ஆரத்தித் தட்டில் காசு போடலாமா?
|
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் பதிலளிக்கிறார்...
நாம் பல்வேறு தருணங்களில் ஆரத்தி எடுக்கிறோம். ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? மங்கல காரியங்களில் ஆரத்தி சுற்றினால், தட்டில் காசு போடுவது ஏன்?
- 'ஆரார்த்திகம்' என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும்.
|
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி எடுப்பர். அலங் காரத்துடன் அழகு ததும்பும் தம்பதி யிடம் திருஷ்டி தோஷம் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக, ஆரத்தி எடுப்பது உண்டு. நிகழ்வின் முடிவைக் குறிக்கும் ஆரத்தி. இதேபோல், என்றும் மங்கலம் பொங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுள் துதியுடன் மங்கல ஆரத்தியும் எடுப்பது உண்டு. கெடுதல் மறைந்து, எங்கும் எப்போதும் மங்கலம் பொங்க வேண்டும் என்பதற்காகவும் ஆரத்தி எடுப்பர். செயலைச் செவ்வனே முடித்தவனுக்கு, மங்கல ஆரத்தி மனநிறைவை உண்டுபண்ணும்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; எவரையும் துன்பம் தொடக்கூடாது என்ற தர்ம சாஸ்திரத்தின் குறிக்கோளை ஆரத்தி நடைமுறைப்படுத்துகிறது (ஸர்வே பத்ராணிபச்யந்துமா கசசித் துக்கபாக் பவேத்).
ஆரத்தி எடுத்ததும் தட்டில் காசுபோட வேண்டும்; அது தவறாகாது. காலக்ஷேபத்தின்போது தட்டில் காணிக்கை சமர்ப்பிப்போம். கற்பூர ஆரத்தி எடுத்த அர்ச்சகரின் தட்டில் காசு போடுகிறோம். சொற்பொழிவு ஆற்றும் பெரியோரின் திருப்திக்காகத் தட்டில் காசு போடுகிறோம். கோயில் யானை துதிக்கையைக் காட்டினால், அதிலும் காசு வைக்கிறோம். 'ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி' என்று இறையுருவத்தின் நெற்றியிலும் காசு வைக்கிறோம். கடவுளை வழிபட்டுத் திரும்பும் வழியில் உள்ள ஏழைகளுக்கும் காசு வழங்குகிறோம். இப்படி, காசு போடாத எந்தச் செயல் மிஞ்சியிருக்கிறது... யோசியுங்கள். எவரையும் நம்மால் முழுமையாகத் திருப்திப் படுத்த முடியாது. நம்மிடத்தில் இருப்பது காசுதான். அதை இயன்ற அளவு அளிக்கும்போது, 'நாமும் உதவினோம்' என்கிற மனநிறைவு ஏற்படும் அல்லவா?! அதைப் பெறுபவரின் மனமும் மகிழுமே! இந்த நல்ல நடைமுறையை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும். மனம், வாக்கு, செயல், பணம் இந்த நான்கையும் பிறருக்கு உதவப் பயன்படுத்தலாம். ஆகவே ஆரத்தித் தட்டில் தாராளமாகக் காசு போடுங்கள்.
No comments:
Post a Comment