பக்தி என்ற பெயரில், பக்தர்கள் செய்யும் இந்த அத்துமீறலை, பகவான் மன்னிப்பானா?
எது பக்தி? குடம் குடமாக பால் உள்ளிட்டவற்றை கொட்டுவதா? இறைவனை தரிசிக்க எந்த பொது விதியையும் அனுசரிக்க முடியாது என முண்டுவதா?
திருவாலங்காட்டிலும், சிதம்பரத்திலும், இவ்வாறு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.
இவ்வளவு விஸ்தாரமாக செய்ய வேண்டும் என எந்த ஆகமத்தில் சொல்லி இருக்கிறது?
பொதுவாக மூர்த்தியின் அளவைப் பொருத்தே, அவருக்கான அபிஷேகம், நைவேத்யம் எல்லாவற்றையும் தயாரிக்க வேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பத்ததி.
கடந்த வாரம், சென்னை வந்திருந்த எனது தீட்சா குரு, திருநெல்வேலி டவுன் தெற்கு மடம், வித்யா சங்கர சிவாச்சாரியாரிடம் இதுபற்றி கேட்டபோது, அளவுக்கு அதிகமாக அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆகமங்களில் குறிப்பில்லை; பிம்ப சுத்திக்கு அப்பால், அபிஷேகத்திற்கு முக்கியத்துவமும் இல்லை என்றார்.
பெரியபுராணம் உள்ளிட்ட மூல நுால்களில், அபிஷேகம் உள்ளிட்டவை, இறைவன் மீது அன்பு வளர ஒரு கருவி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
`அன்பே மஞ்சனநீர்' என தாயுமானவர் சொன்னதும் அதை பின்பற்றித் தான்.
அப்படியே குடம் குடமாக கொட்டுக என ஆகமம் சொன்னாலும், அதை காலத்தொடு பொருந்த புரிந்து கொள்வது நம் கடமை அல்லவா?
கோயில்களில் எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் மலையாளிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களில், விஷயம் அறிந்த சிவாச்சாரியார்கள், சித்தாந்த அறிஞர்கள், மக்களிடையே சந்தர்ப்பம் கிடைக்கும்தோறும், உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
ஆன்மீகம் என்ற பெயரில் மூடத்தனத்தை வளர்ப்பதை விட, சும்மா இருப்பதே மேல். கோயிலில் உள்ள சுவாமியாவது நிம்மதியாக இருப்பார்.
_நெல்லை சொக்கர்
_நெல்லை சொக்கர்
No comments:
Post a Comment