Friday, October 11, 2013

சுவாசினி விரத வழிபாடு செய்யும் முறை

சுவாசினி விரத வழிபாடு செய்யும் முறை

வேதத்தில் உள்ள விளக்க உரைகளில் எந்த ஒரு பெண்ணுக்கு மாதத்தீட்டு என்ற நிலை இல்லையோ அவள் தான் சுவாசினி எனப்படுகிறாள். 50 வயதிற்கு மேற்பட்ட பழுத்த சுமங்கலியே சுவாசினி. காலையில் எண்ணெய் கொடுத்து குளிக்கச்செய்து மனைப்பலகையில் அமரவைத்து தலையில் பூவைத்து காலுக்கும் கழுத்துக்கும் மஞ்சள் பூசி ஓம் சுவாசினி நமக.

ஓம் லலிதா பரமேஸ்வரியே நமக- ஸ்வாகதம் என்று மூன்று முறைகூறி மீண்டும் முன் உள்ள 32 நாமங்களைப் படித்து அந்தப்பெண் முன்பாக 5 முகக்குத்துவிளக்கை ஏற்றிவைத்து அதற்கும் மலரிட்டு அர்ச்சனை செய்து பாயசம், வடை, சர்க்கரை அன்னம், சுண்டல், எலுமிச்சை சாதத்தைப் படைத்து மலர்கள் தூவ வேண்டும்.

தெரிந்த பாடல்களை வந்திருக்கும் பெண்களிடம் நான்கு வரிகளேனும் பாடச்செய்து அல்லது `கலையாத கல்வியும் என்ற அபிராமி அந்தாதி படித்து ஆரத்தி செய்து சுவாசினி பூஜை செய்த பெண்மணியிடம் வாழ்த்துரை பெறுதல் வேண்டும். சாரதா நவராத்திரியில் 5-ம் நாள் லலிதா பஞ்சமி விரதம் செய்பவர்களுக்கு வறுமை நீங்கி வளமை கூடும்.

சுவாசினி வழிபாடு செய்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான செய்திகளே வரும் என்கிறது தேசி பாகவதச் செய்யுள். நவராத்திரி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் ஒருமுறை லலிதா பரமேஸ்வரியே பக்தர்களின் பூஜைகள் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க பெண்வடிவில் சென்றிருக்கிறாள்.

ஏழைப்பெண்ணுருவில் சென்றபோது தேவியை யாருமே கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். வறுமையில் இருந்த ஒரு பெண் மட்டும் பழையசாதமும், பயிறு சுண்டலும் தந்தாள். மறுநாள் கழுத்து நிறைய பொன் ஆபரணங்களை அணிந்தபடி பட்டுப்புடவையோடு சென்றாள் தேவி.

அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போது நேற்று பழைய சாதம் கொடுத்த ஏழைப்பெண் வீட்டிற்கு சென்றாள். எல்லா பெண்களையும் அழைத்து இறைவழிபாட்டில் ஏழை செல்வச்சீமாட்டி என்ற வித்தியாசம் கூடாது. மனிதர்களுக்கு உரிய எட்டு குணங்களை அறியவே எட்டு தினங்களும் வந்து ஒன்பதாம் நாள் காட்சி தந்து செல்கிறேன்.

லலிதா விரதமும் சுவாசினி பூஜையும் செய்கிற வீட்டுக்கு விரும்பி வந்து அருள்கிறேன் என்றாள் தேவி. நவராத்திரி பூஜையில் எல்லாப் பெண்களையும் சமமாகவே நடத்தி தாம்பூலம், குங்குமம் கொடுத்து சக்தி தேவியாக நினைத்து வாழ்த்துக்களை கூறி ஒரு சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். அம்பிகை தரும் 16 பேறுகளைப் பெற லலிதா பஞ்சமி விரதம் செய்து எல்லோரும் வழிபட்டு வளம் பெறுங்கள்.

No comments:

Post a Comment