சிஷ்யன்: வேதம் ஆரம்பமில்லாதது என்று சொல்வதுண்டு. அப்படியா?
ஆசார்யாள்: ஆம், அது பரம்பொருளின் மூச்சுக் காற்றைப் போல் விளங்குகிறது.
சி: சிலர் 'வேதங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆரியர்களால் இயற்றப்பட்டது. மேலும் உபநிஷத்துகள் அதற்குப் பின்பு இயற்றப்பட்டன' என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தை ஒப்புக்கொள்வதில் ஏதாவது தவறுதல் இருக்கிறதா?
ஆ: இந்த அபிப்ராயம் எங்களுக்குச் சம்மதமில்லை. உபநிஷத்துகள் வேதங்களுக்குப் பிறகுதான் இயற்றப்பட்டன என்று வைத்துக் கொண்டாலும், இப்போது எல்லா இடங்களிலும் தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஆரண்யகத்தின் 7, 8, 9ஆம் பிரச்னங்களாக இருக்கிறது என்று ஏன் கருதப்பட வேண்டும்? தைத்திரீய உபநிஷத் ஏதோ ஓர் ஊரில் வேதங்கள் இயற்றப்பட்டதற்குப் பின்பு எழுதப்பட்டது என்று வைத்துக் கொண்டால், அதை எல்லா மக்களும் ஏன் வேதத்தின் பகுதியாகக் கருத வேண்டும்? மேலும் வேதத்தின் அதே பகுதிக்குச் சேர்ந்தது என்றும் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?
வேதம் பல வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டதென்று வைத்துக் கொள்வோம். அவற்றை இயற்றியவர்கள் சிரத்தையுடன் இருந்தார்களா? அல்லது மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தார்களா? எவ்விதமான யாகங்களைச் செய்தால், ஸ்வர்கத்தைப் பெறலாம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இவ்விஷயத்தை நாம் சாஸ்திரங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் வேதத்தை இயற்றியவர்கள் சிரத்தையுடன் இருந்தார்களென்று வைத்துக் கொண்டால், ஸ்வர்க்கத்தைத் தரும் யாகத்தைப் பற்றி தாமாகவே எழுதியிருக்க முடியாது. அவர்கள் அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால், அவர்களுக்கு அது தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் சிரத்தையில்லாதவர்களாக இருந்தால், இந்த யாகங்களைத் தாமாகவே எதற்காகப் பல வருடங்கள் செய்து வந்திருக்க வேண்டும்?
சம்பிரதாயத்தின்படி வேதத்தைக் கற்றுக் கொடுப்பவர்கள் வேதத்தை உச்சரிக்கும்போது அக்ஷரத்திலேயோ, ஸ்வரத்திலேயோ ஒரு விதமான தவறும் ஏற்படக் கூடாது என்கிற விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் ஏன் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் “அக்ஷரம் மற்றும் ஸ்வரங்களில் பிழை நேரக் கூடாது. அவ்வாறு நேர்ந்தால் நன்மை ஏற்படாது” என்று கூறியிருந்தனர். இவ்வாறு, குரு, அவருடைய குரு என்று விசாரித்துக் கொண்டே போனால், வேதத்தை இயற்றியவர்கள் என்று யாராவது இருந்திருந்தால் அவர்களுக்கும், 'ஸ்வரம் மற்றும் அக்ஷரங்கள் விஷயத்தில் கவனம் தேவை' என்ற நம்பிக்கையே இருந்திருக்கும் என்று தீர்மானம் செய்யலாம். ஸ்வரமில்லாமல் வேதத்தைக் கற்றுக் கொள்வது சுலபமாய் இருந்தபோதிலும், “ஸ்வரங்களைத் தவறாக உச்சரிக்கக் கூடாது; சரியாகச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் ஏன் தீர்மானமாக இருந்தார்கள்? வேதம் புனிதமானது. அதை உச்சரிப்பதில் தவறொன்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தெரிந்திருந்ததால்தானே அவர்கள் தீர்மானமாக இருந்து தத்தம் சிஷ்யர்களுக்குக் கட்டளை ஏற்படுத்தியிருந்தார்கள்? வேதத்தை இயற்றியவர்கள் என்று யாராவது இருந்திருந்தால், தாம் இயற்றிய வேதத்தை மிகவும் புனிதமானது என்று தாமே கருதுவதற்கு அவகாசமில்லை. ஆகையால், மனிதர்கள் வேதங்களை இயற்றியிருக்க முடியாது.
இராமாயணப் பல வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டதென்று பலர் ஒப்புக்கொள்கிறார்கள். இராமர் வேதத்தை அறிந்தவர் என்றும் நாம் காண்கிறோம். இராமனைப்போல, இலங்கையை ஆண்ட இராவணனும் வேதத்தை அறிந்தவன் என்று தெரிந்து கொள்கிறோம். அவ்வளவு வருடங்களுக்கு முன்பு வேதம் எப்படி இவ்வளவு தூரத்திற்குப் பரவியிருக்க முடியும்? ஒரே ஒரு சாகையைக் கற்றுக் கொள்வதற்கே பல வருடங்களாகின்றன. பழைய காலத்தில் புத்தகங்கள் உபயோகப்படுத்தாமல்தான் வேதத்தை அத்யயனம் செய்து கொண்டு வந்தார்கள். அதனால் அவ்வளவு தூரம் பரவியிருக்க வேண்டுமென்றால், வேதத்தை எல்லாரும் புனிதமென்று கருதி ஒரே வகையில் மனப்பாடம் செய்து கொண்டு வந்திருந்தால்தான் அதே வகையில் தொடர்ந்து வந்திருக்க முடியும். இராமர் ஸந்தியாவந்தனம் செய்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இராவணனும் ஸந்தியாவந்தனம் செய்து வந்தான் என்றும் பார்க்கிறோம். ஆதலால் அதே மந்திரங்கள் தான் பாரதத்திலும், இராவணன் வாழ்ந்த இடத்திலும் இருந்தன என்று தெரிகிறது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலும் கிருஷ்ணயஜுர்வேதம் ஒன்றாகத்தான் இருக்கிறது என்பதை நாம் காணலாம். வருடங்கள் பல ஆகிய பிறகு மாறுதல் ஏற்பட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா? ஆனால் மாறுதல் ஏற்படவில்லை. காரணம் என்ன? குரு - சிஷ்யர் ஆகிய இரண்டு பேருமே கொஞ்சம் கூட மாற்றாமல் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அதுவேதான் காரணம்.
சிலர், வேதங்கள் பல வருடங்களுக்கு முன்பு மனிதனால் இயற்றப்பட்டன என்று கூறுகிறார்கள். அவர்களிடம் இக்கேள்வியைக் கேட்க நாம் விரும்புகிறோம். வேதம் மனிதனால் இயற்றப்பட்டதென்றால் வேத மந்திரங்களுக்கு இவ்வளவு சக்தியும் பலமும் எப்படியிருக்கின்றன? பல வியாதிகள், வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்தாலும் அவையும் வேத மந்திரங்கள் மூலமாகக் குணமாகின்றன. இம்மாதிரி சம்பவங்களைப் பலர் கண்டிருக்கிறார்கள். வேதங்கள் பிராசீன காலத்தில் இயற்றப்பட்ட சாமான்யப் புத்தகங்கள் என்றால், இம்மாதிரி சக்தி வந்திருக்காது. ஆதலால், நாம் வேதத்தைப் பரம்பொருளால் உபதேசிக்கப்பட்டது என்றே கருதுகிறோம்.
சி: இப்படியிருந்தால் பல மந்திரங்களுக்குப் பல ரிஷிகள் இருக்கிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? ஏனென்றால், ரிஷிகள் மந்திரங்களை இயற்றியிருந்தால், அவர்கள்தானே மந்திரங்களுக்குக் கர்த்தாக்களாவார்கள்?
ஆ: ரிஷிகள் மந்திரங்களை உண்டாக்கியவர்களல்லர். முக்கியமாக, மந்திரத்தைப் பிரசாரம் செய்த முனிவரின் மந்திரத்தின் மஹிமையைப் புரிந்து கொண்டு அதைப் பிரசாரம் செய்தாரே தவிர, அந்த மந்திரத்தைத் தானாகவே உண்டாக்கவில்லை. பிரஹ்மா வேதத்தை, உலகத்தை ஸ்ருஷ்டி செய்யும்போது உபதேசம் செய்தார். காலம் ஆக ஆக சில மந்திரங்கள் அத்யயனக் கிரமம் விட்டுப் போனதால் லோபமாகி விட்டன. வேதவியாசர் பகவானின் அவதாரமானதால் முதலிலிருந்த வகையிலேயே மறுபடியும் ஜனங்களுக்கு உபதேசம் செய்தார். இவ்வளவுதான் விஷயம்.
சி: வேதத்தில் நாம் பல கதைகளைக் காண்கிறோம். அவை உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இருக்கின்றனவா?
ஆ: இல்லை. அவை உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இல்லை. பரம்பொருளின் மூச்சுக் காற்றைப் போலிருக்கும் வேதத்திற்கு ஆரம்பமேயில்லை. ஆகவே உண்மையாகவே நடந்த நிகழ்ச்சிகளை அங்குக் கூறியிருப்பதற்குச் சாத்யமேயில்லை. ப்ருஹதாரண்யக உபநிஷத்தில், யாக்ஞவல்க்யருக்கும், ஜனகருக்கும் நடந்த ஒரு பேச்சைப்பற்றி இருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி ஸம்வாதம் இல்லை. இதுபோன்று உண்மையாகவே ஒரு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதுதான் உபநிஷத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறதென்று கூற முடியாது. வேதத்தில் உள்ள கதைகள் ஒரு விஷயத்தை நன்கு புரியும்படிச் செய்வதற்காகத் தானிருக்கிறது.
சி: ‘முதலில் உலகம் உண்டான பிறகு மனிதன் குகையில் வசித்து வர ஆரம்பித்திருக்கலாம். சிறிது காலம் சென்ற பிறகு அவனது அறிவும் வளர்ந்திருக்கலாம். அதற்குப் பிறகு பகவான் வேதத்தை உபதேசம் செய்திருக்கலாம்'. இம்மாதிரி கருதுவதில் ஏதேனும் தவறிருக்கிறதா? இவ்வாறு வைத்துக் கொண்டால், நாம் விஞ்ஞானத்திற்கும் எதிர்மாறான கருத்தை வைத்துக் கொள்ளாமல் இருக்கலாம். வேதமும் இறைவனால் உபதேசிக்கப்பட்டது என்றும் கருதலாம். ஆகவே இதுபற்றி ஆசார்யாள் என்ன கூறுகிறார்கள்?
ஆ: இது சரிவராது. ஏனென்றால், எப்போது பகவான் மனிதனை உண்டாக்கினானோ அப்போதே அவன் வேதத்தையும் உபதேசித்திருக்க வேண்டும். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா,
(ஸஹ யக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:)
(முன்பு யக்ஞங்களுடன் ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்து ப்ரஜாபதி கூறினார்) என்று கூறியுள்ளார்.
யக்ஞம் என்றால் வேதத்தில் சொல்லப்பட்ட யக்ஞம். யக்ஞத்தைச் செய்ய வேண்டுமானால், அதற்கு முன்பு வேதம் இருந்திருக்க வேண்டும். ஆகவே இதிலிருந்து வேதத்தையும் இறைவன் உலகத்தை ஸ்ருஷ்டித்த சமயத்திலேயே உபதேசித்தான் என்று நமக்குத் தெரிகிறது. இதை நாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் நமக்கு எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் கிடைக்காது. வேதத்தில் சொல்லப்பட்டதையே நாம் தர்மம் என்கிறோம். ஆதிமனிதனுக்கு, வேதம் உண்டாவதற்கு முன்பு அவன் இருந்திருந்தானானால், எது தர்மம் எது அதர்மம் என்று அவன் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது? ஆகவே அவன் வேதத்திற்கும் முன்பு வாழ்ந்திருந்தானேயானால், அவனுக்கு தர்மம், அதர்மம் என்பதே தெரிந்திருக்காமல் இருந்திருக்க வேண்டும். அதாவது, அப்போது அவன் எதைச் செய்திருந்தாலும், அது அவனுக்கு, 'எல்லாம் நல்ல பலன்கள் அல்லது எல்லாம் கெட்ட பலன்கள் என்பதாகவே தந்திருக்க வேண்டும். அவன் செய்த எல்லாக் காரியங்களும் நல்ல பலனையே தந்தன என்ற கூற்றை ஆராய்ந்தால், 'வேதம் வருவதற்கு முன் ஒருவன் எது செய்திருந்தாலும் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் வேதம் வந்தபின், அவனுடைய செயல்களுக்குக் கெட்ட பலன்களும் கிடைக்கலாம்' என்றல்லவா முடிவு வரும்? இது நியாயமா? ஆகவே வேதம் உண்டாவதற்கு முன் ஒருவனுக்கு எப்போதும் நல்ல பலன்களே இருந்தால், நரகமே செல்லத் தேவையில்லையென்றும், வேதம் தோன்றிய பின்னர் ஒருவனுக்கு நரகம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னால் அதை ஒப்புக்கொள்ள முடியுமா?
அதேபோல் வேதம் தோன்றும் முன் எல்லாமே தீய பலன்களாகத் தந்தன என்ற கூற்றை எடுத்துக் கொண்டாலும் அதுவும் நியாயமில்லை. ஆகவே எப்போது பகவான் உலகத்தைப் படைத்தானோ, அப்போதே அவன் வேதத்தையும் உபதேசித்திருக்க வேண்டும். அதாவது தர்ம, அதர்ம விஷயங்களில் உபதேசம் பெற வழியிருந்திருக்க வேண்டும். இந்த உபதேசங்களையே நாம் வேதத்தில் காண்கிறோம். ஆதலால் முதலில் மனிதன் படைக்கப்பட்டு, பிறகுதான் வேதம் வந்தது என்பது சற்றும் சரியில்லை.
சி: வேத அத்யயனம் செய்ய வேண்டுமென்பது சாஸ்திரங்களின் கட்டளையா?
ஆ: ஆம், தகுதியுள்ளவர்கள் (அதிகாரிகள்) கட்டாயமாக வேத அத்யயனம் செய்ய வேண்டும்.
(ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய:)
(தன்னுடைய சாகையை அத்யயனம் செய்ய வேண்டும்) என்பது சாஸ்திரங்களின் கட்டளை. வேதங்களைக் குருமுகமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு டேப்ரிக்கார்டர் மூலம் வேத அத்யயனம் செய்து கொண்டால், அது வேத அத்யயனமாகாது. ஒரு கிளி ஒரு மனிதனைக் கூப்பிட்டால், அம்மனிதன் செல்வானா? அதே வார்த்தைகளை இன்னொரு மனிதன் கூறி இம்மனிதனைக் கூப்பிட்டால், அவன் கட்டாயமாகச் செல்வான். அதாவது வேறுபாடு என்பது வார்த்தைகளில் இல்லை. அவற்றைச் சொல்பவனிடம்தான் உண்டு. அதேபோல் வேத அத்யயனம் என்பது குரு சொல்லக் கேட்டு, அதை சிஷ்யன் மீண்டும் உச்சரிப்பதே ஆகுமே தவிர, டேப்ரிக்கார்டர் முதலியவற்றின் மூலம் கற்பது வேதமாகாது, வேத மந்திரங்களைக் கூறிய பலனையும் தராது.
சி: வேத அத்யயனம் செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
ஆ: ஆம். பலவிதமான நன்மைகள் உண்டு. வேதத்தை அத்யயனம் செய்வது என்பது அதிகாரிகளுக்கு (தகுதியுள்ளவர்களுக்கு) கடமையானதால், அவர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் தம் கடமையைச் செவ்வனே செய்து முடிக்கலாம். மேலும் வேதத்திலும், இவ்வுலகத்திலும், பரலோகமாம் மறு உலகத்திலும் நன்மை அடைய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நன்மையை அடைய வேத அத்யயனமே நமக்கு வழி காட்டும். மோக்ஷமடைய வேதத்தில்தான் சரியான வழி காட்டப்பட்டுள்ளது. ஆகவே லௌகீக இன்பமோ, ஸ்வர்க இன்பமோ அல்லது மோக்ஷமோ, இவற்றில் எதை நாம் விரும்பினாலும், வேதத்தின் பக்கமே கவனம் செலுத்த வேண்டும். வேத மந்திரங்களை உச்சரித்தாலே புண்ணியம் ஏற்பட்டு அது நமக்கு நன்மையளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வேத மந்திரங்களுக்கு அபாரமான சக்தியிருக்கிறது. சில மந்திரங்கள் வியாதிகள் போன்றவற்றையும் நீக்கும் சக்தி வாய்ந்தவை.
சி: இக்காலத்தில் பலர் வேத அத்யயனம் செய்வதில்லை. ஏனென்றால், அவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அலுவலகம், பள்ளிக்கூடம் முதலியவற்றிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், தக்க சமயமும் கிடைப்பதில்லை. அத்யயபனம் செய்து வைக்கும் புரோஹிதர்களும் சிரத்தையுடன் இருப்பதில்லை. இம்மாதிரி சூழ்நிலைகளில் வேதத்தை அத்யயனம் செய்யத் தகுதியுள்ளவன் என்ன செய்ய வேண்டும்?
ஆ: முடிந்த அளவிற்கு அத்யயனம் செய்ய வேண்டும். பூஜை போன்ற காரியங்களுக்கு மிகவும் தேவைப்படும் ருத்ரம், சமகம், ஸூக்தங்கள் போன்றவற்றையாவது அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலோ, மாலையிலோ, சிறிது நேரமாவது வேதம் கற்பதற்கு ஒதுக்கி வைப்பது கடினமில்லை. ஒவ்வொருவனும் தன் சாகை முழுதும் அத்யயனம் செய்வது உத்தமம். அப்படி முடியாவிட்டால் முடிந்த அளவிற்காவது அத்யயனம் செய்ய வேண்டும். புரோஹிதர்கள் மேலேயே பழியைப் போடுவது அவ்வளவு பொருத்தமாகாது. அவர்களும் வாழ வேண்டுமல்லவா? இது லௌகீகக் கல்வி பயிலுதலே நிறையப் பணம் சம்பாதிக்க வழி என்று அனைவரும் எண்ணும் காலம். வேத அத்யயனம் செய்பவனுக்கும், தான் சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே? ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. ஆனால் பேராசை என்பது இருக்குமாயின், அது நிச்சயமாகத் தவறுதான். புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள்? ஆகவே, நாம் வேதம் கற்றுத் தருபவர்களை மரியாதையுடன் நடத்தி, ஆதரவளிக்க வேண்டும். மேலும், அவர்களும் கர்வத்திற்கும் பேராசைக்கும் இடங்கொடாமல் சிரத்தையோடு வேத அத்யயனம் செய்வதில் உதவ வேண்டும்.
No comments:
Post a Comment