வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் கிடைத்துவிட்டால், பிறகு நமக்குள் எல்லையற்ற ஆனந்தமும் முழுமையும் உணரப்பட வேண்டுமல்லவா?! ஆனால், எல்லாமும் கிடைத்த பலபேர் தங்கள் கடைசி நாட்களில் தாங்கள் எதையோ இழந்துவிட்டதகாவே உணர்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது? உங்கள் கடைசி நாட்களில் இப்படியில்லாமல் முழுமையை உணர்ந்திட சத்குருவின் வழிகாட்டுதல்கள் இங்கே! கேள்வி படித்து முடித்து கை நிறையச் சம்பாதித்தேன். என் குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்து, திருமணமும் செய்துவைத்தேன். ஓய்வும் பெற்று போதுமான அளவு ஓய்வூதியமும் வருகிறது. எந்தக் குறையுமில்லாமல், எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து முடித்துவிட்டதாக ஒருபுறம் மூளை சொல்கிறது. ஆனால் என் மனதில் ஒரு நிறைவின்மையும் வெறுமையும் இருக்கிறது. இன்னும் எதையோ தேடுகிறது. எதை நான் கோட்டைவிட்டேன், எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? சத்குரு: “ஒரு யோகி புதிதாக ஒரு கிராமத்துக்கு வந்தார். அவருடைய முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கினார்கள். ‘சாமி, ஏதாவது கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்’ என்று கேட்டார்கள். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் யோகி. மக்கள் அடுத்தநாளும் வந்தார்கள். பணிந்து, ‘அடுத்த போதனை என்ன?’ என்று கேட்டார்கள். மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் மறுபடியும். அடுத்தடுத்த நாட்களிலும் அதையே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார். முதல் நாள் 1,000 பேர் வந்தார்கள். ஒரு வாரத்தில் அது பத்துப் பத்து பேராக குறைந்து, கடைசியில் எல்லோரும் வருவதையே நிறுத்திவிட்டனர். இப்போது யோகி தானாகவே ஒவ்வொரு வீடாகப் போய், அதே போதனையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் எதிரே வந்தாலே, ‘ஐயோ, போதுமய்யா’ என்று மக்கள் ஓடி ஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. யோகியை அங்கே வரவழைத்தனர். ‘ஐயா, உங்கள் போதனை முதல் தடவை கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே போதனையை எத்தனை முறை கேட்பது? வேறு போதனைகள் கொடுக்கலாமே?’ யோகி சொன்னார், ‘என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால், முதல் போதனையையே நீங்கள் இன்னும் கடைப்பிடிக்கவில்லையே? உணர்வுபூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால், நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்!” அந்த யோகியின் நிலையில்தான் நான் இருக்கிறேன். பலநூறு முறை சொல்லிவிட்டேன். இன்னமும் மக்களுக்கு அதே கேள்வி இருக்கிறது. மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் நிறைவின்மையைத்தான் உணரும். உங்கள் உள்நிலைக்கு எல்லை இல்லாமல் போகவேண்டும் என்று ஆசை. அதைப் பூர்த்தி செய்யாமல், வெளிச்சூழ்நிலைகளில் நீங்கள் மேலே மேலே கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். இந்த உடலின் கட்டுப்பாட்டிலும் மனதின் வளையத்திலும் சிக்கிக்கொண்டு, அது விடுதலை பெற ஏங்குகிறது. இப்போதாவது, எதற்கும் திருப்திப்படாமல் இருப்பது ஏன் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்ததே இந்த உயிரின் அடிப்படை என்ன என்பதை உணராமல் வாழ முயற்சி செய்வதுதான் பெரிய பிரச்சினை. வாழ்க்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் பெறுவதா? அன்பையும் காதலையும் அனுபவிப்பதா? வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதா? மதத்தையும் கடவுளையும் மதிப்பதா? இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன. உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு. அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது. வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை. அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது. ‘முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?’ இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம். ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. அளந்து பார்க்கக்கூடிய எதைக் கொடுத்தாலும், உங்களுக்கு நிறைவு வராது. எல்லை இல்லாத பிரபஞ்சத்தின் அங்கமாகிய நீங்கள், கவனம் இல்லாமல் உங்களை ஓர் எல்லைக்குள் அடையாளப்படுத்தி அடக்கப்பார்ப்பதால் வரும் விளைவு இது. விரிவடைந்து விரிவடைந்து எல்லையற்றதுடன் கலந்துவிடத் துடிப்பதால்தான் அந்த ஆசைத் தீ வேறு எதைக் கொடுத்தாலும், அடங்க மறுக்கிறது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும். இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும். இந்த அறியாமையை எப்படிக் களைவது? முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில் எந்த விளையாட்டை வேண்டுமானாலும் வலி இல்லாமல் விளையாடிப் பார்க்க முடியும். எல்லாவற்றையும் மறந்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கிறீர்கள். முழு கவனமும் அதில் பதிந்து இருக்கும்வரை பிரச்சினைகளைத் தற்காலிகமாக மறந்து போயிருப்பீர்கள். மனைவி வந்து தலை மேல் ‘டப்’ என்று கொடுத்ததும், காணாமல் போன பிரச்சினைகள் எல்லாம் கணத்தில் திரும்ப வந்து பூதாகரமாக நிற்கின்றன. உங்கள் வாழ்க்கையில் 40 வருடங்கள் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தது போல் ஓடிவிட்டது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்துபோய், மறுபடியும் கேள்வி எழுந்துவிட்டது. இப்பவும் தாமதம் ஆகிவிடவில்லை. இந்தக் கணத்தில் இருந்துகூட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முழுமையான ஈடுபாட்டுடன் முயற்சி செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே அளவு பணம், பதவி, அதிகாரம், வசதி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வில் ஒரே அளவு ஆனந்தம் கிடைப்பதை யார் தடுக்க முடியும்?
Read more at : வாழ்க்கை முழுமை அடைவது எப்போது?!
No comments:
Post a Comment