Monday, June 16, 2014

நிலைத்து வாழும் நெஞ்சில் ஓர் ஆலயம்

ஒரு முறை காஞ்சி சங்கர மடத்தில் பக்தர் ஒருவர் பெரியவரிடம் அதிதி போஜனத்தின் (முன்பின் தெரியாதவர்களுக்கு உணவளித்தல்) பற்றிச் சொல்லும்படி வேண்டிக் கொண்டார்.
""வீடு தேடி வருபவரே அதிதி. அவரது பசியைப் போக்குவது தான் அதிதி போஜனம். மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு உண்டு. யாரும் இதைச் செய்யலாம். அப்படி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி கும்பகோணத்தில இருந்தார்கள். அவர்களைப் பற்றி இப்போ சொல்கிறேன்'' என்றார். அவர் சொன்னதின் சாராம்சம் இதோ!
கும்பகோணத்தில் குமரசேன் செட்டியார் மளிகை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சி. குழந்தையில்லாத இந்த தம்பதி வீட்டில் தினமும் ஒருவருக்காவது அன்னமிட்டு அதிதி போஜனம் செய்து வந்தனர். ஒருநாள் அடைமழை பெய்ததால், தெருவில் ஒருவர் கூட தென்படவில்லை. செட்டியார் மகாமக குளத்துப் பக்கம் போய் சிவனடியார் ஒருவரை சாப்பிட அழைத்து வந்தார். தம்பதி சமேதராக அடியாரை வணங்கி விட்டு, அவர் விரும்பும் உணவைச் சமைப்பதாக கூறினர். அவரோ முளைக்கீரையும், கீரைத்தண்டு சாம்பாரும் போதும் என தெரிவித்தார். கொல்லையில் செட்டியார் கீரை பறிக்கப் புறப்பட்டார். அடியவரும் அவருக்கு உதவும் நோக்கில் உடன் சென்றார். இருவரும் ஆளுக்கொரு தட்டாக கீரையைக் கொடுத்தனர். சிவகாமி ஆச்சி இரண்டையும் தனித்தனியாக அலசி விட்டு, தனித்தனி பாத்திரத்தில் வேக வைத்தார். சிவனடியார் கொடுத்த கீரை வெந்ததும், பூஜையறைக்கு எடுத்துச் சென்று சிவனுக்கு நைவேத்யம் செய்தாள். கீரை பிரசாதத்துடன் அடியவருக்கு சோறிட்டாள். அவரும் அதை விருப்பத்துடன் சாப்பிட்டார்.
இருந்தாலும், மனதிற்குள், தன்னுடைய கீரையை மட்டும் தனியாக சமைத்து நைவேத்யம் செய்தது ஏன் என்ற சந்தேகம் அதிதிக்கு எழுந்தது.
ஆச்சியிடமே அதைக் கேட்டும் விட்டார்.
செட்டியார் கீரை பறித்தபோது "சிவ சிவ' என நாமம் ஜெபித்தபடி பறித்ததால், அப்போதே சுவாமிக்கு நைவேத்யமாகி விட்டது. சிவநாமம் சொல்லாததால், அதிதி பறித்த கீரையை தனியாக நைவேத்யம் செய்ததாக தெரிவித்தார். இதைக் கேட்ட சிவனடியார் வியப்பிலும் வெட்கத்திலும் ஆழ்ந்து, ஏதும் சொல்லாமல் மவுனமாகப் போய்விட்டார்.
இப்படி அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து, கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வந்தார். பூஜையறையில் சிவநாமம் ஜெபித்தபடி கீழே சாய்ந்தார். உயிர் பிரிந்து சிவன் திருவடியில் கலந்தார். பதறிப் போன குமரேசன் செட்டியாரும் "சிவகாமீ' என்ற சொல்லியபடி கீழே சாய்ந்தார்.
அவரது உயிரும் சிவனருளோடு கலந்தது. சிவ சாயுஜ்ஜியம்(முக்திநிலை) என்னும் உயர்கதியை அடைய இந்த அதிதிபோஜனம் செய்த புண்ணியமே காரணம்.
"" ஒவ்வொரு மகாசிவராத்திரி நாளன்றும், குமரேசன் செட்டியார், சிவகாமி ஆச்சி தம்பதி நினைப்பு எனக்கு வந்து விடும்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார் மகாபெரியவர். ஆம்...நம் நெஞ்சிலும் குமரேசன் செட்டியார் தம்பதியர் ஆலயமாய் நிலைத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment