கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும் என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?, என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.ஒரு சீடர், நாய்களின் இயல்பு இதுதானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும், என்றார். வலிமை தான் எப்போதும் ஜெயிக்கும். வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே, என்றார் மற்றொருவர். எதிலும் முந்தியவர்க்கே முதன்மை. முரட்டுநாய்எலும்பை எடுப்பதில் முந்திக் கொண்டது, என்றார் மூன்றாமவர். விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார். நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி விடுவார்கள். உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள், என்றார்
No comments:
Post a Comment