Friday, November 8, 2013

செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே

ஒருநாள் சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர்.

ஆனால், இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். உணவுடன் வந்த அவர்களை பார்த...்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர்.

வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர்.

உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ! இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார்.

No comments:

Post a Comment