Monday, November 14, 2011

ஸ்கந்த நாமச் சிறப்பு

அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டானுக்கும் யாருடைய பக்தி மேலானது என்ற விவாதம் எழுந்தது. திருவண்ணாமலையை ஆட்சி செய்து மன்னன் பிரபுடதேவன் இப்போட்டிக்கு தலைமை வகித்தான். அருணகிரிநாதர் முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார். ஆனால், சம்பந்தாண் டான் முருகனின் காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து தடுத்தான். சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின் இடப்புறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார்' என்று பெயர் பெற்றார். இதனை திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா'' என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.



 "ஸ்கந்தர்' என்றால் "துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை "ஸ்கந்த ஷஷ்டி' என்றே சொல்கிறோம். அம்பாளோடும் "முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் "சோமாஸ்கந்தர்' என்றே பேர் இருக்கிறது. "முருகன்' என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.

No comments:

Post a Comment