குறைய எதனையும் முயற்சியால் அடைந்து கொள்ளலாம். பிராரப்தத்தின் வசப்படி ஒருவன் க்ரஹஸ்தனாக இருக்க வேண்டும் என்றிருக்கலாம். ஆனால், அவன் குருவின் அனுக்ரஹத்தாலும், முயற்சியாலும் பிரஹ்மசர்ய வாழ்க்கையையே கடைப்பிடித்து மேலும் ஸந்யாஸ வாழ்வும் பெறலாம். முன் செய்த செயல்களின் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டுமென்றாலும் பிராரப்தத்தின் சக்தியை இறைவனருளால் மிகவும் குறைத்து விடலாம். ஜபம், ஹோமம், தியானம், பூஜை, நல்லவர்களின் சேர்க்கை போன்றவற்றால் பிராரப்தத்தின் கெட்ட பலனை அதிக அளவிற்குக் குறைத்துவிடலாம்.

சி: ஒருவனின் ஜாதகத்தில் ஒருவன் 80 வயது இருப்பான் என்றிருந்தால் அவன் அதற்கு முன் இறக்கமாட்டான் என்று அர்த்தமா? அதேபோல் இளமையிலேயே ஒருவன் இறக்க வேண்டுமென்று இருந்தால், அவன் அவ்வயதுக்கு மேல் உயிர் வாழ மாட்டானா?
ஆ: இரண்டு கேள்விகளுக்கும் 'இல்லை' என்பதே பதில்.
சி: ஜாதகத்தைத் தவறாகக் குறித்ததாலோ அல்லது ஒழுங்காகப் படிக்காத தாலோதான் இவ்வாறு ஏற்படுமா?
ஸ: இல்லையே.
சி: அப்படியென்றால் 'ஜாதகத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு கூறப்பட்டதெல்லாம் பிரயோஜனமில்லை. மேலும் கைரேகையைப் படிப்பதிலும் அர்த்தமில்லை. ஆகவே ஜோதிஷ சாஸ்திரத்திற்கே பிரயோஜனமில்லை“ என்பதா ஆசார்யாளின் கருத்து?
ஆ: இல்லையே.
சி: ஆசார்யாள் சற்று விளக்கம் கூறுவார்களா?
ஆ: ஜாதகம் ஒருவன் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலனைக் காட்டுகிறது. ஆதலால் அதன்படி சொல்லப்பட்ட பலன், முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவினால் வரக்கூடிய பலன். இந்தப் பிறவியில் நம் சுதந்திரச் செயல்களினால் அதை நிச்சயமாக மாற்றிவிடலாம். மார்க்கண்டேயனைப் போல் நாம் இறைவனின் அருளைப் பெற்றால் நாம் வாழ வேண்டிய காலத்திற்கும் மேல் அதிகமாக வாழலாம். அதேபோல் கெட்ட வழிகளில் சென்று உடல்நலத்திற்குக் கெடுதல் செய்து கொண்டால் வாழவேண்டிய காலங்கூட வாழாமல் மரணமடையலாம். இதெல்லாம், ஜோதிடப் புத்தகத்தில் இல்லாமல் நாமாகவே பார்க்கலாம். ஆகவே, முயற்சியினால் முடிந்த அளவிற்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜோஸ்யர்களும் 'இம்மாதிரி செய்தால் அக்கர்மாவின் பலன் குறையும்' என்று கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜாதகத்தின்படியேதான் நடக்க வேண்டுமென்றால், அம்மாதிரி பிராயச்சித்தங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஆதலால் முயற்சியால் விதியை வெல்லலாமென்பது தீர்மானம்தான். ஜாதகத்தைக் கண்டு ஒருவனும் பயப்பட வேண்டிய தேவையில்லை. அது வரப்போவதற்கு முன் அறிவிப்பாக இருக்கும். ஆனால் அதையே நாம் மாற்றிவிடலாம்.