Saturday, June 15, 2013

அபயாம்பிகை பட்டர்

காலம் கெட்டுப் போச்சு சார்! எல்லாம் தலைகீழா நடக்குது'' பலஇடங்களில் பலரும் பேசும் வார்த்தை தான் இது.
சமயத்தில் நாமே பேசி இருப்போம். இது உண்மையா? சற்று ஆராயலாம் வாருங்கள்!
காலம் கெட்டும் போகவில்லை; மாறவும் இல்லை.
உலகம் தோன்றிய அன்றிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிச பட்சிணி தான். அது காய்கறிகளைத் திண்பதில்லை. அதேபோல, மாடுகள் வேட்டைக்குப் போய் விலங்குகளை உண்பதில்லை. அவை, மரக்கறி உணவு தான் உண்கின்றன. இவ்வாறு எல்லாமே முறை மீறாமல் ஒழுங்காகவே நடந்து கொண்டிருக்கிறது.
நாம் தான் எட்டு மணிக்கு இருந்ததைப் போல, எட்டேகால் மணிக்கு இருப்பதில்லை. பல்வேறு முகங்களைக் காண்பிக்கிறோம். அதற்கு யாராவது எதிர்ப்பு காட்டினால், ""சும்மா இரு! அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன்,'' என்ற பதிலும் சொல்வோம்.
ஆரம்பத்தில் கூறியதைப் போல, காலம் மாறவும் இல்லை; கெட்டுப் போகவும் இல்லை. அப்படி இருக்கும்போது, காலத்தையே ஆட்டிப் படைக்கும் அம்பிகை மாறுவாளா என்ன! அவள் என்றென்றும் தன் அருள்மழையைப் பொழிந்து கொண்டு தான் இருக்கிறாள். இதிகாச புராண காலத்தில் மட்டுமல்ல. "தீமைகள் நிறைந்த கலியுகம்' என்று சொல்லப்படும் இப்போதும் நம்மைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இதோ! 250 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி அதை விளக்குகிறது.
""ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது'' என்று புகழப்படும் மயிலாடுதுறை திருத்தலத்தில்.......
ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். குழந்தையின் நேரமா? அல்லது அக்குழந்தையைக் கொஞ்சி மகிழப் பெற்றோர்களுக்குக் கொடுப்பினை இல்லையா... தெரியவில்லை. கிருஷ்ணசாமி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். குழந்தை காப்பகம் அது- இது என்று எதுவும் இல்லாத காலம் அது. அதனால், உறவினர்களே வளர்த்தனர். என்ன இருந்தாலும் தாய்க்கு ஈடாகுமா! கிருஷ்ணசாமி அவ்வப்போது, ""அம்மா! அம்மா!'' என்று கதறினார்.
அந்தக்குரல், அனைத்து உயிர்களுக்கும் தாயான அம்பிகையை ஆட்டியது. அவள் வந்து விட்டாள். ஆம்! மாயூரத்தில் இருக்கும்
அன்னை அபயாம்பிகையே கோயிலில் இருந்து தேடி வந்து விட்டாள். வந்தவள் கிருஷ்ணசாமியை அள்ளி அரவணைத்து அமுதளித்து ஆறுதல் படுத்தினாள்.
இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.
ஒருமுறை, குழந்தை அழும்போது, அதன் தாயின் வடிவிலேயே வந்தாள் அம்பிகை. வழக்கப்படி உணவூட்டினாள். அதன் கையைப் பிடித்து மெல்ல... அழைத்துப் போய், கோயிலில் தன் சந்நிதியில் நிறுத்தி மறைத்தாள்.
இனிமேல், அந்த கிருஷ்ணசாமியை....
அம்பிகையின் அருள்பெற்ற அந்த உத்தமரை, "அபயாம்பிகை பட்டர்' என்றே பார்க்கலாம்.
அன்று முதல், அபயாம்பிகை பட்டர் தினமும் மயூரநாதர் கோயிலுக்குச் சென்று, மயூரநாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்துத் திரும்புவதை வழக்கமாக்கினார்.
ஒருநாள்........
அபயாம்பிகை பட்டர் அம்பிகையைத் தரிசித்து அர்த்தஜாம வழிபாட்டை முடித்து திரும்பிக் கொண்டிருந்தார். இருளாக இருந்தது.
கோபுர வாசலைத் தாண்டி வந்த பட்டர் கால்இடறி விமுந்தார். வலி தாங்காமல் ""அம்மா!அம்மா!'' என்று கதறினார்.
அடுத்த விநாடியில்......
அழுகைக்குரல் கேட்ட அன்னை கையில் ஒரு விளக்கோடு ஓடி வந்தாள். அவளைக் கண்டதும் பட்டருக்கு வலி பறந்து போனது.
அம்பிகையே கூட வந்து கைவிளக்கால் வழிகாட்டவும் செய்தாள். நீர் மல்கிய கண்களுடன் பட்டர் வீடு சேர்ந்தார். அன்று முதல் ஓர் அதிசயம் தொடர்ந்தது. பட்டர் அர்த்தஜாம பூஜை முடித்து திரும்பும்போது, ஆள் இல்லாமலேயே கைவிளக்கு மட்டும் பட்டருக்கு துணையாக வழிகாட்டி வந்தது.
அந்தரத்தில் மிதந்தபடி அருள்வழி காட்டிய விளக்கைக் கண்ட ஊரார் ஆச்சரியப்பட்டனர். பட்டரோ அம்பிகையின் கருணையை நினைத்து உள்ளம் உருகினார்.
""தாயே! அடியேன் ஒன்றுக்கும் உதவாதவன், ஏழை, எளியவன்; எனக்கு அமுதம் ஊட்டி வளர்த்தவள் நீ! அது போதாது என்று இருட்டிலும் எனக்கு வழிகாட்டி, உன் மலர்ப்பாதம் நோக, விளக்கேந்தி வருகிறாயே! அளவில்லாத உன் கருணைக்கு என்ன கைமாறு செய்வேன்?'' பட்டர் உருகிப்போனார்.
அப்போது அபயாம்பிகை அசரீரியாக, ""குழந்தாய்! கவலைப்படாதே! அருந்தமிழில் அழகாகப் பாடு! உன் குரல் கேட்டு, நான் உள்ளம் குளிர்வேன்'' என்றாள்.
அதைக் கேட்ட பட்டர், ""தாயே! அம்பிகே! உன்னைப் பாட அடியேனுக்கு ஏதம்மா தகுதி? நான் கற்றவனும் அல்ல. கவி பாடத் தெரிந்தவனும் அல்ல. என்ன செய்வேன்!'' என்று மேலும் அழுதார்.
அம்பிகை அவரிடம், ""மகனே! நீ பாடத் தொடங்கு! உனக்குப் பாட வரும்'' என்று அருள்புரிந்தாள்.
அப்புறம் என்ன கவலை! பட்டர் பாடத் தொடங்கினார். பாடல்கள் வந்து கொண்டே இருந்தன. நூறு பாடல்கள் உருவாயின.
(இப்பாடல்கள் "அபயாம்பிகை சதகம்' எனப்படுகின்றன)
துன்பம் போக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை மலரச் செய்யும் இந்தப் பாடல்கள் மாயூரம் அபயாம்பிகை சந்நிதியில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. பரவச நிலையில் இருந்த பட்டர் பாடி முடித்ததும் தன் நிலை மறந்தார். அதன் பிறகு, பட்டரின் நிலை மாறிப்போனது.
பக்தியின் உச்சமான தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலையை அடைந்தார்.
சமாதி என்றால் இறந்து போய்விட்டார் என்பது பொருள் அல்ல!
உலகத்தில் என்ன தான் இடர் வந்தாலும், வருந்தாமலும், இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிக்காமலும் ஆதி இறைவனுக்கு சமமான நிலையில் இருப்பதே சமாதி நிலை.
அப்படிப்பட்ட நிலையில் பட்டர் அடிக்கடி ஆழ்ந்து விடுவார். அவருடைய நிலையை ஊராரால் புரிந்து கொள்ள இயலவில்லை. அதற்காக உறவினர்கள் சும்மா இருப்பார்களா?
அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பெண்ணைப் பார்த்து பட்டருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
""கல்யாணம் ஆகிவிட்டால் கோயில் குளம் என்று சுற்றாமல் உலகியல் வாழ்வில் ஈடுபடுவார்,'' என்பது அவர்களின் எண்ணம். ஆனால், எண்ணம் பலிக்கவில்லை.
கண்களில் தெரிவதெல்லாம் அம்பிகையின் வடிவம், காதில் கேட்பதெல்லாம் அம்பிகையின் குரல் என பக்குவப்பட்டிருந்த பட்டரை, கல்யாணமா மாற்றிவிடும்? பட்டர் தன் மனைவியை அம்பிகையாக எண்ணி, வழிபாடு செய்தார். இல்வாழ்வில் ஈடுபடவில்லை. ஊராரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவதூறு பேசத் தொடங்கினர்.
""ஹும்! மனைவியை பூஜை செய்றாராம். மந்திர, தந்திர, மாயமெல்லாம் செய்கிறார். ஒழுக்கமில்லாமல் மது, மாமிசம் கூட உண்கிறார். அவர் ஒழுக்கம் கெட்டவர்,'' என்று உறவினர்களே அரசாங்க அதிகாரிகளிடம் பட்டரைப் பற்றி புகார்ப் பட்டியல் வாசித்தனர்.
அந்த அவதூறு பட்டரின் காதுகளை எட்டியது. மனம் உடைந்தார்.
""தாயே! அபயாம்பிகே! என்னை அவதூறு பேசுவோர் வாயும் நாவும் அடைத்துப் போக வேண்டும்,'' என முறையிட்டார். வதந்தி பரப்பியவர்களின் வாய் அடங்கியது.
ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டை முடித்துக் கொண்ட பட்டர், அம்பிகைக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, அப்படியே ஜோதி வடிவானார். அம்பிகையின் திருவடிகளில் கலந்து விட்டார்.

No comments:

Post a Comment