அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க முடியுமா? -
ஆன்மீகத்தை அறியாத அறிவியல் முடம்,
அறிவியலை அறியாத ஆன்மீகம் குருடு
என்று குறிப்பிட்டு இரண்டும் குறைபாடுடையவை என்று கூறுகின்றார்.
அறிவியலும் ஆன்மீகமும் தனித்தனி நிலையில் நிற்கும்பொழுது குறைபாடுடையவனாக இருப்பதை அறியும் நாம், இரண்டையும் இணைத்து நோக்கும் ஒரு புதிய முயற்சியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆறறிவுள்ள மனிதன்:
உயிரினங்களின்,
உடலைப் பற்றிய ஆய்வு அறிவியல் என்றும்
உயிரைப் பற்றிய ஆய்வு மெய்யியல் என்றும்
உயிரினத்தைப் படைத்ததாக நம்பப்படுகின்ற
இறைவனைப் பற்றிய ஆய்வு இறையியல் என்றும்
குறிக்கப்படுகின்றன.
அறிவியலையும், மெய்யியலையும், இறையியலையும் ஆராய்பவன், மற்ற உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள ஆறறிவுள்ள மனிதன் ஆவான்.
மற்ற உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள மனிதனைப் பற்றியும், அந்த வேறுபாட்டுக்குக் காரணமான ஆறாவது அறிவைப் பற்றியும் ஆயும் ஆய்வு, இதுவரை உலகில் சிறப்பிடம் பெற்று அறிவியல், மெய்யியல், இறையியல் போன்று ஒரு தனி ஆய்வாக வளர்ச்சி அடையவில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது.
ஆறாவது அறிவு:
மனிதனைப் பற்றிய ஆய்வு என்பது, மற்ற உயிரினங்களுக்கு இல்லாத மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படுகின்ற ஆறாவது அறிவைப் பற்றிய ஆய்வு ஆகும்.
''மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவு” என்பது அறிவியலுக்குக் கேள்விக்குறியாக அமைந்து விடுகிறது. மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவை, அறிவியல் வழியில் நிலைநாட்டிக் காட்ட முடியுமா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது.
அறிவியல்:
அறிவியல் வழியில் ஆறாவது அறிவை நிலைநாட்டிக் காட்ட இதுவரை வளர்ந்துள்ள அறிவியலால் இயலாத காரணத்தாலேயே,
''மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவு”
என்று குறிப்பிட வேண்டிய நிலை ஆறாவது அறிவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது, இதுவரை வளர்ந்துள்ள அறிவியல், ஆறாவது அறிவை அறியாததாய் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
அப்படியானால் ''உலகிலுள்ள உயிரினங்களில், மனிதன் மட்டுமே அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றை ஆராய்ந்து, மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது எவ்வாறு? மற்ற உயிரினங்களுக்கு இந்த ஆற்றல் இல்லாமல் இருப்பது ஏன்?” என்னும் கேள்விகளுக்கு இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் விடை இல்லை.
ஆன்மீகம்:
அறிவியலில் விடையில்லாத இந்தக் கேள்விகளுக்கு ஏற்ற விடையை ஆன்மீகம் கொடுக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே இருப்பதற்குக் காரணம் ''கடவுள்” என்னும் பதிலை ஆன்மீகம் கொடுக்கிறது.
ஆன்மீகம் கொடுக்கும் 'கடவுள்’ என்னும் பதிலை, அறிவியல் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில், ஆறாவது அறிவை மறுக்க வேண்டிய கட்டாயம் அறிவியலுக்கு ஏற்படுகிறது.
அறிவியல் ஆறாவது அறிவை மறுக்கும்பொழுது, அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய சிந்தனைகள் மனிதனுக்கு மட்டுமே இருப்பதற்கான காரணத்தை அறிவியலால் விளக்க இயலா நிலையை அறிவியல் அடைகிறது.
இணைக்க வேண்டிய கட்டாயம்:
ஆகவே, ஆறாவது அறிவை முழுமையாக அறிவதற்கு அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.
அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் இடத்தில் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவு பற்றியும், ஆறாவது அறிவுக்குக் காரணமாக மனிதனுக்கு மட்டுமே இருக்கும் 'மனிதம்’ அல்லது 'ஆன்மா’ பற்றியும், ஆன்மாவைப் படைத்த கடவுளைப் பற்றியும் ஆராய வேண்டிய தொடர்ச்சி ஏற்படுகிறது.
ஆன்மீகத்திற்குக் காரணமான உலக மதங்கள் அனைத்தையும் இணைத்து அவற்றின் பொதுக் கூறுகளை ஆராய்ந்தால் அவை,
1. உடல் 2. உயிர் 3. ஆன்மா 4. கடவுள் 5. ஆணவம் ஆகிய இந்த ஐந்து பிரிவுகளில் அடங்குகின்றன.
இதுவரை உலகில் வளர்ந்துள்ள அறிவியல், இந்த ஐந்து பிரிவுகளில் உடலைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளது.
டார்வினின் குறை:
உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட டார்வின் உயிரினங்களின் உடலைப் பற்றி அறிந்த கருத்துகளை வெளியிட்டுள்ளாரேயன்றி உயிரினங்களின் உயிரைப் பற்றி ஆராயவில்லை என்பது நோக்கத் தக்கது.
உலகிலுள்ள பொருட்கள்
1. உயிரற்ற பொருட்கள்
2. உயிருள்ள பொருட்கள்
என இருவகைப்படுகின்றன. டார்வின் ஆராய்ந்த உயிரினங்கள் உயிருள்ள பொருட்களில் அடங்குகின்றன. உயிரைப் பற்றி அறியாத அவரது ஆய்வு உயிரினங்களைப் பற்றிய முழுமையான ஆய்வாக இல்லாமல் குறைவுடையதாகி விடுகிறது. உயிரைப் பற்றி அறியாத ஆய்வு உயிரினங்களைப் பற்றிய ஆய்வாக ஆகாது.
உயிர்:
''உயிர்” என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஏற்ற விளக்கம் இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் இல்லை. அறிவியல் இக்கேள்விக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும், ஒரு சிறுவன்
1. உயிர் எங்கிருந்து வந்து உடலில் சேர்கிறது?
2. எப்பொழுது எவ்வாறு சேர்கிறது?
3. உடலை விட்டுப் பிரியும் உயிர் எங்கே செல்லுகிறது?
என்று கேட்கும் கேள்விகளுக்கு அறிவியலில் விடை இல்லை.
இக்கேள்விகளுக்கு ஏற்ற விடையை ஆன்மீகத்தில் தேட வேண்டியதிருக்கிறது.
''தமிழ் மொழி அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கும் மொழியாக இருக்கிறது” என்பதை, தமிழ் எழுத்துகளைப் பிரித்து நோக்கும் நோக்கு வெளிப்படுத்துகிறது.
உயிர் வேறு,
உடல் வேறு,
உயிரும் உடலும் இணைந்திருக்கும் உயிரினம் வேறு
என்னும் கருத்துகளை விளக்கும் நோக்கில்
1. உயிர் எழுத்து
2. மெய் எழுத்து
3. உயிர் மெய் எழுத்து
என்று பிரித்துக் காட்டுகிறது.
உணர்வும் அறிவும்:
உயிரின் இயல்பு உணர்தல். உணர்வின் வெளிப்பாடு அறிவு.
உயிரற்ற பொருட்கள் உணர்வதில்லை. அதனால் அவை அறிவை வெளிப்படுத்துவதில்லை.
உயிருள்ள பொருட்களாகிய உயிரினங்களை அவை உணர்ந்து வெளிப்படுத்தும் அறிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணம் ஆறு வகையாகப் பிரிக்கிறது.
ஐந்து வகை உணர்வும் ஐந்து வகை அறிவும்:
ஓரறிவுயிர் - தொடுவுணர்வைக் கொண்டுள்ளது - மெய்
ஈரறிவுயிர் - மெய்+வாய்
மூவறிவுயிர் - மெய்+வாய்+மூக்கு
நாலறிவுயிர் - மெய்+வாய்+மூக்கு+கண்
ஐந்தறிவுயிர் - மெய்+வாய்+மூக்கு+கண்+செவி
உலகிலுள்ள உயிரினங்களில், ஐந்து வகையான உயிரினங்களும் ஐந்து வகையான உணர்வின் அடிப்படையில் ஐந்து வகையான அறிவை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஐந்து வகை உறுப்புகளைப் பெற்றுள்ளன. அவை மெய், வாய், மூக்கு, கண், செவி.
ஆறாவது உணர்வும் ஆறாவது அறிவும்:
மனிதன் இந்த ஐந்து வகை உயிரினங்களிலிருந்து வேறுபட்டு ஆறாவது வகையான உயிரினமாக இருக்கின்றான்.
இதற்குக் காரணம் மனிதனுக்கு இந்த ஐந்து வகை உணர்வுடன் கூடிய ஐந்து வகை அறிவுடன் ஆறாவது வகையான உணர்வும் ஆறாவது வகையான அறிவும் இருக்கின்றன என்று ஆன்மீகம் கூறுகிறது.
ஐந்து வகை அறிவுக்குக் காரணமான ஐந்து வகை உணர்வுகளையுடைய மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்து உறுப்புகளுடன் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆறாவது உணர்வையுடைய 'மனிதம்’ அல்லது 'ஆன்மா’ என்பது மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது என்றும், இந்த ஆன்மாவே கடவுளை உணர்ந்து அனுபவித்து வெளியே எடுத்துக் கூறக் கூடியது என்றும், இந்த அனுபவத்தை அடையாதவர்களால் இதைப் புரிந்து கொள்ளல் இயலாது என்றும், ஆன்மீகம் விளக்குகிறது.
அகப் பொருள்:
ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆறாவது உணர்வாகிய ஆன்மீக அனுபவத்தைத் தமிழ் இலக்கணம் அகப் பொருள் என்று கூறுகிறது. இதை விளக்குவதற்கு இல்லற அனுபவத்தை உவமையாகக் கூறுகிறது.
மனிதன் அடையும் அனுபவங்களில், புறத்தே மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி நிலைநாட்டக்கூடியதைப் ''புறப்பொருள்” என்றும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி நிலைநாட்ட இயலாமல் அகத்தில் மட்டுமே உணரக்கூடிய ஆன்மீக அனுபவத்தை ''அகப்பொருள்” என்றும், பொருள் இலக்கணத்தின் வாயிலாக தமிழ் இலக்கணம் விளக்கிக் காட்டுகிறது.
நிலைநாட்ட இயலாமல் இருப்பது ஏன்?
தம் உடலிலுள்ள ஒரு உறுப்பின் வழியாக உணர்ந்து அறிந்த ஒருவர் இன்னொருவர் உடலிலுள்ள அந்த உறுப்பு வேலை செய்ய இயலாநிலையில், அந்த உறுப்பினால் உணரவும் அறியவும் இயலாநிலையிலுள்ள அவருக்கு தம் அனுபவத்தை எடுத்துச் சொல்லி நிலைநாட்ட இயலாது என்பது நடைமுறை. அவ்வாறே ஆறாவது உறுப்பாகிய ஆன்மா இருந்தும் அது வேலை செய்ய இயலாநிலையிலுள்ள மற்றவர்க்கு, தாம் உணர்ந்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி நிலைநாட்ட முடியாது எனக் கூறுவது அகப் பொருள் இலக்கணம்.
பொருள் இலக்கணத்தில் புறப்பொருள் அறிவியலை விளக்குவதாகவும் அகப் பொருள் ஆன்மீகத்தை விளக்குவதாகவும் இருக்கின்றன.
ஆன்மீக அனுபவத்தை விளக்கும் இந்தப் பொருள் இலக்கணம் தமிழ் மொழியைத் தவிர உலகில் வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
உயர்திணை:
தமிழ் மொழியிலுள்ள திணை இலக்கணம், ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவையுடைய மனிதனை உயர்திணை” என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் உயர்திணை அல்லாத ''அöறிணை” என்றும் வேறு வேறாகப் பிரிக்கிறது. இந்தப் பிரிவும் தமிழ் மொழியைத் தவிர உலகில் வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
இணைந்த ஆய்வு:
ஆகவே, தமிழ் மொழியிலுள்ள 1. பொருள் இலக்கணம் 2. திணை இலக்கணம் ஆகிய இரண்டும் ஆறாவது அறிவோடும் ஆன்மீகத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்ற காரணத்தாலும், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய ஆய்வுகளுக்குக் காரணமாய் இருப்பதாலும், ஆறாவது அறிவைப் பற்றி அறிவியல் அறிஞர்களும், ஆன்மீக அறிஞர்களும் இணைந்து ஆராய வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது.
இரட்டைப் புலவர்கள்:
அறிவியல் அறிஞர்களும் ஆன்மீக அறிஞர்களும் இணைந்து ஆராயும் பொழுது, அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் அறிவியலையும் ஆன்மீகத்தையும் முடம், குருடு என்று குறை கூறுவதற்குத் தீர்வு கிடைத்து விடுகிறது. இது தமிழகத்தில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்து விடுகிறது.
முடமான புலவர் ஒருவரும், குருடான புலவர் ஒருவரும், ஒன்றுபட்டு, குருடர் முடவரைத் தம் தோளில் ஏற்றிக் கொள்ள மற்ற எவருடைய துணையுமில்லாமல் இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் சென்று பாடிய பாடல்களைத் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. தனி நிலையில் செயல்பட இயலாத இருவர் இணைந்து செயல்பட்டு வெற்றி வாழ்க்கை வாழ்ந்தனர்.
முடமும் குருடுமான இரட்டைப் புலவர்களின் பாடல்களைத் தன்னகத்தே பெற்றுள்ள தமிழ் மொழி, முடமாகவும் குருடாகவும் கூறப்பட்டுள்ள அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கும் ஆன்மவியலைத் தன்னகத்தே கொண்டுள்ளமை தமிழ் மொழியின் தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
ஆன்மவியல்:
உடலைப் பற்றிய ஆய்வு அறிவியல் என்றும்,
உயிரைப் பற்றிய ஆய்வு மெய்யியல் என்றும்,
இறைவனைப் பற்றிய ஆய்வு இறையியல் என்றும்
தனித்தனி நிலையில் நின்று செயல்படுவதைப் போன்று, ஆறாவது அறிவைப் பற்றியும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றியும் ஆயும் ஆய்வு ''ஆன்மவியல்” என்னும் தனிநிலையில் அழைக்கப்படுவதே சரியானது. உலகில் ஆன்மவியல் ஆய்வு பரவாத காரணத்தால் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் நிறைவடைய இயலாமல் இருக்கின்றன. ஆன்மவியல் மற்ற மூன்றையும் இணைத்துக் கொண்டு ஒரு நிறைவை ஏற்படுத்துகிறது.
ஆன்மவியல் தமிழ் மொழியில் வளர்ந்துள்ளமையை உலகுக்கு வெளிப்படுத்தும் நிலையில், இதைத் ''தமிழர் ஆன்மவியல்” என்று குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
No comments:
Post a Comment