Wednesday, June 4, 2014

புத்தரின் புனித வாழ்விலிருந்து...............!!



புத்தரின் புனித வாழ்விலிருந்து...............!!
நீ செய்வதை நீயே அனுபவிப்பாய்:
சுபா என்ற இளைஞன் புத்தரைக் காண வந்திருந்தான். ""ஐயா! வணக்கம்! நீண்டநாளாகவே எனக்கொரு சந்தேகம். நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்'' என்று வேண்டினான். ""கேளப்பா! சொல்கிறேன்!'' என்று வாஞ்சையோடு கேட்டார் புத்தர்.
""மனிதர்கள் பலவிதமாக வாழ்கிறார்களே! சிலர் முகத்தைப் பார்த்தால் அழகு ததும்புகிறது. சிலரோ பார்க்கச் சகிக்காதவர்களாய் இருக்கிறார்கள். சிலரோ அறிவாளி! இன்னும் சிலரோ முட்டாளாய் திரிகிறார்கள். செல்வச் சீமான்கள் சிலர். சிலர் அன்றாடப்பாட்டுக்கும் அவதிப்படுகின்றனர். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்பதை கொஞ்சம் விளக்குங்கள்,'' என்று கேட்டான்.""அது தானப்பா அவரவர் கர்மவினை என்பது! பிறப்பு, இறப்பு, வாழ்க்கைமுறை எல்லாவற்றையுமே நம்முடைய கர்மவினை தான் தீர்மானிக்கிறது. இதனால் தான் இந்த ஏற்றத்தாழ்வு. இதிலிருந்து விடுபடவேண்டுமானால் நல்லவனாய் இருந்து தர்மத்தை பின்பற்றுவது ஒன்று தான் வழி,'' என்றார்.புத்தரின் விளக்கத்தைக் கேட்ட சுபா சந்தேகம் தெளிந்தவனாய் நன்றி தெரிவித்தான்.
தெரியாததைப் பேச வேண்டாம் புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார். ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர், உங்களைப் போல ஒரு புத்தரை இதுவரை நான் கண்டதில்லை. உங்களைப் போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை.'' என்று புகழ்ந்தார். புத்தரும் அவரிடம், ""அருமையாகச் சொன்னீர். இதற்கு முன் வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்,'' என்று கேட்டார். மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார். ""அது சரி! பரவாயில்லை! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்?'' என்றார். அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார். அப்போது புத்தர் தெரிந்ததைப் பற்றி பேசுவதும், தெரியாத விஷயத்தில் மவுனம் காப்பதும் தான் சிறந்தது. அறிவிலும் ஞானத்திலும் சிறந்த சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப் போல ஏற்றார்.
அகந்தையை ஒடுக்க வழி:
மஞ்சுஸ்ரீ என்னும் சீடருக்கு ஞானம் வந்து விட்டதை உணர்ந்த புத்தர், ""மஞ்சு நீ உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும்நேரம் வந்துவிட்டது. விழிப்புணர்வு பெற்றுவிட்டாய்! நீ போகலாம்,'' என்று வாழ்த்தி அனுப்பினார். குருவின் ஆணையை மீற முடியாத மஞ்சு, புத்தரைப் பிரிய மனமின்றி அழுது புரண்டார். ""ஏன் அழுகிறாய்? உனக்கு ஞானம் வந்த பிறகும் ஏன் இந்த மயக்கம். இன்னும் என்னிடம் இருந்து உனக்கு என்ன நடக்கப் போகிறது,'' என்று கேட்டார். ""ஐயனே! இதை விட பாக்கியம் வேறு என்ன இருக்கப் போகிறது. உங்களை அன்றாடம் பார்த்து பரவசம் கொள்வது ஒன்றே எனக்குப் போதுமானது'' என்று சொல்லி வருந்தினார் மஞ்சு. ""நீ எங்கிருந்தாலும் என் அன்பும் ஆசியும் உண்டு'' என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். இதைக் கண்ட மற்ற சீடர்கள், ""ஞானம் கைவரப்பெற்ற மஞ்சு ஏன் இப்படி செய்கிறார்?'' என்று கேட்டனர். அதற்கு புத்தர்,""அடக்கம் உள்ள இடத்தில் அகந்தை என்றும் தலைகாட்டுவதில்லை'' என்றார்.

No comments:

Post a Comment